Links

Sunday, 21 March 2021

உலக காடுகள் தினம் – March 21

 
தொழில்நுட்பம் கோலோச்சும் இன்றைய காலத்தில் செவ்வாயில் உயிர்வாழ என்ன செய்யலாம் என்று ஆராய்ச்சி செய்பவர்களே மக்கள் மத்தியில் பிரபலமானவர்களாக இருக்கிறார்கள். அவர்களின் ஆய்வுக்காக கோடிக்கணக்கில் பணம் கொடுக்க பல அரசுகளும் சில தனிநபர்களும் தயாராகவே இருக்கிறார்கள். மக்களில் பலரும் செவ்வாயில் புதுவாழ்க்கை என்ற அக்கரைப் பச்சைக்காக காத்திருக்கிறார்கள்.

 

ஆனால் எமது வீட்டை நாங்களே செப்பன்னிட்டுக் கொண்டால் வேறு வீடு தேவையில்லை என்ற நம்பிக்கையோடும் பலர் இருக்கிறார்கள். வீட்டில் சேரும் மாசுகளையும் கழிவுகளையும் அகற்றிச் சுத்தமாக்கி விட்டால் இங்கேயே இருந்துவிடலாமே என்று தம்மால் இயன்ற வகையில் முயற்சி செய்துகொண்டு இருக்கிறார்கள். அவர்களில் சிலர் மட்டுமே மக்களிடையே பிரபலமடைந்திருக்கிறார்கள். இன்னும் பலர் எந்த ஊடக வெளிச்சமோ சமூக மதிப்பளிப்போ கிடைக்காத நிலையிலும் எந்தப் பலனையும் எதிர்பார்க்காமலே தமது பணியை செய்து கொண்டிருக்கிறார்கள். அவர்களில் சிலரைப்பற்றிப் பார்க்கலாம்.

 

1.    பத்ம ஸ்ரீ Jadav Molai Payeng  - The Forest Man of India


ஆதிக்குடிகளின் இனத்தைச் சேர்ந்த ஜாதவ் பாயேங் அஸ்ஸாமில் உள்ள ஒரு காட்டுப் பகுதியில் வாழ்ந்து வந்த ஒரு ஏழை மனிதர். அவர் வாழ்ந்த பகுதியில் இருந்த பிரம்மபுத்திர நதித் தீவான முஜிலி தீவு தொடர்ந்து மண்ணரிப்புக்கு உள்ளாகி அழிவடைந்து வந்தது. இதனைத் தடுப்பதற்கு அஸ்ஸாம் வனவிலங்குத் திணைக்களம் அந்த மண்மேடான தீவில் 200 ஹெக்டயரில் மரங்களை மீள நடுவதற்கு முயற்சியெடுத்தபோதும் ஓரிரு வருடங்களிலேயே அதைக் கைவிட்டு விட்டது.

 

ஆனால் வனவிலங்குத் திணைக்களத்தில் ஒரு அடிப்படை ஊழியராக இருந்த ஜாதவ் அந்தத் திட்டத்தை கைவிட்டுவிட விரும்பவில்லை. அரசு கைவிட்டாலும் தனது சொந்த முயற்சியால் தொடர்ந்து முப்பது வருடங்களாக அந்தத் தீவில் பல்லின மரங்களை ஆயிரக்கணக்கில் நட்டு, இன்று 550 ஹெக்டயர் பரப்பளவுள்ள ஒரு காட்டினையே உருவாக்கி இயற்கைக்குக் கொடுத்துவிட்டார். அவர் இதன்மூலம் அந்தத் தீவையும் காப்பாற்றி வனவிலங்குகளுக்குப் புதிதாக ஒரு வாழிடத்தையும் உருவாக்கி விட்டார். இன்று அந்தக் காடு வனவிலங்குகள் படிப்படியாகக் குடியேறி ஒரு முழுமையான சூழல் தொகுதியாக மாறிவிட்டது.

 

அவருடைய இந்த “One Man Armyவகையிலான சேவையைப் பாராட்டி இந்திய அரசு அவருக்கு 2015இல் பத்மஸ்ரீ விருதும் வழங்கிக் கௌரவித்தது. இதில் வேடிக்கை என்னவென்றால், 2008இல் அதாவது 28 வருடங்கள் கழித்துத்தான் இப்படி ஒரு காடு உருவாகி இருப்பதையே அஸ்ஸாம் அரசு அறிந்து கொண்டது.

  

2.    Saalumarada Thimmakkaமரங்களின் தாய்

 

மரங்களின் தாய் என்று செல்லமாக அழைக்கப்படும் சாலுமரதா திம்மக்கா கர்நாடகாவின் துமுகுறு மாவட்டத்தைச் சேர்ந்தவர். முறைசார் கல்வி கற்காத, கூலித் தொழிலாளியாக இருந்த இவருக்குத் திருமணமாகி 25 வருடங்கள் ஆகியும் பிள்ளைகள் பிறக்கவில்லை. அதனால் இவர் தனது நாற்பதாவது வயதில் தற்கொலைக்கும் முயன்று இருக்கிறார். பின்னர் தனது மனதை வேறு பயனுள்ள விடயத்தில் செலுத்த விரும்பிய திம்மக்கா அன்றிலிருந்து வீதியோரங்களில் மரங்களை வளர்க்கத் தொடங்கினார்.  இதற்காக அவர் தெரிவு செய்தது ஆலமரத்தை ஆகும். கணவனோடு இந்த முயற்சியைத் தொடங்கிய திம்மக்கா 1991 இல் அவரின் கணவர் இறந்த பின்னரும் அவர் மரங்களை நட்டு வளர்ப்பதை நிறுத்தவில்லை.

 

இவர் கர்நாடக மாநிலத்தில் குதூர் கிராமத்துக்கும் ஹுலிகல் என்ற இடத்துக்கும் இடைப்பட்ட நான்கு கிலோமீட்டர் தூரத்துக்கு பிரதான சாலையின் இருமருங்கிலும் மொத்தமாக 385 ஆலமரங்களை நட்டு வளர்த்திருக்கிறார். இந்த இளங்கன்றுகளுக்கு நீர் ஊற்றுவதற்காக சிலவேளைகளில் நான்கு கிலோமீட்டர் தூரத்துக்கு தண்ணீரைக் கொண்டு செல்ல வேண்டிய தேவையும் இவர்களுக்கு இருந்திருக்கிறது. தனது நாற்பதாவது வயதில் மரம் நடத் தொடங்கிய இவர் அதன்பின்னர் 65 வருடங்களுக்குத் தொடர்ந்து மரங்களை நட்டு வந்திருக்கிறார். இவர் இந்த  ஆலமரங்களைத் விட 8000 வேறுவேறு வகையான மரங்களையும் நட்டு வளர்த்திருக்கிறார்.

