Links

Saturday, 23 January 2021



= கல்விமுறையில் தேவையான மாற்றங்களும் மூலோபாயங்களும் =

மணிவண்ணன் மகாதேவா.

கடந்த வருட ஆரம்பத்திலிருந்து இலங்கையிலும் புலம்பெயர் சமூகத் தமிழ்பேசும் உலகிலும் அதிகம் பேசப்பட்ட விடயம் கல்வி முன்னேற்றம் தொடர்பானதாகும். கல்வியியலாளர்கள், மற்றும் கல்வி வளர்ச்சி தொடர்பில் அக்கறை கொண்டிருக்கும் பலரும் இன்று கல்வி தொடர்பில் தொடர்ந்தும் பேசவும் காத்திரமான முறையில் வினையாற்றவும் ஆர்வம் காட்டுவதற்கு பாடசாலை மட்டத்தில் நடைபெறும் மூன்று பொதுப் பரீட்சைகளில் வடக்கு, கிழக்கின் பெறுபேறுகள் மட்டுமன்றி, மானவர்களின் சமூக நடத்தை, சமூகப் பொறுப்புத் தொடர்பான கரிசனையும் காரணமாக அமைந்துள்ளது.

 

இவ்வாறு கல்வியில் அக்கறை காட்டும் பலர், பேசுவதோடு மட்டுமல்லாது, பயனுள்ள நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதையும் அவதானிக்கக் கூடியதாக உள்ளது. பின் தங்கிய பிரதேச மாணவர்களுக்கான இணையவழிக் கல்வி, மேலதிக வகுப்புகள், செயலட்டைகள் தயாரித்துக் கொடுத்தல், மடிக்கணினி, டப்லேட் வழங்குதல் போன்றவற்றை இதற்கு உதாரணமாகக் கூறலாம். இவற்றுள் சில நடவடிக்கைகள் வசதி குறைந்த மாணவர்களுக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தல், தகவல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தொடர்ச்சியான கற்பித்தலை மேற்கொள்ள உதவுதல் என்பவற்றை நோக்கமாகக் கொண்டிருந்தன. சில அமைப்புகளின் நடவடிக்கைகள், இந்த வருடம் நடைபெற்ற பொதுப் பரீட்சைகளுக்கு மாணவர்களை துரிதமாக தயார் செய்வதை நோக்கமாகக் கொண்டிருந்தன.

 

இந்த அடிப்படையில் வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தில் வாழும் மாணவர்களின் கல்வி முன்னேற்றத்தில் அக்கறை காட்டுவோரில் இரண்டு வகையானவர்களை தெளிவாக இனங் காண முடிகிறது. ஒருசாரார் தமிழ்மாணவர்கள் அனைவரும் கல்வி கற்பதற்கு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்று நினைக்கும் அதேவேளை, மறுசாரார், தமிழ் மாணவர்கள் குறிப்பாக வடமாகாண மாணவர்கள் பொதுப் பரீட்சைகளில் மீண்டும் முதலிடத்தைப் பிடிக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். ஆனால் இருசாராருமே மாணவர்கள் மத்தியில் கல்வியோடு ஒழுக்கம், நல்ல பழக்க வழக்கங்கள், சமூகப் பொறுப்பு என்பனவும் இளைய சமுதாயத்தின் மத்தியில் கட்டியெழுப்பப்பட வேண்டும் என்பதில் அக்கறை காட்டுகிறார்கள் என்பதையும் அவதானிக்க முடிகிறது.

 

தமிழ் மாணவர்களின் கல்விநிலையில் முன்னேற்றம் ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதில் எமக்கு மாற்றுக் கருத்தில்லை. ஆனால் எதற்காக மாணவர்களின் கல்வி, பாடசாலைச் செயற்பாடுகளில் நாம் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்பது தொடர்பாக எமக்கு மிகத் தெளிவான நோக்கம் இருக்க வேண்டும். ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசிலாக இருக்கட்டும், சாதாரண தரப் பரீட்சையாக இருக்கட்டும் எமது நோக்கம் நாடளாவிய ரீதியில் முதலிடத்தை பிடிப்பதும் அதனைத் தக்க வைப்பதுமாக மட்டுமாக இருந்துவிடக் கூடாது.

அதற்கும் அப்பால், எமது மாணவர்களை தமிழ் சமூகத்தைக் கட்டியெழுப்புபவர்களாக, சமூகப் பொறுப்புள்ளவர்களாக எவ்வாறு வளர்க்கப்போகிறோம் என்பதில் அதிக கவனம் செலுத்த வேண்டும். மாணவர்கள் முகக் கொடுக்கும் பிரச்சனைகளை சரியாக இனங் காண வேண்டும். இனங் காணப்பட கல்வி தொடர்பான பிரச்சனைக்கு தீர்வு காண்பதானால் பல விடயங்கள் கருத்தில் கொள்ளப்படவேண்டும். முதலில் அடிப்படைப் பிரச்சனைகள் மற்றும் காரணிகள் சரியாகக் கண்டறியப்பட வேண்டும்.

 

அவற்றுக்கான சரியான அணுகுமுறைகளும் பின்பற்றப்படவேண்டும். எமது சமூகத்தைக் கல்விச் சமூகமாக மீண்டும் கட்டி எழுப்புவதற்கு மாணவர், பெற்றோர், அவர்கள் வாழும் சமூகம், ஆசிரியர்கள், அதிபர்கள், பாடசாலை பழைய மாணவர்கள் சங்கங்கள், வெளிநாட்டுத் தமிழர்கள் மத்தியில் செயற்படும் உதவி அமைப்புக்கள் அனைத்தும் சேர்ந்து பணியாற்ற வேண்டியது அவசியமாகும்.

