Links

Sunday, 9 May 2021

 

உயர்தர பரீட்சை முடிவுகளும் உபதேச உலகமும் !

 



உலகில் இலகுவான ஒன்றுதான் இன்னொருவருக்கு அறிவுரை சொல்வது. அதிலும் இலங்கையிலும் பல்வேறு நாடுகளிலும் பரந்து வாழும் தமிழினம் இந்த அறிவுரை சொல்லும் கலையில் எப்போதும் சிறந்த ஒரு உயிரினமாகவே திகழ்கிறது.

 

மாதம் மும்மாரி பெய்வதுபோல ஒவ்வொரு வருடமும் ஐந்தாம் வகுப்புப் புலமைப் பரிசில், க.பொ.த. சாதாரண தரம் மற்றும் உயர்தர பெறுபேறுகள் வெளிவரும்  மூன்றுமுறையும் ஆலோசனை மழையில் மாணவர்கள் நனைய வேண்டியது காலத்தின் கட்டாயமாகிவிட்டது. தோற்றவருக்கு அறிவுரை, ஆலோசனை, யாராவது பிள்ளைகள் பரீட்சைத் தோல்வியால் தற்கொலை செய்துவிட்டால் அதற்கு ஒரு கண்ணீர் அஞ்சலி, சரியாக, பிள்ளையை தோல்விக்கு முகம் கொடுக்கப் பழக்கவில்லை என்று பெற்றோருக்குக் கண்டனம், அப்படியே ஆசிரியர்களுக்கு ஒரு குட்டு என்று உயிரைக் கொடுத்து வேலை செய்வார்கள்.

 

அந்த மரபின்படி  இந்த வாரம் முழுவதும் வலைத்தளம் எங்கும் சோர்ந்து விடாதே; சேர்ந்து படி; மீண்டும் முயற்சி செய்; அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும்; நீ படி படியென்று படித்தால் F எல்லாம் A ஆகும்; கல்வியே செல்வம் என்று ஒரு குழு சொல்லிக் கொண்டிருக்கிறது.

 

மறு பக்கத்தில், திரும்பத் திரும்பப் படித்து காலத்தை வீணாக்காதே; உயர்தரம் இன்றியே உயர்ந்த மனிதர்கள் பலர், ஒருமுறை முயற்சி செய், முடியாவிட்டால் வேறு துறையைத் தெரிவு செய்து அதில் முன்னேறு கதைகளும் வலைத்தளமெங்கும் வலம் வருகின்றன.

 

பாவம் மாணவர்கள்! எல்லா வகையான அறிவுரைகளையும் கேட்டுவிட்டு, வடிவேலு பாணியில் “என்னை ஏண்டா இப்பிடிப் படுத்துறீங்கள்?” என்பதுதான் பல மாணவர்களின் மனக்குரலாக (அதுதாங்க Mind Voice) இருக்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

 

இங்கு அறிவுரை சொல்லுவோர் எல்லோருமே பெரும்பாலும் தாம் மாணவர்களாக இருந்த கால அனுபவங்களை, எமது சமூகத்தில் நாம் காணும் ஒரு சில அரிதான உதாரணங்களை மற்றும் ஒரு சில புள்ளிவிபரங்களை அடிப்படையாகக் கொண்டு அறிவுரை சொல்கிறார்கள் என்பது அவர்கள் சொல்லும் அறிவுரைகளைப் பார்த்தாலே புரியும். ஆனால் இருதரப்பாரும் முக்கியமான விடயங்களாப் பேசாது கடந்து விடுகிறார்கள் என்பதுதான் வருத்தம் தருவதாக இருக்கிறது.

 

எல்லோருமே, பிள்ளைகளைப் கஷ்டப்பட்டுப் படித்து முன்னேறுங்கள் என்று நெருக்கடி கொடுத்தாலும் உயர்தரம் கற்கும் மாணவர்களுக்கு பௌதீக விஞ்ஞானம், உயிரியல் விஞ்ஞானம், வர்த்தகம், கலை, Engineering technology, Bio systems technology  ஆகிய மட்டுப்படுத்த கற்கை நெறிகளே தெரிவாக உள்ளன.

 

இதைத்தவிர இலங்கையில் குறிப்பாக வடக்குக் கிழக்கைப் பொறுத்தவரை வைத்தியர், பொறியியலாளர், கணக்காளர், சட்டத்தரணி போன்ற உத்தியோகங்கள் மட்டுமே பல உயர்தர மாணவர்களின் இலக்குகளாக இன்றும் இருக்கிறது. ஆனால் ஒரு சமூகத்தில் வைத்தியர், பொறியியலாளர், கணக்காளர், சட்டத்தரணி ஆகியோரை மட்டும் வைத்துக்கொண்டு என்ன செய்ய முடியும்.

 

இவை ஒருபுறம் இருக்க, குறித்த ஒரு வருடத்தில் உயர்தரப் பரீட்சை எழுதும் நூறு மாணவர்களில் 60 – 64  மாணவர்கள் பல்கலைக்கழகம் செல்லத் தகுதி பெறுகிறார்கள். அந்தத் தகுதி பெற்ற மாணவர்களில் 9 – 10 பேர் மட்டுமே அரச பல்கலைக் கழகம் (இலவசக் கல்வித் திட்டத்தின்கீழ் ) செல்கிறார்கள்.  அதாவது, தகுதி பெற்ற 64 பேரில் 54 பேர் தகுதி பெற்றாலும் பல்கலைக் கழகத்தில் இடமில்லாமல் வேறு வழி தேடவேண்டியவர்களாகவே இருக்கிறார்கள்.

