Tuesday, 8 March 2022

 


சர்வதேச பெண்கள் தினம் – மார்ச் 2022

உலகெங்கும் பெண்களுக்கான சர்வதேச தினம் இன்று கொண்டாடப்படுகிறது. ஆணுக்கு பெண் சமமாக நடாத்தப்படும் உலகம் உருவாக்கப்பட வேண்டும்; பெண்கள் எந்தவித பாரபட்சமும் இல்லாமல் நடாத்தப்படும் சூழல் உருவாக்கப்பட வேண்டும்; அதேநேரம் பெண்களின் தனித்துவங்களும் சாதனைகளும் கொண்டாடப்பட வேண்டும் என்பவற்றை நோக்காகக் கொண்டு இந்த மகளிர்தினம் கொண்டாடப்படுகிறது.

 

ஆண்களுக்குச் சமமாக பெண்களும் பல்வேறு தொழிற்துறைகளில் கால்பதித்து இருந்தாலும்  இன்றுவரை பலநாடுகளில் தமக்கான அங்கீகாரம், உழைப்புக்கு ஏற்ற ஊதியம் என்பவற்றைப் பெற பல பெண்கள் இன்னமும் போராடியபடிதான் இருக்கிறார்கள். பலநாடுகளில் வாழும் பெண்கள் இன்றும் பல்வேறு அடக்குமுறைகளுக்கும் உள்ளாகிக் கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் கசப்பான உண்மை. இந்த சூழ்நிலையில், இந்தத் தினத்தை உண்மையிலேயே கொண்டாட்டத்துக்கு உரிய தினமாகக் கொள்வதற்கான நாள் இன்னமும் வரவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.  

.

பலநாடுகளில் சம உரிமை என்பது வெறும் ஏட்டில் உள்ள விடயமாகவே இருக்கிறது. பெண்கள் தமது உரிமைகளையும் சுதந்திரத்தையும் அனுபவிப்பதற்குத் தடையாகவும் பலநேரங்களில் அவர்கள் மீது அநாவசியமான அழுத்தங்களைக் கொடுப்பவர்களாகவும் எமது சமூகமே இருக்கிறது. சமூகத்தில் இவ்வாறு அழுத்தம் கொடுப்பவர்களாக ஆண்கள் மட்டுமே இருப்பதில்லை. சமூகத்தில் உள்ள பிற பெண்களும் ஊடகங்களும் கூட தமது பங்குக்கு பெண்கள் மீது வன்முறையை, அழுத்தங்களைக் கொடுப்பவர்களாக இருக்கிறார்கள். அதேநேரம், சில பெண்கள் அவர்கள் மீது சமூகம் காட்டும் பரிவு மற்றும் ஆதரவைத் தவறாகப் பயன்படுத்துவதையும் நாங்கள் பார்க்கிறோம்.

.

இவ்வாறு இலங்கையில் கடந்த சில மாதங்களுக்குள் ஊடகங்களில் பேசப்பட்ட சில பெண்கள் தொடர்பான சில பத்திரிகை/ இணையச் செய்திகளைப் பார்க்க முடிந்தது. அவர்களில் சிலர் தமது அல்லது சமூகத்தின் உரிமைக்காகப் போராடியதால் ஊடகங்களில் பேசப்பட்டவர்கள். சிலர் தமது பதவி தொடர்பான தமது உரிமைக்காக நீதிமன்றக் கதவைத் தட்ட நிர்ப்பந்திக்கப்பட்டவர்கள்.