 

2019 இல் பத்மஸ்ரீ விருது பெற்ற இவருக்கு  அதற்கு முன்னர் National Citizens Award, Nadoja Award, Karnataka Kalpavalli Award, Godfrey Phillip Award, and Vishwathama Award போன்ற பல விருதுகளும் வழங்கப்பட்டுள்ளன.

 

3.    Piyush Manush சுற்றுச் சூழல் ஆர்வலர்  

சேலத்தில் பிறந்து வளர்ந்தவரான (மகாராஷ்டிரா பின்னணி கொண்ட) பியுஸ் மனுஷ் ஒரு விவசாயி, சுற்றுச் சூழல் ஆர்வலர், மற்றும் ஒரு நீர்நிலை மீட்பாளர் என்று சொல்லலாம். சேலம் பகுதியில் இருந்த பல மாசடைந்த குளங்களை மக்களுடன் இணைந்து இவர் சீரமைத்திருக்கிறார். இவற்றோடு நிலஅபகரிப்பு, இயற்கைக்கு சேதம் விளைவிக்கும் அபிவிருத்தித் திட்டங்கள், வணிக நோக்கத்தில் உருவாக்க முனைந்த சுரங்க வேலைகள்  போன்றவற்றை எதிர்த்து மக்களோடு இணைந்து போராடி இருக்கிறார். இதற்காக அடிக்கடி கைது செய்யப்பட்டும் இருக்கிறார்.

 

இதனைவிடவும் தர்மபுரி மலைப்பகுதியில் உள்ள காடுகளைப் பாதுகாப்பதற்காக கூட்டுறவுக் காடு (Coop Forest) என்ற அமைப்பையும் 2009 இல் உருவாக்கினார். இவருடைய செயற்பாடுகளால் கவரப்பட்டு தமிழ்நாட்டில் தாம்பரம் அருகில் இளைஞர்கள் அதேபோல காடமைக்க முயற்சி எடுத்திருப்பதாக உறுதிப்படுத்தாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

   

4.  நடிகர் விவேக்

நடிகர் என்பதற்கு அப்பாற்பட்டு நடிகர் விவேக் சுற்றுச் சூழலிலும் அக்கறை செலுத்திவருகிறார். இந்தியாவின் முன்னாள் சனாதிபதி அப்துல் கலாம் அவர்களின் வேண்டுகோளை ஏற்று ஒரு கோடி மரம் நாடும் திட்டத்தை (Green Kalam Project) 2010 இல் ஆரம்பித்தார். இந்தத் திட்டத்தின் கீழ் பாடசாலைகள், கல்லூரிகள், கிராமங்கள் எனப் பல இடங்களிலும் எட்டு வருடங்களில் முப்பது இலட்சம் மரங்களை நட்டு முடித்திருக்கிறார். பூமி வெப்பமயமாதலைக் குறைப்பதற்காகவே இந்தத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

 

5.  Rev. Godson Samuel

பனைவளம் நிறைந்த கன்னியாக்குமரியில் பிறந்தவரான பாதிரியார் கோட்சன் சாமுவேல் அவர்கள் கடந்த 25 வருடங்களை பனைமரங்களைக் காதலிப்பதில் செலவிட்டுள்ளார். பனை மரங்களை நடுவதை ஊக்குவித்தல், பனை சார் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப உதவுதல் என இவரது பணி தொடர்கிறது. இவர் மும்பையில் உள்ள ஆரே (Aarey) வனப்பகுதியில் மரங்களை வெட்டப்படுவது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்துவதிலும் பங்கேற்றுள்ளார். இந்தப் பகுதியில் கடந்த வருடம் பனம் விதைகளையும் தொண்டர்கள் உதவியுடன் நட்டிருக்கிறார். இந்தப் பனைகளின் காதலனின் பயணம் இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

  

இவர்களுள் நடிகர் விவேக்கைத் தவிர ஏனையவர்களின் செயற்பாடுகள் பல வருடங்கள் கழித்தே மக்களைச் சென்றடைந்தன. அரசின் கவனத்தையும் பெற்றுக் கொண்டன.  ஆனால் இன்று இந்தியாவில் இவர்கள் அனைவருமே மக்களுக்கு, குறிப்பாக இளைஞர்களுக்கு முன்னுதாரணங்களாக விளங்குகின்றனர்.

 

 

இலங்கையை எடுத்துக் கொண்டால் எல்லோருமே நாடளாவிய ரீதியில் பிரபலமடையாவிட்டாலும் அங்கொன்றும் இங்கொன்றுமாக காடுகளை பாதுகாக்க விரும்பவர்கள், மரங்களை நடுபவர்கள் எம்மத்தியில் இருந்திருக்கிறார்கள். இன்றும் இயங்கிக் கொண்டும் இருக்கிறார்கள்.

 

1.    Milk white அதிபர் கந்தையா கனகராஜ்

ஒரு வர்த்தகராகவும் உள்ளூர் உற்பத்தியாளராகவும் அறியப்பட்ட கந்தையா கனகராஜ் அவர்கள் பனம்பழங்கள் கிடைக்கும் காலத்தில் தனது லாரி நிறைய பனை விதைகளை ஏற்றிக் கொண்டு வந்து தனது பணியாளர்களைக்கொண்டு சாலை ஓரங்களில் அவற்றை வீசி எறியச் சொல்லுவாராம். அவ்வாறு வீதியோரங்களில் முளைக்கும் பனைமரங்கள் எதிர்காலச் சந்ததிக்கு உதவும் என்பது அவருக்கு நம்பிக்கையாக இருந்திருக்க வேண்டும். அவரும் பனை மீது மீளாக்காதல் கொண்ட ஒருவராக இருந்திருக்கிறார்.

 

2.    Arthur V. Dias

ஆர்தர் டயஸ் வசதியான குடும்பத்திற் பிறந்தவர். அவரது ஆரம்பகாலங்களில் மதுவிலக்குக்காகவும், இலங்கையின் சுதந்திரத்துக்காகவும் போராடிய ஒருவர். உலக யுத்தம், இலங்கையில் அனேக உணவுற்பத்தி நிலங்கள் பெருந்தோட்டப் பயிர்களால் விழுங்கப்பட்ட நிலை என்பவற்றைத் தொடர்ந்து, எதிர்காலத்தில் பஞ்சம் வரக்கூடும் என நினைத்த டயஸ் பலா மரங்களை அதிகளவில் உற்பத்தி செய்து இவ்வாறான அபாயத்தைத் தவிர்க்கலாம் என நினைத்தார். மலேசியாவுக்குச் சென்று ஏராளம் பலா விதைகளைக் கொண்டுவந்து பலா நாற்றுகளை உருவாக்கி ஒவ்வோர் ஊருக்கும் சென்று மக்களிடம் அவற்றை இலவசமாய்க் கொடுத்து நாடெங்கும் எங்கும் பலா மரங்கள் உருவாக வழியமைத்தார்.

