பாராளுமன்றப்
பதவிப் போர் – 1
இம்முறை இலங்கையில் நடைபெறும் பாராளுமன்றத் தேர்தல் வழமையை விட
வித்தியாசமானது. தெற்கில் NPP இம்முறை ஏனைய கட்சிகளைப் பின் தள்ளி
அதிகளவு ஆசனங்களைப் பெறும் என்ற எதிர்பார்ப்பு இருந்தாலும் பெரும்பான்மையைப் பெறுமா
என்பது தற்போது கேள்விக்குரியதாகவே இருக்கிறது. ஜனாதிபதி தேர்தலில் வடக்குக் கிழக்குத்
தமிழ் பேசும் மக்களின் ஆதரவின்றி வெல்ல முடியும் என்ற நம்பிக்கையில் இருந்த
NPPக்கு தற்போது வடக்குக் கிழக்கில் கிடைக்கக்கூடிய ஒவ்வொரு ஆசனமும் பலம்
சேர்ப்பதாக அமையும் என்பதில் ஐயமில்லை.
ஆனால் வடக்குக் கிழக்கில் கிழங்கு அடுக்கியது போல ஒவ்வொரு தேர்தல்
மாவட்டத்திலும் சராசரியாக 30 - 40 வரையான
எண்ணிக்கையில் கட்சிகளும், சுயேட்சைக் குழுக்களும் போட்டியில் இறங்கியுள்ளன. 2004 இல்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற பெயரில் கட்டாயக் கல்யாணத்தில் ஆரம்பித்த கூட்டணியின்
கட்சிகள் தற்போது முழுமையான விவாகரத்துப் பெற்று தனித் தனியாக களத்தில்
நிற்கின்றன. இது போதாதென்று உள்ளக முரண்பாட்டினால் வீட்டுக் கட்சியிலிருந்து
வெளியேறிய சிலர் சுயேட்சையாக களத்தில் இறங்கியுள்ளார்கள்.
வழமையாக தமிழ் கட்சிகள் கையிலெடுக்கும் “தேசியம்”, NPP முன்வைத்த
“மாற்றம்”, புதிதாக கையிலெடுத்த “இளையவர்களுக்கு சந்தர்ப்பம்” என்ற மந்திர
வார்த்தைகளைச் சகலரும் ஓதிக் கொண்டிருக்கிறார்கள். “ஊழலை ஒழிப்போம்” என்ற,
NPPயிடம் கடன் வாங்கிய வார்த்தைகளும் சுலோகமாக பயன்படுத்தப்படுகின்றன.
NPP அலை வீசும் நேரத்தில், தமிழர்களின் பிரதிநித்துவம் தமிழ் தேசியக்
கட்சிகள் ஊடாக உறுதிசெய்யப்பட வேண்டும்; தமிழ் கட்சிகள் ஒன்றாக நின்று அதிக
ஆசனங்களைப் பெறுவதை உறுதிப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் உள்நாட்டிலும்
புலம்பெயர் தேசத்திலிருந்தும் ஒலித்தது.
ஆனால், வேட்புமனுத் தயாரிக்கும்போது, முக்கிய தமிழ் கட்சிகளின்
தலைமைகள் எடுத்த “ஜனநாயகத் தெரிவு” முறையால் கடந்த காலங்களில் ஒன்றாக நின்றவர்கள் சங்கு,
மான், மாம்பழம், வீடு, சைக்கிள் என பிரிந்து நிற்கிறார்கள். ஆறே ஆசனங்கள், நிச்சயம்
ஆசனங்களைப் பெறும் என எதிர்பார்க்கப்படும் வீடு, வீணை, சைக்கிள், சங்கு, மான்,
திசைகாட்டி, டெலிபோன், ஊசி என்பதாகக் கள நிலவரம் இருக்கிறது. இவற்றோடு தாமாக இறங்கிய
அல்லது இறக்கப்பட்ட இன்னும் பல கட்சிகளும் சுயேட்சை குழுக்களும் வாக்குகளை
சிதறடிக்கத் தயாராக இருக்கின்றன. இந்த நிலையில் ஒவ்வொரு கட்சியும் தமது உண்மையான
பலத்தைக் காட்ட வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றன.
