Saturday, 20 August 2022

 

மனித – யானை முரண்பாடுகள்

இயற்கையாகவே எமது சூழல் சமநிலையில் முக்கிய பங்கு வகிக்கும் விலங்குகளான யானைகள் பல நூற்றாண்டுகளாகவே மனிதர்களால் கொல்லப்படுவதும் பல்வேறு வகைகளில் தமது தேவைகளுக்காக பயன்படுத்தப்படுவதும் மிக மோசமான சூழ்நிலையில் வளர்க்கப்படுவதும் ஒருபுறம் இருக்க, கடந்த சில தசாப்தங்களாக அதிகம் பேசப்படும் இன்னொரு விடயம்தான் மனித – யானை முரண்பாடுகள். இந்தியா, இலங்கை மற்றும் ஆபிரிக்கா போன்ற நாடுகளில் விவசாயம் செய்வோர்களுக்கும் காட்டு யானைகளுக்கும் இடையில் ஏற்படும் மோதல்கள் இருபக்கமும் உயிரிழப்புகளை ஏற்படுத்துவதோடு, மனிதர்களுக்கு பொருளாதார ரீதியாகவும் நட்டத்தை ஏற்படுத்துகின்றன.

 

யானைகள் கூட்டமாக வாழும் தன்மை கொண்டதுடன் நீண்ட தூர சுற்றுப்பாதையில் பயணிக்கும் வழக்கம் கொண்டவை. 200 – 300 ஆண்டுகளுக்கு முன்னர் யானைகளின் வழித்தடங்களில் மனிதர்கள் குறுக்கிடுவது அரிதாக இருந்தமையால் ஏற்படக்கூடிய மனித உயிரிழப்புகளும் குறைவாகவே இருந்தன. ஆனால் பல நாடுகளில் சனத்தொகை அதிகரிப்பை அடுத்து யானைகளை வாழும் பகுதியை அண்டி அல்லது அவற்றின் வழித்தடத்தை அடைத்து தமது வாழிடங்களை உருவாக்குவதும் காட்டின் பகுதிகளை விவசாய நிலமாக மாற்றுவதும் கடந்த ஒரு நூற்றாண்டில் அதிகரித்துள்ளது. இதனால் யானைகள் உணவு தேடியும், குடிநீருக்காகவும் கிராமங்களுக்குள் புகுந்து அங்கு பெரும் சேதங்களைச் செயவதற்கான சூழ்நிலையை நாங்களே உருவாக்கியிருக்கிறோம்.

 

நாட்டில் இருக்கும் வளங்கள் அனைத்துமே மனிதர்களுக்கே உரியது என்ற மனப்பாங்குடன் நாம் தொடர்ச்சியாக காடுகளை எமது தேவைகளுக்காக அழித்து யானைகள் வாழும் பிரதேசத்தை தொடர்ச்சியாக குறைத்துக் கொண்டு வருகிறோம். யானைகள் காலம் காலமாக பயணிக்கும் வழித்தடங்களை அடைத்து கட்டுமானங்களை எழுப்பி வருகிறோம். காட்டுக்குள் நுழைந்து எமது தேவைகளுக்காக மரங்களை வெட்டியழிக்கிறோம்.

 

காடுகளை அழிப்பதன் மூலமும் நதிகளை எமது தேவைகளுக்காக திசை திருப்புவதன் மூலமும் யானைகளுக்கு காட்டுக்குள்ளேயே குடிநீர் கிடைக்கும் சந்தர்ப்பங்களை இல்லாது செய்கிறோம். அவை வாழும் காடுப்பகுதியில் பிளாஸ்டிக் கழிவுகளோடு உணவுக் கழிவுகளைக் கொட்டுவதன் மூலம் அவை அவற்றை உண்டு நோய்வாய்ப்படவும் இறக்கவும் காரணமாக இருக்கிறோம். இவ்வாறு மனிதர்கள் கொட்டும் கழிவுகளை யானைகள் உண்ணும் சூழ்நிலையை இலங்கையின் ஹபரண பகுதியில் நாளாந்தம் நீங்களே பார்க்க முடியும்.

 

இத்தனை கொடுமைகளையும் நாமே செய்துவிட்டு யானைகள் எங்களைத் துன்புறுத்துவதாக சொல்லிக் கொண்டு யானைகளை கொன்று விடுகிறோம். அல்லது மின்சார வேலிகள் போட்டு அவற்றைத் துன்புறுத்துகிறோம். யானைக்கு அன்னாசி பழத்திற்குள் வெடிமருந்து வைத்துக் கொடுத்து அதைக் கொல்கிறோம். யானைமீது எரிபொருளை வீசி அதற்கு தீ வைத்து உயிரோடு அதனைத் துன்புறுத்துகிறோம். கடந்த வாரத்தில் கூட வன்னியில் ஒரு தோட்ட நில உரிமையாளர் சட்டவிரோதமாகப போட்ட மின்சார வேலியில் மாட்டி ஒரு 25 வயதான யானை இறந்திருக்கிறது.

 

யானைகளைத் தடுக்க மின்சார வேலிகளைப் போட்டு அவை யானைகளைத் தடுத்து விடும் என்று நாங்கள் நினைத்தாலும் சில இடங்களில்  புத்திசாலிகளான யானைகள் தமது தந்தத்தினூடான மின்சாரம் பாயாது என்பது கண்டறிந்து, தந்தத்தை பாவித்து வேலிகளை உடைத்து கிராமங்களுக்குள் நிலைவதும் ஆங்காங்கு நடைபெறுகிறது.

 

உண்மையில் யானைகள் மனிதர்கள் வாழும் பகுதிக்கு வருவதைத் தடுக்க இவ்வாறு மின்சார வேலி, யானைகளுக்கு பொறி வைத்தல், நஞ்சு வைத்தல் சுட்டுக் கொல்லுதல் போன்ற குரூரமான வழிகளை விட இயற்கையான பல வழிகள் உள்ளன. அதில் ஒன்றுதான் எல்லைப் பகுதியில் அதிகளவில் தேன் கூடுகளை அமைத்தல். இதன் மூலம் மனிதர்களுக்கு இரட்டை நன்மைகள் கிடைக்கின்றன. யானைகள் ஊருக்குள் வருவது தடுக்கப்படுவதுடன் தேன் மூலம் உபரி வருமானமும் பெறப்பட முடியும்.

 

அதேபோல மரங்களை நெருக்கமாக வளர்த்து பச்சை வேலிகளை உருவாக்குவதன் மூலமும் யானைகள் கிராமங்களுக்குள் நுழைவதைத் தடுக்க முடியும். உதாரணமாக வியட்நாமில் Gledatsia sinensis என்ற விரைவாக வளரக்கூடிய முள்மரம் எல்லைகளில் நடப்பட்டு யானைகள் வருவதைக் கட்டுப்படுத்த முயற்சி எடுத்துள்ளார்கள். இவ்வாறான மரங்களை நெருக்கமாக நடுவதால் சட்டவிரோத வேட்டைக்காரர்கள் காடுகளுக்குள் செல்லுவதும் தடுக்கப்படுகிறது. எனவே இதனால் இரட்டை நன்மை கிடைக்கிறது என்றும் சொல்லலாம்.