 

அவர் அவ்வாறு உருவாக்கிய மரங்களின் எண்ணிக்கை பத்துலட்சம் இருக்கலாம் என நம்பப்படுகிறது. டயஸ் மக்கள் ஆதரவுடன் நட்டுவைத்த மரங்கள் எழுபதுகளில் ஏற்பட்ட பஞ்சத்தை வென்றது மட்டுமல்ல, தற்போதைய கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காலத்திற் பல குடும்பங்கள் உயிர் பிழைக்கவும் வழிவகுத்துள்ளன.

 

 

3.    இராசையா குபேந்திரநாதன் 

யாழ்ப்பாணத்தைத் சேர்ந்த இராசையா குபேந்திரநாதன் பலாலி வீதியில் யாழ்ப்பாணம் இலுப்பையடிச் சந்தியில் இருந்து ஊரெழு அம்மன் கோவில் வரை சுமார் 350 நிழல் மரக்கன்றுகளை வீதியின் ஒரு பக்கத்தில் (மட்டும்), தனது சொந்தச் செலவில் நாட்டி,  தண்ணீர் ஊற்றி வளர்த்துள்ளார். இப்போது அவை வளர்ந்து பெரிய மரங்களாகி விட்டன. ஆனால் இப்படியானவர்கள் மிகச் சிலருக்கே தெரிந்தவர்களாக இருக்கிறார்கள்.  

  

4.    Douglas Thisera – Mangrove Master

இலங்கையின் கடலோரப்பகுதியில் கடலரிப்பைத் தடுத்தல், பல மீனினங்கள், இறால், நண்டுவகைகள் இனப்பெருக்கம் செய்வதற்கு ஏற்ற சூழலை வழங்குதல், கரையோர வெள்ளப்பெருக்கை குறைதல் போன்ற பல நன்மைகளை mangrove என்று சொல்லப்படும் சதுப்புநிலத் தாவரங்கள் வழங்குகின்றன. டக்லஸ் திசேர  கடந்த 16 வருடங்களில் இலங்கையின் மேற்கு கரையோரமாக கிட்டத்தட்ட 2 மில்லியன் mangrove மரங்களை நட்டிருக்கிறார். அதனோடு இவ்வாறான மரங்களைப் பாதுகாக்கவென சமூகத் திட்டங்களையும் ஒழுங்கு செய்துள்ளார்.   

 

இவ்வாறான தனிநபர்கள் தவிர்த்து பலர் அமைப்புகளாக இணைந்தும் காடுகளைக் காக்கவும் புதிய காடுகளை உருவாக்கவும் முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள்.

 

1.  Rainforest Protectors of Sri Lanka

இந்த அமைப்பினர் ரூனாகந்த மலைக்காட்டுக்கு அருகில் உள்ள உள்ள ஹெடிகல்ல என்ற இடத்தில உள்ள தனியார் நிலத்தில் 2015 இல் 209 சுதேச மரங்களை நட்டு முடித்துள்ளனர். இவர்களின் நோக்கம் ரூனாகந்த காட்டுப்பகுதியில் உயிர்ப் பல்லினத் தன்மையை அதிகரிப்பதும், இந்தப் பகுதியில் மண்ணரிப்பைத் தடுப்பதுமாகும்.

இதேபோல ரக்வான பகுதியில் ஆக்கிரமிப்புத் தாவரங்களை அகற்றி சுதேச மரங்களை நடுதல் இவர்களின் இன்னொரு செயற்திட்டமாகும். இதுபோன்ற பல வேலைத் திட்டங்களை இவர்கள் செய்து வருகிறார்கள்.

 

2.    பசுமைச் சுவடுகள்

பசுமைச் சுவடுகள் என்ற அமைப்பு உள்ளூர் சிறுவர்கள், இளைஞர்களையும் இணைத்துக் கொண்டு விதைப்பந்துகளை உருவாக்குகிறார்கள். இந்த விதைப் பந்துகளை காடழிக்கப்பட்ட பகுதிகளில் வீசி மீண்டும் சுதேச மரங்களை உருவாக்குவது இவர்களின் நோக்கமாகும். இதனோடு வீட்டுத் தோட்டம் செய்ய விரும்புபவர்களுக்கு அதற்கான விதிகளையும் வழங்குகிறார்கள்.

 

3.      வேர்கள் அமைப்பு

வேர்கள் அமைப்பும் விதைப்பந்துகளை உருவாக்கி காடுகளை மீள உருவாக்கும் வேலைத்திட்டத்தில் ஈடுபட்டுள்ளது. கடந்த வருடம் விமானப்படை உதவியுடன் லஹுகல-கிதுலான பகுதியில் ஒரு தொகுதி விதைபந்துகளை இவர்கள் தூவினார்கள்.

இதனைவிடவும் குறிப்பிட்ட ஒரு சிறு நிலப்பகுதியில் அடர்த்தியாக உள்ளூர் மரக்கன்றுகளை வளர்ப்பதன் மூலம் சிறிய காடுகளை உருவாக்கும் முயற்சியிலும் மட்டக்களப்பு வேர்கள் அமைப்பு ஈடுபட்டுள்ளது.

                              

4.    வடமராட்சி பசுமை நிழல்

இந்த அமைப்பும் இதுவரை 10,000 மரக்கன்றுகளை நட்டுள்ளது. இவர்கள் பல பிரதேசங்களின் ஆக்கிரமிப்புத் தாவரங்களை அழிப்பதுடன், இலுப்பை, மருது, மலைவேம்பு, சவண்டலை போன்ற பயன்தரும் மரங்களை நட்டுவருவது பாராட்டத்தக்கது.

 

5.    Sudeesa 

புத்தளத்தை தளமாகக் கொண்ட இந்த அரச சார்பற்ற நிறுவனம் தனது செயற்பாடுகளில் ஒரு அங்கமாக இலங்கையின் கரையோரப் பகுதிகளில் mangrove மரங்களை மீள நட்டு வருகிறது. மன்னாரில் உள்நாட்டுப் போர் விதவைகளின் பொருளாதார மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் இதுவரை 17,000 mangrove செடிகளை மன்னாரில் வசிக்கும் பெண்களின் உதவியுடன் நட்டுள்ளது. இந்த நிறுவனத்தின் குறிக்கோள் இலங்கையில் mangrove தாவரங்கள் வளரும்  8,815 ஹெக்டயர் நீரேரிகளைப் பாதுகாப்பதாகும்.

