Links

Monday, 8 November 2021

 உடற்பயிற்சியின்போது ஏற்படும் மாரடைப்பு-மரணமும் அதைத் தவிர்த்தலும்

=======================================================================


கடந்த மாத இறுதியில் நிகழ்ந்த கன்னட சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமாரின் திடீர் மரணம் அவரது ரசிகர்களை மட்டுமன்றி ஏனைய பலரையும் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது. அதற்கு அவரது பிரபலம் மற்றும் சமூக சேவைகள் மட்டுமே காரணமல்ல. அவர் உடலைக் கட்டுக்கோப்பாக வைத்திருப்பதற்கும் ஆரோக்கியமாக இருப்பதற்கும் அடையாளமாக இருந்த ஒருவர். அவர்களது நண்பர்களால் “உடற்பயிற்சி வெறியர்” என்று செல்லமாக அழைக்கப்பட்ட ஒருவர். அத்தோடு 2017 இல் பெங்களூரில் உள்ள Sri Jayadeva Institute of Cardiovascular Sciences and Research Institute அறிமுகப்படுத்திய “Prevent Premature Heart Attack” initiative இன் தூதுவராக (Ambassador) ஆக இருந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு உடற்பயிற்சி செய்யும்போது அல்லது விளையாட்டுப் பயிற்சியில் ஈடுபடும்போது ஒருவருக்கு மாரடைப்பு அல்லது இதய செயலிழப்பு ஏற்படுவதும் இறப்பதுவும் ஒரு சாதாரண நிகழ்வாகவே இருக்கிறது. உதாரணமாக அமெரிக்காவில் மட்டும் வருடாந்தம் 2,269 ஆண்களும் 136 பெண்களும் உடற்பயிற்சி செய்யும்போது இதய அடைப்பு (Cardiac Arrest) இனால் பாதிக்கப்படுகிறார்கள். இவர்களுள் கணிசமானவர்கள் உரியநேரத்தில் முதலுதவி மற்றும் சிகிச்சை கிடைக்காது இறந்தும் போகிறார்கள். ஆனால் பிரபலங்கள் பாதிக்கப்படும்போது மட்டும் ஊடகங்களும் நாமும் பேசிவிட்டு அதனை மறந்து விடுகிறோம்.
அண்மைக் காலங்களில் தெற்காசிய ஆண்களில் சிலர் பாட்மிண்டன், கால்ப்பந்து போன்ற விளையாட்டுகளின்போதும் கடும் உடற் பயிற்சியின்போதும் இதய அடைப்பினால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். ஒரு சிலர் துரதிஸ்டவசமாக இறந்தும் போயிருக்கிறார்கள்.
இவ்வாறு உடற்பயிற்சி செய்து உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்கும் பலர் மாரடைப்பால் பாதிக்கப்படும் நிலையில் எங்களில் பலருக்கு உடற்பயிற்சி செய்வதை விட்டுவிட்டால் உயிரோடாவது இருக்கலாமோ என்ற எண்ணம் எழக்கூடும். ஆனால், உடற்பயிற்சி செய்யும்போது ஏன் மாரடைப்பு வருகிறது என்பதை நாங்கள் தெரிந்து கொண்டால் எதை நாம் செய்யலாம், எதைச் செய்யக்கூடாது என்ற தெளிவு கிடைக்கும் என்று நம்புகிறேன்.

மாரடைப்பு ஏன் ஏற்படுகிறது?
+++++++++++++++++++++++++++++
இப்போதெல்லாம் இள வயதிலிருந்தே பலரும் தமது உடல் ஆரோக்கியம் பேணுவதற்காக பல்வேறு உடற்பயிற்சிகளில் ஈடுபடுகிறார்கள். ஆனால் அவ்வாறு உடற்பயிற்சி செய்வதால் மட்டுமே எமது உடல் மிக ஆரோக்கியமாக இருக்கும், இதயநோய் எதுவுமே எம்மை அண்டாது என்று நாங்கள் நினைத்துவிடக் கூடாது.
எங்கள் பரம்பரையில் (தந்தை, தாய் வழியில்) இளவயது மாரடைப்பு ஏற்பட்டு இருந்தால், எங்களுக்கும் மாரடைப்பு வருவதற்கு அதிக சந்தர்ப்பம் உள்ளது. இதைத் தவிர கட்டுப்பாடு அற்ற நீரிழிவு நோய், உடற்பருமன், மனவழுத்தம் என்பனவும் எமக்கு இதயநோய்கள் ஏற்படும் சந்தர்ப்பத்தை அதிகரிக்கின்றன.
இவை ஒருபுறம் இருக்க, வயது ஏறும்போது எமது நாடிக் குழாய்கள் படிப்படியாக தடிப்படைகின்றன. இதைவிட, எமது குருதியில் HDL எனப்படும் நல்ல கொழுப்பு குறைந்து LHL எனப்படும் கெட்ட கொழுப்பு அதிகரிப்பதும் நாடிக் குழாயில் விரைவாக அடைப்பு ஏற்படும் சந்தர்ப்பம் அதிகரிக்கும். இவ்வாறு இதயத்திற்கு செல்லும் முடியுரு நாடிக் குழாயின் உட்சுவர் தடிப்படைந்து பின்னர் இதயத்திற்கான இரத்த ஓட்டம் தடைப்படும்போது எங்களுக்கு மாரடைப்பு ஏற்படுகிறது.

உடற்பயிற்சியும் இதயமும்
++++++++++++++++++++++++++
அடுத்து நாம் உடற்பயிற்சி செய்யும்போது இதயத்திற்கு என்ன நடைபெறுகிறது என்று பார்ப்போம். காதலின் சின்னமாக இதயத்தை நாங்கள் கருதினாலும் உடலின் ஒவ்வொரு உறுப்புக்கும் இரத்தத்தை தேவைக்கேற்ப அனுப்புவதுதான் இதயத்தின் பிரதான தொழில் என்பது உங்கள் எல்லோருக்குமே தெரிந்ததுதான். இவ்வாறு இதயம் உடலுறுப்புகளுக்கு குருதியைச் செலுத்த இதயத் தசைகள் தொடர்ச்சியாக சுருங்கி விரிய வேண்டும். அப்போதுதான் இதயம் தொடர்ச்சியாக குருதியை நாடிக் குழாய்களூடாக தொடர்ந்து செலுத்த முடியும். அதற்கு இதயத் தசைகளுக்கு போதுமான குருதியும் ஒட்சிசனும் வழங்கப்பட வேண்டும். இந்த வேலையச் செய்பவைதான் Coronary Artery எனப்படும் முடியுரு நாடிக் குழாய்களாகும்.
நாம் விளையாடும்போது அல்லது கடும் உடற்பயிற்சி செய்யும்போது எமது கை, கால்களுக்கு அதிக இரத்தம், ஒட்சிசன் விநியோகம் தேவைப்படும். இதனால் இதயமும் வேகமாக விரிந்து சுருங்கி அதிக குருதியை உடலுறுப்புகளுக்கு அனுப்ப முற்படும். இங்கு நாங்கள் இதயம் தொழிற்படும் முறையில் ஒரு முக்கிய அம்சத்தையும் கவனிக்க வேண்டும்.
இதயம் குருதி வழங்கும் வேலையைச் செய்யும்போது அதிகமாக இயங்கும் உடலுறுப்புக்கு அதிக குருதியை செலுத்துவதற்கு இதயத் தசைகளுக்கு தேவைப்படும் குருதியானது ஒப்பீட்டளவில் குறைவாகவே கிடைக்கும். இதயவறைகள் சுருங்கி விரியும் நேரம் ஒப்பீட்டளவில் குறைய, முடியுரு நாடிக் குருதி ஓட்டம் இதய விரிதலின்போது மட்டுமே நடைபெறுவதால் சில நேரங்களில் இதயத் தசைகளுக்கு தேவையான அளவு குருதி தற்காலிகமாக கிடைக்காமல் போகலாம்.

