Saturday, 24 October 2020

 



உயர் கல்விக்கான வாய்ப்பை மேம்படுத்துதல்

S.G. Ragavan & Mani Mahadeva

 

மாறிவரும் கல்விச் சூழலும் வளப் பாவனையும்

நடப்பு காலங்களில் தமிழர்களின், குறிப்பாக இலங்கையின் வடக்கு கிழக்கின் கல்வி வீழ்ச்சி குறித்த அதிக விவாதிப்புக்கள் உள்ளூர் , மற்றும் புலம் பெயர் சமூகத்தின் மத்தியில் பெரும் விவாதப் பொருளாக மாறி நிற்கின்றது.

 

கல்வியை ஒரு மூலாதாரமாகப் பற்றிக் கொண்டிருக்கும் ஒரு சமூகமாக பல தலைமுறைகளாக இலங்கைத் தீவில் தமிழ்ச் சமூகம் இயங்கி வந்திருக்கிறது. அதாவது கல்வித் தகமை என்பது அரச தொழில் ஒன்றைப் பெறுவதற்கான உத்தரவாதமாகவே பார்க்கப்பட்டுள்ளது. ஆனால், கடந்த சில வருடப் பெறுபேறுகளால், தமிழர்கள் தமிழர்களின் உத்தரவாதக் கட்டமைப்பில் சிதைவு அல்லது வீழ்ச்சி ஏற்பட்டுவிட்டது என்ற ஒரு பதட்டம் பலரிடம் இருப்பதையும் பார்க்க முடிகிறது.

 

எப்போதும் மேம்போக்கான ஒப்பீடுகளைச் செய்தபடியே வளர்ந்த தமிழ்ச் சமூகத்திற்கு இன்றைய காலத்தில் வடகிழக்கைத் தவிர்த்த இலங்கையின் ஏனைய பகுதிகளுடன், குறிப்பாகத் தென் மாகாணத்துடன் ஒப்பிடுகையில் தாம் தாழ்ந்து போய்விட்டதாக அச்சம் கொள்ளும் மனநிலை மேலோங்கியுள்ளதை அவதானிக்க கூடியதாக உள்ளது.

 

கிட்டத்தட்ட ஒரு  தலைமுறையாக நிகழ்ந்த உள்நாட்டுப் போரின் பாதிப்புகள் வடக்கு கிழக்கின் கல்விச் சூழலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதில் ஐயமில்லை. இப்போரின் முடிவின்  பின்னரான கடந்த 11 வருடங்களின் பின்னரும் கல்வியில் ஒரு தேக்க நிலையை வடகிழக்கு பிரதேசங்கள் எதிர்கொண்டிருப்பதற்குரிய பல்வேறு சுட்டிகள் பலராலும் அடையாளம் காணப்பட்டுள்ளன.

 

இவ்வாறு இனங் காணப்பட்ட காரணிகளுக்குத் தீர்வு காணவும், வடகிழக்கின் கல்விச் சூழலை ஆரோக்கியமானதாக மாற்றுவதற்கும் உள்ளூர் மற்றும் புலம் பெயர் ஆர்வலர்களும் தொடர்ந்தும் முயற்சி செய்து வருகிறார்கள். தற்போது பிரபலமாகி வரும் இணையவழிக் கல்வி இதற்கு ஒரு நல்ல உதாரணமாகும்.

 

ஆனால் துரதிஸ்டவசமாக இவ்வாறான சில செயற்பாடுகள் தவிர்த்து வடகிழக்கில் கல்வி வளர்ச்சியை மேம்படுத்துவதற்கு உள்ளூர் மற்றும் புலம்பெயர் தன்னார்வலர்களால் ஒரு பூரணமான கூட்டுப் பொறிமுறையை உருவாக்க முடியவில்லை.  அதாவது அரசதன்னார்வத் தொண்டு மற்றும் அக்கறையுள்ள தனியார் அமைப்புகள் சேர்ந்தியங்கக்கூடிய ஒரு பொறிமுறையை உருவாக்கி நடைமுறைப்படுத்துவதில் கல்வி வளர்ச்சி குறித்த அக்கறையாளர்கள் வெற்றி அடைய முடியவில்லை என்பதை புரிந்து கொள்ளலாம்.

 

வடகிழக்கின் கல்வி வளர்ச்சிக்கு புலம் பெயர் மக்களின் புலமை மற்றும் நிதிப் பங்களிப்பை செய்வற்குரிய ஆர்வம் மிகையாக இருக்கும் சூழலில், இலங்கையின் கல்வித் திட்டத்தோடு சமாந்திரமாக பயணிக்கும் திட்டமிடப்பட்ட கட்டமைப்பின் தேவைப்பாடு ஒன்று அவசியமாகிறது. அந்தக் கட்டமைப்பின் செயல் உருவம் எது என்பதில் யாருக்கும் தெளிவான சிந்தனையும் தெளிவான வரையறைகளும் இல்லை. 

 

மாறாக தனிநபர்களாகவும் சிறு குழுக்களாகவும் முன்னெடுக்கப்படும்  முயற்சிகள் முறைசாரா (informal) வகையில் தொழிற்படும் சூழலே இப்போது  காணப்படுகிறது. இச் சூழலில் ஒரு சமச்சீரான கல்வி வளர்ச்சியை ஏற்படுத்த முடியாது திண்டாடுகின்ற நிலமையே இன்று வரை காணப்படுகின்றது.

 

இதனால் புலம்பெயர் மற்றும் உள்ளூர்  தன்னார்வலர்கள் முதலில் கல்வி வளர்ச்சிக்காய் பொருத்தப்பாடுடைய பொறிமுறையை உருவாக்குவதில் தமது கவனத்தை செலுத்த வேண்டியுள்ளது. அதன் பின்னரே அந்த பொறிமுறையூடாக கல்வி வளர்ச்சியில் தமது பங்களிப்பைச் செய்வது காத்திரமான பங்களிப்பாக அமையும்.

 

இன்றும் பல புலம்பெயர் மற்றும் உள்ளூர் தன்னார்வலர்கள் பலர் பாடசாலைக் கல்வியை மையப்படுத்திய, பொதுத் தேர்வின் பெறுபேறுகள் அடிப்படையிலான கல்வியின் வளர்ச்சியில் மாத்திரம் அக்கறைப்படுவது குறித்தும் அதிக விமர்சனங்கள் வந்த வண்ணமே இருக்கின்றது. வடக்கு, கிழக்கின் பிரபல பாடசாலைகள் பல தமது பாடசாலைகளை மையப்படுத்தி, பிராந்தியத்தில் சிறந்த ஆசிரியர்களை தமது பாடசாலைகளை நோக்கி நகர்த்துவதிலே அதிக சிரத்தை காட்டுவதை காணக் கூடியதாக உள்ளது.

 

மறுபுறத்தில், சமச்சீர்க் கல்விசமமான வளப்பகிர்வு என்கிற கோட்பாட்டின் அடிப்படையில் இனிவரும் நாட்களில் வடக்கு-கிழக்கு சமூகம் செயற்பட வேண்டிய தேவை உணரப்பட்டு வருகிறது. கடந்த காலங்களில் காணப்பட்ட பாகுபாட்டுத் தன்மையுடனான வளப்பகிர்வு, இடமாற்றக் கொள்கைகள் போன்றன கற்றல், கற்பித்தல் செயல்பாட்டை பாதித்து வந்ததே இதற்குக் காரணம் என்றால் அது மிகையில்லை.

 

ஆசிரியர் வளப்பற்றாக்குறை உள்ள பாடசாலைகளில், அவ் வளப் பற்றாக்குறைகள் தீர்க்கப்படும் வரையிலும் மாற்றுத் திட்டங்களை பயன்தரக் கூடிய விதத்தில் அமுல்படுத்துவது அவசியமாகிறது. தற்போது சில தன்னார்வ அமைப்புகள் முன்னெடுக்கும் இணையவழிக் கல்வி, விரிவுரைகள் மற்றும் கையேடுகள் தரவேற்றிய மடிக்கணினி/ Tablet வழங்கும் திட்டம், பாடசாலைக்கு Smart TV வழங்குதல் போன்ற கருத்திட்டங்களை இதற்கு உதாரணமாகக் கொள்ளலாம்.  

 

மாணவர்களுக்கு சுயகற்றல் கையேடுகள், செயலட்டைகள் வழங்கப்பட்டு மாணவர்கள் தாமாகவே சுய கற்றலுக்குரியவர்களாக ஊக்கப்படுத்துவதும், கையேடுகள், செயலட்டைகளில் உள்ள கேள்விகளுக்கு அதே ஊரில் உள்ள தொண்டர்கள் மூலம் உதவுவதும், தவணையடிப்படையில் பிற பகுதிகளில் இருந்து ஆசிரியர்களை வரவழைத்து  வினா விடை வகுப்புகளை நடாத்துவதும் அதிக பலனைத் தரக்கூடிய சில வழிமுறைகளாகும். இந்த அணுகுமுறை வன்னியிலும், கிழக்கின் சில பகுதிகளிலும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதையும், அது வரவேற்பு பெற்று வருவதையும் அறிய முடிகிறது.

 

ஆசிரியர்களையும் வளங்களையும் நோக்கி நீண்ட காத்திருப்புடன் பாடசாலைகள் இருப்பதை விட குறைந்த நிதிவளத்தோடு அதிக பலனைத் தரக்கூடிய முறைகளைக் கையாள்வதன்மூலம் பின்தங்கிய பிரதேசங்களின் கல்வி வளர்ச்சிக்குரிய உடனடித் தீர்வொன்றை விரைந்து உருவாக்க முடியும்.

 

பாடசாலைக் கல்விக்கு அப்பால்!

பாடசாலைக் கல்வி தொடர்பாக, அதிலும் சாதாரண தர மற்றும் உயர்தர பெறுபேறுகளில் அதிக சிரத்தை செலுத்தும் உள்ளூர் சமூகமும் புலம்பெயர் சமூகமும் தனித்து பாடசாலைகளின் கல்வி வளர்ச்சியில் தற்போது அதிக கவனஞ் செலுத்துவதை அவதானிக்க முடிகிறது.  முன்னர் பலமான கட்டமைப்புடன் இருந்த ஆரம்ப நிலை, இரண்டாம் நிலை பாடசாலைகள் பலவீனமடைந்து விட்டதான பார்வைதான் இவ்வாறு பல கல்வியாளர்கள் அந்த இரண்டு பிரிவுகளைப் பலப்படுத்த முனைவதற்கான காரணம் என்றே நினைக்கத் தோன்றுகிறது. ஆனால் அதே அளவிற்கு பாடசாலைக் கல்வியின் பின்னரான உயர் கல்வி குறித்து அதிகம் அக்கறையற்று இருக்கிறதோ என்று எண்ணத் தோன்றுகிறது.

 

இலங்கையின் உயர்கல்விச் சூழலைக் கலந்துரையாடும் முன்னர் புலம் பெயர் தேசத்தில் உள்ள கல்வி முறையைக் கொஞ்சம் ஒப்பிட்டுப் பார்க்கலாம். பல புலம் பெயர் நாடுகளில் உயர்கல்வியில் பரந்துபட்ட தெரிவுகளும் அது தொடர்பான தகவல்களும் இலகுவாகக் கிடைப்பதும், மாணவர்களுக்கு உயர் கல்வியை இலகுவாகத் தெரிவு செய்யும் சூழலை உருவாகியிருக்கிறது. அந்த நாடுகளில் பல்கலைக் கழகங்களுடன் சமுதாயக் கல்லூரிகளும் இருப்பதால் மாணவர்கள் தங்கள் வசதிக்கு ஏற்ப கல்வி நிறுவனத்தையும் கற்கை நெறிகளையும் தெரிவு செய்ய முடிகிறது.

 

இந்த நாடுகளில் மாணவர்கள் தமது கல்வித் தேவைக்காக கல்விக் கடன்களை இலகுவாகப் பெற்றுக் கொள்ள முடிகிறது. அதேநேரம் தமது கல்விக் கட்டணத்தின் கணிசமான பகுதியை கோடை விடுமுறை காலத்தில் (Summer Job) தாமே சம்பாதித்தும் கொள்கிறார்கள். சில நாடுகளில் அரசாங்கமே தொழில் நிறுவனங்களுக்கு நிதியுதவி வழங்கி மாணவர்களுக்கான கோடைகால வேலைவாய்ப்பை உறுதி செய்கிறது. சில அரச திணைக்களங்களும் அரச சார்பற்ற நிறுவனங்களும் சில தனியார் நிறுவனங்களும் இவ்வாறான வேலை வாய்ப்பை வழங்குகின்றன.

 

இப்போது இலங்கையின் கல்விச் சூழலைப் பார்ப்போம். இலங்கையில்  உள்ள மாணவர்கள் பாரம்பரிய அரச பல்கலைக் கழகங்களில் உயர்கல்வி கற்பதற்கான மட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கையான இருக்கைகளைக் கைப்பற்றும் இலக்காகக் கொண்டு இயங்கவே பழக்கப்படுத்தப்பட்டுள்ளார்கள். இவ்வாறான கோட்பாடு சந்ததிகளூடாக கடந்த எழுபது வருடங்கள் கடந்து இன்றும் பின்பற்றப்படுவது சற்று அபத்தம் நிறைந்த குறுகிய பார்வை என்றே எடுத்துக் கொள்ள வேண்டியுள்ளது. உலகம் சுருங்கி தகவல்களும் விரல் நுனிக்கு வந்துவிட்ட சூழலிலும் மாணவர்களுக்குப் பாரம்பரிய பல்கலைக் கழகத் தெரிவைத் தவிர்த்து மாற்று வழிகள் இல்லையென்று கவலை கொள்ளும் மனநிலையிலிருந்து நாங்கள் விலகி நிற்க வேண்டியவர்களாகிறோம்..

