Links

Saturday, 10 July 2021

 

மன அழுத்தமும் தமிழ்ச் சமூகமும்

=================================


கடந்த வருடம் இதே காலப்பகுதியில் தமிழர் மத்தியில், குறிப்பாக ஐரோப்பியத் தமிழர்கள் மத்தியில் பரபரப்பாகப் பேசப்பட்ட விடயம், இங்கிலாந்தில் தன் மகளையும் கொன்று தன்னையும் மாய்த்துக் கொண்ட  ஒரு தமிழ் பெண்மணி பற்றியதாகும். குறிப்பாக அந்த ஐந்து வயதுச் சிறுமியின் உயிரிழப்பு உலகெங்கும் உள்ள பல தமிழர்களைக் கவலை கொள்ள வைத்தது.

 

கடந்த வருடம் நடந்த அந்தத் துயரமான நிகழ்வு தொடர்பாக பலரும் தமது மனக் கவலையை    வலைத்தளங்களில் பகிர்ந்திருந்த அதேவேளை, சில பக்குவமற்ற, பொறுப்பற்ற, வெறும் உணர்ச்சிவசப்பட்ட பதிவுகளையும் பார்க்க நேர்ந்தது. அவர்களில் சிலர்,  மனிதர்களுக்கு பண ஆசை மற்றும் பேராசை கூடியதாலேயே மன அழுத்தம் வருகிறது என்றும், அவ்வாறு மனவழுத்தம் வந்தவர்கள் சாக விரும்பினால் பிள்ளைகளை வேறு யாரிடமாவது கொடுத்துவிட்டு தாங்கள் மட்டும் செத்துப் போய்விட வேண்டும் என்ற பொருள்பட பதிவிட்டிருந்தார்கள். அதற்கும் மேலாக  தமிழராகப் பிறந்தவர்கள் இப்படிச் செய்வது தமிழினத்துக்கு பெரும் அவமானம், கேவலம் என்றும் சிலர் சொல்லியிருந்தார்கள்.

 

இவ்வாறான கொலை, தற்கொலை முயற்சிகள் கடந்த காலங்களிலும் நடைபெற்றுள்ளன. இப்போதும் நடைபெறுகின்றன.

·      2006 இல் கனடாவில் 30 வயதான தமிழ்ப் பெண் தனது இரண்டு வயது மற்றும் மூன்று மாதக் குழந்தையைக் கொன்றுவிட்டுத் தற்கொலைக்கு முயன்று உயிர் தப்பினார்.

·      2008 இல் இங்கிலாந்தில் 36 வயதான ஒரு தமிழ் பெண் தன இரண்டு பிள்ளைகளைக் கொன்றுவிட்டு தற்கொலை செய்ய முயன்றார். மூன்றாவது (ஆறு மாதக்) கைக்குழந்தை உயிர் தப்பிவிட்டது. பின்னர், அந்தப் பெண் மனநலக் காப்பகத்திற்கு அனுப்பப்பட்டார்.

·      2014 இல் இங்கிலாந்தில் 33 வயதான தமிழ் பெண் தனது இரண்டு ஆண் குழந்தைகளையும் கொன்றுவிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

·      2020 அக்டோபர் மாதம் 36 வயது மனைவி, 42 வயதுக் கணவன் மற்றும் மூன்று வயது மகன் ஆகியோர் இறந்து காணப்பட்டனர். இது கொலை மற்றும் தற்கொலை சம்பந்தப்பட்டு இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.

·      2021 ஜூன் மாதம் (போன மாதம்) இங்கிலாந்தில் 36 வயதுடைய ஒரு இந்தியத் தமிழ்ப் பெண், தான் கோவிட் வந்து இறந்துவிட்டால் மகளைப் பார்த்துக்கொள்ள யாரும் இல்லை என்ற அச்சத்தில் தனது ஐந்து வயது மகளைக் கொன்றிருக்கிறார். இப்போது மனநலக் காப்பகத்தில் இருக்கிறார்.

 

இவ்வாறான பல மரணங்கள் வருடாந்தம் இலங்கை, இந்தியா, பங்காளதேஷ் போன்ற நாடுகளிலும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. ஆனால் அன்றும் சரி இன்றும் சரி தமிழ் மக்களின் எதிர்வினைகள் குறித்த ஆண் அல்லது பெண்ணைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்துவதாகவே இருக்கின்றன. அதிலும் சிலர் மிக மோசமான முறையில் திரும்பத் திரும்ப “உங்களுக்கு மனவழுத்தம் இருந்தால் செத்துத் தொலையுங்கள், பிள்ளைகளைத் தொட உங்களுக்கு உரிமையில்லை, நீங்கள் எங்கேயாவது போய்ச் சாகுங்கள்” என்று சொல்கிறார்கள்.

 

இவ்வாறு இவர்கள் சமூக வலைத் தளங்களில் பகிரங்கமாக  மன அழுத்தம் உள்ளவர்களைத் தற்கொலைக்குத் தூண்டும் குற்றத்திற்காக அவர்கள் வாழும் நாட்டின் பொலிசார் கைது செய்ய முடியும் என்பது அவர்களுக்குத் தெரியுமா என்று தெரியவில்லை.

