தமிழரசுக்
கட்சியின் உட்கட்சித் தேர்தல் - Jan 2024
ஜனநாயகத் தேர்தல் என்பது அதிக தகுதி வாய்ந்த நபர்களைத் தெரிவு
செய்வதற்கான ஒரு வழிமுறை. இதில் மாற்றுக் கருத்துக் கிடையாது. ஆனால் எல்லா நேரமும்
வாக்களிப்பவர்கள் informed decision எடுக்கிறார்களா என்ற கேள்விக்கு பதில்
உங்களில் பலருக்குத் தெரிந்ததுதான். பல நேரங்களில் பண நாயகமும் மற்றைய நேரங்களில்
உணர்ச்சி மடமையும் செல்வாக்கு செலுத்தும் இடமாகவே தமிழர்கள் வாக்களிப்பில்
கலந்துகொள்ளும் ஒவ்வொரு சந்தர்ப்பங்களும் அமைந்திருக்கின்றன.
இதனாலேயே ஈழத் தமிழர்கள் தம்மை சரியாக வழி நடத்தக்கூடிய, தமது
பிரச்சனைகளைச் சரியாக அணுகக்கூடிய தலைவர்களை தெரிந்தெடுக்க முடிந்ததேயில்லை. இது
தமிழகத் தமிழர்களுக்கும் பொருந்தும்.
இலங்கைத் தமிழரசுக் கட்சி ஆரம்பித்து கடந்த டிசம்பர் மாதம் 74 வருடங்கள்
நிறைவடைந்து தற்போது அந்தக் கட்சி 75ம் வருடத்தில் பயணிக்கிறது. இத்தனை வருடங்களாக
போட்டியின்றியே தலைவர் தெரிவு செய்யப்பட்டு வந்த நிலையில் இந்த வருடம் இருவர்
தலைமைத்துவத்தை ஏற்க விருப்பம் தெரிவித்ததில் மூன்றுபேர் போட்டிக் களத்தில்
இருக்கிறார்கள். ஆமாம், சிறிதரன், சுமந்திரன் ஆகிய இருவர் தலைமைத்துவத்துக்கு
விருப்பம் தெரிவித்த நிலையில் மூன்றாவதாக கிழக்கின் வேட்பாளராக சீனித்தம்பி
யோகேஸ்வரனும் களமிறங்கியிருக்கிறார்.
இவர்களில் முதலிருவரும் 2020 பொதுத் தேர்தல் முடிந்த கையோடு கட்சியின்
அதிகாரத்தைக் கைப்பற்ற தமக்கிருந்த ஆர்வத்தை வெளிப்படுத்தியிருந்தார்கள். தேர்தல் முடிவுகள் வந்த மறுநாளே (Aug 07, 2020), சுமந்திரன் தமிழரசுக் கட்சியின் தலைவர்,
செயலாளர்களின் தவறான நடவடிக்கைகளால் கட்சி பின்னடைந்து விட்டதாலும் அவர்கள்
தேர்தலில் தோற்றுப் போனதாலும் கட்சி மறுசீரமைப்பு விரைவில் செய்யப்படும் என்று சொல்லியிருந்தார்.
அதற்கு மறுநாள் (Aug 08), ஸ்ரீதரன் தமிழரசுக் கட்சியின் தலைமையை ஏற்கத் தான்
தயார் என்று சொல்லியிருந்தார், பின்னர், தாம் இருவரும் கட்சியின் தலைமையைக்
கைப்பற்ற முயலவில்லை என்று சுமந்திரன் ஊடகங்களுக்குத் தெரிவித்திருந்தார்.
ஆக இவர்களின் “கட்சியைக் கட்டுப்பாட்டுக்குள்”
எடுக்கும் ஆசை இன்று நேற்று வந்ததில்லை. மாறாக, இன்றுதான் அவர்களுக்கு சாதகமான
சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது என்று சொல்லலாம்.
