இலங்கை சனாதிபதி தேர்தலும் பொது வேட்பாளரும்!
இலங்கை வரலாற்றில் முதல் முறையாக இரண்டு சுற்றுக்களைத் தாண்டி சனாதிபதியாக அனுர குமார திசாநாயக்க தெரிவாகியுள்ளார். தேர்தல் பிரச்சாரத்தின்போது மாற்றத்துக்கான தேர்தல், ஊழலை ஒழிக்கும் ஆட்சி போன்ற பரப்புரைகளுடன் இலங்கையின் வடக்குக் கிழக்கிலும் கூட அனுர தனது பிரச்சாரத்தை முன்னெடுத்திருந்தார். மாற்றத்துக்கு சிங்கள மக்கள் தயாராக இருக்கும் நிலையில் வடக்குக் கிழக்குத் தமிழர்கள் அதில் இணைந்து பயணிக்க வேண்டும் என்று கேட்டிருந்தார்.
அனுரவின் வெற்றியை தெற்கில் கொண்டாடும் அதேவேளை அனுரவின் வெற்றிக்கு
தமது பங்களிப்பை வழங்கத் தவறிய வடக்குக் கிழக்கு பிரதேசத்தை கேலி செய்யும் சில பதிவுகள்
சமூக வலைத்தளங்களில் உலவுகின்றன. வடக்குக்
கிழக்கையும் அனுரவுக்கு வாக்கினை அள்ளி வழங்காத ஏனைய சில தேர்தல் தொகுதிகளையும்
புல் வளர்க்கும் பிரதேசம் என்றும் கழுதைகள் பிரதேசம் என்றும் கேலி செய்வதைப்
பார்க்க முடிந்தது.
மறுபுறத்தில் ஏற்கனவே தமிழ்ப் பொது வேட்பாளரை நிறுத்துவது
முட்டாள்தனமானது என்று சொன்னவர்களும் சில “அரசியல் ஆய்வாளர்களும்” சில தமிழ் இணைய ஊடகங்களும் தமிழ்
பொது வேட்பாளார் படுதோல்வி அடைந்து விட்டார் என்றும் மகிழ்வதையும் பார்க்க
முடிந்தது.
சிலர் சொல்வது போல அவர் 500,000 வாக்குகள் பெறவில்லை, அதுவும்
தமிழர்கள் செறிந்து வாழும் வடக்குக் கிழக்கிலேயே அவரால் வெல்ல முடியவில்லை. எனவே தமிழரின் தனித் தேசிய அவாவை
சர்வதேசத்திற்கு தெரியப்படுத்தும் முயற்சியில் தோற்றுவிட்டார் என்பதுவும், இலங்கை
முழுவதிலும் அவர் 1.70% வாக்குகள் மட்டுமே பெற்று அவமானகரமான தோல்வியைப்
பெற்றுள்ளார் என்பதுவும் மேம்போக்காகப் பார்க்கும்போது உண்மை போலவே தெரியும்.
ஆனால் மொத்த சனத்தொகையில் 15 வீதம் மட்டுமே இருக்கும் தமிழர்களின்
வாக்குகளைக் கொண்டு தேர்தலில் வெல்ல முடியாது என்று தெரிந்து கொண்டுதான் இந்த பொது
வேட்பாளர் நியமிக்கப்பட்டார். இங்கு அரியநேத்திரன் போட்டியிட்டது வெறும் இலக்க அடிப்படையிலான
அடைவை நோக்கி அல்ல. மாறாக மக்களை ஒரு புள்ளியை நோக்கி இணைக்கும் முயற்சியாகவே
இதனைப் பார்க்க வேண்டும். அந்த முயற்சியில் அவரும் அவரை ஆதரித்து முன்னிறுத்திய
தரப்பும் தமது முயற்சியில் ஒரு படி முன்னகர்ந்து இருக்கிறார்கள் என்றே எடுத்துக்
கொள்ளலாம்.
ஒப்பீட்டளவில் அரியநேத்திரன் சில தமிழ் அரசியல்வாதிகள் போல வடக்கு,
கிழக்கிற்கு வெளியே அதிகம் அறியப்படாதவர். எனவே அவரும் ஏனைய பகுதிகளில் மக்களின்
வாக்குகளை எதிர்பார்த்திருக்க மாட்டார். அப்படியிருந்தும் அவர் ஏனைய மாவட்டங்களில்
மொத்தமாக 7,864 வாக்குகளைப் பெற்றுக் கொண்டதுவும் நல்ல பெறுபேறுதான்.
