மனித – யானை முரண்பாடுகள்
இயற்கையாகவே எமது சூழல் சமநிலையில்
முக்கிய பங்கு வகிக்கும் விலங்குகளான யானைகள் பல நூற்றாண்டுகளாகவே மனிதர்களால்
கொல்லப்படுவதும் பல்வேறு வகைகளில் தமது தேவைகளுக்காக பயன்படுத்தப்படுவதும் மிக
மோசமான சூழ்நிலையில் வளர்க்கப்படுவதும் ஒருபுறம் இருக்க, கடந்த சில தசாப்தங்களாக அதிகம் பேசப்படும் இன்னொரு விடயம்தான் மனித –
யானை முரண்பாடுகள். இந்தியா, இலங்கை மற்றும் ஆபிரிக்கா போன்ற நாடுகளில் விவசாயம் செய்வோர்களுக்கும்
காட்டு யானைகளுக்கும் இடையில் ஏற்படும் மோதல்கள் இருபக்கமும் உயிரிழப்புகளை
ஏற்படுத்துவதோடு, மனிதர்களுக்கு பொருளாதார ரீதியாகவும் நட்டத்தை ஏற்படுத்துகின்றன.
யானைகள் கூட்டமாக வாழும் தன்மை
கொண்டதுடன் நீண்ட தூர சுற்றுப்பாதையில் பயணிக்கும் வழக்கம் கொண்டவை. 200 – 300
ஆண்டுகளுக்கு முன்னர் யானைகளின் வழித்தடங்களில் மனிதர்கள் குறுக்கிடுவது அரிதாக
இருந்தமையால் ஏற்படக்கூடிய மனித உயிரிழப்புகளும் குறைவாகவே இருந்தன. ஆனால் பல
நாடுகளில் சனத்தொகை அதிகரிப்பை அடுத்து யானைகளை வாழும் பகுதியை அண்டி அல்லது அவற்றின்
வழித்தடத்தை அடைத்து தமது வாழிடங்களை உருவாக்குவதும் காட்டின் பகுதிகளை விவசாய
நிலமாக மாற்றுவதும் கடந்த ஒரு நூற்றாண்டில் அதிகரித்துள்ளது. இதனால் யானைகள் உணவு
தேடியும், குடிநீருக்காகவும் கிராமங்களுக்குள்
புகுந்து அங்கு பெரும் சேதங்களைச் செயவதற்கான சூழ்நிலையை நாங்களே உருவாக்கியிருக்கிறோம்.
நாட்டில் இருக்கும் வளங்கள் அனைத்துமே
மனிதர்களுக்கே உரியது என்ற மனப்பாங்குடன் நாம் தொடர்ச்சியாக காடுகளை எமது
தேவைகளுக்காக அழித்து யானைகள் வாழும் பிரதேசத்தை தொடர்ச்சியாக குறைத்துக் கொண்டு
வருகிறோம். யானைகள் காலம் காலமாக பயணிக்கும் வழித்தடங்களை அடைத்து கட்டுமானங்களை
எழுப்பி வருகிறோம். காட்டுக்குள் நுழைந்து எமது தேவைகளுக்காக மரங்களை வெட்டியழிக்கிறோம்.
காடுகளை அழிப்பதன் மூலமும் நதிகளை எமது
தேவைகளுக்காக திசை திருப்புவதன் மூலமும் யானைகளுக்கு காட்டுக்குள்ளேயே குடிநீர்
கிடைக்கும் சந்தர்ப்பங்களை இல்லாது செய்கிறோம். அவை வாழும் காடுப்பகுதியில்
பிளாஸ்டிக் கழிவுகளோடு உணவுக் கழிவுகளைக் கொட்டுவதன் மூலம் அவை அவற்றை உண்டு
நோய்வாய்ப்படவும் இறக்கவும் காரணமாக இருக்கிறோம். இவ்வாறு மனிதர்கள் கொட்டும்
கழிவுகளை யானைகள் உண்ணும் சூழ்நிலையை இலங்கையின் ஹபரண பகுதியில் நாளாந்தம் நீங்களே
பார்க்க முடியும்.
இத்தனை கொடுமைகளையும் நாமே செய்துவிட்டு
யானைகள் எங்களைத் துன்புறுத்துவதாக சொல்லிக் கொண்டு யானைகளை கொன்று விடுகிறோம்.
அல்லது மின்சார வேலிகள் போட்டு அவற்றைத் துன்புறுத்துகிறோம். யானைக்கு அன்னாசி
பழத்திற்குள் வெடிமருந்து வைத்துக் கொடுத்து அதைக் கொல்கிறோம். யானைமீது எரிபொருளை
வீசி அதற்கு தீ வைத்து உயிரோடு அதனைத் துன்புறுத்துகிறோம். கடந்த வாரத்தில் கூட
வன்னியில் ஒரு தோட்ட நில உரிமையாளர் சட்டவிரோதமாகப போட்ட மின்சார வேலியில் மாட்டி
ஒரு 25 வயதான யானை இறந்திருக்கிறது.
