ஈழத்துத்
தமிழ்த் தாய் வாழ்த்து
கடந்த வருடப் பிற்பகுதியில் யாழ் பல்கலைக் கழக கலைப்பீட நிகழ்வொன்றில்
“ஈழத்து தமிழ்த்தாய் வாழ்த்து” ஒன்று இசைக்கப்பட்டது. அதன் காணொளியை “யாழ்
பல்கலைக் கழக கலைப்பீட மாணவர்களின் அளப்பரிய முயற்சியால் உருவாக்கப்பட்ட எமக்கான
ஈழத்துப் பா” விவரிப்புடன் பலரும் பகிர்ந்து மகிழ்வதைக் காண முடிகிறது. (அந்தப்
பாடல் இணைப்பு இந்த ஆக்கத்தின் முடிவில்)
உண்மையில் இந்தப் பாடல் அண்மையில் கலைப்பீடத்தினரால்
உருவாக்கப்பட்டதில்லை. (அப்படி அவர்கள் சொன்னதாகவும் தெரியவில்லை). இந்தப் பாடல்
எப்போது, யாரால் எழுதப்பட்டது என்ற விபரத்தை அறிய முடியவில்லை. ஆனால் இந்தப் பாடல்
பொதுவெளியில் முதலில் 2010ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 13ம், 14ம் தேதிகளில்
பெங்களுரில், ஈழ தேசிய ஜனநாயக விடுதலை முன்னணி (ஈ.என்.டி.எல்.எப்.) ஏற்பாட்டில்
நடைபெற்ற இரண்டு நாள் சிறப்பு மாநாட்டில் பாடப்பட்டது எனத் தெரிகிறது.
ஈழத்தின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைப் போற்றியும், வாழ்த்தியும்
“நாட்டுப்பண்” பாடல் பரந்தன் ராஜன் என்று அழைக்கப்படும் ஞானப்பிரகாசம் ஞானசேகரன்
அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. மத்தியமாவதி ராகத்தில்
அமைந்த இந்தப் பாடலைப் பாடியவர்களின் பெயர்களையும்
அறிய முடியவில்லை. இந்தப் பாடல் சிறு திருத்தங்களுடன் மீண்டும் அதே ஆண்டு டிசம்பர்
மாதம் பதினான்காம் திகதி அளிக்கை செய்யப்பட்டது.
தற்போது “வான்
முட்டும் எழில் கொண்டு” என்ற இந்தப் பாடல் யாழ் பல்கலைக் கழகத்தில் பாடப்பட்ட
நிலையில், இதையே ஈழத்தமிழர்கள் தமது தமிழ்த்தாய் வாழ்த்தாக ஏற்றுக் கொள்ளலாமே என்ற கருத்து பலராலும் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு
வருகிறது. ஆனால் இந்தப் பாடல் தொடர்பாக எனக்கு சில விமர்சனங்கள் இருக்கின்றன.
இந்தப் பாடல் உண்மையிலேயே ஈழத்தின் பல்வேறு பிரதேசங்களில் உள்ள சிறப்பம்சங்களை
சொல்வதாக அமைந்திருப்பது நல்ல விடயம். ஆனால் இந்தப் பாடல் வடக்கு-கிழக்கினை
மட்டுமே விபரிக்கிறது. அத்தோடு, மலையகத்தையும் உள்ளடக்கியிருந்தால் இன்னமும்
சிறப்பாக அமைந்திருக்கும். அதேநேரம், இந்தப் பாடலில் வவுனியாவின் சிறப்பு
சொல்லப்படவில்லை, “வன்னி” என்பதற்குள் சுருக்கி விட்டார்கள் என்று சிலர் குறைப்பட்டதையும்
இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.
இவை எல்லாவற்றையும் விட முக்கியமாக சில வரிகளை நிச்சயம் மாற்றியமைக்க
வேண்டும் என்பது எனது கருத்தாக இருக்கிறது. குறிப்பாக “யாழ்ப்பாண நகரோடு பெருங் கல்வியும்” என்ற வரி மூலம் இந்தப் பாடல் சொல்லும் விளக்கம் என்ன? இது யாழ்
உயர்வு மனப்பான்மைச் சிந்தனையின்
வெளிப்பாடா என்ற கேள்வியை முன்வைக்காமல் என்னால் இந்தப் பாடலைக் கடந்து செல்ல
முடியவில்லை.
