Links

Monday, 20 March 2023

 

மகிழ்ச்சியாக வாழுதல்




"Happiness is not a goal...it's a by-product of a life well-lived." Eleanor Roosevelt

வாழ்க்கையில் மிக மகிழ்ச்சியாக வாழவேண்டும் என்றுதான் நாம் ஒவ்வொருவரும் ஆசைப்படுகிறோம். நாம் கஷ்டப்பட்டுப் படிப்பது, வேலை தேடுவது, தொழில் தொடங்குவது, பணம் சம்பாதிப்பது, திருமணம் செய்வது, சொத்துத் சேர்ப்பதும் எல்லாமே நாங்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான். ஆனால் நாங்கள் எல்லோருமே எப்போதுமே மகிழ்ச்சியாக இருப்பதில்லை.

பணம், வசதி இருப்பதால் மட்டுமே எல்லோருமே மகிழ்ச்சியாக இருப்பதில்லை. அதேபோல மகிழ்ச்சியாக இருக்கும் எல்லோரிடமும் பணமும் வசதியும் இருப்பதில்லை.

சிலர் எந்த சூழ்நிலையிலும் மகிழ்ச்சியாகவும் கலகலப்பாகவும் இருப்பதைப் பார்த்திருப்பீர்கள். அதற்கு மாறாக சிலர் சிறந்த நகைச்சுவையைக் கேட்கும்போதுகூட சிரிக்கத் தெரியாத சிடுமூஞ்சிகளாக இருப்பதையும் பார்த்திருப்பீர்கள். அது ஏன் என்று நினைத்துப் பார்த்திருக்கிறீர்களா?

 இது இன்று நேற்று எழுந்த கேள்வியில்லை. ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்னரே இது பற்றிக் கேள்வியெழுந்துவிட்டது. நாம் மகிழ்ச்சியாக இருப்பதை எது தீர்மானிக்கிறது என்பதே அறிய கிரேக்க அறிஞர்கள் காலத்திலிருந்தே இதனை ஆராய்ந்து வந்திருக்கிறார்கள். கிரேக்க கால தத்துவஞானியான அரிஸ்டோடில் மகிழ்ச்சியாக இருத்தலே மனிதர்கள் எப்போதும் அடைய விரும்பும் ஒரே விடயம் என்று சொல்லியிருக்கிறார்.

அமெரிக்க உளவியலாளரான Dr. Ed Diener (Aka Dr.Happiness) ஒருவர் மகிழ்ச்சியாக இருப்பதை நேரிய உணர்வு, செய்யும் செயல்களில் ஈடுபாடு மற்றும் செய்யும் செயல் அர்த்தமுள்ளதாக இருத்தல் ஆகிய மூன்று விடயங்கள் தீர்மானிப்பதாக கூறுகிறார். அவருடைய ஆய்வின்படி நாம் மகிழ்ச்சியாக இருப்பது 40% எமது மரபணுவில் தங்கியுள்ளது என்கிறார். ஒருவர் மகிழ்ச்சியாக இருப்பதை பகுதியாக உங்கள் மரபணு தீர்மானிக்கிறது என்றாலும் மிகுதி அவருடைய எண்ணங்கள், செயல்கள் என்பவற்றாலும் எமது சூழல் காரணிகளிலும் தீர்மானிக்கப்படுவதாக Dr. Ed Diener சொல்கிறார். இதனையே வேறு பல உளவியலாளர்களும் சொல்லியிருக்கிறார்கள்.

 

இவர்களின் கருத்துப்படி எம்மிடம் உள்ள பணம் மற்றும் ஆடம்பரப் பொருட்களால் ஏற்படும் மகிழ்ச்சியின் ஆயுட்காலம் மிகவும் குறுகியது. ஆனால் நாம் எம்மை மகிழ்ச்சியாக வைத்திருக்கும் மந்திரம் எமக்குள்ளேயே இருப்பதை உணராமல் எங்களைச் சூழ உள்ள ஏதோ ஒன்றிடமிருந்து அல்லது யாரோ ஒருவரிடமிருந்தே எங்கள் மகிழ்ச்சியைப் பெற்றுக் கொள்ளவே முயற்சிக்கிறோம். அதனால்தான் எங்களால் எப்போதும் மகிழ்ச்சியாக வாழ முடிவதில்லை.