ஆனால் ஆசனங்களை வெல்லும் என்று எதிர்பார்க்கப்படும் ஒவ்வொரு கட்சியுமே
தமக்குள் ஏதோ ஒரு பலவீனத்தைக் கொண்டுள்ளன. போதாதற்கு வாக்காளர்களை மேலும்
குழப்பும் வேலையை சமூக ஊடகங்களும் Youtube Channelகளும் குறையில்லாமல் செய்து கொண்டிருக்கின்றன. இவர்களை சிலர் திட்டமிட்டே பணம்
கொடுத்து இறக்கி விட்டிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. தமது கலாச்சார விழுமியங்கள் குறித்து
கர்வம் கொண்ட சமூகமான யாழ் சமூகத்தில் பெண் வேட்பாளர்களைத் தரக்குறைவாக
விமர்சிக்கும் இழிநிலைக்கும் கொஞ்சமும் குறைவில்லை.
பல கட்சிகள் களமிறங்கிய சூழ்நிலை ஒரு சிறந்த ஜனநாயக சூழ்நிலையாக கருதலாம்
என்றாலும் வாக்காளர்களுக்கு யாருக்கு வாக்களிப்பது என்பதில் முன்னரை விட அதிகமாக குழப்பம்
ஏற்பட்டுள்ளது. இம்முறை, யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை விட யாருக்கு
வாக்களிக்கக் கூடாது என்பதில்தான் மக்களுக்குத் தெளிவு தேவை என்று சொல்வதையும்
அவதானிக்க முடிகிறது. மக்களுக்கு அறிவூட்ட வேண்டிய ஜனநாயகத்தின் நான்காம் தூணும் தனது
பங்கைச் சரியாகச் செய்யத் தவறி நிற்கிறது.
இந்த நிலையில் சில கட்சிகள், வேட்பாளர்கள் தொடர்பில் எனது தனிப்பட்ட
அபிப்பிராயங்களை உங்களுடன் பகிரலாம் என்று நினைக்கிறேன்.
அலை வீசும் அனுரவின் NPP:
Go with the
flow என்பது
போல, மாற்றத்தை ஏற்படுத்தக் கூடிய NPPக்கு பெரும்பான்மையைக் கொடுத்தால் நாம்
எதிர்பார்க்கும் மாற்றம் வருமென்று சிலர் தமிழர்கள் நம்புகிறார்கள். ஆனால்
வடக்குக் கிழக்கிலிருந்து NPP சார்பாக மட்டுமே தமிழர்கள் தெரிவு செய்யப்பட்டாலும் அதிலொரு
சிக்கல் இருக்கிறது. ஜேவிபி உறுப்பினர்கள் மற்றைய கட்சிகள் போல தனித் தனி
அபிப்பிராயத்தின் அடிப்படையில் இயங்குபவர்கள் அல்ல. அதனால் வடக்குக் கிழக்கிலிருந்து
தெரிவாகக் கூடிய ஜேவிபி பிரதிநிதிகள் தமிழர்களின் அபிலாசைகளை அழுத்தமாக பாராளுமன்றில்
வெளிப்படுத்தி தமது கட்சியின் தலைமைக்கு அழுத்தம் கொடுப்பார்களா என்பது சந்தேகமே!
அதேவேளை, இம்முறை வடக்குக் கிழக்கில் நியமிக்கப்பட்ட NPP வேட்பாளர்களில்
சிலர் பேசுவதைப் பார்த்தால் இவர்களின் தெரிவில் NPP தலைமை சரியான கவனம்
செலுத்தவில்லையோ என்றும் எண்ணத் தோன்றுகிறது. ஆனால் தமிழ்ப் பூனைகள் அப்பத்துக்கு
சண்டை போடும் நிலையில் குரங்குக்கு அப்பம் கிடைக்கக் கூடும் என்றே எதிர்வு
கூறுகிறார்கள். அதேவேளை அடுத்த ஐந்து வருடத்துக்கு நாட்டின் பொருளாதாரத்தை
மீண்டும் கட்டியெழுப்ப அவர்களுக்கு ஒரு சந்தர்ப்பத்தை வழங்கிவிட்டு அதன் பின்னர்
எமக்கான உரிமைகளை பெரும் வேலையில் இறங்கலாம் என்ற அபிப்பிராயமும் ஈழத்திலிருந்து
பகிரப்படுகிறது.