இனி இன்றைய சூழலில் கல்வி தொடர்பான சில சவால்கள் சிலவற்றைப்  பார்ப்போம்.

 

கல்வித் துறையில் இன்று காணப்படும் சவால்கள்

எமது சமூகத்தில் நாம் அதிக அக்கறை செலுத்த வேண்டிய பிரிவாக இருப்பது ஆரம்பப் பிரிவுதான். இப்போதும் பல ஆசிரியர்களும் பெற்றோரும் ஆரம்பக் கல்வியில் அக்கறை செலுத்துகிறார்கள்தான். ஆனால் அது வேறு வகையான அக்கறை – ஐந்தாம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சையில் வலயத்தில், மாவட்டத்தில், மாகாணத்தில், நாட்டில் முதலிடம் பிடிக்க வேண்டும் என்ற வெறித்தனத்தோடு கூடிய அக்கறை.

 

இன்று காணப்படும் தீவிரம் சில தசாப்தங்களுக்கு முன்னர் அன்றைய பெற்றோர் மத்தியிலும் ஆசிரியர் மத்தியிலும் இருந்திருக்கவில்லை. அக்காலப் பகுதிகளில், பொதுவாக நான்காம் தரத்தில் பிள்ளை படிக்கும்போதுதான் பெற்றோரும் ஆசிரியர்களும் பரபரப்பாகவும் பதட்டத்தோடும் பிள்ளைகளை பரீட்சைக்குத் தயார் செய்யத் தொடங்குவார்கள். அதுவே படிப்படியாக தரம் மூன்று, தரம் இரண்டு என்று மாறி பின்னர் முதலாம் வகுப்பிலிருந்தே பிள்ளைகளை ஐந்தாம் வகுப்புப் பரீட்சைக்கு தயார் செய்யும் பழக்கம் ஏற்பட்டு விட்டது. இன்று அதுவும் எல்லை மீறிப்போய் முன்பள்ளியில் இருந்தே பிள்ளைகளை ஐந்தாம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சைக்குத் தயார் செய்யக் கூடிய மனநிலையில்தான் பல பெற்றோர் இருக்கிறார்கள்.

 

புலமைப் பரிசிலில் முதலிடம் என்ற போதையின் தாக்கத்தினால் முன்பள்ளியில் இருந்தே பிள்ளைகளுக்கு “எண்”ணையும் “எழுத்தை”யும் திணித்துத் திணித்துத்  திணறடிப்பதைத்தான் இன்றைய பெற்றோரும்  ஆசிரியர்களும் செய்து கொண்டிருக்கிறார்கள். மறுபுறத்தில் “அடியாத மாடு படியாது” என்று இன்றும் மாணவர்களை அடித்து படிப்பித்தால் மட்டுமே மாணவர்கள் நன்றாகப் படிப்பார்கள் என்று நம்பும் பல ஆசிரியர்களும் பெற்றோர்களும் நம்மத்தியில் இன்றும் உலவிக் கொண்டுதான் இருக்கிறார்கள். சில பாடசாலைகளில், ஆசிரியர்கள் சரியாக இருந்தாலும் அவர்கள் மீது பெற்றோர் கொடுக்கும் அழுத்தம் அதீதமானது.

 

மகிழ்ச்சிகரமான கற்றல்

2000 ம் ஆண்டின் பின்னர் நாடளாவிய வகையில் மகிழ்ச்சிகரமான கற்றல் என்ற கருப்பொருள் ஆரம்பப் பாடசாலைகளில் அறிமுகம் செய்யப்பட்டது. பிரம்படி, உடல்ரீதியான தண்டனைகளை வகுப்பறைகளில் இருந்து நீக்கம் செய்ய அறிவுறுத்தப்பட்டது. மாணவர் விருப்பத்தோடு கல்வி கற்கும் சூழலை உருவாக்கும் முயற்சிகள் எடுக்கப்பட்டன. வகுப்பறைகள், பாடசாலைச் சூழல் என்பன அழகுபடுத்தப்பட்டன. வகுப்பறையின் உள்ளே, நீர்மூலை, விளையாட்டு மூலை போன்றவை உருவாக்கப்பட்டன. பிள்ளைகளின் ஆக்கங்களைக் கொண்டு வகுப்பறைகள் அலங்கரிக்கப்பட்டன. பிள்ளைகளுக்கு அன்பாக கல்வி கற்பிக்க ஆசியர்களுக்கு விசேட பயிற்சிகளும் வழங்கப்பட்டன. ஆனால் இருபது ஆண்டுகள் ஆகியும் இன்னமும் வடக்குக் கிழக்கில் கற்பித்தல் முறையிலும் சரி, பெற்றோர் மனநிலையிலும் சரி பெரிய மாற்றம் ஏற்பட்டுவிட்டதாகத் தெரியவில்லை.


 


தவறு எங்கே நடைபெறுகிறது?