 

ஏனெனில் பல்கலைக் கழகத்திற்கு எத்தனை மாணவர்கள் உள் நுழைய முடியும் என்பதை அரசாங்கம் ஒவ்வொரு வருடமும் உயர்கல்விக்கு ஒதுக்கும் நிதியின் அளவே தீர்மானிக்கிறது. இதனால் நூற்றுக்கு 90 வீதமான மாணவர்கள் தமது உயர்கல்வித் தேவைகளுக்கு திறந்த பல்கலைக் கழகம், தொழில்நுட்பக் கல்லூரிகள், German Tech போன்ற வேறு நிறுவனங்களை நம்பியிருக்க வேண்டியவர்கள் ஆகிறார்கள். ஆனால் அவையும் தகுதி பெற்ற மாணவர்கள் அனைவரையும் உள்வாங்கப் போதுமானதில்லை. இதுதான் இலங்கையின் இன்றைய உயர்கல்வி நிலவரம்.

 

இன்னொரு வகையில் சொல்வதானால் (நாம் ஏற்றுக்கொள்ள விரும்பினாலும் விரும்பாவிட்டாலும்) உயர்தரப் பரீட்சையில் வெற்றி பெற்று (100 பேரில் 10 பேர் மட்டுமே) பல்கலைக் கழகம் செல்வதும் ஒரு சூதாட்டம் போன்றதுதான்.

 

உண்மையில் ஒரு மாணவன் பல்கலைக் கழகம் சென்றுதான் தனது வேலைத் தகுதியை வளர்த்துக் கொள்ளவேண்டும் என்றில்லை. அதேபோல உயர்தரம் கற்றுத்தான் ஒருவர் கல்வியிலும் தமது தொழில் துறையிலும் முன்னேற வேண்டும் என்பதில்லை. இன்று அதற்கு மாற்றாக பல வழிகள் உள்ளன.

 

இவ்வாறான மாற்று வழிகள் சாதாரண தரத்தின் பின்னரும் உயர்தரத்தின் பின்னரும்  இருந்தாலும் அவற்றின் பயனை மாணவர்கள் பெறுவதற்கு பல விடயங்களிலும் மாற்றங்கள் அவசியமானவை.

 

இலங்கையில் உயர்தரத்தில் குறித்த மூன்று பாடங்களைப் படித்து நல்ல புள்ளிகள் பெற்று Z ஸ்கோரும் உயர்வாக இருந்தால் மாத்திரமே குறித்த சில கற்கைநெறிகளை மேற்கொள்ள முடியும். ஆனால் இந்தியாவிலும் பல மேற்குலக நாடுகளிலும் நிலைமை அப்படியில்லை. அவர்கள் மேற்படிப்பிற்கு தெரிவு செய்ய விரும்பும் துறைக்குத் தொடர்பான பாடங்களில் தேவையான பெறுபேறுகளைத் தமது உயர்தரம் கற்கும் காலத்தில் பெற்றிருந்தால் போதுமானது. இலங்கையிலும் இத்தகைய மாற்றம் வருமாக இருந்தால் உண்மையில் மாணவர்கள் மேற்படிப்புக்குரிய பாடங்களைத் தெரிவு செய்வது இலகுவாக அமையக்கூடும்.

 

தற்போதுள்ள நிலையில் கொழும்பு போன்ற பெருநகரங்களில் காணப்படும் பரந்துபட்ட கல்வி வாய்ப்புகள் பின் தங்கிய பிரதேசங்களுக்கும் விரிவுபடுத்தப்பட வேண்டும். இன்று போலிப் பல்கலைக்கழகம் பற்றி பெரும் குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டுவரும் நிலையில் அரசு தனியார் கல்வி நிறுவனங்களை நெறிப்படுத்தவும் குறைந்தபட்ச தரநிலையைக் (minimum standard) கொண்டிராத நிறுவனங்கள் இயங்குவதைக் கட்டுப்படுத்தவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

இலவசக் கல்விமுறையின் நன்மையை அதிக புள்ளிகள் பெற்ற மாணவர்கள் அனுபவிக்கும் அதேநேரம், பல்கலைக்கழகம் செல்லத் தகுதி பெற்றும் அரசின் வளப்பற்றாக்குறை காரணமாக உள்வாங்கப்படாத மாணவர்கள் கட்டணம் செலுத்தி (கல்விக் கடன் திட்டத்தின் கீழ்) கல்வி கற்கமுடியும் என்ற ஒரு நிலை உருவாக்கப்பட வேண்டும்.

 

சமூக மட்டத்தில் பெற்றோர் தமது பிள்ளைகள் என்னவாக வேண்டும் என்று கனவு காண்பதை நிறுத்த வேண்டும். பிள்ளைகளின் ஆர்வத்தை அறிந்து அந்த ஆர்வத்தோடு இணைந்த துறையில் அவர்கள் மேற்கல்வி கற்பதை ஊக்குவிக்க முன்வரவேண்டும். பாடசாலைகளில் மாணவர்கள் சரியான தெரிவுகளை செய்வதற்குத் தேவையான வழிகாட்டல்கள்,  ஆலோசனைகள் வழங்கப்பட வேண்டும்.

