Sunday, 12 January 2025

இரணைமடு – நீரின்றி அமையாது அரசியல்


 

வடமாகாணத்தில் உள்ள மிகப்பெரிய நீர்த்தேக்கமாக உள்ள இரணைமடு நீர்த்தேக்கம் மிக நீண்ட வரலாறு கொண்டது. இது இலங்கையில் ஏழாவது பெரிய நீர்த் தேக்கமும் இலங்கையின் மன்னர்கள் ஆட்சிக் காலத்திற்கு பின்னர் இலங்கையில் கட்டப்பட்ட முதலாவது நீர்த் தேக்கமும் ஆகும். சேமமடு குளத்தில் ஆரம்பிக்கும் 86 km நீளமான கனகராயன் ஆறு இந்த நீர்த் தேக்கத்திற்கு பிரதான நீர் வழங்கியாக இருக்கிறது. இரணமடுவின் கீழ் 20,000 ஏக்கர் நிலப்பரப்பில் நெற்செய்கை செய்வதற்கு நீர் வழங்குவதே இந்த நீர்த் தேக்கத்தின் நோக்கமாக இருந்தது.

 

இந்த நீர்த் தேக்கத்தின் கட்டுமான வேலைகள் 1902 இல் தொடங்கி,  முதலாம் உலகப் போர் காலத்தில் காலதாமதம் ஏற்பட்டு 1921இல் நிறைவு செயப்பட்டன. இந்த நீர்த் தேக்கம் 22 அடி ஆழம் உடையதாக அமைக்கப்பட்டது. அதன் கொள்ளளவு 49 MCM ஆக இருந்தது. 1940 இல் ஏற்பட்ட கடும் வரட்சி காரணமாக பலர் யாழில் இருந்து கிளிநொச்சிக்கு இடம்பெயர்ந்தனர். அவர்களுக்கு இரணைமடு அருகில் அரசினால் இலவச விவசாய நிலங்கள் வழங்கப்பட்டன.

 

பின்னர் நீர்த் தேவையை ஈடு செய்ய 1951 இல் அணையின் உயரம் 30 அடியாக அதிகரிக்கப்பட்டது. கொள்ளளவு 88 MCM ஆக அதிகரித்தது. பின்னர் 1954 இல் அணையின் உயரம் 32 அடியாக உயர்த்தப்பட்டு, கொள்ளளவு 101 MCM ஆக அதிகரிக்கப்பட்டது. 1975 இல் அணையின் உயரம் 34 அடிகளாக உயர்த்தப்பட்டது. இதன் மூலம் கொள்ளளவை 131 MCM ஆக அதிகரித்தது.  ஆனால் 1984 இல் செய்யப்பட்ட ஆய்வில் அணைக்கட்டு பலவீனமாக இருந்தமை கண்டறியப்பட்டதால் நீர் மட்டம் 32 அடியிலேயே பேணப்பட்டது.

 

அதன் பின்னர் இரணமடு நீர்த் தேக்கத்தின் மூலம்  அதிகமான நீரை விவசாயத் தேவைகளுக்கும் யாழ், கிளிநொச்சி குடிநீர் தேவைக்கும் பயன்படுத்தும் வகையில் நீர்க் கொள்ளளவை அதிகரிக்க திட்டமிடப்பட்டது. 2005 – 2006 இல் மேற்கொள்ளப்பட்ட சாத்தியப்பாடு ஆய்வின் தொடர்ச்சியாக அணையின் உயரத்தை 36 அடிகளாக அதிகரிக்கும் திட்டம் தொடர்பாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் சபைக்கும் விவசாய அமைச்சுக்கும் இடையே ஓர் MoU (Signed in 2007) உருவாக்கப்பட்டது.

 

இந்த ஒப்பந்தப்படி நாளாந்தம் 50,000 கன மீட்டர் நீரைப் பெறுவதாக திட்டமிடப்பட்டிருந்தது. இந்தத் திட்டம் யாழ் மாவட்டம் மற்றும் கிளிநொச்சியில் 300,000 பேருக்கு குடிநீரையும் 80,௦௦௦ பேரின் சுகாதார மேம்பாட்டையும் நோக்கமாகக் கொண்டிருந்தது. ஆசிய அபிவிருத்தி வங்கி (Asian Development Bank), பிரெஞ்சு அபிவிருத்தி நிறுவனம் (French Development Agency / Agence Française de Développement - AFD) உதவியுடன் இந்த Jaffna and Kilinochchi Water Supply and Sanitation Project இனை முன்னெடுக்கும் முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டன. இந்த முழு செயற்திட்டமும் IFAD இனால் மேற்பார்வை செய்யப்பட்டது (Social Safeguard Monitoring Report, IFAD, ADB – Jan 2018)

