Links

Tuesday, 26 December 2023

 

கலாச்சாரமும் ஆடை நெறிமுறையும்


கடந்த வாரம் யாழ் பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவிற்கு வருகை தந்த ஒருவர் கட்டைக் காற்சட்டையுடன் வந்ததால் பல்கலைக் கழக வளாகத்தினுள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. அந்த நேரத்தில் அனுமதி மறுக்கப்பட்ட தரப்பால் எடுக்கப்பட்ட காணொளி சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு எம்மவர்களால் சில நாட்களாக பேசப்படும் விடயமாக மாறியது.


இது தொடர்பில் அந்தப் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் நடந்துகொண்ட விதம் குறித்துச் சிலரும், அவர்களோடு முரண்பட்டவர்கள் நடந்து கொண்ட விதம் குறித்தும் பலரும் தமது வாதப் பிரதிவாதங்களைப் பகிர்வதையும் பார்க்க முடிந்தது.


உரையாடல் நடைபெறும்போது பொறுமையிழந்து அந்த இரண்டு பாதுகாப்பு உத்தியோகத்தர்களும் எடுத்தெறிந்து பேசுவதை அவதானிக்க முடிந்தது. அதேநேரம் மற்றத் தரப்பும் லேசுப்பட்டதாகத் தெரியவில்லை. “எழுத்தில் காட்டு, “ என்ன culture?”, “என்ன செய்வீர்கள்?” என்று எம் தமிழரில் சிலருக்கு இருக்கும் சண்டித்தன முறையில்தான் அவர்களும் உரையாடுகிறார்கள். பாதுகாப்பு உத்தியோகத்தர்களிடமும் அதுவே வெளிப்படுகிறது.


இங்கு, பல்கலைக் கழகத்தினுள் எவரும் கட்டைக் காற்சட்டையுடன் வரமுடியாது என்ற விதிமுறை எழுத்தில் இருக்கிறதா என்று கேட்டால், அது இருப்பதற்குச் சாத்தியம் குறைவு. ஆனால் மருத்துவ பீடத்திற்கு ஆடை நெறிமுறை எழுத்தில் இருப்பதை தேடலில் அறிய முடிகிறது. அதேபோல கலைப் பீடத்திற்கும் 2016 இல் வெளியானதாக் சொல்லப்படும் ஆடை நெறிமுறை இருப்பதாகத் தெரிகிறது. ஏனைய பீடங்களுக்கும் அவ்வாறு விதிமுறைகள் இருக்கக்கூடும்.


ஆனால் யாழ் பல்கலைக் கழகத்தில் மட்டுமல்ல, நாட்டில் உள்ள ஏனைய பல்கலைக் கழகங்களிலும் அணியக் கூடிய ஆடை தொடர்பில் சில எழுதாத சட்டங்கள் நடைமுறையில் இருக்கிருக்கின்றன. உதாரணமாக பேராதனையில் ஒரு ஆண்கள் விடுதியிலிருந்து இன்னொரு ஆண்கள் விடுதிக்குச் செல்வதற்கே தற்போது கட்டைக் காற்சட்டையுடன் செல்ல அனுமதிப்பதில்லை என்று அறிய முடிகிறது.


ஒரு நிறுவன வளாகத்தினுள் செல்லும்போது நாம் அங்குள்ள சட்டதிட்டங்களை மதித்தே செல்ல வேண்டும் என்பதை மறுப்பதற்கில்லை. அதே நேரம், அதிகாரிகள், பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும், விதிமுறைகளை எவ்வாறு முரண்பாடுகள் அற்ற விதத்தில் விளக்க வேண்டும் என்பது குறித்தும் பல்கலைக் கழக நிர்வாகம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

 

அதே போல அங்கு சென்று முரண்பட்டவர்களும் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். நாம் ஒரு நிகழ்வுக்குச் செல்கிறோம் என்றால் ஏற்புடைய Dress code என்னவென்று தெரிந்து கொண்டு செல்வது எமது பொறுப்பாகிறது.

