Saturday, 20 January 2024

 

தமிழரசுக் கட்சியின் உட்கட்சித் தேர்தல் - Jan 2024


ஈழத் தமிழர் பரப்பில் தேர்தல் என்பது புதிய விடயமல்ல. பாராளுமன்றத் தேர்தல் தொடங்கி பாடசாலைப் பழைய மாணவர் சங்கம் வரை பல தேர்தல்களைக் கண்ட சமூகம்தான் தமிழ் சமூகம். ஆனால் இலங்கையில் சனநாயகம் மதிக்கப்படுவதில்லை என்று பல தசாப்த காலங்களாக அரசுக்கு எதிராகக்  குரல் எழுப்பி வந்த ஒரு நீண்ட வரலாறு கொண்ட ஒரு கட்சியில் உலக வரலாற்றில் முதன் முறையாக உட்கட்சித் தேர்தல் நடக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அதனாலேயே கடந்த சில வாரங்களாகவே இந்த விடயம் ஒரு பேசுபொருளாக மாறியுள்ளது.

 

ஜனநாயகத் தேர்தல் என்பது அதிக தகுதி வாய்ந்த நபர்களைத் தெரிவு செய்வதற்கான ஒரு வழிமுறை. இதில் மாற்றுக் கருத்துக் கிடையாது. ஆனால் எல்லா நேரமும் வாக்களிப்பவர்கள் informed decision எடுக்கிறார்களா என்ற கேள்விக்கு பதில் உங்களில் பலருக்குத் தெரிந்ததுதான். பல நேரங்களில் பண நாயகமும் மற்றைய நேரங்களில் உணர்ச்சி மடமையும் செல்வாக்கு செலுத்தும் இடமாகவே தமிழர்கள் வாக்களிப்பில் கலந்துகொள்ளும் ஒவ்வொரு சந்தர்ப்பங்களும் அமைந்திருக்கின்றன.

 

இதனாலேயே ஈழத் தமிழர்கள் தம்மை சரியாக வழி நடத்தக்கூடிய, தமது பிரச்சனைகளைச் சரியாக அணுகக்கூடிய தலைவர்களை தெரிந்தெடுக்க முடிந்ததேயில்லை. இது தமிழகத் தமிழர்களுக்கும் பொருந்தும்.

 

இலங்கைத் தமிழரசுக் கட்சி ஆரம்பித்து கடந்த டிசம்பர் மாதம் 74 வருடங்கள் நிறைவடைந்து தற்போது அந்தக் கட்சி 75ம் வருடத்தில் பயணிக்கிறது. இத்தனை வருடங்களாக போட்டியின்றியே தலைவர் தெரிவு செய்யப்பட்டு வந்த நிலையில் இந்த வருடம் இருவர் தலைமைத்துவத்தை ஏற்க விருப்பம் தெரிவித்ததில் மூன்றுபேர் போட்டிக் களத்தில் இருக்கிறார்கள். ஆமாம், சிறிதரன், சுமந்திரன் ஆகிய இருவர் தலைமைத்துவத்துக்கு விருப்பம் தெரிவித்த நிலையில் மூன்றாவதாக கிழக்கின் வேட்பாளராக சீனித்தம்பி யோகேஸ்வரனும் களமிறங்கியிருக்கிறார்.

 

இவர்களில் முதலிருவரும் 2020 பொதுத் தேர்தல் முடிந்த கையோடு கட்சியின் அதிகாரத்தைக் கைப்பற்ற தமக்கிருந்த ஆர்வத்தை வெளிப்படுத்தியிருந்தார்கள். தேர்தல் முடிவுகள் வந்த மறுநாளே (Aug 07, 2020), சுமந்திரன் தமிழரசுக் கட்சியின் தலைவர், செயலாளர்களின் தவறான நடவடிக்கைகளால் கட்சி பின்னடைந்து விட்டதாலும் அவர்கள் தேர்தலில் தோற்றுப் போனதாலும் கட்சி மறுசீரமைப்பு விரைவில் செய்யப்படும் என்று சொல்லியிருந்தார். அதற்கு மறுநாள் (Aug 08), ஸ்ரீதரன் தமிழரசுக் கட்சியின் தலைமையை ஏற்கத் தான் தயார் என்று சொல்லியிருந்தார், பின்னர், தாம் இருவரும் கட்சியின் தலைமையைக் கைப்பற்ற முயலவில்லை என்று சுமந்திரன் ஊடகங்களுக்குத் தெரிவித்திருந்தார்.  

 

ஆக இவர்களின் “கட்சியைக் கட்டுப்பாட்டுக்குள்” எடுக்கும் ஆசை இன்று நேற்று வந்ததில்லை. மாறாக, இன்றுதான் அவர்களுக்கு சாதகமான சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது என்று சொல்லலாம்.

 

தற்போது கட்சிக்குள் ஒருமித்த முடிவோடு தலைவர் தெரிவு செய்யப்படும் நிலை இல்லாத சூழல் ஏற்பட்டிருக்கிறது. ஆனால், தமிழரசுக் கட்சி பலமாக நிலைத்திருக்க வேண்டும் என்று விரும்பும் கட்சி அபிமானிகள் சிலர், இவ்வாறு கட்சிக்குள் தலைமைத்துவப் போட்டியை ஊக்குவிப்பது எதிர்காலத்தில் கட்சிக்குள் நீடித்த முரண்பாட்டுக்கு வழிவகுக்கலாம் என்று கருதுவது தெரிகிறது. அதனால் தலைமைப் பதவிக்குப் போட்டியிடும் உறுப்பினர்கள் தமக்குள் சுமூகமாக பேசி, இந்தத் தேர்தலைத் தவிர்த்து ஒருமித்த கருத்தோடு ஒருவரைத் தலைவராகவும் மற்றையவரை செயலாளராகவும் நியமிக்க வேண்டும் என்ற கருத்தையும் முன் வைத்துள்ளனர். இல்லையெனில் தமிழரசுக் கட்சி மெல்ல மெல்ல சிதைந்து அழிந்துபோகும் என்று அவர்கள் ஆருடம் கூறியுள்ளார்கள்.