 

 

எனது ஆண் நண்பர்கள் சிலரிடம், “எது உங்களை மகிழ்ச்சிப்படுத்துகிறது?” என்று கேட்டபோது அவர்கள், “அலுவலகத்தில் தரப்பட்ட வேலையை பிரச்சனையின்றி முடிப்பது, குடும்பத்தோடு சுற்றுலா போவது, உரியநேரத்தில் வீட்டுக்கடன், மாதாந்த சேவைக் கட்டணங்களை சிரமமின்றிக் கட்ட முடிவது, பிள்ளைகளின் பெறுபேறுகள், அலுவலகத்தில் கிடைக்கக் கூடிய பாராட்டு, வீட்டிலும் வேலைத்தளத்திலும் மனப்பதற்றம், மன அழுத்தம் தராத சூழல்” போன்றவை மகிழ்ச்சியைத் தருவதாகத் தெரிவித்தனர். சில பெண்களைக் கேட்டபோது, மேற்படி விடயங்களோடு, கணவர் தங்களோடு அன்பாக இருப்பது என்ற விடயத்தையும் மேலதிகமாக சேர்த்துக் கொண்டனர்.

 இவை யாவும் பொதுவாகவே எங்களில் பலரும் கொடுக்கக்கூடிய பதில்களே. அதேநேரம் இவர்கள் குறிப்பிட்ட எல்லாமே இலகுவாக அடையக்கூடிய விடயங்களாகவும் திரும்பத் திரும்ப நடக்கக்கூடிய விடயங்களாகவும் இருக்கின்றன. அதனால் இப்படியான எண்ணம் உள்ளவர்களால் மற்றவர்களைவிட அதிகம் மகிழ்ச்சியாக இருக்க முடியும். ஒரு விடயத்தில் வெற்றி கிடைக்காதபோதும் இன்னொரு விடயத்தில் அவர்களால் மகிழ்ச்சியடைவது அவர்களுக்கு சாத்தியமானதாக இருக்கும்.

மாறாக வேறு சிலர் நிறையப் பணம், மாளிகை போன்ற வீடு, விலையுயர்ந்த வாகனம், சமீபத்தில் விற்பனைக்கு வந்த விலையுயர்ந்த கைபேசி போன்றவற்றைவை தங்களிடம் இருந்தால் தங்களால் மகிழ்ச்சியாக இருக்க முடியுமென்று நம்பி அவற்றைத் தமதாக்க கடினமாக உழைக்கிறார்கள். ஆனால் அவர்கள் ஆசைப்பட்ட எல்லாமே அவர்களுக்கு சொந்தமான பின்னர், அவர்களின் மகிழ்ச்சி, மனத் திருப்தி எல்லாமே சில நாட்களிலேயே வடிந்துவிடும் என்பதை அவர்கள் உணர்வதில்லை. அவர்களுக்கு மீண்டும் மகிழ்ச்சியை ஏற்படுத்த புதிதாக வேறு பொருள் தேவைப்படும். மீண்டும் அதை நோக்கி அவர்கள் ஓடத் தொடங்குவார்கள். அதேநேரம் இவ்வாறு தமது மகிழ்ச்சிக்காக வாங்கிய பொருள்களில் ஏதாவது ஒன்றுக்குச் சிறு சேதம் ஏற்பட்டுவிட்டால் அதனால் அவர்களுக்கு ஏற்படக்கூடிய மனவருத்தம் அவர்களின் மகிழ்ச்சியை அடியோடு இல்லாது ஒழித்துவிடும் என்பதுதான் உண்மை.