நெஞ்சுவலி (Angina)
++++++++++++++++++
நாம் முன்பு குறிப்பிட்டது போல இதயத் தசைகளுக்கு குருதி வழங்கும் நாடிக் குழாய்களின் உட்சுவர் தடிப்படைந்து குருதி செல்லும் பாதை கணிசமான அளவு சுருங்கி இருக்குமானால் (குழாயின் விட்டத்தின் அளவில் 50 -70% க்கும் அதிகமான அளவு அடைபட்டுப் போதல்) அதனூடாக வழமையைவிட குறைவான அளவு குருதியே செலுத்தப்படும். இதனால் வேகமாக இயங்க முற்படும் இதயச் தசைகளுக்கு குறிப்பிட்ட உடற்பயிற்சி நேரத்தில் போதிய ஒட்சிசனும் குருதியும் கிடைக்காமல் போய்விடும். அப்போது எமது இதயப்பகுதியில் தற்காலிக வலியேற்படும். இதனை Angina என்று மருத்துவர்கள் சொல்வார்கள்.
சிலவேளைகளில் சுருக்கென்று ஏற்படும் இந்த வலி இதயத்தில் இருந்து தோள்பட்டை வரை செல்லலாம். இது (Angina) இதயவறைக்குரிய முடியுரு நாடியூடான குருதி ஓட்டக் குறைவால் ஏற்படும் ஒரு தற்காலிக பாதிப்பு. ஓய்வெடுத்தால் வலி குறைந்துவிடும். இது உண்மையில் எமது Coronary Artery எனப்படும் முடியுரு நாடிக் குழாய் சுவர்கள் தடிப்படைந்து இருப்பதைக் காட்டும் எச்சரிக்கை மணியாகும். இவ்வாறு மார்பில் வலி வந்தால் அதை உதாசீனம் செய்யாது உடனடியாக மருத்துவரிடம் காட்டி அதற்குரிய சிகிச்சையைச் செய்து கொள்ள வேண்டும்.

மாரடைப்பு (Heart Attack)
++++++++++++++++++++++
மேலே கூறியதுபோல எங்கள் உடல் அபாய எச்சரிக்கை செய்தும் நாங்கள் வலி சரியாகி விட்டதுதானே என்று உதாசீனம் செய்தால், சில மாதங்கள் செல்லும்போது இதயத் தசைகளுக்கான நாடிக் குழாயில் உட்புறம் மேலும் தடிப்படைந்து குருதி செல்லும் பாதை முற்றாகத் தடைப்படலாம்.
இவ்வாறு குருதி ஓட்டம் முடியுரு நாடியின் கிளைகளில் ஒன்றில் அடைப்படுமானால் அதனால் இதயவறையின் ஒருபகுதித் தசைநார்கள் இறந்து போவதுதான் மாரடைப்பு எனப்படுகிறது. இது உடற்பயிற்சியின்போது அல்லது ஏனைய நேரங்களில்கூட ஏற்படலாம்.
இதன்போது எமது நெஞ்சுப் பகுதியில் தாங்க முடியாத அளவும் வலியேற்படலாம். சிலநேரங்களில் பெரும் பாரம் ஒன்று அழுத்துவது போன்றதொரு உணர்வு மேலோங்கும். இந்த வலி நடுநெஞ்சில் ஏற்பட்டு பின்னர் மெல்ல நகர்ந்து இடது கை, தோள்பட்டை, மற்றும் முதுகுப் பகுதியிலும் பரவலாம்.

இதயச் செயலிழப்பு (Cardiac Arrest)
++++++++++++++++++++++++++++++++
அதேபோல விளையாட்டில் அல்லது உடற்பயிற்சியில் ஈடுபடும் ஒருவருக்கு மாரடைப்பினால் இதய மின்னியக்கத்தில் ஏதாவது குழப்பம் ஏற்பட்டால் அல்லது பாரிய மாரடைப்பினால் குருதிச் சுற்றோட்டம் சடுதியாக முற்றாகத் தடைப்படலாம். இதையே மருத்துவர்கள் இதயச் செயலிழப்பு (Cardiac Arrest) என்று சொல்கிறார்கள்.
இவ்வாறு Cardiac Arrest ஏற்படுபவர்களுக்கு பொதுவாக ஒரு மாதத்திற்கு முன்னரே சில அறிகுறிகள் வ(Angina pain) தெரிய வாய்ப்பிருக்கிறது என்று வைத்திய நிபுணர்கள் சொல்கிறார்கள். நெஞ்சு வலி, மயங்கி விழுதல், இதயம் வேகமாகத் துடித்தல் போன்ற அறிகுறிகள் இருந்திருக்கும் என்று சொல்கிறார்கள். ஆனால் துரதிஷ்டவசமாக சிலருக்கு எந்த அறிகுறியும் இருப்பதில்லை.
இவ்வாறு ஒருவருக்கு மாரடைப்போ இதயச் செயலிழப்போ ஏற்பட்டால் அவருக்கு உடனடியாக முதலுதவி (CPR) செய்வதுடன் வைத்திய சாலைக்கு கொண்டு செல்வதன் மூலம் அவரது உயிரைக் காப்பாற்றி விடமுடியும். இதயச் செயலிழப்பு ஏற்பட்டவருக்கு செயற்கை சுவாசத்தோடு Automated External Defibrillator (AED) யை பயன்படுத்த வேண்டிய தேவையும் ஏற்படலாம்.

பாதுகாப்பான உடற்பயிற்சி/ விளையாட்டுச் செயற்பாடுகள்
============================================================
உடல் உழைப்புக் குறைவடைந்தது மட்டுமில்லாமல் எமது வீட்டு வேலைகளையும் இலகுவாக செய்யப் பல உபகரணங்கள் வந்துவிட்ட சூழலில் எம்மை ஆரோக்கியமாக வைத்திருக்க தொடர்ச்சியான உடற்பயிற்சி அவசியமானது என்பதற்கு மறுபேச்சு இல்லை. அதேநேரம் உடற்பயிற்சியை எப்படிச் செய்வது என்பதில் நாங்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு என்பது உடற்பயிற்சிக்கும் அதிக சக்தி தேவைப்படும் விளையாட்டுகளுக்கும் பொருந்தும். எங்களில் சிலர் உடற்பயிற்சிக் கூடத்திற்கு சென்று உடற்பயிற்சி செய்வதை விரும்புவோம். எங்களில் சிலர் பாட்மிண்டன், வேறுசிலர் கால்பந்து, மற்றும் சிலர் நீண்ட தூரம் வேகமாக நடத்தல், நீண்டதூரம் ஓடுதல் மற்றும் சைக்கிள் ஓடுதல் என்று வேறு வேறு விடயங்களை தமது உடற்பயிற்சித் தெரிவாகத் தெரிவு செய்வார்கள்.
நீங்கள் ஒவ்வொருவரும் உங்களை உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க எந்த விளையாட்டை அல்லது உடற்பயிற்சி முறை தெரிவு செய்கிறீர்கள் என்பது முக்கியமில்லை. ஆனால் அதனை எவ்வாறு செய்கிறீர்கள் என்பதுதான் மிக முக்கியமானது.

தொடர்ச்சியான உடற்பயிற்சி
++++++++++++++++++++++++++++
நாம் உடற்பயிற்சி செய்யும்போது அல்லது அதிக தசை அசைவுகள் தேவைப்படும் விளையாட்டுகளை தொடர்ச்சியின்றி எப்போதாவது செய்வது, (உதாரணம்: மாதத்தில் ஒரு முறை அல்லது இரண்டு முறை மட்டும்) அதுவும் நீண்ட நேரம் செய்வது உங்கள் இதயத்திற்கு ஆபத்தாகலாம். மாறாக உங்களுக்கு பொருத்தமான நேர அட்டவணைப்படி தொடர்ச்சியான முறையில் செய்தல் வேண்டும். உதாரணமாக திங்கள், புதன், வெள்ளி மூன்று நாட்கள் ஒரு மணிநேரம் பாட்மிண்டன் விளையாடுதல்.
உடற்பயிற்சியின்போது போதுமான நீர்ப் பானம் அருந்துதல்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
நாம் தொடர்ந்து கடும் உடற்பயிற்சி செய்யும்போது அல்லது விளையாடும்போது எமது உடலிலிருந்து அதிக நீர் இழக்கப்படும். அதை நாங்கள் மீள சரி செய்யாவிட்டால் எமது இரத்தம் செறிவு அதிகமானதாக மாறும். இதனால் உயர் குருதி அழுத்தப் பிரச்சனை ஏற்படுவதுடன் நாளடைவில் நாடிக் குழாய்களின் உட்சுவர்களில் படிந்து குருதிச் சுற்றோட்டம் தடைப்படலாம். இதனால் எதிர்காலத்தில் மாரடைப்பு ஏற்படலாம். அதனால் உடற் பயிற்சியின்போது போதுமான அளவு நீர் அல்லது ஸ்போர்ட்ஸ் ட்ரிங்க்ஸ் அருந்துங்கள். உடற்பயிற்சி முடிந்தபின்னரும் நிறைய நீர் அருந்துவது நல்லது.