இது ஒருபுறம் இருக்க, வடக்குக் கிழக்கில் பெற்றோரும் ஆசிரியரும் எது சிறந்த முறையென்று எண்ணி இத்தனை நாட்களும் பின்பற்றியது மட்டுமில்லாது, இனியும் தொடர நினைக்கிறார்களோ அந்த முறையாவது வெற்றியளித்ததா? “ஆம்” என்றால்  எப்படித் தொடர்ச்சியாக ஒவ்வொரு வருடமும் ஐந்தாம் ஆண்டுப் புலமை பரிசிலில் சராசரியாக 15 – 25% மாணவர்கள் இரண்டு பாடத்திலும் எழுபது புள்ளிகளுக்கு மேல் ஏன் எடுக்க முடியாதுள்ளது? இன்னொரு வகையில் சொல்வதென்றால், ஏன் சித்தி பெறத் தவறுகிறார்கள்? தரம் ஒன்றிலிருந்து ஐந்துவரை கற்பிக்கும் தமிழும் கணிதமும் ஒன்றும் கடினமான, சிக்கலான பாட அலகுகள் இல்லையென்பது அனைவரும் அறிந்ததே. அப்படியானால் தவறு எங்கே நடைபெறுகிறது?

மாணவரை சக மாணவரே அவமானப்படுத்தும் வகையில் கேலி (Bully) செய்வதைத் தகாத செயலாகக் கருதும் இன்றைய யுகத்தில் ஆசிரியர்களே மாணவர்களை அவர்களின் புறத்தோற்றம், கல்வியில் பின்னடைவு, பரீட்சைப் பெறுபேறுகள்  என்பவற்றைச் சுட்டிக்காட்டி ஏனைய மாணவர்கள் முன்னிலையில் அவமானப்படுத்துவது இன்றும் தொடர்கிறது. இவ்வாறு ஆசிரியர்களாலும் பாடசாலைகளாலும் அவமானப்படுத்தப்பட்டு கல்வியே வேண்டாம் என்று பாடசாலைக் கல்வியை எத்தனையோ மாணவர்கள் இடைநிறுத்தி விடுகிறார்கள். இந்தப் பிரச்சனைகளுக்கு என்ன தீர்வு?

 

மாணவர் இடைவிலகல்

கடந்த காலங்களில் எழுமாற்றாக சில பாடசாலைகளில் கல்வியிலாளர்கள் ஆய்வு செய்தபோது, பல பாடசாலைகளில் ஏழாம், எட்டாம் தர மாணவர்களில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையானவர்கள் தரம் ஐந்துக்குரிய தமிழ் பாடநூலையே சரளமாக வாசிக்க முடியாதிருந்தனர் என்று தெரிய வந்துள்ளது. அப்படியானால் அந்த மாணவர்கள் ஏன் போதுமான வழிகாட்டல்களையும் கற்றலுக்கான சந்தர்ப்பத்தையும் பெற முடியாது போனது? சகலருக்கும் இலவசக் கல்வி நீண்ட காலமாக இலங்கையில் வழங்கப்பட்டு வந்தாலும் ஒரு வகுப்பில் முப்பது பிள்ளைகள் இருந்தால் அந்த முப்பது பிள்ளைகளிலும் ஏன் ஒரு ஆசிரியரால் கவனமெடுத்துக் கற்பிக்க முடியாது போகிறது?

 

சில ஆசிரியர்கள், நன்றாகப் படிக்கும் பிள்ளைகளில் மட்டுமே கவனம் செலுத்துவதாகவும் கல்வியில் பின்தங்கிய மாணவர்களை முற்றாக புறக்கணித்து நடப்பதாகவும் எழும் குற்றச்சாட்டுக்குப் பாடசாலைகளின் பதில் என்ன? பிரபலமான பாடசாலைகள் தமது செல்வாக்கைப்  பயன்படுத்தி சிறந்த ஆசிரியர்களை தமது பாடசாலைக்குள் உள்ளீர்த்துக் கொள்கிறார்கள். இதுவும் நகர்புற, கிராமப் பாடசாலைகள் திறமையான ஆசிரியர்களைப் பெற்றுக் கொள்ள முடியாத நிலையை ஏற்படுத்தி விடுகிறது என்ற முறைப்பாட்டைப் புறந் தள்ள முடியுமா?

 

வருடாந்தாம் முழு நாட்டிலும் சராசரியாக 15,000 க்கும் மேற்பட்ட எண்ணிக்கையான மாணவர்கள் தரம் ஐந்திலிருந்து தரம் பத்துக்குள் பாடசாலைகளிலிருந்து இடைவிலகுகிறார்கள். 2019 ம் ஆண்டு க.பொ. த. சாதாரண தரம் எழுதிய மாணவர்களின் வயதினரான 969 மாணவர்கள் வடமாகாணத்திலும் 3,600 மாணவர்கள் கிழக்கு மாகாணத்திலும் இடைவிலகியுள்ளனர்.இந்த இரண்டு மாகாணத்திலிருந்து இடைவிலகியவர்களின் எண்ணிக்கை, இலங்கையில் மொத்தமாக இடைவிலகியவர்களின் எண்ணிக்கையில் 27% என்பது குறிப்பிடத்தக்கது.  இவர்கள் இடை விலகுவதற்கு அவர்களின் குடும்ப, பொருளாதார சூழல் என்பன சாத்தியமான காரணங்களாக இருக்கக்கூடிய அதே வேளையில் பாடசாலையின், குறிப்பாக ஆசிரியர், அதிபர்களின் செயற்பாடுகளும் ஒரு முக்கிய காரணம் என்பதை யாரும் மறுத்துவிட முடியுமா?.

