கொரோனா
மரணங்களும் தடுப்பூசியும்
கடந்த
ஆண்டின் நடுப்பகுதியில் இலங்கையிலும் இந்தியாவிலும் கொவிட் தொற்றின் இரண்டாவது
அலையை எப்படி எதிர்கொள்வது என்பதே பெரிதும் பேசிய விடயமாக இருந்தது. மக்களும் ஓரளவுக்கு
கட்டுப்பாடாகவே இருந்தார்கள்.
இன்றோ
இந்த இரண்டு நாடுகளிலும் மிகவேகமாக கடந்த ஒரு மாதத்தில் நோய்த்தொற்று அதிகரித்து வைத்தியத்
துறை மூச்சுத் திணறிப்போய் நிற்கிறது. இன்றும் புதிய தொற்றாளர்களின் எண்ணிக்கை
வேகமாக அதிகரித்த வண்ணமே உள்ளது.
மறுபுறத்தில் மரணிப்பவரின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. குறிப்பாக
இந்தியாவின் நிலை மிகவும் மோசமாகி இருக்கிறது. இதுவரை இந்தியாவில் இறந்தவர்
எண்ணிக்கை இரண்டு இலட்சத்தைத் தாண்டிவிட்டது. அதிலும் கடந்த நான்கு மாதத்தில்
மட்டும் 66,318 பேர் இறந்து
விட்டார்கள்.
இந்தியா
கோவிட்க்கு வக்சினைக் கண்டுபிடித்ததுடன், இந்தியாவில் மக்களுக்கு அவற்றை இவ்வருடம்
ஜனவரியிலேயே ஆரம்பித்தபோதிலும் அவர்கள் எதிர்பார்த்த வேகத்தில் அவற்றைப் போட முடியவில்லை.
இதற்கு இந்த வக்சின் தொடர்பாக மக்களிடையே வைரலாக பரப்பப்படும் செய்திகளும் ஒரு
காரணம்.
வக்சின்
போட்டால் இரத்தம் கட்டியாகும், அதனால் வக்சின் போட்டவர் இறந்துவிடுவார்; வக்சின்
போட்டாலும் நோய் வரும், அதனால் வக்சின் போடுவதால் பயனில்லை; வக்சின் போட்டதாலே நன்றாக
இருந்த மக்கள் இறக்கிறார்கள்; இந்த வக்சின் பல்நாட்டு வியாபார நிறுவனங்களின்
வர்த்தகத் தந்திரம், இப்படியாக பரப்பும் செய்திகளால் மக்கள் இன்னும் தடுப்பூசி
போடப் பயப்படுகிறார்கள்.
தடுப்பூசி
போட்டவங்களுக்கும் கொரோனா வருமா? ஆம், தடுப்பூசி போட்டாலும் நோய் வரலாம். Pfizer, Moderna vaccine கூட 95%ம் தான்
உங்களை பாதுகாக்கும். 5% மக்களுக்கு
தடுப்பூசி போட்டும் கொரோனா வர வாய்ப்பு இருக்கிறது. ஆனால் தடுப்பு
மருந்து போட்டுக்கொண்டால் நோயின் தாக்கம் குறைவாக இருக்கும். நீங்கள் இறந்துபோகும்
சாத்தியம் 99.9% குறையும். ஆனால்
தடுப்பூசி போடாவிட்டால் நோய் தீவிரமாகத் தாக்கவும் நோயாளி சாவதற்கும் சந்தர்ப்பம்
மிக அதிகம்.
ஏற்கனவே
இதய நோயாளிகள், உயர் இரத்த அழுத்தம், டயபடீஸ், சிறுநீரகப் பிரச்னை உளளவர்கள் தடுப்பூசி
போடலாமா? நிச்சயம் போடலாம். உங்கள் வைத்தியருடன் கலந்தாலோசித்த பின்னர் அவரது
ஆலோசனைப்படி பயப்படாமல் போடலாம்.
தடுப்பூசி
போட்டால் இரத்தம் கட்டியாகிறதாமே? Astra Senica போட்டால் இரத்தம் கட்டியாகும் வாய்ப்பு அதிகம் என்கிறார்களே? ஆமாம், ஆனால் வெகு சிலருக்குத்தான் இரத்தம் கட்டியாகிறது. Astra Senica போட்டவர்களில் ஒரு
மில்லியனில் நான்கு பேருக்குத்தான் இரத்தம் கட்டியாகிறது. பாதுகாப்பானது என்று மக்கள் பலரும் நம்பும் Pfizer, Moderna vaccine போட்டவர்களில் ஒரு மில்லியனில் நான்கு பேருக்கு இரத்தம் கட்டியாகிறது.
