Monday, 8 November 2021

 உடற்பயிற்சியின்போது ஏற்படும் மாரடைப்பு-மரணமும் அதைத் தவிர்த்தலும்

=======================================================================


கடந்த மாத இறுதியில் நிகழ்ந்த கன்னட சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமாரின் திடீர் மரணம் அவரது ரசிகர்களை மட்டுமன்றி ஏனைய பலரையும் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது. அதற்கு அவரது பிரபலம் மற்றும் சமூக சேவைகள் மட்டுமே காரணமல்ல. அவர் உடலைக் கட்டுக்கோப்பாக வைத்திருப்பதற்கும் ஆரோக்கியமாக இருப்பதற்கும் அடையாளமாக இருந்த ஒருவர். அவர்களது நண்பர்களால் “உடற்பயிற்சி வெறியர்” என்று செல்லமாக அழைக்கப்பட்ட ஒருவர். அத்தோடு 2017 இல் பெங்களூரில் உள்ள Sri Jayadeva Institute of Cardiovascular Sciences and Research Institute அறிமுகப்படுத்திய “Prevent Premature Heart Attack” initiative இன் தூதுவராக (Ambassador) ஆக இருந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு உடற்பயிற்சி செய்யும்போது அல்லது விளையாட்டுப் பயிற்சியில் ஈடுபடும்போது ஒருவருக்கு மாரடைப்பு அல்லது இதய செயலிழப்பு ஏற்படுவதும் இறப்பதுவும் ஒரு சாதாரண நிகழ்வாகவே இருக்கிறது. உதாரணமாக அமெரிக்காவில் மட்டும் வருடாந்தம் 2,269 ஆண்களும் 136 பெண்களும் உடற்பயிற்சி செய்யும்போது இதய அடைப்பு (Cardiac Arrest) இனால் பாதிக்கப்படுகிறார்கள். இவர்களுள் கணிசமானவர்கள் உரியநேரத்தில் முதலுதவி மற்றும் சிகிச்சை கிடைக்காது இறந்தும் போகிறார்கள். ஆனால் பிரபலங்கள் பாதிக்கப்படும்போது மட்டும் ஊடகங்களும் நாமும் பேசிவிட்டு அதனை மறந்து விடுகிறோம்.
அண்மைக் காலங்களில் தெற்காசிய ஆண்களில் சிலர் பாட்மிண்டன், கால்ப்பந்து போன்ற விளையாட்டுகளின்போதும் கடும் உடற் பயிற்சியின்போதும் இதய அடைப்பினால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். ஒரு சிலர் துரதிஸ்டவசமாக இறந்தும் போயிருக்கிறார்கள்.
இவ்வாறு உடற்பயிற்சி செய்து உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்கும் பலர் மாரடைப்பால் பாதிக்கப்படும் நிலையில் எங்களில் பலருக்கு உடற்பயிற்சி செய்வதை விட்டுவிட்டால் உயிரோடாவது இருக்கலாமோ என்ற எண்ணம் எழக்கூடும். ஆனால், உடற்பயிற்சி செய்யும்போது ஏன் மாரடைப்பு வருகிறது என்பதை நாங்கள் தெரிந்து கொண்டால் எதை நாம் செய்யலாம், எதைச் செய்யக்கூடாது என்ற தெளிவு கிடைக்கும் என்று நம்புகிறேன்.

மாரடைப்பு ஏன் ஏற்படுகிறது?
+++++++++++++++++++++++++++++
இப்போதெல்லாம் இள வயதிலிருந்தே பலரும் தமது உடல் ஆரோக்கியம் பேணுவதற்காக பல்வேறு உடற்பயிற்சிகளில் ஈடுபடுகிறார்கள். ஆனால் அவ்வாறு உடற்பயிற்சி செய்வதால் மட்டுமே எமது உடல் மிக ஆரோக்கியமாக இருக்கும், இதயநோய் எதுவுமே எம்மை அண்டாது என்று நாங்கள் நினைத்துவிடக் கூடாது.
எங்கள் பரம்பரையில் (தந்தை, தாய் வழியில்) இளவயது மாரடைப்பு ஏற்பட்டு இருந்தால், எங்களுக்கும் மாரடைப்பு வருவதற்கு அதிக சந்தர்ப்பம் உள்ளது. இதைத் தவிர கட்டுப்பாடு அற்ற நீரிழிவு நோய், உடற்பருமன், மனவழுத்தம் என்பனவும் எமக்கு இதயநோய்கள் ஏற்படும் சந்தர்ப்பத்தை அதிகரிக்கின்றன.
இவை ஒருபுறம் இருக்க, வயது ஏறும்போது எமது நாடிக் குழாய்கள் படிப்படியாக தடிப்படைகின்றன. இதைவிட, எமது குருதியில் HDL எனப்படும் நல்ல கொழுப்பு குறைந்து LHL எனப்படும் கெட்ட கொழுப்பு அதிகரிப்பதும் நாடிக் குழாயில் விரைவாக அடைப்பு ஏற்படும் சந்தர்ப்பம் அதிகரிக்கும். இவ்வாறு இதயத்திற்கு செல்லும் முடியுரு நாடிக் குழாயின் உட்சுவர் தடிப்படைந்து பின்னர் இதயத்திற்கான இரத்த ஓட்டம் தடைப்படும்போது எங்களுக்கு மாரடைப்பு ஏற்படுகிறது.