 

பொதுப் பரீட்சையில் தகுதி பெறத் தவறுதல்

இலங்கையில் கல்வியை மதிப்பீடு செய்யும் இன்னுமொரு அளவீடாகவும் பாடசாலைகளுக்கு பெருமைதரும் ஒன்றாகவும் இருக்கும் க.பொ. த. சாதாரண தர பெறுபேறுகளை எடுத்துக் கொண்டால், சராசரியாக 7,000 மாணவர்களை எந்த ஒரு பாடத்திலும் சித்திபெறத் தவறி விடுகிறார்கள். அதேநேரம் ஒவ்வொரு வருடமும் மொத்தமாக 75,000 – 80,000 மாணவர்கள் உயர்தரம் கற்கும் தகுதி பெறத் தவறுகிறார்கள். கடந்த பல வருடங்களாக இதுதான் இலங்கையின் கல்வியின் நிலை.

 

ஆக மொத்தத்தில், எப்படியாவது பிரபல பாடசாலைகளின் பெறுபேறுகளை உயர்மட்டத்தில் தக்க வைத்தல், நாடாளாவிய ரீதியில் மீண்டும் யாழ் மாவட்டத்தை உச்சத்தில் வைத்தல், மாகாண ரீதியாக  முதலிடத்தைப் பிடித்தல் போன்ற பெறுபேறு சார்ந்த இலக்கினை நோக்கியே தரம் ஒன்றில் இருந்தே குதிரையோட்ட கலாச்சாரத்தை உருவாக்கி வைத்திருக்கிறோம். இதனால் ஒவ்வொரு ஆண்டும் மெதுவாக கற்கும் மாணவர்கள், விசேட தேவையுள்ள மாணவர்கள், பின்தங்கிய பிரதேச மாணவர்கள், கடினமான குடும்பச் சூழலில் வாழும் மாணவர்கள் போன்றவர்களில் போதிய கவனம் செலுத்தத் தவறி விடுகிறோம். இதனால் வருடாந்தம் ஆயிரக்கணக்கான மாணவர்களை பாடசாலைக்கு வெளியே விரட்டிக் கொண்டிருக்கிறோம்.

 

கல்வி விடயத்தில் மூலோபாய/ங்களில் மாற்றம்

இந்த சூழ்நிலையில் இணையவழிக் கல்வி மூலமோ, கடந்த கால பரீட்சை வினாவிடைகளை அச்சிட்டுக் கொடுப்பதன் மூலமோ தொடர்ந்தும் பிரச்சனையாக உள்ள விளிம்புநிலை மாணவர்களுக்குரிய தீர்வு கிடைத்துவிடாது. இவையிரண்டும் படிக்கக் கூடிய மாணவர்களுக்கு குறைநிரப்பியாகவே பயன்படும். உடையவன் பாரா வேலை ஒரு முழம் கட்டை என்று ஊரில் சொல்லுவார்கள். அதுபோலவே கல்வி விடயத்தில் உடையவர்களான பெற்றோர், ஆசிரியர்களின் மனமாற்றமும் உதவி நிறுவனங்களின் மூலோபாயங்களில் உடனடி மாற்றமும் அவசியமானதாகும்.

 

ஆரம்பப் பிரிவு

ஆரம்பப் பிரிவு என்பது ஒரு தனது வீட்டுச் சூழலில் வாழ்ந்த குழந்தை தனது வீட்டுச் சூழலில் இருந்து முற்றிலும் மாறுப்பட்ட இன்னொரு சூழலுக்கு அறிமுகமாகும் நிலையாகும். இந்த நிலையில்தான் ஒரு பிள்ளை முறைசார் கல்வியிலும் பாடசாலை செல்வதில் விருப்பத்தினை  உருவாக்கிக் கொள்ளும் பருவம். அல்லது வெறுப்பினை ஏற்படுத்திக் கொள்ளக்கூடிய பருவம் என்றும் சொல்லலாம்.

 

இந்த வயதில்தான் பிள்ளைகள் தமது சூழலில் இருந்து அதிகம் கற்றுக் கொள்கிறார்கள். குழுவாகவும் தனியாகவும் தொழிற்படப் பழகுகிறார்கள். சமூகத்தில் தமது வகிபங்கு என்ன என்பதையும் கற்றுக் கொள்ளும் பருவமும் இதுதான். அதனால் இந்தப் பருவத்தில் மாணவர்கள் கணிதத் திறமையும் தமிழ் அறிவும் மட்டுமின்றி நற்பண்பு கொண்டவர்களாகவும் சமூகப் பொறுப்புள்ளவர்களாகவும் உருவாக்குவதும் பெற்றோரினதும் ஆசிரியர்களினதும் பொறுப்பாகிறது.

இவற்றை மனதில் கொண்டு, இனிவரும் நாட்களில் சமூகப் பொறுப்புடன் கூடிய மாணவர் அறிவு விருத்தி தொடர்பாக நாம் என்ன செய்ய முடியும் என்று பார்க்கலாம்.

§  ஆசிரியர் தனது வகுப்பில் உள்ள பிள்ளைகள் மேல் அன்பு பாராட்டுபவராகவும் அதேநேரம் கண்டிப்பானவராக இருக்கலாம், ஆனால் தண்டிப்பவராக இருக்கக் கூடாது.

§  வகுப்பறைகளை, பிள்ளைகளுக்கான வகுப்பறைகளாக தொடர்ந்து பேண வேண்டும். வகுப்பை அழகுபடுத்துவதில் பிள்ளைகளுக்கும் பொறுப்பு வழங்க வேண்டும்.

§  ஆரம்பப் பிரிவில் கற்பிக்கும் ஆசிரியர்கள் அனைவரும் கட்டாயம் சிறுவர் உளவியல் தொடர்பான அறிவும் அடிப்படை உள ஆற்றுப்படுத்தல் பயிற்சியும் பெற்றவராக இருத்தல் வேண்டும்.