 

மறுபுறத்தில் கல்விக் கூடங்கள் மாணவர்களைத் தொழிற் சந்தைக்கு ஏற்ப தயார் செய்பவையாக இருக்க வேண்டும்.  அதேபோல பாடசாலைகளின் தொழிற்சந்தை தொடர்பாக மாணவர்களுக்கு பொருத்தமான வழிகாட்டல்கள் வழங்கப்படும் சூழல் உருவாக்கப்பட வேண்டும். இதைத்தவிர மாணவர்களை வகுப்பறைக்கல்விக்கு அப்பாலான கற்றல் செயற்பாடுகளில் ஈடுபடுத்த வேண்டும். அவர்களை சமூகப் பொறுப்புடன் இயங்குபவர்களாக உருவாக்க வேண்டும்.

 

பரந்துபட்ட பட்டப்படிப்பின் மூலம் சமூகத்தையும் நாட்டையும் முன்னேறும் முன்னேடிகளாக அடுத்த தலைமுறையினர் வரவேண்டும். பல்கலைக்கழகம் சென்று பட்டம் பெறுவது பணம் சம்பாதிக்கும் வழி என்று நினைக்கும் மனநிலை மாறவேண்டும். தொழில்முறைக் கல்விகள், சுயதொழில் முயற்சிக்கான அடிப்படைகளும் மாணவர்களின் 15 - 16 வயதிலேயே அறிமுகப்படுத்தப்பட வேண்டும்.

 

புலம்பெயர் சமூகமும் இலங்கையில் இளையவர்களுக்கு வேலை வாய்ப்பையும் கல்வி கற்கும் காலத்திலேயே வேலைத்தள அனுபவத்தையும் வழங்கும் வகையில் தொழில் நிறுவனங்களை உருவாக்குவதன் மூலம் மாணவர்களை தகுதியும் திறமையும் கொண்டவர்களாக உருவாக்க முடியும்.

 

இதையெல்லாம் விடுத்து நாடாளாவிய ரீதியில் முதலிடம், மாவட்டத்தில் முதலிடம் எனப் பொதுப் பரீட்சைப் பெறுபேறுகளை கொண்டாடியும், பின்னடைந்தோரை அறிவுரை என்ற பெயரில் நெட்டித் தள்ளிக்கொண்டும் இருப்பதனால் எதையும் சாதித்து விடப்போவதில்லை. மாணவர்கள் சுதந்திரமாகக் கற்கக் கூடிய சூழலை பெற்றோர், பாடசாலைச் சமூகம் உருவாக்க வேண்டும்.

 When You Have a Strong Mother, You Grow Up To Be a Strong Woman



Some of the most important people in our lives are strong mothers, and even though most people don’t realize this, they are really quite abundant in this world.
Though strong mothers are frequently found in this world, for some reason or another, they are not given the proper recognition that they are worthy of. They help us in numerous different ways, from being the best possible version of ourselves to taking care of us in all the required ways to preparing us for the real world. Even though strong mothers do so much for us, we never actually thank them for everything that they do. As a result of having a strong woman for a mother, you invariably become a strong woman yourself. You have something instilled in you by your mother that many other individuals will be jealous of.
Strong mothers will show you how important standing your ground is, and they will teach you that the people around you don’t define who you are. A strong mother will show her child how to stand on their own two feet, and stand strong when the world throws the nastiest of incidents. Even though she is strong, she may not have everything figured out, and she will definitely have plenty of problems on her plate, but that doesn’t make you less important in her eyes. She will have your best interest at heart above anything and everything else.
Strong mothers will help their children grow, and will always push them towards doing the right thing. Though at times she’ll be frustrating and getting on your nerves, every single thing she does is done for the right reason. All she wishes for her children is to be able to think for themselves, and have good values. A strong mother will never just let you do whatever you want, but she is also the kind of mom that will allow you to express who you really are.
She will become your best friend, and will be the person that you will be able to go to when you want a shoulder to cry on, and when everyone else has left. With the increasing amount of time you spend with her, you will come to understand the place she has in your life. Unlike any other person in this world, a strong mother is someone who will care for you as long as she is able to.
Though at times she may be a bit harsh, and at times she might say things that she should not be saying, she tries her best, and then some, than any other mother on this planet. She goes all out to give you the best of the best, from trying to keep you happy, to making sure you have everything that you need, and most of all, to really be there for you when you need her. Growing up under the wings of a strong mother, you know that she will never abandon you in times of need, and in turn, you will become someone who people can count on to be there when you are needed, and foe people who need you the most.
When you grow up with a strong mother, you will care about and for the people in your life, and love them unconditionally, and you will do your best to make every issue right, and you will also stand up for those who cannot do it for themselves. Seeing your mother do the things she does, she will teach you to be a person who will work hard, and make sure that the people in your life are taken care of. As a result of your upbringing by a superwoman, you will be full of growth and kind, and are more than ready and capable to take the world head on.
As everyone may not grow up with an amazing super mom, appreciate her and what she has done for you during your lifetime, and you have to make sure that she knows how important she is to you. Even though you may not realize it, she has really helped shape you in more ways than that you may know.
Happy Mothers Day !
Credit: Life Insider

Tuesday, 4 May 2021

 

கொரோனா மரணங்களும் தடுப்பூசியும்

  


கடந்த ஆண்டின் நடுப்பகுதியில் இலங்கையிலும் இந்தியாவிலும் கொவிட் தொற்றின் இரண்டாவது அலையை எப்படி எதிர்கொள்வது என்பதே பெரிதும் பேசிய விடயமாக இருந்தது. மக்களும் ஓரளவுக்கு கட்டுப்பாடாகவே இருந்தார்கள்.

