நல்லிணக்கம்
நனவாகுமா?
17வது பாராளுமன்றத்துக்கான தேர்தலில் அனுரவின் NPP பெரும்பான்மை
பெறுமா? இல்லையா? என்று சிலர் விவாதித்துக் கொண்டிருந்தார்கள், இன்னும் சிலர் அனுர
ஆட்சி அமைக்க ஆதரவு வழங்கத் தமது கட்சி தயாராக இருக்கிறது என்று கைக்கு வருமுன்னே
நெய்க்கு விலை பேசிக் கொண்டிருந்தார்கள். ஆனால் மக்களோ நீங்கள் எதையாவது
பேசுங்கள், நாங்கள் தெளிவாக இருக்கிறோம் என்று வாக்களிப்பின் மூலம் 2/3 க்கு மேலாக
அறுதிப் பெரும்பான்மையை மக்கள் கொடுத்திருக்கிறார்கள்.
ஆளும் கட்சியூடாக மட்டுமன்றி ஏனைய கட்சிகள் ஊடாகவும் பல புதியவர்களும்
இளையவர்களும் பாராளுமன்றம் செல்ல உள்ளார்கள். இது ஒரு நல்ல மாற்றத்துக்கான
ஆரம்பமாகப் பார்க்க முடியும். இலங்கை மக்களில் பெரும்பான்மையினரின் தற்போதைய
எதிர்பார்ப்பு, இந்த அரசு நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தும், ஊழல், அதிகாரத்
துஸ்பிரயோகங்களை இல்லாது செய்யும் நாட்டை மீண்டும் செழிப்பான நிலைக்குக் கொண்டு
செல்லும் என்பதாகவே இருக்கிறது.
வடக்குக் கிழக்கு மக்களிடமும் இதே எதிர்பார்ப்புகள் இருந்தாலும்
அவற்றோடு இன்னமும் சிறையில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை, தமிழரின்
தாயகப் பகுதியில் படையினர் வசமுள்ள தமிழ் மக்களின் தனிப்பட்ட நிலப் பகுதிகளை
விடுவித்தல், தமிழர்கள் பாரம்பரியமாக வாழும் பிரதேசங்களில் அரச ஆதரவுடன் பௌத்த
விகாரைகள் கட்டப்படல் போன்றவை நிறுத்தப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பும்
இருக்கிறது.
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளுக்கு இன்னமும் இலங்கை அரசு கடந்த 14
வருடங்களாக ஒரு பதிலை வழங்கவில்லை. இந்த அரசாவது ஒரு பதிலைச் சொல்லுமா என்ற
எதிர்பார்ப்பும் தமிழ் மக்களுக்கு இருக்கிறது. அவர்களுக்கு ஒரு closure தேவை. அதனை இந்த அரசாவது வழங்குமா என்ற எதிர்ப்பார்ப்பு அவர்களிடம்
நிச்சயம் இருக்கும்.
இரண்டு இனங்களுக்கிடையில் நல்லிணக்கம் ஏற்பட வேண்டும், ஒன்றுபட்டு,
ஒரு தேசமாக வாழ வேண்டும் என்றால், இரண்டு இனங்களுமே இதய சுத்தியுடன் ஒன்றை ஒன்று
அணுக வேண்டும். பாதிக்கப்பட்ட இனத்தின் தமது மொழி, கலாச்சார சுதந்திரத்துக்கு
பாதிப்பு வராத சூழல் ஏற்படுத்தப்பட வேண்டும். அவர்களுடன் வாழிடம், வாழ்வாதாரம் சிதைக்கபடாத
சூழ்நிலை உறுதிப்படுத்தப்பட வேண்டும். கடந்த காலங்களில் அதிகாரத்தில் இருக்கும் தரப்பால்
மறுதரப்புக்கு ஏற்பட்ட இழப்புகளை, அதிகாரத்தில் இருக்கும் தரப்பு ஏற்றுக் கொள்ள
வேண்டும். ஏற்படுத்தப்பட்ட பாதிப்புகளுக்கு எந்த வித சமரசமும் இல்லாது, மன்னிப்புக்
கேட்க வேண்டும்.
வடக்குக் கிழக்கு மக்களின் மனங்களை வெல்ல வேண்டும் என்றால்
இவையெல்லாம் நடக்க வேண்டும். ஆனால் கடந்த காலங்களில் யாழ் நூலகம் எரிக்கப்பட்டமை
மட்டும் மன்னிப்புக் கேட்கப்பட்டதே அன்றி, தமிழர்கள் மீது ஐம்பதுகளில் இருந்து
மேற்கொள்ளப்பட்ட திட்டமிட்ட வன்முறைத் தாக்குதல்கள், இறுதி யுத்தத்தில் பெருமளவு
மக்கள் கொல்லப்பட்டமை என்பவற்றுக்கு கடந்த கால ஜனாதிபதிகள் மன்னிப்புக்
கேட்கவில்லை. இந்த அரசாவது கேட்குமா? கேட்டு தேசிய நல்லிணக்கத்தை நோக்கி மக்களை
அழைத்துச் செல்லுமா? அல்லது நல்லிணக்கம் என்பது வெறும் கனவாகவே போய்விடுமா?
-
வீமன் -
No comments:
Post a Comment