Thursday, 27 January 2022

 



வார்த்தைகளுக்குச் சொந்தக்காரர் !

 

எங்களில் பலர் எப்போதுமே மற்றவர் மீது பல்வேறு வகையான  குற்றச்சாட்டுகளை வைக்கிறோம். அக் குற்றச்சாட்டுகளுள் மற்றவரின் செயற்பாடுகள், நன்றி மறந்தமை, சுடும் வார்த்தைகள், ஏமாற்றியமை, துரோகம் செய்தமை என்பன அடங்கும். ஆனாலும் அவற்றில் முக்கியமாக எம்மைப் பாதிப்பவையாக இருப்பது, மற்றவர்கள் எம்மைப்பற்றிச் சொல்லும் வார்த்தைகள் தொடர்பானவையே.  இத்தகைய புலம்பல்கள் இளவயதினரில் தொடங்கி வயதானவர்கள் வரை எல்லா வயதினரின் வாயிலிருந்தும் வருவதை நான் அவதானித்து இருக்கிறேன்.

 

“அவர் அப்படிச் சொன்னது என்னைக் மிகவும் காயப்படுத்தி விட்டது”. “அவன் என்னைப் பார்த்து சொன்ன வார்த்தைகளைக் கேட்டதும் எனக்கும் அடக்கமுடியாத கோபம் வந்துவிட்டது, அடிக்கப் போய்விட்டேன்”. இப்படியாக உங்கள் நண்பர்கள், உறவினர்கள் அல்லது அயலவர் தொடர்பாக நண்பர்கள் அல்லது மனைவியிடம் புலம்பி இருப்பீர்கள்  அல்லது மனதிலாவது நினைத்திருப்பீர்கள். சிலவேளை, அந்த சம்பவம் நீண்ட நாட்கள் உங்களுக்கு மனவுளைச்சலைத் தந்திருக்கக்கூடும். இல்லையென்றால் குறித்த நபரை அதன்பின்னர் எப்போதும் எதிரியாகவும் கருதியிருப்பீர்கள்.

 

எனது இளவயதில் நானும் இதற்கு விதிவிலக்காக இருந்தவனில்லை. எடுத்ததுக்கெல்லாம் சட்டென்று கோபப்படுபவனாக, இலகுவில் சண்டைக்குச் செல்பவனாகத்தான் இருந்தேன். ஆனாலும் எனக்குக் கிடைத்த இரு நண்பர்கள் இவ்வாறான சூழ்நிலையை இலகுவாகக் கடந்து செல்ல உதவினார்கள். ஆரம்பத்தில் அவர்களின் அறிவுரை அர்த்தமற்றதாகவே எனக்குப் பட்டது. ஆனாலும் ஓரிரண்டு வருடங்களிலேயே மற்றவரின் வார்த்தைகள் என்னைச் சிறிதும் பாதிக்காத வகையில் கடந்து போக முடிந்தது.

 

இது நடந்தது கிட்டத்தட்ட மூன்று தசாப்தங்களுக்கு முன்னர் எனது இருபதாம் வயதில்.. அப்போது நான் உயர்தரப் பரீட்சை எழுதிவிட்டு, பல்கலைக்கழக அனுமதிக்கு காத்திருந்தபோது எழுதுவினைஞராக வேலை கிடைத்து கொழும்பில் வேலை செய்த ஆரம்பித்திருந்தேன். இலங்கையின் வடபகுதியில் இருந்து வந்திருந்த எனக்கு நான் முதலில் கூறியது போலவே ஊரில் இருந்தது போலவே கொஞ்சம் சண்டித்தன குணம் இருந்தது. அந்தக் காலப் பகுதியில்தான் நான் தங்கியிருந்த அதே YMCA Hostel இல் நான் குறிப்பிட்ட, கண்டியைச் சேர்ந்த அண்ணன் தம்பிகளான இருவர் எனது அறை நண்பர்களாக இணைந்து கொண்டார்கள்.