உடற்பயிற்சியும் இதயமும்
++++++++++++++++++++++++++
அடுத்து நாம் உடற்பயிற்சி செய்யும்போது இதயத்திற்கு என்ன நடைபெறுகிறது என்று பார்ப்போம். காதலின் சின்னமாக இதயத்தை நாங்கள் கருதினாலும் உடலின் ஒவ்வொரு உறுப்புக்கும் இரத்தத்தை தேவைக்கேற்ப அனுப்புவதுதான் இதயத்தின் பிரதான தொழில் என்பது உங்கள் எல்லோருக்குமே தெரிந்ததுதான். இவ்வாறு இதயம் உடலுறுப்புகளுக்கு குருதியைச் செலுத்த இதயத் தசைகள் தொடர்ச்சியாக சுருங்கி விரிய வேண்டும். அப்போதுதான் இதயம் தொடர்ச்சியாக குருதியை நாடிக் குழாய்களூடாக தொடர்ந்து செலுத்த முடியும். அதற்கு இதயத் தசைகளுக்கு போதுமான குருதியும் ஒட்சிசனும் வழங்கப்பட வேண்டும். இந்த வேலையச் செய்பவைதான் Coronary Artery எனப்படும் முடியுரு நாடிக் குழாய்களாகும்.
நாம் விளையாடும்போது அல்லது கடும் உடற்பயிற்சி செய்யும்போது எமது கை, கால்களுக்கு அதிக இரத்தம், ஒட்சிசன் விநியோகம் தேவைப்படும். இதனால் இதயமும் வேகமாக விரிந்து சுருங்கி அதிக குருதியை உடலுறுப்புகளுக்கு அனுப்ப முற்படும். இங்கு நாங்கள் இதயம் தொழிற்படும் முறையில் ஒரு முக்கிய அம்சத்தையும் கவனிக்க வேண்டும்.
இதயம் குருதி வழங்கும் வேலையைச் செய்யும்போது அதிகமாக இயங்கும் உடலுறுப்புக்கு அதிக குருதியை செலுத்துவதற்கு இதயத் தசைகளுக்கு தேவைப்படும் குருதியானது ஒப்பீட்டளவில் குறைவாகவே கிடைக்கும். இதயவறைகள் சுருங்கி விரியும் நேரம் ஒப்பீட்டளவில் குறைய, முடியுரு நாடிக் குருதி ஓட்டம் இதய விரிதலின்போது மட்டுமே நடைபெறுவதால் சில நேரங்களில் இதயத் தசைகளுக்கு தேவையான அளவு குருதி தற்காலிகமாக கிடைக்காமல் போகலாம்.

