அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு
2009இல் போர் முடிவுக்கு வந்த பின்னர் உறவுகள், உடல் அங்கங்கள்,
சொத்துக்கள் அனைத்தையும் இழந்து நின்ற தமிழ் மக்கள் அதிலிருந்து மீண்டு பழைய நிலைக்குத்
திரும்புவதற்கு உதவ வேண்டுமென்ற தவிப்பு புலம் பெயர் நாடுகளில் வாழ்ந்த மக்களிடையே
ஏற்பட்டது. அதுவே கடந்த பத்து வருடங்களில் தமிழர்கள் மத்தியில் உலகெங்கும் பல்வேறு
தொண்டு நிறுவனங்களும் உருவாகுவதற்கு வழி கோலியது. இந்த நிறுவனங்கள் ஒவ்வொன்றும் தங்களால்
முடிந்த வகையில் பல்வேறு உதவிகளை அங்குள்ள மக்களுக்கு செய்து வருகின்றன.
கடந்த பல ஆண்டுகளில் புலம்பெயர் சமூகங்கள்
மத்தியில் பல்வேறு வகையிலான அமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.
1.
நண்பர்களால் உருவாக்கப்பட அமைப்புகள்
2.
ஒரே ஊரைச் சேர்ந்தவர்களால் உருவாக்கப்பட அமைப்புகள்
3.
பழைய மாணவர் சங்கங்களால் உருவாக்கப்பட்ட அமைப்புகள்
4.
பாடசாலை நண்பர்களால் உருவாக்கப்பட்ட அமைப்புகள்
5.
தமிழர்களின் வியாபார நிறுவனங்களால் உருவாக்கப்பட்ட
அமைப்புகள்
6.
ஒரே குடும்ப உறுப்பினர்களால் உருவாக்கப்பட்ட அமைப்புகள்
7.
தனிநபரால் உருவாக்கப்பட்ட அமைப்புகள்
8.
ஏற்கனவே இயங்கிய தமிழ் அமைப்புகளின் சமூகசேவைப்
பிரிவுகள்
இவ்வாறு உருவான அமைப்புகள் ஒவ்வொன்றும் தமது தனிப்பட்ட ஆர்வம்,
துறைசார் அனுபவம் என்பவற்றின் அடிப்படையில் கல்வி, விவசாய, பொருளாதார, மருத்துவம்,
உளநலம், தொழில்நுட்பம் ஒரு துறையில் அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட துறைகளில் தமது சேவைகளை
வழங்கி வருகின்றன.
இவ்வாறு இயங்கும் இந்த அமைப்புகள் ஒவ்வொன்றும் அவை
நிதி சேகரிக்கும் முறை, கருத்திட்டங்களை உருவாக்கும் முறை, திட்டங்களை நடைமுறைப்படுத்தும்
முறை என்பனவற்றின் அடிப்படையில் தனித்துவமானவை என்றே கூறலாம். அதேபோல இவற்றுள் சில
அமைப்புக்கள் பதிவு செய்யப்படாதவையாகவும் சில
அமைப்புகள் அவற்றின் பெரும்பாலான உறுப்பினர்கள் வாழும் நாட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளன.
வேறு சில அமைப்புகள் தமது நாட்டிலும் அதேநேரம் இலங்கையிலும் பதிவு செய்யப்பட்டு இயங்கி
வருகின்றன.
சட்டரீதியாக பதிவு செய்யப்படாத சில அமைப்புகள் அந்த
நாட்டில் இயங்குகின்ற வேறு ஒரு பதிவு செய்யப்பட்ட
ஒரு தொண்டு நிறுவனத்தினூடாகவே இலங்கைக்கு பணம் அனுப்புவதுடன் தமது சேவையும் தமிழர்
வாழும் பகுதியில் செய்கின்றன. இவ்வாறு முறையாகப் பதிவு செய்யப்படாத பல அமைப்புகள்,
பெரும்பாலும் நண்பர்கள் மத்தியிலிருந்து மட்டுமே நன்கொடை சேகரித்து தாயகத்தில் உதவி
செய்வதாலும் பரஸ்பர நம்பிக்கை அடிப்படையில் தொழிற்படுவதாலும் பதிவு செய்வதைப் பற்றி
கவனம் செலுத்தாது இருந்திருக்கக்கூடும்.
