Links

Sunday, 25 April 2021

 பெரும் தொற்றுக் காலத்தில் உடல், உள ஆரோக்கியம் - 2




முதல் பதிவில் உடல் ஆரோக்கியம் தொடர்பாக நாம் ஒவ்வொருவரும் உணவு, உடற்பயிற்சி, ஓய்வு தொடர்பாக செய்யக்கூடிய சில விடயங்களைக் குறிப்பிட்டிருந்தோம். இந்தப் பதிவில் எங்கள் மனதை இந்தப் பேரிடர் காலத்தில் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும் சில வழிமுறைகளைப் பார்ப்போம்.

சாதாரண காலத்திலேயே எமது எதிர்காலம், பிள்ளைகளின் எதிர்காலம், நிகழ்காலத்தில் நாம் முகம் கொடுக்கும் பிரச்சனைகளைப் பற்றி யோசிப்பது என்பது எம்மால் தவிர்க்க முடியாத ஒன்றாகவே இருந்தது. இந்த நிலையில் கடந்த ஒருவருடத்திற்கும் மேலாக நாம் முகம் கொடுக்கும் இந்தப் பெருந்தொற்றுக் காலத்தில் கோவிட் நோய் வந்துவிடுமோ என்ற பயம் ஒரு பக்கம்; வக்சின்களை நம்பிப் போடலாமா என்ற தயக்கம் மறுபுறம்; இதைவிட பழைய இயல்பு வாழ்க்கைக்கு என்று திரும்புவோம் என்ற விடை தெரியாத கேள்வி இன்னொரு புறமாகத்தான் பலரும் நாட்களைக் கடத்துகிறார்கள். இவ்வாறன அழுத்தங்களும் கவலைகளும் எங்களைச் சூழ இருக்கும் நிலையில் நாங்கள் இவற்றை எதிர்கொள்ள மனதால் வலியவர்களாக இருக்க வேண்டியதாகிறது.

அதற்கு பல சுலபமான வழிமுறைகள் இருக்கின்றன. உங்களில் பலர் அவற்றை ஏற்கனவே பின்பற்றுபவர்களாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன். மற்றவர்களும் கொஞ்சம் முயற்சி செய்து பாருங்கள்.

உள ஆரோக்கியத்தில் உடற்பயிற்சிக்கு முக்கிய இடமுண்டு. நான் எதற்காக திரும்பவும் உடற்பயிற்சி பற்றிப் பேசுகிறேன் என்று உங்களில் சிலர் நினைக்கக்கூடும். ஆனால் எங்களை உற்சாகமாக வைத்திருப்பதற்கு உடற்பயிற்சி உதவுகிறது என்பதுதான் உண்மை. உடற்பயிற்சி செய்யும்போது எமது மூளையில் செரேடோனின் (Serotonin) என்ற சுரப்பு சுரக்கப்படுகிறது. அது எம்மை உற்சாகமாக வைத்திருக்க உதவுகிறது, நல்ல தூக்கத்தைத் தருகிறது. எமக்கு நாளாந்தம் வேலை மற்றும் வேறு காரணங்களால் ஏற்படக்கூடிய மன அழுத்தத்தைக குறைக்கவும் உதவுகிறது.

முன்பெல்லாம் நண்பர்கள், உறவினர்களை அடிக்கடி எங்காவது சந்தித்து ஊர்க்கதை மகிழ்ந்த எமக்கு இன்று வீடுகளுக்குள் முடங்கியிருப்பது மிகக் கஷ்டமான ஒரு விடயமாக உள்ளது. ஆனால் இந்த நாட்களில்தான் நாங்கள் முடிந்தவரை எமக்கு நெருக்கமான நண்பர்கள், உறவினர்களுடன் தொடர்பில் இருக்க முயற்சிக்க வேண்டும். அடிக்கடி அவர்களுக்கு அழைப்பு ஏற்படுத்தி நலம் விசாரியுங்கள். கானொளியில் பார்த்துக் கதைக்கக்கூடிய zoom meeting போன்ற வழிமுறைகளையும் முயற்சிக்கலாம். ஆனால் அதற்காக இன்னொருவரைப்பற்றி வம்பு பேசாதீர்கள். அதனால் வீண் வம்பில் மாட்டி உங்கள் மகிழ்ச்சியைத் தொலைக்க வேண்டியும், ஏற்படலாம்.

கோவிட் தொடர்பாக மணிக்கொரு தடவை Flash News சொல்லும் வானொலி, தொலைக்காட்சிச் சேனல்களை பார்ப்பதைத் தவிர்த்துக் கொள்ளுங்கள். உண்மையில் இவ்வாறான ஊடகங்கள் உங்களையறியாமலே உங்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தக் கூடியவை என்பதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள். வேண்டுமென்றால் காலை ஒருமுறை, மாலை ஒருமுறை முழுமையான செய்தி அறிக்கையைக் கேளுங்கள். அது போதும்.

வைரஸாகப் பார்த்து எங்கள் எல்லோருக்கும் குடும்பத்துடன் செலவு செய்ய நிறைய நேரத்தைக் கொடுத்துள்ளது. இப்படியாகிவிட்டதே என்று இடிந்து போய் ஒரு மூலையில் இருந்து மன அழுத்தத்தை ஏற்றிக் கொள்ளாமல் குடும்பத்தோடு மகிழ்ச்சி தரக்கூடிய செயற்பாடுகளில் ஈடுபடுங்கள்.

1. வாரம் ஒருநாளாவது குடும்பத்தோடு ஒரு படம் பாருங்கள் (Family Movie Time). உங்களுக்குப் பிடித்த படத்தைப் பார்க்க பிள்ளைகளை வற்புறுத்தாமல், பிள்ளைகளுக்குப் பிடித்த படத்தைப் பாருங்கள்.
2. உங்கள் வீட்டு வளவில் பிள்ளைகளுடன் சேர்ந்து விளையாடுங்கள். பிள்ளைகளுடன் சேர்ந்து விளையாட இதே மாதிரி வேறொரு சந்தர்ப்பம் கிடைக்காமலும் போகலாம்.
3. வீட்துக்கு உள்ளேயிருந்து பிள்ளைகளோடு சேர்ந்து விளையாடக்கூடிய போர்ட் கேம்ஸ், வார்த்தை விளையாட்டு, பாட்டுக்குப் பாட்டு, Karaoke போன்ற செயற்பாடுகளிலும் ஈடுபடலாம்.
4. பிள்ளைகளோடு உரையாடுங்கள். குறிப்பாக உங்கள் வீரப்பிரதாபங்களை அளந்துவிடாமல் உங்கள் பிள்ளைகளைக் கதைக்கவிட்டு, அவர்கள் சொல்வதற்குக் காது கொடுத்துக் கேளுங்கள்.
5. தினமும் ஒருவேளை குடும்பமாக அமர்ந்து உணவருந்துங்கள். ஆனால் உணவு மேசையில் தேவையற்ற விடயங்களைப் பேசாதீர்கள். குறிப்பாகப் பிள்ளைகளின் நடத்தைகள், குறைபாடுகளைப் பேசும் இடமாக சாப்பாட்டு மேசை இருக்கக்கூடாது.
பெரும்தொற்றுக் காரணமாக அனைவருமே ஒரு வீட்டுக்குள்ளேயே இருக்க வேண்டிய சூழ்நிலையில், பெற்றோர் – பிள்ளைகள் இடையில் ஏற்படக்கூடிய முரண்பாடுகளைவிட, கணவன் – மனைவிக்கிடையில்தான் அதிகம் வார்த்தை பரிமாறல்களும் கருத்து முரண்பாடுகளும் ஏற்படக்கூடிய சூழ்நிலை அதிகம்.