  

இவ்வாறு தனிநபர்களும் சமூக அமைப்புகளும் தன்னலமற்று எமது பிரதேசங்களில் மீண்டும் காடுகளை உருவாக்க முயற்சிப்பது மிகவும் பாராட்டத்தக்கது. இவர்களே உண்மையான சூப்பர் ஹீரோக்கள். எங்களால் நேரடியாக களத்தில் இறங்கி வேலை செய்ய முடியாவிட்டாலும் வேறு வகைகளில் இவர்களுக்கு ஏனையவர்கள்  தோள் கொடுக்க முன்வரவேண்டும். மேலும் பல இளைஞர்கள் இவ்வாறன அமைப்புகளுடன் இணைந்து பயணிக்க முன்வரவேண்டும்.

 

கிராம மட்டத்திலும் பாடசாலைகளிலும் பொது அமைப்புகள் மேற்சொன்ன அமைப்புகளோடு இணைந்து அவர்களும் பல்லின மரங்களை நட்டுப் பராமரிக்க முன் வரவேண்டும். கிராமங்களில் உள்ள வெற்றுக் காணிகளிலும் பயனுள்ள மரங்களை நடுகை செய்வதைப்பற்றி யோசிக்கலாம். ஒவ்வொருவரும் தமது வீட்டுக்கொரு மரம் வளர்க்க முன்வருவதும் வரவேற்கத்தக்கது. இவ்வாறு மரங்களை நடும்போது நீண்டகாலம் பயன்தரும் மரங்கள், பழமரங்கள், பொருளாதார நன்மை தரக்கூடிய மரங்கள் எனத் தெரிவு செய்து நடலாம்.

 

இவ்வாறு மரங்களை நடமுடியாதவர்கள் வேறு வகைகளிலும் பங்களிக்க முடியும். உதாரணமாக பிளாஸ்டிக் பாவனையைக் குறைத்தல், தண்ணீரை வீண்விரயம் செய்யாது பயன்படுத்துதல், மின்சாரத்தை அளவாகப் பயன்படுத்துதல், சுற்றுச்சூழலை சுத்தமாக வைத்திருத்தல், முறையாகக் கழிவுகளைப் பாதுகாப்பாக அகற்றுதல் என்பனவும் மறைமுகமாக எமது காடுகளையும் சூழலையும் பாதுகாக்க முடியும்.

 

மரங்களை நட்டுக் காடுகளை வளர்ப்பவர்கள் மட்டுமே சுற்றுச்சூழல் போராளிகள் இல்லை. அண்மையில் சிரச தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்குபற்றி சிங்கராஜா வானத்தைப் பாதுகாக்க வேண்டும் என்று அரசுக்கு எதிராக பயப்படாது குரல் கொடுத்த பாக்யா அபேவர்த்தனவும் ஒரு சுற்றுச் சூழல் போராளிதான். இவ்வாறான இளைஞர்களும் ஆதவு வழங்கப்பட வேண்டியவர்களே.

 

எதற்கெல்லாமோ கௌரவ கலாநிதிப் பட்டம் வழங்கும் பல்கலைக் கழகங்கள் இவ்வாறு இயற்கையைக் காக்கப் போராடுவோரையும் கௌரவித்து தமக்குப் பெருமை தேடிக் கொள்ளலாமே? புலம் பெயர் தேசத்தில் உள்ளவர்களும் மரம் வளர்த்து என்ன பிரயோசனம் என்ன என்று கேட்காது, இதுபோன்ற தொண்டுப் பணிகளுக்கும் உதவி செய்ய முன்வரவேண்டும்.

 

-          - வீமன்  –

 

நன்றி:

இந்த ஆக்கத்திற்கான சில தகவல்கள் தியாகராஜா விஜயேந்திரன் அவர்களின் பக்கத்திலிருந்து பெறப்பட்டது.

ஏனைய தகவல்கள் பல்வேறு இந்திய, இலங்கை தகவல் பக்கங்களில் இருந்து பெறப்பட்டன.


Saturday, 20 March 2021

 



மகிழ்ச்சியாக வாழுதல்

 

“The purpose of our lives is to be happy.” — Dalai Lama

மகிழ்ச்சியாக வாழுதல் என்பது ஒவ்வொரு மனிதனுடைய எதிர்பார்ப்பாகவும் இருக்கிறது. வாழ்க்கையில் மிக மகிழ்ச்சியாக வாழவேண்டும் என்றுதான் நாம் ஒவ்வொருவரும் ஆசைப்படுகிறோம்.  நாம் விழுந்து விழுந்து படிப்பதும் ஓடியோடி பணம் உழைப்பதும் சொத்துத் சேர்ப்பதும் எல்லாமே நாங்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான்.

 

ஆனால் நாங்கள் எல்லோருமே எப்போதுமே மகிழ்ச்சியாக இருப்பதில்லை. பணம், வசதி இருக்கும் எல்லோருமே மகிழ்ச்சியாக இருப்பதில்லை. அதேபோல மகிழ்ச்சியாக இருக்கும் எல்லோரிடமும் பணமும் வசதியும் இருப்பதில்லை. சிலர் எப்போதுமே மகிழ்ச்சியாகவும் கலகலப்பாகவும் இருப்பதைப் பார்த்திருப்பீர்கள். அதற்கு மாறாக சிலர் எப்போதுமே சிடுமூஞ்சிகளாக நல்ல நகைச்சுவைக்குக்கூட சிரிக்கத் தெரியாதவர்களாக இருப்பதையும் பார்த்திருப்பீர்கள். இதனை ஏன் என்று நினைத்துப் பார்த்திருக்கிறீர்களா?  

 

இது இன்று நேற்று எழுந்த கேள்வியில்லை. ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்னரே இது பற்றிக் கேள்வியெழுந்துவிட்டது. நாம் மகிழ்ச்சியாக இருப்பதை எது தீர்மானிக்கிறது என்பதே அறிய அறிவியலாளர்கள் கிரேக்க அறிஞர்கள் காலத்திலிருந்தே ஆராய்ந்து வந்திருக்கிறார்கள். கிரேக்க கால தத்துவஞானியான அரிஸ்டோடில் மகிழ்ச்சியாக இருத்தலே மனிதர்கள் எப்போதும் அடையவிரும்பும் ஒரே விடயம் என்று சொல்லியிருக்கிறார். அந்தக் காலத்தில் இருந்தே அண்மைக் காலங்களில் இது தொடர்பாக சில ஆய்வு முடிவுகளையும் அவர்கள் வெளிப்படுத்தியும் இருக்கிறார்கள். அவர்களுள் அமெரிக்க உளவியலாளரான Dr. Ed Diener (Aka Dr.Happiness) ஒருவர் மகிழ்ச்சியாக இருப்பதை மூன்று விடயங்கள் தீர்மானிப்பதாக கூறுகிறார்.