தற்போது கட்சிக்குள் ஒருமித்த முடிவோடு தலைவர் தெரிவு செய்யப்படும்
நிலை இல்லாத சூழல் ஏற்பட்டிருக்கிறது. ஆனால், தமிழரசுக் கட்சி பலமாக நிலைத்திருக்க
வேண்டும் என்று விரும்பும் கட்சி அபிமானிகள் சிலர், இவ்வாறு கட்சிக்குள் தலைமைத்துவப்
போட்டியை ஊக்குவிப்பது எதிர்காலத்தில் கட்சிக்குள் நீடித்த முரண்பாட்டுக்கு
வழிவகுக்கலாம் என்று கருதுவது தெரிகிறது. அதனால் தலைமைப் பதவிக்குப் போட்டியிடும்
உறுப்பினர்கள் தமக்குள் சுமூகமாக பேசி, இந்தத் தேர்தலைத் தவிர்த்து ஒருமித்த
கருத்தோடு ஒருவரைத் தலைவராகவும் மற்றையவரை செயலாளராகவும் நியமிக்க வேண்டும் என்ற
கருத்தையும் முன் வைத்துள்ளனர். இல்லையெனில் தமிழரசுக் கட்சி மெல்ல மெல்ல சிதைந்து
அழிந்துபோகும் என்று அவர்கள் ஆருடம் கூறியுள்ளார்கள்.
இது ஒருபுறம் இருக்க, சிலர் இந்த மூவரில் யாருக்கு வெற்றி வாய்ப்பு
என்று களநில ஆய்வு ஒன்றையும் சிலர் செய்ய முற்பட்டனர். அதிலும், யாழை வாழிடமாகக்
கொண்ட, ஒரு சமூக வலைத்தளப் பிரபலம் ஒரு விசித்தரமான ஆய்வை மேற்கொண்டிருந்தார்.
களத்தில் மூன்று பேர் இருக்க அவரது ஆய்வில் இரண்டே பெயர்கள்தான் இருந்தன. அவர்
யோகேஸ்வரனின் பெயரை தனது ஆய்வில் சேர்த்துக் கொள்ளவில்லை. பின்னர் அவரது வீடியோவில்
அதற்கொரு விளக்கம் சொல்லியிருந்தாலும், ஒரு முறையான களஆய்வு என்று வரும்போது இவரது
விளக்கம் ஏற்புடையதல்ல. அதைவிட முக்கியமாக, “எவருமில்லை” என்ற ஒரு தெரிவை அவர்
வழங்கவில்லை. சிலர் அதை உடனேயே சுட்டிக் காட்டியும் அவர் சேர்த்துக் கொள்ளவில்லை.
இதுவும் இவரது ஆய்வில் முக்கிய பலவீனமாக இருக்கிறது.
இந்த ஆய்வு டிசைனில் அவர் செய்திருந்த இன்னொரு விடயத்தையும் இங்கு சுட்டிக் காட்ட வேண்டும். அவரைது ஆய்வில்
முதலில் சிறிதரனின் பெயரை “சிவஞானம் சிறிதரன்” என்றும் அடுத்ததாக சுமந்திரனின்
பெயரை “ஆப்ரகாம் சுமந்திரன்” என்றும் குறிப்பிட்டிருந்தார். எனக்குத் தெரிந்து
சுமந்திரனின் பெயர் “மதியாபரணம் சுமந்திரன்” என்றுதான் ஊடகப் பரப்பில்
பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் அவர் ஏன் “ஆப்ரகாம் சுமந்திரன்” என்று
பயன்படுத்தினார் என்பது தற்செயலானதா அல்லது திட்டமிட்டுச் செய்ததா என்று
தெரியவில்லை.
இவர் ஸ்ரீதரனுக்கு ஆதரவாகப் இருக்கிறாரா என்ற சந்தேகத்தை இவரது
செயற்பாடுகள் ஏற்படுத்துகிறது. இவர் இந்த ஆய்வையே ஸ்ரீதரனுக்காக பிரச்சாரம்
செய்வதற்காகவே செய்தார் என்ற சந்தேகத்தையும் ஆய்வின் பின்னர் அவர் வெளியிட்ட
வீடியோவில் வெளியிட்ட செய்தி ஏற்படுத்துகிறது.