 

  1.   திருகோணமலை ஸ்ரீ சண்முகா வித்தியாலய முஸ்லிம் ஆசிரியை
  2.   தேசிய மனித உரிமை ஆணையகத்தின் ஆணையாளராக இருந்த அம்பிகா சற்குணநாதன்
  3.    பிம்ஷானி ஜாசின் ஆராச்சி  - DIG


இவர்களுள் முதலாவது நபரான முஸ்லிம் ஆசிரியை 2018 இல் ஸ்ரீ சண்முகா வித்தியாலயத்தில் இணைந்து கொண்ட பின்னர், தனது கலாச்சார உடையணிய முயன்றபோது பாடசாலை நிர்வாகத்தால் அனுமதி மறுக்கப்பட்டதால் தனது உரிமைக்காக மனித உரிமைகள் ஆணையகம் மற்றும் நீதி மன்றத்தின் கதவைத் தட்டியவர். இலங்கையின் சட்டப் பாதுகாப்போடு நான்கு வருடங்கள் கழித்து அதே பாடசாலையில் பணிப் பொறுப்பேற்கக் போனபோது மீண்டும் எதிர்ப்புக்கு முகம் கொடுத்தார்.

.

இது பெரும் சர்ச்சையாகி தேசிய மட்டத்தில் பேசு பொருளானது. இது மீண்டும் இனங்களுக்கிடையில் முரண்பாடாக வெடித்துவிடக் கூடிய தோற்றப்பாடு இருந்தபோதிலும் தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகத்தில் பலர் பொறுப்பாக செயற்பட்டதால் பெரும் பிரச்சனையாக மாறவில்லை. என்றபோதும் இன்றுவரை இந்த விடயம் சுமூகமாக தீர்க்கப்படவில்லை. இந்த விடயம் ஒரு சமூகத்தின் கலாச்சாரம் சார்ந்த விடயம் என்பதைவிட, அந்தப் பெண்ணின் மத மற்றும் மென்னுணர்வு சார்ந்த விடயம் என்பதைப் புரிந்து கொள்ள எனது சமூகத்தில் பலர் தயாராக இல்லை. இந்த நிலையில் அந்த முஸ்லிம் ஆசிரியை இந்த மகளிர் தினத்தை மகிழ்வுடன் கொண்டாட முடியுமா?

.

அடுத்ததாக அம்பிகா சற்குணநாதன். இவர் ஒரு மனித உரிமை வழக்குரைஞர் மட்டுமன்றி இலங்கை தேசிய மனித உரிமைகள் ஆணைய ஆணையகத்தின் ஆணையாளராக 2015 – 2020  வரை இருந்தவர். அதுமட்டுமல்ல, இவரைத்தான் இரண்டு வருடங்களுக்கு முன்னர் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் யாழ் மாவட்ட வேட்பாளராக சுமந்திரனும் கொண்டுவர முயற்சித்தார். அதனாலேயே தம்மைத் தேசிய உணர்வாளர்கள் என்று சொல்லிக்கொள்ளும் பலர் அவரைக் கடுமையாகத் தாக்கி எழுதியதுடன் அவரை சுமந்திரனுடன் தொடர்புபடுத்தி தரக்குறைவாகவும் பேசினார்கள்.

.

இவர் வேட்பாளராக வருவதை எதிர்த்து யாழ்ப்பாணத்தில் குறித்த கட்சியின் பெண் உறுப்பினர்கள் பலர் ஊர்வலமாகச் சென்று கட்சி அலுவலகத்தில் பெரும் எதிர்ப்பிலும் ஈடுபட்டனர். ஆமாம் 2010 ஆம் ஆண்டு சுமந்திரன் என்ற ஆண் பின்கதவால் கட்சிக்குள் வந்தபோது காட்டப்படாத எதிர்ப்பு, பத்து வருடங்கள் கழித்து ஒரு திறமை வாய்ந்த, மனித உரிமைச் செயற்பாடுகளில் ஈடுபட்ட, சர்வதேச அளவில் நல்ல தொழில்சார் தொடர்புகள் உள்ள ஒரு பெண் வேட்பாளராக வர முயன்றபோது காட்டப்பட்டது. அதுவும் பெண்களின் எதிர்ப்பு அவர் வேட்பாளராக வருவதற்கு அதிக அளவில் காட்டப்பட்டது. இதே வகையான தாக்குதலைத்தான் கிழக்கு மாகாணத்தில் நளினி ரட்ணராஜா எதிர் கொண்டார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

.