 

போரினால் பின்னடைவடைந்த வடக்குக் கிழக்கோடு ஒப்பிடும்போது, இலங்கையின் இலங்கையின் ஏனைய பிரதேசங்கள் இந்த விடயத்தில் குறிப்பிடத்தக்க பாய்ச்சலை நிகழ்த்திச் செல்வது அவதானிக்க முடிகிறது. பல அரசு சாரா பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்கள் தென்னிலங்கையில் உருப்பெற்றிருப்பதுடன் ஏற்கனவே இருந்த கல்வி நிறுவனங்களும் தரம் உயர்த்தப்பட்டுள்ளன. அத்தோடு அந்த நிறுவனங்களில் பல்வேறு புதிய கற்கைநெறிகள் சேர்த்துக் கொள்ளப்பட்டிருக்கின்றன. இவ்வாறான சில நிறுவனங்களில் அனுமதி பெற மாணவர்கள் மத்தியில் பெரும் போட்டி நிலவுவதும் இங்கு குறிப்பிடத்தக்கது. இதனால்  பாடசாலைக் கல்வியை முடித்த பின்னர் மாணவர்கள் இலகுவாக அரசஅரசு சாராத உயர்கல்வி நிறுவனங்களில் தமக்கான உயர் கல்வியைத் தெரிவு செய்து பெற்றுக் கொள்ள முடிகிறது..

 

இன்றைய சூழலில் ஒப்பீட்டளவில் வடக்குக் கிழக்கில் இத்தகைய வாய்ப்புகளை உருவாக்க வேண்டிய தேவை அதிகம் இருக்கிறது. வடக்கின் மருத்துவர்களின் தேவையை நிவர்த்தி செய்ய தனியார் மருத்துவக் கல்லூரிகள் வடக்கில் நிறுவப்பட வேண்டும் வடக்கின் சுகாதார பணிப்பாளரே அண்மையில் குறிப்பிட்டிருந்தார். உண்மையில் மருத்துவம் மாத்திரமின்றி ஏனைய துறைகளுக்குமான வளாகங்களையும் அரச சார்பற்ற கல்லூரிகளையும் வளர்த்தெடுப்பதன் மூலம் மூலம் வடக்கு-கிழக்கின் மேம்பாட்டிற்குப் பங்களிப்பை வழங்க முடியும்.

 

தனியார் கல்வி நிறுவனங்களின் வளர்ச்சி !

1990களின் நடுக்கூற்றில் இலங்கைப் பல்கலைக்கழகங்களில் வெளிநாட்டு மாணவர்களை சர்வதேச கட்டணங்களின் அடிப்படையில் அனுமதித்து அதன் வருமானத்தைக் கொண்டு பல்கலைக் கழகங்களுக்கு சேர்க்கப்படும் உள்ளூர்  மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் திட்டம் கொண்டுவரப்பட்டபோது அச்செயல்பாட்டிற்கு பல்கலைக்கழக மாணவர் அமைப்புகளிடமிருந்து பலத்த எதிர்ப்பு கிளம்பியது. மக்கள் விடுதலை முன்னணி அமைப்பு தனது உச்ச பட்ச எதிர்ப்பைக் காட்டியது.

 

இலங்கை பூராகவும் தனியார் பல்கலைக்கழகத்திற்கு எதிர்ப்பு இருந்தாலும்  அத்தகைய எதிர்ப்புகள் என்பது முழுச் சமூகத்தினதும் எதிர்ப்பல்ல. மாறாக Medical Council, Engineering Council மற்றும் பல்கலைக் கழக மாணவர் சங்கங்களால் முன்னெடுக்கப்பட்ட எதிர்ப்புகளே அவை. வெட்டுப்புள்ளிகள் ஊடாக பல்கலைக் கழகம் செல்பவர்களே அறிவாளிகள், மற்றவர்கள் உயர்கல்வி கற்கத் தகுதியற்றவர்கள் என்ற மனப்பாங்கு மட்டும் இதற்குக் காரணமல்ல. இவ்வாறு வேறு கல்வி நிறுவனங்கள் இயங்கினால் அங்கிருந்து பட்டம் பெற்று வருபவர்கள் தொழிற்சந்தையில் தங்களுக்கு போட்டியாளர்களாக வந்துவிடுவார்கள் என்ற பதட்டமும் ஒரு முக்கிய காரணம் என்பதை மறுக்க முடியாது.

 

இத்தகைய அமைப்புக்களின் எதிர்ப்புகளின் மத்தியிலும் தென்பகுதியில் படிப்படியாக தனியார் பல்கலைக் கழகங்கள், வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்களின் இணைந்த பல்கலைக் கழகங்கள் படிப்படியாக இலங்கையில் வளர்ச்சியடையத் தொடங்கின. கொழும்பில் ஆரம்பித்த இவ்வாறான கல்வி நிறுவனங்கள் பின்னர் படிப்படியாகச் கிளை பரப்பி இன்று வடக்கு வரைக்கும் தமது கல்வி வியாபாரத்தை விரிவு படுத்தியுள்ளன. இவ்வாறான தனியார் பல்கலைக் கழகங்களும் இணைந்த பல்கலைக் கழகங்களும்  B.A, BBA, B.Tech, BSc (Eng) , BSc ( Computer Science, Bio tech, etc), MD/ MBBS போன்ற பட்டங்களை வழங்குகின்றன. இது தவிர டிப்ளோமா, Post Graduate Diploma, Post Graduate Degree கற்கைநெறிகளையும் வழங்குகின்றன,

 

வடக்கு கிழக்கில் ஏற்கனவே இருந்த Technical Colleges, Open University of Sri Lanka வின் கிளைகள்  என்பவற்றுடன் இப்போது University of Vocational Technology, British College of Education, ICBT Campus, Manipal University Campus,  Aquinas College Pvt. Ltd, AAS போன்ற பல தனியார் கல்வி நிறுவனங்கள் இன்று தொழிற்படுகின்றன.

 

இவற்றுள் சில தனியார் பல்கலைக் கழகங்கள் சில மாணவர்களை மிகக் குறைவாகப் புள்ளிகள் எடுத்தாலும் அவர்களை சித்தியடைந்தவர்களாக காட்டி தமது pass rate இனை அதிக சதவீதத்தில் பேணிக் கொள்வதாகச் சொல்லப்படுகிறது. இது தவிர சில கல்வி நிறுவனங்களின் கட்டணங்கள் எல்லா மாணவர்களாலும் செலுத்தப்படக் கூடியதுமல்ல. ஆனாலும் இவர்களின் கவர்ச்சிகரமான விளம்பரங்கள், அதிக சதவீதமான பட்டப் படிப்புப் பூர்த்தி வீதம் என்பன இவர்களின் இருப்பையும் வியாபாரத்தையும் உறுதி செய்யும் காரணிகளாக விளங்குகின்றன. இதில் வேடிக்கை என்னவெனில் சில பல்கலைக் கழக விரிவுரையாளர்களே பகுதிநேர மற்றும் வார இறுதி விரிவுரையாளர்களாகவும் தொழிற்படுவதன் மூலம் இவ்வாறான தனியார் பல்கலைக் கழகங்களின் வளர்ச்சியில் பங்காளர்களாக இருப்பது இங்கு கவனிக்கத்தக்கது.


மாணவர்களுக்குள்ள உயர்கல்வித் தெரிவுகள் !

உயர்தரம் கற்கும் மாணவர்கள் அனைவரும் தமது முதல் தெரிவான பல்கலை கழக அனுமதியை நோக்கியே தமது குதிரையோட்டத்தை ஆரம்பிக்கின்றனர். அனுமதி பெற்றவர்கள் வெற்றியாளர்களாக அரசின் பல்கலைக் கழகங்களுக்குள் நுழைய வெற்றி பெறாதவர்கள் விடாமுயற்சியுடன் இன்னும் இரண்டு முறையாவது முட்டி மோதிப் போராடிப் பார்க்கிறார்கள். இவ்வாறு போராடி வெற்றிபெறாதவர்களுக்கு எஞ்சியுள்ள சில தெரிவுகளைப் பார்ப்போம்.

 

1.       திறந்த பல்கலைக்கழகம்

உயர்தரப் பரீட்சையில் சித்தி பெற்றும்  அரச பல்கலைக் கழகம் செல்ல முடியாத மாணவர்கள் பல்வேறு கற்கைநெறிகளை மேற்கொள்ளும் சந்தர்ப்பத்தை நீண்ட காலமாக (1978 இலிருந்து) இலங்கையின் திறந்த பல்கலைக் கழகம் வழங்கி வருகிறது. ஆனாலும் இலங்கை திறந்த பல்கலைக்கழகம் அதன் இலக்கை இன்றுவரை எட்டவில்லை என்பதுதான் உண்மை. அதனை ஒரு தோல்வி கண்ட பொறிமுறையாகவே கருத வேண்டியுள்ளது..

 

ஒருபுறத்தில் திறந்த பல்கலைக் கழகம் வழங்கும் கற்கை நெறிகளுக்கான வெற்றிடங்கள் முழுமையாக நிரப்பப்படுவதேயில்லை. மறுபுறத்தில் அங்குள்ள சில பேராசிரியர்கள், விரிவுரையாளர்களின் முறையற்ற நடைமுறைகளினால் (Unethical Actions) மாணவர்கள் கல்வியைப் பூர்த்தி செய்து வெளியேறுவோர் வீதம் குறைவாகவே உள்ளது. உதாரணமாக ஒரு வருடத்தில் 3000 மாணவர்களை உள்வாங்கும் வளங்களை கொண்ட இலங்கை திறந்த பல்கலைக்கழக பொறியியல் பீடம் வருடாந்தம் ஒரு வீதம் அல்லது அதற்கும் குறைவானவர்களே பொறியியல் பட்டதாரிகளாக வெளியேறுகிறார்கள்.

 

இலங்கையின்  பிரதான பல்கலைக்கழகங்களில் பொறியல் பட்டதாரி 121 - 140 credit பாடங்களை பூரணப்படுத்த எதிர்பார்க்கப்படும் அதேவேளை, திறந்த பல்கலைக்கழகத்தில் ஒரு மாணவன்  168 - 180 credit பாடங்களை எடுக்க வேண்டியுள்ளது. அத்துடன் GPA  rate கணிப்பதில் கூட முறைசார்ந்த பல்கலைகழகத்துடன் ஒப்பிடும் போது உயர்ந்த மதிப்பீடுகளை அநீதியான முறையில் வைத்திருக்கிறார்கள் என்பது திறந்த பல்கலைக் கழகத்தில் கல்வி கற்ற மாணவர்களின் முறைப்பாடாக இருக்கிறது. இதனைத் தாண்டியும் வேறு தடைகளும் மாணவர்களுக்கு உள்ளன.

 

திறந்த பல்கலைக் கழகத்தில் பொறியியல் கற்கை நெறியை தொடர்ச்சியாக கற்கும் ஒரு மாணவன் தன் கல்வியைப் பூர்த்தி செய்ய ஆறு வருடங்கள் தேவைப்படுகிறது. இதன் ஏனைய பீடங்களிலும் இதுதான் நிலமை. இதனாலேயே பல மாணவர்கள் வெறுப்புற்று இந்தியா போன்ற நாடுகளுக்குச் சென்று கல்வியைத் தொடர்ந்த சம்பவங்களும் நடந்துள்ளன. அவ்வாறு வெளியேறிய மாணவர்கள் பலர் இலங்கைக்குத் திரும்பி தமது மனித வளத்தை தாம் பிறந்த நாட்டிற்கு பயன்படுத்தவில்லை என்பதுதான் யதார்த்தம்.

 

2.       தொழில்நுட்பக் கல்லூரிகள்

தொழில் நுட்ப கல்லூரிகள் இலங்கையில் நீண்ட பாரம்பரியத்திற்குரியவை.. ஆனால் அவற்றின் வளர்ச்சி என்பது காலத்திற்கு ஏற்றதாக இல்லை. இலங்கையில் உள்ள தொழில் நுட்ப கல்லூரிகளில் 1990களில் பட்டப் படிப்புப் பாடநெறிகளை உருவாக்கும் திட்டம் முன்மொழியப்பட்ட போதும் அப்போது எழுந்த எதிர்ப்புகளால் அது கைவிடப்பட்டுள்ளது. இருப்பினும் Higher National Diploma in Accounting (4 years) கடந்த 25 வருட காலப்பகுதிகளில் BBA கற்கை நெறிக்கு சமனாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

 

அதே போன்று Higher National Diploma in Engineering கற்கை நெறியை Bachelor in Engineering / Bachelor Engineering Technology கற்கை நெறியாக அமுல்படுத்தும் கோரிக்கை கடந்த காலங்களில் எழுந்த கடுமையான எதிர்ப்புகளால் அமுல்படுத்தப்படவில்லை. தொழில்நுட்ப கல்லூரிகளில் வழங்கப்படும் National Certificate in Technology,  மூன்றரை வருட முழுநேர கற்கை நெறியின் பாட விதானங்கள் பிரித்தானிய பல்கலைக்கழகங்களில் வழங்கப்படும் Bachelor of Engineering க்கு சமனான பாடவிதானங்களை கொண்டிருப்பினும் இன்றுவரை National Certificate in Technology  ஒரு Certificate program ஆகவே உள்ளது (தொழில்நுட்ப கல்லூரிகள் இது தொடர்பாக பல ஆர்ப்பாட்டங்களை நிகழ்த்தி இருக்கின்றன).

 

3.       தொலை, தொடர் கல்வி நிலையங்கள்

பல்கலைக் கழகத்திற்கு தெரிவாகாத மாணவர்களுக்கு உள்ள இன்னொரு தெரிவுதான் இலங்கையின் பிரதான பல்கலைக் கழகங்கள் ஊடாக நடாத்தப்படும் தொலை, தொடர் கல்வி நிலையங்களால் வழங்கப்படும் கற்கைநெறிகள். ஆனால் பல்கலைக் கழகங்கள் அனைத்துப் பாடங்களையும் இவ்வாறு வழங்குவதில்லை. உதாரணமாக யாழ் பல்கலைக் கழகத்தின் திறந்த மற்றும் தொலைக் கல்வி நிலையம் கலை, வர்த்தகம், வணிக முகாமைத்துவம் ஆகிய துறைகளில் பட்டதாரிக் கற்கைநெறிகளை வழங்குகிறது. இங்கு விஞ்ஞான பட்டதாரி கற்கைநெறி வழங்கப்படுவதில்லை.

