Thursday, 11 February 2021

 



வீடற்றலையும் இளையவர்கள்
(Youth Homelessness)

 

பொதுவாக வீடற்றவர்களைப்பற்றி பேசும்போது எமக்கு மூன்றாம் உலகநாடுகளே நினைவில் வரும். ஆனால் மூன்றாம் உலகநாடுகளில் மட்டுமல்ல, அபிவிருத்தியடைந்த நாடுகளிலும் வீடற்றவர்கள் இருக்கிறார்கள். இதற்கு உலகின் வல்லரசு நாடுகளும் விதிவிலக்கல்ல. உதாரணமாக நியூயார்க் நகரத்தில் மட்டும் 78,000 பேர் வீடற்றவர்களாக இருக்கிறார்கள். இவ்வாறு வீடற்றவர்களாகவும் வறியவர்களாகவும் இருப்பவர்கள்  பல்வேறு கலாச்சார, இன, சமுதாயப் பின்னணியைக் கொண்டவர்களாக இருக்கிறார்கள். இவர்களுள் சிலர் குறுகிய காலத்துக்கு மட்டும் வீடற்றவர்களாக இருக்கும் அதேநேரம், பலர் வருடக்கணக்கில் வீடற்றவர்களாக வாழ்கிறார்கள்.

  

கனடாவைப் பொறுத்தவரை ஒரு வருடத்தில் சராசரியாக  235,000 பேர் வீடற்றவர்களாக இருக்கிறார்கள். இது வருடாந்தம் ஏறி இறங்கும் எண்ணிக்கையாக இருக்கிறது. இவர்களுள் சுமார் 40,000 பேர் 13 வயதிற்கும் 24 வயதிற்கும் இடைப்பட்டவர்கள் இருப்பதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. இந்தத் தொகையில் 37 சதவீதமானவர்கள் பெண்கள் என்பதும் அவர்கள் அதிகளவான ஆபத்துக்களை எதிர்கொள்ளும் பிரிவினராக இருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவ்வாறு வீடற்றவர்களாக வாழும் பெண்கள் வீடுகளில் வாழும் பெண்களை விட அதிக மடங்கு ஆபத்துக்கு உள்ளாகக் கூடியவர்களாகவும் 10 மடங்கு விரைவாக உயரிழக்கும் சூழ்நிலையிலும் உள்ளார்கள். இவ்வாறு வீடற்றவர்களாக இருக்கும் இளையவர்களுள் 72 வீதமானவர்கள் தமது பெற்றோருடனான முரண்பாடு அல்லது வீட்டில் நிலவும் ஆரோக்கியமற்ற சூழல் காரணமாகவே வீட்டை விட்டு வெளியேறியவர்களாக இருக்கிறார்கள்.

 

 ஒருகாலத்தில் கனடியத் தமிழ் சமூகத்தவர் இந்தப் பிரச்சனையை முற்றுமுழுதாக வேறு சமூகத்தவரின் பிரச்சனையாகவே கருதி வந்தனர். ஆனால் கடந்த இரண்டு தசாப்த காலத்தில் எமது சமூகத்திலும் வீடற்றவர்களாக அலையும் இளையவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இளையவர்கள் தமது பெற்றோரின் வீட்டைவிட்டு வெளியேறுவதற்குப் பல காரணிகள் தூண்டுதலாக அமைகின்றன.

 

·    தமிழ் பெற்றோர் பலர் தமது கலாச்சார பழக்க வழக்கங்களை கடுமையாக பின்பற்றுவதுடன் தமது பிள்ளைகளையும் அவற்றைப் பின்பற்ற வற்புறுத்தும் சூழலில் பதின்ம வயதினர் இரண்டு கலாச்சாரச் சூழலிலும் தம்மைப் பொருத்திக் கொள்ள முடியமையால் பெற்றோருடன் தொடர்ச்சியாக முரண்படுகின்றனர்.

 

·  பல பெற்றோர் பெரும்பாலும் வாரத்தில் ஏழு நாட்களும் வேலை செய்பவர்களாக அலையும் சூழலில் தமது பிள்ளைகளுடன் போதிய நேரம் செலவிட முடியாதவர்களாக இருந்துள்ளார்கள். இந்தச் சூழ்நிலையில் திடீரென்று பதின்ம வயது வந்ததும் அவற்றைச் சரிசெய்யவும் பிள்ளைகளைக் கட்டுப்படுத்தவும் முயற்சிக்கும்போது பிள்ளைகளுடனான முரண்பாடு அதிகரிக்கிறது.