குறுகிய நேர ஓய்வுகள்
++++++++++++++++++++++
உடற்பயிற்சி செய்யும்போது இடைக்கிடையே போதுமான ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள். குறிப்பாக உங்கள் இதயத் துடிப்பு மிகவும் அதிகரிக்குமாக இருந்தால் உடனடியாக ஓய்வு நிலைக்குச் சென்று இதயத்திற்கு ஓய்வு கொடுத்து இதயத்துடிப்பு சாதாரண நிலைக்கு வந்த பின்னர் மீண்டும் தொடருங்கள். மேலே குறிப்பிட்ட அறிகுறிகள் ஏதாவது இருந்தால் உடனடியாக மருத்துவ உதவியை நாடுவது நல்லது.

Warm up and Cool Down
+++++++++++++++++++++++
பாட்மிண்டன், கால்பந்து, கூடைப்பந்து போன்ற அதிக சக்தி விரயமாகும் விளையாட்டுகளில் நீங்கள் ஈடுபடுபவர்களாக இருந்தால் கட்டாயம் முதல் பத்து நிமிடங்கள் உடலைத் தயாராக்கும் (Warm-up) பயிற்சிகளைச் செய்துவிட்டே விளையாடத் தொடங்குங்கள். அதேபோல விளையாடி முடியும்போதும் மீண்டும் பத்து நிமிடங்கள் உடலைத் தளர்வாக்கும் (Cooling Down) பயிற்சிகளைச் செய்யுங்கள்.

நீண்ட இடைவேளையின் பின்னர் மீள ஆரம்பித்தல்
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
தொடர்ச்சியாக உடற்பயிற்சி செய்து வந்த சிலர் மருத்துவ காரணங்களுக்காகவோ கடும் குளிர்காலம் போன்ற வேறு காரணங்களுக்காகவோ நீண்ட நாட்கள் உடற்பயிற்சியை இடைநிறுத்தி இருக்கலாம் (உதாரணம் சைக்கிள் ஓடுதல்). அப்படியானவர்கள் உடற்பயிற்சியை மீள ஆரம்பிக்கும்போது கொஞ்சம் அவதானம் தேவை. எடுத்த எடுப்பிலேயே நீண்டநேரம் உடற்பயிற்சியில் ஈடுபடாது படிப்படியாக நேரத்தையும் பயிற்சியின் வேகத்தையும் மீள அதிகரியுங்கள்.

முதலுதவி பயிற்சியும் வசதிகளும்
++++++++++++++++++++++++++++++++++
நீங்கள் உடற்பயிற்சிக் கூடத்தில் உறுப்பினராக இருப்பவர் என்றால் அங்கு முறையாக முதலுதவிப் பயிற்சி பெற்ற ஊழியர்கள் அல்லது தொண்டர்கள் இருக்கிறார்களா என்று உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். அத்துடன் அந்த உடற் பயிற்சிக் கூடத்தில் Automated External Defibrillator (AED) தொழிற்படு நிலையில் இருக்கிறதா என்பதையும் தெரிந்து வைத்திருங்கள். நீங்கள் ஒரு குழுவாக இயங்குபவர் என்றால் உங்கள் ஸ்போர்ட்ஸ் கிளப்பில் உள்ள சில உறுப்பினர்கள் முதலுதவிப் பயிற்சி (CPR) பெற்றிருப்பதும் நல்லது. எனக்குத் தெரிந்த சிலர் வேறு வேறு நாடுகளில் பாட்மிண்டன் விளையாடும்போது மாரடைப்பு ஏற்பட்டு அவர்களின் நண்பர்களால் உரிய நேரத்தில் முதலுதவி கொடுக்கப்பட்டு காப்பாற்றப்பட்டிருக்கிறார்கள் என்பதை இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.
உடற்பயிற்சி செய்வதன்மூலம் நாம் எமது இதயத்தையும் உடலையும் ஆரோக்கியமாக வைத்திருக்கலாம். அதேநேரம் உடற்பயிற்சி செய்யும்போது இதயத்திற்கு பாதிப்பு ஏற்படாத வகையில் உடற்பயிற்சி செய்வதன்மூலம் எமது இதயத்தையும் பாதுகாத்து எமது நீண்ட ஆயுளையும் உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.

வீமன்
விசேட நன்றி: மருத்துவ துறைசார் தகவல்களைத் தந்துதவிய நண்பர் Dr. தெய்வகுமார்.
Love
Love
Comment
Share

Friday, 13 August 2021

 



