இலங்கையின் சுதந்திர தினமும் சிறுபான்மை இனமும் !
சனாதிபதி தனது உரையில், தான் ஒரு சிங்கள பௌத்தன் என்ற அடிப்படையிலேயே நாட்டை ஆள்வேன் என்று சொல்லியிருக்கிறார். எனினும் அனைத்து இனங்களுக்கும் மதங்களுக்கும் உரிய கௌரவம் வழங்கப்படும் என்றும் கூறியிருக்கிறார். கடந்த காலங்களில் சிறுபான்மை மக்களுக்கு அரசு வழங்கி வந்த கௌரவம் என்ன என்பது நாம் அனைவரும் அறிந்ததே. அதுவே தொடரும் என்று சொல்கிறாரா என்பதை இனிவரும் நாட்கள் எங்களுக்கு தெளிவுபடுத்தும்.
வடக்குக் கிழக்கில் மக்கள் வழமையாகவே சுதந்திர தினத்தைக் கணக்கில் எடுப்பதில்லை. அரசின் விசுவாசிகளும் அரச திணைக்களங்களும் மட்டுமே இதனைக் கொடியேற்றிக் கொண்டாடுவர். தமிழ் தேசியத்தை ஆதரிப்போர் கறுப்புக் கொடிகளுடன் இந்த நாளைக் கரிநாளாக அறிவிப்பதும் பொது இடங்களில் கறுப்புக் கொடிகளை இருந்தால் காவல்துறை அதை அகற்றுவதும் வழமையான காட்சிகள்தான். அவற்றைத் தவிர இம்முறை வழமைக்கு மாறான ஒரு காட்சி வடக்குக் கிழக்கில் அரங்கேறியுள்ளது.
தமிழ் சிவில் சமூக அமைப்புகள் முன்னெடுத்த பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரைக்கும் என்ற நான்கு நாள் அமைதிப் போராட்டம் பெப்ரவரி மூன்றாம் திகதி பொத்துவிலில் தொடங்கி இன்று திருகோண மலையை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது.
- வடக்கு, கிழக்கில் நடைபெறும் பெளத்த மயமாக்கலும் இந்து ஆலயங்களை இல்லாது செய்தலும்
- தமிழர்களின் வாழ்விடங்கள், மேய்ச்சல் நிலங்கள் அபகரிப்பு
- விசாரணையின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகள் விவகாரம்
- கைது செய்யப்பட்டு காணமல் ஆக்கப்பட்டோர் விவகாரம்
- மலையக தொழிலாளர்களின் 1000.00 ரூபாய் அடிப்படைச் சம்பளம்
- கோவிட் தொற்றினால் இறந்த முஸ்லிம்களின் உடலை தகனம் செய்தல்
- முஸ்லிம் தமிழ் இளைஞர்கள் மீது ஏவப்படும் பயங்கரவாதத் தடைச் சட்டம்
ஆகிய செயற்பாடுகளுக்கு தமிழ் பேசும் மக்களின் எதிர்ப்பைப் பதிவு செய்யும்
முகமாக இந்தப் பேரணி முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்தப் போராட்டம் அறிவிக்கப்பட்ட உடனேயே கிழக்கின் போலீசார் ஓடிப்போய்
நீதிமன்ற கதவைத் தட்டி இந்தப் போராட்டத்தில் சாணக்கியன் கலந்து கொள்வதற்கு தடை
உத்தரவை வாங்கி விட்டனர். அது மட்டுமின்றி கிழக்கிலும் வடக்கிலும் போலீசார் இந்தப்
பேரணியை தடுப்பதற்கு நீதிமன்றத்தின் ஊடாக முயற்சிக்கின்றனர்.