வேறு சில அமைப்புக்கள், தொண்டு நிறுவனமாக பதிவு
செய்ய முனைந்தபோதிலும் அதற்குத் தேவையான நியமங்களை எட்ட முடியாமையால் இலாப நோக்கற்ற
அமைப்பாக மட்டுமே பதிவு செய்து இயங்குகின்றன. ஒரு
நிறுவனம் தொண்டு நிறுவனமாக பதிவு செய்வதனால் பல நன்மைகள் உள்ளன. அவற்றுள்
முக்கியமான ஒரு நன்மைதான், இலங்கையில் உதவி
பெறும் அமைப்புடன் சட்ட ரீதியான ஒப்பந்தம் செய்ய முடியும் என்பது.
இதைத் தவிர, திட்ட நடைமுறைப்படுத்தலில் அரச கட்டமைப்பின் உதவியைப் பெற முடியும் என்பதோடு
அரசு மற்றும் பிறநாட்டு நிதிவழங்கும் அமைப்புகள், சர்வதேச நிறுவனங்களின்
நிதிகளையும் விண்ணப்பித்துப் பெற்றுக் கொள்ள முடியும்.
சில சட்ட ரீதியாக பதிவு செய்யப்படாத பல அமைப்புகள்
பெரும்பாலும் பணத்தை சட்டவிரோதமான முறையிலேயே இலங்கைக்கு அனுப்புகின்றன. இதனால் அந்த
அமைப்புகள் உள்நாட்டில் உள்ள அமைப்பிடம் கொடுத்த நிதிக்கான பொறுப்புக் கூறலை
வலியுறுத்தும் சட்டரீதியான உரிமை அற்றுப் போகிறது. மக்களின் நம்பிக்கையைப் பெறுவது
கடினமாகிறது. மறுபுறத்தில் வெளிநபர்களிடம் நிதி சேகரிக்க முடியாத நிலையும் ஏற்படுகிறது.
பதிவு செய்யப்படல், பதிவு செய்யப்படும் விதம்
போன்ற விடயங்கள் தவிர்த்து இந்த அமைப்புக்கள் கவனம் செலுத்த வேண்டிய வேறு சில
முக்கியமான விடயங்கள் உள்ளன. அந்த விடயங்களை கொஞ்சம் விபரமாகவே பார்ப்போம்.
1.
கருத்திட்ட முன்மொழிவு (Project Proposal)
இன்று தமிழர்கள் மத்தியில் நூற்றுக்கணக்கான
உதவி வழங்கும் அமைப்புகள் இயங்கி வந்தாலும், அவற்றுள் மிகச் சிலவே முறையான
கருத்திட்ட முன்மொழிவுகளை எழுதக் கூடியவையாக இருக்கின்றன. முதலில் கூறியதுபோல, தமது
சொந்தப்பணத்தை அல்லது நண்பர்கள் வழங்கும் பணத்தைக் கொண்டே தாயகத்தில் உள்ள
மக்களுக்கு உதவி செய்து வருவதனால் முறையான திட்ட முன்மொழிவை விபரமாக எழுத வேண்டிய
அவசியமும் பல அமைப்புக்களுக்குத் தேவைப்படவில்லை என்று கொள்ளலாம். ஆனால் அதுவே
இன்று பல நிறுவனங்களின் பலவீனமாகவும் மாறியுள்ளது என்று கூறமுடியும்.
குறிப்பாக அண்மைக் காலமாக பல நாடுகள்,
நாடுகளில் இயங்கும் சேவை அமைப்புகள் இலங்கையில் உள்ள மக்களின் வாழ்க்கையை
மேம்படுத்த நிதியுதவிகளை வழங்க முன்வந்துள்ளன. ஆனால் அவர்கள் விண்ணப்பத்தில்
கேட்கும் விபரங்களை சரியான முறையில் கொடுத்து நிதிக்கொடைகளை பெற்று தேவையுள்ள மக்களுக்கு
அதன் நன்மைகளைப் பெற்றுக் கொடுக்க முடியாதவர்களாக இருப்பது மிகவும் கவலைக்குரியது.