 

இவ்வாறு பொறுப்பற்ற வகையில் வீடியோக்கள் வெளியிடும் இவ்வாறான நபர்களுக்கு மனவழுத்தம் தொடர்பாக எந்தவிதமான புரிதலும் இல்லை என்றே புரிகிறது. தனிமனித உணர்வுகள், பிரசவத்தின் பின்னர் ஏற்படக்கூடிய பிரச்சனைகள், குடும்பத்தில் இருக்கக்கூடிய சிக்கல்கள், இந்த pandamic காலத்தில் ஏற்படக்கூடிய பொருளாதாரச் சிக்கல்கள், அதனால் ஏற்படக்கூடிய பிரச்சனைகள்  என்பவற்றைப் புரிந்து கொள்ள முயற்சி செய்ததாகவும் தெரியவில்லை. இவ்வாறான அரைவேக்காட்டு சமூகப் போராளிகளின் தவறான செய்தியைக் காவும் வீடியோக்களைக் கண்ணை மூடிக்கொண்டு 400 க்கும் மேற்பட்டவர்கள் ஒரு வாரத்தினுள் பகிர்ந்துள்ளமை மிகவும் கவலை தருகிறது. இது எங்களில் பலர் உணர்ச்சிகளால் உந்தப்பட்டு ஆட்டு மந்தைகளாக செயற்படும் நிலையில்தான் இருக்கிறார்கள் என்பதைக் காட்டுகிறது.

 

நீண்ட வரலாறு, மொழிச் செழுமை, கலாச்சாரம் போன்ற பல பெருமைகளைக் கொண்டிருக்கும், அவற்றைக் கொண்டாடும் தமிழர்கள் மத்தியில் துரதிர்ஷ்டவசமாக மனநலம், உளவியல் தொடர்பாக போதிய விளக்கம் போதுமானதாக இருப்பதாகத் தெரியவில்லை. சிலருக்கு  அதுபற்றிய அறிவு இருந்தாலும் அவர்களின் அறிவும் நுனிப்புல் மேய்ந்த அறிவாகத்தான் இருக்கிறது.

 

தமிழர் சமூகங்களில் இவ்வாறான பார்வை இருப்பதற்கு, எமது சமூகம் மன நோய் பற்றிப் பேசுவதை தவிர்க்க வேண்டிய ஒரு விடயமாக வைத்திருந்ததே  முக்கிய காரணமாக இருக்க வேண்டும். இன்னொரு வகையில் சொல்வதானால் தனது குடும்பத்தில் ஒருவருக்கு மனநோய் இருந்தால் அதை வெளியில் சொல்வதை அவமானமாகக் கருதுவதும் உரிய ஆலோசனை, சிகிச்சையினைப் பெறாமல் தவிர்க்கும் நிலையும்தான் இன்றும் பல குடும்பங்களில் இருக்கிறது.

 

இன்றைய சமூகத்தில் பிள்ளைகளாகவே பெற்றோரிடம் சென்று “எனக்கு மன அழுத்தம் இருக்கிறது, மனநல மருத்துவரைப் பார்க்க வேண்டும்” என்றாலோ “எனக்கு கவுன்சிலிங் தேவை” என்று சொன்னாலோ, பல பெற்றோர் அதைக் கணக்கெடுப்பதில்லை. “கண்டதையும் வாசித்துவிட்டு உளறாதே, உனக்கு ஒரு பிரச்சனையும் இல்லை” என்று தாங்களே வைத்திய ஆலோசகராக மாறிவிடும் பெற்றோர்தான் அதிகம்.

 

கடந்த காலங்களில், மனநோய் வந்தவர்களைக் குணப்படுத்த முடியாது. அவர்கள் இனி சமூகத்துக்கு பயன்படமாட்டார்கள் என்ற எண்ணமே எங்களில் பலருக்கும் இருந்திருக்கிறது. மனநலம் பாதிக்கப்பட்டவரை வீட்டினுள் அடைத்து வைத்தல், கோவிலுக்கு கூடிச் சென்று மந்திரித்தல், பேய் விரட்டுதல், மனநலம் அதிகம் பாதிக்கப்பட்டால் கைகால்களைச் சங்கிலிகளால் பிணைத்து வைத்தல் என்றுதான் செய்து வந்திருக்கிறார்கள்.

 

இன்றைய சூழலில் எங்கள் சமூகத்திலேயே உளவளத் துறையில் எத்தனையோ நிபுணர்கள் வந்துவிட்ட நிலையில் எமது சமூகம் இனியாவது மனநலம் சார்ந்த விடயங்களை வெளிப்படையாகக் கதைக்க முன்வர வேண்டும். சமூக வலைத் தளங்களில் இது தொடர்பாக உணர்ச்சிவசப்பட்ட கருத்துக்களைப் பரப்புவதைத் தவிர்த்து, அறிவுபூர்வமான விடயங்களைப் பகிர வேண்டும். மக்கள் உளவியல் பிரச்சனை தொடர்பாகத் தமது அறிவை மேலும் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

 

ஒவ்வொரு நாட்டிலும் இயங்கும் தமிழ் வானொலிகளும் இந்தப் பிரச்சனைகளை அடிக்கடி உரையாட வேண்டும். பத்திரிகைகள் இந்த விடயம் தொடர்பாக அதிக விழிப்பூட்டல் கட்டுரைகளை வெளியிட வேண்டும். தொலைக்காட்சி நிறுவனங்களும் வானொலிகளும் துறைசார் நிபுணர்களை அடிக்கடி அழைத்து அவர்கள் மூலம் தமிழ் மக்கள் மத்தியில் மனநலப் பாதிப்புகள், மனநல பாதிப்புக்குள்ளானவரைப் பராமரித்தல், ஆதரவாக இருத்தல் தொடர்பாக தமிழ் மக்களைத் தொடர்ந்து அறிவூட்ட வேண்டும்.

- வீமன் - 

No comments:

Post a Comment