 

உண்மையில் இந்த முரண்பாடும் இதற்கான தீர்வும் இலகுவானவை. ஆனால் எனது கவனத்தை ஈர்த்தவை இது தொடர்புபட்ட சில விமர்சனங்களும் தொடர்புபட்ட சில விடயங்களுமே!

 

சொல்லப்பட்ட ஒரு விமர்சனத்தில், இவர்கள் ஓரினச் சேர்க்கையாளர்கள். அதனால்தான் வேண்டுமென்றே பிரச்சனை பண்ணுகிறார்கள் என்று ஒருவர் குறிப்பிட்டிருந்தார். இது ஒரு இழிநிலை மனப்பாங்கு. அவர்கள் ஓரினச் சேர்க்கையாளர்களாக இருந்தாலும், அதனால்தான் அவ்வாறு நடந்து கொண்டார்கள் என்று சொல்வதும், இந்த நிகழ்வைப் பயன்படுத்தி  அவர்களை இழித்துப் பேசுவதும் அவர்கள் மீதான வன்முறைத் தாக்குதலே.

 

இன்னும் சிலர், பல்கலைக் கழகம் தமிழரின் கலாச்சரத்தைக் கட்டிக் காப்பாற்றும் இடம். அந்த இடத்தில் இவ்வாறு விதிமுறைகளைத் தளர்த்தினால் அது பெரும் ஆபத்தாக மாறிவிடும் என்றும் எச்சரிக்கிறார்கள். அப்படி யாழ் பல்கலைக் கழகம்தான் தமிழரின் கலாச்சாரத்தைக் கட்டிக் காப்பாற்றுகிறது என்றால் இந்தப் பல்கலைக் கழகம் ஆரம்பிக்கப்பட்ட 1974 ம் ஆண்டுக்கு முன்னர் தமிழரின் கலாச்சாரத்தை கட்டிக் காப்பாற்றியது எது? அல்லது அதற்கு முன்னர் தமிழர் கலாச்சாரம் அற்றவர்களாக இருந்தார்களா?

 

அவ்வாறு யாழ் பல்கலைக் கழகம் தமிழரின் கலாச்சாரத்தைக் கட்டிக் காப்பாற்றுகிறது என்றால் ஏன் இந்தப் பல்கலைக் கழகம் அங்கு வருடாந்தம் ராக்கிங் என்ற பெயரில் நடைபெறும் புதுமுக மாணவர்கள் மீதான வன்முறையைத் இல்லாது ஒழிக்க முடியவில்லை? புலிகள் செல்வாக்காக இருந்த காலம் தொட்டு நேற்று வரை அங்கு கற்கும் பெண்கள்மீது சில பேராசிரியர்கள், விரிவுரையாளர் மேற்கொள்ளும் பாலியல் அத்துமீறல், பாலியல் துஸ்பிரயோகங்கள் தொடர்பாக எழுப்பப்படும் குற்றச்சாட்டுகளை பாரபட்சம் இன்றி விசாரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உறுதியாகக் குரல் கொடுக்கவில்லை?

 

எனது பார்வையில், தேடிக் கற்கும் மனப்பாங்கை ஏற்படுத்துதல், சமூக ஆய்வு, பல்வேறு கலாச்சார அம்சங்களை வெளிப்படுத்தும் முயற்சிகளுக்கும் களம் அமைத்துக் கொடுத்தல் என்பவற்றினூடாக கலாச்சாரத்தை மெருகுபடுத்துவதில் பல்கலைக் கழகத்திற்கு பங்கு இருக்கிறது என்பதை ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் பல்கலைக் கழகத்தால்தான் எமது கலாச்சாரம் கட்டிக் காப்பாற்றப்படுகிறது என்று கண்ணை மூடிக்கொண்டு Romanticize பண்ணுவது ஆபத்தானது. பல்கலைக் கழகத்தை கோவில் என்றெல்லாம் புனிதப்படுத்தி மற்றவர் வாயை மூட முயற்சிப்பதும் ஒரு மலினமான உத்தியே.