உண்மையிலேயே இவ்வாறு நிதிகளைப் பெறுவதற்கு
திட்ட முன்முன்மொழிவை எழுதுவது கடினமான விடயமில்லை. முயற்சியும் பயிற்சியும்
இருந்தால் நிச்சயமாக சிறந்த திட்ட முன்மொழிவை எழுதுவதோடு தேவையான நிதியைப் பெற்று பல மக்கள் நலத் திட்டங்களை முன்னெடுக்க முடியும். இதற்குக்
கூட இப்போது கட்டணம் பெற்றுக் கொண்டு திட்ட முன்முன்மொழிவுகளை எழுதித் தரக்கூடிய துறைசார்
நிபுணர்கள் இருக்கிறார்கள். அவ்வாறான, திறமையான நிபுணர்களைக் கண்டறிய நாம் எமது துறைசார்
தொடர்புகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். அவர்களுள் சிலர் சேவை அடிப்படையில் இலவசமாக
அல்லது குறைந்த கட்டணத்திற்கு எழுதித் தர முன் வரக்கூடும்.
2.
கண்காணிப்பும் மதிப்பீடும் (Monitoring
and Evaluation)
எந்த ஒரு கருத்திட்டத்திலும் மிக முக்கியமானது
அந்தக் கருத்திட்டம் முறையாக திட்டமிட்ட முறையில் ஆரம்பித்ததா? சரியான பாதையில்
செல்கிறதா? சமூகத்தில் எதிர்பார்த்த மாற்றத்தை ஏற்படுத்துகிறதா என்பதை அறிந்திருத்தல்
ஆகும். ஒரு கருத்திட்டத்தின் வெற்றி தோல்வியை ஒரு முறையான மதிப்பாய்வு செய்தே
அறிதல் முடியும்.
புலம்பெயர் தமிழர் மத்தியில் உருவாகியுள்ள பல
நிறுவனங்கள் தாம் இலங்கைக்கு அனுப்பும் நிதி செலவு செய்யப்படுவதை பெரும்பாலும்
கண்காணிக்கின்றன. ஆனால் அவற்றுள் எத்தனை அமைப்புகள் தாம் நடைமுறைப்படுத்தும்
திட்டங்களை முறையாக கண்காணிக்கும், அவற்றின் வெற்றி தோல்விகளை மதிப்பீடு செய்யும் பொறிமுறையையும்
ஆற்றலையும் கொண்டிருகின்றன? தமது நிறுவனத்திற்குள் அவ்வாறான ஆற்றல் இல்லையென்றால்
அந்த ஆற்றல் உள்ள நிறுவனங்களுடன் இணைந்து வேலை செய்கின்றனவா? அல்லது இணைந்து வேலை
செய்யத் தயாராக இருக்கின்றனவா?
இந்தக் கேள்விகளை இவ்வாறு தாயகத்தில் மக்கள்
நலத் திட்டங்களை முன்னெடுக்கும் அமைப்புகள் தங்களைத் தாங்களே கேட்டுக் கொள்வது
அவசியமாகும்.
3.
அடிப்படைத் தரவு சேகரிப்பு (Basic data collection and Need Assessment)
இந்த நிறுவனங்களில் உள்ள இன்னுமொரு பெரிய
குறைபாடுதான் தேவையான அடிப்படைத் தரவுகளை முறையாக சேகரிக்காமை. இந்த இடத்தில்,
அனைத்து உதவி அமைப்புகளுமே முறையான தகவல் சேகரிப்பில் ஈடுபடுவதில்லை என்று கூற
வரவில்லை. ஆனால் பல அமைப்புகள் தமது தாயகத் தொடர்பாளராக உள்ள ஒருவரிலேயே தரவுகளுக்காக
தங்கியிருக்கும் நிலையே இன்று பரவலாகக் காணப்படுகிறது.
இங்கு நாம் சொல்ல வருவதை நீங்கள் தெளிவாகப்
புரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு புலம்பெயர் அமைப்புகள் தவறான தரவுகள்
அடிப்படையில் ஒரு கிராமத்தை தெரிவு செய்கின்றன அல்லது தேவையுள்ள மக்களைத் தெரிவு
செய்கின்றன என்று நாம் சொல்லவில்லை. உங்களுக்காக தகவல் தருபவர் தனக்குத் தெரிந்த
வரையில் சரியானது என்று என்னும் தரவினை உங்களிடம் பகிரக் கூடும். ஆனால் அதே
பிரதேசப் பிரிவில் அதனை விடப் பின்தங்கிய, உனடியாக உதவி சென்று சேரவேண்டிய
கிராமங்கள், குடும்பங்கள் இருக்கும் சந்தர்ப்பம் அதிகம் உள்ளது. இதனைச்
சரிசெய்வதற்கு, நாம் முறைப்படுத்தப்பட்ட அடிப்படைத் தரவுகளை சேகரிக்கும்
பொறிமுறையை பயன்படுத்த வேண்டும்.
