Saturday, 16 November 2024

 

நல்லிணக்கம் நனவாகுமா?

 


17வது பாராளுமன்றத்துக்கான தேர்தலில் அனுரவின் NPP பெரும்பான்மை பெறுமா? இல்லையா? என்று சிலர் விவாதித்துக் கொண்டிருந்தார்கள், இன்னும் சிலர் அனுர ஆட்சி அமைக்க ஆதரவு வழங்கத் தமது கட்சி தயாராக இருக்கிறது என்று கைக்கு வருமுன்னே நெய்க்கு விலை பேசிக் கொண்டிருந்தார்கள். ஆனால் மக்களோ நீங்கள் எதையாவது பேசுங்கள், நாங்கள் தெளிவாக இருக்கிறோம் என்று வாக்களிப்பின் மூலம் 2/3 க்கு மேலாக அறுதிப் பெரும்பான்மையை மக்கள் கொடுத்திருக்கிறார்கள்.

 

ஆளும் கட்சியூடாக மட்டுமன்றி ஏனைய கட்சிகள் ஊடாகவும் பல புதியவர்களும் இளையவர்களும் பாராளுமன்றம் செல்ல உள்ளார்கள். இது ஒரு நல்ல மாற்றத்துக்கான ஆரம்பமாகப் பார்க்க முடியும். இலங்கை மக்களில் பெரும்பான்மையினரின் தற்போதைய எதிர்பார்ப்பு, இந்த அரசு நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தும், ஊழல், அதிகாரத் துஸ்பிரயோகங்களை இல்லாது செய்யும் நாட்டை மீண்டும் செழிப்பான நிலைக்குக் கொண்டு செல்லும் என்பதாகவே இருக்கிறது.

 

வடக்குக் கிழக்கு மக்களிடமும் இதே எதிர்பார்ப்புகள் இருந்தாலும் அவற்றோடு இன்னமும் சிறையில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை, தமிழரின் தாயகப் பகுதியில் படையினர் வசமுள்ள தமிழ் மக்களின் தனிப்பட்ட நிலப் பகுதிகளை விடுவித்தல், தமிழர்கள் பாரம்பரியமாக வாழும் பிரதேசங்களில் அரச ஆதரவுடன் பௌத்த விகாரைகள் கட்டப்படல் போன்றவை நிறுத்தப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் இருக்கிறது.

 

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளுக்கு இன்னமும் இலங்கை அரசு கடந்த 14 வருடங்களாக ஒரு பதிலை வழங்கவில்லை. இந்த அரசாவது ஒரு பதிலைச் சொல்லுமா என்ற எதிர்பார்ப்பும் தமிழ் மக்களுக்கு இருக்கிறது. அவர்களுக்கு ஒரு closure தேவை. அதனை இந்த அரசாவது வழங்குமா என்ற எதிர்ப்பார்ப்பு அவர்களிடம் நிச்சயம் இருக்கும்.

 

இரண்டு இனங்களுக்கிடையில் நல்லிணக்கம் ஏற்பட வேண்டும், ஒன்றுபட்டு, ஒரு தேசமாக வாழ வேண்டும் என்றால், இரண்டு இனங்களுமே இதய சுத்தியுடன் ஒன்றை ஒன்று அணுக வேண்டும். பாதிக்கப்பட்ட இனத்தின் தமது மொழி, கலாச்சார சுதந்திரத்துக்கு பாதிப்பு வராத சூழல் ஏற்படுத்தப்பட வேண்டும். அவர்களுடன் வாழிடம், வாழ்வாதாரம் சிதைக்கபடாத சூழ்நிலை உறுதிப்படுத்தப்பட வேண்டும். கடந்த காலங்களில் அதிகாரத்தில் இருக்கும் தரப்பால் மறுதரப்புக்கு ஏற்பட்ட இழப்புகளை, அதிகாரத்தில் இருக்கும் தரப்பு ஏற்றுக் கொள்ள வேண்டும். ஏற்படுத்தப்பட்ட பாதிப்புகளுக்கு எந்த வித சமரசமும் இல்லாது, மன்னிப்புக் கேட்க வேண்டும்.  

 

வடக்குக் கிழக்கு மக்களின் மனங்களை வெல்ல வேண்டும் என்றால் இவையெல்லாம் நடக்க வேண்டும். ஆனால் கடந்த காலங்களில் யாழ் நூலகம் எரிக்கப்பட்டமை மட்டும் மன்னிப்புக் கேட்கப்பட்டதே அன்றி, தமிழர்கள் மீது ஐம்பதுகளில் இருந்து மேற்கொள்ளப்பட்ட திட்டமிட்ட வன்முறைத் தாக்குதல்கள், இறுதி யுத்தத்தில் பெருமளவு மக்கள் கொல்லப்பட்டமை என்பவற்றுக்கு கடந்த கால ஜனாதிபதிகள் மன்னிப்புக் கேட்கவில்லை. இந்த அரசாவது கேட்குமா? கேட்டு தேசிய நல்லிணக்கத்தை நோக்கி மக்களை அழைத்துச் செல்லுமா? அல்லது நல்லிணக்கம் என்பது வெறும் கனவாகவே போய்விடுமா?

 

-    வீமன் -

Wednesday, 13 November 2024

 

பாராளுமன்றப் பதவிப் போர் – 4

 

கிழக்கு மாகாணத்தைப் பொறுத்தவரை, மூன்றில் ஒரு பங்கு தமிழர்கள் வாழும் திருகோணமலையில் கடந்த தடவை ஒரு ஆசனமே வெல்லப்பட்டது. தமிழ் கட்சிகள் பிரிந்து நின்றால் அதுவும் கிடைக்காது என்பதால், வடக்கில் பகை என்றாலும் கிழக்கில் வீடும் சங்கும் சேர்ந்து நிற்பது வரவேற்கத் தக்கதே. ஆனால் நாம்தான் உண்மையான தமிழ்த் தேசியக் கட்சி என்று தனியாக நிற்கும் சைக்கிள் கட்சி கொஞ்ச வாக்குகளைப் பிரிப்பதும் நடக்கப் போகிறது.

