Monday, 28 April 2025

 

அடி சறுக்கும் அனுர?

 



தேசிய மக்கள் சக்தி ஜனாதிபதி தேர்தலில் வடக்கு, கிழக்கில் பெரும் வெற்றியைப் பெறுவோம் என்ற நம்பிக்கையுடன் இருந்திருக்கவில்லை. அதனால் அதிக அழுத்தம் இல்லாமலே பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டார்கள். ஆனால் வடக்கு, கிழக்கில் அவர்கள் எதிர்பார்த்ததை விடவே மக்கள் அள்ளிக் கொடுத்தார்கள். தமிழ்த் தேசியம் பேசும் கட்சிகள் 9 ஆசனங்களைப் பெற, NPP 12 ஆசனங்களைப் பெற்று, வன்னி மற்றும் மட்டக்களப்பு நீங்கலாக வடக்கு, கிழக்கில் அதிக ஆசனங்களைப் பெற்றுக் கொண்டது.

 

அதன் பின்னர் தாம் தமிழரின், குறிப்பாக வடக்கு வாழ் தமிழரின் இதயங்களை வென்று விட்டதாக பிரச்சாரம் செய்வதை தனது பகுதிநேர வேலையாகவே NPP மேற்கொள்ளத் தொடங்கியது. ஆனால் வடக்கு, கிழக்கு மக்கள் அனுரவிடம் எதை எதிர்பார்த்து அவரது கட்சி பாராளுமன்றில் அறுதி பெரும்பான்மையைப் பெறத் தமது பங்களிப்பையும் வழங்கினார்களோ அந்த எதிர்பார்ப்புகளை இன்னமும் நிறைவேற்றவில்லை என்பது ஒருபுறம் இருக்க, இனிவரும் நாட்களில் நிறைவேற்றுவார்கள் என்ற நம்பிக்கையையும் வழங்க இந்த அரசு தவறி வருகிறது.

 

குறிப்பாக வடக்கு, கிழக்கு போரினால் பல்வேறு வகையில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் பல முக்கிய விடயங்களில் அனுர அரசின் வாக்குறுதிக்கு மேலாக ஆக்கபூர்வமான செயற்பாட்டையே எதிர்பார்க்கிறார்கள். அவை என்னவென்று அனுரவுக்கு மட்டுமல்ல, வடக்குக் கிழக்கின் NPP பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் நன்றாகவே தெரியும்.

 

யாழில் நடைபெற்ற கூட்டத்தில், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்களின் வலியைத் தன்னாலும் உணரமுடியும் என்றும், தனது குடும்பமும் அவ்வாறு ஒரு குடும்ப உறுப்பினரை இழந்த குடும்பம் என்றும் கூறியிருந்தார். ஆனால் அவர் பதவிக்கு ஆறு மாதம் கடந்த நிலையிலும் அவரது கட்சி பெரும்பான்மையுடன் பதவிக்கு வந்து ஐந்து மாதங்கள் கடந்த நிலையிலும் இன்று வரை அரசு எந்த ஆக்கபூர்வமான நடவடிக்கையை எடுத்ததாகத் தெரியவில்லை. அவர்களை எது தடுக்கிறது என்றும் புரியவில்லை. அதேபோல, ஆரம்பத்தில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளை விரைவில் விடுவிப்போம் என்று வாக்களித்த அரசு பின்னர் அவ்வாறு கைதிகள் யாரும் தடுப்புக் காவலில் இல்லை என்று சொல்லி எதிர்பார்ப்போடு இருந்த குடும்பங்களின் எதிர்பார்ப்பில் மண் அள்ளிக் கொட்டி விட்டது.