4.
தகவல் பரிமாற்றம் (Information sharing and
communication)
எமது தமிழர் அமைப்புகள் மத்தியில் நாம் காணும்
இன்னுமொரு குறைபாடுதான் நிரறுவனங்களுக்கிடையில் தகவல் பரிமாற்றம் செய்வதில் உள்ள
தயக்கம். எனது தரவுகளை வைத்து அந்த நிறுவனம் நல்ல திட்டத்தை செயல்படுத்திப் பெயர்
எடுத்துவிடுமோ, எமது வேலைத்திட்டம் தொடர்பான விடயங்கள் பலருக்கும் தெரிந்தால் வேறு
யாரேனும் எமது வேலைகளுக்கு இடைஞ்சல் கொடுப்பார்களோ என்ற எண்ணங்களும் மற்றைய
நிறுவனங்கள் தொர்டபான அபிப்பிராயங்களும் நிறுவனங்களுக்கிடையில் தகவல் பரிமாற்றம் நடைபெறுவதற்குத்
தடையாக உள்ளன. இதனாலேயே ஒருஅமைப்பு தனது வேலைத்திட்டத்திற்கு தேவையான மனித வள
உதவிகளை வேறு அமைப்புக்களிடமிருந்து பெற்றுக் கொள்ள முடியாதுள்ளது.
5.
முழுமையான அபிவிருத்தி அணுகுமுறை
(Holistic
Development approach)
வடக்கு, கிழக்கில் போரினாலும் வேறு
காரணிகளாலும் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் காத்திரமாக அபிவிருத்தியை ஏற்படுத்த
வேண்டுமென்றால் நாம் ஒரு முழுமையான அபிவிருத்தி அணுகுமுறையை பின்பற்ற
வேண்டியுள்ளது. அதாவது, பொருளாதார, கல்வி, சமுதாய மற்றும் மனிதவள அபிவிருத்தியை
ஒருசேர முன்னெடுப்பது அவசியமாகும்.
ஆனால் இன்றுள்ள நிலையில் இந்த சேவை நிறுவனங்கள்
எல்லாமே ஒரு பரந்த பிரதேசத்தில் நாம் குறிப்பிட்ட வகையில் முழுமையான அணுகுமுறையைப்
பின்பற்றி ஒரு குறித்த பிரதேசத்தில் நிலைபேறான வளர்ச்சியை ஏற்படுத்தத் தேவையான
மனித வளங்களையும் கொண்டவையாக இல்லை என்பதே களயதார்த்தம். அவ்வாறு மனித வளங்களை ஒரு
அமைப்புக் கொண்டிருந்தாலும் அவர்களிடம் போதுமான ஏனைய வளங்கள், குறிப்பாக நிதி வளம்
இருப்பதில்லை.
இந்த இடத்தில்தான் நிறுவனங்கள் சேர்ந்து இயங்க
வேண்டிய தேவை தற்போது உணரப்படுகிறது. கடந்த காலங்களில் தனித் தனித் தீவுகளாக
இயங்கி வந்த அமைப்புகள் சில அண்மைக் காலங்களில் தாம் சேர்ந்து இயங்கினால் அதிக
சமூக மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்பதை உணரத் தலைப்பட்டுள்ளன. சில மனிதாபிமான அமைப்புகளும், உதவி நிறுவனங்களும்
ஏற்கனவே இணைந்து வேலை செய்ய ஆரம்பித்துவிட்டன. இனிவரும் நாட்களில் மேலும் பல அமைப்புகள்
இணைந்து செயற்படக்கூடிய சூழல் ஏற்படுத்தப்பட வேண்டும்.
6.