 

4.       தனியார் பல்கலைக் கழகங்கள்/சர்வதேச இணைந்த பல்கலைக் கழகங்கள்

இலங்கையில் நீண்டகால வரலாறு கொண்ட தனியார் உயர் கல்வி நிறுவனங்கள் Aquinas College (1953), Institute of Chartered Accountants of Sri Lanka (1959), National Institute of  Business Management (1968) ஆகியனவாகும். அதன் பின்னர் Institute of Technological Studies 1984 இல் ஆரம்பிக்கப்பட்டது. இவையனைத்தும் இலங்கையின் மேல் மாகாணத்திலேயே ஆரம்பிக்கப்பட்டது இங்கு குறிப்பிடத்தக்கது. பின்னர் தொண்ணூறுகளில் ஆரம்பித்த இன்றுவரை பல புதிய தனியார் பல்கலைக் கழகங்களும் சர்வதேச பல்கலைக் கழகங்களின் இணைந்த வளாகங்களும் இலங்கையில் ஆரம்பிக்கப்பட்டன.

 

பின்னர் படிப்படியாக இவை இலங்கையின் வடக்கு, கிழக்கு உட்பட இலங்கையின் பல பகுதிகளிலும் தமது கிளைகளைத் திறந்து பல்வேறு கற்கை நெறிகளை வழங்குகின்றன. முன்பே குறிப்பிட்டது போல இவை ஒப்பீட்டளவில் அதிக கட்டணம் அறவிட்டாலும் குறிப்பிட்ட காலப் பகுதியிலேயே படிப்பை முடிக்க முடிவதாலும், சித்தியடையும் வீதம் அதிகமாக இருப்பதாலும் மாணவர்களிடையே பிரபலமடைந்து வருவதாகத் தெரிகிறது.

 

மறுபுறத்தில் திறந்த பல்கலைக் கழகங்களில் இணையும் மாணவர்களின் எண்ணிக்கை ஒப்பீட்டளவில் குறைந்து வருவதாகத் தெரிகிறது. இங்கு நாம் சுட்டிக் காட்ட விரும்புவது தனியார் உயர்கல்வி நிறுவனங்கள் வேண்டாம் என்றல்ல. இலங்கை திறந்த பல்கலைக்கழகம், தொழில் நுட்பக் கல்லூரிகள் போன்றவை சிறப்பாகச் செயற்பட்டால் இலங்கையில் இருந்து நூற்றுக்கணக்கான மாணவர்கள் வருடாந்தம் உயர் கல்விக்காக ரஸ்யா, சீனா, இந்தியா  போன்ற  நாடுகளுக்கு புலம்பெயரத் தேவையில்லை. அத்தோடு கல்வி கற்ற சமூகம் தனது பிரதேசத்திலேயே தங்கி தான் சார்ந்த சமூகத்தை வளப்படுத்தவும் சந்தர்ப்பம் உள்ளது.


தேவை மாற்றுச் சிந்தனை !

கடந்த பகுதிகளில் கலந்துரையாடியது போல, இன்று இலங்கை முழுவதும் மாணவர்கள் அவர்களின் வசதிக்கு ஏற்ப ஒரு டிப்ளோமாவையோ பட்டத்தையோ பெற்றுக்கொள்ளக்கூடியதாக பல கற்கைநெறிகள் இருக்கிறது. இருந்தாலும் இலங்கையின் வடக்குக் கிழக்கில் விஞ்ஞான, தொழில் நுட்பத் துறைகள்  நாட்டின் ஏனைய பகுதிகளில் உள்ளது போல தேவையான விதத்தில் வளர்ச்சியடையவில்லை என்பது கலவைக்குரியது. இந்த நிலைக்கு நிச்சயமாக கடந்த கால யுத்தமோ, அரசு வளங்களைச் சரியாகப் பகிராததோ மட்டுமே காரணமல்ல.

 

கடந்த காலங்களில் பேராசிரியர் துரைராஜா உட்பட பல தூரநோக்குடைய கல்விமான்கள் பிரதான பல்கலைக் கழகங்களோடு இணைந்ததாக விஞ்ஞான, தொழில் நுட்பத் துறைகளில் பல கற்கைநெறிகளை அறிமுகப்படுத்த முயன்றபோதெல்லாம் தமிழ் சமூகம், குறிப்பாக மாணவர் சமூகம் அதை எதிர்த்து நின்றதும் அந்தத் துறைகளில் எமது கல்வி கட்டமைப்பு பின்னடைவு அடையப் பிரதான காரணம்.

 

இன்று இலங்கையில் பல வகையான பாடநெறிகள் இருப்பதோடு வருடாந்தம் ஆயிரக் கணக்கான பட்டதாரிகள் வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள். ஆனாலும் மறுபுறத்தில், இன்றுவரை  பயிற்றப்பட்ட ஆசிரியர்களில் தொடங்கி சுகாதாரத் துறை போன்ற பல முக்கியமான துறைகளிலும் ஆளணிப் பற்றாக்குறை பொதுப் பிரச்சினையாகவே காணப்படுகிறது. இது இன்று நேற்று தொடங்கிய பிரச்சினையில்லை. முப்பது வருடங்களுக்கு மேலாகவே தமக்குத் தேவையான திறன்களோடு போதுமான அளவு பட்டதாரிகளைக் உயர்கல்வி நிறுவனங்கள் உருவாக்குவதில்லை என்பது இலங்கையில் தொழில் வழங்குனர்கள் செய்து வரும் ஒரு முறைப்பாடாகும்.

 

அண்மையில் எமது குழுவில் ஒருவர் கலந்துகொண்ட, இலங்கையின் வடக்கில் மீன்வளம் மற்றும் மீன்பிடித் துறையை அபிவிருத்தி செய்வது தொடர்பான கருத்தரங்கிலும், வர்த்தக நோக்கில் மீன் வளர்ப்பவர்கள் நீரின் தரம், நோய்கள் தொடர்பான தமக்குத் தேவையான பரிசோதனைகளைச் செய்து கொள்ள போதுமான ஆய்வுகூட வசதிகள் வடக்கில் (கிழக்குக்கும் பொருந்தும் என்று நினைக்கிறோம்) இல்லை என்ற விடயம் மீனவளத்துறை சம்பந்தப்பட்ட நிபுணர்களால் சுட்டிக் காட்டப்பட்டது.

 

பல்கலைக் கழகங்கள் தாம் இயங்கும் பிரதேசங்களின் சமூக, பொருளாதார, சூழலியல் தேவைகள், மற்றும் தொழிற்சந்தையின் எதிர்பார்ப்புகள் என்பவற்றைக் கருத்தில் கொண்டு தமது பாட விதானங்களில் தேவையான மாற்றத்தைக் கொண்டுவர வேண்டும். புதிய கற்கைநெறிகளையும் அறிமுகப்படுத்த வேண்டும். இவ்வாறு புதிய கற்கைநெறிகளை வழங்குவதிலும் அதிக மாணவர்களை அனுமதிப்பதிலும் மிக முக்கிய தடையாக இருப்பது உயர்கல்விக்காக அரசு ஒதுக்கும் நிதியின் அளவேயாகும்.

 

இலங்கையின் பட்டதாரிகளின் எண்ணிக்கையை அரசு அதிகரிக்க வேண்டுமெனில் அதற்குரிய நிதிவளம் உருவாக்கப்பட வேண்டும். இன்றுள்ள சூழலில் பண வசதி படைத்தவர்கள் பல்கலைக் கழக வெட்டுப்புள்ளி முறையினால் உயர்கல்வி வாய்ப்பினை இழந்தாலும் தனியார் கல்லூரியில் அதிக பணம் செலுத்தி அதே பட்டத்தைப் பெறுவதற்குத் தயாராக இருக்கிறார்கள். இன்று இலங்கை முழுவதும் உள்ள தனியார் பல்கலைக் கழகங்களில் இணையும் மாணவர்களின் எண்ணிக்கையே இதனை நிரூபிக்கிறது.

 

இவ்வாறு தனியார் உயர் கல்லூரிகள் எண்ணிக்கை அதிகரித்துச் செல்வதும் அவற்றின் செல்வாக்கு அதிகரிப்பதும் நீண்டகால அடிப்படையில் சில பாதகமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். உதாரணமாக மக்கள் மத்தியில் அவர்கள் செய்யும் விளம்பரங்களால் தனியார் பல்கலைக் கழகங்களே சிறந்தது என்று மக்கள் நம்ப வைக்கப்படலாம். தற்போது அங்கு பகுதிநேர விரிவுரையாளராக செயற்படும் பிரதான பல்கலைக் கழகத்தின் சிறந்த விரிவுரையாளர்களை தனியார் பல்கலைக் கழகங்கள் எதிர்காலத்தில் அதிக சம்பளம் கொடுத்து தமது ஊழியர்களாக மாற்றிவிடக் கூடும். இதன்பின் படிப்படியாக தனியார் பல்கலைக் கழகங்கள் உயர்கல்வியில் அதிக செல்வாக்கு செலுத்துவதன் மூலம் காசுள்ளவருக்கே தரமான கல்வி என்ற நிலைக்குள் இலங்கையும் தள்ளப்படலாம்.

 

இந்த சூழ்நிலையில் அரசாங்கம் முழுமையான தனியார் கல்லூரிகளை அனுமதிப்பதற்குப் பதிலாக அரசு ஐம்பது வீதத்திற்கும் அதிகமான பங்குகளையும் நிர்வாகத்தையும் தன்னிடத்தில் வைத்துக் கொள்ளும் வகையிலான தனியார் கல்லூரிகளை ஆரம்பிப்பது பல பிரச்சனைகளுக்குத் தீர்வாக அமையக் கூடும். அங்கு கல்வி கற்க விரும்பும் வருமானம் குறைந்த மாணவர்களுக்கு இதன்போது மாணவர்களுக்கு கல்வி கற்பதற்குக் (வட்டியற்ற) கல்விக் கடன் திட்டங்களை அறிமுகப்படுத்தலாம்.  இது அரசின் பணச்சுமையைக் குறைக்கவும், அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் உயர்கல்வி பெற உதவவும் உறுதுணையாக அமையும்.

 

அத்தோடு வெளிநாடுகளில் உள்ள மாணவர்கள் போல இலங்கையிலும் பல்கலைக் கழக மாணவர்கள் கல்வி கற்கும்போதே விடுமுறை காலத்திலும் வார இறுதிகளிலும் தாம் சார்ந்த துறையில் பயிற்சி பெறக் கூடிய, வேலை செய்யக்கூடிய வசதி வாய்ப்புகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட வேண்டும். இதன்மூலம் மாணவர்கள் தமது கல்வியை நிறைவு செய்யும்போதே குறைந்தது இரண்டுவருட வேலை அனுபவம் கொண்டவர்களாக இருப்பார்கள். மறுபுறத்தில் வருமான குறைந்த மாணவர்கள் தமது கல்விக் கடனைக் கட்டவும் தமது கல்வி தொடர்பான பிற தேவைக்கான பணத்தை தாமே உழைத்துக் கொள்ளவும் முடியும்.


இதை தவிர பல்கலைக்கழக சமூகம் தாம் சார்ந்த பிரதேச மக்களின் பிரச்சனைகள், சூழலியல் பிரச்சனைகள் என்பவை தொடர்பாக சமுதாயப் பங்குதாரர்களுடன் சேர்ந்து கள ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும். ஆய்வுகளுடன் நின்றுவிடாது பிரச்சனைக்குரிய தீர்வுகளை முன்மொழிவதிலும் நடைமுறைப்படுத்துவதிலும் தமது பங்களிப்பை வழங்க முன்வர வேண்டும். வடக்குக் கிழக்கு மற்றும் மலையகத்தின் பாடாசாலைக் கல்வி வளர்ச்சி தொடர்பாக யாழ் பல்கலைக் கழக சமூகம் ஏற்கனவே தம்மால் முடிந்த பங்களிப்பை வழங்குவதை நல்ல உதாரணமாகக் கொள்ளலாம். இதே போன்று ஏனைய பல துறைகளுக்கும் விரிவுபடுத்தப்பட வேண்டும்.

 

இனிவரும் நாட்களில் வடக்கு கிழக்கில் உள்ள தொலை, தொடர் கல்வி நிலையங்களும் தொழில்நுட்பக் கல்லூரிகளும் பிரதான பல்கலைக் கழகங்களும் விஞ்ஞான, தொழில்நுட்பத் துறையை அதிகம் வலுப்படுத்த முயற்சி எடுத்தல் வேண்டும். பல்கலைக் கழகங்களின் வளங்களை ஏனைய உயர்கல்வி நிறுவனங்களின் மாணவர்களும் பயன்படுத்தும் சூழல் உருவாக வேண்டும். எமது சமூகத்தின் வளர்ச்சிக்காக எமது பிரதேசத்தில் உள்ள வளங்களின் உச்சப் பயன்பாட்டை மாணவர்கள் பெறும் சூழலை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டியது கல்வியாளர்கள், கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் சமூக அக்கறை கொண்டவர்களின் கடமையாகும்.

 

இவற்றையெல்லாம் செய்வது கடினமான விடயமாகத் தோன்றினாலும் புலம்பெயர் தேசத்தில் உள்ளவர்களும் கைகொடுத்தால் நடைமுறைச் சாத்தியமற்ற ஒரு விடயமல்ல. குறிப்பாக தாயகத்தில் உள்ள மக்களின் வளர்ச்சிக்கு பங்களிக்க விரும்புவர்கள் நிறுவன முதலீடுகள் மூலம் பட்டதாரிகளுக்கான வேலை வாய்ப்புகள் மட்டுமன்றி மாணவர்களுக்கான உள்ளகப் பயிற்சி, பகுதிநேர வேலை வாய்ப்புகளையும் வழங்க முடியும். அத்துடன் ஏற்கனவே அங்குள்ள தொழில் நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றுவதன் மூலமும் இதனைச் செய்ய முடியும்.

 

************************************

 

Monday, 11 May 2020

இலங்கை க.பொ.த. சாதாரணதரம் (G.C.E. O/L): தமிழர் செறிந்து வாழும் பிரதேசப் பெறுபேறுகள் – ஓர் மீளாய்வு


(2005 – 2019)

மணிவண்ணன் மகாதேவா

May 10, 2020


முன்னுரை


G.C.E. O/L பொதுத் தேர்வு வரையான கற்பித்தல் என்பது மாணவர்களின் கல்விப் பாதையில், அவர்களது எதிர்காலத்தை தீர்மானிக்கும் ஒரு படிக்கல்லாகவே பலகாலமாக இருக்கிறது. இதன் நோக்கம் மாணவர்களின் அறிவுத்திறனை ஆரம்ப வகுப்புகளில் இருந்து படிப்படியாகப் பலப்படுத்தி, அவர்களின் எதிர்காலக் கல்வி மற்றும் தொழிற் பாதையை அவர்களே தெரிவு செய்வதற்கு உதவுவதேயாகும். அதே நேரத்தில் இந்தப் பொதுத்தேர்வு மட்டுமே மாணவரின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் காரணியில்லை என்ற புரிதல் எமக்கு இருக்கவேண்டும்.