 

இதேபோல இந்த அரசு வடக்குக் கிழக்கில் முப்படைகள் வசம் இருக்கும் தமிழ் மக்களின் காணிகள் படிப்படியாக ஒப்படைக்கப்படும் என்றும் அனுர வாக்குறுதி அளித்திருந்தார். அப்போது, படையினர் கட்டுப்பாட்டில் விவசாய நிலங்களும் உள்ளன என்பதை தான் அறிவேன் என்றும், அவை தொடர்பாக ஒரு ஆய்வு செய்யப்பட்டு, அவை உண்மையில் முன்னர் விவசாயக் காணிகளாக இருந்தன எனக் கண்டறியப்பட்டால் அவை விடுவிக்கப்படும் என்றும் கூறியிருந்தார். இதன்மூலம் இவர் விவசாயக் காணிகளை விடுவிப்போம், ஏனையவற்றை விடுவிக்க மாட்டோம் என்று சொல்ல வருகிறாரா என்ற கேள்வியும் எழுகிறது. அதற்கு மேலாக எப்போது அந்த ஆய்வு செய்யப்படும், எப்போது காணிகள் விடுவிக்கப்படும் என்ற கால எல்லையும் அவரால் சொல்லப்படவில்லை.

 

 அதேபோல வடக்கின் மீனவர்களின் வாழ்வாதாரப் பிரச்சனைக்கும் மீன்பிடி அமைச்சரும் சரி, NPP அரசும் சரி இன்னமும் தீர்ப்போம் என்று சொல்கிறதே தவிர இந்தியாவுடன், குறிப்பாக தமிழக அரசுடன் சுமூகமான பேசிப் பிரச்சனையைத் தீர்ப்பதற்கான முதல் அடியையே எடுத்து வைத்ததாகத் தெரியவில்லை. வடக்கிற்கு வரும் அமைச்சர் சந்திரசேகரன் அதுபற்றிப் பேசும்போது அதற்கு தீர்வு தரப்படும் என்று சொன்னாலும் அவரும் அது தொடர்பாக காத்திரமான செயற்பாட்டில் இறங்கியதாகத் தெரியவில்லை.

 

இவற்றை விட இவர் மீதான நம்பிக்கையை சிதைக்கும் வகையில் அவர் பேசிய மேலும் இரண்டு விடயங்கள் அமைந்துள்ளன. அவற்றுள் முக்கியமானது தையிட்டி தொடர்பானது. தையிட்டியில் தனியார் காணியில் சட்டவிரோதமாக கட்டப்பட்ட விகாரைப் பிரச்சனை தொடர்பாக வடக்கின் அரசியல் கட்சிகளோ தெற்கின் கட்சிகளோ தலையிடக் கூடாது என்கிறார். வடக்கில் இனவாதம் பேசும் கட்சிகள் இதில் தலையீடும்வரை அந்தப் பிரச்சனையைத தீர்க்க எதுவும் செய்ய முடியாது என்கிறார். அது விகாரதிபதியும் அந்தப் பிரதேச மக்களும் நாகதீப விகாரதிபதியும் பேசித் தீர்க்க வேண்டும் என்கிறார். இத்தனைக்கும் அந்த இடத்தை ஆக்கிரமித்தது அவருக்கு கீழே இருக்கும் படையினர் என்பது அவருக்கும் தெரியும். இலங்கையில் ஊழலற்ற, சட்டத்தின் ஆட்சியைக் கொண்டு வருவோம் என்று கூறும் ஒரு நாட்டின் தலைவர் இப்படி சுற்றி வளைத்து பேசுவதும் நிலத்தை இழந்த மக்களின் வலியை உணர மறுப்பதும், இவரும் சிங்கள பௌத்த பேரினவாத அரச இயந்திரத்தின் சாரதிதானோ என்று எண்ண வைக்கும் வகையில் அமைந்துள்ளது.