இவை பல சந்தர்ப்பங்களில் சண்டைகளாக மாறவும் சந்தர்ப்பம் அதிகம் உள்ளது. இதற்கு, அனைவரும் வீட்டிலேயே இருப்பதால் மனைவிக்கு ஏற்படும் வேலைச்சுமை ஒருபுறமும், அது போதாதென்று ஆண்கள் அடிக்கடி சிற்றுண்டி, தேநீர் போன்றவற்றை மனைவி வழங்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு பல ஆண்களுக்கு இருக்கிறது. இவ்வாறான சூழல் இருவரையுமே மகிழ்ச்சியை இழக்கச் செய்வதுடன் தேவையற்ற மன அழுத்தத்தையும் ஏற்படுத்திவிடும்.இதனைச் தவிர்ப்பதற்கு பின்வரும் விடயங்களைப் பின்பற்றிப் பார்க்கலாம்.

1. கணவன் மனைவி இருவருமே சேர்ந்து சமைத்தல் அல்லது ஒவ்வொரு நேரச் சமையலை ஒவ்வொருவர் பொறுப்பெடுத்தல்.
2. மாலை நேரத் தேநீர் அருந்தும்போது கணவன் மனைவி இருவரும் அதற்காக நேரம் ஒதுக்கி ஒன்றாக அமர்ந்து தேநீர் அருந்துங்கள். இதன்போது மகிழ்ச்சி தரக்கூடிய விடயங்களைப் பேசலாம். உதாரணமாக, நீங்கள் திருமணம் செய்த புதிதில் நடந்த சுவாரசியமாக விடயங்கள், உங்கள் பிள்ளைகள் சிறுவர்களாக இருந்தபோது செய்த சேட்டைகள் போன்றவற்றைப் பேசலாம்.
3. வீட்டில் உள்ள ஏனைய வேலைகளையும் கணவன் மனைவி இருவரும் பகிர்ந்து கொள்ளும்போது இருவருக்குமே வேலைச்சுமை குறையும். இருவருக்குமிடையில் அன்யோன்யம் அதிகரிக்கும்.

இவ்வாறு கணவன் – மனைவி இருவரும் அன்பாகவும் ஒருவருக்கு ஒருவர் உறுதுணையாக இருப்பது இந்தப் பெரும்தொற்றுக் காலத்தில் எம்மை மனதை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ள உதவும். ஆனால் ஆனால் அளவுக்கு மிஞ்சினால் தேனும் திகட்டும் என்பதுபோல தொடர்ந்து எழு நாட்களும் கணவன், மனைவி ஒரே வீட்டுக்குள் இருப்பது தேவையற்ற சின்ன சின்ன பிரச்சனைகளையும் உருவாக்கலாம்.

முக்கியமாக இருவருமே வீட்டிலிருந்து அலுவலக வேலை செய்பவர்களாயின் இருவரும் ஒரே மேசையில் இருந்து வேலை செய்யாதீர்கள். இருவரும் வேறு வேறு அறைகளில் இருந்து வேலை செய்யுங்கள். குறிப்பாக நேரலைக் கூட்டங்கள், தொலைபேசி அழைப்புகளை மேற்கொள்ளும்போது மற்றவருக்கு தொந்தரவு இல்லாமல் வேலையில் முழுக் கவனத்தையும் செலுத்த முடியும்.

அதைவிட முக்கியமானது கணவன், மனைவி இருவருமே தமக்கான நேரத்தை ஒதுக்கிக் கொள்ள வேண்டும். அதாவது உங்களுக்கேயான உங்கள் தனிமைக்கான நேரம். இந்த நேரத்தில் நீங்கள் படம் பார்க்கலாம், விருப்பமான பாட்டுக் கேட்கலாம் அல்லது ஒரு புத்தகம் வாசிக்கலாம். தினமும் உங்களுக்காக 30 நிமிடத்தில் இருந்து ஒரு மணித்தியாலம் வரை உங்களுக்கென ஒதுக்கிக் கொள்ளுங்கள். இது உங்களைத் தினமும் புதுப்பித்துக் கொள்ள உதவும்.

இவ்வாறான விடயங்களைப் பின்பற்றுவதால் உங்கள் மனதையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள முடியும். தேவையில்லாத விடயங்களைப் பற்றி யோசிக்காதீர்கள். உதாரணமாக, கோவிட்க்கு மருந்து எப்படிக் கண்டுபிடிப்பது? செவ்வாய்க்கு செல்லும்போது என்ன பொருட்களைக் கொண்டு செல்லலாம்? நான் சொன்னபடி கேட்கும் ஒருவராக எனது வாழ்க்கைத் துணையை மாற்றுவது எப்படி? எனவெல்லாம் யோசித்தால் உங்களுக்கு மனவழுத்தம்தான் ஏற்படும். அதனால் அப்படியான விடயங்களைப்பற்றி யோசிக்காமல் மனதை அமைதியாக வைத்துக் கொள்ளுங்கள்.

மன மற்றும் உடல் ஆரோக்கியத்தில் இன்னொரு விடயமும் முக்கியமானது. அதுதான் self-care எனப்படும், எம்மைக் கவனித்துக் கொள்ளுதல். அதை எப்படிச் செய்யலாம் என்பதை இன்னொரு பதிவில் பார்ப்போம்.

Friday, 23 April 2021

 பெரும் தொற்றுக் காலத்தில் உடல், உள ஆரோக்கியம் - 1

 


பெரும் தொற்றுக் காலத்தில் ஒரு வருடத்திற்கும் மேலாக பல நாடுகளிலும் சிறு சிறு தளர்வுகளுடன் முடக்கநிலை தொடர்ந்தும் நடைமுறையில் இருக்கிறது. இந்த சூழ்நிலையில் உடற்பயிற்சி, விளையாட்டுச் செயற்பாடுகளுக்கு உள்ளக அரங்குகளைப் பயன்படுத்துதல்,  பொது இடங்களில், வீடுகளில் நண்பர்கள், உறவினர்களை ஒன்றாகச் சந்தித்தல்  போன்ற பல விடயங்களைச் செய்ய முடியாதுள்ளது.