§  மாணவர்கள் அனைவரையும் விளையாட்டுச் செயற்பாடுகளில் ஈடுபடுத்த வேண்டும். குறிப்பாக அணியாக விளையாடும் விளையாட்டுகளில் மாணவர்கள் ஈடுபட ஊக்குவித்தல் வேண்டும்.

§  வகுப்பில் விசேட தேவையுள்ள மாணவர்களையும் மெதுவாகக் கற்கும் மாணவர்களையும் இனம் கண்டு அவர்கள் மேல் விசேட கவனம் செலுத்தப்பட வேண்டும்.

§  மாணவர்கள் மத்தியிலிருந்து ஒவ்வொரு மாதமும் சிறந்த மனிதப் பண்புகளை வெளிப்படுத்தும் பிள்ளைகளுக்கு பாராட்டி சான்றிதழ்கள் வழங்கலாம். உதாரணமாக, குழுவாக இயங்குதல், மற்றவருக்கு உதவுதல் போன்றன.

§  இந்தப் பருவத்திலேயே பாடசாலைக் கல்விக்குப் புறம்பாக பிள்ளைகளுக்காக பிற செயற்பாடுகளில் ஈடுபடுத்த வேண்டும். அண்மைக் காலங்களில் பல கல்வியியலாளர்கள் கூறுவது போல நன்னெறிக் கற்கைகள் அறிமுகப்படுத்தப்பட வேண்டும்.

§  இன்று பெரிதும் பேசப்படும் வீட்டுத் தோட்டம், சுயர் சார்பு பொருளாதாரம் என்பவற்றுக்கான அத்திவாரத்தை இந்த ஆரம்பப் பிரிவுகளிலேயே இட முடியும். 2000 -2002 காலப் பகுதியில் திருகோணமலையில் ஏற்கனவே நடைமுறைப்படுத்தப்பட்டு வெற்றியளித்த ஒரு செயல்முறைதான் “பாடசாலையிலிருந்து வீட்டுத் தோட்டத்திற்கு” என்ற திட்டம். இதனை ஏனைய பாடசாலைகளும் நடைமுறைப்படுத்த முடியும். பாடசாலையில் நாற்றுமேடைகள் அமைத்து பின்னர் பிள்ளைகளை அவர்கள் நட்டு வளர்த்த நாற்றுகளை தமது வீடுகளுக்கு கொண்டு சென்று நட்டு வளர்க்க ஊக்கப்படுத்துவதன் மூலம் பிள்ளைகள் மத்தியில் வீட்டுத் தோட்டம் மீதான ஆர்வத்தையும் வளர்க்க முடியும்.

§  ஒவ்வொரு வருடமும் சிறந்த ஆசிரியர் தெரிவு செய்யப்பட்டு பாடசாலைப் பொதுக் கூட்டத்திலேயோ பாடசாலை நிகழ்விலோ கௌரவிப்பது மற்றைய ஆசிரியர்களையும் ஊக்குவிக்கும்.

 


ஆறிலிருந்து உயர்தரம் வரை

இலங்கையில் உள்ள பாடசாலைகளில் பொவாகவே திறமையுள்ள மாணவர்கள், ஆர்வமுள்ள மாணவர்களே விளையாட்டுச் செயற்பாடுகளில் ஈடுபடுவதும் அதற்குப் பொறுப்பான ஆசிரியர்கள் அவர்கள் மீதே கவனம் செலுத்துவார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒரு விடயமே. அவ்வாறு இல்லாமல் வகுப்பில் உள்ள மாணவர்கள் ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு விளையாட்டுச் செயற்பாடுகளில் ஈடுபடவேண்டும். இது அவர்களின் ஆரோக்கியத்திற்கு மட்டுமன்றி கல்விச் செயற்பாடுகளில் கூடுதல் கவனம் செலுத்தவும் உதவி புரியும்.

 

பொதுவாக தரம் ஐந்திலிருந்து பதினொன்றுக்கு இடைப்பட்ட காலத்தில்தான் மாணவர்கள் கல்வியை இடை நிறுத்துகிறார்கள் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.  மாணவர்கள் இடைவிலகுவதற்கு மாணவர்களின் பொருளாதாரச் சூழல் ஒரு காரணமாக இருந்தபோதிலும் மாணவர்களின் குடும்பச் சூழல், பாடசாலையில் மாணவர் முகம் கொடுக்கும் சிரமங்களும் அவர்கள் கல்வியை இடை நிறுத்துவதற்கு காரணங்கள் என்று சொல்லலாம்.

 

குடும்பப் பொருளாதார சூழ்நிலை காரணமாக  வீட்டில் உள்ள கடமைகளை முடித்து நேரம் பிந்திப் பாடசாலைக்கு வரும் மாணவர்கள் காரணமே கேட்காது தண்டிப்பதும் வார்த்தைகளால் வதைப்பதும் பரவலாக நடைபெறும் ஒரு விடயமே. இதனாலேயே பல மாணவர்கள் இத்தனை அவமானத்தோடு பாடசாலைக்குச் செல்லத்தான் வேண்டுமா என்று வெறுப்புற்று கல்வியை இடைநிறுத்தி விடுகிறார்கள்.  ஒழுக்கம், நேரம் தவறாமையை கடுமையாக நடைமுறைப்படுத்த முனையும் ஆசிரியர்களும் அதிபர்களும் மாணவர்கள் நேரம் பிந்தி வருவதற்கான காரணத்தையும் அறிய முயற்சிப்பதோடு மாணவர்களின் சுயகௌரவம் பாதிக்கப்படாத வகையில்  நடாத்துவார்கள் என்றால் அதுவே மாணவர்களுக்கு ஒரு பாடசாலை நிர்வாகம் செய்யும் பெரிய உதவியாகும்.