 

அதேபோல, உள்ளூராட்சி சபைகள் தொடர்பாகப பேசும்போதும், NPPயினர் கைவசப்படும் நகரசபை, மாநகரசபை போன்றவற்றுக்கு அவை கேட்கும் நிதி வழங்கப்படும் என்றும் ஏனைய ஊழல் கட்சிகள் கவசமாகும் சபைகளின் நிதிக் கோரிக்கைகள் ஓன்று பத்துத தடவைகள் மீளாய்வு செய்தே நிதி வழங்குவது தொடர்பில் முடிவெடுக்கப்படும் என்றும் கூறினார். அதன் பின்னர் அடுத்த கூட்டத்தில் தான் அந்த அர்த்தத்தில் கூறவில்லை என்று அதை மறுத்திருந்தார்.

 

ஏற்கனவே NPP கட்டமைப்பில் உள்ள பலர் முன்னுக்குப் பின் முரணாக பேசுவதாலும் பொய்யான தகவல்களைப் பகிர்ந்ததாலும் அந்தக் கட்சி கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி வரும் நிலையில், இன்னமும் அந்தக் கட்சி தமது துருப்புச் சீட்டாக நினைத்து உள்ளூராட்சித் தேர்தலில் வெல்ல அவருடைய நாவன்மை பயன்படும் என்று நம்பி இறக்கிய அனுரவே ஆங்காங்கு சறுக்குவதை அவதானிக்க முடிகிறது.

 

ஈஸ்டர் தாக்குதல், பட்டலந்த போன்ற விடயங்களில் அனுரவும் அவர் கட்சியும் காட்டும் அக்கறை ஏன் சிறுபான்மையினர் தொடர்பான விடயங்களில் காட்டப்படவில்லை என்ற கேள்வி, விடை தரப்படாமல் காற்றில் அலைந்து கொண்டிருக்கிறது.

 

-    வீமன் -

Wednesday, 16 April 2025

 

வடக்கு -கிழக்கில் முகாமிடும் தோழர் கூட்டம்

 



ஜனாதிபதித் தேர்தலில் தோழர் அனுர வென்ற பின்னர், வடக்குக் கிழக்கிலும் வெற்றி பெறவேண்டும் என்று மூலோபாயத்துடன் NPP செயற்பட்டு ஜனாதிபதியும் நேரடியாகச் பிரச்சாரத்தில் இறங்கியிருந்தார். அவர் யாழுக்கும் சென்றதுடன் மக்களிடம் ஆதரவு கேட்டிருந்தார். அப்போது அவர் ஆற்றிய உரை உண்மையில் வடக்கின் வாக்காளர்கள் பலரைக் கவர்ந்திருந்தது என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

 

ஆனால் அதனால் மட்டுமே வடக்குக் கிழக்கு மக்கள் NPPயின் கட்சிக் கொள்கைகளால் கவரப்பட்டு அந்தக் கட்சிக்கு வாக்களித்தார்கள் என்று சொல்லிவிட முடியாது. மகிந்த கட்சி மீது இருந்த வெறுப்பு, ரணில் மற்றும் சஜித் ஆகியோர் தமிழருக்கு எதுவும் செய்யப் போவதில்லை என்ற கணிப்பு, இதுவரை வாக்களித்த கூட்டமைப்பு சிதைந்து தனித் தனியாகப் பிரிந்து போட்டியிட்டது என்பனவும் சேர்ந்தே NPPயின் வெற்றியைச் சாத்தியமாக்கியது.

 

ஆனால் இந்த அரசு அதீத பெரும்பான்மை பெற்றாலும் தான் சொன்ன விடயங்கள் எதையும் நிறைவேற்றவில்லை என்ற அதிருப்தி இலங்கை முழுவதும் இருந்தாலும் வடக்கு மற்றும் கிழக்கில் அது கொஞ்சம் அதிகமாகவே இருக்கிறது எனலாம். குறிப்பாக இறுதி யுத்தத்தின் பின்னர் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் ஜனாதிபதி எந்த விதமான காத்திரமான நடவடிக்கையையும் செய்யவில்லை. மாறாக அரசு சிறையில் அவ்வாறு கைதிகள் யாரும் இல்லை என்று சொல்லி முடித்து விட்டது. ஆகக் குறைந்தது அவர்களுக்கு என்ன நடந்தது என்ற விசாரணையை முன்னெடுக்கவோ நிச்சயமாக உயிரோடு இல்லை எனத் தெரிந்தவர்களின் உறவினர்களிடம் பகிரங்க மன்னிப்புக் கோரவோ அரசு தயாராக இல்லை.

