யானைகளுக்கும் சுதந்திரம் கொடுப்போம்!
==================================
காடுகளின் ராஜாவாக சிங்கத்தை கற்பனை செய்து மனிதர்கள் கதைபேசி வந்தாலும், காட்டில் உள்ள விலங்குகளில் யானைகளே கம்பீரமான விலங்குகள். அதுமட்டுமன்றி யானைகள் காடுகளின் பல்லினத்தன்மை மற்றும் சூழல் சமநிலையைப் பேணுவதிலும் ஏனைய சிறிய விலங்கினங்களின் வாழ்வியலிலும் வேறு விலங்குகள் செய்ய முடியாத பங்களிப்பை வழங்குகின்றன. இப்படி காட்டில் உள்ள தாவரங்கள், விலங்குகளின் பல்லினத்தன்மையை பேண உதவும் யானைகள்தான் உண்மையில் காட்டின் ராஜாக்கள்.
இன்று நாம் இந்தியாவிலும் இலங்கையிலும் செலவு செய்து உருவாக்கி காடுகளில் வீசும் விதைப் பந்துகளை இயல்பாகவே காலம் காலமாகச் செய்து வரும் விலங்குகள்தான் இந்த யானைகள். அதுவும் அவை கூட்டமாக வருடம் முழுவதும் மிக நீண்ட தூரம் பயணிப்பவை என்பதனால் விதைகளை மனிதர்களைவிட வேகமாகவும் வினைத்திறனுடனும் காடுகளின் பல்வேறு இடங்களிலும் தூவிச் செல்கின்றன.
அவற்றின் கழிவாக வீசிச் செல்லும் இலத்தி காட்டு மண்ணை வளமாக்கும் இயற்கை வளமாக்கியாகப் பயன்படுகிறது. யானைகள் தமது குடிநீர்த் தேவைக்காக தமது கால்கள், தந்தம், துதிக்கையைக் கொண்டு நிலத்தில் குழிதோண்டி நீரைக் குடிக்கும் வழக்கம் உள்ள விலங்குகள் என்பதனால் அவை தோண்டும் சிறுகுழிகள் ஏனைய சிறு விலங்குகள் தண்ணீர் அருந்தப் பயன்படுகின்றன.
நான் முதலில் சொன்னது போல யானைகள் வருடம் முழுவதுமே தாம் வாழும் காட்டில் பெரிய ஒரு சுற்றுப்பாதையில் வருடம் முழுவதும் சுற்றி வருபவை என்பதனால் தாம் செல்லும் பாதையை உருவாக்க முட்செடிகள், மரங்களை அகற்றுகின்றன. இந்த செயற்பாடுகள் காட்டில் வாழும் ஏனைய விலங்குகள் நடமாட பாதை ஏற்படுகிறது. பெரிய சில மரங்கள் அகற்றப்படுவதால் அந்த இடங்களில் பல சிறிய மரங்கள், செடிவகைகள் வளரக் கூடியதாக உள்ளது. இதன்மூலம் அந்த சிறிய தாவரங்களை உணவாகக் கொள்ளும் விலங்குகளுக்கும் உணவு கிடைக்கிறது. அவற்றின் எண்ணிக்கையும் பேணப்படுகிறது.
ஆனால் மனித இனம் யானைகளுடன் முகத்திற்கு முகம் சந்தித்த நாளில் இருந்து யானைகள் இனத்திற்கே சனி பிடித்தது எனலாம். பேராசை பிடித்த இரண்டு கால் விலங்குகள் கண்ணில் பட்ட நாளில் இருந்து யானைகள் அவர்களால் வேட்டையாடப்பட்டன; தந்தங்களுக்காகக் கொடூரமான கொல்லப்பட்டன, சிறைப்பிடிக்கப்பட்டு பாரம் தூக்கும் வேலைகள், கட்டுமான வேளைகளில் அடிமைகளாக்கப்பட்டன; விலங்கியல் பூங்காக்களில் சிறிய இடங்களில் அடைத்து வைக்கப்பட்டு பணம் உழைக்கும் இயந்திரங்களாகப் பயன்படுத்தப்பட்டன; சர்க்கஸ்களில் அவற்றின் இயல்புக்கு மாறான, கடினமான வேலைகளை செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டன.
