இசைக்குயிலும்
தங்க மகளும் ஈழத் தமிழர்களும்
வென்ற பின், “கில்மிஷா வெல்லுவாள் என்று எனக்கு அப்பவே தெரியும்”.
அப்படி வெல்ல முடியாது போயிருந்தால், “அவள் வெல்ல மாட்டாள் என்று எனக்கு அப்பவே
தெரியும்”. இதுதான் எமது சமூகம்!
இதுவரை பல வருடங்களாக ஈழத்திலிருந்தும் புலம்பெயர் தேசத்திலிருந்தும் பல
seasonகளாக சிறுவர்கள், வளர்ந்தவர்கள் எனப் பலரும் விஜய் டிவி ZeeTamil டிவி நடாத்தி வரும் பாடகர்களுக்கான
நிகழ்சிகளில் கலந்து கொண்டு சில தடவைகள் முதல் ஐந்து இடங்களுக்குள் இடம்
பிடித்தும் இருக்கிறார்கள். அதிலும் 2014 இல் நடைபெற்ற சூப்பர் சிங்கர் ஜூனியர்
போட்டியில் ஜெசிக்கா ஜூட்ஸ் இரண்டாம் இடத்தையும் 2019இல் நடைபெற்ற சூப்பர் சிங்கர்
போட்டியில் புண்யா மூன்றாம் இடத்தையும் (இன்னொரு போட்டியாளருடன் பகிர்ந்து
கொண்டார்) பெற்றதுமே அண்மைக் காலத்தின் உச்சப் பெறுபேறாக இருந்தது.
இந்த சூழலில் கடந்த வருட இறுதியில் ZeeTamil நடாத்திய சரிகமப லிட்டில் சாம்பியன் நிகழ்வில் ஈழத்துச் சிறுமியான
கில்மிஷா முதலிடத்தைப் பெற்றுக் கொன்டது தமிழர் பரப்பில் பெரும் கொண்டாட்ட
நிகழ்வாக மாறியதில் வியப்பில்லை. அவர் வெற்றி பெற்று ஊருக்குத் திரும்பி வந்த
நாளில் பெரும் எடுப்பில் அவருக்கு வரவேற்பு வழங்கப்பட்டதை அதன் ஒரு
வெளிப்பாடாகவும் பார்க்கலாம்.
அதே நேரத்தில் உள்ளூர் தொலைக்காட்சியும் ஒரு தனியார் நிறுவனமும் கில்மிஷாவின்
வெற்றியைத் தந்திரமாக தமது நிறுவனங்களைப் பிரபலப்படுத்தும் வகையில்
பயன்படுத்தியதையும் அவதானிக்க முடிந்தது. மக்களாகவே முன்வந்து இப்படிப் பாரிய
வரவேற்பை வழங்கியதான தோற்றப்பாடு இருந்திருந்தாலும், பலாலி முதல் கில்மிஷாவின்
வீடுவரை வழங்கப்பட்ட ஆரவார வரவேற்பில் இந்த நிறுவனங்களின் வியாபார மூளைக்கு
முக்கிய பங்கு இருந்ததாகவே தோன்றுகிறது.
மறுபுறத்தில் அந்தச் சிறுமி பாடிய பாடல்களையும் அவரது மாமா ஒருவர்
காணாமல் ஆக்கப்பட்டவர் என்பதையும் கூட்டிக் கழித்து, கில்மிஷா இசையூடாக மக்கள்
திரட்டுவார், தமிழ்த் தேசியத்தின் போராட்டத்துக்கு வலுவூட்டுவார் என்று இன்னொரு
தரப்பு அவர் இறுதிச் சுற்றுக்கு வர முன்னரே கட்டியம் கூற ஆரம்பித்து இருந்தது.
அவரது அனுமதி இல்லாமலே அவரை ஒரு போராளியாக்கிக் கொண்டாடத் தொடங்கியது. ஈழத்து
இசைக்குயில் என்று செல்லப் பெயர் வைத்து மகிழ்ந்தது. மறுபுறத்தில் கில்மிஷாவின்
பெயரில் இயங்கும் Kilmisha Yaazhisai
Facebook பக்க அட்மினும் கில்மிஷாவை வேறொருவராக காட்டுவதில் முனைப்பாக
இருந்தார்.