அரசின் கண்காணிப்பு நடைமுறை (Government’s Monitoring
System)
இலங்கையில் கடந்த சில வருடங்களாகவே அரச
கட்டமைப்பினூடாக சகல அரச சார்பற்ற சேவை அமைப்புகளின் விபரங்கள் தொடர்ச்சியாகத்
திரட்டப்படுகின்றன. ஒவ்வொரு நிறுவனமும் அங்கு NGO ஆக பதிவு செய்யப்பட்டிருக்க
வேண்டும். தற்போது இலங்கையில் NGO செயலகம் நேரடியாக பாதுகாப்பு அமைச்சின் கீழ்
கொண்டுவரப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி ஒவ்வொரு அரசசார்பற்ற நிறுவனமும் மூன்று
மாதங்களுக்கு ஒரு முறை தமது பெறுபேற்று அறிக்கையையும் நிதி அறிக்கையையும் மாவட்ட
செயலாளரிடம் சமர்ப்பிக்க வேண்டும். வருடாந்தம் அவர்களின் அடுத்த வருட வேலைத்திட்டமும்
பாதீடும் சமர்ப்பிக்கப்பட்டு அனுமதி பெறப்பட்டாலே அந்த நிறுவனம் தொடர்ந்தும் தமது
வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்த முடியும்.
இதைத் தவிர மூன்று மாதங்களுக்கு ஒருமுறை ஒரு
மாவட்டத்தில் இயங்கும் அரச சார்பற்ற நிறுவனங்கள் மாவட்டச் செயலாளருடனான மீளாய்வு
கூட்டத்தில் கலந்து கொள்ளுதல் வேண்டும். இந்தக் கூட்டம், சேவை அமைப்புகள் ஒன்றாகக்
கூடி மக்களின் தேவைகளை இனங்காணவும் (Identify and discuss emerging
needs), எதிர்கொள்ளும் பிரச்சனைகளைக் கலந்துரையாடவும்
(Challenges in implementation) ஒரே
பிரதேசத்தில் இரண்டு அமைப்புகள் ஒரே வகையான சேவையை முன்னெடுக்கும் சூழலில் (Service duplication) அதனைத் தவிர்க்கவும், தமது அனுபவங்களைப்
பகிரவும் (Experience including best practices) ஒரு சந்தர்ப்பமாகவும் அமைகிறது.
ஒத்துழைப்பும் கூட்டு முகாமையும் (Collaboration
and Partnership)
மேலே குறிப்பிட்டது
போல ஒவ்வொரு நிறுவனம்/ அமைப்பிலும் பலமும் பலவீனமும் இருக்கின்ற நிலையில் இவ்வாறான
அமைப்புகள் இணைந்து பணிபுரிவதன் மூலம் பலவீனங்களை இல்லாது செய்வதுடன், ஒரே
நேரத்தில் ஒரு பரந்த பிரதேசத்தில் ஏற்படுத்த நினைக்கும் மாற்றத்தை உருவாக்க
முடியும். இங்கு நாம் இணைந்து இயங்குதல் என்பது பல வகைகளில் செய்யப்படக் கூடியது.
1. ஒரு குறித்த சிறு பிரதேசத்தின் வேறுபட்ட
பிரச்சனைகளைத் தீர்க்கும் வகையில் வேறு வேறு துறையில் சேவை புரியும் அமைப்புகள்
ஒரே காலப்பகுதியில் அந்தப் பிரதேசத்தில் தத்தமது செயற்றிட்டங்களைச்
செயற்படுத்துதல்.
2. ஒரு பிரதேசத்தில் நிலைபேறான அபிவிருத்தியை
ஏற்படுத்தக் கூடிய ஒரு முழுமையான வேலைத்திட்டத்தை ஒன்றுக்கு மேற்பட்ட நிறுவனங்கள்
இணைந்து உருவாக்குவதுடன் புரிந்துணர்வு அடிப்படையில் வேலைத்திட்டங்களின்
பொறுப்புகளைப் பகிர்ந்து கொள்ளுதல்.
3. அமைப்புகளிடையே முறையான ஒப்பந்தங்களை
உருவாக்கி அதன் அடிப்படையில் இணைந்து இயங்குதல்
சேவைகள்
ஒருங்கிணைப்பும் முகாமைத்துவமும் (Service
Coordination and Management)
இந்தக் கட்டுரையின் ஆரம்பத்தில்
குறிப்பிட்டது போல, போர் முடிவுக்கு வந்த பின்னர் எமது தொப்புள்கொடி உறவுகளுக்கு
கைகொடுக்க வேண்டும் என்ற காரணத்தினால்தான் எம்மவர் மத்தியில் தோன்றிய பல அமைப்புகள்
கடந்த பதினோரு வருடங்களாக தங்களால் முடிந்த உதவிகளைத் தொடர்ந்து செய்து வருகின்றன.