 

அவருடைய ஆய்வின்படி நாம் மகிழ்ச்சியாக இருப்பது எமது மரபணுவிலேயே இருக்கிறது என்கிறார். ஆனால் உங்கள் மரபணுவில் அதற்கான கூறு இல்லையென்றால் அதற்காகக் கவலைப்படாதீர்கள். ஒருவர் மகிழ்ச்சியாக இருப்பதை பகுதியாக உங்கள் மரபணு தீர்மானிக்கிறது என்றாலும் மிகுதி அவருடைய எண்ணங்கள், செயல்கள் என்பவற்றாலும் எமது சூழல் காரணிகளிலும் தீர்மானிக்கப்படுகிறதாக  Dr. Ed Diener சொல்கிறார். இவர் சொன்ன விடயத்தையே வேறு பல உளவியலாளர்களும் சொல்லியிருக்கிறார்கள்.

 

இவர்களின் கருத்துப்படி எங்களைச் சுற்றியுள்ள பொருட்களால் ஒருவருக்கு மிகக் குறைந்த வீதமான மகிழ்ச்சியையே தரமுடியும். இன்னொரு வகையில் சொன்னால் எம்மிடம் உள்ள பணம் மற்றும் ஆடம்பரப் பொருட்களால் ஏற்படும் மகிழ்ச்சியின் ஆயுட்காலம் மிகவும் குறுகியது. ஆனால் நாம் பொதுவாகவே எம்மை மகிழ்ச்சியாக வைத்திருக்கும் மந்திரம் எமக்குள்ளேயே இருப்பதை உணராமல் எங்களைச் சூழ உள்ள ஏதோ ஒன்றிடமிருந்து அல்லது  யாரோ ஒருவரிடமிருந்தே எங்கள் மகிழ்ச்சியைப் பெற்றுக் கொள்ளவே முயற்சிக்கிறோம். அதனால்தான் எங்களால் நினைப்பதுபோல மகிழ்ச்சியாக வாழ முடிவதில்லை.

 

எனது ஆண் நண்பர்கள் சிலரிடம், “எது உங்களை மகிழ்ச்சிப்படுத்துகிறது?” என்று கேட்டபோது அவர்கள், “அலுவலகத்தில் தரப்பட்ட வேலையை பிரச்சனையின்றி முடிப்பது, குடும்பத்தோடு சுற்றுலா போவது, உரியநேரத்தில் வீட்டுக்கடன், மாதாந்த சேவைக் கட்டணங்களை சிரமமின்றிக் கட்ட முடிவது, பிள்ளைகளின் பெறுபேறுகள், அலுவலகத்தில் கிடைக்கக்கூடிய பாராட்டு, வீட்டிலும் வேலைத்தளத்திலும் மனப்பதற்றம், உளவியல்ரீதியாக அழுத்தம் தராத சூழல்” போன்றவை மகிழ்ச்சியைத் தருவதாகத் தெரிவித்தனர். சில பெண்களைக் கேட்டபோது, மேற்படி விடயங்களோடு, கணவர் தங்களோடு அன்பாக இருப்பது என்ற விடயத்தையும் மேலதிகமாக சேர்த்துக் கொண்டனர்.

இவை யாவும் பொதுவாகவே எங்களில் பலரும் கொடுக்கக்கூடிய பதில்களே. அதேநேரம் இவர்கள் குறிப்பிட்ட எல்லாமே இலகுவாக அடையக்கூடிய விடயங்களாகவும் திரும்பத் திரும்ப நடக்கக்கூடிய விடயங்களாகவும் இருக்கின்றன. இதனால் இப்படியான எண்ணம் உள்ளவர்களால் மற்றவர்களைவிட அதிகம் மகிழ்ச்சியாக இருக்க முடியும். ஒரு விடயத்தில் வெற்றி கிடைக்காதபோதும் இன்னொரு விடயத்தில் அவர்களால் மகிழ்ச்சியடைவது அவர்களுக்கு சாத்தியமானதாக இருக்கும்.

 

மாறாக வேறு சிலர் நிறையப் பணம், மாளிகை போன்ற வீடு, விலையுயர்ந்த வாகனம், சமீபத்தில் விற்பனைக்கு வந்த விலையுயர்ந்த கைபேசி போன்றவற்றைவை தங்களிடம் இருந்தால் தங்களால் மகிழ்ச்சியாக இருக்க முடியுமென்று நம்பி அவற்றைத் தமதாக்க கடினமாக உழைக்கிறார்கள். ஆனால் அவர்கள் ஆசைப்பட்ட எல்லாமே அவர்களுக்கு சொந்தமான பின்னர், அவர்களின் மகிழ்ச்சி, மனத் திருப்தி எல்லாமே சில நாட்களிலேயே வடிந்துவிடும். அவர்களுக்கு மீண்டும் மகிழ்ச்சியை ஏற்படுத்த புதிதாக வேறு பொருள் தேவைப்படும். மீண்டும் அதை நோக்கியதாகஅவர்கள் ஓடத் தொடங்குவார்கள்.

 

அதேநேரம் இவ்வாறு தமது மகிழ்ச்சிக்காக வாங்கிய பொருள்களில் ஏதாவது ஒன்றுக்குச் சிறு சேதம் ஏற்பட்டுவிட்டால் அதனால் அவர்களுக்கு ஏற்படக்கூடிய மனவருத்தம் அவர்களின் மகிழ்ச்சியை அடியோடு இல்லாது ஒழித்துவிடும் என்பதுதான் உண்மை.

 

வேறு சிலர் தமது சிறுவயதில் இருந்தே தாங்கள் ஈடுபடும் எதிலும் வெற்றிபெறவேண்டும் என்ற எண்ணம் உள்ளவராக இருப்பார்கள். அதற்காகத் தன்னை வருத்திக் கொள்ளவும் அவர்கள் தயங்குவதில்லை. அதேநேரம் அந்த முதலிடம் கிடைக்கும்போதுதான் அவர்களால் மகிழ்ச்சியடைய முடியும். அதனைத் தவறவிட்டால் அவர்கள் உடைந்துபோய் விடுவார்கள். அந்த முதலிடம் கிடைத்தாலும் அவர்களால் அந்த மகிழ்ச்சியை முழுமையாக அனுபவிக்க முடிவதில்லை. தாம் கைப்பற்றிய முதலிடத்தை எப்படித் தக்க வைப்பது என்பதிலேயே அவர்களின் கவனம் இருக்கும்.