நெஞ்சுவலி (Angina)
++++++++++++++++++
நாம் முன்பு குறிப்பிட்டது போல இதயத் தசைகளுக்கு குருதி வழங்கும் நாடிக் குழாய்களின் உட்சுவர் தடிப்படைந்து குருதி செல்லும் பாதை கணிசமான அளவு சுருங்கி இருக்குமானால் (குழாயின் விட்டத்தின் அளவில் 50 -70% க்கும் அதிகமான அளவு அடைபட்டுப் போதல்) அதனூடாக வழமையைவிட குறைவான அளவு குருதியே செலுத்தப்படும். இதனால் வேகமாக இயங்க முற்படும் இதயச் தசைகளுக்கு குறிப்பிட்ட உடற்பயிற்சி நேரத்தில் போதிய ஒட்சிசனும் குருதியும் கிடைக்காமல் போய்விடும். அப்போது எமது இதயப்பகுதியில் தற்காலிக வலியேற்படும். இதனை Angina என்று மருத்துவர்கள் சொல்வார்கள்.
சிலவேளைகளில் சுருக்கென்று ஏற்படும் இந்த வலி இதயத்தில் இருந்து தோள்பட்டை வரை செல்லலாம். இது (Angina) இதயவறைக்குரிய முடியுரு நாடியூடான குருதி ஓட்டக் குறைவால் ஏற்படும் ஒரு தற்காலிக பாதிப்பு. ஓய்வெடுத்தால் வலி குறைந்துவிடும். இது உண்மையில் எமது Coronary Artery எனப்படும் முடியுரு நாடிக் குழாய் சுவர்கள் தடிப்படைந்து இருப்பதைக் காட்டும் எச்சரிக்கை மணியாகும். இவ்வாறு மார்பில் வலி வந்தால் அதை உதாசீனம் செய்யாது உடனடியாக மருத்துவரிடம் காட்டி அதற்குரிய சிகிச்சையைச் செய்து கொள்ள வேண்டும்.

மாரடைப்பு (Heart Attack)
++++++++++++++++++++++
மேலே கூறியதுபோல எங்கள் உடல் அபாய எச்சரிக்கை செய்தும் நாங்கள் வலி சரியாகி விட்டதுதானே என்று உதாசீனம் செய்தால், சில மாதங்கள் செல்லும்போது இதயத் தசைகளுக்கான நாடிக் குழாயில் உட்புறம் மேலும் தடிப்படைந்து குருதி செல்லும் பாதை முற்றாகத் தடைப்படலாம்.
இவ்வாறு குருதி ஓட்டம் முடியுரு நாடியின் கிளைகளில் ஒன்றில் அடைப்படுமானால் அதனால் இதயவறையின் ஒருபகுதித் தசைநார்கள் இறந்து போவதுதான் மாரடைப்பு எனப்படுகிறது. இது உடற்பயிற்சியின்போது அல்லது ஏனைய நேரங்களில்கூட ஏற்படலாம்.
இதன்போது எமது நெஞ்சுப் பகுதியில் தாங்க முடியாத அளவும் வலியேற்படலாம். சிலநேரங்களில் பெரும் பாரம் ஒன்று அழுத்துவது போன்றதொரு உணர்வு மேலோங்கும். இந்த வலி நடுநெஞ்சில் ஏற்பட்டு பின்னர் மெல்ல நகர்ந்து இடது கை, தோள்பட்டை, மற்றும் முதுகுப் பகுதியிலும் பரவலாம்.

இதயச் செயலிழப்பு (Cardiac Arrest)
++++++++++++++++++++++++++++++++
அதேபோல விளையாட்டில் அல்லது உடற்பயிற்சியில் ஈடுபடும் ஒருவருக்கு மாரடைப்பினால் இதய மின்னியக்கத்தில் ஏதாவது குழப்பம் ஏற்பட்டால் அல்லது பாரிய மாரடைப்பினால் குருதிச் சுற்றோட்டம் சடுதியாக முற்றாகத் தடைப்படலாம். இதையே மருத்துவர்கள் இதயச் செயலிழப்பு (Cardiac Arrest) என்று சொல்கிறார்கள்.
இவ்வாறு Cardiac Arrest ஏற்படுபவர்களுக்கு பொதுவாக ஒரு மாதத்திற்கு முன்னரே சில அறிகுறிகள் வ(Angina pain) தெரிய வாய்ப்பிருக்கிறது என்று வைத்திய நிபுணர்கள் சொல்கிறார்கள். நெஞ்சு வலி, மயங்கி விழுதல், இதயம் வேகமாகத் துடித்தல் போன்ற அறிகுறிகள் இருந்திருக்கும் என்று சொல்கிறார்கள். ஆனால் துரதிஷ்டவசமாக சிலருக்கு எந்த அறிகுறியும் இருப்பதில்லை.
இவ்வாறு ஒருவருக்கு மாரடைப்போ இதயச் செயலிழப்போ ஏற்பட்டால் அவருக்கு உடனடியாக முதலுதவி (CPR) செய்வதுடன் வைத்திய சாலைக்கு கொண்டு செல்வதன் மூலம் அவரது உயிரைக் காப்பாற்றி விடமுடியும். இதயச் செயலிழப்பு ஏற்பட்டவருக்கு செயற்கை சுவாசத்தோடு Automated External Defibrillator (AED) யை பயன்படுத்த வேண்டிய தேவையும் ஏற்படலாம்.

