உயர்தர பரீட்சை முடிவுகளும் உபதேச உலகமும் !
உலகில்
இலகுவான ஒன்றுதான் இன்னொருவருக்கு அறிவுரை சொல்வது. அதிலும் இலங்கையிலும் பல்வேறு
நாடுகளிலும் பரந்து வாழும் தமிழினம் இந்த அறிவுரை சொல்லும் கலையில் எப்போதும்
சிறந்த ஒரு உயிரினமாகவே திகழ்கிறது.
மாதம்
மும்மாரி பெய்வதுபோல ஒவ்வொரு வருடமும் ஐந்தாம் வகுப்புப் புலமைப் பரிசில், க.பொ.த. சாதாரண தரம் மற்றும் உயர்தர
பெறுபேறுகள் வெளிவரும் மூன்றுமுறையும்
ஆலோசனை மழையில் மாணவர்கள் நனைய வேண்டியது காலத்தின் கட்டாயமாகிவிட்டது. தோற்றவருக்கு
அறிவுரை, ஆலோசனை, யாராவது பிள்ளைகள் பரீட்சைத் தோல்வியால்
தற்கொலை செய்துவிட்டால் அதற்கு ஒரு கண்ணீர் அஞ்சலி, சரியாக, பிள்ளையை தோல்விக்கு முகம் கொடுக்கப்
பழக்கவில்லை என்று பெற்றோருக்குக் கண்டனம், அப்படியே ஆசிரியர்களுக்கு ஒரு குட்டு என்று
உயிரைக் கொடுத்து வேலை செய்வார்கள்.
அந்த மரபின்படி
இந்த வாரம் முழுவதும் வலைத்தளம் எங்கும்
சோர்ந்து விடாதே; சேர்ந்து படி; மீண்டும் முயற்சி செய்; அடிமேல் அடி அடித்தால்
அம்மியும் நகரும்; நீ படி
படியென்று படித்தால் F எல்லாம் A ஆகும்; கல்வியே செல்வம் என்று ஒரு குழு
சொல்லிக் கொண்டிருக்கிறது.
மறு பக்கத்தில்,
திரும்பத் திரும்பப் படித்து காலத்தை வீணாக்காதே; உயர்தரம் இன்றியே உயர்ந்த
மனிதர்கள் பலர், ஒருமுறை
முயற்சி செய்,
முடியாவிட்டால் வேறு துறையைத் தெரிவு செய்து அதில் முன்னேறு கதைகளும்
வலைத்தளமெங்கும் வலம் வருகின்றன.
பாவம்
மாணவர்கள்! எல்லா வகையான அறிவுரைகளையும் கேட்டுவிட்டு, வடிவேலு பாணியில் “என்னை
ஏண்டா இப்பிடிப் படுத்துறீங்கள்?” என்பதுதான் பல மாணவர்களின் மனக்குரலாக (அதுதாங்க
Mind Voice) இருக்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.
இங்கு அறிவுரை
சொல்லுவோர் எல்லோருமே பெரும்பாலும் தாம் மாணவர்களாக இருந்த கால அனுபவங்களை, எமது சமூகத்தில் நாம் காணும் ஒரு சில அரிதான
உதாரணங்களை மற்றும் ஒரு சில புள்ளிவிபரங்களை அடிப்படையாகக் கொண்டு அறிவுரை
சொல்கிறார்கள் என்பது அவர்கள் சொல்லும் அறிவுரைகளைப் பார்த்தாலே புரியும். ஆனால்
இருதரப்பாரும் முக்கியமான விடயங்களாப் பேசாது கடந்து விடுகிறார்கள் என்பதுதான்
வருத்தம் தருவதாக இருக்கிறது.
எல்லோருமே,
பிள்ளைகளைப் கஷ்டப்பட்டுப் படித்து முன்னேறுங்கள் என்று நெருக்கடி கொடுத்தாலும் உயர்தரம்
கற்கும் மாணவர்களுக்கு பௌதீக விஞ்ஞானம், உயிரியல் விஞ்ஞானம், வர்த்தகம், கலை, Engineering technology,
Bio systems technology ஆகிய மட்டுப்படுத்த கற்கை நெறிகளே தெரிவாக
உள்ளன.