 

அதிலும் எங்களில் பலர் வீட்டிலிருந்தே அலுவலக வேலைகளையும் செய்வதால் தனிமையிலே இனிமை காண வேண்டிய ஒரு நிலையில்தான் நாங்கள் இருக்கிறோம். போதுமான உடற்பயிற்சி இல்லாதது ஒருபுறம் இருக்க, வீட்டில் உள்ளவர்கள் Youtube பார்த்து விதவிதமாக சமையல் செய்து எங்களை பரிசோதனை எலியாகவும் பயன்படுத்துவதால் எங்களை அறியாமலே உடல் எடை கூடிப் போய்விட்டது. தனிமை, கோவிட் பற்றிய பயம், எதிர்காலம் குறித்த யோசனை போன்றவற்றாலும் எமது உள ஆரோக்கியத்திலும் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

 

இன்னும் எத்தனை நாளைக்கு இந்த நிலைமை என்று தெரியாத நிலையில் எங்கள் உடல் ஆரோக்கியம், மன ஆரோக்கியத்தை நல்ல நிலையில் பேணுவது எங்களின் கையில்தான் இருக்கிறது. ஆனால் இதற்கு கொஞ்சம் திட்டமிடலும், நிறைய மன உறுதியும் இருந்தாலே போதும்.

 

உங்கள் பிரதேசத்தில் தேவையான பாதுகாப்பு முறைகளுடன் வெளியில் உடற்பயிற்சிக்காக செல்ல அனுமதியிருந்தால்,

வாரத்தில் 4 நாட்களாவது நடைபயிற்சி செய்யுங்கள். அதற்காக எடுத்த எடுப்பிலேயேமுதல் நாளே 10 – 15 km நடந்துவிட்டு பத்து நாளைக்குப் படுத்து ஓய்வெடுக்காமல், முதல் நாள் 2 km இல் தொடங்கி தினமும் கொஞ்சம் கொஞ்சமாக நடக்கும் தூரத்தை அதிகரியுங்கள். ஒன்று அல்லது இரண்டு km தூரத்தில் உள்ள கடைக்குப் ஒரு சில பொருட்கள் மட்டுமே வாங்கச் செல்வதாக இருந்தால் நடந்தே செல்லுங்கள். உங்கள் நாலு சக்கர, இரண்டு சக்கர வாகனங்களுக்குக் கொஞ்சம் ஒய்வு கொடுத்துவிடுங்கள்.

 

நீங்கள் சைக்கிள் ஓடுவதில்  ஆர்வம் உள்ளவராக இருந்தால் வாரத்தில் நான்கு நாட்களாவது, தினமும்  30  - 60 நிமிடங்கள் சைக்கிள் ஓடுங்கள். அதேபோல ஓடுவதில் ஆர்வம் உள்ளவர்கள் தினமும் அரை மணிநேரம் ஓட்டப் பயிற்சியிலும் ஈடுபடலாம்.

இவ்வாறான உடற்பயிற்சி செய்பவர்கள், Strava, Apple Health, Google Fit, Fitbit  போன்ற App இனையும் பயன்படுத்தலாம். இதன் மூலம் உங்கள் வாராந்த பெறுபேறுகளைப் பார்க்க முடிவதுடன், உலகெங்கும் உள்ள நண்பர்களுடன் இணைப்பில் இருக்க முடியும். இதன் மூலம் ஒருவரை ஒருவர் ஊக்கப்படுத்த முடியும். சில App களில் ஒவ்வொரு மாதமும் 50 km walking challenge, 200 km cycling challenge போன்ற சவால்களை ஏற்றுக் கொள்வதன்மூலம் எங்களை நாங்களே ஊக்குவிக்கவும் முடியும்.

 

நடப்பவர்களும் ஓடுபவர்களும் பொருத்தமான காலணி அணிந்து செல்லுங்கள். இதன்மூலம், கால், பாதங்களில் வலியேற்படுதல், கால் தடக்கி விழக்கூடிய சந்தர்ப்பங்களைத் தவிர்த்துக் கொள்ளுங்கள். அதேபோல சைக்கிள் ஓடுபவர்களும் பாதுகாப்பாக தலைகவசம், பொருத்தமான காலணிகளை அணிந்து செல்லுங்கள்.

 

வீட்டிற்கு வெளியே செல்வதற்கு அனுமதி இல்லையென்றால் (அரச அல்லது இல்லத்தரசியின் கட்டுப்பாடு காரணமாக) வீட்டிலேயே சில உடற் பயிற்சிகளைச் செய்யலாம்;

தற்போது உங்கள் துவாய்களைக் காயப்போடும் Treadmill இன் மீதுள்ள துவாய்களை எடுத்து வேறிடத்தில் காயப் போட்டுவிட்டு Treadmill இனைப் பயன்படுத்துங்கள்.

 

கண்டபடி சிற்றுண்டி செய்து உண்ண வைத்து எந்த Youtube உங்களை குண்டாகியதோ அந்த Youtube இலேயே மிக இலகுவாக செய்யக்கூடிய உடற்பயிற்சிக் காணொளிகளும் தாராளமாக இருக்கின்றன. அவற்றில் உங்களுக்குப் பிடித்த ஒன்றைத் தெரிவுசெய்து அதைப் பார்த்து நீங்களும் தினமும் உடற்பயிற்சி செய்யலாம்.

 

உடற்பயிற்சி செய்வதில் விருப்பமில்லாதவர்கள், உங்கள் அறையில் விருப்பமான பாடல்களைப் போட்டுவிட்டு உங்கள் இஷ்டம் போல நடனம் ஆடலாம். (குறிப்பு: தேவையற்ற விமர்சனம், அவமானங்களைத் தவிர்த்துக் கொள்ள கதவை மூடிவிட்டு ஆடுவது நல்லது).

 

இதைத் தவிர, வீட்டுத்தோட்டம் செய்தல், செல்லப் பிராணியை நடப்பதற்குக் கூட்டிச் செல்லுதல் (அதற்காக பூனையின் கழுத்தில் கயிறு கட்டிக் கூட்டிச் செல்ல வேண்டாம்) போன்றவையும் குடும்ப உறுப்பினர்களுடன் சேர்த்து வீட்டு வளவில் கிரிக்கெட், கூடைப்பந்து, கால்ப்பந்து, பட்மிண்டன் போன்ற விளையாட்டுகளை விளையாடுவதும் எமது உடல் ஆரோக்கியத்தை பேண நாங்கள் செய்யக்கூடிய சில விடயங்களாகும்.

 

உங்கள் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள முறையான உடற்பயிற்சி மட்டுமே போதாது. உடலுக்குப் போதுமான ஓய்வும் அவசியம். அதனால் நள்ளிரவில் உங்கள் மொபைல் போனை நோண்டிக் கொண்டிருக்காமல் தினமும் நேரகாலத்துக்கு படுக்கைக்குச் செல்லுங்கள். அதேபோல காலையிலும் வேலை இருக்கிறதோ இல்லையோ, குறிப்பிட்ட நேரத்துக்கு எழுந்திருக்கப் பழகுங்கள்.