 

இவ்வாறு சிலர் Romanticize செய்வதன் பின்னால், யாழ் பல்கலைக் கழகம் யாழ்ப்பாணிகளின் சொத்து அல்லது தமிழரின் சொத்து என்று சிந்தனை காரணமாக இருக்கிறது என்றே நான் நினைக்கிறேன். பல்கலைக் கழகத்தில் உள்ள சிலரும் அப்படி நினைப்பதாகவே தெரிகிறது. 2016 இல் கலைப் பீடாதிபதி கொண்டு வந்த ஆடை விதிமுறைகளும் அதற்கு கட்டியம் சொல்வது போலவே தெரிகிறது.

 

ஆனால் அந்த விதிமுறைகளும் பாரபட்சமானவை என்று அந்த சுற்றுநிருபம் வெளிவந்த சூழலில் விவாதிக்கப்பட்டது. சில கொழும்பு மற்றும் இந்திய ஊடகங்கள் விவாதிக்கும் அளவுக்கு அந்த நேரத்தில் அது விவாதப் பொருளாகவும் இருந்தது.

அந்தச் சுற்றுநிரூபத்தில் ஆண்கள் தாடி வைத்துக் கொள்ளக் கூடாது என்ற விதிமுறை அங்கு அந்தக் காலப் பகுதியில் அங்கு கல்வி கற்ற முஸ்லிம் ஆண் மாணவர்களின் மத உணர்வை பாதிக்கும் விடயமாகக் கருத்தப்பட்டது.  அதைவிட முக்கியமாக ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் பெண்கள் சேலை அணிந்து வரவேண்டும் என்ற பெண்களுக்கு என பிரத்தியேகமாக சொல்லப்பட்ட விதிமுறையும் வாதப் பிரதிவாதங்களை உருவாக்குவதாக இருந்தது.

 

Hiru News ( 26, 2016) செய்திப்படி, அப்போதைய பீடாதிபதி இந்தப் புதிய நடைமுறை யாழ்ப்பாண கலாச்சாரத்தைப் பாதுகாக்கவே எனச் சொல்லியிருக்கிறார். அப்படியானால் இந்த விதிமுறை ஏன் ஆண்களுக்கு ஆடை விடயத்தில் விலக்களித்தது? கலாச்சாரப் பாரம் ஏன் எப்போதும் பெண்கள் தலையிலேயே சுமத்தப்படுகிறது? ஏன் கலாச்சாரத்தைப் பாதுகாப்பது பெண்களின் பொறுப்பு என்ற சித்தாந்தம் தொடர்ந்தும் எமது சமூகத்தில் காவப்படுகிறது? பல பெண்களும் ஏன் இந்த மூளைச் சலவைக்குள் ஆளாகி அவர்களும் கலாச்சாரக் காவலராகி ஏனைய பெண்கள் மீது அதனைத் திணிப்பவர்களாக மாறிவிடுகிறார்கள்?

 

ஆண்களை எப்போதும் மேற்கத்தைய உடைகள் அணிய அனுமதிக்கும் அரசும் அரசு சார்ந்த நிறுவனங்களும் அதேபோல, ஏன் பெண்களையும் உடலை முழுமையாக மூடும் வகையிலான மேற்கத்தைய பாணியிலான உடையணிய அனுமதிக்கக் கூடாது?

 

உண்மையில் நாம் சிறந்த கலாச்சாரம் கொண்டவர்களாக இருந்தால், இந்தக் கேள்விகளுக்கு விடை தேட வேண்டியவர்களாக இருக்கிறோம்.

தேடுவோம்!

 

-    வீமன் -

 


References:

 https://www.colombotelegraph.com/index.php/why-is-jaffna-university-imposing-an-authoritarian-dress-code/

https://www.google.com/search?q=jaffna+university+dress+code&rlz=1C1SQJL_enCA886CA886&oq=jaffna+university+dress&gs_lcrp=EgZjaHJvbWUqBwgBECEYoAEyBggAEEUYOTIHCAEQIRigATIHCAIQIRigATIHCAMQIRigATIHCAQQIRifBTIHCAUQIRifBdIBCjE2MjI2ajBqMTWoAgCwAgA&sourceid=chrome&ie=UTF-8#vhid=XboaSGqB0r3-zM&vssid=l

https://www.hirunews.lk/english/127182/jaffna-undergrads-say-no-to-new-dress-code-introduced-by-uni-authority