 

மட்டக்களப்பில் பிள்ளையான் கடந்த தடவை 67,692 வாக்குகளை எடுத்திருந்தார். இம்முறை தனியாகக் களம் காணவேண்டிய கட்டாயத்தில் இருக்கும் இவருக்கு முன்னர் இருந்த செல்வாக்கு தற்போது இல்லையென்று கூறுகிறார்கள். அவருக்கு ஆசனம் கிடைக்காது என்று எதிர்வு கூறுகிறார்கள்.  என்னதான் எதிர் விமர்சனம் இருந்தாலும் தமிழரசுக் கட்சியில் சாணக்கியன் மீண்டும் வெல்வார் என்று சொல்லப்படுகிறது. இம்முறை வாக்குகள் சிதறும் சந்தர்ப்பம் அதிகம் இருப்பதால் தமிழரசுக் கட்சிக்கு இரண்டாவது ஆசனம் கிடைக்குமா என்பது சந்தேகமே. அதேநேரம், NPPக்கு ஒரு ஆசனம் கிடைக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

 

17% தமிழர்கள் வாழ்ந்தாலும் தமிழ் மக்கள் ஒற்றுமையாக வாக்களித்தால் ஒரு ஆசனம் வெல்லக்கூடிய ஒரு தொகுதியாகவே அம்பாறை (திகமடுல்ல) தொகுதி இருக்கிறது. கடந்த தடவை அகில இலங்கைத் தமிழ் மகாசபா வாக்குகளைப் பிரிதிருக்காவிட்டால் தமிழரசுக் கட்சிக்கு ஒரு ஆசனம் சுலபமாக கிடைத்திருக்கும். இம்முறையும் அதே நிலை ஏற்படலாம் அல்லது அனுர அலையில் அவர்களுக்கு 3 – 4 ஆசனங்கள் கிடைக்கலாம்.

 

வடக்குக் கிழக்கில் இம்முறை பல பெண்கள் களமிறங்கியிருந்தாலும் அவர்களில் பலர் ஏற்கனவே மக்களுக்கு ஓரளவு அறிமுகமானவர்களாக இருந்தாலும் அவர்களில் ஓரிருவர் மட்டுமே பாராளுமன்றம் செல்லும் வாய்ப்புள்ளது. மற்றவர்கள் கட்சிகான வாக்குகளை அதிகரிக்க மட்டுமே பயன்படுவார்கள்.

 

யாருக்கு வாக்களிப்பது?

பொதுவாகவே வடக்குக் கிழக்கில் தமிழ் பேசும் அனைத்து மக்களுக்குமே கடந்த காலங்களில் தாம் நம்பி வாக்களித்தவர்கள் கொடுத்த வாக்கை நிறைவேற்றவில்லை என்ற கோபம் கணிசமான வாக்காளர்களிடம் இருக்கிறது. ஆனால் சிலர் இன்றும் தாம் பாரம்பரியமாக வாக்களித்த கட்சிக்கே வாக்களிக்கும் நிலையில்தான் இருக்கிறார்கள்.

 

அதேநேரம், புதிய வாக்காளர்கள் என்ன முடிவு எடுப்பார்கள் என்பதையும் ஊகிக்க முடியாது. அவர்கள் “தமிழ்த் தேசியம்” எப்படிப் பார்க்கிறார்கள் என்பதுவும் ஒரு புதிரான விடயமாகவே இருக்கிறது. மறுபுறத்தில், சமூக வலைத்தள அலப்பறைகளை வைத்து இன்னார்தான் வெல்லுவார் என்றும் சொல்லிவிட முடியாது. சமூக வலைத்தளத்தில் இல்லாத, அல்லது சமூக வலைத்தளத்தில் வருவதைக் கணக்கில் எடுக்காத வாக்காளர்கள் பெரும் எண்ணிக்கையில் இருக்கிறார்கள். அவர்கள்தான் கடைசியில் யார் வெல்வது என்பதைத் தீர்மானிக்கப் போகிறார்கள்.

 

இம்முறை பல கட்சிகள் திறமையுள்ள இளைஞர்களை  வேட்பாளர்களாக நிறுத்தியிருந்தாலும் அவர்களை வைத்து தாம் பாராளுமன்றம் செல்ல வேண்டும் என்பதே வயதான இளைஞர்களின் கனவாக இருக்கிறது. கட்சிகளின் பெயர்களில் ஜனநாயகம் இருந்தாலும், தேசியம் இருந்தாலும் தமிழ்த் கட்சிகளிடம் உட்கட்சி ஜனநாயக கட்டமைப்பு இல்லை என்பதே உண்மை. பல கட்சிகளின், வேட்பாளர்களின் வார்த்தைகளில் “தமிழ்த் தேசியம்” என்பது வெறும் வார்த்தைகளாவே துருத்திக் கொண்டு நிற்கின்றன. மூன்று பேரை பாராளுமன்றம் அனுப்புங்கள், நாம் ஊழலை முற்றாக ஒழிப்போம், சட்டத்தைச் சரி செய்வோம், தமிழரின் உரிமையை வென்றெடுப்போம் என்பதுவும் வாயால் வடை சுடும் கதைதான்.