 

அதேபோல நீங்கள் உண்ணும் உணவிலும் கொஞ்சம் அவதானம் செலுத்துங்கள். நொறுக்குத் தீனிகளைக் கண்டநேரத்தில் கண்டபடி உண்பதைக் குறைத்துக் கொள்ளுங்கள். தினமும் சாப்பிடும் உணவின் அளவையும் உங்கள் உடல் உழைப்புக்கு ஏற்றதாக அமைத்துக் கொள்ளுங்கள். அதிகம் காய், கனிகளை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

 

உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதற்கு உள ஆரோக்கியமும் முக்கியமானது என்கிறார்கள் வல்லுனர்கள். இன்றைய சூழ்நிலையில் எங்களின் உள ஆரோக்கியத்தைப் பேணுவது எப்படியென்று இன்னொரு பதிவில் பார்ப்போம்.

 

International Earth day – April 22, 2021

 

Mother Earth is clearly urging a call to action. Nature is suffering. Oceans filling with plastic and turning more acidic. Extreme heat, wildfires and floods, as well as a record-breaking Atlantic hurricane season, have affected millions of people.  Now we face COVID-19, a worldwide health pandemic link to the health of our ecosystem.

 



நாம் வாழும் இந்த பூமிதான் எங்களுக்குத் தேவையான நீர், சுத்தமான காற்று, உணவு, இயற்கைவளங்கள் எனத் தன் பிள்ளையின் தேவையை நிறைவு செய்யும் அன்னை போல பல ஆயிரம் ஆண்டுகளாக வழங்கிக் கொண்டிருக்கிறது. ஆனால் நாங்களோ தாயின் அருமை அறியாத பிள்ளைகளைப் போல கொஞ்சம் கொஞ்சமாக எமது பூமியை நஞ்சூட்டிக் கொண்டிருக்கிறோம்.

 

காலநிலை மாற்றம், கடும் வரட்சி, வெள்ளப்பெருக்கு, காட்டுத்தீ, ஆழிப்பேரலைகள், மண்சரிவு போன்ற இயற்கை அனர்த்தங்கள் ஏற்படும்போதெல்லாம் இயற்கையைச் திட்டித்தீர்க்கும் நாங்கள், அதற்கு எமது செயற்பாடுகளே காரணம் என்பதை உணர்வதில்லை.

 

கட்டுப்பாடற்ற வகையில் காடுகளை அழித்தல், அரிய உயிரினங்களை வேட்டையாடுதல், உயிரினங்களின் பல்லினத்தன்மையைப் பாதிக்கும் செயற்பாடுகளில் ஈடுபடல், விவசாயத் தேவைகளுக்கு தொடர்ந்தும் இரசாயனப் பொருட்களைப் பயன்படுத்துதல், தொடர்ந்தும் குப்பைகள், பிளாஸ்டிக் கழிவுகள் என்பவற்றை முறையற்ற வகையில் வீசி நீர், நில மாசடைதலுக்கு வழிகோலுதல் என நாங்கள் செய்யும் நாசவேலைகளை பட்டியலிட்டுக்கொண்டே போகலாம்.

 

கடந்த சில தசாப்தங்களாகவே மனிதர்களுக்கு புதுப்புது வியாதிகள் வருகின்றன. இவற்றுள் 75% ஆனவை வெவ்வேறு விலங்குகளில்  இருந்தே மனிதர்களுக்குக் பரவியவையாக இருக்கின்றன. இவ்வாறு விலங்குகளிலிருந்து மனிதர்களுக்கு புதிய புதிய நோய்கள் பரவுவதற்கும் பூமியின் சூழல் தொகுதியில் மனிதர்கள் தொடர்ந்து ஏற்படுத்திவரும் சேதங்களுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக சூழலியலாளர்கள் கூறுகிறார்கள்.

 

நாம் கடந்த 50 வருடத்தில்தான் இந்த பூமியை மிக அதிகமாக பாழ்படுத்திக் கொண்டிருக்கிறோம். மனிதர்களின் சனத்தொகை 3.7 பில்லியனில் இருந்து 7.8 பில்லியனாக (இரண்டு மடங்கிற்கு அதிகமாக) அதிகரித்துள்ள வேளையில் கடந்த ஐம்பது வருடங்களில் மட்டும் உலகின் காடுகளில் 1/3 பங்கினை நாம் அழித்து விட்டோம். இது போதாதென்று தொடர்ந்தும் கழிவுகளை, குறிப்பாக விரைவில் மக்காத கழிவுகளை அதிகமாக உருவாக்கி மேலும் எமது பூமியை நாமே அழித்துக் கொண்டிருக்கிறோம்.

 

இவ்வாறு மனிதர்கள் தமது பேராசை, சுயநலம், தற்காலிக மகிழ்ச்சி என்பவற்றிற்காக கடந்த ஐம்பது வருடங்களில் மட்டும் உலகில் உள்ள விலங்குகள், பறவைகள், ஊர்வன உட்பட முள்ளந்தண்டுள்ள உயிரினங்களின் 60% வீதமானவற்றை அழித்து விட்டார்கள்.  அதேபோல மனிதர்களின் பொறுப்பற்ற செயற்பாடுகளால் 83% ஆன நன்னீர் உயிரினங்களும் அழிந்து போய்விட்டன.

 

இன்று பெற்றோர்களாக நிற்கும் நாங்கள் எங்களைப் பார்த்துக் வேண்டிய ஒரே கேள்வி: “எமது பிள்ளைகள், பேரப்பிள்ளைகளுக்கு எதை சொத்தாக விட்டுச் செல்கிறோம்?”  என்பதுதான். உங்களில் பலர் உங்கள் பிள்ளைகளுக்காக வங்கியில் பெரும் தொகைப் பணம் சேமித்திருப்பீர்கள். பிள்ளைகள் கஷ்டப்படக்கூடாது என்று ஒன்றுக்கு இரண்டு வீடுகள்கூட கட்டி வைத்திருப்பீர்கள். ஆனால் உங்கள் சந்ததி சுவாசிக்க சுத்தமான காற்றும் குடிக்க சுத்தமான நீரும், உண்பதற்கு ஆரோக்கியமான உணவாதாரங்களும் இல்லையென்றால் நீங்கள் சேர்த்து வைத்த சொத்தினாலும் கட்டிவைத்த வீடுகளினாலும் ஏதும் பயனுண்டா?

 

கோவிட் க்கு முன்னர் நியூ டெல்லி, பீஜிங் போன்ற நகரங்களில் காற்று மாசினால் மக்கள் முகக் கவசம் போட்டுத் திரிய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதை நினைத்துப் பாருங்கள். எதிர்காலத்தில் உங்கள் பேரப்பிள்ளைகளும் அவர்களின் பிள்ளைக்கும் முதுகில் ஒட்சிசன் சிலிண்டர்களைக் கட்டிக் கொண்டு செல்ல வேண்டிய நிலை வரலாம். சுத்தமான காற்றடைத்த பைகள் கடை வீதியெங்கும் விற்பனையாகலாம்.

 

நண்பர்களே,

நடந்தது நடந்தவையாக இருக்கட்டும். இனியாவது பழுதடைந்த இந்தப் பூமியை எப்படிச் சரி செய்யலாம் என்று யோசியுங்கள். எங்களால் செய்யக்கூடிய சில விடயங்கள்.