யானைகளுக்கும் சுதந்திரம் கொடுப்போம்!
==================================
காடுகளின் ராஜாவாக சிங்கத்தை கற்பனை செய்து மனிதர்கள் கதைபேசி வந்தாலும், காட்டில் உள்ள விலங்குகளில் யானைகளே கம்பீரமான விலங்குகள். அதுமட்டுமன்றி யானைகள் காடுகளின் பல்லினத்தன்மை மற்றும் சூழல் சமநிலையைப் பேணுவதிலும் ஏனைய சிறிய விலங்கினங்களின் வாழ்வியலிலும் வேறு விலங்குகள் செய்ய முடியாத பங்களிப்பை வழங்குகின்றன. இப்படி காட்டில் உள்ள தாவரங்கள், விலங்குகளின் பல்லினத்தன்மையை பேண உதவும் யானைகள்தான் உண்மையில் காட்டின் ராஜாக்கள்.
இன்று நாம் இந்தியாவிலும் இலங்கையிலும் செலவு செய்து உருவாக்கி காடுகளில் வீசும் விதைப் பந்துகளை இயல்பாகவே காலம் காலமாகச் செய்து வரும் விலங்குகள்தான் இந்த யானைகள். அதுவும் அவை கூட்டமாக வருடம் முழுவதும் மிக நீண்ட தூரம் பயணிப்பவை என்பதனால் விதைகளை மனிதர்களைவிட வேகமாகவும் வினைத்திறனுடனும் காடுகளின் பல்வேறு இடங்களிலும் தூவிச் செல்கின்றன.
அவற்றின் கழிவாக வீசிச் செல்லும் இலத்தி காட்டு மண்ணை வளமாக்கும் இயற்கை வளமாக்கியாகப் பயன்படுகிறது. யானைகள் தமது குடிநீர்த் தேவைக்காக தமது கால்கள், தந்தம், துதிக்கையைக் கொண்டு நிலத்தில் குழிதோண்டி நீரைக் குடிக்கும் வழக்கம் உள்ள விலங்குகள் என்பதனால் அவை தோண்டும் சிறுகுழிகள் ஏனைய சிறு விலங்குகள் தண்ணீர் அருந்தப் பயன்படுகின்றன.
நான் முதலில் சொன்னது போல யானைகள் வருடம் முழுவதுமே தாம் வாழும் காட்டில் பெரிய ஒரு சுற்றுப்பாதையில் வருடம் முழுவதும் சுற்றி வருபவை என்பதனால் தாம் செல்லும் பாதையை உருவாக்க முட்செடிகள், மரங்களை அகற்றுகின்றன. இந்த செயற்பாடுகள் காட்டில் வாழும் ஏனைய விலங்குகள் நடமாட பாதை ஏற்படுகிறது. பெரிய சில மரங்கள் அகற்றப்படுவதால் அந்த இடங்களில் பல சிறிய மரங்கள், செடிவகைகள் வளரக் கூடியதாக உள்ளது. இதன்மூலம் அந்த சிறிய தாவரங்களை உணவாகக் கொள்ளும் விலங்குகளுக்கும் உணவு கிடைக்கிறது. அவற்றின் எண்ணிக்கையும் பேணப்படுகிறது.
ஆனால் மனித இனம் யானைகளுடன் முகத்திற்கு முகம் சந்தித்த நாளில் இருந்து யானைகள் இனத்திற்கே சனி பிடித்தது எனலாம். பேராசை பிடித்த இரண்டு கால் விலங்குகள் கண்ணில் பட்ட நாளில் இருந்து யானைகள் அவர்களால் வேட்டையாடப்பட்டன; தந்தங்களுக்காகக் கொடூரமான கொல்லப்பட்டன, சிறைப்பிடிக்கப்பட்டு பாரம் தூக்கும் வேலைகள், கட்டுமான வேளைகளில் அடிமைகளாக்கப்பட்டன; விலங்கியல் பூங்காக்களில் சிறிய இடங்களில் அடைத்து வைக்கப்பட்டு பணம் உழைக்கும் இயந்திரங்களாகப் பயன்படுத்தப்பட்டன; சர்க்கஸ்களில் அவற்றின் இயல்புக்கு மாறான, கடினமான வேலைகளை செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டன.
இன்று யானைகளை கொல்வது சட்டப்படி குற்றம் என்றபோதும் சட்டவிரோதமாக இன்றும் ஆபிரிக்காவில் யானைகளை சில குரூர மனிதர்கள் கொன்றபடிதான் இருக்கிறார்கள். 2016 இல் சேகரித்த தரவுகளின்படி Trophy Hunters என்று அழைக்கப்படும் மனித உருவில் திரியும் விலங்குகளால் வருடாந்தம் ஆயிரம் யானைகள் கொல்லப்பட்டிருக்கின்றன. 2001 இலிருந்து 2015 வரையான காலப்பகுதியில் 81,572 யானைகள் இவ்வாறு கொல்லப்பட்டுள்ளன.
மறுபுறத்தில் விலங்கியல் பூங்கா என்ற பெயரில் அடைத்து வைப்பதும் தாய்லாந்து, இலங்கை போன்ற நாடுகளில் சுற்றுலா ஊக்குவிப்பு என்ற பெயரில் யானைகளை சவாரிகளுக்கு பயன்படுத்தும் கொடுமையும் இன்னமும் தொடர்கிறது. யானை சவாரி செல்வதை ஒரு புது அனுபவமாக நினைப்பவர்கள், யானைகள் உங்கள் உல்லாச சுற்றுலாக் காலங்களில் உங்களை சுமந்து சென்று உங்களை மகிழ்ச்சிப்படுத்த இந்த மண்ணில் பிறக்கவில்லை என்பதைப் புரிந்து கொள்ளவேண்டும்.
மறுபுறத்தில் இந்தியா இலங்கை போன்ற நாடுகளில் இந்து, புத்த சமயத்தவர்கள் பக்தி என்ற பெயரில் யானைகளை கோவில்களில் யானைகளை நிரந்தர அடிமைகளாக வைத்திருக்கிறார்கள். இவ்வாறு கோவில்கள், பெளத்த கோவில்களில் நிற்கும் யானைகள் மகிழ்ச்சியாக இருப்பதாக இவர்களே சொல்லிக் கொள்கிறார்கள். ஆனால் யானைகள் மனிதர்களோடு வாழப் பழகிவிட்ட விலங்குகளாக இருந்தபோதும் அவற்றை ஆடு மாடுகள் போல கட்டி வைத்து வளர்ப்பதும் ஒரு வகையான மிருக வதைதான்.
ஒரு யானை வாழுவதற்கு பல சதுர கிலோமீட்டர் காட்டுப்பகுதி தேவைப்படுகிறது. ஆனால் ஒரு விலங்கியல் பூங்காவில் அடைத்து வைக்கப்படுள்ள ஒரு யானைக்கு, ஒரு கோவிலில் அல்லது வீட்டில் வளர்க்கப்படும் யானைக்கு எவ்வளவு இடம் வழங்கப்பட்டுள்ளது என்று நீங்கள் நினைத்துப் பார்த்திருக்கிறீர்களா? தற்போது உலகில் 15,000 - 20,000 யானைகள் மனிதர்களின் பிடியில் அடிமைகளாக மிகவும் மோசமான சூழ்நிலையில் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளன என்பது உங்களுக்குத் தெரியுமா?
உங்களில் பலர் குடும்பத்துடன் சென்று விலங்கியல் பூங்காக்களில், சர்க்கஸில் காசு கொடுத்து யானை காட்டும் வேடிக்கையை பார்த்து மகிழ்ந்திருப்பீர்கள். அதேபோல தாய்லாந்து போன்ற நாடுகளுக்குப் போனவர்கள் அங்கு யானைச் சவாரி செய்தும் மகிழ்ந்திருப்பீர்கள். ஆனால் அங்கெல்லாம் யானைகள் மகிழ்ச்சியாக வாழ்கின்றனவா என்று நினைத்துப் பார்த்திருப்பீர்களா?
கோவிலில் பாகனுக்கு காசு கொடுத்துவிட்டு ஆசி வாங்கி மகிழ்ந்தவர்கள் அந்த யானைக்கு சரியான உணவும் ஓய்வும் கிடைக்கிறதா என்று விசாரித்தீர்களா? நிச்சயமாக செய்திருக்க மாட்டீர்கள். ஏனெனில் மனிதர்களில் அதிகமானவர்கள் சுயநலமானவர்களாகவும் தமது மகிழ்ச்சிக்கே முக்கியத்துவம் கொடுப்பவர்களாகவுமே இருக்கிறார்கள். என்னைப் பொறுத்தவரை இவ்வாறான இடங்களில் எல்லாம் பணம் கொடுத்து மகிழ்ச்சியை வாங்கும் எல்லோருமே யானைகளை கொடுமைப்படுத்தும் குரூரமான மனிதர்களே!
மனித – யானை மோதல்கள்
யானைகள் பல நூற்றாண்டுகளால் இவ்வாறு சுயநலம் கொண்ட மனிதர்களால் கொல்லப்படுவதும் மிக மோசமான சூழ்நிலையில் வளர்க்கப்படுவதும் ஒருபுறம் இருக்க, கடந்த சில தசாப்தங்களாக அதிகம் பேசப்படும் ஒரு விடயம்தான் மனித – யானை மோதல்கள். இந்தியா, இலங்கை மற்றும் ஆபிரிக்கா போன்ற நாடுகளில் விவசாயம் செய்வோர்களுக்கு யானைகளின் எல்லைத்தாண்டும் நடவடிக்கைகள் பெரும் பொருள் மற்றும் உயிர் சேதங்களை விளைவிப்பனவாகவே இருக்கின்றன.
யானைகள் பெரும்பாலும் உணவு தேடியும், குடிநீருக்காகவுமே கிராமங்களுக்குள் புகுந்து அங்கு பெரும் சேதங்களைச் செய்கின்றன என்றபோதும் யானைகள் மனிதர்கள் வாழும் இடத்திற்கு வருவதற்கு மனிதர்களின் செயற்பாடுகளும் காரணமாக இருக்கிறது.
நாம் தொடர்ச்சியாக காடுகளை எமது தேவைகளுக்காக அழித்து யானைகள் வாழும் பிரதேசத்தை குறைத்துக் கொண்டு வருகிறோம். யானைகள் காலம் காலமாக பயணிக்கும் வழித்தடங்களை அடைத்து கட்டுமானங்களை எழுப்பி வருகிறோம். காட்டுக்குள் நுழைந்து எமது தேவைகளுக்காக மரங்களை வெட்டியெடுத்துக் கொள்கிறோம். காடுகளை அழிப்பதன் மூலமும் நதிகளை எமது தேவைகளுக்காக திசை திருப்புவதன் மூலமும் யானைகளுக்கு காட்டுக்குள்ளேயே குடிநீர் கிடைக்கும் சந்தர்ப்பங்களை இல்லாது செய்கிறோம். அவை வாழும் காடுப்பகுதியில் பிளாஸ்டிக் கழிவுகளோடு உணவுக் கழிவுகளைக் கொட்டுவதன் மூலம் அவை அவற்றை உண்டு நோய்வாய்ப்படவும் இறக்கவும் காரணமாக இருக்கிறோம்.
இத்தனை கொடுமைகளையும் செய்துவிட்டு யானைகள் எங்களைத் துன்புறுத்துவதாக சொல்லிக் கொண்டு யானைகளை கொன்றுவிடுகிறோம். அல்லது மின்சார வேலிகள் போட்டு அவற்றைத் துன்புறுத்துகிறோம். யானைக்கு அன்னாசி பழத்திற்குள் வெடிமருந்து வைத்துக் கொடுத்து அதைக் கொல்கிறோம். யானைமீது எரிபொருளை வீசி அதற்கு தீ வைத்து உயிரோடு அதனைத் துன்புறுத்துகிறோம். மின்சார வேலிகள் யானைகளைத் தடுக்கும் என்று நாங்கள் நினைத்தாலும் புத்திசாலிகளான யானைகள் தமது தந்தத்தினூடான மின்சாரம் பாயாது என்பது கண்டறிந்து, தந்தத்தை பாவித்து வேலிகளை உடைத்து கிராமங்களுக்குள் நிலைவதும் ஆங்காங்கு நடைபெறுகிறது.
உண்மையில் யானைகள் மனிதர்கள் வாழும் பகுதிக்கு வருவதைத் தடுக்க இவ்வாறு மின்சார வேலி, யானைகளுக்கு பொறி வைத்தல், நஞ்சு வைத்தல் சுட்டுக் கொல்லுதல் போன்ற குரூரமான வழிகளை விட இயற்கையான பல வழிகள் உள்ளன. அதில் ஒன்றுதான் எல்லைப் பகுதியில் அதிகளவில் தேன் கூடுகளை அமைத்தல். இதன் மூலம் மனிதர்களுக்கு இரட்டை நன்மைகள் கிடைக்கின்றன. யானைகள் ஊருக்குள் வருவது தடுக்கப்படுவதுடன் தேன் மூலம் உபரி வருமானமும் பெறப்படமுடியும்.
அதேபோல மரங்களை நெருக்கமாக வளர்த்து பச்சை வேலிகளை உருவாக்குவதன் மூலமும் யானைகள் கிராமங்களுக்குள் நுழைவதைத் தடுக்க முடியும். உதாரணமாக வியட்நாமில் Gledatsia sinensis என்ற விரைவாக வளரக்கூடிய முள்மரம் எல்லைகளில் நடப்பட்டு யானைகள் வருவதைக் கட்டுப்படுத்த முயற்சி எடுத்துள்ளார்கள். இவ்வாறான மரங்களை நெருக்கமாக நடுவதால் சட்டவிரோத வேட்டைக்காரர்கள் காடுகளுக்குள் செல்லுவதும் தடுக்கப்படுகிறது.
இதேபோல இலங்கை இந்தியா போன்ற நாடுகளில் பனைமரங்களை நெருக்கமாக நட்டு இயற்கை வேலிகளை அமைத்து யானைகள் மனிதர்கள் வாழும் பகுதிக்கு வருவதைத் தடுக்க முடியும் என்றும் சொல்கிறார்கள். இதைவிடவும் வேறு பல இயற்கை முறைகள் மூலமும் யானைகள் ஊருக்குள் வருவதைக் கட்டுப்படுத்த முடியும்.
ஏற்கனவே மிக வேகமாக அழிவடைந்து வரும், மனிதர்களால் அழிக்கப்பட்டுவரும் யானைகளை மேலும் அழிவடையாமல் தடுக்க எங்களால் முடிந்தவரை முயற்சி எடுப்போம். நேற்று சர்வதேச யானைகள் தினமாம். நாம் விரைந்து யானைகளின் அழிவைத் தடுக்காவிட்டால் ஆகஸ்ட் பன்னிரண்டாம் திகதி யானைகள் நினைவு தினமாக நினைவுகூரப்படும் நாள் வெகுதூரத்தில் இல்லை. நாங்கள் மட்டுமல்ல, யானைகளும் சுதந்திரத்தை அனுபவிக்க உரித்துடையவை.
- வீமன் -