 

இன்னும் சிலருக்கு சமூகத்தில் அவர்களுக்கு கிடைக்கக்கூடிய மரியாதை, பாராட்டு, சமூக அங்கீகாரம் என்பனவே மகிழ்ச்சியைத் தருபவையாக இருக்கின்றன. இவர்கள் தாமாகவே சமூக செயற்பாடுகளில் தங்களை விரும்பி இணைத்துக் கொள்வார்கள். ஒரு குழுவாக இணைந்து வேலை செய்தாலும் தங்களுக்கே பாராட்டும் மாலையும் விழவேண்டும் என்று இவர்கள் ஆசைப்படுவார்கள். அதற்காகவே மற்றவர்களைவிட அதிகம் நேரம், சக்தி என்பவற்றை இவ்வாறன செயற்பாடுகளில் செலவிடுவர்.

 

இவர்களுள் சிலரால் தமக்கு சமமாக அல்லது அதிகமாக யாராவது பாராட்டப்பட்டுவிட்டால் அதனைத் தாங்க முடிவதில்லை. இவர்கள் தன்னோடு உள்ளவர்கள் தன்னைப்பற்றி எப்போதும் பாராட்டிப் பேச வேண்டும் என்றும் எதிர்பார்ப்பார். இவ்வாறானவர்கள் தாங்களும் மகிழ்ச்சியாக வாழ்வது இல்லை. மற்றவர்களையும் மகிழ்ச்சியாக இருக்க விடுவதில்லை.

 

இவ்வாறாக தமது மகிழ்ச்சியை உயிரற்ற பொருட்கள் மற்றும் சூழ உள்ளவர்கள் மூலம் மட்டுமே பெற்றுக் கொள்ள நினைப்பவர்கள் பொதுவாக மகிழ்ச்சியாக இருக்க முடிவதில்லை. இவர்களின் மனதில் எப்போதும் ஓடிக்கொண்டிருக்கும் ஆசைகள், எதிர்மறை எண்ணங்கள், பிறர்மேல் ஏற்படக்கூடிய பொறாமை உணர்வு, போட்டி மனப்பான்மை, பிறர் தன்னை மகிழ்விக்க வேண்டும் என்ற அதீத எதிர்பார்ப்பு போன்றவையே இவர்களுக்கு கிடைக்கும் மகிழ்ச்சியான சந்தர்ப்பங்களையும் நாசமாக்கிவிடுகிறது. இவர்களைவிட தமது சிறு சிறு வெற்றியையும் மற்றவரின் வெற்றியையும் கொண்டாடத் தெரிந்தவர்கள்தான் அதிகம் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்.

 

உண்மையில் எமது எண்ணங்கள் செயல்களில் மாற்றங்களைச் செய்வதன் மூலமும் எமது சூழலில் சில மாற்றங்களை செய்வதன் மூலமும் ஆசைகள், இலக்குகளை மீளமைத்துக் கொல்வதன்மூலமும்  நாங்கள் அனைவருமே மகிழ்ச்சியாக வாழமுடியும். கீழே உள்ளவை போன்ற சில விடயங்களைப் பின்பற்றுவதன் மூலம் எமது வாழ்க்கையை எப்போதுமே மகிழ்ச்சியானதாக எம்மால் வடிவமைத்துக் கொள்ள முடியும்.

1.   உங்கள் திறமை, அனுபவங்களுக்கு ஏற்ற முயற்சிகளில் உங்களை ஈடுபடுத்துங்கள். மற்றவர்களின் பெறுபேறுகளை உங்கள் இலக்குகளாக்கி விடாதீர்கள்.

2.   உங்கள் முயற்சிகளில் தவறு ஏற்படும்போது அதற்காக உடைந்துவிடாதீர்கள். உங்கள் பலமான விடயங்களில் நினைத்து உங்களை நீங்களே தட்டிக் கொடுங்கள். மீண்டும் சிறு இலக்குகள் வைத்து அவற்றை வெற்றி கொள்ள முயற்சி எடுங்கள்.

3.   உங்கள் வாழ்வில் நடந்த நல்ல விடயங்களை மட்டுமே நினைத்துப் பாருங்கள். உங்களோடு பழகியவர்களின் நல்ல குணங்கள், அவர்களோடு உங்களுக்கிருந்த சந்தோசமான தருணங்களை மட்டுமே நினைத்துப் பாருங்கள்.

4.   குடும்பத்தோடும் போதுமான நேரம் செலவிடுங்கள்.  குறிப்பாக உங்கள் குழந்தைகளுடன் சேர்ந்து விளையாடுங்கள். அடிக்கடி குடும்பத்துடன் வெளியில் சென்று ஒன்றாக உணவகத்தில் உணவு உண்ணுங்கள்.

5.   ஒவ்வொரு வாரமும் மூன்று நாட்களாவது உங்களுக்கு பிடித்த உடற்பயிற்சியில் ஈடுபடுங்கள். ஓடுதல், நடைபயிற்சி, சைக்கிள் ஓடுதல்.

6.   ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தைப் பின்பற்றுங்கள்.

7.   தினமும் போதுமான நேரம் நித்திரை கொள்ளுங்கள். தினமும் குறித்த நேரத்தில் உறங்கச் செல்லுங்கள்.

8.   நல்ல நண்பர்களுடன் பழகுங்கள். அவர்களுடன் ஆரோக்கியமான முறையில் நேரத்தைச் செலவிடுங்கள்.

9.   உங்கள் மாத வருமானத்தின் ஒருபகுதியை எதிர்காலத்திற்கென சேமியுங்கள். அதில் ஒரு சிறுபகுதியை தேவையுடைய மக்களுக்காக உதவுவதற்காகச் செலவிடுங்கள்.

 

இன்று சர்வதேச மகிழ்ச்சி தினம். 2013ம் ஆண்டிலிருந்து ஐக்கிய நாடுகள் சபை, மக்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருத்தலின் அவசியத்தை வலியுறுத்துவதற்காக மார்ச் மாதம் 20ம் திகதி சர்வதேச மகிழ்ச்சி தினத்தைக் கொண்டாடுகிறது. நாட்டின் தேசிய வருமானத்தைவிட மக்களின் மகிழ்ச்சியே முக்கியமானது என்று கருதும் நாடான பூட்டானின் முயற்சியினாலேயே இந்த நாள் கொண்டாடப்படுகிறது. பூட்டான் 1970இலிருந்தே மொத்த தேசிய உற்பத்தியைவிட மொத்த தேசிய மகிழ்ச்சிக்கு முன்னுரிமை கொடுத்து வந்த நாடாக விளங்குகிறது.

 

நாமும் பூட்டான் மக்களைப் போல மகிழ்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுத்து எங்களோடு உள்ளவர்களையும் மகிழ்ச்சியாக வைத்திருப்பதோடு எங்களுடைய வாழ்க்கையைத் தினமும் ரசித்து வாழவும் முயற்சிப்போம்.