யானைகளைத் தடுக்க மின்சார வேலிகளைப்
போட்டு அவை யானைகளைத் தடுத்து விடும் என்று நாங்கள் நினைத்தாலும் சில இடங்களில் புத்திசாலிகளான யானைகள் தமது தந்தத்தினூடான
மின்சாரம் பாயாது என்பது கண்டறிந்து, தந்தத்தை பாவித்து வேலிகளை உடைத்து கிராமங்களுக்குள் நிலைவதும்
ஆங்காங்கு நடைபெறுகிறது.
உண்மையில்
யானைகள் மனிதர்கள் வாழும் பகுதிக்கு வருவதைத் தடுக்க இவ்வாறு மின்சார வேலி, யானைகளுக்கு பொறி வைத்தல், நஞ்சு வைத்தல் சுட்டுக் கொல்லுதல்
போன்ற குரூரமான வழிகளை விட இயற்கையான பல வழிகள் உள்ளன. அதில் ஒன்றுதான் எல்லைப்
பகுதியில் அதிகளவில் தேன் கூடுகளை அமைத்தல். இதன் மூலம் மனிதர்களுக்கு இரட்டை
நன்மைகள் கிடைக்கின்றன. யானைகள் ஊருக்குள் வருவது தடுக்கப்படுவதுடன் தேன் மூலம்
உபரி வருமானமும் பெறப்பட முடியும்.
அதேபோல
மரங்களை நெருக்கமாக வளர்த்து பச்சை வேலிகளை உருவாக்குவதன் மூலமும் யானைகள்
கிராமங்களுக்குள் நுழைவதைத் தடுக்க முடியும். உதாரணமாக வியட்நாமில் Gledatsia sinensis என்ற விரைவாக வளரக்கூடிய முள்மரம்
எல்லைகளில் நடப்பட்டு யானைகள் வருவதைக் கட்டுப்படுத்த முயற்சி எடுத்துள்ளார்கள்.
இவ்வாறான மரங்களை நெருக்கமாக நடுவதால் சட்டவிரோத வேட்டைக்காரர்கள் காடுகளுக்குள்
செல்லுவதும் தடுக்கப்படுகிறது. எனவே இதனால் இரட்டை நன்மை கிடைக்கிறது என்றும்
சொல்லலாம்.
இதேபோல
இலங்கை இந்தியா போன்ற நாடுகளில் பனைமரங்களை நெருக்கமாக நட்டு இயற்கை வேலிகளை
அமைத்து யானைகள் மனிதர்கள் வாழும் பகுதிக்கு வருவதைத் தடுக்க முடியும் என்றும்
சொல்கிறார்கள். இதைவிடவும் வேறு பல இயற்கை முறைகள் மூலமும் யானைகள் ஊருக்குள்
வருவதைக் கட்டுப்படுத்த முடியும்.
இந்த இடத்தில்,
நான் அண்மையில் யானை – மனித மோதல் தொடர்பாக Facebook இல் பார்த்த ஒரு பதிவு
பற்றியும் கொஞ்சம் பேசலாம் என்று நினைக்கிறேன்.
அந்தப்
பதிவின்படி இலங்கையில் 1970-2005 வரை ஒரு யானைக்கு 6000 மனிதர் என்று
இருந்த விகிதாசாரம் அதன்பின்பு படிப்படியாக குறைவடைந்து தற்பொழுது ஒரு யானைக்கு 3000 மனிதர்கள்
என்ற விகிதத்தில் வந்து நிற்கின்றது. அதேநேரம் 2015 இல் 63 ஆக இருந்த
மனித உயிரிழப்பு 2019 இல் 114 ஆகியுள்ளது
யானை-மனித முரண்பாட்டின் தீவிரத்தன்மையை தெளிவாகக் காட்டுவதாக ஒரு நண்பர் எழுதியிருந்தார்.
அதுமட்டுமன்றி ஆஸ்திரேலியாவில் விலங்குகள் எண்ணிக்கை அதிகரிக்கும்போது மட்டுப்படுத்தப்பட்ட
அளவில் கங்காருக்கள், ஒட்டகங்கள் கொல்லப்படுவது போல இலங்கையிலும் யானைகளின் எண்ணிக்கையையும் கட்டுப்படுத்த
வேண்டும் என்று சொல்லியிருந்தார்.
இவர் கூரும் தரவுகளில் எந்த விதமான தவறும் இல்லை, ஆனால் அவரின்
யோசனையுடன்தான் நான் முரண்பட்டு நிற்கிறேன். ஏனெனில் ஒரு நாட்டில் அல்லது பிரதேசத்தில்
குறித்த ஒரு விலங்கின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த முன்னர் அவற்றின் எண்ணிக்கை அதிகரிப்பால்
ஏற்பட்டும் சாதக பாதகம் கொல்வதால் ஏற்படும் நன்மை என்பனபற்றி நன்கு ஆய்வு செய்தே முடிவெடுப்பது
வழமை. இலங்கையில் காட்டுப்பன்றி, மான், மரைகளை இவ்வாறு கட்டுப்படுத்தப்பட்ட அளவில்
கடந்த காலங்களில் வேட்டையாட அனுமதி வழங்கப்பட்டதே இதற்கு நல்ல உதாரணம் எனலாம்.