 

இதேபோல இலங்கை இந்தியா போன்ற நாடுகளில் பனைமரங்களை நெருக்கமாக நட்டு இயற்கை வேலிகளை அமைத்து யானைகள் மனிதர்கள் வாழும் பகுதிக்கு வருவதைத் தடுக்க முடியும் என்றும் சொல்கிறார்கள். இதைவிடவும் வேறு பல இயற்கை முறைகள் மூலமும் யானைகள் ஊருக்குள் வருவதைக் கட்டுப்படுத்த முடியும்.

 

இந்த இடத்தில், நான் அண்மையில் யானை – மனித மோதல் தொடர்பாக Facebook இல் பார்த்த ஒரு பதிவு பற்றியும் கொஞ்சம் பேசலாம் என்று நினைக்கிறேன்.

அந்தப் பதிவின்படி இலங்கையில் 1970-2005 வரை ஒரு யானைக்கு 6000 மனிதர் என்று இருந்த விகிதாசாரம் அதன்பின்பு படிப்படியாக குறைவடைந்து தற்பொழுது ஒரு யானைக்கு 3000 மனிதர்கள் என்ற விகிதத்தில் வந்து நிற்கின்றது. அதேநேரம் 2015 இல் 63 ஆக இருந்த மனித உயிரிழப்பு 2019 இல் 114 ஆகியுள்ளது யானை-மனித முரண்பாட்டின் தீவிரத்தன்மையை தெளிவாகக் காட்டுவதாக ஒரு நண்பர் எழுதியிருந்தார். அதுமட்டுமன்றி ஆஸ்திரேலியாவில் விலங்குகள் எண்ணிக்கை அதிகரிக்கும்போது மட்டுப்படுத்தப்பட்ட அளவில் கங்காருக்கள், ஒட்டகங்கள் கொல்லப்படுவது  போல இலங்கையிலும் யானைகளின் எண்ணிக்கையையும் கட்டுப்படுத்த வேண்டும் என்று சொல்லியிருந்தார்.

இவர் கூரும் தரவுகளில் எந்த விதமான தவறும் இல்லை, ஆனால் அவரின் யோசனையுடன்தான் நான் முரண்பட்டு நிற்கிறேன். ஏனெனில் ஒரு நாட்டில் அல்லது பிரதேசத்தில் குறித்த ஒரு விலங்கின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த முன்னர் அவற்றின் எண்ணிக்கை அதிகரிப்பால் ஏற்பட்டும் சாதக பாதகம் கொல்வதால் ஏற்படும் நன்மை என்பனபற்றி நன்கு ஆய்வு செய்தே முடிவெடுப்பது வழமை. இலங்கையில் காட்டுப்பன்றி, மான், மரைகளை இவ்வாறு கட்டுப்படுத்தப்பட்ட அளவில் கடந்த காலங்களில் வேட்டையாட அனுமதி வழங்கப்பட்டதே இதற்கு நல்ல உதாரணம் எனலாம்.

 

வடக்கு புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த காலத்தில் அவர்களும் இவ்வாறான வழிகளைப் பின்பற்றி காட்டுப்பன்றி, மரைகளை வேட்டையாட அனுமதி கொடுத்ததையும், அவற்றின் தொகை குறைந்த காலங்களில் அனுமதி மறுத்தத்தையும் இங்கு குறிப்பிடுவது பொருத்தமாக இருக்குமென்று நம்புகிறேன். ஆனால் அவர்களும் ஒருபோதும் யானைகளைக் கொல்ல இடம் கொடுத்ததில்லை என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

 

 

இலங்கையில் யானைகளின் எண்ணிக்கையைப் பொறுத்தவரை கடந்த 50 வருட வரலாற்றைக் கடந்து, கடந்த 200 வருடத் தரவுகளைப் பார்த்தால் இன்றுள்ள யானைகளின் எண்ணிக்கை மிகையானவையா இல்லையா என்ற தெளிவு உங்களுக்குக் கிடைக்கும். ஏனெனில் 19ம் நூற்றாண்டில் இலங்கையில் மக்கள் தொகை 3 மில்லியனாக இருந்தபோது இலங்கையில் 19,500 யானைகள் இருந்திருக்கின்றன. அதாவது 153 மனிதர்களுக்கு ஒரு யானை. பின்னர் 20ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் அது 450 மனிதர்களுக்கு ஒரு யானையாக மாறியிருக்கிறது. 1920இல் அதுவே 700 பேருக்கு ஒரு யானையாகக் குறைந்துள்ளது. இவ்வாறு குறைவடைந்து சென்ற யானைகளின் எண்ணிக்கை 1970 இல் நண்பர் குறிப்பிட்டது போல 6,000 பேருக்கு ஒரு யானை என்னும் அளவிற்கு யானைகளின் தொகை வீழ்ச்சியடைந்தது.

 

அதன் பின்னர் அரசு எடுத்த முயற்சிகளின் காரணமாகவே யானைகள் வேகமாக அழிவடைவது தடுக்கப்பட்டது. அவற்றைப் பாதுகாக்கப் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. சரணாலயங்கள் உருவாக்கப்பட்டன. இவற்றின் விளைவாகவே இன்று அவற்றின் எண்ணிக்கை 7500 ஆக அதிகரித்துள்ளது.

 

மேலோட்டமாகப் பார்த்தல் கடந்த 50 வருடத்தில் யானைகளின் எண்ணிக்கை மூன்றரை மடங்கு அதிகரித்து இருப்பது போன்றும் இது ஆபத்தான எண்ணிக்கை போன்றும் தோன்றக் கூடும். ஆனால் யானைகள் கடந்த நூறு வருடத்துக்கு முன்னர் இருந்த எண்ணிக்கையைத்தான் தற்போது எட்டியிருக்கின்றன. அதேநேரம் 200 வருடங்களுக்கு முன்னர் இருந்த எண்ணிக்கையின் பாதியைத்தான் எட்டியிருக்கின்றன. ஆனால் மறுபுறத்தில் மனிதர்களின் எண்ணிக்கை 100 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்ததைவிட நான்கு மடங்கு அதிகரித்துள்ளது.

 

உண்மையில் யானைகள் எமது இடத்திற்குள் வரவில்லை. நாங்கள்தான் அவற்றின் இடத்திற்குள் அத்துமீறிச் சென்று இடங்களைப் பிடித்து வைத்திருக்கிறோம். நாற்பது வருடங்களுக்கு முன்னர் நடைமுறைப்படுத்தப்பட்டு மக்கள் அதிகம் குடியேற்றப்பட்ட அனுராதபுரம், பொலன்னறுவை மாவட்டங்களிலேயே அதிக எண்ணிக்கை மனித – யானை முரண்பாடுகள், சொத்து, உயிர் சேதம் காணப்படுவதே இதற்கு நல்ல உதாரணம்.