தடுப்பூசி
போட்டால் இரண்டு மூன்று நாட்கள் காய்ச்சலடிக்கலாம், தசைவலி ஏற்படலாம், தலைவலியும் ஏற்படலாம்,
உடற்சோர்வும் இருக்கலாம். இது பொதுவாகவே எந்த ஒரு வக்சின் போட்டால் எமது உடலில்
நோய் எதிர்ப்பு சக்தி காரணமாக ஏற்படக்கூடிய அறிகுறிகளே. ஆனால் இவ்வாறான அறிகுறிகள்
தொடர்ந்திருந்தால் வைத்தியசாலையைத் தொடர்பு கொள்ளுங்கள்.
வீட்டிலேயே
பாதுகாப்பாக இருக்கும் வயோதிபர்கள் தடுப்பூசி போட வேண்டியதில்லைத்தானே?
போடுவதுதான் நல்லது. அவர்கள் வீட்டில் பாதுகாப்பாக இருந்தாலும் நோய் தொற்றினால்
இறப்பதற்கு சந்தர்ப்பம் அதிகம். தடுப்பூசி போடுவதால் உயிரிழப்பு ஏற்படுவதற்கு
சந்தர்ப்பம் மிகமிகக் குறைவு.
தடுப்பூசி
போட்டால் அதன்பின்னர் வேறு பாதுகாப்பு முறைகளைப் பின்பற்ற வேண்டியதில்லையா? இல்லை,
நீங்கள் தடுப்பூசி போட்டாலும் பாதுகாப்பு முறைகளைக் கட்டாயம் பின்பற்றுங்கள்.
ஆளுடை இடைவெளி, முகக்கவசம் அணிதல், துப்புரவாக இருத்தல் என்பவற்றைத் தொடர்ந்து
செய்யுங்கள். ஏனென்றால் தடுப்பூசி போட்டாலும் உங்களுக்கு மீண்டும் நோய் தொற்றலாம்.
உங்களில் அறிகுறியைக் காட்டாமல் இருந்து நீங்கள் உங்களை அறியாமல் உங்கள் நண்பர்களுக்கும்
உறவினர்களுக்கும் நீங்களே பரப்பி அவர்களின் சாவுக்கு நீங்களே காரணமாகிவிடக்
கூடும்.
தடுப்பூசி
போடப் பயப்படுபவர்கள் மனித வரலாற்றில் (அமெரிக்காவில்) நடைபெற்ற சில விடயங்களை
அறிந்து கொள்ளுங்கள்:
§ போலியோவிற்கு தடுப்பூசி கண்டறியப்படுவதற்கு
முன்னர் அமெரிக்காவில் மட்டும் வருடாந்தம் 15,000 பேர் போலியோவினால் அங்கவீனர்களாக மாறினார்கள்.
§ தடுப்பூசி
வருவதற்கு முன்னர் அமெரிக்காவில் தட்டம்மை (Measles) ஏறத்தாழ ஒவ்வொருவரையும் தாக்கியது.
ஒவ்வொரு வருடமும் நூற்றுகனக்கானவர்கள் இறந்து போனார்கள். இன்று தட்டம்மை
நோயாளியோருவரைக் காண்பது மிகமிக அரிதான ஒன்றாகியுள்ளது.
§ 1921 இல் டிப்தீரியா எனப்படும் தொண்டை அழற்சி நோயினால் 15,000 க்கு மேற்பட்டோர் இறந்தார்கள். வக்சின்
கண்டறியப்பட்டு நோய் கட்டுப்படுத்தப்பட்ட பின்னர் 2004 – 2014 க்கு இடைப்பட்ட காலத்தில் இரண்டே இரண்டு
நோயாளிகளே இனங்காணப்பட்டனர்.
§ 1964 – 1965 இடைப்பட்ட காலத்தில் 12.5 மில்லியன் மக்கள் ரூபெல்லா எனப்படும் ஜேர்மன் தட்டம்மை நோயினால்
பாதிக்கப்பட்டார்கள். 2,000 குழந்தைகள்
இறந்துபோயின, 11,000 கருச்சிதைவுகள்
ஏற்பட்டன. தடுப்பூசி கண்டறியப்பட்ட பின்னர், 2012 க்குப் பின்னர் இதுவரை 15 நோயாளிகள் மட்டுமே இனங்காணப்பட்டுள்ளனர்.