 

மக்கள் இதைப் புரிந்து கொள்ள முடியாத முட்டாள்கள் இல்லை. ஆனால் காலம் காலமாக வாக்களித்த கட்சிக்கே வாக்கு என்பதுவும், நான் தலைவரின் வழியில் செல்கிறேன் என்று சொல்லும் வாய் வார்த்தையை நம்பி வாக்களிப்பதுவும் முட்டாள்தனம் என்று நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

 

பலமுனைப் போட்டி உள்ள இந்தச் சூழலில் வாக்காளர்கள் சரியாகச் சிந்தித்து வாக்களிப்பது முக்கியமானது. ஏற்கனவே சில நல்ல விடயங்களைச் செய்யத் தொடங்கியுள்ள NPP பாராளுமன்றில் பெரும்பான்மை பெற்றாலே தாம் உறுதியளித்த விடயங்களைச் செய்ய முடியும். எனவே அந்தக் கட்சி வெல்வதும் முக்கியமானது. எம்மை நேரடியாகக் கொன்றவருக்கே வாக்களித்த மக்கள், கூட நின்றவருக்கு ஒருமுறை ஆதரவளிப்பதால் பெரும் பாவம் சூழ்ந்துவிடப் போவதில்லை. அதே நேரம் வடக்குக் கிழக்கில் குறைந்தது ஒவ்வொரு NPP உறுப்பினர் பாராளுமன்றம் செல்வதால் அந்தக் கட்சி உண்மையிலேயே இதய சுத்தியுடன் எம்மை அணுகுகிறதா என்பதை அறியவும் ஒரு சந்தர்ப்பமாக அமையும். ஆனால் வடக்குக் கிழக்கில் அதிக ஆசனங்களை NPPக்கு கொடுப்பதும் ஆரோக்கியமானதாக அமையாது.

 

அதேநேரம், தமிழர்களின் இனம், மொழி சார்ந்த அபிலாசைகளை தொடர்ந்து வெளிப்படுத்தவும், அவர்களின் நீண்டகாலப் பிரச்சனைகள், அன்றாடப் பிரச்சனைகளுக்காக குரல் கொடுக்கவும் தேசியக் கட்சிகள் சாராத கட்சியின் உறுப்பினர்கள் பாராளுமன்றம் செல்வதும் அவசியம். எனவே, தமிழ்க் கட்சிகளில் சரியான திசையில் பயணிக்கும் கட்சியிலிருந்தும் உறுப்பினர்கள் செல்வதும் அவசியம், அந்தக் கட்சிகளின் வாய்ப்பந்தல் வீரர்களுக்கு வாக்களிக்காமல் திறமை வாய்ந்த இளையவர்களை இம்முறை பாராளுமன்றம் அனுப்புங்கள்.

 

-    வீமன் -

Sunday, 10 November 2024

 

பாராளுமன்றப் பதவிப் போர் – 3




டக்ளஸின் வீணை

ஏனைய நீண்டநாள் வரலாறு கொண்ட தமிழ்க் கட்சிகளோடு ஒப்பிடும்போது வடக்கில் பெரும் சிதைவுகள் இல்லாது பலமாக இருக்கும் கட்சியென்றால் அது டக்ளஸின் கட்சிதான். கடந்த 20 வருடங்களில் 2010 மட்டுமே இந்தக் கட்சிக்குப் பெரும் பின்னடைவு ஏற்பட்டிருந்தது. ஆனால் 2015இல் 33,481 வாக்குகள், 2016இல் சந்திரகுமார் பிரிந்த பின்னர், 2020இல் 61,464 வாக்குகளுடன் இரண்டு ஆசனங்களைப் பெற்றுக் கொண்ட கட்சியாக இருக்கிறது.

 

என்னதான் தமிழ்த் தேசியம் பேசுவோர் இவரைத் துரோகி, ஒட்டுக் குழுத் தலைவர் என்று தூற்றினாலும், அவர் தொடர்ந்தும் பாராளுமன்றம் செல்லும் ஒருவராகவே இருக்கிறார். அவர் மீது தொடர்ந்தும் ஊழல் குற்றச்சாட்டுகள், கடந்த காலத்தில் பல கொலைகளைச் செய்ததான குற்றச்சாட்டுகள் இருந்தாலும் அவர் அரசோடு இணங்கும் மத்தியில் கூட்டாட்சி என்ற வழிமுறையில் பலமான அரசியல்வாதியாகவே இருந்து வந்திருக்கிறார். பல தடவைகள் எம்பியாகவும் அமைச்சராகவும் இருந்த காலத்தில் தனது கட்சி சார்ந்தவர்கள், கட்சியோடு எந்தத் தொடர்பும் இல்லாதவர்களுக்கும் வேலை வாய்ப்பை வழங்கியவர் என்பதால் அவரது ஆதரவுத் தளம் பலமாகவே இருக்கிறது.

 

ஆனால் இம்முறை கடற்தொழில் அமைச்சராக இருந்த காலத்தில் வடபகுதி மீனவர்களுக்கு இந்திய மீனவர்களால் ஏற்படும் பாதிப்புகள், வடக்கின் மீன்வளம் அழிவடைவது தொடர்பாக இவர் எந்தக் காத்திரமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்ற கோபம் கணிசமான மீனவர்களுக்கு இருக்கிறது. இருந்தாலும் ஏனைய கட்சிகள் சிதறிக் கிடக்கும் சூழலில் டக்ளஸின் வெற்றியை இந்தப் பின்னடைவு தடுக்கப் போவதில்லை என்றே ஊகிக்க முடியும்.

 

 

மணியும் மானும்  

2020 தேர்தலின் பின்னர் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட மணிவண்ணன், தமிழரசுக் கட்சியில் இளைஞர்களுக்கு வாய்ப்புக் கிடைக்கும் காத்திருந்து கிடைக்காத நிலையில் வெளியேறிய உமாகரன் இராசையா மற்றும் பலரைக் கொண்ட சுயேட்சைக் குழுவாக மான் சின்னத்துடன் தமிழ் மக்கள் கூட்டணியும் இம்முறை களம் காண்கிறது. மணிவண்ணன் தமிழ் தேசிய மக்கள் முன்னணியில் போட்டியிட்டபோது 22,741 வாக்குகளைப் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

 

பின்னர் EPDP ஆதரவுடன் மாநகர முதல்வரானபோது அவருக்கு துரோகிப் பட்டம் வழங்கப்பட்டாலும், முதல்வராக சில நல்ல வேலைகளைச் செய்தது இவரின் சாதகமான அம்சமாக இருக்கிறது. ஆனால் அபலைக்கு வாழ்வாதார உதவியாக பார் லைசன்ஸ் பெற்றுக் கொடுத்த பாரி வள்ளல் விக்னேஸ்வரன் நிழலில் நிற்பதும் அவரது தவறை ஒப்புக்கொள்ளாது சமாளிக்க முயல்வதும் பாதகமான விடயமாக இருக்கிறது.