 

அதேபோல ஒரு ஆசிரியர் தனது வகுப்பில் உள்ள மாணவர்கள் ஒவ்வொருவரும், எதிர்பார்க்கப்படும் குறைந்த அடைவு மட்டத்திற்கு மேல் பெறுபேறுகளைப் பெற்றுக் கொள்வதை உறுதிப்படுத்துவது தனது பொறுப்பு என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். தனது வகுப்பில் ஒரு மாணவன் மாவட்டத்தில் முதலிடம் பெற்றமைக்காக ஒரு ஆசிரியர், அவன் தனது மாணவன் என்று பெருமை கொள்வாராக இருந்தால், அதே வகுப்பில் அதே பாடத்தில் இரண்டு மாணவர்கள் மிகக் குறைந்த புள்ளிகள் பெற்றமைக்கும் அவர்தானே பொறுப்பேற்க வேண்டியவராகிறார்?

 

உண்மையில் நன்றாகப் படிக்கும் மாணவரைவிட குறைந்த புள்ளிகளைப் பெறும் மாணவர்கள் மீதுதான் ஆசிரியர்கள் அதிகம் கவனம் செலுத்த வேண்டும். சிறிய வகுப்பிலிருந்தே மாணவர்களின் பெறுபேறுகள் அடிப்படையில் குறைந்த புள்ளிகள் பெறும் மாணவர்களின் அடைவு மட்டத்தை அதிகரிக்கும் செயற்பாடுகளை ஒவ்வொரு ஆசிரியரும் முன்னேடுப்பார்களாக இருந்தால் சாதாரண தரப் பரீட்சையில் மிக அதிகமான மாணவர்களை சித்தியடையச் செய்ய முடியும். ஆனால் இதற்கு ஒவ்வொரு ஆசிரியரின் அர்ப்பணிப்புடன் செயற்பட முன்வர வேண்டும்.

இவ்வாறான பொறுப்புக் கூறல் தொடர்பான விடயங்கள் ஒருபுறம் இருக்க, மாணவர்களை தயார்படுத்துதல் தொடர்பாக வேறு பல விடயங்களிலும் நாம் கவனம் செலுத்த வேண்டியுள்ளது.

 

ஒவ்வொரு வருடமும் இலங்கையில் 270,000 – 300,000 பேர் க.பொ.த. சாதாரண தர பரீட்சைக்குத் தோற்றுகிறார்கள். அவர்களுள் 5,000 – 8,000 மாணவர்கள் அனைத்துப் பாடங்களிலும் A சித்தி பெறும் அதேநேரம் 5,000 – 10,000 வரையான மாணவர்கள் அனைத்துப் பாடங்களிலும் சித்தி பெறத் தவறிவிடுகிறார்கள். அவ்வாறு அனைத்துப் பாடங்களிலும் சித்தி பெறாதவர்களையும் சேர்த்து 70,000 – 100,000 வரையான மாணவர்கள் உயர்தரம் கற்கும்  தகுதியற்றவர்களாகிறார்கள். ஆனால் பாடசாலைகளும் ஊடகங்களும் அந்த இரண்டு வீதமான (5,000 – 8,000) மாணவரின் வெற்றியைத்தான் தலையில் வைத்துக் கொண்டாடுகிறார்கள்.  அதன் பத்து மடங்கு எண்ணிகையிலான மாணவர்களின் எதிர்காலத்தைப்பற்றி போதுமான அக்கறையை வெளிக்காட்டுவதில்லை என்றே கூறலாம்.

 

இதேபோல உயர்தர பரீட்சையைப் பொறுத்தவரை ஒவ்வொரு வருடமும் 250,000 – 280,000 க.பொ.த. உயர்தர பரீட்சைக்குத் தோற்றுகிறார்கள். அவர்களுள் 5,000 – 6,000 மாணவர்கள் மூன்று பாடங்களிலும் A சித்தி பெறும் அதேநேரம் அந்த எண்ணிக்கையின் நான்கு மடங்கான (20,000 – 25,000) மாணவர்கள் அனைத்துப் பாடங்களிலும் சித்தி பெறத் தவறிவிடுகிறார்கள்.

பரீட்சைக்குத் தோற்றுவோரில் மொத்தமாக 150,000 – 160,000 வரையான மாணவர்கள் ஒவ்வொரு வருடமும் பல்கலைக் கழகம் செல்லத் தகுதி பெற்றாலும் அவர்களுள் 20  வீதத்துக்குக் குறைவானவர்களே தேசியப் பல்கலைக் கழகங்களுக்குள் (இலவசக் கல்வித் திட்டத்தின் கீழ்) உள்வாங்கப்படுகின்றனர். இன்னொரு விதத்தில் சொன்னால், ஒவ்வொரு வருடமும் பரீட்சை எழுதும் மொத்த எண்ணிக்கையில் பத்து வீதமானவர்கள் மட்டுமே பல்கலைக்கழக அனுமதி பெறுகிறார்கள்.