(https://www.cdc.gov/vaccines/vac-gen/whatifstop.htm)
கோவிட்
வந்து ஒரு வருடத்துக்கு மேலாகிறது. பல பாட்டி வைத்தியம், பாரம்பரிய
உணவுமுறை, கபசுர குடிநீர் இவை மட்டும் போதுமென்று இருந்தவர்களில் பலர் கோவிட்
தொற்றுக்கு உள்ளாகிப் பலர் இறந்தும் விட்டார்கள். சித்த
வைத்தியம் பொய்யென்று சொல்லவில்லை. சித்த வைத்தியமும் பல நோய்களுக்கு சிறந்த
மருத்துவமாக இருந்து வந்துள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை. ஆனால் கோவிட்நோய்க்கு
சித்த வைத்தியத்தில் சொல்லப்படும் எந்த வைத்தியம் உண்மையில் தீர்வாக அமையும்
என்பது clinical trails மூலம் ஆய்வு மூலம் நிரூபிக்கப்பட வேண்டும். அதன்பின்னர்
மக்கள் அந்த நிரூபிக்கப்பட்ட முறையைப் பின்பற்றுவது பொருத்தமாக இருக்கும்.
ஆனால்
இன்றைய சூழலில் இந்த நோய்க்கு எந்த சித்த வைத்திய மருந்து சரியாக வேலை செய்யும் என்பது நிரூபிக்கப்படாத
நிலையை ஆங்கில வைத்தியத்தை நிராகரிக்காது உடனடியாக தடுப்பூசிகளைப் பெற்றுக்
கொள்வதே புத்திசாலித்தனம். Whatsappஇல் வரும் வதந்திகளை நம்பியும் Youtube
வைத்தியர்களையும் நம்பி உங்கள் உயிரையும் உங்கள் சுற்றத்தாரின் உயிர்களையும் தயவுசெய்து
பணயம் வைக்காதீர்கள்.
ஏன்
வக்சின் தேவை என்பதை இன்னும் இலகுவாகச் சொல்வதென்றால், நீங்கள் தினமும் வேலைக்கு
உங்கள் மோட்டார் சைக்கிளில் நெடுஞ்சாலையில் 100 km வேகத்தில் பயணிக்க வேண்டியவர் என்று வைத்துக்
கொள்வோம். நீங்கள் தலைக்கவசம் அணிந்து சென்றால், தற்செயலாக நீங்கள் சறுக்கி
விழுந்தாலும் வேறு வாகனத்துடன் மோதுண்டாலும் உடலில் அடிபடலாம், ஆனால் உயிர் தப்பிவிடுவீர்கள்;
எல்லாம் சில வாரங்களில் சரியாகிவிடும். ஆனால் தலைக்கவசம் அணியாது சென்று அடிபட்டால் உயிரே
போய்விட அதிக வாய்ப்புள்ளது. தடுப்பூசி
போடுவதும் மோட்டார் சைக்கிளில் போகும் ஒருவர் தலைகாக்க தலைக்கவசம் அணிவது
போன்றதுதான்.
அதேபோல தலைகவசம் அணிந்திருக்கிறோம் என்பதற்காக வீதியில் தாறுமாறாக
வண்டியோட்டினால் என்ன நடக்கும்? தேவையில்லாத விபத்து ஏற்பட்டு நீங்கள் காயமடையவோ
நிரந்தர ஊனமடையவோ சந்தர்ப்பம் உள்ளதுதானே? அதே போன்றதுதான் தடுப்பூசி
போட்டுவிட்டால் எல்லாம் சரி என்று கண்டபடி திரிவதும், சமூக இடைவெளி, முகக் கவசம்
என்பவற்றை இனித் தேவையில்லை என்று நினைப்பதும்.
தயவு செய்து தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள். அதன் பின்னரும் சுகாதார
பாதுகாப்பு விதிமுறைகளைத் தொடர்ந்தும் பின்பற்றுங்கள். இன்னும் சில
வாரங்களுக்காவது கோவில்கள், வீடுகள் ஏனைய மூடிய இடங்களில் நண்பர்கள், உறவினர்கள்
எனக் கூடி கும்மியடிப்பதைத் தவிர்த்துக் கொள்ளுங்கள்.

No comments:
Post a Comment