 

கட்சியில் இன்னொரு பேச்சாற்றல் உள்ளவரான உமாகரன் இராசையாவின் மீது சங்கி என்ற ஒரு முத்திரையும் பாதிக்கப்பட்டுள்ளது. அத்தோடு ஆசனத்துக்காக வீட்டை விட்டு ஓடிவந்தவர் என்ற கருத்தும் சொல்லப்படுகிறது. இருப்பினும் இவர்மீதான “சங்கி” முத்திரையே வடக்கின் சைவர்களின் வாக்குக்களைப் பெற்றுக் கொடுத்தாலும் ஆச்சரியம் இல்லை.

 

சித்தரின் சித்து வேலையும் சங்கும்!

சித்தரின் ஜனநாயகத் தமிழ் தேசிய  கூட்டணி இரண்டு சித்து வேலைகளை முயற்சித்தது. தேர்தலில் போட்டியிட, ஜனாதிபதி தேர்தலில் கணிசமான வாக்குகளைப் பெற்ற பெற்ற சங்குச் ஆசைப்பட்டபடி கிடைத்துவிட்டது. கடந்த வருடமும் ஒரு சித்துவேலை முயற்சிக்கப்பட்டது. தமது கட்சிப் பெயரை தமிழ்த் தேசியக் கூட்டணி என்று மாற்றி, ஆங்கிலத்தில் TNA எனப் பயன்படுத்தவும் ஒரு முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால், தேர்தல் ஆணைக்குழு அனுமதிக்கவில்லை.

கட்சியில் செல்வம், சுரேஸ், சித்தா என மூன்று முன்னாள் இயக்கங்களின் தலைவர்கள் அவர்களோடு அமரர் ரவிராஜின் மனைவி சசிகலா எனப் பிரபலங்கள் இருந்தாலும் இவர்கள் மீதுள்ள முன்னாள் ஒட்டுக் குழுக்கள் என்ற பெயரும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. எனவே இது இவர்களுக்கு ஒரு பாதகமான விடயமாக இருக்கிறது. ஆனால் இந்த முக்கியஸ்தர்களுக்கு என்று சில ஆதரவுத் தளங்கள் இருப்பதையும் மறுத்துவிட முடியாது. ஆனால் 2015இல் 53,740 வாக்குகளை எடுத்த சித்தரால் 2020இல் 23,840 வாக்குகளை மட்டுமே பெறமுடிந்தது. இம்முறை அது அதிகரிக்குமா இல்லையா என்பது கேள்விக்குரியதே. ஆனால் அவர் இம்முறை 15,௦௦௦ வாக்குகள் பெற்றாலே இம்முறை ஆசனம் கிடைக்கும் என்ற எதிர்வுகூறல்களும் வைக்கப்படுகின்றன.

 

கடந்த தேர்தலில் 23,098 வாக்குகள் எடுத்துப் பாராளுமன்றம் செல்லும் வாய்ப்பை இழந்த சசிகலா ரவிராஜ் இம்முறை தனக்கு TNA போட்டியிட சந்தர்ப்பம் தராத காரணத்தால் கட்சியை விட்டு வெளியேறி சங்குடன் சங்கமமாகி நிற்கிறார். கணவரின் பாதையை விட்டு நான் விலகவில்லை, அவருடன் சேர்ந்து பயணித்தவர்களுடன்தான் பயணிக்கிறேன் என்று இவர் சொன்னாலும், சித்தாவை 2004இல் கூட்டமைப்பில் சேர்த்துக் கொள்ளவில்லை என்பதையும், இறுதிப் போரின் பின்னரே அவர் உள்வாங்கப்பட்டார் என்பதையும் மக்கள் அறிவார்கள். சசிகலா கட்சிக் கொள்கையை விட பாராளுமன்றம் செல்லும் ஆசைக்கே முன்னுரிமை கொடுத்துள்ளார் என்ற விமர்சனத்தைத் தாண்டித்தான் அவர் வாக்கு வேட்டை செய்ய வேண்டியுள்ளது. இவருக்கு இம்முறை ஆசனம் கிடைப்பது சந்தேகமே.

 

அங்கஜன்

கடந்த முறை வடக்கில் யாழ் தொகுதியில் அதிக விருப்பு வாக்குகளைப் பெற்றவரான அங்கயன் ராமநாதன், SLFP யிலிருந்து தாவி ஜனாதிபதி தேர்தலில் ரணிலுக்கு ஆதரவளித்தார். இரண்டே மாதத்தில் கட்சி தாவி DNA உடன் சேர்ந்து நிற்கிறார். அவரால் வேலை வாய்ப்புக் கிடைக்கும் என்று நம்பிக் கடந்த தடவை அவரை வெற்றிபெறச் செய்த இளைய தலைமுறை நிச்சயம் இம்முறை அவருக்கு வாக்களிக்கப் போவதில்லை. ஆனால் அவர் தபார்பெட்டிச் சின்னத்தில் நிற்பதால், வீட்டுக்கு போடப் போகும் வாக்காளர் சிலர் மாறி இவருக்குப் போடவும் வாய்ப்புள்ளது. ஆனால் இவருக்கு ஆசனம் கிடைப்பது சந்தேகமே.