 

·     எமது குடும்ப அமைப்பில் பல குடும்பங்களில் பெற்றோருக்கு அடுத்தபடியாக மூத்த ஆண்பிள்ளைக்கு  அதிக கவனிப்பும் அதிகாரமும் வழங்கப்படுகிறது. இதனால் இளைய பிள்ளைகள் தாம் பாரபட்சமாக நடாத்தப்படுவதாக உணர்கிறார்கள். அதனைவிடவும் மூத்த பிள்ளை இளையவர்களை தொடர்ந்து கட்டுப்படுத்த முயற்சிப்பதும் கொடுமைப்படுத்துவதும் (Bullying) சில குடும்பங்களில் நடக்கிறது. இதுவும் காலப்போக்கில் பெரும் முரண்பாடாகவும் வெடிக்கிறது.

 

·         பல குடும்பங்களில் ஆண் பிள்ளைகளுக்கு சிறப்புச் சலுகைகளும் பெண் பிள்ளைகளுக்கு அதிக கட்டுப்பாடும் விதிக்கப்படும் சூழலில், சில பெண் பிள்ளைகள் தமது  பெற்றோருடன் இருக்கும் வரை சுதந்திரமாகவே இருக்க முடியாது என்ற நிலைப்பாட்டுக்கு வருகிறார்கள்.

 

·         பல இளையவர்கள் தமது வீட்டில் பெற்றோருக்கிடையில் சண்டை, வன்முறைத் தாக்குதல், ஆரோக்கியமற்ற குடும்பச் சூழ்நிலை, பெற்றோரின் அதிகப்படியான எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய முடியாமை போன்ற காரணங்களால்  கடுமையான மனவழுத்தத்திற்கும் நிரந்தர மனக் காயத்திற்கும் உள்ளாகிறார்கள். வீடற்றவர்களாக மாறிய பல இளையவர்கள் வீட்டைவிட்டு வெளியேறும் முன்னர் தற்கொலை எண்ணம் கொண்டவர்களாகவும் தற்கொலைக்கு முயற்சி செய்தவர்களாகவும் இருந்திருக்கிறார்கள்.  

 

·         பெற்றோரின் கவனிப்பு இன்றி வளரும் பிள்ளைகள் சிலர் அந்த இடைவெளியை தமது நண்பர்களுடன் நேரத்தை அதிகம் செலவிடுவதன் மூலம் நிரப்ப முயற்சிக்கின்றனர். அது கூடா நட்பாக இருக்கும் சந்தர்ப்பத்தில் பிள்ளைகள் இளம் வயதிலேயே புகைத்தல், மது, போதைப் பழக்கங்களுக்கு அடிமையாகி விடுகிறார்கள். இது பெற்றோருக்குத் தெரியவந்து பெற்றோர் அதனை அவர்களின் பாணியில் கையாளும்போது பிள்ளைகள் வீட்டைவிட்டு வெளியேறும் சூழ்நிலை ஏற்படுகிறது.

 

·         சிலர் வேளைகளில் பிள்ளைகள் உடல்ரீதியான, உளரீதியான தாக்குதல்களுக்கும் முகம் கொடுக்கின்றனர். எமது சமூகத்தில் பலர் வெளிப்படையாகக் கதைக்க விரும்பாதபோதும், கணிசமான எண்ணிக்கையான இளையவர்கள் தமது குடும்பத்து உறுப்பினர் அல்லது குடும்பத்திற்கு நெருக்கமான நபர்களினால்  பாலியல் தாக்குதலுக்கும் உள்ளாகிறார்கள்.

 

·         பிள்ளைகளின் காதல் விவகாரங்கள், குறிப்பாக பிள்ளைகள் ஓரின ஈர்ப்புக் கொண்டவராக இருத்தல், பாலின மாற்றம் போன்ற சூழ்நிலைகளிலும் பெற்றோரின் கடுமையான எதிர்ப்பு, வன்முறைத்தாக்குதல் போன்றவற்றினாலும்  பிள்ளைகள் வீட்டை விட்டு வெளியேறத் தூண்டப்படுகிறார்கள்.