Saturday, 10 July 2021

 நேருவின் பழங்குடியின “மனைவி” !

******************************************



உங்களில் எத்தனை பேருக்கு நேருவின் பழங்குடியின மனைவியைத் தெரியும்? அவர் எப்படியான வாழ்க்கையை வாழ்ந்தார் என்று தெரியுமா?
புதினி (Budhni Manjhiyan) மேற்கு வங்காளத்தில் வாழும் ஒரு பழங்குடி இனத்தைச் சேர்ந்த பெண். அங்கு தாமோதர் ஆற்றின் குறுக்காக நேரு தலைமையிலான இந்திய அரசு ஒரு அணையைக் கட்டியது. அந்த அணை கட்டும் வேலைக்கு வந்த ஒரு பழங்குடி இனப் பெண்தான் இந்தப் புதினி. அணையும் கட்டி முடிக்கப்பட்டு நேருவின் கையால் திறப்பதற்கும் நாள் குறிக்கப்பட்டது.
அந்த நாளான 1959 ஆம் ஆண்டு, டிசம்பர் 6ம் திகதி அந்த அணைக்கட்டைத் திறந்து வைக்கப் பிரதமர் நேரு அங்கு சென்றிருந்தார். அதன்போது, தான் அணையைத் திறந்து வைக்காது, அந்த அணையைக் கட்டும் வேலையில் ஈடுபட்ட பழங்குடியினப் பெண்ணான பதினைந்து வயது புதினி என்பவரைக் கொண்டே அணையைத் திறக்க வைத்தார். அவர் அதோடு விட்டிருக்கலாம். ஆனால், விதி யாரை விட்டது? பிரதமர் நேரு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்த அங்கிருந்த மாலையை அந்தப் பெண்ணின் கழுத்தில் போட்டு வாழ்த்தினார்.
அந்த ஒரு நிகழ்வு அந்தப் பெண்ணின் வாழ்க்கையையே புரட்டிப்போடப் போகிறது என்று நேருவுக்கும் தெரிந்திருக்கவில்லை, அந்தப் பெண்ணுக்கும் தெரிந்திருக்கவில்லை.
அந்த மாலை போட்ட நிகழ்வின் பின்னர் அன்றிரவே ஒன்றுகூடிய அந்தப் பெண்ணின் சமூகம், நேரு மாலை போட்டதால் புதினி இப்போது நேருவின் மனைவியாகிவிட்டார் என்று அறிவித்தது. அதனோடு நேரு தமது பழங்குடியினத்தவர் இல்லை என்பதால் புதினியை தமது சமூகத்திலிருந்து ஒதுக்குவதாகவும் அறிவித்தது.
இதனைத் தொடர்ந்து அந்தப் பெண் தனது சமூகத்துடன் இருக்க முடியவில்லை. மூன்று வருடங்களில் அவர் செய்து வந்த அரச வேலையையும் இழந்தார். நேருவின் மனைவி என்ற பெயருடன் அவரால் தனது சமூகத்தில் ஆணொருவரைத் திருமணம் செய்வது சாத்தியம் இல்லை என்பதையும் உணர்ந்தார்.
இதனைத் தொடர்ந்து அந்தப் பெண் ஜார்கண்டிற்குச் சென்றார். அங்கு ஏழு வருடங்கள் தனது வாழ்க்கையை முன்னெடுக்க பல சிரமங்களைச் சந்தித்தார். அந்தக் காலப்பகுதியில் சுதிர் தத்தா என்பவரைச் சந்திந்தார். அவரை மணம் செய்ய விரும்பியபோதும், தன்னை நேருவின் மனைவியாகக் கருதும் தனது சமூகத்தினால் ஏதும் கேடு நிகழுமோ என்ற அச்சத்தினால் அந்த எண்ணத்தைக் கைவிட்டு இருவரும் ஒன்றாக வாழத் தொடங்கினர். அவர்களுக்கு மூன்று பிள்ளைகளும் பிறந்தன.
இவ்வளவும் நடந்த பின்னரும் அவரது பழங்குடி சமூகத்தைப் பொறுத்தவரை புதினி நேருவின் மனைவிதான். எப்படியோ இந்த விடயத்தை அறிந்த ராஜீவ் காந்தி 1985 இல் தனது “பாட்டியை” அவரது 41வது வயதில் தேடி வந்து சந்தித்துள்ளார். உங்களுக்கு என்ன உதவி வேண்டும் என்று கேட்டபோது, தனது வேலையைப் பறித்துவிட்டார்கள், அந்த வேலையைத் திரும்பத் தரமுடியுமா என்று கேட்க, ராஜீவ் காந்தியின் உதவியால் 23 வருடம் கடந்து அந்த வேலை மீண்டும் கிடைத்தது.
பின்னர் இவர் இறந்துவிட்டதாக 2012 இல் சொல்லப்பட்டபோதும் 2019 இல் இவர் உயிருடன் இருப்பதை அறிந்த கேரளாவைச் சேர்ந்த ஊடகவியலாளரான சாரா ஜோசப் இவரைத் தேடிக் கண்டுபிடித்து அவரது கதையை ஒரு நாவலாக்கினார். அதன் மொழிபெயர்ப்பு சங்கீதா ஸ்ரீனிவாசனால் செய்யப்பட்டு ஆங்கிலத்தில் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்டது.
1959 இல் அன்றைய பிரதமர் தான் செய்வது பிழையென்று தெரியாது ஒரு இளம் பெண்ணின் கழுத்தில் போட்ட மாலை அந்தப் பெண்ணின் வாழ்வையே புரட்டிப் போட்டது. 32 வருடங்கள் கழித்து 1991 இல் அவரது பேரனான ராஜீவ் காந்திக்கு ஒரு பெண் மாலை போட்டவேளையில் அவரது வாழ்க்கை முடிந்து போனது.
-வீமன்-
குறிப்பு: ClubHouse இல் Surekaa Sundar என்பவர் ஜூலை 2ம் திகதி இந்தக் கதையைப் பகிர்ந்தார். மேலதிக விபரம் இணையத்தில் பெறப்பட்டது.