 

கொஞ்ச நாட்களிலேயே இருவரும் எனக்கு நல்ல நண்பர்களாக மாறிவிட்டார்கள். அந்த Hostelஇல் இலங்கையின் வடக்கு, கிழக்கு மற்றும் மத்திய மலைநாட்டைச் சேர்ந்த பலரும் தங்கியிருந்தார்கள். அதில் பலரும் என்னைப்போல வேலை செய்பவர்கள், சிலர் உயர்கல்வி கற்பவர்கள். பொதுவாக, ஒவ்வொருநாளும் மாலையில் நாங்கள் அனைவரும் கிரிக்கெட் அல்லது உதைபந்து விளையாடுவது வழமை. இதன்போது அயலில் உள்ள இளைஞர்களும் எங்களுடன் இணைந்து கொள்வார்கள்.

 

விளையாடும்போது அவ்வப்போது எங்களுக்குள் வாக்குவாதம், சிறு சண்டைகள் வந்துவிடும். அதில் நிச்சயம் எனது பங்கும் இருக்கும். இதை அவதானித்த எனது அறை நண்பர்களான சகோதரர்கள் என்னிடம், “நீ எதற்காக இப்படிக் கோபப்படுகிறாய்? சண்டைக்குப் போகிறாய்?” என்று கேட்டனர். “அவன் கெட்ட வார்த்தை பேசினான். எனது தாயாரைப் பற்றியும் மோசமாக விமர்சித்தான். அதனால்தான் எனக்குக் கோபம் வந்தது. அவனை அடிக்கப் போனேன்” என்று பதில் சொன்னேன்.

 

அவர்கள் அடுத்துக் கேட்ட கேள்வி என்னை உண்மையிலேயே திகைக்க வைத்தது. அந்தக் கேள்வி, “உன் தாயாரைப் பற்றி அவன் சொன்னது உண்மையா?”. நான் ஒரு கணம் உறைந்து, பின்னர் “இல்லை” என்று அவசரமாகப் பதிலளித்தேன். உடனே, அடுத்த கேள்வி வந்து விழுந்தது. “அப்படியானால் உனக்கு ஏன் கோபம் வரவேண்டும்?”. இப்போது என்னிடம் பதிலில்லை. அவர்களின் கேள்வி நியாயமானது என்றே தோன்றியது. “தெரியவில்லை” என்றேன்.

 

“உன்னை நோக்கி ஒருவன் தகாத வார்த்தையைச் சொல்லும்போது, அதற்கு நீ பதிலளித்தாலோ எதிர் வினையாற்றினாலோ அந்த வார்த்தை உனக்குச் சொந்தமாகிறது. நீ அவன் சொல்லும் வார்த்தைகளைப் புறம்தள்ளும்போது அது சொன்னவனுக்கே சொந்தமாகிறது” என்று அவர்கள் சொன்னார்கள். இது நல்ல வார்த்தைகளுக்கும் பொருந்தும் என்றார்கள்.

 

“ஒருவர் உங்களை வாழ்த்தும்போது நீங்கள் அதை ஏற்று நன்றி சொல்லும்போது  நீங்களும் மகிழ்ச்சி அடைவீர்கள், அதைப் பார்த்து வாழ்த்தியவரும் மகிழ்ச்சி அடைவார். அதைப் போலவே உங்களை வசைபாடும் ஒருவரின் நோக்கமும் உங்களைப் புண்படுத்துவதுதான். நீங்கள் அவரது வார்த்தைகளால் தாக்கப்பட்டு எதிர்வினையாற்றினால் உங்களை வசை பாடியவர் வென்று விடுகிறார். நீங்கள் கோபத்தில் அவரை உடல்ரீதியாகத் தாக்கினாலும் அவரை அடித்துவிட்டேன் என்று மகிழ்ந்தாலும் அவரது வேண்டாத வார்த்தைகளால் மனம் புண்பட்டபோதே தோற்றுவிடுகிறீர்கள்” என்று என் நண்பர்கள் சொன்னபோது யோசிக்கத் தொடங்கினேன்.