 ஆனால் கோடைகாலத்தில் அரசுகள் தடைகளை ஓரளவு தளர்த்தவும் மக்கள் ஒன்று கூடுவது அதிகரித்தது. ஆயுள்வேத முறைகள் எம்மைக் காப்பாற்றும் என்ற குரல்களும் இந்தியாவில் அதிகம் கேட்டது. இலங்கையும் அதன் பங்கிற்கு, பல்வேறு சுதேச மருந்துகளை அறிமுகம் செய்தது. அதைவிடவும், இந்திய இலங்கையின் உணவுமுறையே எமது நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்து கொரோனா வராது தடுத்துவிடும், தெற்காசியர்களை கொரோனா தாக்காது என பல்வேறு நம்பிக்கை வார்த்தைகள் Whatsapp, facebook போன்றவற்றினூடாக கொரோனாவை விட வேகமாக மக்களால் பரப்பப்பட்டது.

  அதனாலோ என்னவோ நாம் கொரோனவுடன் வாழப்பழகி விட்டோம் என்பது போல மக்கள் சுகாதார பாதுகாப்பு முறைகளையும் புறக்கணித்துத் திரிந்ததையும் அதனால் மீண்டும் அக்டோபர் முதல் தொற்று அதிகரித்ததையும் காண முடிந்தது. நோய்த் தோற்று அதிகரிக்கும் நேரத்திலேதான் இலங்கையிலும் இந்தியாவிலும் கும்பமேளா, கோவில் திருவிழாக்களில் எந்த விதமான சுகாதார பாதுகாப்பு முறைகளையும் பின்பற்றாமல் மக்கள் ஒன்றுகூடுவதையும் உலகமே பார்த்தது. இதைவிட இந்தியாவில் IPL கொண்டாட்டம் வேறு.

 

இன்றோ இந்த இரண்டு நாடுகளிலும் மிகவேகமாக கடந்த ஒரு மாதத்தில் நோய்த்தொற்று அதிகரித்து வைத்தியத் துறை மூச்சுத் திணறிப்போய் நிற்கிறது. இன்றும் புதிய தொற்றாளர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்த வண்ணமே உள்ளது.  மறுபுறத்தில் மரணிப்பவரின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. குறிப்பாக இந்தியாவின் நிலை மிகவும் மோசமாகி இருக்கிறது. இதுவரை இந்தியாவில் இறந்தவர் எண்ணிக்கை இரண்டு இலட்சத்தைத் தாண்டிவிட்டது. அதிலும் கடந்த நான்கு மாதத்தில் மட்டும் 66,318 பேர் இறந்து விட்டார்கள்.

  

இந்தியா கோவிட்க்கு வக்சினைக் கண்டுபிடித்ததுடன், இந்தியாவில் மக்களுக்கு அவற்றை இவ்வருடம் ஜனவரியிலேயே ஆரம்பித்தபோதிலும் அவர்கள் எதிர்பார்த்த வேகத்தில் அவற்றைப் போட முடியவில்லை. இதற்கு இந்த வக்சின் தொடர்பாக மக்களிடையே வைரலாக பரப்பப்படும் செய்திகளும் ஒரு காரணம்.

 

வக்சின் போட்டால் இரத்தம் கட்டியாகும், அதனால் வக்சின் போட்டவர் இறந்துவிடுவார்; வக்சின் போட்டாலும் நோய் வரும், அதனால் வக்சின் போடுவதால் பயனில்லை; வக்சின் போட்டதாலே நன்றாக இருந்த மக்கள் இறக்கிறார்கள்; இந்த வக்சின் பல்நாட்டு வியாபார நிறுவனங்களின் வர்த்தகத் தந்திரம், இப்படியாக பரப்பும் செய்திகளால் மக்கள் இன்னும் தடுப்பூசி போடப் பயப்படுகிறார்கள்.

 

தடுப்பூசி போட்டவங்களுக்கும் கொரோனா வருமா? ஆம், தடுப்பூசி போட்டாலும் நோய் வரலாம். Pfizer, Moderna vaccine கூட 95%ம் தான் உங்களை பாதுகாக்கும். 5% மக்களுக்கு தடுப்பூசி போட்டும் கொரோனா வர வாய்ப்பு இருக்கிறது. ஆனால் தடுப்பு மருந்து போட்டுக்கொண்டால் நோயின் தாக்கம் குறைவாக இருக்கும். நீங்கள் இறந்துபோகும் சாத்தியம் 99.9% குறையும். ஆனால் தடுப்பூசி போடாவிட்டால் நோய் தீவிரமாகத் தாக்கவும் நோயாளி சாவதற்கும் சந்தர்ப்பம் மிக அதிகம்.

  

ஏற்கனவே இதய நோயாளிகள், உயர் இரத்த அழுத்தம், டயபடீஸ், சிறுநீரகப் பிரச்னை உளளவர்கள் தடுப்பூசி போடலாமா? நிச்சயம் போடலாம். உங்கள் வைத்தியருடன் கலந்தாலோசித்த பின்னர் அவரது ஆலோசனைப்படி பயப்படாமல் போடலாம்.