 

அதிலும் இன்றுள்ள 7500 யானைகளில் 1500 வரையானவை மட்டுமே காடுகளில் வசிக்கும் சூழலில் அவற்றைக் கொன்று அவற்றின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த வேண்டும், அதன் மூலம் மனித – யானை முரண்பாடுகளைக் குறைக்க முடியும் என்பது பொருத்தமான தீர்வாகாது. மாறாக இயற்கையான சில வழிமுறைகளைப் பயன்படுத்தி யானைகளை மனிதர்கள் வாழும் பகுதிக்குள் வராது தடுப்பதே சிறந்த வழியாக அமையும்.

-    வீமன் -

Reference:

https://www.gvicanada.ca/blog/4-reasons-need-elephants/

https://www.ft.lk/article/557390/Elephant-human-conflict--the-most-crucial-issue-not-even-identified

https://www.sundayobserver.lk/2020/08/16/impact/palmyrah-fence-solution-human-elephant-conflict

https://xploreourplanet.com/land/are-sri-lankan-elephants-endangered#:~:text=The%20government%20and%20people%20of,that%20occurred%20in%20the%201970s.

Friday, 22 April 2022

 

International Earth day – April 22, 2022

 

நாம் பிறந்து, வாழ்ந்து  பின்னர் இந்த மண்ணை விட்டுப் போகும்வரை இந்த பூமிதான்  எங்களுக்குத் தேவையான நீர், சுத்தமான காற்று, உணவு உட்பட பிள்ளையின் தேவையை நிறைவு செய்யும் தாயாக பல ஆயிரம் ஆண்டுகளாக வழங்கிக் கொண்டிருக்கிறது. ஆனால் நாங்களோ தாயின் அருமை அறியாத பிள்ளைகளைப் போல கொஞ்சம் கொஞ்சமாக எமது பூமித் தாயை நஞ்சூட்டிக் கொண்டிருக்கிறோம்.

காலநிலை மாற்றம், கடும் வரட்சி, வெள்ளப்பெருக்கு, காட்டுத்தீ, ஆழிப்பேரலைகள், மண்சரிவு போன்ற இயற்கை அனர்த்தங்கள் ஏற்படும்போதெல்லாம் இயற்கையைச் திட்டித்தீர்க்கும் நாங்கள், அதற்கு எமது செயற்பாடுகளே காரணம் என்பதை உணர்வதில்லை. எங்கள் செயற்பாடுகளே பல இயற்கையழிவுகளுக்குக் காரணம் என்று அறிந்தவர்கள் சொன்னாலும் அது எமது காதில் ஏறுவதில்லை.

கட்டுப்பாடற்ற வகையில் காடுகளை அழித்தல், அரிய உயிரினங்களை வேட்டையாடுதல், தொடர்ந்தும் உயிரினங்களின் பல்லினத்தன்மையைப் பாதிக்கும் செயற்பாடுகளில் ஈடுபடல், விவசாயத் தேவைகளுக்கு தொடர்ந்தும் இரசாயனப் பொருட்களைப் பயன்படுத்தி நீரையும் மண்ணையும் நஞ்சாக்குதல், தொடர்ந்தும் குப்பைகள், பிளாஸ்டிக் கழிவுகள் என்பவற்றை
முறையற்ற வகையில் வீசி நீர், நில மாசடைதலுக்கு வழிகோலுதல் என நாங்கள் செய்யும் நாசவேலைகளை பட்டியலிட்டுக்கொண்டே போகலாம்.

கடந்த சில தசாப்தங்களாகவே மனிதர்களுக்கு புதுப்புது வியாதிகள் வருகின்றன. இவற்றுள் 75% ஆனவை வெவ்வேறு விலங்குகளில்  இருந்தே மனிதர்களுக்குக் பரவியவையாக இருக்கின்றன. இவ்வாறு விலங்குகளிலிருந்து மனிதர்களுக்கு புதிய புதிய நோய்கள் பரவுவதற்கும் பூமியின் சூழல் தொகுதியில் மனிதர்கள் தொடர்ந்து ஏற்படுத்திவரும் சேதங்களுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக சூழலியலாளர்கள் கூறுகிறார்கள்.

நாம் கடந்த 50 வருடத்தில்தான் இந்த பூமியை மிக அதிகமாக பாழ்படுத்திக் கொண்டிருக்கிறோம். மனிதர்களின் சனத்தொகை 3.7 பில்லியனில் இருந்து 7.8 பில்லியனாக (இரண்டு மடங்கிற்கு அதிகமாக) அதிகரித்துள்ள வேளையில் கடந்த ஐம்பது வருடங்களில் மட்டும் உலகின் காடுகளில் 1/3 பங்கினை நாம் அழித்து விட்டோம். இது போதாதென்று தொடர்ந்தும் கழிவுகளை, குறிப்பாக விரைவில் மக்காத கழிவுகளை அதிகமாக உருவாக்கி மேலும் எமது பூமியை நாமே அழித்துக் கொண்டிருக்கிறோம்.

இவ்வாறு மனிதர்கள் தமது பேராசை, சுயநலம், தற்காலிக மகிழ்ச்சி என்பவற்றிற்காக கடந்த ஐம்பது வருடங்களில் மட்டும் உலகில் உள்ள விலங்குகள், பறவைகள், ஊர்வன உட்பட முள்ளந்தண்டுள்ள உயிரினங்களின் 60% வீதமானவற்றை அழித்து விட்டார்கள்.  அதேபோல மனிதர்களின் பொறுப்பற்ற செயற்பாடுகளால் 83% ஆன நன்னீர் உயிரினங்களும் அழிந்து போய்விட்டன.

தற்போது இயற்கை விஞ்ஞானிகள் நாம் வாழும் பூமியில் மண்ணும் விரைவாக வளமிழந்து வருவதாகவும் ஏற்கனவே பூமியின் வளமான மூன்றில் ஒருபகுதி அழிவடைந்து விட்டதாகக் கூறுகிறார்கள். தற்போது மனிதர்கள் தொடர்ந்தும் செய்துவரும் காடழிப்பு, திட்டமிடாத விவசாய நிலப் பயன்பாடு மற்றும் நகராக்கம் என்பவற்றால் எஞ்சியிருக்கும் மூன்றில் இரண்டு பகுதியான வளமான மண் இன்னும் 60 வருடங்களில் முற்றாக அழிவடைந்து விடும் என்று எச்சரிக்கை விடுத்திருக்கிறார்கள்.