 

மாம்பழம்

வடக்கில் ஆசனம் தரவில்லை என்பதால் வீட்டை விட்டு வெளியேறிய இன்னொரு சட்டத்தரணியான தவராசா உருவாக்கிய கட்சிதான் ஜனநாயக தமிழரசுக் கூட்டமைப்பு. கட்சி ஆரம்பித்த உடனேயே மாம்பழத்துடன் மாவையைச் சந்தித்து, தேர்தல் விதிமுறையை மீறி விமர்சனத்துக்கும் உள்ளானார். இவர் மீது அரசியல் கறையேதும் இல்லாதபோதும் இவரோடு நிற்கும் ஐங்கரநேசன் ஊழல் நிரூபிக்கப்பட்ட ஒருவராகக் காணப்படுகிறார். இன்னொருவரான சரவணபவன் மீதும் பல ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளன. எனவே சேராத இடம் சேர்ந்த தவராசா இம்முறை வெற்றி பெறுவதற்கான சந்தர்ப்பம் இல்லையென்றே கூறலாம். அதிகாரிகளின், அரசியல்வாதிகளின் ஊழல் மோசடிகளால் கோபத்தில் இருக்கும் மக்கள் இந்தக் கட்சிக்கு வாக்குப் போடுவது சந்தேகமே.

 

தொடர்ந்து பேசுவோம்!

 

-    வீமன் -

Thursday, 7 November 2024

பாராளுமன்றப் பதவிப் போர் – 2

 

(சுமந்திரனின்) தமிழரசுக் கட்சி!

செல்வநாயகம் அவர்களால் 1949 இல் ஆரம்பிக்கப்பட்ட தமிழரசுக் கட்சி பலரின் கைமாறி இறுதியாக ஸ்ரீதரனின் கைக்கு எட்டியும் எட்டாமலும் இருக்கும் நிலையில் இருக்கிறது. தமிழர் தாயகம், சமஷ்டி என்று தொடர்ந்து பேசிக் கொண்டும், தீபாவளிக்குள் தீர்வு என்றும் பல தசாப்தங்களாக மக்களை ஏய்த்துப் பிழைத்த கட்சியாகவே பலரால் பார்க்கப்படுகிறது. அண்மையில் நடந்த தலைவர்  தெரிவின்போது அரங்கேறிய கூத்துகள், தேர்தல் முடிவை எதிர்த்துப் போடப்பட்ட வழக்கு, தமிழ் ஜனாதிபதிப் பொது வேட்பாளரை ஆதரிப்பதில் இருந்த இரட்டை நிலைப்பாடு என்பன கட்சியின் மதிப்பை மேலும் இறக்கியது எனலாம்.  

 

தற்போது பாராளுமன்றத் தேர்தல் வேட்பாளர் தெரிவு, கட்சியை மேலும் பலவீனப்படுத்தும் வகையிலேயே அமைந்துள்ளது. வடக்கில் தனியாக நிற்பதுடன் முன்னாள் பங்காளிக் கட்சிகளை திருடர்கள், கொலைகாரர்கள் என்று விமர்சித்துக் கொண்டே, திருகோணமலையில் அதே “திருடர்களுடன்” கூட்டு என்பது என்ன விதமான கொள்கை என மக்களை கேட்கச் செய்துள்ளது. தலைவராக இல்லாத போதிலும், தன் விருப்பப்படி வேட்பாளர்களைத் தெரிவு செய்து, சிறிதரனையும் மௌனிக்கச் செய்து கட்சியை சுமந்திரனின் தமிழரசுக் கட்சியாக மாற்றி விட்டார் என்றே சொல்லலாம்.

 

அவர் தன்னை ஒரு நேர்மையான ஜனநாயகவாதியாக காட்டிக் கொண்டாலும், கடந்த தேர்தல் காலத்திலும் இம்முறையும் உட்கட்சி ஜனநாயக முறையில் வேட்பாளர்களை நியமிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு கட்சி உறுப்பினர்களாலேயே முன் வைக்கப்பட்டது. கட்சிக்குள் நீண்ட காலமாக இருந்த பெண் உறுப்பினர்களின் விண்ணப்பத்தை ஓரமாக வைத்துவிட்டு தன் விருப்பம் போல புதிய வேட்பாளர்களை களமிறக்கி சில நீண்டகால உறுப்பினர்கள் கட்சியை விட்டு வெளியேறி தனியாகக் களம் காணவும் இவரே காரணமாகி நிற்கிறார். கடந்த முறை சசிகலாவை வாக்குகளுக்காக போட்டியில் இறக்கியது போலவே இம்முறையும் அவர் குறித்த நபர்களை இறக்கியிருப்பதாகவே பலரும் கூறுவதை அவதானிக்க முடிகிறது. இந்தச் சூழலில் எதுவும் செய்யாமல் மௌனமாக தனக்குரிய ஆசனத்தைப் பெற்று அமைதியாக இருக்கும் ஸ்ரீதரன் மீதும் அவரது இயலாமை குறித்து விமர்சனங்கள் எழுந்துள்ளன.

 

மறுபுறத்தில் கிழக்கு மாகாணத்தில் கடந்த தடவை பாராளுமன்றம் சென்ற குறுகிய காலத்திலேயே தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்களிடையே துரிதமாகப் பிரபலமான சாணக்கியனும் சுமந்திரனுடன் சேர்ந்த பின்னர் தனது செல்வாக்கை கணிசமாக இழந்துள்ளதாகவே கிழக்கு நண்பர்கள் கூறுகிறார்கள். ஆனாலும் அவருக்கு ஆசனம் கிடைக்கும் என்றும்  கூறுகிறார்கள். கட்சியில் தற்போது முக்கிய தூண்களாக காட்டிக் கொள்வோரின் நிலையே இப்படி இருக்கும்போது ஏனைய வேட்பாளர்களுக்கு வெல்லும் சந்தர்ப்பம் கிடைக்கும் என்பதே சந்தேகத்துக்குரியதாக இருக்கிறது.