Monday, 8 March 2021

 


சர்வதேச பெண்கள் தினம் – March 08, 2021

உலகெங்கும் பெண்களுக்கான சர்வதேச தினம் இன்று கொண்டாடப்படுகிறது. உண்மையில் இந்தத் தினம் ஒரு கொண்டாட்டத்துக்கு உரிய தினமாகக் கொள்வதற்கான நாள் இன்னமும் வரவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். கடந்த நூறு ஆண்டுகளுக்கு மேலாக பல நாடுகளிலும் பல்வேறு பெண்கள் அமைப்புகள் தொடர்ச்சியான போராட்டத்தின் பின்னரே இன்று அவர்கள் அனுபவிக்கும் சில உரிமைகளை இன்று அனுபவிக்கிறார்கள்.

 

ஆனால் பலநாடுகளில் வாழும் பெண்கள் இன்றும் பல்வேறு அடக்குமுறைகளுக்கும் உள்ளாகிக் கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் கசப்பான உண்மை. சம உரிமை என்பது வெறும் ஏட்டில் உள்ள விடயமாகவே இருக்கிறது. பெண்கள் தமது உரிமைகளையும் சுதந்திரத்தையும் அனுபவிப்பதற்குத் தடையாகவும் பலநேரங்களில் அவர்கள் மீது அநாவசியமான அழுத்தங்களைக் கொடுப்பவர்களாகவும் ஆண்கள் மட்டுமே இருப்பதில்லை. சமூகத்தில் உள்ள பிற பெண்களும் ஊடகங்களும் கூட தமது பங்குக்கு பெண்கள் மீது வன்முறையை மேற்கொள்பவர்களாக இருக்கிறார்கள்.

 

கடந்த ஒருவாரத்தில் பெண்கள் தொடர்பான சில பத்திரிகை/ இணையச் செய்திகளைப் பார்க்க முடிந்தது.

1.       யாழ்ப்பாணத்தில் அண்மையில் தன் குழந்தையைத் துன்புறுத்திய குற்றத்திற்காக கைது செய்யப்பட்ட பெண்

2.       கிளிநொச்சியில் தனது மூன்று குழந்தைகளைக் கொன்று தானும் தற்கொலை செய்ய முயன்ற ஒரு பெண்

3.       இந்தியாவின் சண்டிகாரில் தனது ஐந்து மாதக் குழந்தையுடன் போக்குவரத்துக் கடமையில் ஈடுபட்ட பிரியங்கா என்ற காவல்துறையில் பணிபுரியும் பெண்.

4.       பிம்ஷா ஜாசின் ஆராச்சியின் பிரதி பொலிஸ் மா அதிபர் நியமனத்தை எதிர்த்து 33 ஆண் உயர் பொலிஸ் அதிகாரிகள் வழக்குத் தாக்கல்.

 

இதில் முதல் செய்தியில் சொல்லப்பட்ட பெண் மிக இளவயதில் குறைந்த வருமானமுள்ள குடும்பத்தவர். மிக இளவயதில் வருமானம் ஈட்ட மத்திய கிழக்கு நாட்டிற்குச் சென்றவர். அதன் பின்னர் ஏற்பட்ட தொடர் சம்பவங்களால் கையில் ஒரு ஐந்து மாதக் குழந்தையுடன் நாடு திரும்பியவர். இன்று தனது கைக்குழந்தையை அடித்துத் துன்புறுத்திய குற்றத்திற்காக விசாரணையை எதிர்நோக்குகிறார்.

 

இவருடைய இன்றைய நடத்தைக்கு (அல்லது பலர் சொல்வதுபோல அவர் இழைத்த குற்றத்திற்கு) இவர் மட்டுமே பொறுப்பல்ல. இவர் இளவயதில் குடும்பத்திற்காக வருமானம் ஈட்ட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டமை, இன்று ஒரு கைக்குழந்தையுடன் நாடு திரும்பியமை என்பவற்றில் அவரின் தந்தை மற்றும் வளைகுடா நாட்டில் இருக்கும் அவரின் கணவரும் பொறுப்புக் கூற வேண்டியவர்கள்தானே.

 

ஆனால் இன்று அவரை மிகவும் ஆபத்தான குற்றவாளியாக சித்தரிக்கும், விமர்சிக்கும் சில ஊடகங்களும் இணையப் பாவனையாளர்கள் பலரும் அந்தப் பெண்ணையே குற்றவாளியாக்குவதில் மட்டுமே குறியாக இருக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல் இவருக்காக வாதாட முன்வந்த பெண் வழக்கறிஞரையும் பணத்திற்காக குற்றவாளியைக் காப்பாற்றத் துடிக்கும் வழக்கறிஞர் என்று பல பெண்களே சமூக வலைத் தளங்களில் தூற்றுவதையும் பார்க்க முடிந்தது.

 

அந்தப் பெண்ணின் விடயத்தில் பெற்றோர் அவருக்கு இளவயதில் கல்வியையும் சரியான வழிகாட்டலையும் வழங்கியிருந்தால் இவருடைய நிலை இன்று வேறாக இருந்திருக்கக்கூடும். யாரோ முகம் தெரியாதவரை சமூக வலைதளத்தில் சந்தித்து, காதலித்து இன்று கையில் ஒரு பிள்ளையுடன் நிற்கும் நிலை ஏற்பட்டிருக்காது.

 

இரண்டாவது பெண் தனது குடிகாரக் கணவனுடன் இனியும் இருக்க முடியாது என்ற நிலையில் தனது மூன்று பிள்ளைகளையும் ஒரு கிணற்றில் தூக்கிப் போட்டதுடன் தானும் தற்கொலை செய்ய முயன்ற நிலையில் அவரின் மூன்று பிள்ளைகளும் இறந்துவிட்ட நிலையில் அவர் காபாற்றப்பட்டுள்ளார். இந்த விடயத்திலும் அந்தப் பெண்ணின் மீதுதான் பலரும் கடுமையான விமர்சனத்தை முன்வைத்தார்கள். அந்தப் பெண் தற்கொலைக்கு முயற்சி செய்ததும் பிள்ளைகளைக் கொன்றதும் சட்டப்படி குற்றமே.

 

ஆயினும் குடிகாரக் கணவனால் தினமும் குடும்ப வன்முறைக்கு முகம் கொடுத்த இனி இந்த மனிதனுடன் வாழமுடியாது, இந்த உலகத்தில் இனியும் உயிருடன் இருப்பதில் பயனில்லை என்று சிந்திக்கத் தூண்டிய கணவனை குற்றம் சாட்டவில்லை. ஏனென்றால் அவர்களைப் பொறுத்தவரை அவன் ஒரு குடிகாரன் மட்டுமே. தனது மூன்று பிள்ளைகளையும் கிணற்றில் தள்ளிக் கொன்ற அந்தப் பெண்தானே இரக்கமற்ற கொலைகாரி. இதுதான் எமது சமூகத்தின் பார்வை.