 

இந்த நிலையில், இன்று பெற்றோர்களாக நிற்கும் எங்களைப் பார்த்து நாங்களே கேட்க வேண்டிய ஒரே கேள்வி: “எமது பிள்ளைகள், அவர்களின் சந்ததிக்கு நாம் எதை சொத்தாக விட்டுச் செல்கிறோம்?”  என்பதுதான். உங்களில் பலர் உங்கள் பிள்ளைகளுக்காக வங்கியில் பெரும் தொகைப் பணம் சேமித்திருப்பீர்கள். தங்கமாகக் கூடச் சேமித்து இருப்பீர்கள். பிள்ளைகள் கஷ்டப்படக்கூடாது என்று மூன்று நான்கு வீடுகளைக் கூட வாங்கி வைத்திருப்பீர்கள். ஆனால் உங்கள் சந்ததி சுவாசிக்க சுத்தமான காற்றும் குடிக்க சுத்தமான நீரும், உண்பதற்கு ஆரோக்கியமான உணவாதாரங்களும் கிடைப்பதற்காக என்ன செய்தீர்கள்? எவ்வளவு பணக்காரனாக இருந்தாலும் உங்கள் பிள்ளைகளுக்கும் பேரப்பிள்ளைகளுக்கும் குடிக்க நீரும் சுவாசிக்க சுத்தமான காற்றும் இல்லாவிட்டால்  நீங்கள் சேர்த்து வைத்த சொத்தினாலும் கட்டி வைத்த வீடுகளினாலும் ஏதும் பயனுண்டா?

 

சில ஆண்டுகளுக்கு முன்னரே காற்றின் மாசு காரணமாக நியூ டெல்லி, பீஜிங் போன்ற பெரு நகரங்களில் மக்கள் முகக் கவசம் போட்டுத் திரிய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதை நினைத்துப் பாருங்கள். எதிர்காலத்தில் உங்கள் பேரப்பிள்ளைகளும் அவர்களின் பிள்ளைக்கும் முதுகில் ஒட்சிசன் சிலிண்டர்களைக் கட்டிக் கொண்டு செல்ல வேண்டிய நிலை கூட வரலாம். சுத்தமான காற்றடைத்த பைகள் கடை வீதியெங்கும் விற்பனையாகலாம்.

 

இன்று சர்வதேச பூமி தினம். இவ் வருட  சர்வதேச பூமி தினத்தின் தொனிப்பொருளாக “எமது பூமியில் முதலிடுவோம்” (Invest in our planet) என பூமி தினத்தை வருட வருடம் கொண்டாடும் அமைப்பு அறிவித்துள்ளது. அதன் பொருள் நிலத்தில் முதலிட்டு அங்கிருக்கும் மரங்களையும் இயற்கை அமைப்புகளையும் அழித்துவிட்டு  கட்டடங்கள் கட்டி இலாபம் பார்ப்பது அல்ல. மாறாக எமது பூமியை சரிசெய்து நல்ல நிலையில் எமது அடுத்த சந்ததிக்கு வழங்கவேண்டும் என்பதாகும்.

 

தெரிந்தோ தெரியாமலோ இந்த பூமியை நாசம் செய்ததில் எங்கள் ஒவ்வொருவருக்கும் பங்கு இருக்கிறது. எனவே, பூமிக்கு ஏற்பட்ட சேதத்தை சரிசெய்வதிலும் எங்கள் ஒருவருக்கும் பொறுப்பு இருக்கிறது.

நாங்கள் ஒவ்வொருவருமே தனியாகவும் கூட்டாகவும் செய்யக்கூடிய பல விடயங்கள் உள்ளன. அவற்றை மிகச் சுருக்கமாகப் பார்ப்போம்.

1.    மரங்களை நடுங்கள். எங்களால் ஆயிரம், இரண்டாயிரம் மரங்களை நட முடியாவிட்டாலும் ஆளுக்குப் இரண்டு மரங்களையாவது நட முயற்சிக்கலாம். அல்லது உங்கள் வீட்டருகில் வீதியோரம் யாராவது நட்ட மரத்தைப் பராமரிக்கலாம்.

2.    மரங்களை நட முடியாவிட்டாலும் வீட்டில் பூந்தோட்டம் அமைத்து பூச் செடிகளையாவது நட்டு வளருங்கள். அது விவசாயத்தின் தோழர்களான தேனீக்கள், வண்ணத்துப் பூச்சி இனங்கள் அழியாமல் பாதுகாக்க உதவும்.

3.    உங்கள் ஊரில், வாழும் பிரதேசத்தில் உள்ள சிறிய, பெரிய நீர்நிலைகளை சீரமைத்துப் பராமரியுங்கள்.

4.    கோடை காலங்களில் உங்கள் வீட்டுக்கருகில் சிறிய நீர்த்தொட்டி அமைத்து சிறிய விலங்குகள், பறவைகள் தாகம் தீர்க்க உதவுங்கள்.

5.    முடிந்தால் உங்கள் வீட்டில் பழ மரங்கள் நடுங்கள். அவை பல விலங்குகள் மற்றும் பறவைகளின் பசி தீர்க்க உதவும்.

இவற்றையெல்லாம் உங்களால் செய்ய முடியாவிட்டால், குறைந்தது பின்வரும்  விடயங்களைச் செய்வதன் மூலமும் எமது  பூமித் தாய்க்கு உதவலாம்.

1.    பிளாஸ்டிக் பாவனையை நிறுத்துங்கள். முடியாவிட்டால் அதன் பாவனையை முடிந்தவரை குறையுங்கள்.

2.    குப்பைகளைக் கண்டபடி வீசுவதை நிறுத்துங்கள். குப்பைகளைத் தரம் பிரித்து அவற்றுக்கு உரிய தொட்டிகளில் போடுங்கள்.

3.    உங்களை வீட்டில் சேரும் குப்பைகளை அடிக்கடி எரிக்கும் பழக்கம் இருந்தால் அவற்றை நிறுத்துங்கள். உக்கக்கூடிய குப்பைகளை உங்கள் வீட்டுத் தோட்டத்திற்கு பசளையாக மாற்றுங்கள்.

4.    தேவைக்கு அதிகமாக நுகர்வுப் பொருட்களை வாங்காதீர்கள். திட்டமிட்டு வாழப் பழகுங்கள்.

5.    காட்டில் வாழவேண்டிய பறவைகள், விலங்குகளை வளர்ப்புப் பிராணியாக வளர்க்கிறோம் என்று சொல்லிக் கொண்டு அவற்றின் இனம் அழிவதற்குத் துணை போகாதீர்கள்.

6.    2 – 3 வருடத்துக்கு ஒருமுறை பொருட்களை மாற்றும் பழக்கம் இருந்தால் அதைத் தயவுசெய்து குறைத்துக் கொள்ளுங்கள். ஒரு பொருளை வாங்கினால் அதன் உச்ச பலனைப் பெறுவதுதான் சிறந்த நுகர்வுப் பண்பாக இருக்க முடியும்.

7.    குறுந்தூரப் பயணங்களுக்கு ( 2 km க்கு குறைவானவை) துவிச்சக்கர வண்டியைப் பயன்படுத்துங்கள் அல்லது நடந்து செல்லுங்கள்.

 

இது எமது பூமி. இதுதான் எங்களின் வீடு.  நாம் வாழுவதற்கு தேவையான அனைத்தையும் இங்கேயே பெற்றுக் கொண்டோம். நாம் செய்த சேதங்களை நாங்கள்தான் சரிசெய்ய வேண்டும்.  எங்கள் வீட்டைக் கொளுத்திவிட்டு ஓடிப் போய்க் குடியிருக்க எங்களுக்கு வேறு வீடு கிடையாது. நாம் நினைத்தால் இதனைச் சரி செய்ய முடியும். எங்களை ஒவ்வொருவரும் செய்யக்கூடிய விதத்தில் எங்கள் பங்களிப்பை வழங்குவோம்.