வேறு சிலர் தமது சிறுவயதில் இருந்தே தாங்கள் ஈடுபடும் எதிலும் வெற்றிபெறவேண்டும் என்ற எண்ணம் உள்ளவராக இருப்பார்கள். அதற்காகத் தம்மைக் கடுமையாக வருத்திக் கொள்ளவும் அவர்கள் தயங்குவதில்லை. அவர்களால் அவர்கள் ஆசைப்பட்ட அந்த முதலிடம் கிடைக்கும்போதுதான் அவர்களால் மகிழ்ச்சியடைய முடியும். அதனைத் தவறவிட்டால் அவர்கள் உடைந்துபோய் விடுவார்கள். அதேநேரம் அந்த முதலிடம் கிடைத்தாலும் அவர்களால் அந்த மகிழ்ச்சியை முழுமையாக அனுபவிக்க முடிவதில்லை. தாம் கைப்பற்றிய முதலிடத்தை எப்படித் தக்க வைப்பது என்பதிலேயே அவர்களின் கவனம் இருக்கும்.

 இன்னும் சிலருக்கு சமூகத்தில் அவர்களுக்கு கிடைக்கக்கூடிய மரியாதை, பாராட்டு, சமூக அங்கீகாரம் என்பனவே மகிழ்ச்சியைத் தருபவையாக இருக்கின்றன. இவர்கள் தாமாகவே சமூக செயற்பாடுகளில் தங்களை விரும்பி இணைத்துக் கொள்வார்கள். ஒரு குழுவாக இணைந்து வேலை செய்தாலும் தான் தனியாகத் தெரிய வேண்டும், தனக்கே பாராட்டும் மாலையும் விழவேண்டும் என்று நினைப்பார்கள். அதற்காக மற்றவர்களைவிட அதிகம் நேரம், சக்தி என்பவற்றை இவ்வாறன செயற்பாடுகளில் செலவிடுவார்கள்.

 இவர்களால் தமது சகா யாராவது மற்றவர்களால் பாராட்டுப்பட்டு விட்டால் அதனைத் தாங்க முடிவதில்லை. இவர்கள் தன்னோடு உள்ளவர்கள் தன்னைப்பற்றி எப்போதும் பாராட்டிப் பேச வேண்டும் என்றும் எதிர்பார்ப்பார். இவ்வாறானவர்கள் தாங்களும் மகிழ்ச்சியாக வாழ்வது இல்லை. மற்றவர்களையும் மகிழ்ச்சியாக இருக்க விடுவதில்லை.

 இவ்வாறாக தமது மகிழ்ச்சியை உயிரற்ற பொருட்கள் மற்றும் சூழ உள்ளவர்கள் மூலம் மட்டுமே பெற்றுக் கொள்ள நினைப்பவர்கள் பொதுவாக மகிழ்ச்சியாக இருக்க முடிவதில்லை. இவர்களின் மனதில் எப்போதும் ஓடிக்கொண்டிருக்கும் ஆசைகள், எதிர்மறை எண்ணங்கள், பிறர்மேல் ஏற்படக்கூடிய பொறாமை உணர்வு, போட்டி மனப்பான்மை, பிறர் தன்னை மகிழ்விக்க வேண்டும் என்ற அதீத எதிர்பார்ப்பு போன்றவையே இவர்களுக்கு கிடைக்கும் மகிழ்ச்சியான சந்தர்ப்பங்களையும் நாசமாக்கிவிடுகிறது. இவர்களைவிட தமது சிறு சிறு வெற்றியையும் மற்றவரின் வெற்றியையும் கொண்டாடத் தெரிந்தவர்கள்தான் அதிகம் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்.

உண்மையில் எமது எண்ணங்கள் செயல்களில் மாற்றங்களைச் செய்வதன் மூலமும் எமது சூழலில் சில மாற்றங்களை செய்வதன் மூலமும் ஆசைகள், இலக்குகளை மீளமைத்துக் கொல்வதன்மூலமும் நாங்கள் அனைவருமே மகிழ்ச்சியாக வாழமுடியும். கீழே உள்ளவை போன்ற சில விடயங்களைப் பின்பற்றுவதன் மூலம் எமது வாழ்க்கையை எப்போதுமே மகிழ்ச்சியானதாக எம்மால் வடிவமைத்துக் கொள்ள முடியும்.