அதன் பின்னர், இரண்டு வருடங்கள் கடந்த நிலையில், இந்த வருடம் ஜனவரி மாதத்தில் ஐரோப்பிய ஒன்றியப் பாராளுமன்ற உபகுழுவின் அமர்வில் இலங்கையின் மனித உரிமைகள் நிலவரம் தொடர்பில் அம்பிகா சற்குணநாதன் முன்வைத்த கருத்துக்கள் இலங்கை அரசைக் கோபப்படுத்தியது. இது தொடர்பில் இலங்கை வெளிவிவகார அமைச்சின் அறிக்கைக்கு கண்டனம் தெரிவித்து 161 மனித உரிமைச் செயற்பாட்டாளர்களும் 47 மனித உரிமை சார்ந்து செயற்படும் நிறுவனங்களும் கண்டனம் தெரிவித்தன.  ஆச்சரியம் தரும் வகையில் தமிழ் தேசிய உணர்வாளர்கள் அம்பிகா சற்குணநாதனை இரண்டே வருடத்திற்கு முன்னர் தாறுமாறாகத் திட்டிய அதே வாயினால் பாராட்டிய காட்சியும் அரங்கேறியது. ஆமாம், ஒரு தகுதி உள்ள தமிழ்ப் பெண் எமது சமூகத்திலிருந்து அரசியலில் நுழைவதை அனுமதிக்காத ஒரு சமூகத்தில்தான் நாங்கள் இன்று மகளிர் தினம் கொண்டாடி பெண்கள் பெருமை பேசி மகிழ்கிறோம்.

.

மூன்றாவதாக குறிப்பிடப்பட்ட பிம்ஷாணி என்பவரும் அம்பிகா சற்குணநாதனைப் போலவே கல்வியில், தொழில் தகமையில் மேம்பட்டவர். சமூகத்தில் உயர் பொலீஸ் அதிகாரி என்ற அந்தஸ்தில் உள்ளவர். இவரைப் பற்றி கடந்த வருடமும் எமது பக்கத்தில் குறிப்பிட்டிருந்தோம். ஆனால் அவராலும் இந்த ஆணாதிக்க சிந்தனாவாதிகளின் தாக்குதலில் இருந்து தப்ப முடியவில்லை. இவர் 2020 ம் ஆண்டு அக்டோபர் மாதம் DIG ஆக  பதவி உயர்த்தப்பட்டார். ஆனால், கடந்த வருடம்  பெப்ரவரி மாதம் அவரது நியமனம் சட்டவிரோதமானது என்று உயர்நீதிமன்றில் 33 ஆண் உயர் பொலிஸ் அதிகாரிகள் (SSPs) வழக்குத் தொடர்ந்தார்கள். ஒரு பெண்ணை பிரதி பொலிஸ் மா அதிபராக நியமிக்கலாம் என்று தமது திணைக்கள பதவியுயர்வு தொடர்பான விதிமுறைகளில் சொல்லப்படவில்லை என்பதுதான் அவர்களின் வாதம்.

.

இந்த வழக்கில் கடந்த வருடம் மே மாதம் முதலாம் திகதி பிம்ஷானி அவரது DIG பதவியிலிருந்து நீக்கப்பட்டார். இலங்கையின் முதலாவது பெண் DIG என்ற பெருமையை அவர் கொண்டாட இடம் கொடுக்காமலே பதவியைப் பறிக்க 33 ஆண்கள் ஒன்று சேர்ந்து நின்றார்கள். இதன்பின்னர், அவருக்கு பொருத்தமான வேறு பதவி வழங்கும்படி பிம்ஷானியின் வழக்குரைஞர்கள் கடந்த மே மாதம்  வேண்டுகோள் வைத்தனர். அதன் பின்னர் அவருக்கு என்ன பதவி வழங்கப்பட்டது என்பது தொடர்பில் சரியான தகவல் பெறமுடியவில்லை.