  

தடுப்பூசி போட்டால் இரத்தம் கட்டியாகிறதாமே? Astra Senica போட்டால் இரத்தம் கட்டியாகும் வாய்ப்பு அதிகம் என்கிறார்களே? ஆமாம், ஆனால் வெகு சிலருக்குத்தான்  இரத்தம் கட்டியாகிறது. Astra Senica  போட்டவர்களில் ஒரு மில்லியனில் நான்கு பேருக்குத்தான் இரத்தம் கட்டியாகிறது. பாதுகாப்பானது என்று மக்கள் பலரும் நம்பும் Pfizer, Moderna  vaccine போட்டவர்களில் ஒரு மில்லியனில் நான்கு பேருக்கு இரத்தம் கட்டியாகிறது.

  

தடுப்பூசி போட்டால் இரண்டு மூன்று நாட்கள் காய்ச்சலடிக்கலாம்,  தசைவலி ஏற்படலாம், தலைவலியும் ஏற்படலாம், உடற்சோர்வும் இருக்கலாம். இது பொதுவாகவே எந்த ஒரு வக்சின் போட்டால் எமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி காரணமாக ஏற்படக்கூடிய அறிகுறிகளே. ஆனால் இவ்வாறான அறிகுறிகள் தொடர்ந்திருந்தால் வைத்தியசாலையைத் தொடர்பு கொள்ளுங்கள்.

  

வீட்டிலேயே பாதுகாப்பாக இருக்கும் வயோதிபர்கள் தடுப்பூசி போட வேண்டியதில்லைத்தானே? போடுவதுதான் நல்லது. அவர்கள் வீட்டில் பாதுகாப்பாக இருந்தாலும் நோய் தொற்றினால் இறப்பதற்கு சந்தர்ப்பம் அதிகம். தடுப்பூசி போடுவதால் உயிரிழப்பு ஏற்படுவதற்கு சந்தர்ப்பம் மிகமிகக் குறைவு.

 

தடுப்பூசி போட்டால் அதன்பின்னர் வேறு பாதுகாப்பு முறைகளைப் பின்பற்ற வேண்டியதில்லையா? இல்லை, நீங்கள் தடுப்பூசி போட்டாலும் பாதுகாப்பு முறைகளைக் கட்டாயம் பின்பற்றுங்கள். ஆளுடை இடைவெளி, முகக்கவசம் அணிதல், துப்புரவாக இருத்தல் என்பவற்றைத் தொடர்ந்து செய்யுங்கள். ஏனென்றால் தடுப்பூசி போட்டாலும் உங்களுக்கு மீண்டும் நோய் தொற்றலாம். உங்களில் அறிகுறியைக் காட்டாமல் இருந்து நீங்கள் உங்களை அறியாமல் உங்கள் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் நீங்களே பரப்பி அவர்களின் சாவுக்கு நீங்களே காரணமாகிவிடக் கூடும்.

  

தடுப்பூசி போடப் பயப்படுபவர்கள் மனித வரலாற்றில் (அமெரிக்காவில்) நடைபெற்ற சில விடயங்களை அறிந்து கொள்ளுங்கள்:

§  போலியோவிற்கு தடுப்பூசி கண்டறியப்படுவதற்கு முன்னர் அமெரிக்காவில் மட்டும் வருடாந்தம் 15,000 பேர் போலியோவினால் அங்கவீனர்களாக மாறினார்கள்.

§  தடுப்பூசி வருவதற்கு முன்னர் அமெரிக்காவில் தட்டம்மை (Measles) ஏறத்தாழ ஒவ்வொருவரையும் தாக்கியது. ஒவ்வொரு வருடமும் நூற்றுகனக்கானவர்கள் இறந்து போனார்கள். இன்று தட்டம்மை நோயாளியோருவரைக் காண்பது மிகமிக அரிதான ஒன்றாகியுள்ளது.

§  1921 இல் டிப்தீரியா எனப்படும் தொண்டை அழற்சி நோயினால் 15,000 க்கு மேற்பட்டோர் இறந்தார்கள். வக்சின் கண்டறியப்பட்டு நோய் கட்டுப்படுத்தப்பட்ட பின்னர் 2004 – 2014 க்கு இடைப்பட்ட காலத்தில் இரண்டே இரண்டு நோயாளிகளே இனங்காணப்பட்டனர்.

§  1964 – 1965 இடைப்பட்ட காலத்தில் 12.5 மில்லியன் மக்கள் ரூபெல்லா எனப்படும் ஜேர்மன் தட்டம்மை நோயினால் பாதிக்கப்பட்டார்கள். 2,000 குழந்தைகள் இறந்துபோயின, 11,000 கருச்சிதைவுகள் ஏற்பட்டன. தடுப்பூசி கண்டறியப்பட்ட பின்னர், 2012 க்குப் பின்னர் இதுவரை 15 நோயாளிகள் மட்டுமே இனங்காணப்பட்டுள்ளனர்.

(https://www.cdc.gov/vaccines/vac-gen/whatifstop.htm)

  

கோவிட் வந்து ஒரு வருடத்துக்கு மேலாகிறது. பல பாட்டி வைத்தியம், பாரம்பரிய உணவுமுறை, கபசுர குடிநீர் இவை மட்டும் போதுமென்று இருந்தவர்களில் பலர் கோவிட் தொற்றுக்கு உள்ளாகிப் பலர் இறந்தும் விட்டார்கள். சித்த வைத்தியம் பொய்யென்று சொல்லவில்லை. சித்த வைத்தியமும் பல நோய்களுக்கு சிறந்த மருத்துவமாக இருந்து வந்துள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை. ஆனால் கோவிட்நோய்க்கு சித்த வைத்தியத்தில் சொல்லப்படும் எந்த வைத்தியம் உண்மையில் தீர்வாக அமையும் என்பது clinical trails மூலம் ஆய்வு மூலம் நிரூபிக்கப்பட வேண்டும். அதன்பின்னர் மக்கள் அந்த நிரூபிக்கப்பட்ட முறையைப் பின்பற்றுவது பொருத்தமாக இருக்கும்.