-  மணிவண்ணன் மகாதேவா -

 


தமிழ் இளையவர்கள் மத்தியில் தற்கொலைகள்.

======================================
அண்மையில் என் நண்பரின் தளத்தில் பார்த்த ஒரு செய்திதான் என்னை இந்த விடயத்தை இப்போது எழுதத் தூண்டியது. இலங்கையில் அவருக்கு நன்கு தெரிந்தவரான பதினாறு வயதேயான ஒரு சிறுமி தற்கொலை செய்து கொண்டுள்ளார். அந்தப் பெண் பரீட்சையில் சித்தி பெற்றிருந்தாலும் தான் எதிர்பார்த்த பெறுபேறுகள் கிடைக்கவில்லை என்பதற்காகத் தற்கொலை செய்துகொண்டார். இது எமது சமூகத்தில் நடந்த முதலாவது தற்கொலையுமில்லை, அதற்குப் பின்னரும் இளையவர்கள் சிலர் தற்கொலை செய்து தமது வாழ்வை முடித்துக் கொண்டிருக்கிறார்கள்.
எமது சமூகத்தில் ஏன் இளையவர்கள் தற்கொலை செய்கிறார்கள் என்று தொடர்பாக துறைசார்ந்தவர்கள் பல ஆய்வுகளைச் செய்தாலும் அவர்களின் கண்டுபிடிப்புகளால் மட்டுமே இளையவர்களின் தற்கொலையைத் தடுத்துவிட முடியாது. மாறாக, பதின்ம வயதினர் ஏன் தற்கொலை செய்கிறார்கள் என்பது பற்றி எமது சமூகத்தினருக்கு தெளிவு ஏற்பட்டால் மட்டுமே இனிவரும் காலங்களில் இவ்வாறான தற்கொலையைத் தடுக்க முடியும். இவ்வாறான தற்கொலைக்கான காரணங்களை நன்றாக ஆராய்ந்து இதற்கான அடிப்படைப் பிரச்சனைகள் எங்கிருந்து ஆரம்பிக்கின்றன என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
இளையவர்களின் தற்கொலைக்கு கல்வியில் தோல்வி, காதல் தோல்வி, பாடசாலையில் சக மாணவரால் துன்புறுத்தப்படல், ஆசிரியரால் அல்லது அதிபரால் அவமானப்படுத்தப்படல், வீட்டில் தாயாருடன் அல்லது தந்தையுடன் சண்டை போன்ற காரணங்களைத் தவிர்த்து அண்மைக் காலமாக பிறந்தநாளுக்கு புது ஆடை வாங்கித் தரவில்லை, ஆசைப்படும் பொருளை பெற்றோர் வாங்கித் தரவில்லை, பாடசாலை விளையாட்டு அணியில் இடம் கிடைக்கவில்லை போன்ற காரணங்களும் இணைந்துள்ளன.
பெற்றோரின் பங்கு
--------------------------
பிள்ளைகளைப் பெற்றுக் கொள்வது ஒன்றும் கஷ்டமான வேலையில்லை. அவர்களை வளர்த்து ஆளாக்குவதுதான் ஒவ்வொரு பெற்றோருக்கும் உள்ள சவாலாக இருக்கிறது. ஏனெனில் யாருமே பிள்ளை வளர்ப்பதில் முன் அனுபவத்துடன் பிள்ளை பெற்றுக் கொள்வதில்லை. தற்போது வயதான பெற்றோரும் தமது திருமணமான பிள்ளைகளுடன் வசிப்பதில்லை என்பதால் உண்மையிலேயே அது மிகப்பெரும் சவால்தான். ஏனெனில் எல்லோருக்குமே பிரச்சனைகளை சரியாக கையாள்வதற்கான முதிர்ச்சி இருப்பதில்லை.
பெற்றோர்கள் தமது ஒவ்வொரு குழந்தைக்கும் ஒவ்வொரு திறமை இருக்கும் என்பதை பெற்றோர் உணரவேண்டும். பெற்றோரின் ஆசைகளை, குறிப்பாக தமது நிறைவேறாத ஆசைகளைப் பிள்ளைகளின் மேல் திணிக்கக் கூடாது. உங்கள் நண்பர்கள், உறவினர்களின் பிள்ளைகளைப் பார்த்து உங்கள் பிள்ளைகளை அவர்களோடு போட்டி போடும் பந்தயக் குதிரை ஆக்காதீர்கள்.
உங்கள் பிள்ளைகள் பரீட்சையில் தோற்றால் அவர்களை வார்த்தைகளால் கூடத் தண்டிக்காதீர்கள். பரீட்சையில் தோல்வியுற்றாலும் ஒருவன் வாழ்க்கையில் வெற்றி பெறமுடியும் என்பதை முதலில் நீங்கள் உணர வேண்டும். பின்னர் அதனை உங்கள் பிள்ளைகளுக்கும் சொல்லிக் கொடுக்க வேண்டும்.
பிள்ளைகளுக்கு பணத்தின் பெறுமதி உழைப்பின் பெறுமதி தெரியும்படி வளருங்கள். பிள்ளைகளை சமூகப் பொறுப்புள்ளவர்களாகவும் மற்றவர் மேல் அன்பு செலுத்தக் கூடியவராகவும் வளருங்கள். அவர்களை தோல்விகளைத் தாங்கக் கூடியவர்களாகவும் தைரியமானவர்களாகவும் வளர்க்க வேண்டும். அதேபோல உயிரின் பெறுமதியையும் சொல்லிக் கொடுங்கள்.
பருவ வயதில் வரும் காதல் உணர்வும் வேறு சில உணர்வுகளும் சில பிள்ளைகளை தாம் தவறு செய்கிறோமோ என்ற குற்ற உணர்வுக்கு உள்ளாக்கி மன உளைச்சலுக்கும் உள்ளாக்கலாம். அந்த நேரத்தில் பொருத்தமான ஆலோசனைகள் அவர்களுக்கு ஆறுதலாக அமையலாம். இந்த விடயங்களை உங்களோடு நேரடியாகப் பேசுவதைத் தவிர்ப்பார்கள் என்பதால், அதற்குப் பொருத்தமான புத்தகங்களைத் தேடித் பெற்று அவர்களை வாசிக்கச் செய்யுங்கள்.