வடக்கு புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த காலத்தில் அவர்களும்
இவ்வாறான வழிகளைப் பின்பற்றி காட்டுப்பன்றி, மரைகளை வேட்டையாட அனுமதி கொடுத்ததையும்,
அவற்றின் தொகை குறைந்த காலங்களில் அனுமதி மறுத்தத்தையும் இங்கு குறிப்பிடுவது பொருத்தமாக
இருக்குமென்று நம்புகிறேன். ஆனால் அவர்களும் ஒருபோதும் யானைகளைக் கொல்ல இடம் கொடுத்ததில்லை
என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் யானைகளின் எண்ணிக்கையைப் பொறுத்தவரை கடந்த 50
வருட வரலாற்றைக் கடந்து, கடந்த 200 வருடத் தரவுகளைப் பார்த்தால் இன்றுள்ள யானைகளின்
எண்ணிக்கை மிகையானவையா இல்லையா என்ற தெளிவு உங்களுக்குக் கிடைக்கும். ஏனெனில் 19ம்
நூற்றாண்டில் இலங்கையில் மக்கள் தொகை 3 மில்லியனாக இருந்தபோது இலங்கையில் 19,500
யானைகள் இருந்திருக்கின்றன. அதாவது 153 மனிதர்களுக்கு ஒரு யானை. பின்னர் 20ம்
நூற்றாண்டின் ஆரம்பத்தில் அது 450
மனிதர்களுக்கு ஒரு யானையாக மாறியிருக்கிறது. 1920இல் அதுவே
700 பேருக்கு ஒரு யானையாகக் குறைந்துள்ளது. இவ்வாறு குறைவடைந்து சென்ற யானைகளின்
எண்ணிக்கை 1970 இல் நண்பர் குறிப்பிட்டது போல 6,000 பேருக்கு ஒரு யானை என்னும்
அளவிற்கு யானைகளின் தொகை வீழ்ச்சியடைந்தது.
அதன் பின்னர் அரசு எடுத்த முயற்சிகளின் காரணமாகவே யானைகள்
வேகமாக அழிவடைவது தடுக்கப்பட்டது. அவற்றைப் பாதுகாக்கப் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
சரணாலயங்கள் உருவாக்கப்பட்டன. இவற்றின் விளைவாகவே இன்று அவற்றின் எண்ணிக்கை 7500 ஆக
அதிகரித்துள்ளது.
மேலோட்டமாகப் பார்த்தல் கடந்த 50 வருடத்தில் யானைகளின் எண்ணிக்கை
மூன்றரை மடங்கு அதிகரித்து இருப்பது போன்றும் இது ஆபத்தான எண்ணிக்கை போன்றும் தோன்றக்
கூடும். ஆனால் யானைகள் கடந்த நூறு வருடத்துக்கு முன்னர் இருந்த எண்ணிக்கையைத்தான் தற்போது
எட்டியிருக்கின்றன. அதேநேரம் 200 வருடங்களுக்கு முன்னர் இருந்த எண்ணிக்கையின் பாதியைத்தான்
எட்டியிருக்கின்றன. ஆனால் மறுபுறத்தில் மனிதர்களின் எண்ணிக்கை 100 ஆண்டுகளுக்கு முன்னர்
இருந்ததைவிட நான்கு மடங்கு அதிகரித்துள்ளது.
உண்மையில் யானைகள் எமது இடத்திற்குள் வரவில்லை. நாங்கள்தான்
அவற்றின் இடத்திற்குள் அத்துமீறிச் சென்று இடங்களைப் பிடித்து வைத்திருக்கிறோம்.
நாற்பது வருடங்களுக்கு முன்னர் நடைமுறைப்படுத்தப்பட்டு மக்கள் அதிகம் குடியேற்றப்பட்ட
அனுராதபுரம், பொலன்னறுவை மாவட்டங்களிலேயே அதிக எண்ணிக்கை மனித – யானை முரண்பாடுகள்,
சொத்து, உயிர் சேதம் காணப்படுவதே இதற்கு நல்ல உதாரணம்.
அதிலும்
இன்றுள்ள 7500 யானைகளில் 1500 வரையானவை மட்டுமே காடுகளில் வசிக்கும் சூழலில் அவற்றைக்
கொன்று அவற்றின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த வேண்டும், அதன் மூலம் மனித – யானை முரண்பாடுகளைக்
குறைக்க முடியும் என்பது பொருத்தமான தீர்வாகாது. மாறாக இயற்கையான சில வழிமுறைகளைப்
பயன்படுத்தி யானைகளை மனிதர்கள் வாழும் பகுதிக்குள் வராது தடுப்பதே சிறந்த வழியாக அமையும்.
-
வீமன் -
Reference:
https://www.gvicanada.ca/blog/4-reasons-need-elephants/
https://www.ft.lk/article/557390/Elephant-human-conflict--the-most-crucial-issue-not-even-identified
https://www.sundayobserver.lk/2020/08/16/impact/palmyrah-fence-solution-human-elephant-conflict
No comments:
Post a Comment