1.    மரங்களை நடுங்கள். எங்களால் ஆயிரம், இரண்டாயிரம் மரங்களை நட முடியாவிட்டாலும் ஆளுக்குப் பத்து மரங்களையாவது நட முயற்சிக்கலாம். அல்லது உங்கள் வீட்டருகில் வீதியோரம் யாராவது நட்ட மரத்தைப் பராமரிக்கலாம்.

2.    உங்கள் சூழலில் உள்ள சிறிய, பெரிய நீர்நிலைகளை சீரமைத்துப் பராமரியுங்கள்.

3.    கோடை காலங்களில் வீட்டருகாமையில் சிறிய நீர்த்தொட்டி அமைத்து சிறிய விலங்குகள், பறவைகள் தாகம் தீர்க்க உதவுங்கள்.

4.    முடிந்தால் உங்கள் வீட்டில் பழமரங்கள் நடுங்கள். அவை பல விலங்குகள் பறவைகள் பசிதீர்க்க உதவும்.

5.    வீட்டில் பூந்தோட்டம் அமையுங்கள். அது விவசாயத்தின் தோழர்களான தேனிக்கள், வண்ணத்துப் பூச்சி இனங்கள் அழியாமல் பாதுகாக்க உதவும்.

இவற்றையெல்லாம் உங்களால் செய்ய முடியாவிட்டால், குறைந்தது பின்வரும்  விடயங்களைச் செய்வதன் மூலமும் இந்த பூமித் தாய்க்கு உதவலாம்.

1.    பிளாஸ்டிக் பாவனையை நிறுத்துங்கள். முடியாவிட்டால் அதன் பாவனையை முடிந்தவரை குறையுங்கள்.

2.    குப்பைகளைக் கண்டபடி வீசுவதை நிறுத்துங்கள். குப்பைகளைத் தரம் பிரித்து அவற்றுக்கு உரிய தொட்டிகளில் போடுங்கள்.

3.    உங்களை வீட்டில் சேரும் குப்பைகளை அடிக்கடி எரிக்கும் பழக்கம் இருந்தால் அவற்றை நிறுத்துங்கள். உக்கக்கூடிய குப்பைகளை உங்கள் வீட்டுத் தோட்டத்திற்கு பசளையாக மாற்றுங்கள்.

4.    தேவைக்கு அதிகமாக நுகர்வுப் பொருட்களை வாங்காதீர்கள். திட்டமிட்டு வாழப்பழகுங்கள்.

5.    காட்டில் வாழவேண்டிய பறவைகள், விலங்குகளை வளர்ப்புப் பிராணியாக வளர்க்கிறோம் என்று சொல்லிக் கொண்டு அவற்றின் இனம் அழிவதற்குத் துணை போகாதீர்கள்.

6.    2 – 3 வருடத்துக்கு ஒருமுறை பொருட்களை மாற்றும் பழக்கம் இருந்தால் அதைத் தயவுசெய்து குறைத்துக் கொள்ளுங்கள். ஒரு பொருளை வாங்கினால் அதன் உச்ச பலனைப் பெறுவதுதான் சிறந்த நுகர்வுப் பண்பாக இருக்க முடியும்.

7.    குறுந்தூரப் பயணங்களுக்கு ( 2 km க்கு குறைவானவை) துவிச்சக்கர வண்டியைப் பயன்படுத்துங்கள் அல்லது நடந்து செல்லுங்கள்.

 

இது எமது பூமி. இதுதான் எங்களின் வீடு.  நாம் வாழுவதற்கு தேவையான அனைத்தையும் இங்கேயே பெற்றுக் கொண்டோம். நாம் செய்த சேதங்களை நாங்கள்தான் சரிசெய்ய வேண்டும்.  எங்கள் வீட்டைக் கொளுத்திவிட்டு ஓடிப்போய்க் குடியிருக்க எங்களுக்கு வேறு வீடு கிடையாது. நாம் நினைத்தால் இதனைச் சரி செய்ய முடியும். எங்களை ஒவ்வொருவரும் செய்யக்கூடிய விதத்தில் எங்கள் பங்களிப்பை வழங்குவோம்.

 

https://ourworldindata.org/deforestation

https://www.theguardian.com/environment/2018/oct/30/humanity-wiped-out-animals-since-1970-major-report-finds

Friday, 16 April 2021

 தேங்காய் எண்ணெயும் இரு கோடுகளும்

 


ஒரு தாளில் உள்ள ஒரு கோட்டை அழிக்காமல் சிறியதாக்குவது எப்படி? இதற்கு விடை உங்களில் பலருக்கு தெரியும் என்று நான் நம்புகிறேன். இன்றைய அரசியல் சூழலிலும் இந்த இருகோடுகள் தத்துவம் பல நாடுகளில் வெற்றிகரமாக பின்பற்றப்படுகிறது. சரி, தேங்காய் எண்ணெய்க்கும் இந்த இரண்டு கோடுகளுக்கும் என்ன தொடர்பு? இந்தக் கட்டுரையின் இறுதியில் உங்களுக்கே புரியும் !

 

கடந்த ஒரு வாரமாக அரசியல்வாதிகள் மட்டத்திலும் மக்கள் மத்தியிலும் முக்கிய பேசுபொருளாகி இருப்பது இறக்குமதி செய்யப்பட்ட தேங்காய் எண்ணெய்க்குள் புற்றுநோய் ஏற்படுத்தக்கூடிய இரசாயனம் கலந்திருப்பதாக எழுந்த குற்றச்சாட்டும் அதன் பின்னரான வாதப் பிரதிவாதங்களும்  ஆய்வுகூட அறிக்கைகளும் அவை தொடர்பாக பல்வேறு அமைச்சர்கள், அதிகாரிகளின் முன்னுக்குப் பின்னான அறிக்கைகளுமே.

 

அஞ்சுதல் அஞ்சாமை பேதைமை என்ற வள்ளுவன் வாக்கு என்றும் உண்மையானதே. இந்த நச்சுத்தொற்று விடயத்திலும் நாங்கள் அஞ்ச வேண்டியதற்கு அஞ்சுவது சரியானதே. ஆனால் இந்தக் இரண்டு வார காலப்பகுதியில் தேங்காய் எண்ணெய் விவகாரம் கையாளப்படும் விதம் பல்வேறு கேள்விகளையும் எழுப்புகிறது.

 

முதலில் இந்த எண்ணெய் விவகாரத்தில் சொல்லப்படும் இரசாயனக் கலப்பு பற்றி சுருக்கமாகப் பார்ப்போம். Aspergillus என்ற பூஞ்சணம் (Fungi) தேங்காய் கொப்பறாவில் வளரும்போது அது aflatoxin என்ற சுரப்பை வெளியேற்றுகிறது.கொப்பறாவில் வளரும் பூஞ்சனத்தின் வகையைப் பொறுத்து B1, B2, G1 & G2 என நான்குவகையான aflatoxins இருப்பதாக விடய ஞானமுள்ளவர்கள் கூறுகிறார்கள். இந்த aflatoxins கொப்பறாவில் இருந்து எண்ணெய் தயாரிக்கும்போது அழிவடையாது எண்ணெய்க்குள்ளும் போய்விடுகிறது. குறித்த பங்கசினால் சுரக்கப்படும் இந்த நச்சுப் பதார்த்தம் நாம் தேங்காய் எண்ணெய்யை உணவுடன் பயன்படுத்தும்போது  எமது உடலுக்குள் சென்று எமது ஈரலை பாதிக்கக்கூடியதாக இருக்கிறது. இந்தப் சுரப்பு ஒரு carcinogenic பதார்த்தமாகும். அதாவது இது எமது உடலில் கான்சரை ஏற்படுத்தக்கூடியது.