 

இது ஒருபுறம் இருக்க, சிலர் இந்த மூவரில் யாருக்கு வெற்றி வாய்ப்பு என்று களநில ஆய்வு ஒன்றையும் சிலர் செய்ய முற்பட்டனர். அதிலும், யாழை வாழிடமாகக் கொண்ட, ஒரு சமூக வலைத்தளப் பிரபலம் ஒரு விசித்தரமான ஆய்வை மேற்கொண்டிருந்தார். களத்தில் மூன்று பேர் இருக்க அவரது ஆய்வில் இரண்டே பெயர்கள்தான் இருந்தன. அவர் யோகேஸ்வரனின் பெயரை தனது ஆய்வில் சேர்த்துக் கொள்ளவில்லை. பின்னர் அவரது வீடியோவில் அதற்கொரு விளக்கம் சொல்லியிருந்தாலும், ஒரு முறையான களஆய்வு என்று வரும்போது இவரது விளக்கம் ஏற்புடையதல்ல. அதைவிட முக்கியமாக, “எவருமில்லை” என்ற ஒரு தெரிவை அவர் வழங்கவில்லை. சிலர் அதை உடனேயே சுட்டிக் காட்டியும் அவர் சேர்த்துக் கொள்ளவில்லை. இதுவும் இவரது ஆய்வில் முக்கிய பலவீனமாக இருக்கிறது.

 

இந்த ஆய்வு டிசைனில் அவர் செய்திருந்த இன்னொரு விடயத்தையும்  இங்கு சுட்டிக் காட்ட வேண்டும். அவரைது ஆய்வில் முதலில் சிறிதரனின் பெயரை “சிவஞானம் சிறிதரன்” என்றும் அடுத்ததாக சுமந்திரனின் பெயரை “ஆப்ரகாம் சுமந்திரன்” என்றும் குறிப்பிட்டிருந்தார். எனக்குத் தெரிந்து சுமந்திரனின் பெயர் “மதியாபரணம் சுமந்திரன்” என்றுதான் ஊடகப் பரப்பில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் அவர் ஏன் “ஆப்ரகாம் சுமந்திரன்” என்று பயன்படுத்தினார் என்பது தற்செயலானதா அல்லது திட்டமிட்டுச் செய்ததா என்று தெரியவில்லை.

 

இவர் ஸ்ரீதரனுக்கு ஆதரவாகப் இருக்கிறாரா என்ற சந்தேகத்தை இவரது செயற்பாடுகள் ஏற்படுத்துகிறது. இவர் இந்த ஆய்வையே ஸ்ரீதரனுக்காக பிரச்சாரம் செய்வதற்காகவே செய்தார் என்ற சந்தேகத்தையும் ஆய்வின் பின்னர் அவர் வெளியிட்ட வீடியோவில் வெளியிட்ட செய்தி ஏற்படுத்துகிறது.

 

மறுபுறத்தில், யோகேஸ்வரனின் நிலைப்பாடும் குழப்பம் தருவதாக இருக்கிறது. முதலில் தலைவர் பதவிக்கான போட்டியில் குதித்தவர், பின்னர் தனது விண்ணப்பத்தை மீளப் பெறத் தயார் என்றதோடு தனது ஆதரவு ஸ்ரீதரனுக்குத்தான் என்றும் சொல்லியிருக்கிறார். ஆனால் இன்றுவரை தனது விண்ணப்பத்தை மீளப் பெறவில்லை. தான் விண்ணப்பத்தை மீளப்பெற்ற பின் எவராவது தலையிட்டு தேர்தலை இல்லாது செய்து சுமந்திரன் தலைவராக வரக்கூடிய சூழ்நிலை வந்துவிடக்கூடாது என்பதால்தான் தனது விண்ணப்பத்தை மீளப் பெறவில்லை என்று அதற்கு விளக்கம் வேறு தந்திருக்கிறார். ஆக அவரும் ஒரு புதுவித ஜனநாயகத்தை அறிமுகப்படுத்துகிறார்.

 

அதேநேரம், ஒருபுறம் தலைமைப் பதவி இம்முறை கிழக்கு மாகாணத்துக்கு உரியது. இந்தத் தேர்தலே தேவையற்றது என்ற குரலும் சிலரால் எழுப்பபட்டுகிறது. மறுபுறத்தில் இம்முறை செயலாளர் பதவி கிழக்கிற்கு வழங்கப்பட வேண்டும் என்ற குரலும் கேட்கிறது. கிழக்கிலிருந்து இந்தக் குரல் எழுகிறது இதில் நியாயம் இருக்கிறது எனில், இதற்கு மதிப்புக் கொடுத்து யோகேஸ்வரன் தனது விண்ணப்பத்தை மீளப் பெறக்கூடாது.  அதேபோல கிழக்கிலிருந்து ஒருவர் செயலாளர் பதவிக்கு முடிவுத் திகதிக்கு முன்னர் விண்ணப்பித்திருக்க வேண்டும். ஆனால் இதுநாள்வரை ஜனநாயக முறைப்படி கட்சியை நடாத்தாத ஒரு கட்சியின் உறுப்பினர்களிடம் அதையெல்லாம் எதிர்பார்க்க முடியாதுதானே?

 

இவ்வாறான பலதரபட்ட கருத்துக்களும் பரிமாறப்பட்டு வரும் இந்த நிலையில் தமிழரசுக் கட்சியில் உட்கட்சித் தேர்தல் நடந்தாலும் நடைபெறாவிட்டாலும் தமிழரசுக் கட்சியின் எதிர்காலப் பயணம் இலகுவானதாக அமையப் போவதில்லை. குறிப்பாக ஸ்ரீதரன், சுமந்திரன் ஆகியோரின் பின்னால் அணிவகுத்து நிற்பவர்கள் இனியும் ஓரணியில் செயற்பட வைப்பது இலகுவானதாக இருக்காது.