 

இந்த இரண்டு பொதுப் பரீட்சைகள் தொடர்பான முழுமையான தரவுகளையும் நன்றாக ஆராயும்போது உங்களுக்கே பெரிய ஒரு உண்மை வெளிப்படையாகத் தெரியும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. நாம் உண்மையில் அதிகம் கவனம் செலுத்த வேண்டிய மாணவர்கள் மீதான கவனத்தை விட மிகச் சொற்பமான (மொத்த மாணவர்கள்  (5 – 10%) மீதுதான் அதிக கவனம் செலுத்துகிறோம் என்பதுதான் அந்த கசப்பான உண்மை. ஏனெனில் எமது கல்விக்  கட்டமைப்பைப் பொறுத்தவரை அவர்கள்தான் பிரபல பாடசாலைகளைத் தொடர்ந்தும் பிரபலமாக வைத்திருக்கப் போகிறார்கள். கிடைக்கும் வளங்களை முறையாகப் பயன்படுத்தி அனைத்து மாணவர்களையும் தமது கல்விப் பாதையின் ஒவ்வொரு மைல்கல்லையும் தாண்டச் செய்வதைவிட  5 – 10% மாணவர்கள் மீது மட்டும் முழு வளங்களையும் குவித்து நாடளாவிய ரீதியில் முதலிடங்களைப் பெற்றால் போதுமென்ற நிலையில்தான் பல பாடசாலைகளும் பல கல்வியாளர்களும் இயங்குகிறார்கள் என்பது உண்மையில் கவலைக்குரியது.

 

கற்பித்தலும் வழிகாட்டலும்

தரம் ஆறிலிருந்து உயர்தரம் வரையான பாடசாலைக் காலமே மாணவர்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் காலமாக விளங்குகிறது. மாணவர்கள் எதிர்காலத்தில் தாம் எந்தத் துறையில் ஈடுபடப் போகிறோம் என்பதைத் தீர்மானிக்கும் பருவமாகவும் தமது எண்ணங்கள், ஆர்வங்களைப் பரீட்சித்துப் பார்க்கும் பருவமாகவும் இது விளங்குகிறது.

 

இந்த வயதில்தான் ஆசிரியர்கள் கற்பிப்பவர்களாக மட்டுமல்லாது மாணவர்களுக்கு ஆலோசகர்களாகவும் வழிகாட்டிகளாகவும் இருக்க வேண்டிய காலமாகும். இன்று பல பாடசாலைகளில் கல்வி வழிகாட்டிகள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். ஆனால் அவர்களின் தொழிற்பாடு சாதாரண தர பரீட்சையின் பின்னரான தொழில்நுட்பக் கல்வி, முறைசாராக் கல்வி தொடர்பான வழிகாட்டல் என்ற விடயத்திற்குள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இதைவிட மாணவர்களுக்கு உளவள ஆலோசனை, மாணவர்களின் விசேட திறமைகளை இனங் கண்டு அவற்றை ஊக்குவிப்பதற்கான கட்டமைப்புகள் கற்கை ஏற்பாடுகள் செய்வதற்கான செயற்பாடுகள் அவசியமானவையாகும்.

 

நாம் முன்பு குறிப்பட்டதுபோல பாடசாலையில் கற்கும் மாணவர்கள் அனைவருமே இலங்கைப் பல்கலைக் கழகங்களில் கற்று வைத்தியராகவோ, பொறியியலாளராகவோ, கணக்காளராகவோ, சட்டத்தரணியாகவோ ஆகிவிட முடியாது. பெரும் எண்ணிக்கையான மாணவர்கள் தமக்கான வேறு வேறு துறைகளைத் தெரிவு செய்ய வேண்டியவர்களாக இருக்கிறார்கள். அதற்காக தனியார், திறந்த பல்கலைக் கழகம் போன்றவற்றையே நாடவேண்டியுள்ளது. அதற்கான வழிகாட்டல்கள், சந்தர்ப்பங்கள், வளங்கள், வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டியது கல்விச் சமூகத்தினதும் பெற்றோரினதும் பொறுப்பாகிறது. அத்துடன் கல்வித்துறையில் ஈடுபாடு காட்டும் உள்ளூர், வெளியூர் அமைப்புகளும் ஆற்றக்கூடிய பங்கு கணிசமானது.

 

பின்வரும் விடயங்கள், எண்ணக்கருக்கள்  மேலே கூறப்பட்ட பல பிரச்சனைகளுக்கு ஓரளவுக்கேனும் தீர்வுகளைத் தரக்கூடும் என்பது எமது அபிப்பிராயம்.

§  ஆறாம் வகுப்பிலிருந்தே ஐம்பதுக்குக் குறைவான புள்ளிகளைப் பெறும் மாணவர்கள் இனங் காணப்பட்டு அவர்களுக்கு விசேட வகுப்புகள் ஒழுங்கு செய்யப்பட வேண்டும். இவ்வாறான மாணவர்களின் பெற்றோர் கிரமமாக ஆசிரியரைச் சந்தித்து தமது பிள்ளைகளின் முன்னேற்றம் குறித்து தொடர்ச்சியாக கலந்துரையாடும் பழக்கம் ஏற்படுத்தப்பட வேண்டும்.

§  பாடசாலைகளில் வகுப்பறைக் கல்விக்கு அப்பால் பிற கற்றல் செயற்பாடுகளில் மாணவர்கள் ஈடுபடுத்தப்பட வேண்டும். மாணவர்களிடையே தலைமைத்துவம், திறன் வளர்ச்சிகளை அதிகரிக்கும் வகையில் மாணவர் கழகங்கள் உருவாக்கப்பட்டு முறையாக இயங்க பாடசாலை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

§  பாடசாலை அபிவிருத்தி வேலைகள், சிரமதான செயற்பாடுகளில் மாணவர்களை ஈடுபடுத்த வேண்டும். பழைய மாணவர் சங்கங்களிடமிருந்து நிதி கோரும் சந்தர்ப்பங்களில் மாணவர் தலைவர்களையும் அந்த வேலைத்திட்ட வரைபுகளை எழுதுவதில் ஈடுபடுத்தலாம்.