 

மாறாக தமிழ் மக்கள் அவற்றை மறந்துவிட வேண்டும் என்ற எண்ணமே அரசுக்கு இருப்பதாகவே ஊகிக்க வேண்டியுள்ளது. தற்போது பட்டலந்த விவகாரத்தில் சர்வதேச விசாரணை செய்யவும் தயார் என்ற இதே அரசுதான் சில வாரங்களுக்கு முன்னர் தமிழர் படுகொலைகள் தொடர்பாக சர்வதேச விசாரணையை அனுமதிக்கப் போவதில்லை என்று உறுதிபடுத்தியது.. மறுபுறத்தில், முப்படையினர் கைப்பற்றியிருக்கும் தனியார் காணிகளை விடுவிப்பதிலும் அரசு சரியான இதய சுத்தியுடன் செயற்படவில்லை என்பதையே அவதானிக்க முடிகிறது. தேர்தல் வரும்போது மட்டும் குறுகிய தூர வீதிகளைத் திறப்பது, ஒரு சிறிய நிலபரப்பை மட்டும கையளிப்பது, நிபந்தனைகளுடனான வீதித் திறப்பு என அரசியல் சித்து விளையாட்டையே இந்த அரசும் செய்கிறது.

 

நவம்பரில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னர் தோழர் அனுரவின் யாழ் கூட்டம் அவர்கள் அணிக்குப் பலம் சேர்த்திருந்தது. ஆனால், இம்மாதம் தோழர் அனுர மற்றும் தோழர் ஹரணியின் வடக்கு, கிழக்குப் பயணங்களும் பிரசாரங்களும் தற்போதே கட்சி மீதான எதிர் விமர்சனங்களை ஏற்படுத்தி வருகின்றன என்பதே கள நிலைமையாக இருக்கிறது.

 

குறிப்பாக மாவிட்டபுர முருகன் கோவில் கும்பாபிசேக நாளில் அங்கு சென்ற பிரதமர் ஹரிணியின் பாதுகாப்புக் கருதி ஏற்படுத்தப்பட்ட பாதுகாப்புக் கெடுபிடிகள் மற்றும் அதிரடிப்படையினர் காலணியுடன் ஆலய வளாகத்தில் உலாவியது பகதர்களுக்கு பெரும் கசப்புணர்வையே ஏற்படுத்தியிருந்தது. மறுபுறத்தில், ஹரிணியின் செல்வாக்கைப் பயன்படுத்த நினைத்த NPP ஒன்றிற்கு மேற்பட்ட இடங்களில் தேர்தல் விதிமுறைகளை மீறியதும் கட்சி மீதான எதிர் விமர்சனங்களை  ஏற்படுத்தியது.

 

இவ்வாறு விமர்சனங்கள் எழுந்த நிலையில், அடாத மழையிலும் விடாது குடை பிடிப்பது போல அமைச்சர் சந்திரசேகரன், “மற்றைய கட்சிகள் முன்னர் செய்யாத ஒன்றையா நாங்கள் செய்துவிட்டோம்?” என்று தமது தேர்தல் விதிமுறை மீறல்களை நியாயப்படுத்த முனைந்தது, இவர்களும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான் என்றே எண்ண வைத்தது.