பாதுகாப்பான உடற்பயிற்சி/ விளையாட்டுச் செயற்பாடுகள்
============================================================
உடல் உழைப்புக் குறைவடைந்தது மட்டுமில்லாமல் எமது வீட்டு வேலைகளையும் இலகுவாக செய்யப் பல உபகரணங்கள் வந்துவிட்ட சூழலில் எம்மை ஆரோக்கியமாக வைத்திருக்க தொடர்ச்சியான உடற்பயிற்சி அவசியமானது என்பதற்கு மறுபேச்சு இல்லை. அதேநேரம் உடற்பயிற்சியை எப்படிச் செய்வது என்பதில் நாங்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு என்பது உடற்பயிற்சிக்கும் அதிக சக்தி தேவைப்படும் விளையாட்டுகளுக்கும் பொருந்தும். எங்களில் சிலர் உடற்பயிற்சிக் கூடத்திற்கு சென்று உடற்பயிற்சி செய்வதை விரும்புவோம். எங்களில் சிலர் பாட்மிண்டன், வேறுசிலர் கால்பந்து, மற்றும் சிலர் நீண்ட தூரம் வேகமாக நடத்தல், நீண்டதூரம் ஓடுதல் மற்றும் சைக்கிள் ஓடுதல் என்று வேறு வேறு விடயங்களை தமது உடற்பயிற்சித் தெரிவாகத் தெரிவு செய்வார்கள்.
நீங்கள் ஒவ்வொருவரும் உங்களை உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க எந்த விளையாட்டை அல்லது உடற்பயிற்சி முறை தெரிவு செய்கிறீர்கள் என்பது முக்கியமில்லை. ஆனால் அதனை எவ்வாறு செய்கிறீர்கள் என்பதுதான் மிக முக்கியமானது.

தொடர்ச்சியான உடற்பயிற்சி
++++++++++++++++++++++++++++
நாம் உடற்பயிற்சி செய்யும்போது அல்லது அதிக தசை அசைவுகள் தேவைப்படும் விளையாட்டுகளை தொடர்ச்சியின்றி எப்போதாவது செய்வது, (உதாரணம்: மாதத்தில் ஒரு முறை அல்லது இரண்டு முறை மட்டும்) அதுவும் நீண்ட நேரம் செய்வது உங்கள் இதயத்திற்கு ஆபத்தாகலாம். மாறாக உங்களுக்கு பொருத்தமான நேர அட்டவணைப்படி தொடர்ச்சியான முறையில் செய்தல் வேண்டும். உதாரணமாக திங்கள், புதன், வெள்ளி மூன்று நாட்கள் ஒரு மணிநேரம் பாட்மிண்டன் விளையாடுதல்.
உடற்பயிற்சியின்போது போதுமான நீர்ப் பானம் அருந்துதல்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
நாம் தொடர்ந்து கடும் உடற்பயிற்சி செய்யும்போது அல்லது விளையாடும்போது எமது உடலிலிருந்து அதிக நீர் இழக்கப்படும். அதை நாங்கள் மீள சரி செய்யாவிட்டால் எமது இரத்தம் செறிவு அதிகமானதாக மாறும். இதனால் உயர் குருதி அழுத்தப் பிரச்சனை ஏற்படுவதுடன் நாளடைவில் நாடிக் குழாய்களின் உட்சுவர்களில் படிந்து குருதிச் சுற்றோட்டம் தடைப்படலாம். இதனால் எதிர்காலத்தில் மாரடைப்பு ஏற்படலாம். அதனால் உடற் பயிற்சியின்போது போதுமான அளவு நீர் அல்லது ஸ்போர்ட்ஸ் ட்ரிங்க்ஸ் அருந்துங்கள். உடற்பயிற்சி முடிந்தபின்னரும் நிறைய நீர் அருந்துவது நல்லது.