கல்வி, ஆற்றல் எல்லாம் அனைவருக்கும் பொதுவானவை. யாழ்ப்பாணம்தான்
கல்வியின் அடையாளம் என்ற போலிக் கருத்து இப்படி ஒரு பாடலூடாக கடத்தப்படுவது
ஏற்புடையதல்ல. வேண்டுமானால் யாழ்ப்பாண நகரோடு கடலேரியும் என்று பாடலாமே? ஏனெனில்
கடலேரி யாழுக்கு அழகு சேர்ப்பது மட்டுமன்றி வாழ்வாதாரத்தின் ஒரு பகுதியாகவும்
இருக்கிறது.
இவ்வாறான மாற்றங்கள் செய்யப்பட்டால் எங்களுக்கு நல்லதொரு ஈழத் தாயை வாழ்த்தும்
ஒரு பாடல் கிடைக்கக்கூடும். நம்மவர் பலரும் இந்தப் பாடலைப் ஈழத்தில் பல இடங்களில்
பரவலாக பயன்படுத்தப்படக் கூடிய சந்தர்ப்பங்கள் எதிர்காலத்தில் அமையலாம்.
பதின்மூன்று வருடங்களுக்கு முன்னர் பாடப்பட்ட ஒரு பாடல் இத்தனை வருடங்கள்
கழித்தே மக்களின் கவனம் பெற்றிருக்கிறது. அதேபோல இன்னுமொரு ஈழக் கலைஞர் எழுதிய
தமிழ்த்தாய் வாழ்த்தும் பெரிதும் கவனம் பெறாமல் இருக்கிறது.
அகளங்கன் என்ற வவுனியாவின் பம்பைமடு என்ற கிராமத்தைத் சேர்ந்த பல்துறை
சார்ந்த இலக்கியப் படைப்பாளி எழுதிய தமிழ் வாழ்த்துப் பாடல்தான் அது. இந்தப் பாடலை
2017 இல் கேட்கும் சந்தர்ப்பம் எனக்குக் கிடைத்தது. பாடல் கேட்க நன்றாக இருந்தது.
கொஞ்சம் சைவப் பக்தி வாசம் பாடலில் இருந்தாலும் இலங்கையின் நாவலர், விபுலானந்தர்,
உமறுப் புலவர் போன்ற தமிழ் ஆளுமைகளைக் குறிப்பிட்டு இருந்தது எனக்குப்
பிடித்திருந்தது. இன்றுவரை நாம்
தமிழ்த்தாய் வாழ்த்தாக நாம் பயன்படுத்தும்
“வாழ்க நிரந்தரம், வாழ்க தமிழ் மொழி” என்ற பாரதியாரின் பாடலைப் போலவே இதுவும்
தமிழின் பெருமையை மட்டும் கூறும் பாடலாக அமைந்திருக்கிறது. (பாடல் வரிகள் கீழே)
இப்படி தமிழை வாழ்த்தும் ஒரு பாடலும் ஈழத்தின் புகழ் பேசும் ஒரு
பாடலும் இருக்கும் நிலையில் எமக்கு என்ன தேவை என்ற முடிவுக்கு வர வேண்டியிருக்கிறது.
தமிழ் மொழியை வாழ்த்த வேண்டுமெனில் அகளங்கன் அவர்கள் எழுதிய பாடல் பொருத்தமானது.
ஆனால் அதில் மாற்றங்கள் செய்வது தேவையெனில் தமிழ் மொழிச் சான்றோர் அகளங்கன்
அனுமதியுடன் அதனைச் செய்து எமக்கு அளிக்கை செய்யலாம்.
மாறாக ஈழத்தின் தமிழர் வாழும் பிரதேசங்களைக் கொண்டாடும் பாடல்
தேவையெனில் ENDLF முன்னர் பயன்படுத்திய, தற்போது யாழ் கலைப்பீடம் நிகழ்வில்
சேர்த்துக் கொண்ட “வான் முட்டும் எழில் கொண்டு வளமாகவும்“ பாடலை எழுதியவரைத்
தேடிப் பிடித்து, அவர் அனுமதியுடன் தேவையான மாற்றங்களுடன் (நிச்சயம் சில முக்கிய
மாற்றங்கள் தேவை), எமக்கு அளிக்கை செய்யலாம்.
