Friday, 16 April 2021

 

பெரும் தொற்றுக் காலமும் பிள்ளைகள் கல்வியும்

 


கோவிட் பெருந்தொற்று உலக நாடுகளின் வாழ்வியலில், பொருளாதாரத்தில் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாகத் தொடர்ந்தும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள அதேவேளை கல்வியிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. தொற்றினைக் குறைப்பதற்காக பல நாடுகள் மாதக் கணக்கில் பாடசாலைகளை மூடி வைக்க நிர்ப்பந்திக்கப்பட்டன. பின்னர் படிப்படியாக மீளத் திறந்த பாடசாலைகளும் சில நாடுகளில் மீண்டும் மூடப்படும் நிலையையும் பார்க்கிறோம்.

 

இதனால் பாடசாலைக் கல்வியை வீட்டிலிருந்து  பிள்ளைகள் இருந்து நேரலை மூலம் கற்கும் சூழ்நிலை பல நாடுகளில் தவிர்க்க முடியாததாக மாறியுள்ளது. ஆனால் அனைத்து வீடுகளிலுமே  அதற்கு தேவையான உபகரணங்கள் (Devices) மற்றும் இணைய இணைப்புக்களைப் பெறுவது பல பெற்றோருக்கு இலகுவானதாக இல்லை. மறுபுறத்தில் பெற்றோர் இருவருமே வேலைக்கு வெளியே செல்ல வேண்டியவர்களாக இருந்தால் பிள்ளைகள் நேரலையில் கற்கும்போது வீட்டில் இருந்து உதவுவதோ பிள்ளைகளைக் கண்காணிப்பதோ அவர்களுக்கு சாத்தியமற்ற விடயமாகவே இருக்கிறது.

 

பிள்ளைகள் வீட்டில் இருந்து கற்கும் நிலையில், கற்பித்தல் முறையில் பல மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளதோடு பிள்ளைகளின் அடைவு மட்டத்தை அளவிடும் முறையும் நெகிழ்வுத் தன்மை கொண்டதாக மாற்றப்பட்டுள்ளது. இந்த மாற்றங்களின் மத்தியில் எமது பிள்ளை இளநிலை வகுப்பில் படிக்க வேண்டியதை எல்லாம் சரியாகப் படிக்காவிட்டால் உயர்தரத்திலும் பல்கலைக் கழகத்திலும் சென்று கற்கும்போது கஷ்டப்படப் போகிறதே என்ற அங்கலாய்ப்பை பெற்றோர்களுடன் உரையாடும்போது உணர முடிகிறது.

 

ஒருபுறம் கோவிட் தொற்றுக்கான தடுப்பூசிகள் தற்போது பரவலாக பலநாடுகளிலும் வழங்கப்பட்டுக் கொண்டிருந்தாலும் அதில் ஏற்படும் காலதாமதமும் மூன்றாவது அலை மற்றும் திரிபடைந்த வைரஸ் அச்சுறுத்தல் என்பனவும் சேர்ந்து,  பாடசாலைகள் மறுபடியும் முன்பு போல இயங்கத் தொடங்குமா? எமது பிள்ளைகளின் எதிர்காலம் என்னவாகும்? என்ற எதிர்காலம் பற்றிய கேள்வி இன்று பல பெற்றோரின் மனதைக் குடையும் கேள்வியாக இருக்கிறது.

 

இந்தக் கவலை ஒருபுறம் இருக்க, இன்றைய நிலையில் பிள்ளைகள் வீட்டிலிருந்து சரியாகப் படிக்கிறார்களா? வேலையை நேரத்துக்கு முடிக்கிறார்களா எனக் கண்காணிப்பது பல பெற்றோருக்குத் தலைவலியாகவே மாறிவிட்டது. குறிப்பாக ஆரம்பப் பிரிவு மாணவர்களை கணனியின் முன்னால் இருத்தி வைப்பதலிருந்து இடைநடுவில் அவர்கள் வேறு வேலை பார்க்கப் போய்விடாது பார்த்துக் கொள்ளுவதும் பல பெற்றோரின் நாளாந்த வேலையாகிவிட்டது. அதுவும் வீட்டிலிருந்து அலுவலக வேலையைச் செய்பவர்கள் நிலைமை இதைவிட மோசம் என்றே சொல்ல வேண்டும்.

 

இடைநிலை வகுப்பு, உயர்தர வகுப்பு  மாணவர்கள் உள்ள பெற்றோரின் பிரச்சனைகள் வேறு மாதிரியானவை. மாணவர்கள் தமது அறைகளுக்குள் இருந்து படிப்பவர்கள் என்றால் அவர்கள் படிக்கிறார்களா? அல்லது கணனியின் game விளையாடுகிறார்களா? என்று பார்க்க வேண்டியுள்ளது. அதேபோல மாணவர்களுக்கான Co-op Placement, volunteering hours  (இவை பெரும்பாலான மேலைத்தேய நாடுகளில் அவசியமானவை) போன்றவற்றைப் பெறமுடியாமை தொடர்பாகவும் பல பெற்றோர் கவலை கொள்கிறார்கள்.