 ஆனால் எமது சமூகம் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றவர்களை அறிவாளிகளாகவும், அவ்வாறு இல்லாதவர்களை உதவாக்கரைகளாகவும் வகைப்படுத்திப் பார்த்துப் பழகிவிட்டது. இவ்வாறான பொதுப் தேர்வுகளில் ஒரே தடவையில் தேர்ச்சி பெற்றால்தான் ஒரு மாணவர் திறமைசாலி, இல்லையெனில் அவர் முட்டாள், அவர் தொடர்ந்தும் கல்வி கற்கத் தகுதியற்றவர், சமூகத்திற்கும் பயனற்றவர் போன்ற கருத்தியல்கள் தமிழர் மனதில் இருந்து முற்றாக அகற்றப்பட வேண்டும். இவ்வாறான சிந்தனையை ஆசிரியர் சமூகமும் கல்விமான்களும் ஊக்கப்படுத்தவும் கூடாது.

 மக்கள் மத்தியில் மாணவர்களின் தனித்துவம், கல்வி கற்கும் திறன் என்பன பற்றிய சரியான புரிதல் ஏற்படுத்தப்பட வேண்டும். மாணவர்கள் ஒவ்வொருவரும் தனித்திறமைகளைக் கொண்டவர்கள். ஆனால் இன்றுவரை உலகின் அனைத்து நாடுகளும் இதனைச் சொல்லிக் கொண்டே மறுபக்கத்தில் அனைத்து மாணவர்களையும் ஒரே வகையான கல்வி முறையையே கற்கவும் ஒரே வகையான மதிப்பீட்டு முறையையே பின்பற்றவும் நிர்ப்பந்தித்துக் கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் நாம் மாணவர்களிடமிருந்து நூறு வீத தேர்ச்சியை எதிர்பார்ப்பதில் என்ன நியாயம் இருக்கிறது?

 இவ்வாறு G.C.E. O/L தேர்வில் நல்ல பெறுபேறுகளை பெறாத எத்தனையோ பேர் வேறு துறைகளில் கால் பதித்து அதில் பெரும் வெற்றி பெற்று வருவதையும் நாங்கள் பார்க்கிறோம். இந்தத் தேர்வில் தேறாவிட்டாலும் மாணவர்கள் வேறு வகையில் கல்வியைத் தொடர்ந்து பட்டப்படிப்பினையும் மேற்கொள்ள முடியும் என்பதுதான் கள யதார்த்தம். இலங்கையில் ஏற்கனவே கடந்த 2017 இல் இருந்து G.C.E. O/L தேர்வில் சித்தி பெறாத மாணவர்களுக்கான மாற்றுவழிகளை அறிமுகப்படுத்தி அந்த கல்விச் செயற்பாடு ஏற்கனவே நடைமுறைக்கு வந்திருப்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

 அதே நேரத்தில் மாணவர்களும் தங்கள் பொறுப்புணர்ந்து செயற்பட வேண்டியதும் அவசியம். பதினைந்து வயதுவரை கட்டாயக் கல்வி உலக நாடுகளில் நடைமுறையில் இருப்பதே ஒவ்வொருவரும் அடிப்படைக் கல்வியைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காகவே ஆகும். பெற்றோரும் தமது பிள்ளைகளுக்கு கல்வி தொடர்பான தகுந்த வழிகாட்டல்களை வழங்கவேண்டும். அதேநேரத்தில் தங்கள் ஆசைகளைப் பிள்ளைகளின்மேல் திணிக்கக் கூடாது. தமது பிள்ளைகள் பருவ வயதில் என்ன செய்கிறார்கள் அவர்களின் ஆர்வம் என்ன என்பதை கண்டறிந்து அவர்கள் சரியான பாதையில் செல்வதை உறுதிப்படுத்த வேண்டும்.


பின்னணித் தகவல்

2020 ஏப்ரல் மாதம் 28ம் திகதி 2019 G.C.E. O/L மாணவர்களின் பெறுபேறுகள் வெளியிடப்பட்டதை தொடர்ந்து பலரும் தமது கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். இவர்களுள் சில கல்விமான்களும் அடங்குகிறார்கள். இருந்தபோதிலும் அவர்களுள் பலரின் ஆதங்கம் வடமாகாணம் தொடர்பானதே. குறிப்பாக யாழ் மாவட்டப் பெறுபேறுகள் வீழ்ச்சியடைந்ததாக இவர்கள் ஆதங்கப்படுவது தெரிகிறது.

எமது மக்கள் பொதுவாகவே சிறந்த பெறுபேறுகளை நியமங்களாக வைத்தே பொதுத்தேர்வு முடிவுகளை ஆராயும் பழக்கம் கொண்டவர்கள். இதனையே எமது நாட்டு ஊடகங்களும் மக்களுக்குப் பழக்கி வந்திருக்கின்றன. பல பாடசாலைகளும் 70  புள்ளிகள் எடுக்கும் மாணவர்களை 90 புள்ளிகள் எடுக்க வைக்க சக்தியைச் செலவிடும் அளவிற்கு, 30  புள்ளிகள் எடுக்கும் மாணவர்களை 50 புள்ளிகள் எடுக்க வைக்கச் செலவிடுவதில்லை. இவ்வாறு போதுமான கவனிப்பும் வழிகாட்டல்களும் கிடைக்காத இந்த மாணவர்கள்தான் பொதுத் தேர்வுகளில் தேர்ச்சி பெறத் தவறிவிடுகிறார்கள். “மாவட்டத்தின் கல்வித்தரம் விழுந்துவிட்டது” என்ற வார்த்தையாடலில் இவர்களே மறைமுகமாகக் குற்றவாளியாக்கப்படுகிறார்கள்.

இவர்கள் சொல்வதெல்லாம் உண்மைதானா? இவர்கள்  அனைத்து தரவுகளையும் கருதவேண்டிய காரணிகளையும் கருத்தில் எடுத்து அதன் அடிப்படையில்தான் பேசுகிறார்களா? அல்லது கடந்த சிலவருடத் தரவுகள் அடிப்படையில் எழுதுகிறார்களா? என்ற கேள்வி எனக்குள் எழுந்தது. நாட்டில் நடைமுறையில் உள்ள கல்விமுறைகள், அண்மையில் ஏற்பட்ட மாற்றங்கள் என்பனவும் கருத்தில் கொள்ளப்படவேண்டும் அல்லவா? அவ்வாறான மாற்றங்களையும் கருத்தில் கொண்டுதான் இவர்களின் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டனவா?

இந்தக் கேள்விகளுக்கு பதில்களைக் கண்டறிவதற்காக, கடந்த கால பதினைந்து வருட தரவுகளை வைத்து மாணவர்களின் பெறுபேறுகளைக் கொண்டு இந்தக் ஆக்கம் எழுதப்படுள்ளது. இது ஒரு முழுமையான புள்ளிவிபர ஆய்வு அறிக்கை இல்லை என்பதை முதலிலேயே அறிவிக்க விரும்புகிறேன். பல தரவுகள் மற்றும் தகவல்கள், இலங்கையில் கல்வித் துறையோடு சம்பந்தப்பட்ட சிலரோடு சரி பார்க்கப்பட்டும் இந்த ஆக்கத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன. இறுதியில் ஒரு சில பரிந்துரைகளும் வழங்கப்பட்டுள்ளன.

இந்த ஆக்கத்தில் தமிழர்கள் செறிந்து வாழும் வடக்கு மற்றும் மற்றும் நுவரேலியா மாவட்ட தரவுகளே விளக்கமாக ஆராயப்பட்டுள்ளன. தேவைப்பட்ட இடங்களில் ஏனைய மாவட்ட, மாகாணத் தரவுகள் ஒப்பீடு செய்வற்குப் பயன்படுத்தப்பட்டுள்ளன. அதேநேரம், மாணவர்களின் பெறுபேறுகள் மொழிவாரியாக ஆராயப்படவில்லை. அதேபோல பாடங்கள் அடிப்படையிலான ஆய்வும் பாலினத்தின் அடிப்படையிலான ஆய்வும் செய்யப்படவில்லை. போதிய தரவுகளைத் திரட்டுவதில் இருந்த சிரமங்கள் காரணமாக வலய மட்ட ஆய்வும் மேற்கொள்ளப்படவில்லை. கோட்ட மட்டத் தகவல்களையும் பகுப்பாய்விற்கு எடுத்துக்கொள்ள முடியவில்லை.

முழுமையான தகவல் ஆய்வு செய்வதில் இருந்த தடைகள்

  1. 2005 – 2007 இலங்கைப் பரீட்சைத் திணைக்கள புள்ளிவிபரக் கையேட்டில் உள்ள 2005, 2006, 2007 ஆண்டுகளுக்கான  புள்ளிவிபரங்களுக்கும் (பக்கம்: 47) 2011 ஆண்டு பெறுபேறுகள் தொடர்பாக நடைபெற்ற National Symposium கையேட்டில் உள்ள 2005, 2006, 2007 ஆண்டுகளுக்கான புள்ளி விபரங்களுக்கும் (பக்கம்: 10) இடையில் பலவேறுபாடுகள் உள்ளன. இவை இரண்டுமே இலங்கைப் பரீட்சைத் திணைக்கள வலைத்தளப் பக்கத்திலேயே இருப்பதைக் காணலாம்.
  2. ஒப்பிட்டுப் பார்ப்பதற்காக 2005 க்கு முன்னரான பெறுபேற்றுத் தரவுகளைப் பெற்றுக் கொள்ள முடியவில்லை. அதனால் தீவிரமான போருக்கு முன்னைய காலப் பெறுபேறுகளோடு ஒப்பீடு செய்ய முடியவில்லை.
  3.  2005 – 2007 வரையான மூன்று வருடங்களுக்கான மாகாண மட்டத்தில் அனைத்துப் பாடங்களிலும் சித்தியடையாதோர் விபரத்தைப் பெறமுடியவில்லை.
  4. ஒவ்வொரு வருடத்திலும் தேர்வுக்குத் தோற்றிய அனைத்துப் பரீட்சார்த்திகளின் பெறுபேறுகளையும் பெறமுடியாமையால் பாடசாலைகளில் இருந்து முதல் தடவை தோற்றியவர்களின் பெறுபேறுகள் மட்டுமே கருத்தில் எடுக்கப்பட்டுள்ளன. 

மாணவர் பெறுபேறுகளின் பகுப்பாய்வு


மாகாணரீதியில் உயர்தரம் கற்கத் தகுதி பெற்றவர்கள்

இலங்கையில் வாழும் தமிழ் பேசுவோரை எடுத்துக் கொண்டால் வடமாகாணத்தில் வாழ்பவர்களில் 90 வீதத்திற்கு அதிகமானவர்கள் தமிழ் பேசுவோர். அதேபோல கிழக்கில் தமிழ் மொழி பேசுபவர்கள் 76 வீதமாகும். மத்திய மாகாணத்தைப் பொறுத்தவரையில் நுவரேலியா மாவட்டத்தில் தமிழ் பேசுவோர் 57 வீதமாக இருந்தபோதிலும், மத்திய மாகாணம் முழுமையாகப் பார்க்கும்போது 30  வீதம் மட்டுமே முஸ்லிம் மற்றும் ஏனைய தமிழர்கள் இருக்கிறார்கள். இவர்களுள் சிலர் சிங்கள மொழிமூலமும் கற்று இருப்பதற்கான சாத்தியமும் உள்ளது.

முதல் பகுதியில் அனைத்து மாகாணங்களும் ஒப்பு நோக்கப்பட்டாலும், தமிழ் மாணவர்கள் தொடர்பாக இந்தப் பகுதியில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணப் பெறுபேறுகள் மட்டுமே விபரமாக ஆராயப்பட்டுள்ளன.   

Table 01: G.C.E. O/L Students qualified for A/L: 2005 to 2019 in all nine Provinces


அட்டவணை 01 இல் 2005 இலிருந்து 2019 வரையான மாகாண மட்ட பெறுபேறுகள் தரப்படுள்ளது. இதன்படி, 2005 இல் தொடங்கி இன்றுவரை அனைத்து மாகாணங்களும் தொடர்ந்து முன்னேறுவதை அவதானிக்கக் கூடியதாகவே இருக்கிறது. 2005இல் நாட்டின் சராசரி தேர்ச்சி வீதம் 49.7 இலிருந்து 2019 வரை, சிறு சிறு ஏற்ற இறக்கங்களோடு அனைத்து மாகாணங்களிலும் வளர்ச்சிப் போக்கையே காட்டுகிறது.

இந்தத் பட்டியல் கடந்த பதினைந்து வருடத்தில் நாட்டின் ஒவ்வொரு மாகாணத்திலும் ஏற்பட்ட பெறுபேறுகளின் மாற்றங்களை காட்டுகிறது. இதில் முக்கியமாக தென் மாகாணம் 2005 இல் மூன்றாவது இடத்தில் இருந்து 2011 இல் இரண்டாவது இடத்துக்கு வந்ததோடு, 2014 இலிருந்து தொடர்ச்சியாக முதலிடத்தைத் தக்க வைத்துள்ளது. மேல் மாகாணம் 2014 இல் இரண்டாம் இடத்துக்கு தள்ளப்பட்டு, கடந்த வருடத்தை தவிர்த்து, தொடர்ந்தும் இரண்டாம் இடத்திலேயே இருக்கிறது.

வடமேல் மாகாணம் 2015, 2016 ஆகிய வருடங்களைத் தவிர்த்து கடந்த பதினைந்து வருடங்களில் தொடர்ந்தும் இரண்டாம் அல்லது மூன்றாம் இடங்களில் இருக்கிறது.

