Tuesday, 4 May 2021

 

பெரும் தொற்றுக் காலத்தில் உடல், உள ஆரோக்கியம்  3:  சுய நலன் (Self-care) பேணல்



கடந்த பதிவில், எமது ஆரோக்கியத்தை நல்ல நிலையில் பேண உணவு, உடற்பயிற்சி, ஓய்வு, போதுமான தூக்கம், மனதை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளல் தொடர்பான சில விடயங்களைப் பார்த்தோம். இவற்றோடு எமது சுய நலன்களில் அக்கறை எடுத்துக் கொள்வதும் முக்கியமானது. சுய நலனில் அக்கறை செலுத்துவது  சுயநலமானதல்ல, எமது சுகநலம் சம்பந்தப்பட்டது. ஏனெனில் உங்களை ஆரோக்கியமாக வைத்துக் கொண்டால்தான் உங்களோடு இருப்பவர்களின் நலனில் உங்களால் அக்கறை செலுத்த முடியும்.

 

எங்களில் பலரும் இப்போது வீட்டிலிருந்து வேலை செய்ய வேண்டிய சூழ்நிலையில் புதிய நாளந்த ஒழுங்குமுறையை பின்பற்றுவது அவசியமாகிறது. பிள்ளைகளும் வீட்டிலிருந்தே படிப்பதால் பெற்றோருக்கு முன்பிருந்ததுபோல அவசர அவசரமாக உணவு தயாரித்து, அவசர அவசரமாக புறப்பட்டுச் செல்ல வேண்டிய காலை வேலையழுத்தம் என்பது முற்றாக இல்லாமல் போய்விட்டது. 

 

இதனால் எங்களில் பலர் (குறிப்பாக ஆண்கள்) முன்னரைப் போல காலையில் எழுந்திருப்பதில்லை. ஒன்பது மணிக்கு வேலையைத் தொடங்க வேண்டுமென்றால் வேலை தொடங்குவதற்கு அரைமணிநேரம் முன்னதாக எழும்பி அவசர அவசரமாக முகம் கழுவிக் கொண்டு அதே அவசரத்தோடு எதையாவது உணவென்ற பெயரில் வயிற்றுக்குள் தள்ளிவிட்டு கணினி முன்னர் அமர்ந்து விடுகிறோம்.

 

இன்னும் சிலர் நள்ளிரவு தாண்டி விழித்திருந்துவிட்டு காலையில் ஒன்பது மணியளவில் கண்விழித்து காலையில் சாப்பிடாமலே கணினி முன்னர் அமர்ந்துவிடுகிறார்கள்.  இவ்வாறு சீரற்று தொடங்கப்படும் நாள் பெரும்பாலும் முடிவடைவதும் அதேபோலத்தான். இது ஒருபுறம் இருக்க எங்களில் பலர் இரவு உடுப்புகளுடனேயே வேலை செய்வதையே வழக்கமாக்கி விட்டிருக்கிறோம். இன்னும் கொஞ்சப் பேர் நாட்கணக்கில் சவரம் செய்வதில்லை, தலைமுடியை சரியாக வாருவதில்லை. உணவு உண்ணும் முறையிலும் ஒரு ஒழுங்குமுறையைப் பின்பற்றுவதில்லை.

 

இதனால் இந்தப் பெரும் தொற்றுக் காலத்தில் எங்களில் பலருக்கு உடல் எடை ஏறியுள்ளது. ஆண்கள் பலரும் சடாமுடியும் நீண்ட தாடியுமாக புதிதாக வளர்த்த செல்லத் தொந்தியைத் தடவிக் கொண்டிருக்கிறார்கள்.

 

எமது புதிய நாளாந்தப் பழக்க வழக்கங்கள்  எங்களை அறியாமலே சோம்பேறிகளாகவும் போதுமான தூக்கமில்லாததால் உடல் சோர்வு, மற்றும் சலிப்புணர்வு உள்ளவர்களாகவும் எம்மை மாற்றிவிடக் கூடும். இந்த நிலையம் எதிர்காலம் பற்றிய நிச்சயமற்ற யோசனைகளும் சிலவேளை எங்களை மனவழுத்தம் உள்ளவர்களாக மாற்றிவிடக்கூடிய சந்தர்ப்பமும் உள்ளது.  