 

இவ்வாறு தமது பிள்ளைகளின் கல்வி மற்றும் எதிர்காலம் தொடர்பாகக் கவலை கொள்ளும் பெற்றோர் இரண்டுவிதமான தவறுகளைச் செய்கிறார்கள்.

1.       தமது பிள்ளைகளுக்காக அதிகமாக தேவையற்று யோசித்து யோசித்து தாங்கள் மனவுளைச்சலுக்கு ஆளாகிறார்கள்.

2.       தமது பயத்தை தமது பிள்ளைகளின்மேல் இடம்மாற்றியும் விடுகிறார்கள்.

 

இவையிரண்டுமே தவிர்க்கப்பட வேண்டியவை. ஏனெனில் இவ்வாறான சிந்தனைகள் எம்மையும் அறியாமல் எமது வீடுகளில் ஒரு ஆரோக்கியமற்ற சூழலை ஏற்படுத்திவிடக்கூடும். உண்மையில் இந்தச் சூழ்நிலை அசாதாரணமானது மட்டுமன்றி மாணவர்கள் மீதும் அவர்களின் வயதிற்கு ஏற்ப வெவ்வேறு வகையான மன உணர்வுகளை ஏற்படுத்தியுள்ளது என்பதையும் நாங்கள் புரிந்து கொள்ள  வேண்டும். தமது நண்பர்களோடு வழமைபோல நேரம் செலவிட முடியவில்லை, விரும்பிய இடங்களுக்கு செல்ல முடியவில்லை போன்ற கவலைகள் அவர்களுக்கும் இருக்கின்றன.

 

உண்மையில் இந்தப் பெரும்தொற்றுக் காலத்தில் பெற்றோர் தமது பிள்ளைகளை எப்படி வழிநடத்த வேண்டும் என்று அறிவுரை வழங்குவது சாத்தியமற்ற ஒன்றாகும். ஏனெனில் பிள்ளைகள் ஒவ்வொருவரும் தனித்துவமானவர்கள். இந்த சமயத்தில் பெற்றோரே தமது பிள்ளைகளுக்கு தைரியம் கொடுப்பவர்களாகவும் வழிகாட்டுபவர்களாகவும் இருக்க வேண்டியது அவசியமாகிறது. பிள்ளைகள் கல்வியை முடிக்க மேலதிக காலம் தேவைப்படுமோ என்ற கவலை சில பெற்றோருக்கு இருக்கிறது. இது உண்மையில் தேவையற்ற ஒரு கவலையே.  

 

சாதாரண காலத்திலேயே பல மாணவர்கள் உயர்தர பரீட்சையில் ஒரு தடவையிலேயே முடித்து பல்கலைக் கழகம் செல்லாது ஓரிரு வருடங்கள் பிந்திச் செல்வதும் உண்டு. மேலைத்தேய நாடுகளில் மாணவர்கள் தமது உயர்நிலைப் பாடசாலைக் கல்வியை முடித்த பின்னர் ஓரிரு வருடங்கள் பல்கலைக் கழக கல்விக்குத் தேவையான பணத்தை தாங்களே உழைத்து அதன் பின்னர் பல்கலைக் கழகம் செல்வதும் பலநாடுகளில் சர்வசாதாரணம். அதேபோல பல்கலைக்கழகம் சென்றவர்கள் கூட முதல் வருட முடிவில் தாம் படிக்கும் கற்கை நெறியைத் தொடர விருப்பமின்றி வேறு ஒரு கற்கை நெறியை புதிதாக தொடங்கி அதனை வெற்றிகரமாக முடித்ததும் உண்டு.

 

எனவே, பெற்றோர்கள் உங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து அதிகம் யோசிக்காதீர்கள். இன்றைய சூழலில் என்ன செய்ய முடியுமோ அதனை உங்கள் பிள்ளை செய்ய உதவுங்கள். அவர்களின் கல்விச் செயற்பாடுகளை உரிய காலத்தில் செய்து முடிக்க உதவி செய்யுங்கள், அவர்கள் சோர்வாக இருந்தால் அவர்களை உற்சாகப்படுத்துங்கள்.

 

இக்காலப் பகுதியில் மன ஆரோக்கியமும் உடல் ஆரோக்கியமும் முக்கியமானவை. அதனால் உங்கள் பிள்ளைகளை தோட்ட வேலை, நடைப்பயிற்சி, சைக்கிள் ஓடுதல் போன்ற விடயங்களில் ஈடுபடுத்துங்கள்; தினமும் குறிப்பிட்ட நேரம் உடற்பயிற்சி செய்ய அறிவுறுத்துங்கள்; வீட்டு வேலைகளிலும் பிள்ளைகளுக்கு சில பொறுப்புக்களைக் கொடுங்கள்.

 

இதுவும் கடந்து போகும் ! நாம் இதைச் சேர்ந்தே கடப்போம் !


- வீமன் -

No comments:

Post a Comment

  அடி சறுக்கும் அனுர?   தேசிய மக்கள் சக்தி ஜனாதிபதி தேர்தலில் வடக்கு, கிழக்கில் பெரும் வெற்றியைப் பெறுவோம் என்ற நம்பிக்கையுடன் இருந்திரு...