கடந்த பதினைந்து வருடங்களில் வடமாகாணம் 2009 இல் இரண்டாம் இடத்தைப் பெற்றுக் கொண்டது. ஆனால் 2011, 2012 ஆகிய வருடங்களிலும் பின்னர் 2014 இலிருந்து தொடர்ச்சியாக 2019 வரையும் ஒன்பதாவது இடத்திலேயே இருக்கிறது. இதேபோல கிழக்கு மாகாணமும் சில வருடங்களில் ஆறாம் இடத்திற்கு வந்தபோதும் பெரும்பாலும் அட்டவணையில் தொடர்ந்தும் ஏழாவது அல்லது எட்டாவது இடத்திலேயே இருக்கிறது.

கடந்த பதினைந்து வருடங்களில் இலங்கையில் அனைத்து மாவட்டங்களினதும் பெறுபேறுகளில் தொடர்ச்சியான முன்னேற்றம் அவதானிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் இது ஒரு சீரான வளர்ச்சிப்போக்கைக் காட்டவில்லை. அனைத்து மாவட்டங்களிலும் இந்த ஏற்ற இறக்கங்கள் காணப்படுகின்றன. 2005 இல் முழு இலங்கையினதும் சராசரி தேர்ச்சி வீதம் (உயர்தரம் கற்கத் தகுதி பெற்றோர்) 46.6 % ஆக இருந்துள்ளது. இந்த சராசரி அடுத்த ஐந்து வருடங்களில் 52.5% ஆக அதிகரித்து, அடுத்த ஐந்து வருடங்களில் 69% ஆகவும் அடுத்த ஐந்து வருடங்களில் 73.8% ஆகவும் அதிகரித்துள்ளது.

இதற்கு முன்னைய காலப்பகுதியில் 1997 இலிருந்து 2001 வரையான பெறுபேறுகள் (சராசரி தேர்ச்சி வீதம்) இதைவிடவும் குறைவாகவே இருந்துள்ளன. அந்த தரவுகள் கீழே Table 02 இல் தரப்பட்டுள்ளன.

குறிப்பு: 2001 – 2004 வரையான புள்ளிவிபரங்களைப் பெற்றுக் கொள்ள முடியவில்லை.

இந்தத் தரவுகளைப் பார்க்கும்போது தொடர்ச்சியாக இலங்கை முழுவதும் மாணவர்கள் உயர்தரம் கற்கத் தகுதி பெறும் வீதம் அதிகரித்து வருவதையே அவதானிக்க முடிகிறது.


Table 02: G.C.E. O/L Students sat for exam and percentage qualified for A/L

1997 இல் 32.78 வீதமாக இருந்த உயர்தரக் கல்விக்கு தகுதி பெறும் வீதம் கடந்த ஆண்டுவரை அதிகரித்து 73.84 வீதமாகி உள்ளது. 1997 இலிருந்து 2001 வரையான காலப்பகுதியில் நாட்டில் நிலவிய போர்ச் சூழல், தெற்குப் பகுதியிலும் காணப்பட்ட பதட்டமான சூழல் போன்றவை குறைந்த பெருபேற்றிற்கு காரணமாக இருந்திருக்கலாம்.  

 

Graph 01: G.C.E. O/L Students qualified for A/L from North & Eastern Province: 2005 to 2019 (in %)


Graph 01 இல் கடந்த பதினைந்து வருடங்களில் வடக்கு மாகாணம், கிழக்கு மாகாணத்தின் பெறுபேறுகள் நாட்டின் சராசரி பெறுபேற்றுடன் ஒப்பிடப்பட்டுள்ளது. வடக்கு மாகாணத்துடன் ஒப்பிடும்போது கிழக்கு மாகாணம் பொதுவாக வடமாகாணத்தின் பெறுபேறுகளுக்கு சமனாக அல்லது அதிகமான பெறுபேறுகளைப் பெற்றுள்ளது.

வடமாகாணம் 2006, 2007 மற்றும் 2009 ஆகிய வருடங்களில் தேசிய சராசரியைவிடக் கூடுதலான சராசரியைப் பெற்றுள்ளமை இங்கு குறிப்பிடத்தது. ஏனைய காலப்பகுதியில் தேசிய சராசரியைவிட குறைவான பெறுபேறுகளையே வடமாகாணம் பெற்று வந்துள்ளது. கிழக்கு மாகாணம் தொடர்ந்தும் தேசிய சராசரியைவிட குறைவாகவே பெற்று வந்துள்ளது. வடக்கு, கிழக்கு தவிர்த்து தமிழர்கள் செறிந்து வாழும் இன்னொரு மாகாணமான மத்திய மாகாணம் 2007ம் ஆண்டு தவிர்த்து ஏனைய அனைத்து வருடங்களிலும் தேசிய சராசரியைவிட குறைவான பெறுபேறுகளையே பெற்று வந்துள்ளது. அனைத்து மாகாணங்களின் பெறுபேறுகள்  புள்ளிவிபரம் Appendix 1 இல் சட்ட வரைபடமாக இணைக்கப்பட்டுள்ளது.


மாகாண மட்டத்தில் அனைத்து பாடங்களிலும் சித்தி பெறாதவர்

கடந்த பதினைந்து வருடங்களில் இலங்கையின் ஒன்பது மாகாணங்களிலும் அனைத்து பாடங்களிலும் சித்தி பெறாதவர்கள் சதவீதம் Graph 02 இல் தரப்பட்டுள்ளது.

Graph 02: Students failed in all subjects in G.C.E. O/L: 2005 to 2019 – Provincial average

இலங்கையில் 2008, 2009 ஆகிய வருடங்களில் அதிகமான வீதமானோர் அனைத்துப் பாடங்களிலும் சித்தி பெறவில்லை. அதிலும் வடமத்திய மாகாணம் (9.9%)  மற்றும் ஊவா மாகாணங்களில் ( 10.6%)  அதிக சதவீதமானோர் எந்த ஒரு பாடத்திலும் சித்தி பெறவில்லை. அந்த இரண்டு ஆண்டுகளிலும் வடமாகாணம் ஒப்பீட்டளவில் குறைந்த வீதமான சித்தியடையாதோர் எண்ணிக்கையையே (3.5%)  பெற்றிருந்தது. இந்த வருடப் பகுதியில்தான் வடக்கு மாகாணம் கடுமையான இறுதி யுத்தத்திற்கு முகம் கொடுத்திருந்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது.

திரும்பவும் 2011, 2012 ஆகிய வருடங்களிலும் வடமாகாணம் குறைவான சித்தியடையாதோர் வீதத்தைப் பெற்றிருந்தது. கிழக்கு மாகாணத்தைப் பொறுத்தவரையில் 2013, 2014 ஆகிய வருடங்களில் மிகக் குறைந்த வீதமான சித்தியடையாதோர் வீதத்தை பெற்றிருந்தது.

ஆனால் 2015, 2016, 2017, 2018 ஆகிய வருடங்களில் வட மாகாணமே அனைத்து மாகாணங்களையும் விட அதிகமாக அனைத்துப் பாடங்களிலும் சித்தியடையாதோர் வீதத்தைப் பெற்று இருந்தது. இந்தவருடம் (2019) வடமாகாணத்தில் சிறிது முன்னேற்றம் இருந்தாலும் ஏனைய மாகாணங்களை விட சிறப்பான மாற்றமாக இல்லை.

மாகாண மட்டத்தில் 2005ம் ஆண்டு மாகாணப் பெறுபேற்று வீதங்களை அடிப்படையாகக் கொண்டு பார்க்கும்போது, கடந்த பதினைந்து வருடத்தில் ஊவா, வடமத்திய, தெற்கு மற்றும் சபரகமுவ மாகாணங்கள் முறையே 29%, 29%, 28%, 28%  வளர்ச்சியைக் காட்டுகின்றன. கிழக்கு, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்கள் முறையே 24%, 24%, 25% முன்னேற்றத்தைப் பெற்றுள்ளன. வடமாகாணத்தில் 18% முன்னேற்றத்தையும் மேல் மாகாணத்தில் 18% முன்னேற்றத்தையும் அவதானிக்க முடிகிறது. அதாவது, வடமாகாணம் மற்றும் மேல்மாகாணத்தின் வளர்ச்சி வேகம் ஒப்பீட்டளவில் மெதுவானதாக இருக்கிறது.

மாவட்டரீதியாக உயர்தரம் கற்கத் தகுதி பெற்றவர்கள்

இந்தப் பகுதியில் வடக்கு, கிழக்கில் உள்ள மாவட்டங்களையும் அதனுடன் தமிழர்கள் செறிந்து வாழும் நுவரேலியா மாவட்டத்தையும் சேர்த்து ஆராயப்பட்டுள்ளது. ஏனைய மாவட்டங்களை இந்த பகுதியில் விரிவாக விவாதிக்கவில்லை.

தமிழ் மாணவர்கள் செறிந்து வாழும் வடக்கு, கிழக்கு மற்றும் நுவரேலியா மாவட்டங்களின் பெறுபேறுகளும் 2005 இலிருந்து ஏனைய மாவட்டங்களைப் போலவே அதிகரித்த வளர்ச்சிப் போக்கினைக் கொண்டிருக்கின்றன. ஆனால் யுத்தம் காரணமாக முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்கள் மட்டும் மிகவும் விதிவிலக்கான வீதத்தில் 2009இல் வீழ்ச்சிக்கு உள்ளாகி பின்னர் முன்னேறி வருவதையும் அவதானிக்கலாம். (Graph 03 இனைப் பார்க்கவும்).

வழமைக்கு மாறாக 2009 ஆம் ஆண்டு முல்லைத்தீவில் இருந்து வெறும் 96 மாணவர்களும் (வழமையான மாணவர்களின் 7% மட்டுமே), கிளிநொச்சியிலிருந்து 49 மாணவர்களும் (வழமையான மாணவர்களின் 3% மட்டுமே) பரீட்சைக்குத் தோற்றியமை குறிப்பிடத்தக்கது. இலங்கை வரலாற்றிலேயே ஒரு மாவட்டத்தில் இருந்து மிகக் குறைந்த எண்ணிக்கையிலான மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றியது இந்த வருடத்திலேதான் என்று நினைக்கிறேன்.

Graph 03: Students qualified for A/L from North, East & N’Eliya Districts - 2005 to 2019 (in %)

கடந்த பதினைந்து வருடத்தில் நாட்டில் போர் தீவிரமாக இருந்த நிலையில்கூட வவுனியா, மன்னார், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்கள் மற்றைய மாவட்டங்களோடு ஒப்பிடும்போது நல்ல பெறுபேறுகளையே பெற்று வந்துள்ளது. அதிலும் வவுனியா மற்றும் யாழ் மாவட்டங்கள் முதல் ஆறு இடங்களுக்குள் இருந்து வந்துள்ளன. அதிலும் வவுனியா மாவட்டம் 2006 – 2009 வரையான காலப்பகுதியில் முழு இலங்கையிலும் இரண்டாவதாக வந்தது. இருப்பினும் 2014 க்குப் பின்னர் வவுனியாவின் பெறுபேறுகளில் கொஞ்சம் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. தேர்ச்சி வீதமும் தேசிய சராசரியைவிடக் குறைவடைந்துள்ளது. (See Appendix 4)

இருப்பினும் 2014 ஆண்டின் பின்னர் மன்னார் மற்றும் அம்பாறை மாவட்டங்கள் மட்டுமே முதல் பத்து இடங்களுக்குள் வந்துள்ளன. 2019 இலும் மன்னாரும் அம்பாறையும் முதல் பத்து இடங்களுக்குள் வந்துள்ளன. தமிழர்கள் வாழும் ஏனைய ஏழு மாவட்டங்களும் இம்முறை கடைசி எட்டு இடங்களுக்குள்ளேயே வந்துள்ளன.

மன்னார் மாவட்டத்தைப் பொறுத்தவரையில் தொடர்ச்சியாக நல்ல பெறுபேறுகளைப் பெற்று வந்துள்ளது. தேசிய சராசரி வீதத்தை ஒட்டியதாகவே மன்னார் மாவட்டப் பெறுபேற்று வீதம் உள்ளது. இம்முறை தேசிய அளவில் மன்னார் ஏழாவது இடத்தில் உள்ளது.

யாழ் மாவட்டப் பெறுபேறுகள் 2010 வரை தேசிய சராசரியைவிடக் கூடுதலாக இருந்துள்ளது. இந்தக் காலப்பகுதியில் யாழ்மாவட்டம் முதல் பத்து இடங்களுக்குள் இருந்திருக்கிறது. அதன்பின்னர் 2013 நீங்கலாக தேசிய சராசரியை விடவும் குறைவான சராசரியையே தொடர்ந்து பெற்று வந்துள்ளது.

கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்கள் தொடர்ச்சியாகவே குறைவான பெறுபேறுகளைப் பெற்று வந்திருக்கின்றன. தேசிய சராசரி தேர்ச்சி வீதத்திற்கும் இந்த இரு மாவட்டங்களின் சராசரி தேர்ச்சி வீதங்களுக்கும் இடையில் ஏனைய மாவட்டங்களுடன் ஒப்பிடும்போது பெரிய இடைவெளி காணப்படுகிறது. இறுதிக்கட்டப் போரின் தாக்கம் 2008, 2009 ஆகிய வருடங்களின் பரீட்சைப் பெறுபேறுகளில் தெளிவாகவே தெரிகிறது. 2009 இல் தேர்ச்சி வீதம் 16%, 18% மட்டுமே என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. ஆனால் போரின் பின்னரான வளர்ச்சி வீதம் இந்த இரு மாவட்டங்களிலும் 2005 இல் இருந்த நிலையுடன் ஒப்பிடும்போது  சிறப்பானதாகவே இருக்கிறது.

திருகோணமலை மாவட்டமும் 2005 இலிருந்து 2019 வரை தேர்ச்சி வீதத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை காட்டி வருகிறது. ஆனால் அதன் பெறுபேறுகள் தேசிய மட்ட சராசரி வீதத்திலும் குறைவாகவே இருந்திருப்பதை அவதானிக்க முடிந்தது. தேசிய மட்டத்தில் பார்த்தால் இந்த மாவட்டம் கடைசி ஆறு இடங்களுக்குள்ளேயே வந்துள்ளது. கடந்த ஆறு வருடங்களாக கடைசி மூன்று இடங்களுக்குள்ளேயே வந்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

அம்பாறை மாவட்டம் தொடர்ந்தும் தேசிய மட்ட சராசரி பெறுபேறுகளோடு ஒத்த பெறுபேறுகளையே பெற்று வந்துள்ளது. இவற்றுள் திருகோணமலையும் அம்பாறையும் மூவின மக்கள் வாழும் மாவட்டங்கள் ஆகும். மட்டக்களப்பு மாவட்டம் 2005 – 2007 காலப் பகுதியில் ஒப்பீட்டளவில் நல்ல பெறுபேறுகளைப் பெற்றுள்ளது. அதன்பிறகு மாவட்ட அடிப்படையில் கொஞ்சம் பின்னடைவு ஏற்பட்டு திரும்பவும் 2012 – 2013 காலப்பகுதியில் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அதன்பின்னர் திரும்பவும் பின்னடைவு ஏற்பட்டுள்ளதைத் தரவுகள் காட்டுகின்றன.