 

1.   உங்கள் திறமை, அனுபவங்களுக்கு ஏற்ற முயற்சிகளில் உங்களை ஈடுபடுத்துங்கள். வெற்றி கிடைக்காவிட்டால் அல்லது தாமதமானால்  உடைந்து விடாதீர்கள். மீண்டும் சிறு இலக்குகள் வைத்து அவற்றை வெற்றி கொள்ள முயற்சி எடுங்கள். ஒருபோதும் மற்றவர்களின் பெறுபேறுகளை உங்கள் இலக்குகளாக்கி விடாதீர்கள்.

 

2.   உங்கள் குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் அவர்களுக்கு விருப்பமான விடயத்தில் ஈடுபடவும் அதில் சாதிக்கவும் உங்களால் முடிந்த வகையில் உதவுங்கள். அவர்களின் சின்னச் சின்ன பெறுபேறுகளையும் கொண்டாடுங்கள். அவர்கள் மீது நிபந்தனையற்ற அன்பை வெளிப்படுத்துங்கள்.

 

3.   உங்கள் வாழ்வில் நடந்த நல்ல விடயங்களை மட்டுமே நினைத்துப் பாருங்கள். உங்களோடு பழகியவர்களின் நல்ல குணங்கள், அவர்களோடு உங்களுக்கிருந்த சந்தோசமான தருணங்களை மட்டுமே நினைத்துப் பாருங்கள்.

 

4.   குடும்பத்தோடும் போதுமான நேரம் செலவிடுங்கள். குறிப்பாக உங்கள் குழந்தைகளுடன் சேர்ந்து விளையாடுங்கள். அடிக்கடி குடும்பத்துடன் வெளியில் சென்று ஒன்றாக உணவகத்தில் உணவு உண்ணுங்கள்.

 

5.   ஒவ்வொரு வாரமும் குறைந்தது மூன்று நாட்களாவது உங்களுக்கு பிடித்த உடற்பயிற்சியில் ஈடுபடுங்கள். ஓடுதல், நடைபயிற்சி, சைக்கிள் ஓடுதல்.

 

6.   ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தைப் பின்பற்றுங்கள். உங்கள் பிள்ளைகளுக்கும் பழக்குங்கள்.

 

7.   தினமும் போதுமான நேரம் நித்திரை கொள்ளுங்கள். தினமும் குறித்த நேரத்தில் உறங்கச் செல்லுங்கள்.

 

8.   நல்ல நண்பர்களுடன் பழகுங்கள். அவர்களுடன் ஆரோக்கியமான முறையில் நேரத்தைச் செலவிடுங்கள். Toxic ஆன நபர்களிடமிருந்து விலகியே இருங்கள்.

 

9.   உங்கள் மாத வருமானத்தின் ஒருபகுதியை எதிர்காலத்திற்கென சேமியுங்கள். அதில் ஒரு சிறுபகுதியை தேவையுடைய மக்களுக்காக உதவுவதற்காகச் செலவிடுங்கள்.

இன்று பதினோராவது சர்வதேச மகிழ்ச்சி தினம். இந்த வருட கருப்பொருளாக Be Mindful. Be Grateful. Be Kind என்ற சுலோகம் அமைந்துள்ளது. நாட்டின் தேசிய வருமானத்தைவிட மக்களின் மகிழ்ச்சியே முக்கியமானது என்று கருதும் நாடான பூட்டானின் முயற்சியினாலேயே இந்த நாள் கொண்டாடப்படுகிறது. நாமும் பூட்டான் மக்களைப் போல மகிழ்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுத்து எங்களோடு உள்ளவர்களையும் மகிழ்ச்சியாக வைத்திருப்பதோடு எங்களுடைய வாழ்க்கையைத் தினமும் ரசித்து வாழவும் முயற்சிப்போம்.