 

அதனால் இந்தக் கட்சி அடுத்த வருடம் பொதுத் தேர்தல் ஒன்றுக்கு முகம் கொடுக்கும்போது வெளியில் உள்ள எதிரணியையும் கட்சிக்குள்ளேயே இருக்கும் எதிரணியையும் ஒன்றாக சமாளிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுவது திண்ணம். 2015 தேர்தலுடன் ஒப்பிடும்போது 2020 இல் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வடக்குக் கிழக்கில் 37% வாக்குகளை இழந்திருந்தது. தற்போது தமிழரசுக் கட்சி தனியே தேர்தலுக்கு முகம் கொடுக்கும் நிலை வரும்போது நிச்சயம் வாக்கு வங்கி பாதிக்கப்படையும். தமிழரசுக் கட்சிக்கு நான்கிலிருந்து ஐந்து ஆசனங்கள் கிடைத்தாலே ஆச்சரியம்தான்.

 

 இன்னும் சில மணிநேரங்களில் தமிழரசுக் கட்சியின் தலைவர் யார் என்பது முடிவாகலாம். ஆனால் இந்தக் கட்சியின் தலையெழுத்து என்னவாகும் என்பதை அறிய நாங்கள் சில மாதங்கள் காத்திருக்க வேண்டியிருக்கும்.


- வீமன் -

Monday, 15 January 2024

 

ஈழத்துத் தமிழ்த் தாய் வாழ்த்து


 

கடந்த வருடப் பிற்பகுதியில் யாழ் பல்கலைக் கழக கலைப்பீட நிகழ்வொன்றில் “ஈழத்து தமிழ்த்தாய் வாழ்த்து” ஒன்று இசைக்கப்பட்டது. அதன் காணொளியை “யாழ் பல்கலைக் கழக கலைப்பீட மாணவர்களின் அளப்பரிய முயற்சியால் உருவாக்கப்பட்ட எமக்கான ஈழத்துப் பா” விவரிப்புடன் பலரும் பகிர்ந்து மகிழ்வதைக் காண முடிகிறது. (அந்தப் பாடல் இணைப்பு இந்த ஆக்கத்தின் முடிவில்)

 

உண்மையில் இந்தப் பாடல் அண்மையில் கலைப்பீடத்தினரால் உருவாக்கப்பட்டதில்லை. (அப்படி அவர்கள் சொன்னதாகவும் தெரியவில்லை). இந்தப் பாடல் எப்போது, யாரால் எழுதப்பட்டது என்ற விபரத்தை அறிய முடியவில்லை. ஆனால் இந்தப் பாடல் பொதுவெளியில் முதலில் 2010ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 13ம்,  14ம்  தேதிகளில் பெங்களுரில், ஈழ தேசிய ஜனநாயக விடுதலை முன்னணி (ஈ.என்.டி.எல்.எப்.) ஏற்பாட்டில் நடைபெற்ற இரண்டு நாள் சிறப்பு மாநாட்டில் பாடப்பட்டது எனத் தெரிகிறது.

 

ஈழத்தின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைப் போற்றியும், வாழ்த்தியும் “நாட்டுப்பண்” பாடல் பரந்தன் ராஜன் என்று அழைக்கப்படும் ஞானப்பிரகாசம் ஞானசேகரன் அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. மத்தியமாவதி ராகத்தில் அமைந்த இந்தப் பாடலைப்  பாடியவர்களின் பெயர்களையும் அறிய முடியவில்லை. இந்தப் பாடல் சிறு திருத்தங்களுடன் மீண்டும் அதே ஆண்டு டிசம்பர் மாதம் பதினான்காம் திகதி அளிக்கை செய்யப்பட்டது.

 

தற்போது “வான் முட்டும் எழில் கொண்டு” என்ற இந்தப் பாடல் யாழ் பல்கலைக் கழகத்தில் பாடப்பட்ட நிலையில், இதையே ஈழத்தமிழர்கள் தமது தமிழ்த்தாய் வாழ்த்தாக ஏற்றுக் கொள்ளலாமே என்ற கருத்து பலராலும் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது. ஆனால் இந்தப் பாடல் தொடர்பாக எனக்கு சில விமர்சனங்கள் இருக்கின்றன.

 

இந்தப் பாடல் உண்மையிலேயே ஈழத்தின் பல்வேறு பிரதேசங்களில் உள்ள சிறப்பம்சங்களை சொல்வதாக அமைந்திருப்பது நல்ல விடயம். ஆனால் இந்தப் பாடல் வடக்கு-கிழக்கினை மட்டுமே விபரிக்கிறது. அத்தோடு, மலையகத்தையும் உள்ளடக்கியிருந்தால் இன்னமும் சிறப்பாக அமைந்திருக்கும். அதேநேரம், இந்தப் பாடலில் வவுனியாவின் சிறப்பு சொல்லப்படவில்லை, “வன்னி” என்பதற்குள் சுருக்கி விட்டார்கள் என்று சிலர் குறைப்பட்டதையும் இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.

 

இவை எல்லாவற்றையும் விட முக்கியமாக சில வரிகளை நிச்சயம் மாற்றியமைக்க வேண்டும் என்பது எனது கருத்தாக இருக்கிறது. குறிப்பாக “யாழ்ப்பாண நகரோடு பெருங் கல்வியும்” என்ற வரி மூலம் இந்தப் பாடல் சொல்லும் விளக்கம் என்ன? இது யாழ் உயர்வு மனப்பான்மைச்  சிந்தனையின் வெளிப்பாடா என்ற கேள்வியை முன்வைக்காமல் என்னால் இந்தப் பாடலைக் கடந்து செல்ல முடியவில்லை.