அடிக்கடி பிள்ளைகளோடு மனம் விட்டுப் பேசுங்கள். உங்கள் பிள்ளை தனது படிப்பு, விருப்பமான துறை, ஆர்வமான விடயங்கள், எதிர்ப் பாலாரிடம் ஏற்படும் ஈர்ப்பு போன்றவை பற்றியும் தங்கள் பிரச்சனைகளையும் உங்களோடு மனம் விட்டு பேசக்கூடிய சூழலை ஏற்படுத்துங்கள். என் தந்தையோடு இதைப் பயப்படாமல் கதைக்கலாம், என் அம்மாவிடம் இதனைப்பற்றிச் சொல்லலாம் என்ற எண்ணம், தைரியம் உங்கள் பிள்ளைகளுக்கு ஏற்பட வேண்டும்.
அவர்களின் பிரச்சனைகளுக்கு நீங்கள் நீதிபதியாகாமல் அவர்களே சரியான தீர்வு எடுக்க உதவுங்கள். பிள்ளைகளுக்கு ஒரு அதிகாரியாக இல்லாமல் ஆலோசகராக இருக்க முயலுங்கள். உங்கள் பிள்ளையின் நடவடிக்கைகளில் சிறுமாற்றம் ஏற்பட்டாலும் அதைக் கவனித்து தகுந்த நேரத்தில் மெதுவாக அதைப்பற்றி பேசி அவர்களைச் சரிப்படுத்த உங்களால் ஆனதைச் செய்யுங்கள்.
ஏதோ காரணங்களால் உங்கள் பிள்ளைக்கு மன உளைச்சல் அல்லது மன அழுத்தம் இருப்பதாகத் தோன்றினால் உடனே தகுந்த உளவள ஆலோசனையைப் பெற்றுக் கொள்ளுங்கள். ஊரார் என்ன சொல்லுவார், உறவு என்ன சொல்லும் என்று நினைக்காதீர்கள். உங்கள் பிள்ளையின் உயிரை விடவா ஊராரின் பேச்சு உங்களுக்கு முக்கியம் என்று யோசியுங்கள்.
ஆசிரியரின் பங்கு
-------------------------
இளையவர்கள் வாழ்க்கையில் பெற்றோருக்கு அடுத்தபடியாக இருப்பவர்கள் ஆசிரியர்கள். இன்னொரு விதத்தில் சொல்வதென்றால் ஆசிரியர்களை இரண்டாவது பெற்றோர் என்றே சொல்லலாம்.
பல பாடசாலைகளில் மாணவர்களின் உளவியல் பிரச்சனைகளை இனங் காண்பதிலும் அவ்வாறான பிள்ளைகளுக்கு உதவுவதிலும் பல ஆசிரியர்கள் முக்கிய பங்கு வகிக்கிறார்கள். அவ்வாறான பிள்ளைகளின் ஆர்வங்கள், தனித்திறமைகளை இனங்கண்டு அவற்றில் ஈடுபட ஊக்கம் கொடுப்பதிலும் மாணவர்களின் பிரச்சனைகளை பெற்றோருக்கு அறிவுறுத்துவதிலும் பிள்ளைகளின் உளவள ஆற்றுப்படுத்தலிலும் இவ்வாறான ஆசிரியர்கள் பெரும் பங்காற்றி வருகின்றனர்.
ஆனால் எல்லா ஆசிரியர்களுமே அவ்வாறு நடந்து கொள்வதில்லை. சில ஆசிரியர்களே மாணவர்களின் தன்னம்பிக்கையை சிதைப்பவர்களாகவும் துன்புறுத்துவோராகவும் இருக்கின்றனர் என்பதும் மறுக்க முடியாத உண்மையே. அதிலும் சிலர் இளையவர்களை உடல்ரீதியாகவும் பாலியல் ரீதியாகவும் துன்புறுத்துகின்றனர். இன்னொரு வகையில் சொல்வதென்றால் சில இளையவர்களின் மன உளைச்சல், தற்கொலை எண்ணங்களுக்கு சில ஆசிரியர்களும் காரணமாக இருக்கின்றனர்.
இந்த நிலையும் மாறவேண்டும். இவ்வாறான ஆசிரியர்கள் மனம் திருந்தி ஏனைய நல்லாசிரியர்கள் போல மாறவேண்டும். பெற்றோரைப் போலவே ஆசிரியர்களும் தாம் கற்பிக்கும் ஒவ்வொரு பிள்ளையின் மீதும் உண்மையான அக்கறையும் பொறுப்பும் எடுத்துக் கொள்ள வேண்டும். எமது நாளைய சந்ததிகளைச் சரியாக வளர்த்தெடுப்பது எம் ஒவ்வொருவரின் கையில்தான் உள்ளது.
சமூகத்தின் பங்கு
==================
எமது சமூகத்தில் இளம்பிராயத்தில் தற்கொலை செய்துகொண்டால் நம்மவர் செய்யும் முதல் வேலை அந்தக் குடும்பத்தை குற்றம் சொல்லி ஏற்கனவே மனம் நொந்து போயிருக்கும் குடும்பத்தை மேலும் காயப்படுத்துவதுதான். சில சந்தர்ப்பங்களில் இவ்வாறு ஊரவர்கள், உறவினர்களால் காயப்படுத்தப்பட்ட குடும்பங்கள் முழுமையாகவே ஒடுங்கிப் போய் விடுகின்றன. சில குடும்பங்கள் வேறு ஊருக்கு இடம்பெயர நிர்ப்பந்திக்கப்படுகின்றன. இன்னும் சில குடும்பங்கள் தற்கொலை செய்து கொண்டுமிருக்கின்றன.
எமது சமூகமும் உறவுகளும் இதனை உணர்ந்துகொண்டு பொறுப்புடன் செயற்படுவதே தமது பிள்ளையின் தற்கொலையால் வருந்திக் கொண்டிருக்கும் குடும்பங்களுக்கு செய்யக்கூடிய மிகப்பெரிய உதவியாக இருக்கும். அவர்களின் பிள்ளை ஏன் தற்கொலை செய்து கொண்டது என்று ஆராயாது, அந்தக் குடும்பத்திற்கு ஆதரவாக இருக்க முயற்சி செய்யுங்கள்.
அனைவரும் பொறுப்புடன் இருந்தால் இனிவரும் காலங்களில் இளையவர் மத்தியில் நடைபெறும் தற்கொலைகளைப் பெருமளவில் குறைக்க முடியும். இனிவரும் நாட்களில் தற்கொலைகளை இல்லாது செய்யவும் முடியும்.
-வீமன்-