காணாமல் போல பொதுக்கட்டமைப்பு:
காணாமல் போதல், காணாமல் ஆக்கப்படல்
என்பன தமிழர்களின் சாபக்கேடு. அது மீண்டும் ஒருமுறை நடந்தேறியிருக்கிறது.
தமிழர்கள் அனைவரும் ஒன்றாக நின்று வாக்களித்தாலும் தமிழரின் தனித் தெரிவு ஜனாதிபதியாகும்
சூழல் இல்லாதபோதும் இம்முறை பொது வேட்பாளரை நிறுத்தி அரசியல்வாதிகள், ஊடகவியலாளர்கள்,
சமூக ஆர்வலர்கள் ஒன்றுபட்டு உழைத்திருந்தார்கள். அந்தப் பொதுக்கட்டமைப்பு
பாராளுமன்றத் தேர்தலில் இறங்காது என்பது முதலே தீர்மானிக்கப்பட்டிருந்தாலும் இந்தத்
தேர்தலில் பொதுக்கட்டமைப்பு ஒரு காத்திரமான பாத்திரத்தை வகித்திருக்க முடியும்.
ஆனால் , அதில் இருந்த சிலர் பதவி
ஆசையில் சங்குச் சின்னத்தை தூக்கிக் கொண்டோடிப் போய் ஒரு கட்சிச் சின்னமாக
சுருக்கிக் கொண்டதில் பொதுக் கட்டமைப்புக்கு கல்லறை கட்டப்பட்டு விட்டது. “தமிழ்
தேசியம், தமிழர்களின் ஒற்றுமை, உலகிற்கு எமது நியாயமான கோரிக்கைகளை ஒன்று திரண்டு காட்டுவோம்” என்ற
கோசமும் காற்றிலே காணாமல் ஆக்கப்பட்டுவிட்டது. அவர்களின் பின்னால் இருந்த பொம்மலாட்டக்
கலைஞர்களும் தமது வேலை முடிந்ததும் காணாமல் போய் விட்டார்கள்.
ஒவ்வொரு கட்சியுமே தமது இலச்சினையை பதித்து
தாம் மட்டுமே பாராளுமன்றம் செல்ல வேண்டும் என்ற முனைப்பில் இருப்பதால்
பொதுக்கட்டமைப்பையே சந்தர்ப்பவாதக் கட்டமைப்பு என்று பட்டம் சூட்டிவிட்டு சங்கீதக்
கதிரை விளையாடிக் கொண்டிருக்கின்றன. வடக்கில் தனித்தனியாக மோதும் கட்சிகள்,
சூழ்நிலை உணர்ந்து திருகோணமலையில் ஓரணியாக தேர்தலில் நிற்கும் இன்றைய சூழலில், ஏன்
தமிழத் தேசியம் பேசும் கட்சிகள் ஒன்றாக இணைந்து வடக்குக் கிழக்கு முழுவதுமே பொதுக்
கட்டமைப்பை அடுத்த கட்டத்துக்கு நகர்த்த முடியவில்லை என்பதை நான் சொல்லித் தெரிய
வேண்டியதில்லை என்று நம்புகிறேன். தமிழர்கள் மீண்டும் பலமான கட்டமைப்பாக வளரக்
கூடாது என்று எண்ணும் வெளிச் சக்திகளை திருப்தி செய்வதில் எமது தமிழ் கட்சிகள்
எப்போதுமே குறை வைக்காமல் நடந்து கொள்கின்றன.
தொடர்ந்து பேசுவோம்.....!
-
வீமன் –
No comments:
Post a Comment