 

சில நாட்களின் பின்னர் அவர்கள் சொன்னவற்றை மீட்டுப் பார்த்தபோது எனக்கு அது அர்த்தமற்றதாகவே பட்டது. இது எப்படிச் சாத்தியம் என்று நினைத்தேன். ஆனாலும் நண்பர்கள் சொன்னதால் முயற்சித்துப் பார்ப்போமே என்று எண்ணினேன். அதன் பின்னர் வந்த நாட்களில் விளையாடும்போதும் வேறு சூழலிலும் மற்றவர்களுடன் வாக்குவாதம் ஏற்படும்போதெல்லாம் அந்த இரண்டு நண்பர்கள் சொன்னதை நினைத்துக் கொண்டேன். மற்றவர் வார்த்தைகளால் கோபப்படுவதைக் கட்டுப்படுத்தத் தொடங்கினேன்.

 

ஆரம்பத்தில் அது ஒரு கஷ்டமான செயலாகத்தான் இருந்தது. ஆனால் நான் மற்றவர் வார்த்தைகளால் கோபப்படாதபோது அவர்களின் முகத்தில் திருப்தியின்மையைப் பார்த்தேன். அது உண்மையில் எனக்கு மகிழ்ச்சியைத் தந்தது. அதன்பின், மற்றவர்களின் வார்த்தைகள் எனது மனதை பாதிக்க விடாதிருப்பது சுலபமாகிவிட்டது. அதன் பின்னர் யார் என்ன சொன்னாலும் அது என்னைச் சிறிதும் பாதித்ததில்லை, பாதிக்கவிட்டதில்லை.

எங்களில் பலர், மற்றவர்கள் சொல்லும் வார்த்தைகளுக்கு நாங்கள் கொடுக்கும் முக்கியத்துவம் எங்களை எப்படிப் பாதிக்கிறது என்பதைப் புரிந்துகொள்வதில்லை. மற்றவர் வார்ததைகள் எமது மனதை மட்டுமல்ல, உடல் ஆரோக்கியத்தையும் பாதிக்கிறது. அது மட்டுமல்ல, அது எங்கள் கவனத்தையும் சிதறடிக்கிறது. உங்கள் வினைத்திறனைப் பாதிக்கிறது. எங்கள் மகிழ்ச்சியைக் காவு வாங்குகிறது. மொத்தத்தில் எங்களை மெல்ல மெல்ல அழித்துவிடுகிறது.

 

இன்று நான் எனது அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்ததன் நோக்கம் இது உங்களில் பலருக்கு ஏதோ ஒரு வகையில் உதவும் என்ற எண்ணத்தில்தான். உங்களை எவராவது தரக்குறைவாகத் திட்டினாலோ விமர்சித்தாலோ அதனைப் புறக்கணிக்கப் பழகுங்கள். அவர்கள் உங்கள் மேல் வீசும் சுடுசொற்களை பொறுக்கிப் பத்திரப்படுத்தாதீர்கள். வீசியவரிடமே அவற்றை விட்டுவிடுங்கள். ஆரம்பத்தில் இது கடினமானதாகத் தோன்றினாலும் குறுகிய காலத்திலேயே இந்த வித்தை உங்கள் வசப்படும்.

 

நான் இப்படிச் சொல்வதற்காக உண்மையில் கோபப்பட வேண்டிய இடத்தில் கோபப்பட வேண்டாம் என்று சொல்லவில்லை. சமுதாயத்தில் தவறு நடைபெறும் நேரத்திலும் ஒருவர் தவறாக நடத்தப்படும் சந்தர்ப்பத்திலும் கோபப்படுவதிலும் அதனைத் தட்டிக் கேட்பதிலும் தவறில்லை என்பது மட்டுமல்ல, கோபப்படாதிருப்பதும் தவறாகிவிடும்.

- வீமன் -

No comments:

Post a Comment

  அடி சறுக்கும் அனுர?   தேசிய மக்கள் சக்தி ஜனாதிபதி தேர்தலில் வடக்கு, கிழக்கில் பெரும் வெற்றியைப் பெறுவோம் என்ற நம்பிக்கையுடன் இருந்திரு...