நீண்ட நாட்களுக்குப் பிறகு தமிழ் பேசும் மக்களால் முன்னெடுக்கப்படும்
இந்தப் போராட்டம் தமிழ் பேசும் வேறுபட்ட தரப்புக்களை ஒன்று சேர்த்துள்ளது. இந்தப்
பேரணியில் கலந்து கொண்ட இஸ்லாமிய சகோதரர்கள், அவர்களை
கலந்து கொள்ளும்படி வேண்டுகோள் விடுத்த அவர்களின் அரசியல் பிரதிநிதிகள், ஆதரவாக குரல் கொடுத்த அரசியல்
தலைவர்கள், பேரணியில் கலந்து கொண்ட சைவ மதத்
தலைவர்கள், கிறிஸ்தவ பாதிரிமார் இனிவரும்
நாட்களில் தமிழ் பேசும் அனைவரும் ஒன்றுபட்டு இன, மொழி, மத ரீதியான ஒடுக்குமுறைக்கும்
புறக்கணிப்புக்கும் எதிராகக் குரல் கொடுப்பார்கள் என்ற நம்பிக்கையைத் தருகிறது.
இந்தப் பேரணியில் கட்சி பேதமின்றி அனைத்து அரசியல் கட்சிப் பிரமுகர்களும்
ஒன்றாக நிற்பதும் வரவேற்க வேண்டிய விடயம். அதே நேரம் தங்களை ஊடகங்கள் என்று
சொல்லிகொள்ளும் சிலர் இந்த விடயத்தில் பிழை பிடித்துப் பெயர் வாங்க நினைப்பது
வருந்தத்தக்கது.
சில ஊடகங்கள், சாணக்கியன் இந்தப் பேரணியில் முதல்நாள்
தனது படம் பொறித்த பதாகையைத் தாங்கி வந்தார், இந்தப்
போராட்டத்தில் அரசியல் இலாபம் தேடுகிறார் என்றன. பின்னர், இந்தப் போராட்டத்தில் கஜேந்திர குமார், யாழ் நகர மேயர் மணிவண்ணன் போன்றோர் ஏன்
கலந்து கொள்ளவில்லை என்று நோண்டினார்கள். அடுத்ததாக, வடக்குக் கிழக்குத் தமிழர்களுக்காக
குரல் கொடுக்கும் மனோ கணேசன் ஏன் வரவில்லை என்றும் கேட்பார்கள். இதில் வேடிக்கை
என்னவென்றால் இவர்களுள் பலர் புலம்பெயர் தேசங்களில் இருந்து உள்ளூர் அரசியல்
செய்பவர்கள் என்பதுதான்.
இவ்வாறு சிறு விடயங்களைப் பெரிதாக்கி தமது வியாபாரத்தை வளர்க்க முனையும்
சில இணைய ஊடகங்களும் தம்மை ஊடகவியலாளர்களாக பீற்றிக் கொள்ளும் சில தனிநபர்களும்
ஒருகணம் தாங்கள் என்ன செய்கிறோம் என்று நினைத்துப் பார்ப்பது நல்லது. உண்மையில்
இவர்கள் மக்களும் அரசியல் தலைவர்களும் ஒன்றுபட்டும் நிற்கும் நேரத்தில் அதில் கீழ்த்தரமான
அரசியல் செய்கிறார்கள்.
இவர்கள் உண்மையிலேயே அக்கறை உள்ளவர்களானால், அரசியல்வாதிகள்
தமது தனிப்பட்ட படங்களை பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது; அனைத்து அரசியல் தலைவர்களும் ஒரு
நாளாவது இதில் கலந்து கொள்ளவேண்டும் என்ற வகையில் நாகரீகமாக வேண்டுகோள் வைக்கலாம்.
இதுவே ஒரு பண்பட்ட ஊடகவியலாளர் பின்பற்ற வேண்டிய வழியாக இருக்க முடியும்.
பிற்குறிப்பு: இன்று சர்வதேச மனித சகோதரத்துவத்துக்கான தினம் என்பது
குறிப்பிடத் தக்கது. இன்று சர்வதேச மனித சகோதரத்துவத்துக்கான நாளைக் கொண்டாடும்
வேளையில் கலாச்சார, மத சகிப்புத்தன்மை தொடர்பான புரிதலையும் உரையாடலையும்
முன்னெடுக்க வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் செயலாளர் கூறியுள்ள அதே நாளில்
இலங்கையின் சுதந்திர தினக் கொண்டாட்டத்தில் நாட்டை சிங்கள, பௌத்த கொள்கை அடிப்படையில்
கட்டியெழுப்பப் போவதாக இலங்கையின் சனாதிபதி சொல்லியிருக்கிறார்.
பெப்ருவரி 04, 2021

No comments:
Post a Comment