  

ஆனால் இன்றைய சூழலில் இந்த நோய்க்கு எந்த சித்த வைத்திய மருந்து  சரியாக வேலை செய்யும் என்பது நிரூபிக்கப்படாத நிலையை ஆங்கில வைத்தியத்தை நிராகரிக்காது உடனடியாக தடுப்பூசிகளைப் பெற்றுக் கொள்வதே புத்திசாலித்தனம். Whatsappஇல் வரும் வதந்திகளை நம்பியும் Youtube வைத்தியர்களையும் நம்பி உங்கள் உயிரையும் உங்கள் சுற்றத்தாரின் உயிர்களையும் தயவுசெய்து பணயம் வைக்காதீர்கள்.

  

ஏன் வக்சின் தேவை என்பதை இன்னும் இலகுவாகச் சொல்வதென்றால், நீங்கள் தினமும் வேலைக்கு உங்கள் மோட்டார் சைக்கிளில் நெடுஞ்சாலையில் 100 km வேகத்தில் பயணிக்க வேண்டியவர் என்று வைத்துக் கொள்வோம். நீங்கள் தலைக்கவசம் அணிந்து சென்றால், தற்செயலாக நீங்கள் சறுக்கி விழுந்தாலும் வேறு வாகனத்துடன் மோதுண்டாலும் உடலில் அடிபடலாம், ஆனால் உயிர் தப்பிவிடுவீர்கள்; எல்லாம் சில வாரங்களில் சரியாகிவிடும்.  ஆனால் தலைக்கவசம் அணியாது சென்று அடிபட்டால் உயிரே போய்விட அதிக வாய்ப்புள்ளது. தடுப்பூசி போடுவதும் மோட்டார் சைக்கிளில் போகும் ஒருவர் தலைகாக்க தலைக்கவசம் அணிவது போன்றதுதான்.

  

அதேபோல தலைகவசம் அணிந்திருக்கிறோம் என்பதற்காக வீதியில் தாறுமாறாக வண்டியோட்டினால் என்ன நடக்கும்? தேவையில்லாத விபத்து ஏற்பட்டு நீங்கள் காயமடையவோ நிரந்தர ஊனமடையவோ சந்தர்ப்பம் உள்ளதுதானே? அதே போன்றதுதான் தடுப்பூசி போட்டுவிட்டால் எல்லாம் சரி என்று கண்டபடி திரிவதும், சமூக இடைவெளி, முகக் கவசம் என்பவற்றை இனித் தேவையில்லை என்று நினைப்பதும்.

  

தயவு செய்து தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள். அதன் பின்னரும் சுகாதார பாதுகாப்பு விதிமுறைகளைத் தொடர்ந்தும் பின்பற்றுங்கள். இன்னும் சில வாரங்களுக்காவது கோவில்கள், வீடுகள் ஏனைய மூடிய இடங்களில் நண்பர்கள், உறவினர்கள் எனக் கூடி கும்மியடிப்பதைத் தவிர்த்துக் கொள்ளுங்கள்.

 

பெரும் தொற்றுக் காலத்தில் உடல், உள ஆரோக்கியம்  3:  சுய நலன் (Self-care) பேணல்



கடந்த பதிவில், எமது ஆரோக்கியத்தை நல்ல நிலையில் பேண உணவு, உடற்பயிற்சி, ஓய்வு, போதுமான தூக்கம், மனதை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளல் தொடர்பான சில விடயங்களைப் பார்த்தோம். இவற்றோடு எமது சுய நலன்களில் அக்கறை எடுத்துக் கொள்வதும் முக்கியமானது. சுய நலனில் அக்கறை செலுத்துவது  சுயநலமானதல்ல, எமது சுகநலம் சம்பந்தப்பட்டது. ஏனெனில் உங்களை ஆரோக்கியமாக வைத்துக் கொண்டால்தான் உங்களோடு இருப்பவர்களின் நலனில் உங்களால் அக்கறை செலுத்த முடியும்.

 

எங்களில் பலரும் இப்போது வீட்டிலிருந்து வேலை செய்ய வேண்டிய சூழ்நிலையில் புதிய நாளந்த ஒழுங்குமுறையை பின்பற்றுவது அவசியமாகிறது. பிள்ளைகளும் வீட்டிலிருந்தே படிப்பதால் பெற்றோருக்கு முன்பிருந்ததுபோல அவசர அவசரமாக உணவு தயாரித்து, அவசர அவசரமாக புறப்பட்டுச் செல்ல வேண்டிய காலை வேலையழுத்தம் என்பது முற்றாக இல்லாமல் போய்விட்டது. 

 

இதனால் எங்களில் பலர் (குறிப்பாக ஆண்கள்) முன்னரைப் போல காலையில் எழுந்திருப்பதில்லை. ஒன்பது மணிக்கு வேலையைத் தொடங்க வேண்டுமென்றால் வேலை தொடங்குவதற்கு அரைமணிநேரம் முன்னதாக எழும்பி அவசர அவசரமாக முகம் கழுவிக் கொண்டு அதே அவசரத்தோடு எதையாவது உணவென்ற பெயரில் வயிற்றுக்குள் தள்ளிவிட்டு கணினி முன்னர் அமர்ந்து விடுகிறோம்.