 

இதே நேரம், கிழக்கில், மட்டக்களப்பில் தோழர் அனுர பேசிய ஒரு விடயம், அவரைப்பற்றி தமிழ் மக்கள் பலர் கடந்த ஒரு வருடத்தில் வைத்திருந்த நல்லபிப்பிராயத்தை சிதைக்கும் வகையில் அமைந்து விட்டது.

 

கடந்த சில வருடங்களாகவே தையிட்டி சட்டவிரோத விகாரை விடயம் தமிழ் அரசியல் பரப்பில் ஒரு பேசு பொருளாகவே இருந்து வருகிறது. அதனாலேயே அந்த விடயம் கடந்த ஜனவரி மாதம் அனுர யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டபோது அதுவும் ஒரு பேசு பொருளாக்கப்பட்டது. அன்று அதற்கு சரியான பதில் சொல்லாது தவிர்த்துக் கொண்டார். அவர் பதில் சொல்ல முன்னர் ஒரு யாழ் எம்பி ஒருவர் தலியீடு அனுரவின் உள்ளக் கிடக்கையை மக்கள் அறிந்து கொள்ளாமல் செய்துவிட்டது.

 

ஆனால் இரண்டு மாதங்கள் கழித்து ஏப்ரல் 12 இல் மட்டக்களப்பில் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்ட  அனுரவின் பேச்சு  அனுரவினதும் அரசினதும் நிலைப்பாட்டைத தமிழர்கள் அறிந்து கொள்ள உதவியது எனலாம். அவர் தனது உரையில் தனியார் காணிக்குள் சட்டவிரோதமாக கட்டப்பட்ட விகாரை தொடர்பில் அந்தக் காணி உரிமையாளருக்கு நியாயம் வழங்க வேண்டிய நிலையில் இருந்து விலகியது மட்டுமில்லாமல், அங்கு விகாரை கட்டப்பட்டதை நியாயப்படுத்தும் வகையிலேயே பேசியிருந்தார்.

 

பொதுவாக கோவில்கள், விகாரைகள் தொடர்பான பிரச்சனைகளைப் பற்றிப பேசுவதைப் போல தையிட்டி விகாரை தொடர்பாக விகாராதிபதியும் மக்களும் சேர்ந்து முடிவெடுக்க வேண்டிய விடயம் என்று சொல்லி அந்த விகாரையை கட்டிய முந்தைய அரசின் குற்றத்திற்கு வெள்ளையடித்ததையும் பார்க்க முடிந்தது. தனது பொறுப்பைத் தட்டிக் கழித்ததையும் அவதானிக்க முடிந்தது. சட்ட விரோத விகாரைக்கு எதிரான மக்கள், மற்றும் தமிழ்க் கட்சிகளின் போராட்டத்தை மலினமான அரசியல் உத்தி என்றும் அது இனவாத அரசியல் என்றும் விமர்சித்தார். இவ்வாறு தனது நிலைப்பாட்டை நைச்சியமாக வெளிப்படுத்தி தானும் சிங்கள பேரினவாத அரச இயந்திரத்தின் ஒரு சாரதி மட்டுமே என்பதை வெளிப்படுத்தியிருந்தார்.

மொத்தத்தில் வடக்கு கிழக்கில் மெல்லச் சரிந்து வரும் தமது செல்வாக்கை நிமிர்த்த யாழுக்கு விரைந்த தோழர் ஹரணியின் பயணமும் கிழக்கில் தோழர் அனுரவின் பயணமும் அவர்களின் கட்சிக்குப் பலம் சேர்க்கத் தவறியுள்ளது. மெல்ல மெல்ல NPPயின் சாயமும் வெளுக்கத் தொடங்கியுள்ளது.

 

-    வீமன் -

  அடி சறுக்கும் அனுர?   தேசிய மக்கள் சக்தி ஜனாதிபதி தேர்தலில் வடக்கு, கிழக்கில் பெரும் வெற்றியைப் பெறுவோம் என்ற நம்பிக்கையுடன் இருந்திரு...