 

கல்வி, ஆற்றல் எல்லாம் அனைவருக்கும் பொதுவானவை. யாழ்ப்பாணம்தான் கல்வியின் அடையாளம் என்ற போலிக் கருத்து இப்படி ஒரு பாடலூடாக கடத்தப்படுவது ஏற்புடையதல்ல. வேண்டுமானால் யாழ்ப்பாண நகரோடு கடலேரியும் என்று பாடலாமே? ஏனெனில் கடலேரி யாழுக்கு அழகு சேர்ப்பது மட்டுமன்றி வாழ்வாதாரத்தின் ஒரு பகுதியாகவும் இருக்கிறது.

 

இவ்வாறான மாற்றங்கள் செய்யப்பட்டால் எங்களுக்கு நல்லதொரு ஈழத் தாயை வாழ்த்தும் ஒரு பாடல் கிடைக்கக்கூடும். நம்மவர் பலரும் இந்தப் பாடலைப் ஈழத்தில் பல இடங்களில் பரவலாக பயன்படுத்தப்படக் கூடிய சந்தர்ப்பங்கள் எதிர்காலத்தில் அமையலாம்.

 

பதின்மூன்று வருடங்களுக்கு முன்னர் பாடப்பட்ட ஒரு பாடல் இத்தனை வருடங்கள் கழித்தே மக்களின் கவனம் பெற்றிருக்கிறது. அதேபோல இன்னுமொரு ஈழக் கலைஞர் எழுதிய தமிழ்த்தாய் வாழ்த்தும் பெரிதும் கவனம் பெறாமல் இருக்கிறது.

 

அகளங்கன் என்ற வவுனியாவின் பம்பைமடு என்ற கிராமத்தைத் சேர்ந்த பல்துறை சார்ந்த இலக்கியப் படைப்பாளி எழுதிய தமிழ் வாழ்த்துப் பாடல்தான் அது. இந்தப் பாடலை 2017 இல் கேட்கும் சந்தர்ப்பம் எனக்குக் கிடைத்தது. பாடல் கேட்க நன்றாக இருந்தது. கொஞ்சம் சைவப் பக்தி வாசம் பாடலில் இருந்தாலும் இலங்கையின் நாவலர், விபுலானந்தர், உமறுப் புலவர் போன்ற தமிழ் ஆளுமைகளைக் குறிப்பிட்டு இருந்தது எனக்குப் பிடித்திருந்தது.  இன்றுவரை நாம் தமிழ்த்தாய்  வாழ்த்தாக நாம் பயன்படுத்தும் “வாழ்க நிரந்தரம், வாழ்க தமிழ் மொழி” என்ற பாரதியாரின் பாடலைப் போலவே இதுவும் தமிழின் பெருமையை மட்டும் கூறும் பாடலாக அமைந்திருக்கிறது. (பாடல் வரிகள் கீழே)

 

இப்படி தமிழை வாழ்த்தும் ஒரு பாடலும் ஈழத்தின் புகழ் பேசும் ஒரு பாடலும் இருக்கும் நிலையில் எமக்கு என்ன தேவை என்ற முடிவுக்கு வர வேண்டியிருக்கிறது. தமிழ் மொழியை வாழ்த்த வேண்டுமெனில் அகளங்கன் அவர்கள் எழுதிய பாடல் பொருத்தமானது. ஆனால் அதில் மாற்றங்கள் செய்வது தேவையெனில் தமிழ் மொழிச் சான்றோர் அகளங்கன் அனுமதியுடன் அதனைச் செய்து எமக்கு அளிக்கை செய்யலாம்.

 

மாறாக ஈழத்தின் தமிழர் வாழும் பிரதேசங்களைக் கொண்டாடும் பாடல் தேவையெனில் ENDLF முன்னர் பயன்படுத்திய, தற்போது யாழ் கலைப்பீடம் நிகழ்வில் சேர்த்துக் கொண்ட  வான் முட்டும் எழில் கொண்டு வளமாகவும்“ பாடலை எழுதியவரைத் தேடிப் பிடித்து, அவர் அனுமதியுடன் தேவையான மாற்றங்களுடன் (நிச்சயம் சில முக்கிய மாற்றங்கள் தேவை), எமக்கு அளிக்கை செய்யலாம்.

 

ஆனால் இப்போது எனக்குள் இன்னொரு கேள்வி எழுகிறது. இந்தப் பாடல் 2010இல் ENDLFஇனால் முன்னிலைப்படுத்தப்பட்டது என்ற விடயம் பரவலாகத் தெரிய வந்தால் அதற்காகவே இந்தப் பாடலை சில வலைத்தளப் போராளிகள் கடுமையாக எதிர்ப்பார்களா? என்பதுதான் அந்தக் கேள்வி.

 

 

அந்த இரண்டு பாடல்களும் கீழே:

 

ஈழத்து தமிழ்த்தாய் வாழ்த்து

(2010இல் பெங்களூரிலும் கடந்த வருடம் யாழ் பல்கலைக் கழகத்திலும் பாடப்பட்டது)

 

வான் முட்டும் எழில் கொண்டு வளமாகவும்

இன்பத்தேன் சொட்டும் தமிழ் சேர்ந்தே நலமாகவும்

யாழ்ப்பாண நகரோடு பெருங்கல்வியும்

எம்மை வாழ்விக்க உணவூட்டும் திருவன்னியும்

மட்டு வாவிக்குள் மீன் பாடும் இசை சந்தமும்

வெற்றி மேவும் வெண் தீவெங்கும் உயிர் சொந்தமும்

கிளிநொச்சி வளமுல்லை அம்பாறையும்

தெள்ளத் தெளிந்தோடும் பொன்னருவி ஆற்றோரமும்

சூழ் கொண்ட மன்னாரின் முத்தாரமும்

எங்கும் சுடரேற்றும் திருகோணமலை மொத்தமும்

நாளும் நிலை உயர்வாக செயல் ஆற்றுவோம்

எங்கள் ஈழத்தமிழ் திருநாட்டின்

புகழ் போற்றுவோம்

 

"எங்கள் ஈழத்தமிழ் திருநாட்டின்

புகழ் போற்றுவோம்"

 

வாழிய... வாழிய... வாழியவே...