 

தலைவரே அங்கீகரித்த கட்சி, மாவீரர்களின் கட்சி என்று மேடை மேடையாகச் சொன்னாலும் தமிழரசுக் கட்சி அங்கீகரிக்கப்பட்ட சூழ்நிலை வேறு என்பதையும் இவர்கள் இதய சுத்தியோடு தமிழ் மக்களுக்காக போராடவில்லை என்பதையும் தமிழ் மக்கள் பலரும் உணராமல் இல்லை. இந்த நிலையில் இவர்கள் இம்முறை படுமோசமாக மண் கௌவினாலும் ஆச்சரியமில்லை. என்னைக் கேட்டால், கட்சியில் பெரும் சிதைவையும் பின்னடைவையும் பெற்றிருக்கும் தமிழரசுக் கட்சிக்கு இம்முறை மக்கள் ஓய்வு கொடுத்து, அவர்கள் தம்மை புத்தாக்கம் செய்து கொள்ள கால அவகாசம் கொடுப்பதே நல்லது என்பேன்.

 

ஒரு நாடு, இரு தேசங்கள்

 

இலங்கையில் நீண்ட வரலாறு கொண்ட, மூன்றாம் தலைமுறை மன்னராட்சி நடைபெறும் ஒரு கட்சி என்று இந்தக் கட்சியைச் சொல்லலாம். தேர்தல் என்று வந்தாலே இவர்கள் எப்போதுமே இரட்டை நிலைப்பாடுதான். ஜனாதிபதி தேர்தல் என்றால், அது சிங்களத் தலைமைக்கான தேர்தல், தமிழர்கள் தேர்தலைப் பகிஸ்கரிக்க வேண்டும் என்பார்கள். சிங்கக்கொடிக்கு கிட்டவும் போக மாட்டோம் என்பார்கள். ஆனால் பாராளுமன்ற தேர்தலில் ஆசனம் கிடைத்தால் அதே சிங்கக் கொடி பறக்கும் பாராளுமன்றம் செல்லத் தயங்க மாட்டார்கள்.

 

2010 தேர்தலில் கஜேந்திரனுக்கு யாழ் தொகுதியில் ஆசனம் ஒதுக்கவில்லை என்று முரண்பட்டு தனிக் கட்சி கண்டுவிட்டு, தலைவரின் கொள்கையைக் கைவிட்ட கூட்டமைப்பிலிருந்து கொள்கைக்காக பிரிந்தோம் என்று கூசாமல் சொல்பவர்கள். 2009இல் கைதான தனது தம்பியை மட்டும் காப்பாற்றி சிறையில் இருந்த ஏனைய தமிழ் இளைஞர்களை விடுவிக்க அப்போது பா.உ. வாக இருந்த கஜேந்திரன்  எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்ற ஒரு குற்றச்சாட்டும் காற்றுவெளியில் மிதந்து கொண்டிருக்கிறது. இதுவரை சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ்க் கைதிகளில் எத்தனை பேரை இவர்கள் வழக்குத் தொடுத்து விடுவித்தார்கள் என்ற கேள்விக்குப் பதில் உங்களுக்கே தெரியும்.

 

2020 தேர்தலின் பின்னர் சட்டத்தரணி மணிவண்ணனை தனியாக நிதி பெற்றார், கட்சியின் கொள்கைக்கு மாறாக நடந்தார் என்று சொல்லி கட்சியிலிருந்து வெளியேற்றினார்கள். அவர் தேர்தலுக்கு 10 மாதங்களுக்கு முன்னர் அவ்வாறு நடந்து கொண்டதாக கூறிய பிரதானிகளிடம், அப்படியானால் ஏன் அவரை அப்போது கட்சியிலிருந்து விலக்கவில்லை என்ற கேள்விக்கு மழுப்பலாக பதில் சொன்னாலும் அவர் மூலம் கிடைக்கும் வாக்குக்காகவே அவ்வாறு நடந்து கொண்டதாக சொல்லப்பட்டது. இதிலேயே கட்சியின் நேர்மை புலப்பட்டது. அவர் மீது குற்றம் சுமத்தினாலும் கடைசி வரை அதனை அவர்கள் நிரூபிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

தனியாக களம் கண்ட பின்னர், முதன் முறையாக 2020இல் ஆசனம் வென்றபோது கிடைத்த போனஸ் ஆசனத்தை கிழக்கிற்கு கொடுக்கும்படி கட்சியில் சில உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் கேட்டுக் கொண்டாலும், தேர்தலில் தோற்றுப் போன, வடக்கைச் சேர்ந்த ஒருவருக்கே வழங்கி தமது கட்சியும்  உட்கட்சி ஜனநாயகத்தை “மதிக்கும்” கட்சி என்று நிரூபித்த கட்சியாகவே இருக்கிறது.

தலைவரின் கொள்கையைப் பின்பற்றும் கட்சி என்று சொல்லிக் கொண்டாலும் தமது வேட்பாளர் பட்டியலில் எத்தனை முன்னாள் போராளிகள் இருக்கிறார்கள் என்பதே அவர்களின் கொள்கைச் சுத்தத்தை வெளிப்படுத்தும் வகையில் உள்ளது. இம்முறை வன்னித் தொகுதியில் முன்னாள் போராளிகளை பட்டியலில் இணைக்கும்படி ஒரு முன்னாள் போராளி நேரடியாக தொடர்பு கொண்டு கேட்டபோது கட்சியின் தளபதி, “எங்களோடு போராட்டத்துக்கு வரக்கூடிய ஆட்களுக்குத்தான் இடம் கொடுப்போம் என்று கூறியதாகவும் ஒரு தகவல் இருக்கிறது.

 

தொடர்ந்து பேசுவோம்!