.

 இங்கு சுவாரசியமான இன்னொரு ஒற்றுமையை இங்கு குறிப்பிட விரும்புகிறேன். இலங்கையில் முதல் பெண் பொலிஸ் அதிகாரி நியமிக்கப்பட்ட அதே 2020 ம் ஆண்டு அக்டோபர் மாதம் நைஜீரியா நாட்டில் அந்த நாட்டின் முதலாவது பெண் DIG யான Ivy Uche Okoronkwo நியமிக்கப்பட்டார். அதுவும் நாட்டின் பொலிஸ் துறையின் இரண்டாவது பெரிய பதவியாகும். நல்ல வேளை அவர் இந்த வருடம் ஜனவரி மாதம் வயதடிப்படையில் ஓய்வு பெறும்வரை யாரும் வழக்குப் போடாததால் அவர் பதவி தப்பியது.

.

இந்தப் பதிவில் நாம் குறிப்பிட்ட ஆசிரியர், பொலிஸ் அதிகாரி, வழக்குரைஞர் மூவருமே கல்வி கற்றவர்கள். அரச பதவியில் இருப்பவர்கள் அல்லது சமூகத்தில் பலருக்கும் தெரிந்தவர்கள். இவர்களில் இருவர் உயர் பதவி வகித்தவர்கள். ஆனால் மூவருமே வெவ்வேறு வகைகளில் சமூகம், சக பதவியில் இருப்பவர்களால் ஒடுக்கப்பட்டிருக்கிறார்கள் அல்லது அவர்களின் வளர்ச்சி இவர்களால் தடுக்கப்பட்டிருக்கிறது. இதில் ஆண்கள், சக பெண்கள் இருவருக்குமே பெரும் பங்கு இருக்கிறது. இது, எமது சமூகம் இன்றும் ஒரு பெண் படித்து உயர் பதவியில் இருந்தாலும் அவள் ஆணைவிட ஒருபடி குறைவானவள் என்று நம்புவதை அல்லது பெண் ஓரளவுக்கு மேல் செல்ல விடக்கூடாது என்று கரும் மனநிலையைக் காட்டுகிறது.

.

இவ்வாறான சமூகச் சூழல்கள் ஆணையும் பெண்ணையும் பெண் இரண்டாம் நிலைக்குரியவள் கோட்பாட்டை நம்பச் செய்ய முயல்வதுடன் பல சமயங்களில் வெற்றி பெற்றும் விடுகின்றன. ஆண்கள் மட்டுமன்றி பல சந்தர்ப்பங்களில் பெண்களே பெண்களின் வளர்ச்சிக்குத் தடையாக இருப்பதும் இதன் விளைவுதான். ஆனால் பெண்ணும் ஒரு சமுதாயத்தில் பலமானவளாக, பங்களிப்பவளாக மாறும்போது அந்த சமூகம் விரைவாக முன்னேறும் என்ற உண்மையை ஆணாதிக்கத்தை காதலிக்கும் ஆண்கள் உணரும்வரை, பெண்களின் திறமையை ஊக்குவிக்கும், பாராட்டும் சமூகமாக மாறாதவரை  அந்த சமூகம் அடுத்த நூற்றாண்டிலும் காட்டுமிராண்டிச் சமூகமாகவே இருக்கப் போகிறது.

Will you help to break the bias?

No comments:

Post a Comment

  அடி சறுக்கும் அனுர?   தேசிய மக்கள் சக்தி ஜனாதிபதி தேர்தலில் வடக்கு, கிழக்கில் பெரும் வெற்றியைப் பெறுவோம் என்ற நம்பிக்கையுடன் இருந்திரு...