ஆனால் இப்போது எனக்குள் இன்னொரு கேள்வி எழுகிறது. இந்தப் பாடல் 2010இல் ENDLFஇனால் முன்னிலைப்படுத்தப்பட்டது என்ற விடயம் பரவலாகத் தெரிய வந்தால் அதற்காகவே இந்தப் பாடலை சில வலைத்தளப் போராளிகள் கடுமையாக எதிர்ப்பார்களா? என்பதுதான் அந்தக் கேள்வி.
அந்த இரண்டு பாடல்களும் கீழே:
ஈழத்து தமிழ்த்தாய் வாழ்த்து
(2010இல் பெங்களூரிலும் கடந்த வருடம் யாழ் பல்கலைக் கழகத்திலும் பாடப்பட்டது)
வான் முட்டும் எழில் கொண்டு வளமாகவும்
இன்பத்தேன் சொட்டும் தமிழ் சேர்ந்தே நலமாகவும்
யாழ்ப்பாண நகரோடு பெருங்கல்வியும்
எம்மை வாழ்விக்க உணவூட்டும் திருவன்னியும்
மட்டு வாவிக்குள் மீன் பாடும் இசை சந்தமும்
வெற்றி மேவும் வெண் தீவெங்கும் உயிர் சொந்தமும்
கிளிநொச்சி வளமுல்லை அம்பாறையும்
தெள்ளத் தெளிந்தோடும் பொன்னருவி ஆற்றோரமும்
சூழ் கொண்ட மன்னாரின் முத்தாரமும்
எங்கும் சுடரேற்றும் திருகோணமலை மொத்தமும்
நாளும் நிலை உயர்வாக செயல் ஆற்றுவோம்
எங்கள் ஈழத்தமிழ் திருநாட்டின்
புகழ் போற்றுவோம்
"எங்கள் ஈழத்தமிழ் திருநாட்டின்
புகழ் போற்றுவோம்"
வாழிய... வாழிய... வாழியவே...
எங்கள் ஈழத்தமிழ் திருநாடு வாழியவே...
https://www.youtube.com/watch?v=t9-Jn7V_bbg&ab_channel=EelamNationaldemocraticliberationfront
அகளங்கன் பாடிய தமிழ் வாழ்த்துப் பாடல்
இசைத்திட முடியாது எங்கள் பெருமை -தமிழ்
இன்பமோ சொல்லினிலே சொல்லல் அருமை!
திசைதோறும் எங்கள்மொழி செய்யும் புதுமை -இது
தேவர்க்கும் கடவுளர்க்கும் என்றும் இனிமை
(இசைத்...)
பக்தியின் மொழி தமிழாம் பரவசம் தரும் புதிராம்
நித்தியம் வளம் பெருகும் நிகரில்லா மொழி தமிழாம்
கம்பனும் வள்ளு வரும் கவிஇளங் கோவுந் தந்த
செம்மை மிகு கவிதை சிந்தை தனை நிறைக்கும்
(இசைத்...)
ஒளவையின் அறி வுரைகள் அருண கிரிப் புகழ்கள்
செவ்வை மிகு தமிழில் சேக்கிழார் தரும் கவிகள்
மூவர் தமிழ் அமதும் முடி மன்னர் ஆதரவும்
தேவர் களும் பருகும் திருவா சகப் பொலிவும்
(இசைத்...)
நல்லூர் நா வலரும் நல்ல விபு லானந்தரும்
பல்லோர் புகழ்ந் தேத்தும் பாரதி வள்ள லாரும்
குமர குரு பரரும் குரு தாயுமானவரும்
உமறுப் புல வரொடு உயர் வீர மாமுனிவர்
(இசைத்...)
வாழ்கவே! வளர்கவே!
தமிழ் வாழ்கவே! தமிழ் வாழ்கவே!
----

No comments:
Post a Comment