எங்கள் ஈழத்தமிழ் திருநாடு வாழியவே...

 

https://www.youtube.com/watch?v=t9-Jn7V_bbg&ab_channel=EelamNationaldemocraticliberationfront

 

  

அகளங்கன் பாடிய தமிழ் வாழ்த்துப் பாடல்


இசைத்திட முடியாது எங்கள் பெருமை -தமிழ்

இன்பமோ சொல்லினிலே சொல்லல் அருமை!

திசைதோறும் எங்கள்மொழி செய்யும் புதுமை -இது

             தேவர்க்கும் கடவுளர்க்கும் என்றும் இனிமை                

(இசைத்...)

 

பக்தியின் மொழி தமிழாம் பரவசம் தரும் புதிராம்

நித்தியம் வளம் பெருகும் நிகரில்லா மொழி தமிழாம்

கம்பனும் வள்ளு வரும் கவிஇளங் கோவுந் தந்த

        செம்மை மிகு கவிதை சிந்தை தனை நிறைக்கும்            

(இசைத்...)

 

ஒளவையின் அறி வுரைகள் அருண கிரிப் புகழ்கள்

செவ்வை மிகு தமிழில் சேக்கிழார் தரும் கவிகள்

மூவர் தமிழ் அமதும் முடி மன்னர் ஆதரவும்

         தேவர் களும் பருகும் திருவா சகப் பொலிவும்              

(இசைத்...)

 

நல்லூர் நா வலரும் நல்ல விபு லானந்தரும்

பல்லோர் புகழ்ந் தேத்தும் பாரதி வள்ள லாரும்

குமர குரு பரரும் குரு தாயுமானவரும்

              உமறுப் புல வரொடு உயர் வீர மாமுனிவர்                 

(இசைத்...)

 

வாழ்கவே! வளர்கவே!

தமிழ் வாழ்கவே! தமிழ் வாழ்கவே!

----


 

உழவர் திருநாள்

 


தை மாதம் என்பது தமிழர் வாழ்வியலில் ஒரு முக்கியமான மாதமாகும். போகிப் பண்டிகை, தைப் பொங்கல், மாட்டுப் பொங்கல் (பட்டிப் பொங்கல்), காணும் பொங்கல் என்று தொடர்ந்து சூரியனுக்கு நன்றி கூறுதல், விவசாயியை வாழ்த்துதல், பசுக்களையும் காளைகளையும் போற்றுதல், விருந்தோம்பல் என்று தமிழகத்தில் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. ஈழத்தில் தைப் பொங்கல் மிகச் சிறப்பாகவும் மாட்டுப் பொங்கல் சிலபகுதிகளிலும் பாரம்பரியமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அத்துடன் இலங்கையின் வடக்கில் நடைபெறும் பட்டமேற்றும் விழாக்களும் தைப்பொங்கலோடு சேர்ந்த ஒரு கொண்டாட்டமாக இருந்து வருகிறது.

 

இந்தத் தைத்திருநாள் இலங்கை இந்தியா தவிர்த்து இன்று மலேசியா, சிங்கப்பூர், ஐரோப்பிய நாடுகள், வடஅமெரிக்கா, தென்னாபிரிக்கா, ஆஸ்திரேலியா என தமிழர்கள் வாழும் நாடுகளிலெல்லாம் கொண்டாடப்பட்டு வருகிறது. தைத் திருநாளோடு வரும் அனைத்துக் கொண்டாட்டங்களும் ஒரு நிறைவை, முழுமையைக் கொண்டாடும் ஒரு நிகழ்வாக இருக்கின்றன.

 

சூரியனின் சக்தியே உலகின் இயக்கத்திற்கும் உலகில் உள்ள உயிர்கள் நிலைத்திருப்பதற்கும் ஆதாரமாக இருக்கிறது. அதிலும் குறிப்பாக உழவுத் தொழில் புரிபவர்களுக்கு சூரியனின் சக்தி இன்றியமையாததாக இருக்கின்றது. இதனாலேயே உழவர்கள் தை மாதத்தில் தமது அறுவடையை சூரியனுக்கு சமர்ப்பணம் செய்கிறார்கள். இவ்வாறு சமர்ப்பணம் செய்து சூரியனுக்கு நன்றி சொல்லும் நிகழ்வாக தைப்பொங்கல் விழா அமைந்துள்ளது. அதைப் போலவே உழவர்கள் தமது தொழிலில் உற்ற நண்பனாக விளங்கிய காளைகளுக்கும் பசுக்களுக்கும் நன்றி சொல்லும் வகையில் மாட்டுப் பொங்கல் (அல்லது பட்டிப் பொங்கல் அமைந்துள்ளது).

 

உழவர் என்று சொல்லும்போது நாங்கள் அதை நிலவுடமையாளராக உள்ள உழவர்களுக்கு மட்டும் உரிய விழாவாகக் கருத வேண்டியதில்லை. விவசாய நிலங்களில் சம்பளத்திற்கு வேலை செய்வோர், விவசாயத்தோடு இணைந்த தொழில்களில் ஈடுபடுவோர் (மண்வெட்டி, அரிவாள் போன்றன செய்வோர், மாட்டுவண்டி, ஏர் போன்றவற்றைச் செய்பவர்கள்), விவசாய உற்பத்திப் பொருட்களை வாங்கி விற்கும் சிறுவியாபாரிகள் என உலகில் பல வகையான தொழிலாளர்கள் நீண்டகாலமாகக் கொண்டாடி வரும் மதச் சாயம் அற்ற ஒரு விழாவாகவும் தைப்பொங்கல் அமைந்துள்ளது.