 

ஒருவரைத் தற்கொலை செய்யத் தூண்டியவரும் சட்டப்படி குற்றவாளி என்பதை இவர்கள் வசதியாக மறந்து விட்டார்கள். மனைவியை அடிப்பதும் இலங்கையில் சட்டபடி குற்றம். உண்மையில் அந்தக் கணவன்தான் முக்கியமான குற்றவாளி. ஆனால் ஆணாதிக்க கட்டமைப்பை கட்டிகாக்க விரும்பும் சமூகம் இதனை ஏற்றுக் கொள்ளப்போவதில்லை.

 

இது ஒருபுறம் இருக்க, அந்தப் பெண் கல்வி கற்று ஒரு தொழில் புரிபவராக இருந்திருந்தால், தன்னம்பிக்கை உள்ளவராக இருந்திருந்தால் நிச்சயம் இந்த முடிவிற்கு வந்திருக்க மாட்டார். கணவனைப் பிரிந்து பிள்ளைகளைத் தனியாகவே வளர்க்கும் முடிவுக்கு வந்திருப்பார். மேலை நாடுகளில் இருப்பது போல தற்காலிக வதிவிட வசதி, பிள்ளைகளைப் பராமரிக்க அரச நிதியுதவி போன்ற வாய்ப்புகள் இருந்திருந்தாலும் அவர் தற்கொலை முடிவிற்குப் போயிருக்க மாட்டார் என்று நம்பலாம்.

 

மூன்றாவதாகக் குறிப்பிடப்பட்ட இந்தியப் பெண் காவலதிகாரி இரண்டு நாட்களுக்கு முன்னர் போக்குவரத்துக்கு கடமைக்குத் தனது ஐந்து மாதக் கைக்குழந்தையுடன் தெருவில் கடமைக்கு வந்து நின்றது பெரும் செய்தியானது. இவரை இவ்வாறு தனது கைக்குழந்தையுடன் பெருந்தெருவில் கடமைக்கு அனுப்பிய உயரதிகாரிகள் மீது குற்றமும் சுமத்தப்பட்டது.

 

ஆனால் இதற்குப் பொறுப்புக் கூறவேண்டியவர்கள் உண்மையில் உயரதிகாரிகள் மட்டுமா? அந்தக் குழந்தையின் தந்தைக்கு அந்தப் பிள்ளையைப் பார்க்கும் பொறுப்பு இல்லையா? பெண்களும் தமது குடும்ப வருமானத்திற்காக வேலைக்குச் செல்ல வேண்டிய சூழலில் இவ்வாறான இளம் தாய்மார்கள் தமது பிள்ளைகளை பாதுகாப்பாக விட்டுச் செல்வதற்கு ஏற்ற வசதிகளை உருவாக்கிக் கொடுக்காத எமது அமைப்புகளும் தவறில்லையா? குழந்தைகளுக்குத் ஆறு மாதங்களுக்குத் தாய்ப்பால் அவசியம் என்று பிரச்சாரம் செய்யும் அரசுகள் ஏன் அனைத்து வேலை செய்யும் பெண்களுக்கும் முழுமையாக ஆறு மாதங்களுக்குக்  கொடுப்பனவுடன் கூடிய பேற்றுக்கால விடுமுறையை வழங்கக்கூடாது என்ற கேள்வியையும் இந்த சம்பவம் கேட்க வைக்கிறது.

 

நான்காவதாக குறிப்பிடப்பட்டவர் ஏனைய மூன்று பெண்களையும் விட கல்வியில், தொழில் தகமையில் மேம்பட்டவர். சமூகத்தில் உயர் பொலீஸ் அதிகாரி என்ற அந்தஸ்தில் உள்ளவர். ஆனால் அவராலும் இந்த ஆணாதிக்க சிந்தனாவாதிகளின் தாக்குதலில் இருந்து தப்ப முடியவில்லை. கடந்த மாதம் அவரது நியமனம் சட்டவிரோதமானது என்று உயர்நீதிமன்றில் 33 ஆண் உயர் பொலிஸ் அதிகாரிகள் வழக்குத் தொடர்ந்திருக்கிறார்கள். ஒரு பெண்ணை பிரதி பொலிஸ் மா அதிபராக நியமிக்கலாம் என்று தமது திணைக்கள பதவியுயர்வு தொடர்பான விதிமுறைகளில் சொல்லப்படவில்லை என்பதுதான் அவர்களின் வாதம்.

 

இந்த நான்கு விதமான செய்திகளையும் படித்தபோது எனது மனதில் தோன்றிய ஒரே விடயம், பெண் படிக்காத கிராமத்தவளாக இருந்தாலும், படித்து உயர் பதவியில் இருந்தாலும் அவள் ஆணைவிட ஒருபடி குறைவானவள் என்றே இன்றும் பல சமூகங்கள் நம்புகின்றன. போததற்கு இன்று பலரின் வீட்டில் அழையா விருந்தாளியாக வந்து தங்கியிருக்கும் தொலைக்காட்சித் தொடர்களும் தொடர்ந்தும் “இதுதான் குடும்பப் பாங்கான, கலாச்சாரத்தை காப்பாற்றும் வாழ்க்கைமுறை” என்ற பெயரில்  பழமைவாதத்தை ஆண் பெண் இருபாலாரின் தலைக்குள்ளும் திணித்து விடுகின்றன.

 

இவ்வாறான புறச்சூழல்கள் ஆணையும் பெண்ணையும் அவ்வாறான கோட்பாட்டை நம்பச் செய்ய முயல்வதுடன் பல சமயங்களில் வெற்றி பெற்றும் விடுகின்றன. ஆண்கள் மட்டுமன்றி பல சந்தர்ப்பங்களில் பெண்களே பெண்களின் வளர்ச்சிக்குத் தடையாக இருப்பதும் அதன் விளைவுதான். ஆனால் பெண்ணும் ஒரு சமுதாயத்தில் பலமானவளாக, பங்களிப்பவளாக மாறும்போது அந்த சமூகம் விரைவாக முன்னேறும் என்ற உண்மையை ஆணாதிக்கத்தை காதலிக்கும் ஆண்கள் உணரும்வரை, பெண்களின் திறமையை ஊக்குவிக்கும், பாராட்டும் சமூகமாக மாறாதவரை  அந்த சமூகம் அடுத்த நூற்றாண்டிலும் காட்டுமிராண்டிச் சமூகமாகவே இருக்கப் போகிறது.


வீமன்.