இவ்வாறான செயற்பாடுகளும் சில ஊடகங்களும் சேர்ந்து கில்மிஷாவின் வயதுக்கு மீறிய ஒரு பிம்பத்தைக்
கட்டியெழுப்பின. இவையெல்லாம் சேர்ந்து எவ்வாறான
விளைவுகளை ஏற்படுத்தும் என்று கில்மிஷாவின் பெற்றோரோ நலன் விரும்பிகளோ ஆரம்பத்திலேயே
ஊகித்திருக்க மாட்டார்கள் என்றே நம்புகிறேன். மிகைப்படுத்தப்பட்ட கொண்டாடலும் “இசைப்
போராளி” என்ற லேபலும் அவரது வெற்றிக் கிரீடத்தை முள் கிரீடமாக மாற்றப் போகிறது என்று
நினைத்திருக்க மாட்டார்கள்.
ஆனால் ஒரு வாரத்துக்குள்ளேயே எல்லாமே தலைகீழாக மாறிப் போனது.
இலங்கையின் ஜனாதிபதி ரணில் கில்மிஷாவை நேரில் சந்தித்து சான்றிதழும் வழங்கி
புகைப்படமும் எடுத்துக் கொண்டார். அப்படி இலங்கையின் தங்க மகள் என்ற புதிய
லேபிளும் அவர் மேல் ஒட்டப்பட்டது. உடனேயே வெகுண்டெழுந்த எமது தமிழ் வலைத்தளப்
போராளிகள் நிலையெடுத்து கில்மிஷா மீது தமது தாக்குதலை ஆரம்பித்தார்கள். ஒரே நாளில்
போராளி துரோகியானார்.
இந்த இடத்தில இன்னொரு சம்பவத்தையும் ஞாபகப்படுத்துவது பொருத்தமாக
இருக்கலாம். “மெனிக்கே மகே ஹித்தே” என்ற ரீமேக் பாடல் மூலம் உலக அரங்கில் இலங்கையைப்
பிரபலப்படுத்தியதற்காக யொஹானி என்ற பாடகிக்கு அப்போதைய சனாதிபதி மகிந்த கொழும்பி வீடு
கட்ட காணித் துண்டொன்றை வழங்குவதாக அறிவித்தார். அப்போது எமது தமிழ் வலைத்தளப்
போராளிகள், இதுவே ஒரு தமிழ்ப் பெண் பாடி இலங்கைக்குப் புகழ் சேர்த்திருந்தால்
இப்படிச் செய்வார்களா என்று கம்பு சுத்தினார்கள்.
தற்போது அவர்கள் சொன்னது போலவே ஒரு தமிழ்ப் பெண் இலங்கைக்கு பெருமை
சேர்த்திருக்கிறார். இதைச் சொல்லி நாட்டின் சனாதிபதியும் சான்றிதழ்
வழங்கியிருக்கிறார். இந்த சூழலில் இவர் உண்மையில் மகிழ்ச்சியல்லவா கொள்ள வேண்டும்.
அல்லது, ஏன் கில்மிஷாவுக்கு வீடு கட்ட வெள்ளவத்தையில் காணி கொடுக்கவில்லை
என்றல்லவா கம்பு சுத்தியிருக்க வேண்டும். மாறாக அரசியல் அறியாத ஒரு சிறுமிக்கு
எதிராக கம்பு சுத்துவதில் என்ன நியாயம் இருக்கிறது?
பாவம் அந்தச் சிறுமி, தன்னை ஏன் போராளி என்றார்கள், பிறகு ஏன் சிலர்
தன்னைத் துரோகி என்றார்கள் என்பது அவருக்கு இன்றுவரை முழுமையாகப் புரிந்திருக்குமா
என்பது சந்தேகம்தான். ஆனால் இப்படி பாரட்டியவர்களே வசை பாடியதில் நிச்சயம் அந்தச் சிறுமியைப்
பாதித்திருக்கலாம். ஆனால் அதுவும் நல்லதுக்கே. ஏனெனில் எமது தமிழ் சமூகம் தொடர்பாக
இந்த வயதிலேயே அவருக்கு நல்லதொரு பாடம் கிடைத்திருக்கிறது. முன்னால் சென்றால்
கடிக்கும் பின்னால் நின்றால் உதைக்கும் சமூகம்தான் தமிழ்ச் சமூகம் என்பதை
அறிந்திருப்பாள்.
அந்தச் சிறுமி ஒரு வைத்தியராவதே தனது இலட்சியம் என்று
சொல்லியிருக்கிறாள். அவள் பாடுவதிலும் ஆர்வம் காட்டுகிறாள். அவள் பாடிக் கொண்டே படிக்கட்டும்.
படித்துக் கொண்டே பாடட்டும். அவளை
அவள் பாட்டில் விட்டுவிடுங்கள்.
“Kilmisha
Yaalizhai” Facebook account அட்மின் தம்பி, நீங்களும் கொஞ்சம் அடக்கி வாசிக்கப் பழகுங்கள்!
நன்றி! வணக்கம்!!
-
வீமன் -
No comments:
Post a Comment