 

மன அழுத்தமும் தமிழ்ச் சமூகமும்

=================================


கடந்த வருடம் இதே காலப்பகுதியில் தமிழர் மத்தியில், குறிப்பாக ஐரோப்பியத் தமிழர்கள் மத்தியில் பரபரப்பாகப் பேசப்பட்ட விடயம், இங்கிலாந்தில் தன் மகளையும் கொன்று தன்னையும் மாய்த்துக் கொண்ட  ஒரு தமிழ் பெண்மணி பற்றியதாகும். குறிப்பாக அந்த ஐந்து வயதுச் சிறுமியின் உயிரிழப்பு உலகெங்கும் உள்ள பல தமிழர்களைக் கவலை கொள்ள வைத்தது.

 

கடந்த வருடம் நடந்த அந்தத் துயரமான நிகழ்வு தொடர்பாக பலரும் தமது மனக் கவலையை    வலைத்தளங்களில் பகிர்ந்திருந்த அதேவேளை, சில பக்குவமற்ற, பொறுப்பற்ற, வெறும் உணர்ச்சிவசப்பட்ட பதிவுகளையும் பார்க்க நேர்ந்தது. அவர்களில் சிலர்,  மனிதர்களுக்கு பண ஆசை மற்றும் பேராசை கூடியதாலேயே மன அழுத்தம் வருகிறது என்றும், அவ்வாறு மனவழுத்தம் வந்தவர்கள் சாக விரும்பினால் பிள்ளைகளை வேறு யாரிடமாவது கொடுத்துவிட்டு தாங்கள் மட்டும் செத்துப் போய்விட வேண்டும் என்ற பொருள்பட பதிவிட்டிருந்தார்கள். அதற்கும் மேலாக  தமிழராகப் பிறந்தவர்கள் இப்படிச் செய்வது தமிழினத்துக்கு பெரும் அவமானம், கேவலம் என்றும் சிலர் சொல்லியிருந்தார்கள்.

 

இவ்வாறான கொலை, தற்கொலை முயற்சிகள் கடந்த காலங்களிலும் நடைபெற்றுள்ளன. இப்போதும் நடைபெறுகின்றன.

·      2006 இல் கனடாவில் 30 வயதான தமிழ்ப் பெண் தனது இரண்டு வயது மற்றும் மூன்று மாதக் குழந்தையைக் கொன்றுவிட்டுத் தற்கொலைக்கு முயன்று உயிர் தப்பினார்.

·      2008 இல் இங்கிலாந்தில் 36 வயதான ஒரு தமிழ் பெண் தன இரண்டு பிள்ளைகளைக் கொன்றுவிட்டு தற்கொலை செய்ய முயன்றார். மூன்றாவது (ஆறு மாதக்) கைக்குழந்தை உயிர் தப்பிவிட்டது. பின்னர், அந்தப் பெண் மனநலக் காப்பகத்திற்கு அனுப்பப்பட்டார்.

·      2014 இல் இங்கிலாந்தில் 33 வயதான தமிழ் பெண் தனது இரண்டு ஆண் குழந்தைகளையும் கொன்றுவிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

·      2020 அக்டோபர் மாதம் 36 வயது மனைவி, 42 வயதுக் கணவன் மற்றும் மூன்று வயது மகன் ஆகியோர் இறந்து காணப்பட்டனர். இது கொலை மற்றும் தற்கொலை சம்பந்தப்பட்டு இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.

·      2021 ஜூன் மாதம் (போன மாதம்) இங்கிலாந்தில் 36 வயதுடைய ஒரு இந்தியத் தமிழ்ப் பெண், தான் கோவிட் வந்து இறந்துவிட்டால் மகளைப் பார்த்துக்கொள்ள யாரும் இல்லை என்ற அச்சத்தில் தனது ஐந்து வயது மகளைக் கொன்றிருக்கிறார். இப்போது மனநலக் காப்பகத்தில் இருக்கிறார்.

 

இவ்வாறான பல மரணங்கள் வருடாந்தம் இலங்கை, இந்தியா, பங்காளதேஷ் போன்ற நாடுகளிலும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. ஆனால் அன்றும் சரி இன்றும் சரி தமிழ் மக்களின் எதிர்வினைகள் குறித்த ஆண் அல்லது பெண்ணைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்துவதாகவே இருக்கின்றன. அதிலும் சிலர் மிக மோசமான முறையில் திரும்பத் திரும்ப “உங்களுக்கு மனவழுத்தம் இருந்தால் செத்துத் தொலையுங்கள், பிள்ளைகளைத் தொட உங்களுக்கு உரிமையில்லை, நீங்கள் எங்கேயாவது போய்ச் சாகுங்கள்” என்று சொல்கிறார்கள்.

 

இவ்வாறு இவர்கள் சமூக வலைத் தளங்களில் பகிரங்கமாக  மன அழுத்தம் உள்ளவர்களைத் தற்கொலைக்குத் தூண்டும் குற்றத்திற்காக அவர்கள் வாழும் நாட்டின் பொலிசார் கைது செய்ய முடியும் என்பது அவர்களுக்குத் தெரியுமா என்று தெரியவில்லை.

 

இவ்வாறு பொறுப்பற்ற வகையில் வீடியோக்கள் வெளியிடும் இவ்வாறான நபர்களுக்கு மனவழுத்தம் தொடர்பாக எந்தவிதமான புரிதலும் இல்லை என்றே புரிகிறது. தனிமனித உணர்வுகள், பிரசவத்தின் பின்னர் ஏற்படக்கூடிய பிரச்சனைகள், குடும்பத்தில் இருக்கக்கூடிய சிக்கல்கள், இந்த pandamic காலத்தில் ஏற்படக்கூடிய பொருளாதாரச் சிக்கல்கள், அதனால் ஏற்படக்கூடிய பிரச்சனைகள்  என்பவற்றைப் புரிந்து கொள்ள முயற்சி செய்ததாகவும் தெரியவில்லை. இவ்வாறான அரைவேக்காட்டு சமூகப் போராளிகளின் தவறான செய்தியைக் காவும் வீடியோக்களைக் கண்ணை மூடிக்கொண்டு 400 க்கும் மேற்பட்டவர்கள் ஒரு வாரத்தினுள் பகிர்ந்துள்ளமை மிகவும் கவலை தருகிறது. இது எங்களில் பலர் உணர்ச்சிகளால் உந்தப்பட்டு ஆட்டு மந்தைகளாக செயற்படும் நிலையில்தான் இருக்கிறார்கள் என்பதைக் காட்டுகிறது.

 

நீண்ட வரலாறு, மொழிச் செழுமை, கலாச்சாரம் போன்ற பல பெருமைகளைக் கொண்டிருக்கும், அவற்றைக் கொண்டாடும் தமிழர்கள் மத்தியில் துரதிர்ஷ்டவசமாக மனநலம், உளவியல் தொடர்பாக போதிய விளக்கம் போதுமானதாக இருப்பதாகத் தெரியவில்லை. சிலருக்கு  அதுபற்றிய அறிவு இருந்தாலும் அவர்களின் அறிவும் நுனிப்புல் மேய்ந்த அறிவாகத்தான் இருக்கிறது.