 

இன்னும் சிலர் நள்ளிரவு தாண்டி விழித்திருந்துவிட்டு காலையில் ஒன்பது மணியளவில் கண்விழித்து காலையில் சாப்பிடாமலே கணினி முன்னர் அமர்ந்துவிடுகிறார்கள்.  இவ்வாறு சீரற்று தொடங்கப்படும் நாள் பெரும்பாலும் முடிவடைவதும் அதேபோலத்தான். இது ஒருபுறம் இருக்க எங்களில் பலர் இரவு உடுப்புகளுடனேயே வேலை செய்வதையே வழக்கமாக்கி விட்டிருக்கிறோம். இன்னும் கொஞ்சப் பேர் நாட்கணக்கில் சவரம் செய்வதில்லை, தலைமுடியை சரியாக வாருவதில்லை. உணவு உண்ணும் முறையிலும் ஒரு ஒழுங்குமுறையைப் பின்பற்றுவதில்லை.

 

இதனால் இந்தப் பெரும் தொற்றுக் காலத்தில் எங்களில் பலருக்கு உடல் எடை ஏறியுள்ளது. ஆண்கள் பலரும் சடாமுடியும் நீண்ட தாடியுமாக புதிதாக வளர்த்த செல்லத் தொந்தியைத் தடவிக் கொண்டிருக்கிறார்கள்.

 

எமது புதிய நாளாந்தப் பழக்க வழக்கங்கள்  எங்களை அறியாமலே சோம்பேறிகளாகவும் போதுமான தூக்கமில்லாததால் உடல் சோர்வு, மற்றும் சலிப்புணர்வு உள்ளவர்களாகவும் எம்மை மாற்றிவிடக் கூடும். இந்த நிலையம் எதிர்காலம் பற்றிய நிச்சயமற்ற யோசனைகளும் சிலவேளை எங்களை மனவழுத்தம் உள்ளவர்களாக மாற்றிவிடக்கூடிய சந்தர்ப்பமும் உள்ளது.  

 

நாங்கள் வீட்டிலிருந்து வேலை செய்தாலும் அலுவலகம் செல்வது போன்ற ஒரு பாவனையை தினமும் செய்வோமாயின் இவ்வாறான நிலை எங்களுக்கு ஏற்படாமல் தப்பிவிட முடியும். ஆனால் அதற்காக தினமும் அதிகாலை ஐந்து மணிக்கெல்லாம் எழும்ப வேண்டும் என்றில்லை. ஆனால் தினமும் ஒரே நேரத்துக்கு எழும்பப் பழகுங்கள். வேலைநாட்களில் எழும்பும் அதே நேரத்திற்கே வார இறுதியிலும் எழும்புவது நல்லது.

 

அடுத்ததாக, உங்கள் அலுவலக நேரம் தொடங்குவதற்கு முன்னதாகவே போதிய நேரமெடுத்து காலையுணவை எடுத்துக் கொள்ளுங்கள். சவரம் செய்தல், தலைவாருதல் போன்ற விடயங்களையும் முடித்து விடுங்கள். பின்னர் பிரேக் நேரத்தில் அவற்றைச் செய்து கொள்ளலாம் என்று பிற்போடாதீர்கள்.

 

வீட்டில்தானே வேலை செய்கிறோம் என்று வீட்டு உடுப்புடனேயே இருக்காமல், ஆடை மாற்றிக் கொள்ளுங்கள். உங்கள் வீட்டு உணவு மேசையை உங்கள் அலுவலக மேசையாகப் பயன்படுத்துவதை முடிந்தவரை தவிர்த்துக் கொள்ளுங்கள்.

 

அலுவலக வேலை தொடர்பான கூட்ட நேரம் தவிர்த்து ஏனைய நேரங்களில் குறித்த நேர இடைவேளையில் வேலை செய்யும் இடத்திலிருந்து எழுந்து 1 – 2 Min தளர்வுப் பயிற்சி செய்யுங்கள். எப்போதும் உங்கள் மேசையில் குடிப்பதற்காக தண்ணீர் வைத்துக் கொள்ளுங்கள்.

 

வேலை நேரத்தில் மனதிற்கு இனிய இசையைக் கேட்டபடியும் வேலை செய்யலாம், ஆனால் முடிந்தவரை head phone பயன்படுத்துவதைத் தவிர்த்துவிடுங்கள். பாடல் அல்லது இசையைக் கேட்க head phone பயன்படுத்துவது உங்கள் வேலையில் முழுக் கவனம் செலுத்துவதற்கு இடைஞ்சலாக மாறிவிடலாம்.

 

வேலை முடிந்த பின்னர் சாப்பிடலாம் என்று மதிய உணவு நேரத்தை பிற்போடாதீர்கள். உணவு நேரத்தில் வழமைபோல வயிறு நிறைய வெளுத்துக் கட்டாதீர்கள். ஏனென்றால், வீட்டில் இருந்து வேலை செய்யும் நாட்களில் இயல்பாக நாம் நடக்கும் தூரம் வெகுவாகக் குறைந்துவிட்டது. உதாரணமாக, பெரும் தொற்றுக் காலத்தில் பிரத்தியேக நடைப்பயிற்சி எதுவும் இல்லாமலே நான் நாளாந்தம் 6000 – 7000 அடிகள் (foot steps) நடந்துவிடுவேன். வீட்டிலிருந்து வேலை செய்யும் நாட்களில் 3000 அடிகள் நடந்தாலே பெரிய விடயம். அதனால் உண்ணும் அளவைக் குறைத்துக் கொள்ளுங்கள். ஆரோக்கியமான உணவைத் தெரிவு செய்து உண்ணுங்கள்.