Tuesday, 8 March 2022

 


சர்வதேச பெண்கள் தினம் – மார்ச் 2022

உலகெங்கும் பெண்களுக்கான சர்வதேச தினம் இன்று கொண்டாடப்படுகிறது. ஆணுக்கு பெண் சமமாக நடாத்தப்படும் உலகம் உருவாக்கப்பட வேண்டும்; பெண்கள் எந்தவித பாரபட்சமும் இல்லாமல் நடாத்தப்படும் சூழல் உருவாக்கப்பட வேண்டும்; அதேநேரம் பெண்களின் தனித்துவங்களும் சாதனைகளும் கொண்டாடப்பட வேண்டும் என்பவற்றை நோக்காகக் கொண்டு இந்த மகளிர்தினம் கொண்டாடப்படுகிறது.

 

ஆண்களுக்குச் சமமாக பெண்களும் பல்வேறு தொழிற்துறைகளில் கால்பதித்து இருந்தாலும்  இன்றுவரை பலநாடுகளில் தமக்கான அங்கீகாரம், உழைப்புக்கு ஏற்ற ஊதியம் என்பவற்றைப் பெற பல பெண்கள் இன்னமும் போராடியபடிதான் இருக்கிறார்கள். பலநாடுகளில் வாழும் பெண்கள் இன்றும் பல்வேறு அடக்குமுறைகளுக்கும் உள்ளாகிக் கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் கசப்பான உண்மை. இந்த சூழ்நிலையில், இந்தத் தினத்தை உண்மையிலேயே கொண்டாட்டத்துக்கு உரிய தினமாகக் கொள்வதற்கான நாள் இன்னமும் வரவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.  

.

பலநாடுகளில் சம உரிமை என்பது வெறும் ஏட்டில் உள்ள விடயமாகவே இருக்கிறது. பெண்கள் தமது உரிமைகளையும் சுதந்திரத்தையும் அனுபவிப்பதற்குத் தடையாகவும் பலநேரங்களில் அவர்கள் மீது அநாவசியமான அழுத்தங்களைக் கொடுப்பவர்களாகவும் எமது சமூகமே இருக்கிறது. சமூகத்தில் இவ்வாறு அழுத்தம் கொடுப்பவர்களாக ஆண்கள் மட்டுமே இருப்பதில்லை. சமூகத்தில் உள்ள பிற பெண்களும் ஊடகங்களும் கூட தமது பங்குக்கு பெண்கள் மீது வன்முறையை, அழுத்தங்களைக் கொடுப்பவர்களாக இருக்கிறார்கள். அதேநேரம், சில பெண்கள் அவர்கள் மீது சமூகம் காட்டும் பரிவு மற்றும் ஆதரவைத் தவறாகப் பயன்படுத்துவதையும் நாங்கள் பார்க்கிறோம்.

.

இவ்வாறு இலங்கையில் கடந்த சில மாதங்களுக்குள் ஊடகங்களில் பேசப்பட்ட சில பெண்கள் தொடர்பான சில பத்திரிகை/ இணையச் செய்திகளைப் பார்க்க முடிந்தது. அவர்களில் சிலர் தமது அல்லது சமூகத்தின் உரிமைக்காகப் போராடியதால் ஊடகங்களில் பேசப்பட்டவர்கள். சிலர் தமது பதவி தொடர்பான தமது உரிமைக்காக நீதிமன்றக் கதவைத் தட்ட நிர்ப்பந்திக்கப்பட்டவர்கள்.

 

  1.   திருகோணமலை ஸ்ரீ சண்முகா வித்தியாலய முஸ்லிம் ஆசிரியை
  2.   தேசிய மனித உரிமை ஆணையகத்தின் ஆணையாளராக இருந்த அம்பிகா சற்குணநாதன்
  3.    பிம்ஷானி ஜாசின் ஆராச்சி  - DIG


இவர்களுள் முதலாவது நபரான முஸ்லிம் ஆசிரியை 2018 இல் ஸ்ரீ சண்முகா வித்தியாலயத்தில் இணைந்து கொண்ட பின்னர், தனது கலாச்சார உடையணிய முயன்றபோது பாடசாலை நிர்வாகத்தால் அனுமதி மறுக்கப்பட்டதால் தனது உரிமைக்காக மனித உரிமைகள் ஆணையகம் மற்றும் நீதி மன்றத்தின் கதவைத் தட்டியவர். இலங்கையின் சட்டப் பாதுகாப்போடு நான்கு வருடங்கள் கழித்து அதே பாடசாலையில் பணிப் பொறுப்பேற்கக் போனபோது மீண்டும் எதிர்ப்புக்கு முகம் கொடுத்தார்.

.

இது பெரும் சர்ச்சையாகி தேசிய மட்டத்தில் பேசு பொருளானது. இது மீண்டும் இனங்களுக்கிடையில் முரண்பாடாக வெடித்துவிடக் கூடிய தோற்றப்பாடு இருந்தபோதிலும் தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகத்தில் பலர் பொறுப்பாக செயற்பட்டதால் பெரும் பிரச்சனையாக மாறவில்லை. என்றபோதும் இன்றுவரை இந்த விடயம் சுமூகமாக தீர்க்கப்படவில்லை. இந்த விடயம் ஒரு சமூகத்தின் கலாச்சாரம் சார்ந்த விடயம் என்பதைவிட, அந்தப் பெண்ணின் மத மற்றும் மென்னுணர்வு சார்ந்த விடயம் என்பதைப் புரிந்து கொள்ள எனது சமூகத்தில் பலர் தயாராக இல்லை. இந்த நிலையில் அந்த முஸ்லிம் ஆசிரியை இந்த மகளிர் தினத்தை மகிழ்வுடன் கொண்டாட முடியுமா?

.

அடுத்ததாக அம்பிகா சற்குணநாதன். இவர் ஒரு மனித உரிமை வழக்குரைஞர் மட்டுமன்றி இலங்கை தேசிய மனித உரிமைகள் ஆணைய ஆணையகத்தின் ஆணையாளராக 2015 – 2020  வரை இருந்தவர். அதுமட்டுமல்ல, இவரைத்தான் இரண்டு வருடங்களுக்கு முன்னர் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் யாழ் மாவட்ட வேட்பாளராக சுமந்திரனும் கொண்டுவர முயற்சித்தார். அதனாலேயே தம்மைத் தேசிய உணர்வாளர்கள் என்று சொல்லிக்கொள்ளும் பலர் அவரைக் கடுமையாகத் தாக்கி எழுதியதுடன் அவரை சுமந்திரனுடன் தொடர்புபடுத்தி தரக்குறைவாகவும் பேசினார்கள்.

.

இவர் வேட்பாளராக வருவதை எதிர்த்து யாழ்ப்பாணத்தில் குறித்த கட்சியின் பெண் உறுப்பினர்கள் பலர் ஊர்வலமாகச் சென்று கட்சி அலுவலகத்தில் பெரும் எதிர்ப்பிலும் ஈடுபட்டனர். ஆமாம் 2010 ஆம் ஆண்டு சுமந்திரன் என்ற ஆண் பின்கதவால் கட்சிக்குள் வந்தபோது காட்டப்படாத எதிர்ப்பு, பத்து வருடங்கள் கழித்து ஒரு திறமை வாய்ந்த, மனித உரிமைச் செயற்பாடுகளில் ஈடுபட்ட, சர்வதேச அளவில் நல்ல தொழில்சார் தொடர்புகள் உள்ள ஒரு பெண் வேட்பாளராக வர முயன்றபோது காட்டப்பட்டது. அதுவும் பெண்களின் எதிர்ப்பு அவர் வேட்பாளராக வருவதற்கு அதிக அளவில் காட்டப்பட்டது. இதே வகையான தாக்குதலைத்தான் கிழக்கு மாகாணத்தில் நளினி ரட்ணராஜா எதிர் கொண்டார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

.