இன்று யானைகளை கொல்வது சட்டப்படி குற்றம் என்றபோதும் சட்டவிரோதமாக இன்றும் ஆபிரிக்காவில் யானைகளை சில குரூர மனிதர்கள் கொன்றபடிதான் இருக்கிறார்கள். 2016 இல் சேகரித்த தரவுகளின்படி Trophy Hunters என்று அழைக்கப்படும் மனித உருவில் திரியும் விலங்குகளால் வருடாந்தம் ஆயிரம் யானைகள் கொல்லப்பட்டிருக்கின்றன. 2001 இலிருந்து 2015 வரையான காலப்பகுதியில் 81,572 யானைகள் இவ்வாறு கொல்லப்பட்டுள்ளன.
மறுபுறத்தில் விலங்கியல் பூங்கா என்ற பெயரில் அடைத்து வைப்பதும் தாய்லாந்து, இலங்கை போன்ற நாடுகளில் சுற்றுலா ஊக்குவிப்பு என்ற பெயரில் யானைகளை சவாரிகளுக்கு பயன்படுத்தும் கொடுமையும் இன்னமும் தொடர்கிறது. யானை சவாரி செல்வதை ஒரு புது அனுபவமாக நினைப்பவர்கள், யானைகள் உங்கள் உல்லாச சுற்றுலாக் காலங்களில் உங்களை சுமந்து சென்று உங்களை மகிழ்ச்சிப்படுத்த இந்த மண்ணில் பிறக்கவில்லை என்பதைப் புரிந்து கொள்ளவேண்டும்.
மறுபுறத்தில் இந்தியா இலங்கை போன்ற நாடுகளில் இந்து, புத்த சமயத்தவர்கள் பக்தி என்ற பெயரில் யானைகளை கோவில்களில் யானைகளை நிரந்தர அடிமைகளாக வைத்திருக்கிறார்கள். இவ்வாறு கோவில்கள், பெளத்த கோவில்களில் நிற்கும் யானைகள் மகிழ்ச்சியாக இருப்பதாக இவர்களே சொல்லிக் கொள்கிறார்கள். ஆனால் யானைகள் மனிதர்களோடு வாழப் பழகிவிட்ட விலங்குகளாக இருந்தபோதும் அவற்றை ஆடு மாடுகள் போல கட்டி வைத்து வளர்ப்பதும் ஒரு வகையான மிருக வதைதான்.
ஒரு யானை வாழுவதற்கு பல சதுர கிலோமீட்டர் காட்டுப்பகுதி தேவைப்படுகிறது. ஆனால் ஒரு விலங்கியல் பூங்காவில் அடைத்து வைக்கப்படுள்ள ஒரு யானைக்கு, ஒரு கோவிலில் அல்லது வீட்டில் வளர்க்கப்படும் யானைக்கு எவ்வளவு இடம் வழங்கப்பட்டுள்ளது என்று நீங்கள் நினைத்துப் பார்த்திருக்கிறீர்களா? தற்போது உலகில் 15,000 - 20,000 யானைகள் மனிதர்களின் பிடியில் அடிமைகளாக மிகவும் மோசமான சூழ்நிலையில் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளன என்பது உங்களுக்குத் தெரியுமா?