 

இவ்வாறான காரணங்களால் தமது பெற்றோரின் வீட்டை விட்டு வெளியேறும் அல்லது வெளியேற்றப்படும் இளையவர்கள் எல்லோருக்கும் வீட்டுக்கு வெளியே வசதியான, பாதுகாப்பான வாழ்க்கை அமைந்து விடுவதில்லை. பெரும்பாலானவர்களின் நிலைமை சட்டியில் இருந்து அடுப்புக்குள் விழுந்த கதையாகவே இருக்கிறது.

 

வீடற்றவர்களாக இருக்கும் இளையவர்களுக்கு உதவுதற்காக தற்காலிக தங்குமிடம் போன்ற கட்டமைப்புகள் இருந்தாலும் அவ்வாறான தங்குமிடங்கள் அவர்களுக்குப் பாதுகாப்பானதாக அமைவதில்லை. பாலியல் தாக்குதல்கள், வன்முறைத் தாக்குதல், உடைமைகள் திருட்டுப் போதல் போன்றவற்ற பிரச்சனைகளுக்கு  முகம் கொடுக்கிறார்கள்.

 

அடிப்படைச் சம்பளத்தில் வேலையொன்றைப் பெற்றிருக்கக்கூடிய இளைஞர்கள் ஒரு வீட்டின் பகுதியொன்றை (பெரும்பாலும் basement இல் ஒரு அறையும் பொதுக் கழிப்பறையும்) தற்காலிகமாக வாடகைக்குப் பெற்றுக்கொள்ள முடிந்தாலும் வீட்டு உரிமையாளர்களால் பொருளாதாரச் சுரண்டலுக்கும் சில சந்தர்ப்பங்களில் பாலியல் வன்முறைக்கும் முகம் கொடுக்கிறார்கள்.

 

குடும்பத்தை விட்டுத் தனியாக வாழவேண்டிய சூழலில் தங்களோடு யாரும் இல்லை என்ற உணர்வினால் தனிமை உணர்வுக்கு ஆளாவதோடு தமது தோற்றம், எதிர்காலம் போன்றவற்றில் அக்கறை இழந்தவர்களாகவும் பலர் மாறிவிடுகிறார்கள். இவர்களுள் கணிசமானவர்கள் நிரந்தர மனநிலைப் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். கல்வி கற்பவர்களானால் கல்வியில் அக்கறை குறைவதுடன், நல்ல வேலையொன்றைத் தேடிக் கொள்வதில் ஆர்வமின்மை, உடல் ஆரோக்கியத்தில் அக்கறையின்மை போன்ற இயல்புகளையும் அவதானிக்க முடியும்.

 

இவர்களில் கணிசமானவர்கள் தமது தற்காலிக தங்குமிடத்திலும் வாடகை வீடுகளிலும், தாம் வாழும் புதிய சூழலில் போதைப் பாவனை போன்ற தேவையற்ற மற்றும் ஆபத்தான பழக்கங்களையும் ஏற்படுத்திக் கொள்கிறார்கள். இவர்களில் பெரும்பாலானவர்கள் பாதுகாப்பற்ற முறையில் போதை ஊசி போன்றவற்றைப் பயன்படுத்துவதால் மரணத்தை தழுவிக் கொள்ளும் சந்தர்ப்பங்களும் காணப்படுகின்றன. குழுவாக வன்முறைச் செயற்பாடுகளில் ஈடுபடுதல், போதை போன்ற பழக்கத்தினால் களவு, வழிப்பறி போன்ற சட்டவிரோத நடவடிக்கைகளிலும் ஈடுபடுதல் போன்ற செயற்பாடுகளால் சட்டத்தின் முன்னர் குற்றவாளிகளாகவும் மாறிவிடுகிறார்கள்.