நிவாரணம் கொடுப்பதிலிருந்து மக்களின் தொழில் முயற்சிகளுக்குக் கைகொடுப்பது வரை
இந்த அமைப்புகள் பலதரப்பட்ட உதவிகளை உதவி வந்தாலும் நிறுவனங்கள் இதுவரை இவர்கள் இதுவரை
காலமும் முதலிட்ட நிதி, மனித வளம் என்பவற்றின் பெறுமதியோடு ஒப்பிடும்போது நாம் பெற்றிருக்க
வேண்டிய பெறுபெறுகள், ஏற்படுத்தியிருக்கக் கூடிய மாற்றங்களைப் பெறமுடியவில்லை
என்பதுதான் உண்மை.
அதேநேரம், இன்று
தமிழர்கள் மத்தியில் இலங்கையிலும் சரி, உலக நாடுகளிலும் சமூக விஞ்ஞானம், பொருளியல்,
சூழலியல், மருத்துவம், விவசாயம், நீர்முகாமை, தகவல் தொழிநுட்பம் என பல்வேறு
துறைசார் நிபுணர்களுக்குக் குறைவில்லை. அவர்களுள் பலர் தங்களால் முடிந்தவரை
இலங்கையில் வாழும் பின்தங்கிய, போர் மற்றும் இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட
மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் முயற்சியில் பங்களிக்கத் தயாராகவே
இருக்கிறார்கள்.
மறுபுறத்தில் உதவி
நிறுவனங்களும் நிவாரணப் உதவிகளைவிட நிலைபேறான அபிவிருத்தியை நோக்கிய செற்பாடுகளை
எதிர்காலத்தில் முன்னெடுக்க வேண்டும் என்று உணரத் தலைப்பட்டுள்ளன. இந்த
சூழ்நிலையில் முதலீடு செய்யப்படும் நிதி மற்றும் மனித வளங்களை முறையாக பயன்படுத்தி
தற்போது உள்ள சில பொறிமுறைகளையும் புதிய பொறிமுறைகளையும் பயன்படுத்துவோமானால்
எம்மால் நிச்சயமாக நல்லதொரு மாற்றத்தை ஏற்படுத்த முடியும்.
உள்நாட்டு மட்டத்தில்
ஒருங்கிணைவு
முன்னர் குறிப்பிட்டது
போல ஏற்கனவே மாவட்ட மட்டத்தில் மாவட்டச் செயலாளரின் நிர்வாகக் கட்டமைப்பின் கீழ்
மூன்று மாதங்களுக்கு ஒருமுறை அரசசார்பற்ற நிறுவனங்களும் தொண்டு அமைப்புகளும்
ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் கலந்து கொள்கின்றன. இதனை தமது வேலைத்திட்டங்களின் தேவைகளுக்கும்
எதிர்கொள்ளும் சவால்களுக்குத் தீர்வு காணவும் ஒவ்வொரு நிறுவனமும் பயன்படுத்திக்
கொள்ள முடியும். இது மாவட்ட அளவில் பல கிராமங்களில் செயற்றிட்டங்களை
முன்னேடுப்போருக்கு பொருத்தமானதாக இருக்கும்.
சிறிய நிதியைக் கொண்டு
ஓரிரு கிராமங்களில் மட்டும் செயற்றிட்டங்களை முன்னேடுப்போர் பிரதேசச் செயலக
மட்டத்தில் இதேபோல இரண்டு மாதங்களுக்கு ஒருமுறையோ மூன்று மாதங்களுக்கு ஒருமுறையோ
சேவை ஒருங்கிணைப்புக் கூட்டங்களை நடாத்த முடியும். இதனை அந்தந்த பிரதேசச் செயலாளரே
முன்னெடுக்க வேண்டும். அப்பொழுதுதான் இந்த ஒருங்கிணைப்புச் செயற்பாடு தொடர்ச்சியானதாக
அமையும். ஆனால் இந்த ஒருங்கிணைப்பை சமூக, தொண்டு நிறுவனங்களே தாமாகவே
ஒன்றிணைந்தும் ஒருங்கிணைப்புக் கூட்டங்களை நடாத்தவும் முடியும்.