இதைத்தவிர
இலங்கையில் குறிப்பாக வடக்குக் கிழக்கைப் பொறுத்தவரை வைத்தியர், பொறியியலாளர், கணக்காளர், சட்டத்தரணி போன்ற உத்தியோகங்கள் மட்டுமே பல
உயர்தர மாணவர்களின் இலக்குகளாக இன்றும் இருக்கிறது. ஆனால் ஒரு சமூகத்தில்
வைத்தியர், பொறியியலாளர், கணக்காளர், சட்டத்தரணி ஆகியோரை மட்டும் வைத்துக்கொண்டு
என்ன செய்ய முடியும்.
இவை ஒருபுறம்
இருக்க, குறித்த ஒரு
வருடத்தில் உயர்தரப் பரீட்சை எழுதும் நூறு மாணவர்களில் 60 – 64 மாணவர்கள் பல்கலைக்கழகம்
செல்லத் தகுதி பெறுகிறார்கள். அந்தத் தகுதி பெற்ற மாணவர்களில் 9
– 10 பேர் மட்டுமே அரச
பல்கலைக் கழகம் (இலவசக் கல்வித் திட்டத்தின்கீழ் ) செல்கிறார்கள். அதாவது, தகுதி பெற்ற 64 பேரில் 54 பேர் தகுதி பெற்றாலும் பல்கலைக் கழகத்தில் இடமில்லாமல் வேறு
வழி தேடவேண்டியவர்களாகவே இருக்கிறார்கள்.
ஏனெனில்
பல்கலைக் கழகத்திற்கு எத்தனை மாணவர்கள் உள் நுழைய முடியும் என்பதை அரசாங்கம்
ஒவ்வொரு வருடமும் உயர்கல்விக்கு ஒதுக்கும் நிதியின் அளவே தீர்மானிக்கிறது. இதனால்
நூற்றுக்கு 90 வீதமான மாணவர்கள் தமது உயர்கல்வித் தேவைகளுக்கு திறந்த பல்கலைக்
கழகம்,
தொழில்நுட்பக் கல்லூரிகள், German Tech போன்ற வேறு நிறுவனங்களை நம்பியிருக்க
வேண்டியவர்கள் ஆகிறார்கள். ஆனால் அவையும் தகுதி பெற்ற மாணவர்கள் அனைவரையும்
உள்வாங்கப் போதுமானதில்லை. இதுதான் இலங்கையின் இன்றைய உயர்கல்வி நிலவரம்.
இன்னொரு
வகையில் சொல்வதானால் (நாம் ஏற்றுக்கொள்ள விரும்பினாலும் விரும்பாவிட்டாலும்)
உயர்தரப் பரீட்சையில் வெற்றி பெற்று (100 பேரில் 10 பேர் மட்டுமே) பல்கலைக் கழகம்
செல்வதும் ஒரு சூதாட்டம் போன்றதுதான்.
உண்மையில் ஒரு
மாணவன் பல்கலைக் கழகம் சென்றுதான் தனது வேலைத் தகுதியை வளர்த்துக் கொள்ளவேண்டும்
என்றில்லை. அதேபோல உயர்தரம் கற்றுத்தான் ஒருவர் கல்வியிலும் தமது தொழில்
துறையிலும் முன்னேற வேண்டும் என்பதில்லை. இன்று அதற்கு மாற்றாக பல வழிகள் உள்ளன.
இவ்வாறான
மாற்று வழிகள் சாதாரண தரத்தின் பின்னரும் உயர்தரத்தின் பின்னரும் இருந்தாலும் அவற்றின் பயனை மாணவர்கள்
பெறுவதற்கு பல விடயங்களிலும் மாற்றங்கள் அவசியமானவை.
இலங்கையில்
உயர்தரத்தில் குறித்த மூன்று பாடங்களைப் படித்து நல்ல புள்ளிகள் பெற்று Z ஸ்கோரும் உயர்வாக இருந்தால் மாத்திரமே
குறித்த சில கற்கைநெறிகளை மேற்கொள்ள முடியும். ஆனால் இந்தியாவிலும் பல மேற்குலக
நாடுகளிலும் நிலைமை அப்படியில்லை. அவர்கள் மேற்படிப்பிற்கு தெரிவு செய்ய
விரும்பும் துறைக்குத் தொடர்பான பாடங்களில் தேவையான பெறுபேறுகளைத் தமது உயர்தரம்
கற்கும் காலத்தில் பெற்றிருந்தால் போதுமானது. இலங்கையிலும் இத்தகைய மாற்றம் வருமாக
இருந்தால் உண்மையில் மாணவர்கள் மேற்படிப்புக்குரிய பாடங்களைத் தெரிவு செய்வது
இலகுவாக அமையக்கூடும்.