 

காலையும் மாலையும் தேநீர் அருந்தும் பழக்கம் உங்களுக்கு இருந்தால் அதனை மாற்றிக் கொள்ள வேண்டியதில்லை. அப்படிது தேநீர் அருந்தும்போது நீங்கள் வேலை செய்யும் மேசையில் இருந்து தேநீர் அருந்தாது வேறு இடத்தில் அமர்ந்து தேநீர் அருந்துங்கள். உங்கள் வீட்டில் பூந்தோட்டம் இருக்குமாக இருந்தால் அங்கிருந்தும் தேநீர் அருந்தலாம்.

 

மாலையில் அலுவக நேரம் முடியும் நேரத்தில் உங்கள் கணினியை அணைத்து விடுங்கள். வீட்டில் சும்மாதானே  இருக்கிறோம் என்று அலுவல நேரத்திற்குப் பின்னரும் கணினியில் நோண்டிக் கொண்டிருக்காதீர்கள்.

 

அலுவலக நேரம் முடிந்ததும் அரைமணி நேரமாவதும் உடற்பயிற்சி செய்யுங்கள். வீட்டிலிருந்து உடற்பயிற்சி செய்யலாம், அல்லது வெளியே நடைப்பயிற்சி செய்யலாம். உங்களுக்கு விருப்பமான பாட்டுக்கு நடனம் ஆடலாம். குடும்பத்தினருடன் நேரம் செலவிடலாம்.

 

வெளியே செல்ல வேண்டிய வேளைகளில் மறக்காமல் சுகாதார பாதுகாப்பு முறைகளைப் பின்பற்றுங்கள். அனாவசியமாக வெளியே செல்வதைத் தவிர்த்துக் கொள்ளுங்கள். வெளியே சென்று வீட்டிற்கு வந்ததும் கைகளைக் கட்டாயம் சவர்க்காரம் இட்டு நன்றாகக் கை கழுவுங்கள்.

 

வருடாந்தம் உங்கள் தேக ஆரோக்கியம் தொடர்பான பரிசோதனைகளை செய்வதைத் தவிர்க்க வேண்டாம். உங்கள் குடும்ப வைத்தியரை தொடர்பு கொண்டு வருடாந்த மருத்துவப் பரிசொதனைகளைச் செய்து கொள்ளுங்கள். மருந்துகள் பாவிப்பவரானால், அவற்றை உரிய நேரத்தில் எடுக்க மறக்க வேண்டாம்.

 

இவை நாங்கள் நாளாந்தம் செய்யக்கூடியவை. ஆனால் எம்மை மகிழ்ச்சியாகவும் மன உளைச்சல் இல்லாமலும் வைத்துக் கொள்ள வேண்டுமானால் நாம் செய்யக்கூடாத சிலவிடயங்களும் இருகின்றன.

 

சமூக வலைத்தளங்களில் வரும் ஆதாரமற்ற வதந்தி, பாட்டி வைத்தியச் செய்திகளை வாசிக்காதீர்கள். வாசித்தாலும் அவற்றை வேறு குழுக்களில் பகிராதீர்கள். பகிர்ந்தால் என்னைப் போன்றவர்கள் அது போலியான செய்தி, இதை நீ சரிபார்த்தாயா என்று கேட்டு, “ஏனடா அனுப்பினோம்” என்ற மனவுளைச்சலுக்கு உங்களை ஆளாக்கிவிடுவோம்.

 

சங்கங்கள், கழகங்களில் செயற்குழு உறுப்பினராக இருப்பது சேவை மனப்பான்மை உள்ளவர்களுக்கு ஆத்ம திருப்தியைத் தருகிறது என்பது உண்மைதான். ஆனால் அந்தச் சங்கம், கழகங்கள் செயற்படும்முறை உறுப்பினர்களிடையே முரண்பாட்டைத் தோற்றுவிப்பதாக இருந்தால் அங்கு நடைபெறும் பதவிப் போட்டி, குழு அரசியல் போன்றவற்றுக்குள் தலையை விட்டு உங்கள் நிம்மதியைத் தொலைத்து விடாதீர்கள்.

 

இறுதியாக, தினமும் இரவில் நேர காலத்திற்கு இரவு உணவை சாப்பிட்டுவிட்டு அதிகநேரம் கண்விழிக்காமல் உறங்கப் போய்விடுங்கள். மறுநாள் காலையிலிருந்து நாளந்த வேலைகளை இதே ஒழுங்கில் ஆரம்பித்து விடுங்கள். உண்மையில் இப்படி நாளாந்தம் நேர அட்டவணைப்படி நடந்து கொள்வது கடினமானது. ஆனால் குறைந்தது ஒரு மாதத்திற்கு செய்யப் பழகிவிட்டீர்கள் என்றால் அதுவே உங்கள் பழக்கமாகிவிடும். உங்கள் ஆரோக்கியம் உங்கள் கைகளில் !