-    வீமன் -


 

பாராளுமன்றப் பதவிப் போர் – 1

இம்முறை இலங்கையில் நடைபெறும் பாராளுமன்றத் தேர்தல் வழமையை விட வித்தியாசமானது. தெற்கில் NPP இம்முறை ஏனைய கட்சிகளைப் பின் தள்ளி அதிகளவு ஆசனங்களைப் பெறும் என்ற எதிர்பார்ப்பு இருந்தாலும் பெரும்பான்மையைப் பெறுமா என்பது தற்போது கேள்விக்குரியதாகவே இருக்கிறது. ஜனாதிபதி தேர்தலில் வடக்குக் கிழக்குத் தமிழ் பேசும் மக்களின் ஆதரவின்றி வெல்ல முடியும் என்ற நம்பிக்கையில் இருந்த NPPக்கு தற்போது வடக்குக் கிழக்கில் கிடைக்கக்கூடிய ஒவ்வொரு ஆசனமும் பலம் சேர்ப்பதாக அமையும் என்பதில் ஐயமில்லை.  

 

ஆனால் வடக்குக் கிழக்கில் கிழங்கு அடுக்கியது போல ஒவ்வொரு தேர்தல் மாவட்டத்திலும் சராசரியாக 30 - 40 வரையான எண்ணிக்கையில் கட்சிகளும், சுயேட்சைக் குழுக்களும் போட்டியில் இறங்கியுள்ளன. 2004 இல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற பெயரில் கட்டாயக் கல்யாணத்தில் ஆரம்பித்த கூட்டணியின் கட்சிகள் தற்போது முழுமையான விவாகரத்துப் பெற்று தனித் தனியாக களத்தில் நிற்கின்றன. இது போதாதென்று உள்ளக முரண்பாட்டினால் வீட்டுக் கட்சியிலிருந்து வெளியேறிய சிலர் சுயேட்சையாக களத்தில் இறங்கியுள்ளார்கள்.

 

வழமையாக தமிழ் கட்சிகள் கையிலெடுக்கும் “தேசியம்”, NPP முன்வைத்த “மாற்றம்”, புதிதாக கையிலெடுத்த “இளையவர்களுக்கு சந்தர்ப்பம்” என்ற மந்திர வார்த்தைகளைச் சகலரும் ஓதிக் கொண்டிருக்கிறார்கள். “ஊழலை ஒழிப்போம்” என்ற, NPPயிடம் கடன் வாங்கிய வார்த்தைகளும் சுலோகமாக பயன்படுத்தப்படுகின்றன.

 

NPP அலை வீசும் நேரத்தில், தமிழர்களின் பிரதிநித்துவம் தமிழ் தேசியக் கட்சிகள் ஊடாக உறுதிசெய்யப்பட வேண்டும்; தமிழ் கட்சிகள் ஒன்றாக நின்று அதிக ஆசனங்களைப் பெறுவதை உறுதிப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் உள்நாட்டிலும் புலம்பெயர் தேசத்திலிருந்தும் ஒலித்தது.

ஆனால், வேட்புமனுத் தயாரிக்கும்போது, முக்கிய தமிழ் கட்சிகளின் தலைமைகள் எடுத்த “ஜனநாயகத் தெரிவு” முறையால் கடந்த காலங்களில் ஒன்றாக நின்றவர்கள் சங்கு, மான், மாம்பழம், வீடு, சைக்கிள் என பிரிந்து நிற்கிறார்கள். ஆறே ஆசனங்கள், நிச்சயம் ஆசனங்களைப் பெறும் என எதிர்பார்க்கப்படும் வீடு, வீணை, சைக்கிள், சங்கு, மான், திசைகாட்டி, டெலிபோன், ஊசி என்பதாகக் கள நிலவரம் இருக்கிறது. இவற்றோடு தாமாக இறங்கிய அல்லது இறக்கப்பட்ட இன்னும் பல கட்சிகளும் சுயேட்சை குழுக்களும் வாக்குகளை சிதறடிக்கத் தயாராக இருக்கின்றன. இந்த நிலையில் ஒவ்வொரு கட்சியும் தமது உண்மையான பலத்தைக் காட்ட வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றன.

 

ஆனால் ஆசனங்களை வெல்லும் என்று எதிர்பார்க்கப்படும் ஒவ்வொரு கட்சியுமே தமக்குள் ஏதோ ஒரு பலவீனத்தைக் கொண்டுள்ளன. போதாதற்கு வாக்காளர்களை மேலும் குழப்பும் வேலையை சமூக ஊடகங்களும் Youtube Channelகளும் குறையில்லாமல் செய்து கொண்டிருக்கின்றன. இவர்களை சிலர் திட்டமிட்டே பணம் கொடுத்து இறக்கி விட்டிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. தமது கலாச்சார விழுமியங்கள் குறித்து கர்வம் கொண்ட சமூகமான யாழ் சமூகத்தில் பெண் வேட்பாளர்களைத் தரக்குறைவாக விமர்சிக்கும் இழிநிலைக்கும் கொஞ்சமும் குறைவில்லை.

 

பல கட்சிகள் களமிறங்கிய  சூழ்நிலை ஒரு சிறந்த ஜனநாயக சூழ்நிலையாக கருதலாம் என்றாலும் வாக்காளர்களுக்கு யாருக்கு வாக்களிப்பது என்பதில் முன்னரை விட அதிகமாக குழப்பம் ஏற்பட்டுள்ளது. இம்முறை, யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை விட யாருக்கு வாக்களிக்கக் கூடாது என்பதில்தான் மக்களுக்குத் தெளிவு தேவை என்று சொல்வதையும் அவதானிக்க முடிகிறது. மக்களுக்கு அறிவூட்ட வேண்டிய ஜனநாயகத்தின் நான்காம் தூணும் தனது பங்கைச் சரியாகச் செய்யத் தவறி நிற்கிறது. 

 

இந்த நிலையில் சில கட்சிகள், வேட்பாளர்கள் தொடர்பில் எனது தனிப்பட்ட அபிப்பிராயங்களை உங்களுடன் பகிரலாம் என்று நினைக்கிறேன்.