குறுகிய நேர ஓய்வுகள்
++++++++++++++++++++++
உடற்பயிற்சி செய்யும்போது இடைக்கிடையே போதுமான ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள். குறிப்பாக உங்கள் இதயத் துடிப்பு மிகவும் அதிகரிக்குமாக இருந்தால் உடனடியாக ஓய்வு நிலைக்குச் சென்று இதயத்திற்கு ஓய்வு கொடுத்து இதயத்துடிப்பு சாதாரண நிலைக்கு வந்த பின்னர் மீண்டும் தொடருங்கள். மேலே குறிப்பிட்ட அறிகுறிகள் ஏதாவது இருந்தால் உடனடியாக மருத்துவ உதவியை நாடுவது நல்லது.

Warm up and Cool Down
+++++++++++++++++++++++
பாட்மிண்டன், கால்பந்து, கூடைப்பந்து போன்ற அதிக சக்தி விரயமாகும் விளையாட்டுகளில் நீங்கள் ஈடுபடுபவர்களாக இருந்தால் கட்டாயம் முதல் பத்து நிமிடங்கள் உடலைத் தயாராக்கும் (Warm-up) பயிற்சிகளைச் செய்துவிட்டே விளையாடத் தொடங்குங்கள். அதேபோல விளையாடி முடியும்போதும் மீண்டும் பத்து நிமிடங்கள் உடலைத் தளர்வாக்கும் (Cooling Down) பயிற்சிகளைச் செய்யுங்கள்.

நீண்ட இடைவேளையின் பின்னர் மீள ஆரம்பித்தல்
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
தொடர்ச்சியாக உடற்பயிற்சி செய்து வந்த சிலர் மருத்துவ காரணங்களுக்காகவோ கடும் குளிர்காலம் போன்ற வேறு காரணங்களுக்காகவோ நீண்ட நாட்கள் உடற்பயிற்சியை இடைநிறுத்தி இருக்கலாம் (உதாரணம் சைக்கிள் ஓடுதல்). அப்படியானவர்கள் உடற்பயிற்சியை மீள ஆரம்பிக்கும்போது கொஞ்சம் அவதானம் தேவை. எடுத்த எடுப்பிலேயே நீண்டநேரம் உடற்பயிற்சியில் ஈடுபடாது படிப்படியாக நேரத்தையும் பயிற்சியின் வேகத்தையும் மீள அதிகரியுங்கள்.

முதலுதவி பயிற்சியும் வசதிகளும்
++++++++++++++++++++++++++++++++++
நீங்கள் உடற்பயிற்சிக் கூடத்தில் உறுப்பினராக இருப்பவர் என்றால் அங்கு முறையாக முதலுதவிப் பயிற்சி பெற்ற ஊழியர்கள் அல்லது தொண்டர்கள் இருக்கிறார்களா என்று உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். அத்துடன் அந்த உடற் பயிற்சிக் கூடத்தில் Automated External Defibrillator (AED) தொழிற்படு நிலையில் இருக்கிறதா என்பதையும் தெரிந்து வைத்திருங்கள். நீங்கள் ஒரு குழுவாக இயங்குபவர் என்றால் உங்கள் ஸ்போர்ட்ஸ் கிளப்பில் உள்ள சில உறுப்பினர்கள் முதலுதவிப் பயிற்சி (CPR) பெற்றிருப்பதும் நல்லது. எனக்குத் தெரிந்த சிலர் வேறு வேறு நாடுகளில் பாட்மிண்டன் விளையாடும்போது மாரடைப்பு ஏற்பட்டு அவர்களின் நண்பர்களால் உரிய நேரத்தில் முதலுதவி கொடுக்கப்பட்டு காப்பாற்றப்பட்டிருக்கிறார்கள் என்பதை இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.
உடற்பயிற்சி செய்வதன்மூலம் நாம் எமது இதயத்தையும் உடலையும் ஆரோக்கியமாக வைத்திருக்கலாம். அதேநேரம் உடற்பயிற்சி செய்யும்போது இதயத்திற்கு பாதிப்பு ஏற்படாத வகையில் உடற்பயிற்சி செய்வதன்மூலம் எமது இதயத்தையும் பாதுகாத்து எமது நீண்ட ஆயுளையும் உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.

வீமன்
விசேட நன்றி: மருத்துவ துறைசார் தகவல்களைத் தந்துதவிய நண்பர் Dr. தெய்வகுமார்.
Love
Love
Comment
Share

No comments:

Post a Comment

  அடி சறுக்கும் அனுர?   தேசிய மக்கள் சக்தி ஜனாதிபதி தேர்தலில் வடக்கு, கிழக்கில் பெரும் வெற்றியைப் பெறுவோம் என்ற நம்பிக்கையுடன் இருந்திரு...