 

தமிழர் சமூகங்களில் இவ்வாறான பார்வை இருப்பதற்கு, எமது சமூகம் மன நோய் பற்றிப் பேசுவதை தவிர்க்க வேண்டிய ஒரு விடயமாக வைத்திருந்ததே  முக்கிய காரணமாக இருக்க வேண்டும். இன்னொரு வகையில் சொல்வதானால் தனது குடும்பத்தில் ஒருவருக்கு மனநோய் இருந்தால் அதை வெளியில் சொல்வதை அவமானமாகக் கருதுவதும் உரிய ஆலோசனை, சிகிச்சையினைப் பெறாமல் தவிர்க்கும் நிலையும்தான் இன்றும் பல குடும்பங்களில் இருக்கிறது.

 

இன்றைய சமூகத்தில் பிள்ளைகளாகவே பெற்றோரிடம் சென்று “எனக்கு மன அழுத்தம் இருக்கிறது, மனநல மருத்துவரைப் பார்க்க வேண்டும்” என்றாலோ “எனக்கு கவுன்சிலிங் தேவை” என்று சொன்னாலோ, பல பெற்றோர் அதைக் கணக்கெடுப்பதில்லை. “கண்டதையும் வாசித்துவிட்டு உளறாதே, உனக்கு ஒரு பிரச்சனையும் இல்லை” என்று தாங்களே வைத்திய ஆலோசகராக மாறிவிடும் பெற்றோர்தான் அதிகம்.

 

கடந்த காலங்களில், மனநோய் வந்தவர்களைக் குணப்படுத்த முடியாது. அவர்கள் இனி சமூகத்துக்கு பயன்படமாட்டார்கள் என்ற எண்ணமே எங்களில் பலருக்கும் இருந்திருக்கிறது. மனநலம் பாதிக்கப்பட்டவரை வீட்டினுள் அடைத்து வைத்தல், கோவிலுக்கு கூடிச் சென்று மந்திரித்தல், பேய் விரட்டுதல், மனநலம் அதிகம் பாதிக்கப்பட்டால் கைகால்களைச் சங்கிலிகளால் பிணைத்து வைத்தல் என்றுதான் செய்து வந்திருக்கிறார்கள்.

 

இன்றைய சூழலில் எங்கள் சமூகத்திலேயே உளவளத் துறையில் எத்தனையோ நிபுணர்கள் வந்துவிட்ட நிலையில் எமது சமூகம் இனியாவது மனநலம் சார்ந்த விடயங்களை வெளிப்படையாகக் கதைக்க முன்வர வேண்டும். சமூக வலைத் தளங்களில் இது தொடர்பாக உணர்ச்சிவசப்பட்ட கருத்துக்களைப் பரப்புவதைத் தவிர்த்து, அறிவுபூர்வமான விடயங்களைப் பகிர வேண்டும். மக்கள் உளவியல் பிரச்சனை தொடர்பாகத் தமது அறிவை மேலும் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

 

ஒவ்வொரு நாட்டிலும் இயங்கும் தமிழ் வானொலிகளும் இந்தப் பிரச்சனைகளை அடிக்கடி உரையாட வேண்டும். பத்திரிகைகள் இந்த விடயம் தொடர்பாக அதிக விழிப்பூட்டல் கட்டுரைகளை வெளியிட வேண்டும். தொலைக்காட்சி நிறுவனங்களும் வானொலிகளும் துறைசார் நிபுணர்களை அடிக்கடி அழைத்து அவர்கள் மூலம் தமிழ் மக்கள் மத்தியில் மனநலப் பாதிப்புகள், மனநல பாதிப்புக்குள்ளானவரைப் பராமரித்தல், ஆதரவாக இருத்தல் தொடர்பாக தமிழ் மக்களைத் தொடர்ந்து அறிவூட்ட வேண்டும்.

- வீமன் - 

Sunday, 9 May 2021

 

உயர்தர பரீட்சை முடிவுகளும் உபதேச உலகமும் !

 



உலகில் இலகுவான ஒன்றுதான் இன்னொருவருக்கு அறிவுரை சொல்வது. அதிலும் இலங்கையிலும் பல்வேறு நாடுகளிலும் பரந்து வாழும் தமிழினம் இந்த அறிவுரை சொல்லும் கலையில் எப்போதும் சிறந்த ஒரு உயிரினமாகவே திகழ்கிறது.

 

மாதம் மும்மாரி பெய்வதுபோல ஒவ்வொரு வருடமும் ஐந்தாம் வகுப்புப் புலமைப் பரிசில், க.பொ.த. சாதாரண தரம் மற்றும் உயர்தர பெறுபேறுகள் வெளிவரும்  மூன்றுமுறையும் ஆலோசனை மழையில் மாணவர்கள் நனைய வேண்டியது காலத்தின் கட்டாயமாகிவிட்டது. தோற்றவருக்கு அறிவுரை, ஆலோசனை, யாராவது பிள்ளைகள் பரீட்சைத் தோல்வியால் தற்கொலை செய்துவிட்டால் அதற்கு ஒரு கண்ணீர் அஞ்சலி, சரியாக, பிள்ளையை தோல்விக்கு முகம் கொடுக்கப் பழக்கவில்லை என்று பெற்றோருக்குக் கண்டனம், அப்படியே ஆசிரியர்களுக்கு ஒரு குட்டு என்று உயிரைக் கொடுத்து வேலை செய்வார்கள்.

 

அந்த மரபின்படி  இந்த வாரம் முழுவதும் வலைத்தளம் எங்கும் சோர்ந்து விடாதே; சேர்ந்து படி; மீண்டும் முயற்சி செய்; அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும்; நீ படி படியென்று படித்தால் F எல்லாம் A ஆகும்; கல்வியே செல்வம் என்று ஒரு குழு சொல்லிக் கொண்டிருக்கிறது.

 

மறு பக்கத்தில், திரும்பத் திரும்பப் படித்து காலத்தை வீணாக்காதே; உயர்தரம் இன்றியே உயர்ந்த மனிதர்கள் பலர், ஒருமுறை முயற்சி செய், முடியாவிட்டால் வேறு துறையைத் தெரிவு செய்து அதில் முன்னேறு கதைகளும் வலைத்தளமெங்கும் வலம் வருகின்றன.

 

பாவம் மாணவர்கள்! எல்லா வகையான அறிவுரைகளையும் கேட்டுவிட்டு, வடிவேலு பாணியில் “என்னை ஏண்டா இப்பிடிப் படுத்துறீங்கள்?” என்பதுதான் பல மாணவர்களின் மனக்குரலாக (அதுதாங்க Mind Voice) இருக்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

 

இங்கு அறிவுரை சொல்லுவோர் எல்லோருமே பெரும்பாலும் தாம் மாணவர்களாக இருந்த கால அனுபவங்களை, எமது சமூகத்தில் நாம் காணும் ஒரு சில அரிதான உதாரணங்களை மற்றும் ஒரு சில புள்ளிவிபரங்களை அடிப்படையாகக் கொண்டு அறிவுரை சொல்கிறார்கள் என்பது அவர்கள் சொல்லும் அறிவுரைகளைப் பார்த்தாலே புரியும். ஆனால் இருதரப்பாரும் முக்கியமான விடயங்களாப் பேசாது கடந்து விடுகிறார்கள் என்பதுதான் வருத்தம் தருவதாக இருக்கிறது.

 

எல்லோருமே, பிள்ளைகளைப் கஷ்டப்பட்டுப் படித்து முன்னேறுங்கள் என்று நெருக்கடி கொடுத்தாலும் உயர்தரம் கற்கும் மாணவர்களுக்கு பௌதீக விஞ்ஞானம், உயிரியல் விஞ்ஞானம், வர்த்தகம், கலை, Engineering technology, Bio systems technology  ஆகிய மட்டுப்படுத்த கற்கை நெறிகளே தெரிவாக உள்ளன.

 

இதைத்தவிர இலங்கையில் குறிப்பாக வடக்குக் கிழக்கைப் பொறுத்தவரை வைத்தியர், பொறியியலாளர், கணக்காளர், சட்டத்தரணி போன்ற உத்தியோகங்கள் மட்டுமே பல உயர்தர மாணவர்களின் இலக்குகளாக இன்றும் இருக்கிறது. ஆனால் ஒரு சமூகத்தில் வைத்தியர், பொறியியலாளர், கணக்காளர், சட்டத்தரணி ஆகியோரை மட்டும் வைத்துக்கொண்டு என்ன செய்ய முடியும்.