முன்னரே குறிப்பிட்டது
போல, இவ்வாறான கூட்டங்களை மக்களின் தேவைகளை இனங்காணவும் (Identify and discuss emerging needs),
நிறுவனங்கள் திட்ட நடைமுறைப்படுத்தலில் எதிர்கொள்ளும் பிரச்சனைகளைக்
கலந்துரையாடவும் (Challenges in implementation) ஒரே
பிரதேசத்தில் கிராமத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட அமைப்புகள் ஒரே வகையான சேவையை
முன்னெடுக்கும் சூழலில் (Service duplication) அதனைத் தவிர்க்கவும், தமது அனுபவங்களைப் பகிரவும் (Experience including best practices) ஒரு சந்தர்ப்பமாகவும் பயன்படுத்த முடியும்.
தரவுத் தளத்தை
உருவாக்குதல் (Information Portal)
தற்போது இலங்கையின்
வடக்கு, கிழக்கில் நூற்றுக்கணக்கான அரசசார்பற்ற நிறுவனங்களும் அதேபோல புலம்பெயர்
தேசங்களிலும் நூற்றுக்கணக்கான சிறிய, பெரிய தொண்டு அமைப்புகள் இயங்கி வருகின்றன.
ஆனாலும் இவர்கள் நடைமுறைப்படுத்தும் கருத்திட்டங்கள் தொடர்பான விபரங்களும்
இலங்கையில் இனங் காணப்பட்டு இன்னமும் செய்யப்பட வேண்டிய விபரங்கள் தொடர்பான தரவுகளும்
ஒரு தளத்தில் பெறக்கூடியதான ஒரு வலைத்தளம் உருவாக்கப்படல் வேண்டும். சேகரித்த தரவுகளை
ஏனைய முக்கியமான விபரங்களை உறுப்பினர்கள் மட்டுமே கடவுச் சொல்லைப் பயன்படுத்திப்
பார்க்கக்கூடியதாக அமைக்க முடியும். இது வடக்கு, கிழக்கு மற்றும் மலையக அமைப்புகள்
அண்மைக் காலங்களில் பங்குபற்றிய கூட்டங்களில் குறிப்பிட்ட ஒரு விடயம் என்பதைச்
சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.
புலம்பெயர் சமூக மட்டத்தில்
ஒருங்கிணைவு
புலம்பெயர்
அமைப்புகளும் தொடர்ந்தும் தனித்தனி அமைப்புகளாக இயங்காது துறை அடிப்படையிலோ,
இலங்கையில் அவர்கள் தமது திட்டங்களை நடைமுறைப்படுத்தும் மாவட்டத்தின்/ பிரதேச
செயலக அடிப்படையிலோ இணைந்து செயற்படுவதன் மூலம் காத்திரமான, வினைத்திறன் உள்ள
வகையில் தாயகத்தில் செயற்பட முடியும். இதனைப் பல தொண்டு அமைப்புகள் ஏற்கனவே
உணர்ந்துள்ளதுடன் கடந்த வருடம் ஒன்றிணைந்து செயற்படுவதற்கும் தொடங்கியுள்ளன.
உதாரணமாக தமிழ்
மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கான செயற்பாடுகளில் ஈடுபாடு காட்டும் வட அமெரிக்க,
ஆஸ்திரேலிய நாடுகளில் உள்ள அமைப்புகள் வன்னிப்பிரதேசத்திலும் கிழக்கிலும் ஏற்கனவே
இணைந்து செயற்படத் தொடங்கி விட்டன. இவர்களோடு இலங்கையில் கல்விச் செயற்பாடுகளில்
ஈடுபாடு காட்டும் இளையவர்கள் அமைப்பும் ஏனைய அமைப்புகளும் இணைந்து பயணிக்கின்றன.
இதே வழியில் ஏனைய துறைகளில் ஈடுபாடு காட்டும் அமைப்புகளும் ஒன்றிணைந்து செயற்பட
முன்வர வேண்டும்.