தற்போதுள்ள
நிலையில் கொழும்பு போன்ற பெருநகரங்களில் காணப்படும் பரந்துபட்ட கல்வி வாய்ப்புகள்
பின் தங்கிய பிரதேசங்களுக்கும் விரிவுபடுத்தப்பட வேண்டும். இன்று போலிப்
பல்கலைக்கழகம் பற்றி பெரும் குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டுவரும் நிலையில் அரசு
தனியார் கல்வி நிறுவனங்களை நெறிப்படுத்தவும் குறைந்தபட்ச தரநிலையைக் (minimum standard) கொண்டிராத நிறுவனங்கள் இயங்குவதைக்
கட்டுப்படுத்தவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இலவசக்
கல்விமுறையின் நன்மையை அதிக புள்ளிகள் பெற்ற மாணவர்கள் அனுபவிக்கும் அதேநேரம், பல்கலைக்கழகம் செல்லத் தகுதி பெற்றும்
அரசின் வளப்பற்றாக்குறை காரணமாக உள்வாங்கப்படாத மாணவர்கள் கட்டணம் செலுத்தி
(கல்விக் கடன் திட்டத்தின் கீழ்) கல்வி கற்கமுடியும் என்ற ஒரு நிலை உருவாக்கப்பட
வேண்டும்.
சமூக
மட்டத்தில் பெற்றோர் தமது பிள்ளைகள் என்னவாக வேண்டும் என்று கனவு காண்பதை நிறுத்த
வேண்டும். பிள்ளைகளின் ஆர்வத்தை அறிந்து அந்த ஆர்வத்தோடு இணைந்த துறையில் அவர்கள்
மேற்கல்வி கற்பதை ஊக்குவிக்க முன்வரவேண்டும். பாடசாலைகளில் மாணவர்கள் சரியான தெரிவுகளை
செய்வதற்குத் தேவையான வழிகாட்டல்கள், ஆலோசனைகள்
வழங்கப்பட வேண்டும்.
மறுபுறத்தில்
கல்விக் கூடங்கள் மாணவர்களைத் தொழிற் சந்தைக்கு ஏற்ப தயார் செய்பவையாக இருக்க வேண்டும். அதேபோல பாடசாலைகளின் தொழிற்சந்தை தொடர்பாக மாணவர்களுக்கு
பொருத்தமான வழிகாட்டல்கள் வழங்கப்படும் சூழல் உருவாக்கப்பட வேண்டும். இதைத்தவிர மாணவர்களை
வகுப்பறைக்கல்விக்கு அப்பாலான கற்றல் செயற்பாடுகளில் ஈடுபடுத்த வேண்டும். அவர்களை சமூகப்
பொறுப்புடன் இயங்குபவர்களாக உருவாக்க வேண்டும்.
பரந்துபட்ட
பட்டப்படிப்பின் மூலம் சமூகத்தையும் நாட்டையும் முன்னேறும் முன்னேடிகளாக அடுத்த
தலைமுறையினர் வரவேண்டும். பல்கலைக்கழகம் சென்று பட்டம் பெறுவது பணம் சம்பாதிக்கும்
வழி என்று நினைக்கும் மனநிலை மாறவேண்டும். தொழில்முறைக் கல்விகள், சுயதொழில் முயற்சிக்கான அடிப்படைகளும்
மாணவர்களின் 15 - 16 வயதிலேயே
அறிமுகப்படுத்தப்பட வேண்டும்.
புலம்பெயர்
சமூகமும் இலங்கையில் இளையவர்களுக்கு வேலை வாய்ப்பையும் கல்வி கற்கும் காலத்திலேயே
வேலைத்தள அனுபவத்தையும் வழங்கும் வகையில் தொழில் நிறுவனங்களை உருவாக்குவதன் மூலம்
மாணவர்களை தகுதியும் திறமையும் கொண்டவர்களாக உருவாக்க முடியும்.
இதையெல்லாம்
விடுத்து நாடாளாவிய ரீதியில் முதலிடம், மாவட்டத்தில் முதலிடம் எனப் பொதுப் பரீட்சைப்
பெறுபேறுகளை கொண்டாடியும், பின்னடைந்தோரை அறிவுரை என்ற பெயரில் நெட்டித்
தள்ளிக்கொண்டும் இருப்பதனால் எதையும் சாதித்து விடப்போவதில்லை. மாணவர்கள்
சுதந்திரமாகக் கற்கக் கூடிய சூழலை பெற்றோர், பாடசாலைச் சமூகம் உருவாக்க வேண்டும்.

No comments:
Post a Comment