 

இவை ஒருபுறம் இருக்க, குறித்த ஒரு வருடத்தில் உயர்தரப் பரீட்சை எழுதும் நூறு மாணவர்களில் 60 – 64  மாணவர்கள் பல்கலைக்கழகம் செல்லத் தகுதி பெறுகிறார்கள். அந்தத் தகுதி பெற்ற மாணவர்களில் 9 – 10 பேர் மட்டுமே அரச பல்கலைக் கழகம் (இலவசக் கல்வித் திட்டத்தின்கீழ் ) செல்கிறார்கள்.  அதாவது, தகுதி பெற்ற 64 பேரில் 54 பேர் தகுதி பெற்றாலும் பல்கலைக் கழகத்தில் இடமில்லாமல் வேறு வழி தேடவேண்டியவர்களாகவே இருக்கிறார்கள்.

 

ஏனெனில் பல்கலைக் கழகத்திற்கு எத்தனை மாணவர்கள் உள் நுழைய முடியும் என்பதை அரசாங்கம் ஒவ்வொரு வருடமும் உயர்கல்விக்கு ஒதுக்கும் நிதியின் அளவே தீர்மானிக்கிறது. இதனால் நூற்றுக்கு 90 வீதமான மாணவர்கள் தமது உயர்கல்வித் தேவைகளுக்கு திறந்த பல்கலைக் கழகம், தொழில்நுட்பக் கல்லூரிகள், German Tech போன்ற வேறு நிறுவனங்களை நம்பியிருக்க வேண்டியவர்கள் ஆகிறார்கள். ஆனால் அவையும் தகுதி பெற்ற மாணவர்கள் அனைவரையும் உள்வாங்கப் போதுமானதில்லை. இதுதான் இலங்கையின் இன்றைய உயர்கல்வி நிலவரம்.

 

இன்னொரு வகையில் சொல்வதானால் (நாம் ஏற்றுக்கொள்ள விரும்பினாலும் விரும்பாவிட்டாலும்) உயர்தரப் பரீட்சையில் வெற்றி பெற்று (100 பேரில் 10 பேர் மட்டுமே) பல்கலைக் கழகம் செல்வதும் ஒரு சூதாட்டம் போன்றதுதான்.

 

உண்மையில் ஒரு மாணவன் பல்கலைக் கழகம் சென்றுதான் தனது வேலைத் தகுதியை வளர்த்துக் கொள்ளவேண்டும் என்றில்லை. அதேபோல உயர்தரம் கற்றுத்தான் ஒருவர் கல்வியிலும் தமது தொழில் துறையிலும் முன்னேற வேண்டும் என்பதில்லை. இன்று அதற்கு மாற்றாக பல வழிகள் உள்ளன.

 

இவ்வாறான மாற்று வழிகள் சாதாரண தரத்தின் பின்னரும் உயர்தரத்தின் பின்னரும்  இருந்தாலும் அவற்றின் பயனை மாணவர்கள் பெறுவதற்கு பல விடயங்களிலும் மாற்றங்கள் அவசியமானவை.

 

இலங்கையில் உயர்தரத்தில் குறித்த மூன்று பாடங்களைப் படித்து நல்ல புள்ளிகள் பெற்று Z ஸ்கோரும் உயர்வாக இருந்தால் மாத்திரமே குறித்த சில கற்கைநெறிகளை மேற்கொள்ள முடியும். ஆனால் இந்தியாவிலும் பல மேற்குலக நாடுகளிலும் நிலைமை அப்படியில்லை. அவர்கள் மேற்படிப்பிற்கு தெரிவு செய்ய விரும்பும் துறைக்குத் தொடர்பான பாடங்களில் தேவையான பெறுபேறுகளைத் தமது உயர்தரம் கற்கும் காலத்தில் பெற்றிருந்தால் போதுமானது. இலங்கையிலும் இத்தகைய மாற்றம் வருமாக இருந்தால் உண்மையில் மாணவர்கள் மேற்படிப்புக்குரிய பாடங்களைத் தெரிவு செய்வது இலகுவாக அமையக்கூடும்.

 

தற்போதுள்ள நிலையில் கொழும்பு போன்ற பெருநகரங்களில் காணப்படும் பரந்துபட்ட கல்வி வாய்ப்புகள் பின் தங்கிய பிரதேசங்களுக்கும் விரிவுபடுத்தப்பட வேண்டும். இன்று போலிப் பல்கலைக்கழகம் பற்றி பெரும் குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டுவரும் நிலையில் அரசு தனியார் கல்வி நிறுவனங்களை நெறிப்படுத்தவும் குறைந்தபட்ச தரநிலையைக் (minimum standard) கொண்டிராத நிறுவனங்கள் இயங்குவதைக் கட்டுப்படுத்தவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

இலவசக் கல்விமுறையின் நன்மையை அதிக புள்ளிகள் பெற்ற மாணவர்கள் அனுபவிக்கும் அதேநேரம், பல்கலைக்கழகம் செல்லத் தகுதி பெற்றும் அரசின் வளப்பற்றாக்குறை காரணமாக உள்வாங்கப்படாத மாணவர்கள் கட்டணம் செலுத்தி (கல்விக் கடன் திட்டத்தின் கீழ்) கல்வி கற்கமுடியும் என்ற ஒரு நிலை உருவாக்கப்பட வேண்டும்.

 

சமூக மட்டத்தில் பெற்றோர் தமது பிள்ளைகள் என்னவாக வேண்டும் என்று கனவு காண்பதை நிறுத்த வேண்டும். பிள்ளைகளின் ஆர்வத்தை அறிந்து அந்த ஆர்வத்தோடு இணைந்த துறையில் அவர்கள் மேற்கல்வி கற்பதை ஊக்குவிக்க முன்வரவேண்டும். பாடசாலைகளில் மாணவர்கள் சரியான தெரிவுகளை செய்வதற்குத் தேவையான வழிகாட்டல்கள்,  ஆலோசனைகள் வழங்கப்பட வேண்டும்.

 

மறுபுறத்தில் கல்விக் கூடங்கள் மாணவர்களைத் தொழிற் சந்தைக்கு ஏற்ப தயார் செய்பவையாக இருக்க வேண்டும்.  அதேபோல பாடசாலைகளின் தொழிற்சந்தை தொடர்பாக மாணவர்களுக்கு பொருத்தமான வழிகாட்டல்கள் வழங்கப்படும் சூழல் உருவாக்கப்பட வேண்டும். இதைத்தவிர மாணவர்களை வகுப்பறைக்கல்விக்கு அப்பாலான கற்றல் செயற்பாடுகளில் ஈடுபடுத்த வேண்டும். அவர்களை சமூகப் பொறுப்புடன் இயங்குபவர்களாக உருவாக்க வேண்டும்.

 

பரந்துபட்ட பட்டப்படிப்பின் மூலம் சமூகத்தையும் நாட்டையும் முன்னேறும் முன்னேடிகளாக அடுத்த தலைமுறையினர் வரவேண்டும். பல்கலைக்கழகம் சென்று பட்டம் பெறுவது பணம் சம்பாதிக்கும் வழி என்று நினைக்கும் மனநிலை மாறவேண்டும். தொழில்முறைக் கல்விகள், சுயதொழில் முயற்சிக்கான அடிப்படைகளும் மாணவர்களின் 15 - 16 வயதிலேயே அறிமுகப்படுத்தப்பட வேண்டும்.

 

புலம்பெயர் சமூகமும் இலங்கையில் இளையவர்களுக்கு வேலை வாய்ப்பையும் கல்வி கற்கும் காலத்திலேயே வேலைத்தள அனுபவத்தையும் வழங்கும் வகையில் தொழில் நிறுவனங்களை உருவாக்குவதன் மூலம் மாணவர்களை தகுதியும் திறமையும் கொண்டவர்களாக உருவாக்க முடியும்.

 

இதையெல்லாம் விடுத்து நாடாளாவிய ரீதியில் முதலிடம், மாவட்டத்தில் முதலிடம் எனப் பொதுப் பரீட்சைப் பெறுபேறுகளை கொண்டாடியும், பின்னடைந்தோரை அறிவுரை என்ற பெயரில் நெட்டித் தள்ளிக்கொண்டும் இருப்பதனால் எதையும் சாதித்து விடப்போவதில்லை. மாணவர்கள் சுதந்திரமாகக் கற்கக் கூடிய சூழலை பெற்றோர், பாடசாலைச் சமூகம் உருவாக்க வேண்டும்.