 

நாங்கள் சிறுவர்களாக இருந்த காலத்தில் தைப்பொங்கல் என்பது எப்போதுமே பெரும் கொண்டாட்டத்துக்கு உரியதாகவே இருந்துள்ளது. அப்போது எங்களில் பலருக்கும் சொந்தமாக வயல்கள் இருந்தன. அவையெல்லாமே பயன்பாட்டில் இருந்தன. பல முழுநேர உழவர்களாக  இருந்தார்கள். அதேநேரம் ஏனைய பலர் அரச, தனியார் நிறுவனங்களில் வேலை செய்தாலும் பகுதிநேர உழவர்களாக இருந்தார்கள். உதாரணமாக பெரும் கல்விமான் என்று தமிழர்கள் கொண்டாடும் மறைந்த பேராசிரியர் துரைராஜா அவர்களும் தானே தனது வயலில் இறங்கி வேலை செய்யும் ஒருவராக இருந்தார். அவரைப் போலவே கொழும்பில் உயர் பதவிகள் வகித்த எனது ஊரவர் பலரும் பருவ காலங்களில் தமது ஊருக்கு வந்து விவசாயம் செய்பவர்களாகத்தான் இருந்தார்கள்.

 

ஆனாலும் காலப் போக்கில் உள்நாட்டு யுத்தம் எங்கள் காலத்தை கபளீகரம் செய்ததில் கொண்டாட்டமும் குறைந்து விட்டது. வளமான நிலப்பகுதிகளைப் போர் தின்று போக மண்ணில் எஞ்சியவர்களுள் விவசாயம் செய்பவர்களும் குறைந்து விட்டார்கள்.  

 

எண்பதுகளின் பின்னர் இடபெயர்வுகள் (தற்காலிக மற்றும் நிரந்த) ஒருபுறம், விவசாயத்திற்கான உள்ளீடுகளுக்கான செலவுகள் தொடர்ந்தும் அதிகரித்துச் சென்றமை, பொருளாதாரத் தடைகள் காரணமாக விவசாய உள்ளீடுகள் கிடைக்காமை, விவசாயச் செலவுகளுக்காக தனியாரிடம் கடன் வாங்கி மீளமுடியாத கடன் சுழலுக்குள் பல விவசாயிகள் மாட்டிக் கொண்டமை, உற்பத்திப் பொருட்களுக்கு நியாயமான விலை கிடைக்காமை எனப் பல காரணங்கள் தாயக மண்ணில் பலர் விவசாயத்தைப் படிப்படியாகக் கைவிடக் காரணமாக அமைந்தது.

 

இன்று தமிழர் தாயகப் பிரதேசங்களில் உழவுத் தொழில் நலிந்து போனதற்கு புலம் பெயர் தேசத்து பணம் கண்டபடி ஈழத்தில் புழக்கத்தில் விடப்பட்டதுதான் காரணம் என்று சிலர் குற்றம் சுமத்தினாலும் அது மட்டுமே காரணம் அல்ல.  ஈழத்தில் வாழும் தமிழர்கள் வாழ்க்கை முறையில் ஏற்பட்ட மாற்றங்களும் சிலர் விவசாய நிலங்களை முற்றாக கைவிடுவதற்குக் காரணமாக அமைந்தது எனலாம்.

 

காரணம் எதுவாக இருந்தாலும் ஒருகாலத்தில் தமிழ் மக்களின் கணிசமான சனத்தொகையின் வாழ்வாதாரமாக இருந்த உழவுத் தொழில் இன்று உழவர்களுக்கு வருமானத்தை உறுதிப்படுத்தக்கூடிய ஒன்றாக இல்லை என்பதுதான் யதார்த்தம். இதுவே பல குடும்பங்கள் படியாக உழவுத் தொழிலை கைவிட அல்லது பயிர் செய்யும் அளவைக் குறைத்துக் கொள்ளப் பிரதான காரணமாக அமைந்துவிட்டது.

 

உண்மையில் விவசாயப் பொருட்களுக்கு சரியான சந்தை வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டால் விவசாயமும் இலாபம் தரக்கூடிய தொழில்தான். ஆனால், காலம் காலமாக அரசின் முட்டாள்தனமான கொள்கைகளும் விவசாயிகளின் வயிற்றில் அடித்துப் பிழைக்கும் இடைத் தரகர்களும், வட்டிக்குக் கடன் கொடுத்து இரத்தம் உறுஞ்சும் பணமுதலைகளுமே உழவுத் தொழிலை இப்படியாக்கி வைத்திருக்கிறார்கள்.

 

எங்களில் பலருக்கு இவையெல்லாம் தெரியாமல் இல்லை. உழவர்களிடமே நேரடியாக உற்பத்திப் பொருட்களை வாங்கினால் இலாபம் அவர்களுக்கே போய்ச்சேரும் என்ற விடயமும் தெரியும். ஆனால் நாங்கள் அதைச் செய்ய மாட்டோம். எவனோ ஒருவன் உழவர்களிடம் அடிமாட்டு விலைக்கு வாங்கி அதற்கு பலமடங்கு விலை வைத்து எமது வீட்டு வாசலுக்குக் கொண்டு வந்து தரும்போது மறுபேச்சு பேசாமல் அதை சந்தோசமாக வாங்கிச் செல்வோம்.

 

அதுவே உழவர்கள் நேரடியாக சந்தைப்படுத்த முனைந்தால் சந்தோசமாக அவர்கள் கேட்கும் பணத்தைக் கொடுத்துவிட மாட்டோம். அவர்களோடு சளைக்காமல் பேரம் பேசுவோம். ஆனால் வீட்டுக்குள் வந்தவுடன், “விவசாயி சேற்றில் கால் வைத்தால்தான் நாங்கள் சோற்றில் கை வைக்க முடியும்” என்றும்  “விவசாயிகள் எங்களுக்குச் சோறு போடும் தெய்வங்கள்” என்றும் status உம் போட்டு வாழ்க விவசாயி என்று சமூக வலைத்தளங்களில் பொங்கலும் வைப்போம். இந்த அளவில்தான் எங்களில் பலரின் சமூக அக்கறையும் பொறுப்பும் இருக்கிறது. இப்படி உழவுத் தொழிலை romanticize பண்ணுவதால்தானோ என்னவோ இப்போது சிலர் சூரியனுக்கும் கால்நடைகளுக்கும் உழவர் நன்றி சொல்லும் விழாவை உழவருக்கு நன்றி என்று கொண்டாடத் தலைப்பட்டுள்ளார்கள்.