உங்களில் பலர் குடும்பத்துடன் சென்று விலங்கியல் பூங்காக்களில், சர்க்கஸில் காசு கொடுத்து யானை காட்டும் வேடிக்கையை பார்த்து மகிழ்ந்திருப்பீர்கள். அதேபோல தாய்லாந்து போன்ற நாடுகளுக்குப் போனவர்கள் அங்கு யானைச் சவாரி செய்தும் மகிழ்ந்திருப்பீர்கள். ஆனால் அங்கெல்லாம் யானைகள் மகிழ்ச்சியாக வாழ்கின்றனவா என்று நினைத்துப் பார்த்திருப்பீர்களா?
கோவிலில் பாகனுக்கு காசு கொடுத்துவிட்டு ஆசி வாங்கி மகிழ்ந்தவர்கள் அந்த யானைக்கு சரியான உணவும் ஓய்வும் கிடைக்கிறதா என்று விசாரித்தீர்களா? நிச்சயமாக செய்திருக்க மாட்டீர்கள். ஏனெனில் மனிதர்களில் அதிகமானவர்கள் சுயநலமானவர்களாகவும் தமது மகிழ்ச்சிக்கே முக்கியத்துவம் கொடுப்பவர்களாகவுமே இருக்கிறார்கள். என்னைப் பொறுத்தவரை இவ்வாறான இடங்களில் எல்லாம் பணம் கொடுத்து மகிழ்ச்சியை வாங்கும் எல்லோருமே யானைகளை கொடுமைப்படுத்தும் குரூரமான மனிதர்களே!
மனித – யானை மோதல்கள்
யானைகள் பல நூற்றாண்டுகளால் இவ்வாறு சுயநலம் கொண்ட மனிதர்களால் கொல்லப்படுவதும் மிக மோசமான சூழ்நிலையில் வளர்க்கப்படுவதும் ஒருபுறம் இருக்க, கடந்த சில தசாப்தங்களாக அதிகம் பேசப்படும் ஒரு விடயம்தான் மனித – யானை மோதல்கள். இந்தியா, இலங்கை மற்றும் ஆபிரிக்கா போன்ற நாடுகளில் விவசாயம் செய்வோர்களுக்கு யானைகளின் எல்லைத்தாண்டும் நடவடிக்கைகள் பெரும் பொருள் மற்றும் உயிர் சேதங்களை விளைவிப்பனவாகவே இருக்கின்றன.
யானைகள் பெரும்பாலும் உணவு தேடியும், குடிநீருக்காகவுமே கிராமங்களுக்குள் புகுந்து அங்கு பெரும் சேதங்களைச் செய்கின்றன என்றபோதும் யானைகள் மனிதர்கள் வாழும் இடத்திற்கு வருவதற்கு மனிதர்களின் செயற்பாடுகளும் காரணமாக இருக்கிறது.
நாம் தொடர்ச்சியாக காடுகளை எமது தேவைகளுக்காக அழித்து யானைகள் வாழும் பிரதேசத்தை குறைத்துக் கொண்டு வருகிறோம். யானைகள் காலம் காலமாக பயணிக்கும் வழித்தடங்களை அடைத்து கட்டுமானங்களை எழுப்பி வருகிறோம். காட்டுக்குள் நுழைந்து எமது தேவைகளுக்காக மரங்களை வெட்டியெடுத்துக் கொள்கிறோம். காடுகளை அழிப்பதன் மூலமும் நதிகளை எமது தேவைகளுக்காக திசை திருப்புவதன் மூலமும் யானைகளுக்கு காட்டுக்குள்ளேயே குடிநீர் கிடைக்கும் சந்தர்ப்பங்களை இல்லாது செய்கிறோம். அவை வாழும் காடுப்பகுதியில் பிளாஸ்டிக் கழிவுகளோடு உணவுக் கழிவுகளைக் கொட்டுவதன் மூலம் அவை அவற்றை உண்டு நோய்வாய்ப்படவும் இறக்கவும் காரணமாக இருக்கிறோம்.