 

ஆனால் இவ்வாறு aflatoxin உள்ள எண்ணெயை ஓரிரு தடவைகள் மட்டும் உட்கொள்வதால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுவிடாது. ஆனால் தொடர்ந்து பயன்படுத்தும்போது எமது ஈரலைப் பாதித்து ஈரல் அழற்சி, மஞ்சள் காமாலை, அல்லது ஈரல் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடும். ஆனால் அதேநேரம் நீங்கள் பாவிக்கும் எண்ணெயில் உள்ள aflatoxin இன் அளவு குறைவாக இருந்தால் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தாது.

கடந்த ஒரு வாரமாக அமைச்சர்களும் ஊடகங்களும் அல்லோலகல்லோலப்படுவதைப் பார்த்தால் இந்த aflatoxin புதிதாக கண்டறியப்பட்ட ஒரு விடயமோ என்று ஒரு பொதுமகன் நினைக்கக்கூடும். ஆனால் இதில் வேடிக்கையான விடயம் என்னவென்றால், இந்த aflatoxin தேங்காய் எண்ணெயில் இருப்பதை 1980ம் ஆண்டளவிலேயே இலங்கையில் தென்னை உற்பத்திப் பொருட்கள் தோடர்பான ஆராய்ச்சி செய்தவர்கள் ஆராய்ந்து ஆய்வுக் கட்டுரைகளும் வெளியிட்டிருக்கிறார்கள். அதோடு, சுத்திகரிக்கப்படாத தேங்காய் எண்ணெயில் உள்ள இந்த நச்சுப் பொருளை solar radiation மூலம் சுதிகரிக்கலாம் என்பதையும் ஒரு முன்னோடி பரிசோதனை மூலம் நிரூபித்து ஆய்வுக் கட்டுரையும் சமர்ப்பித்துள்ளனர். (U. SamarajeewaC. L. V. JayatilakaA. RanjithanT. V. Gamage & S. N. Arseculeratne).

 

 இந்த ஆய்வில் ஈடுபட்டவர்களில் ஒருவரான பேராசிரியர் உபாலி சமரஜீவா, தனது கருத்தை கடந்த வாரம் Island பத்திரிகையில் தனது கட்டுரையில் மீண்டும் வலியுறுத்தி உள்ளதுடன், aflatoxin உள்ள எண்ணெயை தற்போது இலங்கையில் உள்ள வசதிகளைப் பயன்படுத்தி சுத்தமாக்க முடியும் என்பதையும் சொல்லியிருக்கிறார். (இணைப்பு – கீழே comment இல்). அத்தோடு அவர் அரசின் கையாலாகத்தனத்தையும் கேலி செய்யவும் தவறவில்லை.

 

 இதைவிட Nuwan B.Karunarathna, Chandima J.Fernando, D.M.S.Munasinghe , RuchikaFernando ஆகியோர் 2019 ஜூலை மாதம் வெளியிட்ட ஆய்வுக் கட்டுரையில் இலங்கையில் பாவனையில் உள்ள தேங்காய் எண்ணெயில் கிட்டத்தட்ட 38% எண்ணெயில் aflatoxins இருப்பதாகவும், அதன் அளவு 2.25 to 72.70μg/kg ஆக இருப்பதாகவும் Aflatoxin B1 இன் அளவு 1.76 to 60.92 μg/kg ஆக இருப்பதாகவும் அறிக்கைப்படுத்தியுள்ளனர். மறுபுறத்தில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத் தலைவர் Dr. Anuruddha Padeniyaவும் இலங்கையில் விற்கப்படும் தேங்காய் எண்ணெயில் 80% ஆனவை சுத்தமற்றவை என்று கடந்தவாரம் Island பத்திரிகைக்குத் தெரிவித்துள்ளார்.

 

அதாவது, இந்த aflatoxin விடயம் ஒன்றும் இலங்கைக்குப் புதிய விடயம் இல்லை என்பதும், aflatoxin இன் பாதிப்பைக் குறைக்கும் சுத்திகரிப்பு வசதி இலங்கையிலேயே இருப்பதாகவும் கொள்ள முடியும். அதேநேரம் aflatoxin இன் அளவு அதிமாக இருக்கும்போதே அது உடலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதையும், அவ்வாறு உயர்ந்த அளவில் aflatoxin அதிகம் உள்ள எண்ணெயை நீண்டகாலம் பயன்படுத்தும்போதே பாதிப்பு அதிகமாக இருக்கும் என்பதையும் புரிந்து கொள்ளலாம்.

 

இனி இந்த விவகாரத்தில் என்ன வில்லங்கம் இருக்கிறது என்று பார்ப்போம்.

1.       இந்த விவகாரம் கடந்த ஒரு வாரமாகவே சூடு பிடித்திருந்தாலும், கடந்த மார்ச் 23ம் திகதியே All Ceylon Traditional Coconut Oil Producers’ Association ஒரு ஊடக சந்திப்பில், 13 கொள்கலன்களின் இறக்குமதி செய்யப்பட்ட பாவனைக்குதவாக தேங்காய் எண்ணெய் சந்தைக்குள் விடப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தியது. அதன் தலைவர் Buddhika De Silva இதே நச்சுப் பதார்த்தம் இறக்குமதி செய்யப்பட்ட வேறு சமையல் எண்ணெய்களிலும் இருப்பதாகக் கூறினார். இதில் கேட்கப்பட வேண்டிய கேள்வி – எந்த பரிசோதனையும் இல்லாது அவர் எப்படி இரண்டு வாரங்களுக்கு முன்னரே இந்தக் குற்றச் சாட்டை முன்வைத்தார்? எங்கிருந்து அவர் தரவுகளைப் பெற்றார்?

 

2.       ஆரம்பத்தில் இந்தக் குற்றச்சாட்டை மறுத்த சுங்கத் திணைக்களம், தொற்று ஏற்பட்டதாக சொல்லப்படும் எண்ணெய் தங்கள் காவலிலேயே இருப்பதாகக் கூறிவந்தது. ஆனால் இந்தவாரம் வெளியிட்ட அறிக்கையில், தொற்று ஏற்பட்ட எண்ணெய் விநியோகச் சந்தைக்குள் போயிருக்கலாம் என்று சொல்லுகிறது. ஒரு பொறுப்புள்ள அரச திணைக்களம் ஏன் இவ்வாறு முன்னுக்குப் பின் முரணான கருத்துகளைத் தெரிவிக்க வேண்டும்?