 

நாங்கள் வீட்டிலிருந்து வேலை செய்தாலும் அலுவலகம் செல்வது போன்ற ஒரு பாவனையை தினமும் செய்வோமாயின் இவ்வாறான நிலை எங்களுக்கு ஏற்படாமல் தப்பிவிட முடியும். ஆனால் அதற்காக தினமும் அதிகாலை ஐந்து மணிக்கெல்லாம் எழும்ப வேண்டும் என்றில்லை. ஆனால் தினமும் ஒரே நேரத்துக்கு எழும்பப் பழகுங்கள். வேலைநாட்களில் எழும்பும் அதே நேரத்திற்கே வார இறுதியிலும் எழும்புவது நல்லது.

 

அடுத்ததாக, உங்கள் அலுவலக நேரம் தொடங்குவதற்கு முன்னதாகவே போதிய நேரமெடுத்து காலையுணவை எடுத்துக் கொள்ளுங்கள். சவரம் செய்தல், தலைவாருதல் போன்ற விடயங்களையும் முடித்து விடுங்கள். பின்னர் பிரேக் நேரத்தில் அவற்றைச் செய்து கொள்ளலாம் என்று பிற்போடாதீர்கள்.

 

வீட்டில்தானே வேலை செய்கிறோம் என்று வீட்டு உடுப்புடனேயே இருக்காமல், ஆடை மாற்றிக் கொள்ளுங்கள். உங்கள் வீட்டு உணவு மேசையை உங்கள் அலுவலக மேசையாகப் பயன்படுத்துவதை முடிந்தவரை தவிர்த்துக் கொள்ளுங்கள்.

 

அலுவலக வேலை தொடர்பான கூட்ட நேரம் தவிர்த்து ஏனைய நேரங்களில் குறித்த நேர இடைவேளையில் வேலை செய்யும் இடத்திலிருந்து எழுந்து 1 – 2 Min தளர்வுப் பயிற்சி செய்யுங்கள். எப்போதும் உங்கள் மேசையில் குடிப்பதற்காக தண்ணீர் வைத்துக் கொள்ளுங்கள்.

 

வேலை நேரத்தில் மனதிற்கு இனிய இசையைக் கேட்டபடியும் வேலை செய்யலாம், ஆனால் முடிந்தவரை head phone பயன்படுத்துவதைத் தவிர்த்துவிடுங்கள். பாடல் அல்லது இசையைக் கேட்க head phone பயன்படுத்துவது உங்கள் வேலையில் முழுக் கவனம் செலுத்துவதற்கு இடைஞ்சலாக மாறிவிடலாம்.

 

வேலை முடிந்த பின்னர் சாப்பிடலாம் என்று மதிய உணவு நேரத்தை பிற்போடாதீர்கள். உணவு நேரத்தில் வழமைபோல வயிறு நிறைய வெளுத்துக் கட்டாதீர்கள். ஏனென்றால், வீட்டில் இருந்து வேலை செய்யும் நாட்களில் இயல்பாக நாம் நடக்கும் தூரம் வெகுவாகக் குறைந்துவிட்டது. உதாரணமாக, பெரும் தொற்றுக் காலத்தில் பிரத்தியேக நடைப்பயிற்சி எதுவும் இல்லாமலே நான் நாளாந்தம் 6000 – 7000 அடிகள் (foot steps) நடந்துவிடுவேன். வீட்டிலிருந்து வேலை செய்யும் நாட்களில் 3000 அடிகள் நடந்தாலே பெரிய விடயம். அதனால் உண்ணும் அளவைக் குறைத்துக் கொள்ளுங்கள். ஆரோக்கியமான உணவைத் தெரிவு செய்து உண்ணுங்கள்.

 

காலையும் மாலையும் தேநீர் அருந்தும் பழக்கம் உங்களுக்கு இருந்தால் அதனை மாற்றிக் கொள்ள வேண்டியதில்லை. அப்படிது தேநீர் அருந்தும்போது நீங்கள் வேலை செய்யும் மேசையில் இருந்து தேநீர் அருந்தாது வேறு இடத்தில் அமர்ந்து தேநீர் அருந்துங்கள். உங்கள் வீட்டில் பூந்தோட்டம் இருக்குமாக இருந்தால் அங்கிருந்தும் தேநீர் அருந்தலாம்.

 

மாலையில் அலுவக நேரம் முடியும் நேரத்தில் உங்கள் கணினியை அணைத்து விடுங்கள். வீட்டில் சும்மாதானே  இருக்கிறோம் என்று அலுவல நேரத்திற்குப் பின்னரும் கணினியில் நோண்டிக் கொண்டிருக்காதீர்கள்.