பதிவு செய்யப்படாத
அமைப்புகள்
இதுவரை நாம் பேசிய
விடயங்கள் பதிவு செய்யப்பட்டு இயங்குகின்ற அமைப்புகள் தொடர்பானதே. இவ்வாறான
அமைப்புகளைத் தவிர பல நூற்றுக்கணக்கான சிறு குழுக்கள் பதிவு செய்யப்படாத
அமைப்புகளாக இயங்குகின்றன. அதேபோல தனிநபர்களும் தேவையுள்ள குடும்பங்களின் கல்விக்கு,
வாழ்வாதாரத்திற்கு நேரடியாக உதவி வருகின்றன. இவர்கள் செய்துவரும் உதவிகள்
உண்மையில் பாராட்டப்பட வேண்டியவை.
இவர்கள் செய்யும்
உதவிகள் பெரிதும் பாராட்டப்பட்டாலும் இவர்கள் செய்யும் சேவைகள் தொடர்பாக “இவர்கள் ஏன்
தனித்தனியே உதவி செய்கிறார்கள்? ஏற்கனவே இருக்கும் அமைப்புகளில் இணைந்து இதனைச்
செய்ய முடியும்தானே?” என்ற ஒரு பொது விமர்சனம் சிலரால் முன் வைக்கப்படுகிறது. ஒரு
பொது அமைப்பினூடாக நிதியுதவிகளைச் செய்யும்போது முறையாகத் திட்டமிட்டு ஒரு பிரதேசத்தில்
முழுமையான முன்னேற்றத்தை ஏற்படுத்த முடியும்; நிதியைப் பெறும் குடும்பம் நிதியை
வீண்விரயம் செய்யாது தடுக்க முடியும் (கண்காணிப்புப் பொறிமுறை மூலம்); போன்ற வாதங்கள்
ஏற்புடையவையே.
ஆனால் இவ்வாறு
தனிநபர்களாக, சிறு குழுக்களாக உதவும் அமைப்புகள் செயற்படும் முறையில் தனித்துவமானவையாக
இருக்கின்றன. உதாரணமாக தாயகத்தில் ஒரு தேவையுள்ள குடும்பம் அடையாளம் காணப்பட்டதும்
உடனடியாகவே இவர்களால் தேவையான உதவிகளை வழங்கிவிட முடியும். ஒரு குடும்பத்தின்
பிள்ளைகளின் கல்விக்கு தொடர்ச்சியாக பண உதவி வழங்க முடியும். மாணவரை ஆரம்ப
வகுப்பில் தத்தெடுத்து பல்கலைக் கழகம் செல்லும்வரை அவர்களின் கல்வித் தேவைகளைப்
பூர்த்தி செய்யவும், சிறுதொழில் தொடங்கவும் உதவுகிறார்கள். இப்படியாக இவர்கள்
செய்யும் உதவிகள் நீண்டு கொண்டு செல்கின்றன.
நடைமுறையில் சட்டரீதியாக
இயங்கும் பெரிய சிறிய அமைப்புகள் திட்டமிட்ட வகையில் பல்வேறு பெரிய, சிறிய
திட்டங்களை முன்னெடுக்கின்றபோதிலும் ஆங்காங்கு விடுபட்டுப் போகின்ற சந்தர்ப்பங்களில்
இவ்வாறான தனிநபர்களும் சிறுகுழுக்களும் அந்த இடைவெளிகளை நிரப்புபவர்களாக இருக்கிறார்கள்
என்பதை நாங்கள் ஏற்றுக் கொண்டே ஆகவேண்டும். இதனை ஒரு செழிப்பான காட்டில் உள்ள
செடிகள், கொடிகள், புற்கள், சிறு மரங்கள் எவ்வாறு பல்வேறு உயிரினங்களுக்கும் வாழிடத்தையும்
உணவுக்கான ஆதாரத்தையும் வழங்குவதோடு ஒப்பிடலாம். இருந்தபோதிலும் இவர்களும் ஏனைய
அமைப்புகளோடு பொருத்தமான முறையில் இணைந்து பணிபுரிய முடியுமாயின் வேலைத்திட்டங்களை
விரைவாக முன்னெடுப்பதும் அதிகமான மக்களுக்கு சேவையை வழங்குவதும், பெறுபேறுகளை
மதிப்பாய்வு செய்வதும் இலகுவானதாகும்.

No comments:
Post a Comment