 

3.       சுங்கத் திணைக்களம் மேற்சொன்னபடி முரண்பட்ட கருத்தை தெரிவித்துள்ள நிலையில், அமைச்சு மட்டத்தில், இன்னமும் பாவனைக்குதவாக எண்ணெய் சந்தைக்குள் விடப்படவில்லை என்றும் கொள்கலன்கள் அனைத்தும் சுங்கத் திணைக்கள சேமிப்பு கிட்டங்கியில் இருப்பதாக தெரிவித்துள்ளது. ஆனால் சுங்கத் திணைக்கள தலைமை அதிகாரியோ எண்ணெய் கொள்கலன்கள் அவற்றை இறக்குமதி செய்த நிறுவனங்களின் கிட்டங்கிகளில் இருப்பதாகச் சொல்கிறார். ஆனால் ஏப்ரல் முதலாம் திகதி அதிகாரிகள் தம்புள்ளை வர்த்தக வலயத்தில் ஒரு எண்ணெய் கொள்கலன் கொண்ட பார ஊர்தியைகே கைப்பற்றி இருக்கிறார்கள். அதேபோல தங்கொட்டுவ பகுதியில் தரித்து நின்ற இரண்டு பார ஊர்திகளையும் மார்ச் 31 ம் திகதி போலீசார் கைப்பற்றி இருக்கிறார்கள். அப்படியென்றால் சுங்க அதிகாரி சொல்வதுதான் உண்மை என்றுதானே கருத வேண்டியுள்ளது? (April 4 – Sunday Times)

 

4.       தம்புள்ளையிலும் தங்கொட்டுவையிலும் எண்ணெய் கொள்கலன்கள் கைப்பற்றப்பட்ட நிலையில் சுங்கத் தலைமை அதிகாரி இப்போது, எண்ணெய் இறக்குமதியாளர்கள் உண்மையில் குறித்த சுத்தமற்ற எண்ணெய்யை சந்தைக்குள் விட்டுவிட்டார்களா என்று விசாரித்து வருவதாகக் தெரிவித்துள்ளார். அப்படியென்றால் இதே அதிகாரி என்ன அடிப்படையில் கடந்த வாரம், கொள்கலன்கள் எல்லாம் தமது கட்டுப்பாட்டில் இருப்பதாகத் தெரிவித்திருந்தார்?

 

5.       பொது சுகாதார ஆய்வாளர்கள் சங்கத் தலைவர் உபுல் ரோகண (Upul Rohana) ஏற்கனவே இந்த Aflatoxinஉள்ள எண்ணெய் சந்தைக்குள் விடப்பட்டிருந்தால், அதை பரிசோதனைகள் மூலம் உடனடியாகக் கண்டறிவது கடினம் என்று கூறியுள்ளார். இதுவரை நாட்டின் பல்வேறு இடங்களிலிருந்து நூற்றுக்கு மேற்பட்ட எண்ணெய் மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ள போதிலும் அவற்றின் முடிவுகளைப் பெற ஒரு மாதத்திற்கும் மேலாக காத்திருக்க நேரிடும் என்று சொல்கிறார். இதற்கு அரச ஆய்வுகூட நடைமுறைகள் மெதுவாக செயல்படுவதே காரணம் என்றும் தெரிவித்துள்ளார். (ஏப்ரல் 4ம் திகதி (Sunday Times)

 

6.       குறித்த தொகுதியில் இறக்குமதி செய்யப்பட்ட தேங்காய் எண்ணெய் சந்தைக்குள் விடப்பட்டு விட்டதா என்பதை கண்டறிவதில் உண்மையில் மிகப்பெரிய சிக்கல் உள்ளது. இலங்கையில் ஏற்கனவே விற்கப்படும் தேங்காய் எண்ணெயில் 80% ஆனவை சுத்தமற்றவை (அரச வைத்திய அதிகாரிகள் சங்கத் தலைவர் Dr. Anuruddha Padeniya வின் கூற்று) என்று சொல்லப்படும் நிலையில் தற்போது எடுக்கப்படும் மாதிரிகள் புதிதாக சந்தைக்கு வந்த எண்ணெயா அல்லது ஏற்கனவே சந்தையில் காணப்பட்ட Aflatoxin கலந்துள்ள எண்ணெயா என்பதைக் கண்டறிய யாரிடமும் எந்த மந்திரக் கோலும் இல்லை என்பதே யதார்த்தம். மேலும் சில அதிகாரிகள் சந்தேகிப்பதுபோல குறித்த தொகுதியில் வந்த எண்ணெய் ஏற்கனவே சந்தையில் இருந்த எண்ணெயுடன் கலக்கப்பட்டிருந்தால் Aflatoxin சதவீதம் ஆபத்தான அளவில் இல்லையென்று  பரிசோதனை முடிவில் சொல்லிவிடுவதற்கும் சந்தர்ப்பம் உள்ளது.

 

7.       பிந்திய செய்திகளின்படி சுங்கத் தினைகலப் பணிப்பாளர் விஜித ரவிப்ரிய (Majar General Vijitha Ravipriya) மேற்படி கொள்கலன்கள் எந்த நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டனவோ அந்த நாட்டிற்கு திருப்பி அனுப்பப்படும் என்று சொல்லியுள்ளார். Aflatoxin தொடர்பாக 35 வருடங்களுக்கு முன்பிருந்தே ஆய்வு செய்த, அதனை எண்ணெயிலிருந்து நீக்கும் முறையையும் பரிசோதனை செய்த அனுபவமுள்ள பேராசிரியர் சமரஜீவ போன்றவர்கள் இந்த எண்ணெய்யை சுத்தமாக்கும் வசதிகள் இலங்கையிலேயே இருப்பதாகக் தெரிவித்துள்ள நிலையில் எதற்காக அவசரமாக இந்தக் கொள்கலன்களை அரசு திருப்பி அனுப்ப நினைக்கிறது?

 

8.       இதைவிட இந்தத் தொகுதி எண்ணெய்க்கான அனுமதி 2016 வழங்கப்பட்டதாகவும் அந்தத் தொகுதி எண்ணெயே இந்த வருடம் இறக்குமதி செய்யப்படதாகவும் உறுதிப்படுத்தாக ஒரு செய்தியும் உலவவிடப்பட்டுள்ளது. இதன்மூலம் அரசு இந்தப் ஆனால் அதில் உண்மை இருக்க வாய்ப்புக் குறைவு. ஏனெனில் 2017 வழமையை விட 20% அதிகமாக 10,000 MT எண்ணெயும் 2019ம் ஆண்டு அதைவிட அதிகமாக 30,000 MT எண்ணெயும் இறக்குமதி செய்யப்படும் இருக்கும் நிலையில், 2016 நல்லாட்சி அரசினால் வழங்கப்பட்ட அனுமதியின் கீழ் இந்த வருடம் வந்த எண்ணெய்தான் இது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?