 

உண்மையில் உழவருக்கு நாம் நன்றி சொல்ல விரும்பினால், எங்களால் முடிந்தவகையில் உழவர்களுக்கு உதவ முன்வரவேண்டும். நாங்கள் அனைவரும் சமூக வலைத்தளங்களில் உழவுத் தொழிலைப் புனிதப்படுத்துவதையும் romanticize பண்ணுவதையும் விடுத்து, எங்களால் முடிந்த வகையில் எமது சூழலில் வாழும் உழவர்களிடம் நியாய விலைக்கு பொருட்களை வாங்கி, அல்லது அவர்களின் உற்பத்திப் பொருட்களை நியாய விலைக்கு விற்பதற்கு உதவி, அவர்கள் தமது வாழ்வில் எதிர்கொள்ளும் சிரமங்களை இல்லாது செய்ய முயற்சிப்போமானால் அதுவே சிறப்பான உழவர் திருநாள் கொண்டாட்டமாக அமையும்.

 

உழவனுக்கு நன்றி என்று status போடுவதை நிறுத்திவிட்டு உழவனைக் கைதூக்கி விடுங்கள். அவன் சூரியனுக்கு நன்றி சொல்வதோடு உங்களுக்கும் மனதார நன்றி சொல்வான்.

 

மற்றவரை வாழ்த்துவதைவிட முக்கியமானது எங்களால் முடிந்தவரை மற்றவர்களையும் வாழவைப்பது. அவர்களின் வாழ்வில் துன்பங்கள் நீங்கும்போது எமது வாழ்வும் நிறைவடையும். இந்தத் தைப்பொங்கல் நாளில் அனைவரையும் வாழ்த்துவோம்! வாழ வைப்போம் !

 

-வீமன் -

Saturday, 13 January 2024

 

இசைக்குயிலும் தங்க மகளும்  ஈழத் தமிழர்களும்

 


வென்ற பின், “கில்மிஷா வெல்லுவாள் என்று எனக்கு அப்பவே தெரியும்”. அப்படி வெல்ல முடியாது போயிருந்தால், “அவள் வெல்ல மாட்டாள் என்று எனக்கு அப்பவே தெரியும்”. இதுதான் எமது சமூகம்!

 

இதுவரை பல வருடங்களாக ஈழத்திலிருந்தும் புலம்பெயர் தேசத்திலிருந்தும் பல seasonகளாக சிறுவர்கள், வளர்ந்தவர்கள் எனப் பலரும் விஜய் டிவி ZeeTamil  டிவி நடாத்தி வரும் பாடகர்களுக்கான நிகழ்சிகளில் கலந்து கொண்டு சில தடவைகள் முதல் ஐந்து இடங்களுக்குள் இடம் பிடித்தும் இருக்கிறார்கள். அதிலும் 2014 இல் நடைபெற்ற சூப்பர் சிங்கர் ஜூனியர் போட்டியில் ஜெசிக்கா ஜூட்ஸ் இரண்டாம் இடத்தையும் 2019இல் நடைபெற்ற சூப்பர் சிங்கர் போட்டியில் புண்யா மூன்றாம் இடத்தையும் (இன்னொரு போட்டியாளருடன் பகிர்ந்து கொண்டார்) பெற்றதுமே அண்மைக் காலத்தின் உச்சப் பெறுபேறாக இருந்தது.

 

இந்த சூழலில் கடந்த வருட இறுதியில் ZeeTamil நடாத்திய சரிகமப லிட்டில் சாம்பியன் நிகழ்வில் ஈழத்துச் சிறுமியான கில்மிஷா முதலிடத்தைப் பெற்றுக் கொன்டது தமிழர் பரப்பில் பெரும் கொண்டாட்ட நிகழ்வாக மாறியதில் வியப்பில்லை. அவர் வெற்றி பெற்று ஊருக்குத் திரும்பி வந்த நாளில் பெரும் எடுப்பில் அவருக்கு வரவேற்பு வழங்கப்பட்டதை அதன் ஒரு வெளிப்பாடாகவும் பார்க்கலாம்.

 

அதே நேரத்தில் உள்ளூர் தொலைக்காட்சியும் ஒரு தனியார் நிறுவனமும் கில்மிஷாவின் வெற்றியைத் தந்திரமாக தமது நிறுவனங்களைப் பிரபலப்படுத்தும் வகையில் பயன்படுத்தியதையும் அவதானிக்க முடிந்தது. மக்களாகவே முன்வந்து இப்படிப் பாரிய வரவேற்பை வழங்கியதான தோற்றப்பாடு இருந்திருந்தாலும், பலாலி முதல் கில்மிஷாவின் வீடுவரை வழங்கப்பட்ட ஆரவார வரவேற்பில் இந்த நிறுவனங்களின் வியாபார மூளைக்கு முக்கிய பங்கு இருந்ததாகவே தோன்றுகிறது.