இத்தனை கொடுமைகளையும் செய்துவிட்டு யானைகள் எங்களைத் துன்புறுத்துவதாக சொல்லிக் கொண்டு யானைகளை கொன்றுவிடுகிறோம். அல்லது மின்சார வேலிகள் போட்டு அவற்றைத் துன்புறுத்துகிறோம். யானைக்கு அன்னாசி பழத்திற்குள் வெடிமருந்து வைத்துக் கொடுத்து அதைக் கொல்கிறோம். யானைமீது எரிபொருளை வீசி அதற்கு தீ வைத்து உயிரோடு அதனைத் துன்புறுத்துகிறோம். மின்சார வேலிகள் யானைகளைத் தடுக்கும் என்று நாங்கள் நினைத்தாலும் புத்திசாலிகளான யானைகள் தமது தந்தத்தினூடான மின்சாரம் பாயாது என்பது கண்டறிந்து, தந்தத்தை பாவித்து வேலிகளை உடைத்து கிராமங்களுக்குள் நிலைவதும் ஆங்காங்கு நடைபெறுகிறது.
உண்மையில் யானைகள் மனிதர்கள் வாழும் பகுதிக்கு வருவதைத் தடுக்க இவ்வாறு மின்சார வேலி, யானைகளுக்கு பொறி வைத்தல், நஞ்சு வைத்தல் சுட்டுக் கொல்லுதல் போன்ற குரூரமான வழிகளை விட இயற்கையான பல வழிகள் உள்ளன. அதில் ஒன்றுதான் எல்லைப் பகுதியில் அதிகளவில் தேன் கூடுகளை அமைத்தல். இதன் மூலம் மனிதர்களுக்கு இரட்டை நன்மைகள் கிடைக்கின்றன. யானைகள் ஊருக்குள் வருவது தடுக்கப்படுவதுடன் தேன் மூலம் உபரி வருமானமும் பெறப்படமுடியும்.
அதேபோல மரங்களை நெருக்கமாக வளர்த்து பச்சை வேலிகளை உருவாக்குவதன் மூலமும் யானைகள் கிராமங்களுக்குள் நுழைவதைத் தடுக்க முடியும். உதாரணமாக வியட்நாமில் Gledatsia sinensis என்ற விரைவாக வளரக்கூடிய முள்மரம் எல்லைகளில் நடப்பட்டு யானைகள் வருவதைக் கட்டுப்படுத்த முயற்சி எடுத்துள்ளார்கள். இவ்வாறான மரங்களை நெருக்கமாக நடுவதால் சட்டவிரோத வேட்டைக்காரர்கள் காடுகளுக்குள் செல்லுவதும் தடுக்கப்படுகிறது.
இதேபோல இலங்கை இந்தியா போன்ற நாடுகளில் பனைமரங்களை நெருக்கமாக நட்டு இயற்கை வேலிகளை அமைத்து யானைகள் மனிதர்கள் வாழும் பகுதிக்கு வருவதைத் தடுக்க முடியும் என்றும் சொல்கிறார்கள். இதைவிடவும் வேறு பல இயற்கை முறைகள் மூலமும் யானைகள் ஊருக்குள் வருவதைக் கட்டுப்படுத்த முடியும்.
ஏற்கனவே மிக வேகமாக அழிவடைந்து வரும், மனிதர்களால் அழிக்கப்பட்டுவரும் யானைகளை மேலும் அழிவடையாமல் தடுக்க எங்களால் முடிந்தவரை முயற்சி எடுப்போம். நேற்று சர்வதேச யானைகள் தினமாம். நாம் விரைந்து யானைகளின் அழிவைத் தடுக்காவிட்டால் ஆகஸ்ட் பன்னிரண்டாம் திகதி யானைகள் நினைவு தினமாக நினைவுகூரப்படும் நாள் வெகுதூரத்தில் இல்லை. நாங்கள் மட்டுமல்ல, யானைகளும் சுதந்திரத்தை அனுபவிக்க உரித்துடையவை.
- வீமன் -

No comments:
Post a Comment