 

இவ்வளவு வில்லங்கமான விடயங்கள் இடம்பெறுவது ஒருபுறம் இருக்க இது தொடர்பாக அரசின் பிரதிநிதிகள் தெரிவித்த கருத்துக்களை நினைவுபடுத்திப் பார்த்தால் உங்களுக்கு பெரும் ஆச்சரியம் ஏற்படும் என்பதில் ஐயமில்லை.

1.       கைத்தொழில் அமைச்சர் விமல் வீரவன்ச - தேங்காய் எண்ணெயில் புற்றுநோயை ஏற்படுத்தும் மூலக்கூறு உள்ளதாகப் பரப்பப்படும் செய்திகளின் பின்புலத்தில் பாம் ஒயில் வர்த்தகர்களே இருக்கிறார்கள்.  பாம் ஒயில் மீது கொண்டுவரப்பட்ட தடை காரணமாகவே இவ்வாறு செய்கிறார்கள் என்று அவர் தெரிவித்தார்.

2.       இளைஞர்கள், விளையாட்டு அலுவல்கள் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ  - புற்றுநோய் ஏற்படுத்தக்கூடிய தேங்காய் எண்ணெய் விவகாரம் பொய்யென்றால், அதன் பின்னணியிலுள்ள சக்திகள் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும்.

3.       இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன - இறக்குமதி செய்யப்பட்ட அனைத்து தேங்காய் எண்ணெய் மாதிரிகளும் தரமற்றவை என இலங்கை தர கட்டளைகள் நிறுவகத்தின் பணிப்பாளர் நாயகம் உறுதிபடுத்தியுள்ளார்.

4.       State Minister அருந்திக பெர்னான்டோ – சுத்திகரிக்கப்படாத தேங்காய் எண்ணெய் இறக்குமதி செய்யப்படுவது இனி நிறுத்தப்படும். உள்ளூரில்  தூய தேங்காய் எண்ணெய்யை உற்பத்தி செய்து  மக்கள் தேவையை பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

5.       வர்த்தக அமைச்சர்  பந்துல குணவர்தன (மார்ச் 26) - சர்ச்சைக்குரிய தேங்காய் எண்ணெய் உள்ள சேமிப்புக் கிட்டங்கி நுகர்வோர் அதிகார சபையால் சீல் வைக்கப்பட்டுள்ளது. முறையான பரிசோதனையின் பின்னர் அனுமதி பெற்ற பின்னரே அடுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

6.       Minister Dr. Ramesh Pathirana (March 30) – இறக்குமதி செய்யப்பட்ட தேங்காய் எண்ணெயில் கான்சர் வரக்கூடிய aflatoxin இருப்பதான சதி கோட்பாடு பாம் எண்ணெய் உற்பத்தியாளர்களால் உருவாக்கப்பட்டது என்ற குற்றச்சாட்டை நான் நிராகரிக்கவில்லை.

7.       அமைச்சர் உதய கம்மன்பில  - குறித்த தொகுதி எண்ணெய் நான்கு கம்பனிகளாலேயே இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. ஆனால் அவை இன்னமும் சந்தையில் விடப்படவில்லை.

 

 இந்த ஒரு தேங்காய் எண்ணெய் விவகாரம் ஒரு சாதாரண விடயம் இல்லைதான். சரியான நடவடிக்கை எடுக்கவேண்டியது அவசியம்தான். ஆனால் இப்படி இத்தனை திணைக்களங்களும் ஆளுக்காள் வேறுவேறு கருத்துககளைச் சொல்வதும் ஏழு அமைச்சர்கள் இதுபற்றி கரிசனமாக கருத்துத் தெரிவிப்பதும் ஏன்? இதன்மூலமாக இவர்கள் எந்தப் பெரிய கோட்டை சிறியதாக்க முயற்சிக்கிறார்கள்?

 

அண்மையில் இலங்கை சம்பந்தப்பட்ட சில முக்கியமான விடயங்கள் உங்களுக்கு நினைவிருக்கும் என்று நம்புகிறேன்!

1.       UNHRC வாக்கெடுப்பில் இலங்கைக்கு எதிராக அதிக வாக்குகள் கிடைத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இது தொடர்பாக சிலஅமைச்சர்கள் தமது கூட்டல் கழித்தல் திறமைகளைக் காட்டியபோதும் மக்களும் ஊடகங்களும் அரசைக் கழுவி ஊற்றிவிட்டார்கள்.

2.       இலங்கை வரலாற்றில் முதல் முறையாக இலங்கை ரூபாவின் பெறுமதி தாறுமாறாக விழுந்து ஒரு அமெரிக்க டொலர் Rs.200.00 ஐத் தாண்டிவிட்டது.

3.       சிங்கராஜ வனத்தில் அரச அனுசரணையோடு நடாத்தப்பட்ட காடழிப்பு, பாக்யா அபேரத்ன என்ற இளம்பெண்ணின் துணிச்சலால் வெளிக் கொணரப்பட்டு தற்போதைய அரசின் இயற்கையைப் பாதுகாக்கும் உறுதிமொழி கேள்விக்கும் கேலிக்கும் உட்படுத்தப்பட்டது.

4.       நீர்கொழும்பில் வனப்பகுதியில்விளையாட்டு மைதானம் அமைக்கும் திட்டம்,  நீர்கொழும்பு நீரேரித் திட்டத்தினால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புத் தொடர்பாக வனவியல் அதிகாரி Devani Jayathikala தொடர்ந்தும் தெரிவித்துவரும் எதிர்ப்பும் அரசுக்கு பெரும் நெருக்கடியைக் கொடுத்திருந்தது.

5.       அதேபோல சீனா அன்பளிப்பாகக் கொடுத்த 600,000 Sinapharm வக்சின்கள் தொடர்பாகவும் அதன் பாதுகாப்பு அம்சங்கள் தொடர்பாக இலங்கை மருத்துவ உலகில் அமைச்சருக்கும் மருத்துவ அதிகாரிகளுக்கும் இடையிலான இழுபறியும் இந்தக் காலப்பகுதியில்தான் நடைபெற்று வந்தது.

 

யோசித்துப் பாருங்கள் !! மேற்கூறிய ஐந்து விடயங்கள்தானே இரண்டு வாரங்களுக்கு முன்னர் பெரிய கோடுகளாக இருந்தன. ஆனால் இன்று?

 

இன்று அதனருகே “தேங்காய் எண்ணெய் – Aflatoxin  - புற்றுநோய் – மரணம்” என்ற பெரிய கோட்டை அரசு கீற முயல்கிறதோ என்ற கேள்வி எழுகிறது. இந்த ஒரு விவகாரத்திற்கு தினமும் ஒரு அறிவித்தல், அடிக்கடி ஊடக சந்திப்புகள், ஏழு அமைச்சர்கள் கருத்துத் தெரிவிப்பு, அதிகாரிகள் முன்னுக்குப் பின்னான கருத்துத் தெரிவிப்பு என பெரிய கோடு கீறும் வேலைதானா  என்ற கேள்வி எழுகிறது! உங்களில் பலருக்கும் இதே கேள்விகள் எழுந்திருக்கக்கூடும் என்றே நம்புகிறேன்.

- வீமன் -