நுவரெலியா மாவட்டமும் 2005 இலிருந்து சராசரி வளர்ச்சிப் போக்கினைக் காட்டுகிறது. இருப்பினும் தேசிய மட்ட தேர்ச்சி சராசரியைவிடவும் பத்து சதவீதம் குறைவான வீதமே உயர்தரம் கற்கத் தகுதி பெறுகிறார்கள். கடந்த ஐந்து வருடங்களில் தமிழர்கள் வாழும் மாவட்டங்களின் பெறுபேற்று வீதங்கள் Appendix 05 இல் தரப்பட்டுள்ளது.

ஏனைய மாவட்டங்களின் பெறுபேறுகளைப் பார்க்கும்போது 2015 வரை முதலிடத்தில் இருந்த கொழும்பு இரண்டாம் மூன்றாம் இடங்களுக்குத் தள்ளப்பட்டு கடந்த வருடமும்  மூன்றாம் இடத்திலேயே இருக்கிறது. கடந்த இரண்டு வருடங்களைப் போலவே அம்பாந்தோட்டையும் மாத்தறையும் முதலிரண்டு இடங்களைப் பிடித்துள்ளன. ஏனைய மாவட்டங்கள் சிறு சிறு ஏற்ற இறக்கங்களைக் காட்டுகின்றன (Appendix 06).

தமிழர்கள் செறிந்து வாழும் ஒன்பது மாவட்டங்களின் பெறுபேறுகளை 2005 ஆண்டின் பெறுபேறுகளை அடிப்படை அளவீடாகக் கொண்டு ஒப்பிடும்போது கிளிநொச்சி மற்றும் நுவரெலியா மாவட்டங்கள் சிறந்த வளர்ச்சிப் போக்கினை (முறையே 31%, 30%) காட்டுகின்றன. இவற்றுக்கு அடுத்த நிலையில் முல்லைத்தீவு, அம்பாறை, மன்னார் மாவட்டங்கள் முறையே 28%, 27%, 26% முன்னேற்றத்தைக் கொண்டிருகின்றன. திருகோணமலை 23 வீத வளர்ச்சியையும் மட்டக்களப்பு 21 வீத வளர்ச்சியையும் காட்டுகின்றன. யாழ் மாவட்டம் குறைந்த பெறுபேறாக 18 வீத முன்னேற்றத்தையும் வவுனியா மாவட்டம் மிகக் குறைந்த பெறுபேறாக 15 வீத வளர்ச்சியையும் மட்டுமே காட்டுகின்றன.

மாவட்ட மட்டத்தில் அனைத்து பாடங்களிலும் சித்தி பெறாதவர்

எந்த ஒரு பாடத்திலும் சித்தியடையாதோர் வீதத்தைப் பார்ப்போமானால் தமிழர்கள் செறிந்து வாழும் மாவட்டங்களில் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் கூடிய வீதமான மாணவர்கள் அனைத்துப் பாடங்களிலும் சித்தியடையத் தவறியுள்ளமையை அவதானிக்க முடிகிறது (Chart 04).

முல்லைத்தீவு மாவட்டத்தில் இந்த சதவீதம் போர் நடைபெற்ற காலத்தில் அதிகரித்து காணப்பட்டுள்ளது (2008 – 15.4%, 2009 – 10.1% & 2010 – 16.5%). அதன்பின்னர் முன்னேற்றம் ஏற்பட்டபோதும் தேசிய சராசரி வீதத்தை விடவும் கூடவாகவே இருக்கிறது. 2006, 2007 ஆகிய வருடங்களில் சித்தியடையாதோர் வீதம் தேசிய சராசரியைவிட முல்லைத்தீவில் குறைவாகக் காணப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.

Graph 04: Students failed in all subjects: North, East & N’Eliya Districts - 2005 to 2019 (in %)


கிளிநொச்சி மாவட்டமும் 2007 வரை குறைந்த சித்தியடையாதோர் வீதத்தைக் கொண்டிருந்தாலும் போரின் பின்னரான காலப்பகுதியில் சிறந்த பெறுபேறுகளைக் கொண்டிருக்கவில்லை. 2009 இல் 14.3% வீதமாக அதிகரித்துக் காணப்பட்ட தேர்ச்சியடையாதோர் வீதம் அதன் பின்னர் கொஞ்சம் முன்னேற்றத்தைக் காட்டியபோதும் 2015 இல் மீண்டும் 8.6% ஆக அதிகரித்து 2016 இலும் 8.1% வீதமாகவே இருந்துள்ளது. அதன்பின்னர் கொஞ்சம் முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது.

மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்கள் தொடர்ச்சியாகவே நாட்டின் சராசரியை விடக் குறைவான சித்தியடையாதோர் வீதங்களையே பெற்று வந்துள்ளன. தமிழ் பேசுவோர் அதிகம் வாழும் மாவட்டங்களுக்குள் இந்த இரண்டு மாவட்டங்களே சராசரியாக மிகக் குறைந்த சித்தியடையாதோர் வீதத்தைக் கொண்டிருக்கின்றன. (Mannar – 1.04% and Vavuniya 1.6%).

நுவரேலியா மாவட்டம் 2005 -  2007 காலப் பகுதியில் தேசிய சராசரியைவிட அதிகமான சித்தியடையாதோர் வீதத்தைக் கொண்டிருந்தாலும் அதன் பின்னர் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.


பாடசாலை இடைவிலகல்

கடந்த வருட பெறுபேறுகளைப் பற்றி விமர்சிப்பவர்கள் பலரும் பேசாது விட்ட ஒரு விடயம்தான் இடைவிலகல். பாடசாலை இடைவிலகல் என்பது இலங்கை முழுவதும் உள்ள பொதுவான பிரச்சனையாகும். இலங்கையின் கல்விக் கொள்கையின்படி மாணவர்கள் பாடசாலையில் இலவசக் கல்வி பெறுகிறார்கள். அத்துடன் பதினைந்து வயதுவரை ஒரு பிள்ளை கட்டாயம் பாடசாலைக் கல்வி பெறவேண்டும். ஆனால் இலங்கையில் இன்றுவரை பாடசாலை இடைவிலகல் அதிகமாகவே உள்ளது.

Table 03 இல் காட்டியுள்ளபடி கடந்த ஆறு வருடங்களில் ஐந்தாம் வகுப்பு பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்கள் அனைவருமே உரிய காலத்தில் G.C.E. O/L பரீட்சை எழுதவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. இந்த எண்ணிக்கை வித்தியாசம் ஆகக் குறைந்த எண்ணிக்கை 14,137 ஆக, 2018 இலும் ஆகக் கூடிய வித்தியாசம் 18,965 ஆக, 2015 இலும் பதிவாகி உள்ளது. நோய்கள் அல்லது வேறு காரணங்களால் இவர்களுள் சிலர் இறந்திருந்தாலும், சிலர் வேறு காரணங்களால் உரிய வருடத்தில் பரீட்சை எடுக்காது விட்டிருந்தாலும், அந்த எண்ணிக்கைகள் புறக்கணிக்கத்தக்கது என்றே நம்புகிறேன். எனவே இவர்களில் பெரும் எண்ணிக்கையானவர்கள் பாடசாலையிலிருந்து இடை விலகியவர்களாகவே இருக்கவேண்டும்.

இந்தத் தரவுகளின் அடிப்படையில் இலங்கை முழுவதுமாக கடந்த ஆறு வருடங்களில் ஒரு இலட்சம் மாணவர்கள் G.C.E. O/L பரீட்சைக்குத் தோற்றவில்லை. அவர்களை இடைவிலகியவர்களாகவே கருதமுடியும்.

2013 இல் ஐந்தாம் வகுப்பு புலமைப் பரிசில் போட்டியில் தோற்றியவர்களில் கடந்த வருடம் G.C.E. O/L எழுதியிருக்க வேண்டியவர்களுள் வடக்கு, கிழக்கில் 4500 பிள்ளைகளும் நாடளாவிய ரீதியில் 17,000 பேரும் கடந்த ஆண்டு G.C.E. O/L பரீட்சை எழுதவில்லை (Table 04). இவர்களை இடைவிலகியவர்களாகக் கருதினால் இது அதற்கு முன்னைய வருட எண்ணிக்கையைவிட 3000 அதிகம் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.


 கடந்த வருட தரவுகளைப் பார்க்கும்போது 2013 இலே ஆண்டு ஐந்துப் புலமைப் பரிசில் பரீட்சை எடுத்தவர்களில் 87% மாணவர்களே கடந்த வருடம் G.C.E. O/L தேர்வுக்குத் தோற்றியிருக்கிறார்கள். மாகாண அடிப்படையில் கிழக்கு மாகாணத்திலேதான் எண்ணிக்கையிலும் சதவீதத்திலும் அதிகமான இடைவிலகல் இருப்பதாகக் தெரிகிறது. வடமாகாணத்தின் இடைவிலகல் எண்ணிக்கை குறைவாக இருந்தபோதிலும் சதவீத அடிப்படையில் அதிகமானதாகவே இருக்கிறது. மேல் மாகாணம் குறைந்த சதவீதமான 2.1% வீதத்தைக் கொண்டிருக்கிறது.


வடமாகாணப் பெறுபேறுகளில் தாக்கம் செலுத்தும் சமூகக் காரணிகள்

(இந்தப் பகுதியில் இலங்கையின் வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தில் உள்ள சமூகச் செயற்பாட்டாளர்களுடன் கலந்துரையாடி பெற்ற தகவல்கள் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது).

மாணவர்களின் பெறுபேறுகளை மட்டும் வைத்துக்கொண்டு அதற்கான காரணங்களை துல்லியமாக சொல்லுவது சாத்தியமில்லை. மாணவர்களின் கல்வித்திறன் மற்றும் பெறுபேறுகள் பல்வேறு சூழல் காரணிகளால் பாதிக்கப்படலாம். அதைத்தவிர ஒவ்வொரு வருடமும் வெவ்வேறு மாணவர்களின் பெறுபேறுகளையே நாம் கருத்தில் எடுத்துக் கொள்கிறோம். அதனால் ஆளிடை வேறுபாடுகள் பெறுபேற்று வீதத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.


ஆசிரியர்கள், அதிபர்கள், நிர்வாகிகளின் பங்கு

ஒரு பாடசாலையில் காணப்படும் வளங்களும் பணியாற்றும் ஆசிரியர்களின் பங்களிப்பும் மாணவர் கல்வியில் செல்வாக்குச் செலுத்தும் முக்கிய காரணிகளாக இருக்கின்றன. வளங்கள் சரியானமுறையில் பகிரப்படுவதில்லை என்பது ஒரு முக்கியமான குற்றச்சாட்டு. பாடசாலை அதிபர் நியமனங்களிலும் தனிநபர் செல்வாக்கும் அரசியல் தலையீடுகளும் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

பல ஆசிரியர்கள் பின்தங்கிய பிரதேசத்தில் நியமனம் கிடைத்தாலும்  எப்படியாவது இடமாற்றம் பெற்றுச் சென்று விடுகிறார்கள். இதனால் ஆசிரியர் வெற்றிடம் நிரப்பப்படாது பல பின்தங்கிய பிரதேசப் பாடசாலைகள் நாடெங்கும் உள்ளன. இந்த நிலையில் அந்தப் பாடசாலை மாணவர்கள் எவ்வாறு நல்ல பெறுபேறுகளைப் பெறமுடியும்.

தீவகப் பாடசாலைகளின் பெறுபெறுகள் மிக மோசமாக உள்ளதென்று சிலர் சுட்டிக்காட்டி இருந்தனர். இதன் காரணம் நிச்சயம் கண்டறியப்படவேண்டும். திரட்டப்பட தகவலின்படி, யாழ் மாவட்டத்தில் தண்டனை இடமாற்றம் செய்யப்படுவோர் தீவகத்துக்கு அனுப்படுவதாகச் சொல்லப்படுகிறது. அவ்வாறு இடமாற்றம் பெறும் ஒருவர் எப்படி அந்தப் பிரதேச மாணவர்களின் முன்னேற்றத்திற்காகப் பாடுபடுவார்? கல்வித் திணைக்களத்தில் அதிகாரத்தில் உள்ள ஒரு சிலரே இவ்வாறு செயற்படுவதாகவும் சொல்லப்படுகிறது.

ஆசிரியர்களால் மாணவர்கள் கடுமையாகத் தாக்கப்படல், சிறு தவறுக்கும் தண்டிக்கப்படுதல், ஏனைய மாணவர்கள் முன்னிலையில் அவமானப்படுத்தப்படல், மாணவர்களிடையே பாரபட்சம் பார்த்தல் போன்றனவும் மாணவர்களின் கல்விச் செயற்பாட்டில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பது கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். 


பெற்றோர், சமூகத்தின் பங்கு

இதே நேரத்தில் வடக்குக் கிழக்கில் உள்ள பெற்றோரும் மாணவரும் கல்விச் செயற்பாடுகளில் அக்கறையற்றவர்களாக இருப்பதாகச் சொல்லப்படுகிறது. சிலருடன் கலந்துரையாடியதில் இதிலும் ஓரளவுக்கு உண்மையிருப்பதாகவே தெரிகிறது. குறிப்பாக வெளிநாட்டிலிருந்து தொடர்ந்து பணம் பெற்றுக்கொள்ளும் குடும்பங்களில் பல இவ்வாறே இருப்பதாகச் சொல்லப்படுகிறது. இது உண்மையெனில் அவ்வாறான குடும்பங்களுக்கு தேவைக்கதிகமாக பணம் அனுப்பும் புலம்பெயர் சொந்தங்களே பொறுப்புக் கூறவேண்டியவர்கள் ஆகிறார்கள்.