அதன் பின்னர், இரண்டு வருடங்கள் கடந்த நிலையில், இந்த வருடம் ஜனவரி மாதத்தில் ஐரோப்பிய ஒன்றியப் பாராளுமன்ற உபகுழுவின் அமர்வில் இலங்கையின் மனித உரிமைகள் நிலவரம் தொடர்பில் அம்பிகா சற்குணநாதன் முன்வைத்த கருத்துக்கள் இலங்கை அரசைக் கோபப்படுத்தியது. இது தொடர்பில் இலங்கை வெளிவிவகார அமைச்சின் அறிக்கைக்கு கண்டனம் தெரிவித்து 161 மனித உரிமைச் செயற்பாட்டாளர்களும் 47 மனித உரிமை சார்ந்து செயற்படும் நிறுவனங்களும் கண்டனம் தெரிவித்தன.  ஆச்சரியம் தரும் வகையில் தமிழ் தேசிய உணர்வாளர்கள் அம்பிகா சற்குணநாதனை இரண்டே வருடத்திற்கு முன்னர் தாறுமாறாகத் திட்டிய அதே வாயினால் பாராட்டிய காட்சியும் அரங்கேறியது. ஆமாம், ஒரு தகுதி உள்ள தமிழ்ப் பெண் எமது சமூகத்திலிருந்து அரசியலில் நுழைவதை அனுமதிக்காத ஒரு சமூகத்தில்தான் நாங்கள் இன்று மகளிர் தினம் கொண்டாடி பெண்கள் பெருமை பேசி மகிழ்கிறோம்.

.

மூன்றாவதாக குறிப்பிடப்பட்ட பிம்ஷாணி என்பவரும் அம்பிகா சற்குணநாதனைப் போலவே கல்வியில், தொழில் தகமையில் மேம்பட்டவர். சமூகத்தில் உயர் பொலீஸ் அதிகாரி என்ற அந்தஸ்தில் உள்ளவர். இவரைப் பற்றி கடந்த வருடமும் எமது பக்கத்தில் குறிப்பிட்டிருந்தோம். ஆனால் அவராலும் இந்த ஆணாதிக்க சிந்தனாவாதிகளின் தாக்குதலில் இருந்து தப்ப முடியவில்லை. இவர் 2020 ம் ஆண்டு அக்டோபர் மாதம் DIG ஆக  பதவி உயர்த்தப்பட்டார். ஆனால், கடந்த வருடம்  பெப்ரவரி மாதம் அவரது நியமனம் சட்டவிரோதமானது என்று உயர்நீதிமன்றில் 33 ஆண் உயர் பொலிஸ் அதிகாரிகள் (SSPs) வழக்குத் தொடர்ந்தார்கள். ஒரு பெண்ணை பிரதி பொலிஸ் மா அதிபராக நியமிக்கலாம் என்று தமது திணைக்கள பதவியுயர்வு தொடர்பான விதிமுறைகளில் சொல்லப்படவில்லை என்பதுதான் அவர்களின் வாதம்.

.

இந்த வழக்கில் கடந்த வருடம் மே மாதம் முதலாம் திகதி பிம்ஷானி அவரது DIG பதவியிலிருந்து நீக்கப்பட்டார். இலங்கையின் முதலாவது பெண் DIG என்ற பெருமையை அவர் கொண்டாட இடம் கொடுக்காமலே பதவியைப் பறிக்க 33 ஆண்கள் ஒன்று சேர்ந்து நின்றார்கள். இதன்பின்னர், அவருக்கு பொருத்தமான வேறு பதவி வழங்கும்படி பிம்ஷானியின் வழக்குரைஞர்கள் கடந்த மே மாதம்  வேண்டுகோள் வைத்தனர். அதன் பின்னர் அவருக்கு என்ன பதவி வழங்கப்பட்டது என்பது தொடர்பில் சரியான தகவல் பெறமுடியவில்லை.

.

 இங்கு சுவாரசியமான இன்னொரு ஒற்றுமையை இங்கு குறிப்பிட விரும்புகிறேன். இலங்கையில் முதல் பெண் பொலிஸ் அதிகாரி நியமிக்கப்பட்ட அதே 2020 ம் ஆண்டு அக்டோபர் மாதம் நைஜீரியா நாட்டில் அந்த நாட்டின் முதலாவது பெண் DIG யான Ivy Uche Okoronkwo நியமிக்கப்பட்டார். அதுவும் நாட்டின் பொலிஸ் துறையின் இரண்டாவது பெரிய பதவியாகும். நல்ல வேளை அவர் இந்த வருடம் ஜனவரி மாதம் வயதடிப்படையில் ஓய்வு பெறும்வரை யாரும் வழக்குப் போடாததால் அவர் பதவி தப்பியது.

.

இந்தப் பதிவில் நாம் குறிப்பிட்ட ஆசிரியர், பொலிஸ் அதிகாரி, வழக்குரைஞர் மூவருமே கல்வி கற்றவர்கள். அரச பதவியில் இருப்பவர்கள் அல்லது சமூகத்தில் பலருக்கும் தெரிந்தவர்கள். இவர்களில் இருவர் உயர் பதவி வகித்தவர்கள். ஆனால் மூவருமே வெவ்வேறு வகைகளில் சமூகம், சக பதவியில் இருப்பவர்களால் ஒடுக்கப்பட்டிருக்கிறார்கள் அல்லது அவர்களின் வளர்ச்சி இவர்களால் தடுக்கப்பட்டிருக்கிறது. இதில் ஆண்கள், சக பெண்கள் இருவருக்குமே பெரும் பங்கு இருக்கிறது. இது, எமது சமூகம் இன்றும் ஒரு பெண் படித்து உயர் பதவியில் இருந்தாலும் அவள் ஆணைவிட ஒருபடி குறைவானவள் என்று நம்புவதை அல்லது பெண் ஓரளவுக்கு மேல் செல்ல விடக்கூடாது என்று கரும் மனநிலையைக் காட்டுகிறது.

.

இவ்வாறான சமூகச் சூழல்கள் ஆணையும் பெண்ணையும் பெண் இரண்டாம் நிலைக்குரியவள் கோட்பாட்டை நம்பச் செய்ய முயல்வதுடன் பல சமயங்களில் வெற்றி பெற்றும் விடுகின்றன. ஆண்கள் மட்டுமன்றி பல சந்தர்ப்பங்களில் பெண்களே பெண்களின் வளர்ச்சிக்குத் தடையாக இருப்பதும் இதன் விளைவுதான். ஆனால் பெண்ணும் ஒரு சமுதாயத்தில் பலமானவளாக, பங்களிப்பவளாக மாறும்போது அந்த சமூகம் விரைவாக முன்னேறும் என்ற உண்மையை ஆணாதிக்கத்தை காதலிக்கும் ஆண்கள் உணரும்வரை, பெண்களின் திறமையை ஊக்குவிக்கும், பாராட்டும் சமூகமாக மாறாதவரை  அந்த சமூகம் அடுத்த நூற்றாண்டிலும் காட்டுமிராண்டிச் சமூகமாகவே இருக்கப் போகிறது.

Will you help to break the bias?

  அடி சறுக்கும் அனுர?   தேசிய மக்கள் சக்தி ஜனாதிபதி தேர்தலில் வடக்கு, கிழக்கில் பெரும் வெற்றியைப் பெறுவோம் என்ற நம்பிக்கையுடன் இருந்திரு...