மறுபுறத்தில், யோகேஸ்வரனின் நிலைப்பாடும் குழப்பம் தருவதாக
இருக்கிறது. முதலில் தலைவர் பதவிக்கான போட்டியில் குதித்தவர், பின்னர் தனது
விண்ணப்பத்தை மீளப் பெறத் தயார் என்றதோடு தனது ஆதரவு ஸ்ரீதரனுக்குத்தான் என்றும்
சொல்லியிருக்கிறார். ஆனால் இன்றுவரை தனது விண்ணப்பத்தை மீளப் பெறவில்லை. தான்
விண்ணப்பத்தை மீளப்பெற்ற பின் எவராவது தலையிட்டு தேர்தலை இல்லாது செய்து சுமந்திரன்
தலைவராக வரக்கூடிய சூழ்நிலை வந்துவிடக்கூடாது என்பதால்தான் தனது விண்ணப்பத்தை
மீளப் பெறவில்லை என்று அதற்கு விளக்கம் வேறு தந்திருக்கிறார். ஆக அவரும் ஒரு
புதுவித ஜனநாயகத்தை அறிமுகப்படுத்துகிறார்.
அதேநேரம், ஒருபுறம் தலைமைப் பதவி இம்முறை கிழக்கு மாகாணத்துக்கு
உரியது. இந்தத் தேர்தலே தேவையற்றது என்ற குரலும் சிலரால் எழுப்பபட்டுகிறது.
மறுபுறத்தில் இம்முறை செயலாளர் பதவி கிழக்கிற்கு வழங்கப்பட வேண்டும் என்ற குரலும்
கேட்கிறது. கிழக்கிலிருந்து இந்தக் குரல் எழுகிறது இதில் நியாயம் இருக்கிறது எனில்,
இதற்கு மதிப்புக் கொடுத்து யோகேஸ்வரன் தனது விண்ணப்பத்தை மீளப் பெறக்கூடாது. அதேபோல கிழக்கிலிருந்து ஒருவர் செயலாளர்
பதவிக்கு முடிவுத் திகதிக்கு முன்னர் விண்ணப்பித்திருக்க வேண்டும். ஆனால்
இதுநாள்வரை ஜனநாயக முறைப்படி கட்சியை நடாத்தாத ஒரு கட்சியின் உறுப்பினர்களிடம்
அதையெல்லாம் எதிர்பார்க்க முடியாதுதானே?
இவ்வாறான பலதரபட்ட கருத்துக்களும் பரிமாறப்பட்டு வரும் இந்த நிலையில் தமிழரசுக்
கட்சியில் உட்கட்சித் தேர்தல் நடந்தாலும் நடைபெறாவிட்டாலும் தமிழரசுக் கட்சியின்
எதிர்காலப் பயணம் இலகுவானதாக அமையப் போவதில்லை. குறிப்பாக ஸ்ரீதரன், சுமந்திரன்
ஆகியோரின் பின்னால் அணிவகுத்து நிற்பவர்கள் இனியும் ஓரணியில் செயற்பட வைப்பது
இலகுவானதாக இருக்காது.
அதனால் இந்தக் கட்சி அடுத்த வருடம் பொதுத் தேர்தல் ஒன்றுக்கு முகம்
கொடுக்கும்போது வெளியில் உள்ள எதிரணியையும் கட்சிக்குள்ளேயே இருக்கும் எதிரணியையும்
ஒன்றாக சமாளிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுவது திண்ணம். 2015 தேர்தலுடன்
ஒப்பிடும்போது 2020 இல் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வடக்குக் கிழக்கில் 37% வாக்குகளை
இழந்திருந்தது. தற்போது தமிழரசுக் கட்சி தனியே தேர்தலுக்கு முகம் கொடுக்கும் நிலை
வரும்போது நிச்சயம் வாக்கு வங்கி பாதிக்கப்படையும். தமிழரசுக் கட்சிக்கு நான்கிலிருந்து
ஐந்து ஆசனங்கள் கிடைத்தாலே ஆச்சரியம்தான்.
இன்னும் சில மணிநேரங்களில் தமிழரசுக் கட்சியின் தலைவர் யார் என்பது முடிவாகலாம். ஆனால் இந்தக் கட்சியின் தலையெழுத்து என்னவாகும் என்பதை அறிய நாங்கள் சில மாதங்கள் காத்திருக்க வேண்டியிருக்கும்.
- வீமன் -
No comments:
Post a Comment