 

 இவ்வாறாக இந்த இளைய தலைமுறையின் எதிர்காலமே பெரும் கேள்விக்குறியாக மாறிவிடுகிறது. ஆனாலும் எமது சமூக கட்டமைப்பு, இந்த விடயத்தை பேசாப் பொருளாக மாற்றி விட்டுள்ளது. இவ்வாறு இளையவர்கள் வீட்டைவிட்டு வெளியேறுவதற்கு வீட்டுச் சூழலே பிரதான காரணமாக இருக்கின்ற போதிலும் இளையவர்களே குற்றவாளியாக்கப்படுகிறார்கள். இது உண்மையில் அவர்களின் தவறல்ல அவர்களின் உலகத்தை புரிந்து நடந்து கொள்ள தவறிய பெற்றோரின் தவறு. இதனை ஏற்றுக்கொள்வதன் மூலமும் பிள்ளைகளைப் புரிந்து கொள்ள அதிக முயற்சி எடுப்பதன் மூலமும் தமது பிள்ளைகள் இவ்வாறான துன்பகரமான அனுபவத்திற்கு உள்ளாகாது தடுக்க முடியும்.

 

 உங்கள் கலாச்சாரத்தை உங்கள் பிள்ளைகளும் பின்பற்ற வேண்டும் என்றால் முதலில் நீங்கள் உங்கள் கலாச்சார செயற்பாடுகளை முறைமையாகப் பின்பற்றவேண்டும்.  உங்கள் பிள்ளைகளின் இளம் பராயத்திலிருந்தே அவர்களையும் அந்தச் செயற்பாடுகளில் ஈடுபடுத்த வேண்டும். அதேநேரம் அவர்கள் பெரியவர்களானது, அவர்களின் ஆர்வம் குறைந்தால் அதனை சாதுரியமாக அணுக வேண்டும்.

 

 உங்கள் பிள்ளைகளின் கல்விச் செயற்பாடுகளையும் அவர்கள் முகம் கொடுக்கும் பிரச்சனைகளைப் பற்றியும் அறிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள். பிள்ளைகளின் பாடசாலையுடன் நெருங்கிய தொடர்பைப் பேணுங்கள். அதேபோல பிள்ளைகளின் தனிப்பட்ட ஆர்வங்கள், விருப்பமான துறை போன்றவற்றையும் அறிந்து அவற்றை ஊக்குவியுங்கள். உங்கள் நிறைவேறாத ஆசைகளை அவர்களின்மேல் திணிக்காதீர்கள். 

 

 அவர்களின் நண்பர்கள் யார் என்பதைத் தெரிந்து வைத்திருங்கள். உங்கள் பிள்ளையின் செயற்பாடுகளில், நடத்தைகளில் திடீரென்று மாற்றம் ஏற்பட்டால் பிள்ளையின்மேல் மேலதிக கவனம் செலுத்துங்கள்.

 

பிள்ளைகள் சிறு பிள்ளைகளாக இருக்கும் நாளில் இருந்தே தாய், தந்தை இருவருமே உங்கள் பிள்ளைகளுடன் தினமும் போதிய நேரம் செலவிடுங்கள். அவர்களின் நாளாந்த செயற்பாடுகள் பற்றி பேசுங்கள். ஆனால் அதனை விசாரணை செய்யும் வகையில் செய்யாது பிள்ளைகள் சொல்லும் விடயங்களுக்கு காது கொடுத்துக் கேட்கப் பழகுங்கள். பிள்ளைகளின் பதின்ம வயதில் இவ்வாறான கலந்துரையாடல்கள் மிகவும் முக்கியமானவை.

 

 பிள்ளைகள் தோல்வியுற்று நின்றால் தோள் கொடுங்கள். மன அழுத்தம் போன்ற உளவியல் பிரச்சனைகள் இருந்தால் அல்லது போதைப் பழக்கம் உங்கள் பிள்ளைகளுக்கு இருந்தால் அவற்றில் இருந்து வெளிவருவதற்கு உறுதுணையாக இருங்கள். மாறாக அவர்களை குற்றவாளியாக்கி, உங்கள் குற்ற உணர்ச்சியை அவர்கள் மேல் திணித்து விடாதீர்கள். அவர்களுக்கு தேவையான மருத்துவ உதவி, உளவள ஆலோசனை போன்றவற்றைப் பெற்றுக் கொடுங்கள்.

 

References:  The Homeless Hub Website

                     Fred Victor Website

East FM Program by Ramanan Santhirasekaramoorthy (Jan 26, 2021)

No comments:

Post a Comment

  அடி சறுக்கும் அனுர?   தேசிய மக்கள் சக்தி ஜனாதிபதி தேர்தலில் வடக்கு, கிழக்கில் பெரும் வெற்றியைப் பெறுவோம் என்ற நம்பிக்கையுடன் இருந்திரு...