 

அலுவலக நேரம் முடிந்ததும் அரைமணி நேரமாவதும் உடற்பயிற்சி செய்யுங்கள். வீட்டிலிருந்து உடற்பயிற்சி செய்யலாம், அல்லது வெளியே நடைப்பயிற்சி செய்யலாம். உங்களுக்கு விருப்பமான பாட்டுக்கு நடனம் ஆடலாம். குடும்பத்தினருடன் நேரம் செலவிடலாம்.

 

வெளியே செல்ல வேண்டிய வேளைகளில் மறக்காமல் சுகாதார பாதுகாப்பு முறைகளைப் பின்பற்றுங்கள். அனாவசியமாக வெளியே செல்வதைத் தவிர்த்துக் கொள்ளுங்கள். வெளியே சென்று வீட்டிற்கு வந்ததும் கைகளைக் கட்டாயம் சவர்க்காரம் இட்டு நன்றாகக் கை கழுவுங்கள்.

 

வருடாந்தம் உங்கள் தேக ஆரோக்கியம் தொடர்பான பரிசோதனைகளை செய்வதைத் தவிர்க்க வேண்டாம். உங்கள் குடும்ப வைத்தியரை தொடர்பு கொண்டு வருடாந்த மருத்துவப் பரிசொதனைகளைச் செய்து கொள்ளுங்கள். மருந்துகள் பாவிப்பவரானால், அவற்றை உரிய நேரத்தில் எடுக்க மறக்க வேண்டாம்.

 

இவை நாங்கள் நாளாந்தம் செய்யக்கூடியவை. ஆனால் எம்மை மகிழ்ச்சியாகவும் மன உளைச்சல் இல்லாமலும் வைத்துக் கொள்ள வேண்டுமானால் நாம் செய்யக்கூடாத சிலவிடயங்களும் இருகின்றன.

 

சமூக வலைத்தளங்களில் வரும் ஆதாரமற்ற வதந்தி, பாட்டி வைத்தியச் செய்திகளை வாசிக்காதீர்கள். வாசித்தாலும் அவற்றை வேறு குழுக்களில் பகிராதீர்கள். பகிர்ந்தால் என்னைப் போன்றவர்கள் அது போலியான செய்தி, இதை நீ சரிபார்த்தாயா என்று கேட்டு, “ஏனடா அனுப்பினோம்” என்ற மனவுளைச்சலுக்கு உங்களை ஆளாக்கிவிடுவோம்.

 

சங்கங்கள், கழகங்களில் செயற்குழு உறுப்பினராக இருப்பது சேவை மனப்பான்மை உள்ளவர்களுக்கு ஆத்ம திருப்தியைத் தருகிறது என்பது உண்மைதான். ஆனால் அந்தச் சங்கம், கழகங்கள் செயற்படும்முறை உறுப்பினர்களிடையே முரண்பாட்டைத் தோற்றுவிப்பதாக இருந்தால் அங்கு நடைபெறும் பதவிப் போட்டி, குழு அரசியல் போன்றவற்றுக்குள் தலையை விட்டு உங்கள் நிம்மதியைத் தொலைத்து விடாதீர்கள்.

 

இறுதியாக, தினமும் இரவில் நேர காலத்திற்கு இரவு உணவை சாப்பிட்டுவிட்டு அதிகநேரம் கண்விழிக்காமல் உறங்கப் போய்விடுங்கள். மறுநாள் காலையிலிருந்து நாளந்த வேலைகளை இதே ஒழுங்கில் ஆரம்பித்து விடுங்கள். உண்மையில் இப்படி நாளாந்தம் நேர அட்டவணைப்படி நடந்து கொள்வது கடினமானது. ஆனால் குறைந்தது ஒரு மாதத்திற்கு செய்யப் பழகிவிட்டீர்கள் என்றால் அதுவே உங்கள் பழக்கமாகிவிடும். உங்கள் ஆரோக்கியம் உங்கள் கைகளில் !

No comments:

Post a Comment

  அடி சறுக்கும் அனுர?   தேசிய மக்கள் சக்தி ஜனாதிபதி தேர்தலில் வடக்கு, கிழக்கில் பெரும் வெற்றியைப் பெறுவோம் என்ற நம்பிக்கையுடன் இருந்திரு...