வடக்குக் கிழக்கில் அதிகம் தமிழ் வாக்காளர்கள் செறிந்து வாழ்வது யாழ் (98.95%), வன்னி
(83.72%) மற்றும் மட்டக்களப்பு
(72.61%) தேர்தல் தொகுதிகளில்தான். திருகோணமலையில் 32.28%
தமிழர்களும் அம்பாறை தொகுதில் 17.40% தமிழர்கள் மட்டுமே வசிக்கிறார்கள். வடக்கு,
கிழக்கின் ஐந்து தேர்தல் மாவட்டங்களையும் எடுத்துக் கொண்டால் அரியநேத்திரன் 218,479
வாக்குகள் பெற்று, 13.91% வாக்குகளுடன் நான்காம் இடத்தில் இருக்கிறார்
(Table1). 17.40% தமிழர்கள் மட்டுமே வசிக்கும் அம்பாறைத் தொகுதியை நீக்கி விட்டு
தரவுகளைப் பார்த்தால் (Table 2), யாழ், வன்னி, திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு
ஆகிய நான்கு தொகுதிகளில் அரியநேத்திரன் 208, 494 வாக்குகளுடன்
18.18% வாக்குகளுடன் மூன்றாம் இடத்தில் இருக்கிறார். அனுர 11.96% வாக்குகள்
மட்டுமே பெற்றிருக்கிறார்.
72%க்கு மேல் தமிழர்கள் வாழும் யாழ், வன்னி மற்றும் மட்டக்களப்பு
மாவட்டங்களை மட்டும் தனியாக எடுத்து தரவுகளைப் பார்க்கும்போது அரியநேத்திரன் 21%
வாக்குகளைத் தனதாக்கி இருக்கிறார் (Table 3). அவர் எந்த மாவட்டத்திலும் முன்னிலை
வகிக்கவில்லை என்றபோதும் யாழில் வட்டுக்கோட்டை, ஊர்காவற்துறை, உடுப்பிட்டி,
பருத்தித்துறை நல்லூர், யாழ்ப்பாணம் தேர்தல் தொகுதிகளில் தமிழ் மக்கள் ஆதரவை வழங்கி
அவரை முன்னிலைப்படுத்தியிருக்கிறார்கள். யாழ் தேர்தல் மாவட்டத்தில் அவர் பெற்ற
வாக்கு வீதம் 31.39% என்பது குறிப்பிடத்தக்கது.
எனது பார்வையில் இந்தத் தேர்தலில் சங்கும் தோற்கவில்லை, மக்களை
அணிதிரட்டும் முயற்சியும் தோற்கவில்லை. மாறாக இந்தத் தேர்தலைப் பகிஸ்கரிக்கக் கோரிய
தரப்பினரும் சங்குக்கு ஆதரவு கொடுக்க வேண்டாம் என்ற தரப்பினருமே
தோற்றிருக்கிறார்கள். அவர்கள் தமிழ் மக்கள் சார்பாக தமக்கிருந்த கடமையில் தவறியிருக்கிறார்கள்
என்றே கொள்ள வேண்டும்.
இந்திய இராணுவத்துக்கு எதிராக பொதுமக்கள் போராட்டமான அன்னை பூபதியின் உண்ணாவிரதப்
போராட்டம் கிழக்கில்தான் முன்னெடுக்கப்பட்டது. சமாதான காலத்தில் உருவாக்கப்பட்ட
தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கான வித்தும் கிழக்கின் சிவில் சமூகத்தாலும் தமிழர்
விடுதலைக் கூட்டணி, TELO மற்றும் EPRLFஇனாலும் கிழக்கில்தான் போடப்பட்டது. தற்போது
தமிழர்களை மீண்டும் ஒன்றிணைக்கும் முயற்சியும் ஒரு கிழக்கு மண்ணின் மைந்தனை
முன்னிலைப்படுத்தித்தான் ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. தமிழர்கள் இனிவரும் நாட்களில்
எந்த அரசியல்வாதிகளை முற்றாக நிராகரிக்க வேண்டும் என்ற செய்தியையும் இந்தத்
தேர்தல் தெளிவாக வெளிப்படுத்தி இருக்கிறது.
- - வீமன் -
No comments:
Post a Comment