அலை வீசும் அனுரவின் NPP:

Go with the flow  என்பது போல, மாற்றத்தை ஏற்படுத்தக் கூடிய NPPக்கு பெரும்பான்மையைக் கொடுத்தால் நாம் எதிர்பார்க்கும் மாற்றம் வருமென்று சிலர் தமிழர்கள் நம்புகிறார்கள். ஆனால் வடக்குக் கிழக்கிலிருந்து NPP சார்பாக மட்டுமே தமிழர்கள் தெரிவு செய்யப்பட்டாலும் அதிலொரு சிக்கல் இருக்கிறது. ஜேவிபி உறுப்பினர்கள் மற்றைய கட்சிகள் போல தனித் தனி அபிப்பிராயத்தின் அடிப்படையில் இயங்குபவர்கள் அல்ல. அதனால் வடக்குக் கிழக்கிலிருந்து தெரிவாகக் கூடிய ஜேவிபி பிரதிநிதிகள் தமிழர்களின் அபிலாசைகளை அழுத்தமாக பாராளுமன்றில் வெளிப்படுத்தி தமது கட்சியின் தலைமைக்கு அழுத்தம் கொடுப்பார்களா என்பது சந்தேகமே!

 

அதேவேளை, இம்முறை வடக்குக் கிழக்கில் நியமிக்கப்பட்ட NPP வேட்பாளர்களில் சிலர் பேசுவதைப் பார்த்தால் இவர்களின் தெரிவில் NPP தலைமை சரியான கவனம் செலுத்தவில்லையோ என்றும் எண்ணத் தோன்றுகிறது. ஆனால் தமிழ்ப் பூனைகள் அப்பத்துக்கு சண்டை போடும் நிலையில் குரங்குக்கு அப்பம் கிடைக்கக் கூடும் என்றே எதிர்வு கூறுகிறார்கள். அதேவேளை அடுத்த ஐந்து வருடத்துக்கு நாட்டின் பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்ப அவர்களுக்கு ஒரு சந்தர்ப்பத்தை வழங்கிவிட்டு அதன் பின்னர் எமக்கான உரிமைகளை பெரும் வேலையில் இறங்கலாம் என்ற அபிப்பிராயமும் ஈழத்திலிருந்து பகிரப்படுகிறது.

 

காணாமல் போல பொதுக்கட்டமைப்பு:

காணாமல் போதல், காணாமல் ஆக்கப்படல் என்பன தமிழர்களின் சாபக்கேடு. அது மீண்டும் ஒருமுறை நடந்தேறியிருக்கிறது. தமிழர்கள் அனைவரும் ஒன்றாக நின்று வாக்களித்தாலும் தமிழரின் தனித் தெரிவு ஜனாதிபதியாகும் சூழல் இல்லாதபோதும் இம்முறை பொது வேட்பாளரை நிறுத்தி அரசியல்வாதிகள், ஊடகவியலாளர்கள், சமூக ஆர்வலர்கள் ஒன்றுபட்டு உழைத்திருந்தார்கள். அந்தப் பொதுக்கட்டமைப்பு பாராளுமன்றத் தேர்தலில் இறங்காது என்பது முதலே தீர்மானிக்கப்பட்டிருந்தாலும் இந்தத் தேர்தலில் பொதுக்கட்டமைப்பு ஒரு காத்திரமான பாத்திரத்தை வகித்திருக்க முடியும்.

 

ஆனால் , அதில் இருந்த சிலர் பதவி ஆசையில் சங்குச் சின்னத்தை தூக்கிக் கொண்டோடிப் போய் ஒரு கட்சிச் சின்னமாக சுருக்கிக் கொண்டதில் பொதுக் கட்டமைப்புக்கு கல்லறை கட்டப்பட்டு விட்டது. “தமிழ் தேசியம், தமிழர்களின் ஒற்றுமை, உலகிற்கு எமது நியாயமான கோரிக்கைகளை ஒன்று திரண்டு காட்டுவோம்” என்ற கோசமும் காற்றிலே காணாமல் ஆக்கப்பட்டுவிட்டது. அவர்களின் பின்னால் இருந்த பொம்மலாட்டக் கலைஞர்களும் தமது வேலை முடிந்ததும் காணாமல் போய் விட்டார்கள்.

 

ஒவ்வொரு கட்சியுமே தமது இலச்சினையை பதித்து தாம் மட்டுமே பாராளுமன்றம் செல்ல வேண்டும் என்ற முனைப்பில் இருப்பதால் பொதுக்கட்டமைப்பையே சந்தர்ப்பவாதக் கட்டமைப்பு என்று பட்டம் சூட்டிவிட்டு சங்கீதக் கதிரை விளையாடிக் கொண்டிருக்கின்றன. வடக்கில் தனித்தனியாக மோதும் கட்சிகள், சூழ்நிலை உணர்ந்து திருகோணமலையில் ஓரணியாக தேர்தலில் நிற்கும் இன்றைய சூழலில், ஏன் தமிழத் தேசியம் பேசும் கட்சிகள் ஒன்றாக இணைந்து வடக்குக் கிழக்கு முழுவதுமே பொதுக் கட்டமைப்பை அடுத்த கட்டத்துக்கு நகர்த்த முடியவில்லை என்பதை நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை என்று நம்புகிறேன். தமிழர்கள் மீண்டும் பலமான கட்டமைப்பாக வளரக் கூடாது என்று எண்ணும் வெளிச் சக்திகளை திருப்தி செய்வதில் எமது தமிழ் கட்சிகள் எப்போதுமே குறை வைக்காமல் நடந்து கொள்கின்றன.

தொடர்ந்து பேசுவோம்.....!

 

-    வீமன் –

  அடி சறுக்கும் அனுர?   தேசிய மக்கள் சக்தி ஜனாதிபதி தேர்தலில் வடக்கு, கிழக்கில் பெரும் வெற்றியைப் பெறுவோம் என்ற நம்பிக்கையுடன் இருந்திரு...