 

மறுபுறத்தில் அந்தச் சிறுமி பாடிய பாடல்களையும் அவரது மாமா ஒருவர் காணாமல் ஆக்கப்பட்டவர் என்பதையும் கூட்டிக் கழித்து, கில்மிஷா இசையூடாக மக்கள் திரட்டுவார், தமிழ்த் தேசியத்தின் போராட்டத்துக்கு வலுவூட்டுவார் என்று இன்னொரு தரப்பு அவர் இறுதிச் சுற்றுக்கு வர முன்னரே கட்டியம் கூற ஆரம்பித்து இருந்தது. அவரது அனுமதி இல்லாமலே அவரை ஒரு போராளியாக்கிக் கொண்டாடத் தொடங்கியது. ஈழத்து இசைக்குயில் என்று செல்லப் பெயர் வைத்து மகிழ்ந்தது. மறுபுறத்தில் கில்மிஷாவின் பெயரில் இயங்கும் Kilmisha Yaazhisai Facebook பக்க அட்மினும் கில்மிஷாவை வேறொருவராக காட்டுவதில் முனைப்பாக இருந்தார்.

 

இவ்வாறான செயற்பாடுகளும் சில ஊடகங்களும் சேர்ந்து  கில்மிஷாவின் வயதுக்கு மீறிய ஒரு பிம்பத்தைக் கட்டியெழுப்பின. இவையெல்லாம் சேர்ந்து  எவ்வாறான விளைவுகளை ஏற்படுத்தும் என்று கில்மிஷாவின் பெற்றோரோ நலன் விரும்பிகளோ ஆரம்பத்திலேயே ஊகித்திருக்க மாட்டார்கள் என்றே நம்புகிறேன். மிகைப்படுத்தப்பட்ட கொண்டாடலும் “இசைப் போராளி” என்ற லேபலும் அவரது வெற்றிக் கிரீடத்தை முள் கிரீடமாக மாற்றப் போகிறது என்று நினைத்திருக்க மாட்டார்கள்.

 

ஆனால் ஒரு வாரத்துக்குள்ளேயே எல்லாமே தலைகீழாக மாறிப் போனது. இலங்கையின் ஜனாதிபதி ரணில் கில்மிஷாவை நேரில் சந்தித்து சான்றிதழும் வழங்கி புகைப்படமும் எடுத்துக் கொண்டார். அப்படி இலங்கையின் தங்க மகள் என்ற புதிய லேபிளும் அவர் மேல் ஒட்டப்பட்டது. உடனேயே வெகுண்டெழுந்த எமது தமிழ் வலைத்தளப் போராளிகள் நிலையெடுத்து கில்மிஷா மீது தமது தாக்குதலை ஆரம்பித்தார்கள். ஒரே நாளில் போராளி துரோகியானார்.

 

இந்த இடத்தில இன்னொரு சம்பவத்தையும் ஞாபகப்படுத்துவது பொருத்தமாக இருக்கலாம். “மெனிக்கே மகே ஹித்தே” என்ற ரீமேக் பாடல் மூலம் உலக அரங்கில் இலங்கையைப் பிரபலப்படுத்தியதற்காக யொஹானி என்ற பாடகிக்கு அப்போதைய சனாதிபதி மகிந்த கொழும்பி வீடு கட்ட காணித் துண்டொன்றை வழங்குவதாக அறிவித்தார். அப்போது எமது தமிழ் வலைத்தளப் போராளிகள், இதுவே ஒரு தமிழ்ப் பெண் பாடி இலங்கைக்குப் புகழ் சேர்த்திருந்தால் இப்படிச் செய்வார்களா என்று கம்பு சுத்தினார்கள்.

 

தற்போது அவர்கள் சொன்னது போலவே ஒரு தமிழ்ப் பெண் இலங்கைக்கு பெருமை சேர்த்திருக்கிறார். இதைச் சொல்லி நாட்டின் சனாதிபதியும் சான்றிதழ் வழங்கியிருக்கிறார். இந்த சூழலில் இவர் உண்மையில் மகிழ்ச்சியல்லவா கொள்ள வேண்டும். அல்லது, ஏன் கில்மிஷாவுக்கு வீடு கட்ட வெள்ளவத்தையில் காணி கொடுக்கவில்லை என்றல்லவா கம்பு சுத்தியிருக்க வேண்டும். மாறாக அரசியல் அறியாத ஒரு சிறுமிக்கு எதிராக கம்பு சுத்துவதில் என்ன நியாயம் இருக்கிறது?

 

பாவம் அந்தச் சிறுமி, தன்னை ஏன் போராளி என்றார்கள், பிறகு ஏன் சிலர் தன்னைத் துரோகி என்றார்கள் என்பது அவருக்கு இன்றுவரை முழுமையாகப் புரிந்திருக்குமா என்பது சந்தேகம்தான். ஆனால் இப்படி பாரட்டியவர்களே வசை பாடியதில் நிச்சயம் அந்தச் சிறுமியைப் பாதித்திருக்கலாம். ஆனால் அதுவும் நல்லதுக்கே. ஏனெனில் எமது தமிழ் சமூகம் தொடர்பாக இந்த வயதிலேயே அவருக்கு நல்லதொரு பாடம் கிடைத்திருக்கிறது. முன்னால் சென்றால் கடிக்கும் பின்னால் நின்றால் உதைக்கும் சமூகம்தான் தமிழ்ச் சமூகம் என்பதை அறிந்திருப்பாள்.

 

அந்தச் சிறுமி ஒரு வைத்தியராவதே தனது இலட்சியம் என்று சொல்லியிருக்கிறாள். அவள் பாடுவதிலும் ஆர்வம் காட்டுகிறாள். அவள் பாடிக் கொண்டே படிக்கட்டும். படித்துக் கொண்டே பாடட்டும். அவளை அவள் பாட்டில் விட்டுவிடுங்கள்.

 

“Kilmisha Yaalizhai” Facebook account அட்மின் தம்பி, நீங்களும் கொஞ்சம் அடக்கி வாசிக்கப் பழகுங்கள்!

 

நன்றி! வணக்கம்!!

 

-    வீமன் -

  அடி சறுக்கும் அனுர?   தேசிய மக்கள் சக்தி ஜனாதிபதி தேர்தலில் வடக்கு, கிழக்கில் பெரும் வெற்றியைப் பெறுவோம் என்ற நம்பிக்கையுடன் இருந்திரு...