பல பெற்றோர் தமது பிள்ளைகளை ஐந்தாம் வகுப்பு புலமை பரிசில் பரீட்சைக்குத் தயார் செய்வதற்காக கடும் அழுத்தங்களைப் பிரயோகித்து பகீரதப் பிரயத்தனம் செய்கிறார்கள். ஆனால் அதன் பின்னர் பல பெற்றோர் பிள்ளைகளின் படிப்பில் தொடர்ந்தும் கவனம் செலுத்துவதில்லை என்று சொல்லப்படுகிறது. அதீத அழுத்தம் காரணமாக பிள்ளைகளும் ஆறாம் வகுப்பிலிருந்து படிப்பில் அக்கறை குறைந்தவர்களாக மாறிவிடுவதாகவும் கூறப்படுகிறது.

பாடசாலை சார்ந்த சமூக ஆர்வலர்கள் பின்தங்கிய நிலையில் இருக்கக்கூடிய மாணவர்களுக்கு பாடசாலை கட்டடத்திலேயே இலவசமாக மாலை வகுப்புகள் நடத்தி உதவ முற்பட்டாலும் அதனை உள்ளூரில் இயங்கும் தனியார் கல்வி நிறுவனங்கள் எப்படியாவது குழப்பிவிடுவதாகவும் சொல்கிறார்கள். இவ்வாறான செயற்பாடுகளை பின்தங்கிய பிரதேசங்களிலும் அவதானித்திருக்கிறார்கள்.

அதே நேரத்தில் தமிழர்கள் வாழும் பிரதேசங்களில் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும், புலம்பெயர் தமிழர்களால் பல இடங்களில் மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்கு வேண்டிய உதவிகள் வழங்கப்பட்டு வருவதும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும். அவர்களின் பங்களிப்பினால் பல இடங்களில் மாணவர்கள் G.C.E. O/L தேர்வில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டிருப்பதாக கூறுகிறார்கள். உள்ளூரில் உள்ள சமூக அமைப்புகளும் தம்மால் முடிந்த வகையில் உதவ முன்வருகிறார்கள் என்பதை அறிய முடிகிறது.

உளவியல் தாக்கங்கள்

இன்னொரு பக்கம் அளவுக்கதிகமாக பொழுதுபோக்கு விடயங்களில் ஈடுபடுதல்,மதுபாவனை, குழு வன்முறைகளில் ஈடுபடுதல், திரைப்பட மோகம் என்பற்றைக் காரணமாகச் சொல்கிறார்கள். இதிலும் உண்மை இல்லாமல் இல்லை என்று தெரிகிறது. ஆனால் இந்த விடயத்தை நாம் கொஞ்சம் ஆழமாகப் பார்க்க வேண்டியுள்ளது.

வடக்கு கிழக்கு மாகாணங்களைப் பொறுத்தவரை நீண்டகாலம் போர்சூழலில் வாழ்ந்து வந்தவர்கள் என்பது அனைவரும் அறிந்ததே. இதனால் பல மாணவர்கள் தொடர்ச்சியாக இடப்பெயர்வுக்குள்ளானார்கள். குடும்பங்களில் உயிரிழப்புகளைச் சந்தித்தார்கள். அவயவங்களை இழந்து, குடும்பத்தில் முக்கியமான உறுப்பினர் காணாமல் ஆக்கப்பட்டு எனப் பல துன்பம், துயரங்களுக்கு உள்ளாக்கப்பட்டார்கள். இப்போது இலங்கையின் வடக்கு கிழக்கில் வசிப்போரில் பெரும்பாலானோர் கடந்த 30 வருடங்களில் இடம்பெற்ற போருடன் இணைந்த வன்முறைக்கு முகம் கொடுத்தவர்களே.

வன்முறைக்கு தொடர்ந்தும் முகம் கொடுத்தவர்கள் அதனால் ஏற்படக்கூடிய உளவியல் தாக்கத்திலிருந்து வெளிவருவது அவ்வளவு சுலபமல்ல. இவ்வாறான தாகத்துக்கு உள்ளானவர்கள் தகுந்த உளவள ஆலோசனை கிடைக்காவிட்டால் அதன் தாக்கம் நீண்ட காலம் இருக்கக் கூடும். பாதிக்கப்பட்டவர்கள் அதனால் ஏற்பட்ட பாதிப்பிலிருந்து உளவியல்ரீதியாக தப்புவதற்காக இவ்வாறான வழிமுறைகளை நாடி அதன்பின்னர் அவ்வாறான பழக்கங்களுக்கு அடிமைகளாகவே மாறிவிடுவதும் உண்டு.

இந்த சூழ்நிலை வடக்கு, கிழக்கில் உள்ள பல பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் இருக்கக்கூடும். இவர்களில் எத்தனைபேருக்கு உளவள ஆலோசனை கிடைத்தது என்பது முக்கியமான கேள்வியாகும். தொடர்ச்சியான வன்முறைக்கு உள்ளான சமூகம் ஒரு கட்டத்தில் வன்முறையை வாழ்கையின் ஒரு பகுதியாக ஏற்றுக் கொள்ளவதோடு வன்முறையை கையில் எடுக்கவும் பழகிவிடும் என்பதையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும். குடும்ப வன்முறைகள், சமூகத்தில் இடம்பெறும் பாலியல் வன்முறைகள், பாலியல் சுரண்டல்கள் போன்றனவும் பல இளையவர்களின் கல்விச் செயற்பாட்டில் பெரும்தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.


மாணவர்களுக்கான மாற்று வழிகள்

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் சித்திபெறாத மாணவர்கள் கல்வியைத் தொடர்வதற்காக “உத்தரவாதப்படுத்தப்பட்ட கல்வி நிகழ்ச்சித் திட்டம்” 2017ம் ஆண்டு இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்டு, 2018 ஆண்டிலிருந்து நடைமுறையில் இருக்கிறது. இதற்கு முன்னரே இலங்கையில் இவ்வாறான மாணவர்களுக்கு தொழிற் தகமைகளைப் பெற்றுக் கொடுப்பதற்கான தொழிற்பயிற்சி நிலையங்கள் செயற்பட்டு வருவதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட இத் திட்டத்தின்கீழ் ஒவ்வொரு கோட்டத்திற்கும் ஒரு பாடசாலை தெரிவு செய்யப்பட்டு அந்தப் பிரதேசத்தில் G.C.E. O/L தேர்வில் சித்திபெறாத மாணவர்களுக்கு விசேடமாகக் கற்பிக்கப்படுகிறது. இத் திட்டத்தின்கீழ் முதல் வருடத்தில் பொதுவான பாடங்களே கற்பிக்கப்படுகின்றன. இரண்டாவது வருடம் மாணவர் தாம் விரும்பும் தொழில்சார் படிப்பை மேற்கொள்ள முடியும். 

இதில் சில சவால்கள் உள்ளன. ஒன்று நன்கு பயிற்றப்பட்ட ஆசிரியர்களின் தேவை. தற்போதைய தரவுகளின்படி அனைத்து நிலையங்களுக்கும் போதுமான பயிற்றப்பட்ட ஆசிரியர்கள் இல்லையென்று தெரிகிறது. இந்தத் தேவை பூர்த்தி செய்யப்பட வேண்டும். இரண்டாவது உண்மையிலேயே மாணவர்களுக்கான சவால். மாணவர்கள் இரண்டாவது வருடத்தில் தாம் தெரிவு செய்யும் துறையைப் பொறுத்து சொந்த மாவட்டத்தை விட்டு வெளியே சென்று தங்கியிருந்து அதற்குரிய தொழிற் பயிற்சி நிலையங்களில் படிக்க வேண்டிய நிலை ஏற்படும். உதாரணமாக மாணிக்கக்கல் வெட்டும் படிப்பைத் தெரிவு செய்யும் யாழ் மாவட்ட மாணவர் ஒருவர் இதற்காக அனுராதபுரம் சென்று தங்கியிருந்து ஒருவருடம் படிக்க வேண்டும். இதற்கு போக்குவரத்து, தங்குமிடம், உணவுக்காக மாணவர்கள் பெரும் பணத்தைச் செலவு செய்ய நேரிடும்.   

இந்தப் பிரச்னைக்கு சில சமூக சேவை நிறுவனங்கள் கைகொடுக்க முன்வந்துள்ளன. ஆனால் அவர்களால் உதவி தேவைப்படும் அனைத்து மாணவர்களுக்கும் உதவ முடியாது என்பதுதான் கசப்பான உண்மை. இந்த இடைவெளியை புலம்பெயர் சமூகம் தம் உதவிகள் மூலம் நிரப்பமுடியும். இதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் அல்லது கல்வி வலயத்திலும் சமூக ஆர்வலர்கள் சேர்ந்து கல்வி நிதியங்களை உருவாக்கி நேர்மையாக செயற்பட்டால் உதவி செய்ய பல புலம்பெயர் தமிழர்கள் தாமாகவே முன்வருவார்கள்.


நடைமுறையில் உள்ள கல்விக்கான வழிகாட்டல்கள்

தற்போது இலங்கையில் மாணவர்களுக்கு எதிர்காலத்தைத் தீர்மானிப்பதற்கு உதவும் வகையில் மாகாணக் கல்வி அமைச்சுகளின் கீழ் பொருத்தமான கல்விப்பாதையை தெரிவு செய்வதற்கான வழிகாட்டல் அமர்வுகள் நடாத்தப்படுகின்றன. இந்தச் செயலமர்வுகள் மாணவர்களுக்கு G.C.E. O/L பரீட்சையில் சித்தியடையாவிட்டால் மாணவர்களுக்கு உள்ள மாற்றுக் கல்வி முறைகள் தொடர்பான அறிவூட்டல் வழங்கப்படுகிறது. இது தவிர மாணவர்கள் மத்தியில்போதைபொருள் தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தவும் இந்த செயலமர்வுகள் பயன்படுகின்றன.

வடக்குக் கிழக்கைப் பொறுத்தவரையில் மாணவர்கள் பரீட்சை எடுக்க முன்னர் பெற்றோருக்கே மாற்றுக் கல்விப்பாதை தொடர்பான அறிவுறுத்தல் வழங்கப்படுவதாக சொல்லப்படுகிறது. மாணவர்களுக்கு இந்தத் தகவல்கள் முன்னதாகவே வழங்கப்பட்டால் மாணவர்கள் சிலர் பரீட்சைக்கு முக்கியத்துவம் கொடுக்க மாட்டார்கள் என்ற அச்சம் அதிகாரிகள் மத்தியில் இருப்பதாகச் சொல்கிறார்கள். இதுபற்றிய முழுவிபரம் கிடைக்கவில்லை.

யாழ் மாவட்டத்தில் நல்ல பெறுபேறு பெற்ற மாணவர்கள் சிலரே உயர்கல்வியைத் தொடராது தமது  சுயவிருப்பினால் உல்லாசத் துறை கல்வியை விரும்பித் தெரிவு செய்வதாகவும் அறிய முடிந்தது. இது பாரம்பரிய கல்வி முறையையே சரியான முறையென நம்பும் கல்விமான்களுக்கும் அதிகாரிகளுக்கும் உவப்பான செய்தியாக இல்லாதபோதிலும், மாணவர்கள் தமது எதிர்காலம் தொடர்பாக சுயமாக முடிவெடுக்கக் கூடியவர்களாக இருப்பது மகிழ்ச்சி தருகிறது.

மத்திய மாகாணத்தில் இந்த செயலமர்வுகள் மாணவர்களுக்கே நேரடியாக செய்யப்படுவதாகத் தெரிகிறது. மத்திய மாகாணத்தில் மாணவர்களுக்கு போதை, மதுபாவனைப் பழக்கம் ஏற்படாது தடுப்பதற்காகவும் இந்த வழிகாட்டல்ச் செயலமர்வுகள் உதவுவதாகச் சொல்கிறார்கள். உண்மையில் இது ஆரோக்கியமான விடயம் என்றே நினைக்கிறேன். அதேநேரம் மாணவர்களுக்கு இவ்வாறான வழிகாட்டல்கள் வழங்கப்படுவதற்கு மேலதிகமாக பரீட்சையின் பின்னர், சித்தியடையாத மாணவர்களுக்கு உளவள ஆலோசனைகள் வழங்குவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும். கடந்த காலங்களில் பரீட்சை முடிவுகளைத் தொடர்ந்து சில மாணவர்கள் தவறான முடிவுகளை எடுத்தது யாவரும் அறிந்ததே.

இதிலும் சவால்கள் இல்லாமல் இல்லை. மாணவர்களுக்கு அவர்களின் எதிர்கால தொழில் வழிகாட்டல் சேவை வழங்கும் ஆசிரியர்கள் எண்ணிக்கையில் பற்றாக்குறை நிலவுகிறது. மறுபக்கத்தில் இந்த ஆசிரியர்கள் பலருக்கு தொழிற்சந்தை தொடர்பான முழுமையான அறிவு போதாது என்று தேசிய மனிதவள மற்றும் தொழில் கொள்கைக்கான வலைதளத்தில் அறிக்கைப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் இந்த சேவை சரியான முறையில் ஒருங்கிணைக்கப்படவில்லை என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.


தென் மாகாணத்தின் வளர்ச்சிகற்றுக் கொள்ளவேண்டிய பாடங்கள்

தென் மாகாணத்தின் பெறுபேறுகள் கடந்த சில வருடங்களில் சிறப்பாக அமைந்து வருவதை பலரும் அறிந்திருப்பீர்கள். குறிப்பாக மாத்தறை, அம்பாந்தோட்டை மாவட்டங்கள் கடந்த ஐந்து வருடங்களாக மிகச் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று வருகின்றன. கடந்த மூன்று வருடங்களாக இவை இரண்டுமே முதலிரண்டு இடங்களில் இருக்கின்றன. இது தற்செயலாக கிடைத்த வெற்றியில்லை. மிகச் சிறந்த திட்டமிடல், அதை முறையாக நடைமுறைப்படுத்தல் இரண்டுமே இந்த வெற்றியின் பின்னால் இருக்கின்றன.

தென்மாகாண கல்வியமைச்சு பின்வரும் விடயங்களைக் கடுமையாக பின்பற்றியது.