§  முறைசாராக் கல்வியூடாக மாணவர்கள் தமது வேலைத் தகுதியை அதிகரிக்க முடியும் என்பதை பெற்றோருக்கும் மாணவர்களுக்கும் அறிவுறுத்துவதற்கான செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

§  கல்விசார், கல்விசாரா சுற்றுலாக்களை ஒழுங்கு செய்தல். மாணவர்கள் தமது வகுப்பறையில் கற்பதற்கு மேலதிகமாக இவ்வாறான சுற்றுலாக்கள் மாணவர்கள் பாடசாலைக்கு வெளியே உள்ள உலகத்தைப் பற்றி அறியவும், வெவ்வேறு காலாசாரம், இயற்கைச் சூழல்கள், புவியியல், வேறுபட்ட மக்களின் வாழ்வியல் போன்ற விடயங்களைக் கற்றுக்கொள்ள உதவுவதாக அமையும்.  

§  பாடசாலை மட்டங்களில் மாணவர்களுக்கு உளவள ஆலோசனை வழங்க தகுதி வாய்ந்த உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட வேண்டும். அல்லது அந்தந்த மாவட்டங்களில் உளவள சேவை செய்யும் நிறுவனங்களுடன் இணைந்து அவர்களின் சேவையைப் பெற்றுக் கொள்வதும் இன்னொரு வழியாகும்.

§  இடைவிலகிய மாணவர்களை மீண்டும் உள்வாங்கும் பொறிமுறைகளை எமது கல்வி இயந்திரம் கண்டறிந்து நடைமுறைப்படுத்த வேண்டும். அந்த மாணவர்கள் குடும்ப வருமானத்திற்காக கட்டாயம் பகுதிநேரமாக வேலை செய்ய வேண்டியவர்களாக இருப்பார்களாயின் அதற்கு ஏற்ற வகையில் கல்வி கற்கும் வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட வேண்டும்.

§  கிராம மட்டங்களில் கூட்டுக் கற்றல் செயற்பாடுகள் (Combine Study) படிப்பகங்கள் போன்றனவற்றை ஊக்குவிப்பதன் மூலமும் மாணவர்கள் கற்பதற்கான சந்தர்ப்பத்தை அதிகரிக்க முடியும்.

§  பிரபல பாடசாலைகளின் பழைய மாணவர் சங்கங்கள் தமது பாடசாலைகளுக்கு உதவுவதற்கு மேலதிகமாக பின்தங்கிய பிரதேசப் பாடசாலைகளைத் தத்தெடுக்க முன்வர வேண்டும். இதன் மூலம் பின்தங்கிய பிரதேசப் பாடசாலைகளின் பௌதீக வளங்களை அதிகரித்து மாணவர்களுக்குத் தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க முடியும்.

§  இன்றும் பல மாணவர்கள் தமக்குத் தேவையான காலணிகள், அடிப்படை உபகரணங்களை வாங்க முடியாத நிலையில் இருக்கிறார்கள். அங்கொன்றும் இங்கொன்றுமாக சில அமைப்புகளும் தனிநபர்களும் இவ்வாறான மாணவர்களுக்கு அவ்வப்போது உதவி செய்கிறார்கள். ஆனால் இதனை மேலும் முறைபடுத்தி தேவைப்படும் அனைத்து மாணவர்களுக்கும் உதவும் வகையிலான கட்டமைப்பை உருவாக்க முடியுமாயின் அது சிறந்த பலனைக் கொடுக்கும்.

§  குடும்பங்களின் குறைந்த வருமானம் காரணமாக பாடசாலைக் கல்வியைத் தொடர்வதில் சிரமங்களை எதிர்நோக்கும் மாணவர்களின் குடும்பங்களுக்கு வேறு உதவி வழங்கும் நிறுவனங்களூடாக நிரந்தர வருமானம் ஏற்படுவதற்கு வழிவகைகள் ஏற்படுத்திக் கொடுப்பதன் மூலம் அந்த மாணவர்கள் கல்வியைத் தொடர உதவ முடியும்.

 

நாம் மேலே குறிப்பிட்ட விடயங்கள் ஒன்றும் புதிய ஆலோசனைகள் அல்ல. இவற்றுள் பல, ஏற்கனவே அங்கொன்றும் இங்கொன்றுமாக சில பாடசாலைகளில் தன் முனைப்புள்ள சில ஆசிரியர்களும் அதிபர்களும் நடைமுறைப்படுத்தும் விடயங்கள்தான். இவற்றுள் பல விடயங்களை எந்தவித மேலதிக வளத்தேவையும் இன்றியே பாடசாலை நிர்வாகமும் ஆசிரியர்களும் பெற்றோர் சமூகமும் இணைந்து செய்துவிட முடியும். நிதி மற்றும் ஏனைய வளங்கள் தேவைப்படும் விடயங்களை கல்வி தொடர்பான செயற்பாடுகளில் ஈடுபடும் தொண்டு நிறுவனங்களோ பழைய மாணவர் சமூகங்களோ, பாடசாலையுடன் இணைந்து நடைமுறைப்படுத்த முடியும்.



No comments:

Post a Comment