  1. கோட்டக் கல்வியதிகாரிகளாக இலங்கை கல்வி நிர்வாக சேவை அதிகாரிகள் திறமை அடிப்படையில் நியமிக்கப்பட்டார்கள். அவர்களுக்கு உதவியாக திறமை வாய்ந்த உத்தியோகத்தர்கள் பாடசாலை, மாணவர்கள் தொடர்பான தகவல்களைத் திரட்டியும் தரவுகளை ஆய்வு செய்தும் அதிகாரிக்கு அறிக்கை சமர்ப்பிப்பதற்காக நியமிக்கப்பட்டிருக்கிரார்கள்.
  2. மாகாணக் கல்வி அமைச்சின் அதிகாரம் கோட்டக் கல்வி அலுவலக மட்டத்திற்கு பரவலாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம் சில முடிவுகளை எடுப்பதற்கு கோட்டக் கல்வி அதிகாரிக்கு அதிகாரம் வழங்கப்பட்டது.
  3. பின்தங்கிய பிரதேசப் பாடசாலைகளில் உள்ள ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டது. அத்துடன் ஆசிரியர்கள் இடமாற்றம் சட்டப்படி நடைபெற்றது. ஒரு ஆசிரியர் அடுத்த பதினைந்து வருடத்திற்கு எந்த பாடசாலைகளுக்கு இடமாற்றம் செய்யப்படவேண்டும் என்பது முதலிலேயே தீர்மானிக்கப்பட்டது. அது ஆசிரியருக்கும் அறிவிக்கப்பட்டது. இது ஒரு ஆசிரியர் தன்னை மனதளவில் இடமாற்றத்திற்கு தயார்படுத்திக் கொள்ள உதவும்.

இந்த மூன்று விடயங்களும்தான் தென்மாகாணத்தின் தொடர்ச்சியான முன்னேற்றத்திற்கு காரணம் என்று சொல்லப்படுகிறது. வடமாகாண அதிகாரிகள் தென்மாகாணத்தின் சிறந்த நடைமுறைகள் பற்றிக் கற்றுக்கொள்ளச் சென்றதாகத் தெரிகிறது. ஆனால் சென்று வந்தவர்கள் அங்கு கற்ற நல்ல விடயங்களை எவ்வளவு தூரம் நடைமுறைப்படுத்தினார்கள் என்பது நிச்சயம் அவர்களிடம் கேட்கப்பட வேண்டிய கேள்வி.

முடிவுரை

கடந்த பதினைந்து வருட தரவுகளையும் நாம் இதுவரை கலந்துரையாடிய விடயங்களையும் வைத்துப் பார்க்கும்போது 2005 இலிருந்து அனைத்து மாவட்டங்களும் மாகாணங்களும் ஏற்ற இறக்கங்களோடு வளர்ச்சிப் போக்கினையே காட்டி வருகின்றன. ஆனால் சில மாவட்டங்களின் வளர்ச்சிப்போக்கு மெதுவானதாகவும் சிலவற்றின் வளர்ச்சி வேகமானதாகவும் உள்ளது. இந்த வேறுபாடு மாகாணப் பெறுபேறுகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

மாகாண மட்டத்தில் கடந்த பதினைந்து வருடத்தில் ஊவா, வடமத்திய, தெற்கு மற்றும் சபரகமுவ மாகாணங்கள் நல்ல வளர்ச்சியைக் காட்டுகின்றன. கிழக்கு, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்கள் ஒப்பீட்டளவில் சராசரி வளர்ச்சியையும்  வடமாகாணம் மற்றும் மேல் மாகாணம் குறைவான வளர்ச்சி வேகத்தையுமே காட்டுகின்றன.  

தமிழர்கள் செறிந்து வாழும் ஒன்பது மாவட்டங்களின் பெறுபேறுகளை 2005 ஆண்டின் பெறுபேறுகளை அடிப்படை அளவீடாகக் கொண்டு ஒப்பிடும்போது கிளிநொச்சி மற்றும் நுவரெலியா மாவட்டங்கள் சிறந்த வளர்ச்சிப் போக்கினையும், முல்லைத்தீவு, அம்பாறை, மன்னார் மாவட்டங்கள் அவற்றைவிடக் குறைவான வளர்ச்சி வேகத்தையும் கொண்டிருக்கின்றன. யாழ் மாவட்டமும்  வவுனியா மாவட்டமும் மிகக் குறைந்த வளர்ச்சி வேகத்தைக் கொண்டிருக்கின்றன.

இந்தக் காரணங்களாலேயே தொண்ணூறுகளுக்கு முன்னர் பெற்ற பெறுபேறுகளை நியமங்களாகக் கொண்டு வடமாகாணம் கல்வியில் பின்தங்கி விட்டது என்ற அபிப்பிராயத்துக்கு பலரும் வந்திருப்பார்கள் என்று ஊகிக்க முடிகிறது. இவ்வாறு அபிப்பிராயம் ஏற்படுவதற்கு வடமாகாணத்தில் உள்ள சில கல்வி வலயங்களின் மிகக் குறைவான பெறுபேறுகளும் காரணமாக இருக்கலாம்.

எனது அபிப்பிராயத்தின்படி இலங்கை அரசின் கல்விக் கொள்கைகள் நடைமுறைப்படும் முறை தொடர்பாக சமூகங்களிடையே மாறுபட்ட கருத்துக்கள் இருந்தாலும் கடந்த 35 வருடங்களில் இலங்கையின் பல பகுதிகளிலும் உயர் கல்வி நிறுவனங்கள் நிறுவப்பட்டதும் பின்தங்கிய மாவட்ட மாணவர்களுக்கும் உயர்கல்வி கற்கும் சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டதும் திறந்த பல்கலைக் கழகங்கள், கல்வியியல் கல்லூரிகள் பல நிறுவப்பட்டதும் பொதுவான முன்னேற்றங்களுக்கு காரணமாக இருக்கக்கூடும்.

அவ்வாறான பின்தங்கிய பிரதேசத்தில் பல பட்டதாரிகளும் பயிற்றுவிக்கப்பட்ட ஆசிரியர்களும் உருவாக்கப்பட்டதன் பெறுபேறுதான் இவ்வாறான வளர்ச்சி என்றும் கொள்ளலாம். அதைவிட ஒவ்வொரு மாகாண கல்வி அமைச்சும் திட்டமிடும் முறையும் அவற்றை நடைமுறைப்படுத்தப்படும் முறையும் கல்விப் பெறுபேறுகளில் தாக்கத்தை ஏற்படுத்தும்.  

இலங்கையில் கடந்த பதினைந்து வருட சராசரி தேர்ச்சி வீதம் (உயர்கல்விக்குத் தகுதி பெறல்) 63% ஆகும். கடந்த பதினைந்து வருடத்தில் 4.26 மில்லியன் மாணவர்கள் G.C.E. O/L பரீட்சை எழுதியிருக்கிறார்கள். அவர்களுள் 37% வீதமானோர் அதாவது 1.58 மில்லியன் மாணவர்கள் உயர்தரம் கற்கத் தகுதி பெறவில்லை.

இத்தனைபேர் தோற்றுப் போனார்கள் என்றால் தவறு எங்கே இருக்கிறது? இதனைச் சரிசெய்ய வேண்டியவர்கள் அரசாங்கமா? ஆசிரியர் சமூகமா அல்லது பெற்றோரா? இதனையே நாம் சிந்திக்க வேண்டும். தென்மாகாணம் ஏனைய மாகாணங்களுக்கு நல்ல ஒரு முன்னுதாரணத்தை ஏற்படுத்தியுள்ளது. அதேநேரம் கல்வி அமைச்சும்  கடந்த இரண்டாண்டுகளாக G.C.E. O/L பரீட்சையில் சித்தியடையாத மாணவர்களுக்கு மாற்றுக் கல்விப் பாதையை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் வடக்கு, கிழக்கு மாகாணங்களின் கல்வி முன்னேற்றம் வடமாகாண கல்வியமைச்சு, அதிபர்கள், ஆசியர்கள் மற்றும் பெற்றோரின் கைகளிலேயே தங்கியுள்ளது. புலம்பெயர் சமூகமும் கைகொடுக்க வேண்டிய தேவை இருக்கிறது.   நாம் ஒரு மாகாணத்திற்காக அல்லது மாவட்டத்திற்காக மட்டும் வருந்துவதை விடுத்து பாதிக்கப்பட்ட அனைத்து மாணவர்களுக்குமாக சிந்திப்பது உண்மையிலேயே முழுநாட்டிற்கும் நன்மை தருவதாக அமையும்.


பரிந்துரைகள்

சிறப்பாகச் செயற்படும் மாகாணங்களின் நல்ல அம்சங்கள் ஏனைய மாகாணங்களால் பின்பற்றப்பட வேண்டும். மாகாண சபை கல்வியமைச்சு அதிகாரங்களை கோட்ட மட்டத்தில் பகிர்ந்தளிக்க வேண்டும். திறமை அடிப்படையிலேயே நியமனங்கள், பதவி உயர்வுகள் வழங்கப்படவேண்டும்.

ஆசிரியர் நியமனங்கள், இடமாற்றங்கள் ஒழுங்குவிதிகளுக்கு உட்பட்டே செய்யப்பட வேண்டும். பின்தங்கிய பிரதேசங்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும். முடிந்தவரைக்கும் ஆசிரியர் வசிக்கும் மாவட்டத்திற்குள்ளேயே இடமாற்றம் செய்வது ஆசிரியருக்கும் இணக்கமானதாக இருக்கும் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

வலய மட்டத்திலும் மாவட்ட மட்டத்திலும் அதிகாரிகளும் பொது அமைப்புக்களும் சிறு வகுப்பிலிருந்தே பின்னடைவான மாணவர்களை இனங்கண்டு ஊக்குவிக்கும் வகையிலான கற்பித்தல் முறைகளை முன்னெடுக்க வேண்டும். இதற்கு அந்தந்த கிராமங்களில் உள்ள படித்த இளைஞர்களின் பங்களிப்பையும் தொண்டு அடிப்படையில் பெற்றுக்கொள்ள முடியும். சில கிராமங்களில் ஏற்கனவே இளைஞர்கள் சேர்ந்து உதவுவதாகவும் தெரிகிறது.

பெறுபேறுகளில் பின்தங்கிய வலயங்களில் தொடர்ச்சியாக முறையான ஆய்வுகள் வலய, கோட்டக் கல்வி அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட வேண்டும். அந்த ஆய்வறிக்கைகளில் கண்டறியப்படும் விடயங்கள் கல்வித்திட்டமிடலில் உள்வாங்கப்பட வேண்டும். இந்த ஆய்வினை அலுவலகர்கள் மூலமோ பல்கலைக் கழகங்களின் பங்களிப்புடனோ செய்யலாம்.

ஒவ்வொரு வருடமும் இடைவிலகியவர்கள் உட்பட மூன்றில் ஒரு பங்கு மாணவர்கள் இந்தக் கல்வி முறையினால் பாதிக்கப்படுகிறார்கள் என்றால் நிச்சயம் கல்விக் கொள்கையில் மேலும் மாற்றம் கொண்டுவரப்படவேண்டும். பரீட்சையில் நன்கு பிரகாசிக்க முடியாத மாணவர்களுக்காக மாற்று மதிப்பீட்டு முறைகளும் அறிமுகப்படுத்தப்பட வேண்டும். தொடர்ச்சியான மதிப்பீடு, ஒப்படை போன்ற முறைகளைப்பற்றி கொள்கை வகுப்பாளர்கள் சிந்திக்கலாம். இது ஒன்றும் இலங்கைக்கு புதியதல்ல. 1986 இல் அறிமுகப்படுத்தப்பட்டு இரண்டே வருடத்தில் பல அழுத்தங்களால் கைவிடப்பட்ட முறைதான் இது.

பொதுத் தேர்வில் சித்திபெறாத மாணவர்களுக்கு மாற்றுக் கல்வி வழிமுறையான “உத்தரவாதப்படுத்தப்பட்ட கல்வி நிகழ்ச்சித் திட்டம்” முறையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். போதுமான அளவு ஆசிரியர்கள் பயிற்றுவிக்கப்பட்டு சிறந்த சேவை வழங்கப்படுவது உறுதி செய்யப்பட வேண்டும். இதற்காக நியமிக்கப்பட்ட நிர்வாகக் குழுக்கள் சிறப்பாக செயற்படுவதற்குரிய வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட வேண்டும்.

மாணவர்களுக்கு தொழிற்கல்வி தொடர்பாக வழிகாட்டல்கள் வழங்கும் ஆசிரியர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்குப் தேவையான பயிற்சிகள் வழங்கப்படவேண்டும். இதில் உள்ள ஆசிரியர் வெற்றிடங்களும் நிரப்பப்பட வேண்டும்.தொழிற்சந்தை தொடர்பான அறிவூட்டல்கள் காலத்திற்குக் காலம் வழங்கப்படவேண்டும். இதற்கு தனியார் துறையுடனான கூட்டு முயற்சிகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.

மாணவர்களுக்கு தற்போது வழங்கப்படும் கல்விக்கான வழிகாட்டல்களுடன் பாடசாலைகளில் உளவள ஆலோசனைகளும் வழங்க ஏற்பாடுகள் செய்யப்படவேண்டும். இது பரீட்சைத் தோல்வியின் பின்னர் தவறான முடிவுகளை எடுக்கும், தவறான பாதையில் செல்லும் மாணவர்களைத் தடுக்க உதவும்.

--------------------------------------

Appendix 1: Students qualified for A/L from 2005 to 2019 Island-wide – Provincial and National average.



Appendix 2: Students failed in all subjects from 2005 to 2019 Islandwide – Provincial and National average.




Appendix 3: Students qualified for A/L – Districts of North, East and Nuwara Eliya District: 2005 to 2019 (in percentage).



Appendix 4: Students qualified for A/L and failed in all subjects: Districts of North, East and Nuwara Eliya District: 2005 to 2019 (in percentage).













Appendix 5: Students qualified for G.C.E. A/L in last five years (2015 - 2019) in Districts of North, East and Nuwara Eliya.







Appendix 6: Districts G.C.E. O/L ranking based on percentage of students qualified for G.C.E. A/L from 2005 - 2019).







 




  அடி சறுக்கும் அனுர?   தேசிய மக்கள் சக்தி ஜனாதிபதி தேர்தலில் வடக்கு, கிழக்கில் பெரும் வெற்றியைப் பெறுவோம் என்ற நம்பிக்கையுடன் இருந்திரு...