 

இந்த செயற்திட்டத்தின் திட்டமிடல் காலத்தில் (2005-2007) கிளிநொச்சி விவசாயிகள் தாம் விவசாயம் செய்யும்பகுதியில்  நீர்ப்பாசன கால்வாய்கள், அவற்றுடன் தொடர்புபட்ட கட்டமைப்புகளை புனரமைத்துக் கொடுக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் யாழுக்கு நீர் கொண்டு செல்லும் திட்டத்திற்கு சம்மதித்ததாக திட்ட அறிக்கைகள் சொல்கின்றன (President’s Report – Dec 2011). இருப்பினும் அதன் பின்னர், இவ்வாறு தினமும் 50,000 கன அடி நீரை எடுத்தால் தமது விவசாயம் பாதிக்கப்படும் என அஞ்சி, விவசாயிகள் முறைப்பாடுகள் செய்த நிலையில் 2010 இல் 50,000 கன மீட்டர் நீருக்குப் பதிலாக 27,000 கன மீட்டர் நீரை எடுக்கலாம் என திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டது. ஆனாலும் கிளிநொச்சியில் உள்ள சில விவசாயிகள் அமைப்புகள் தொடர்ந்தும் யாழுக்கு நீர் வழங்கும் திட்டத்திற்கு உடன்படவில்லை. (Social Safeguard Monitoring Report, ADB, May 2018).

 

அதன் பின்னர் 2013-14 காலப் பகுதியில் ஏற்பட்ட கடும் வரட்சியைத் தொடர்ந்து (அந்த வருடம் கோடை காலத்தில் அணையில் 8 அடித் தண்ணீர் மட்டுமே சேமிக்க முடிந்தது), இதனைத் தொடர்ந்து யாழ்ப்பாணத்திற்கு குடிநீர்த் தேவைக்கு இரணமடு நீரை வழங்குவது தொடர்பில் விவசாயிகளின் அச்சம் மேலும் அதிகரித்தது. இதனால் நீர்ப் பகிர்வு தொடர்பில் விவசாய அமைப்புகளின் சம்மதத்தை உறுதிப்படுத்த வட மாகாண ஆளுநர், வடமாகாண முதலமைச்சர், முதன்மைச் செயலாளர், இரண்டு மாவட்டங்களின் மாவட்டச் செயலாளர்கள், தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகால் சபை, வடமாகாண நீர்பாசனத் திணைக்களம், விவசாயிகளின் சங்கங்கள் மத்தியில் பல சுற்றுப் பேச்சு வார்த்தைகள் நடைபெற்றன. ஆனாலும், யாழுக்கு நீரைக் கொண்டு செல்லும் திட்டத்திற்கு சாதகமான முடிவை எட்டப்படவில்லை.

 

இது ஒருபுறம் இருக்க நாளாந்தம் 27,000 கன மீட்டர் தண்ணீர் நாளாந்தம் எடுக்கப்பட்டால் ஒரு வருடத்தில் 27 நாட்களுக்கு விவசாயம், குடிநீர் இரண்டுக்குமே நீரைப் பெறமுடியாதென 2013 இல் மேற்கொள்ளப்பட்ட Water Balance Study மூலம்  தெரிய வந்தது. எனினும் இக்காலப் குறித்த ஆண்டை அண்மித்த ஆண்டுகளில் நிலவிய  வரட்சிக் காலங்களையும் கணக்கில் எடுத்துக் கணிப்பிட்டபோது, ஒரு வருடத்தில் மூன்று மாதத்திற்கு நீர்ப் பற்றாக்குறை ஏற்படலாம் என்றும் கணிக்கப்பட்டது. 2013-2014 காலப் பகுதியில் அங்கு கடும் வரட்சி நிலவியதும் குறிப்பிடத்தக்கது (Social Safeguard Monitoring Report –May 2018).

 

இந்த முட்டுக்கட்டைகள், தடைகள் இருந்த சூழலில் யாழ்ப்பாணத்திற்கான குடிநீர் பிரச்சனைக்குத் தீர்வு தேவை என்ற நிலையில், தற்காலிக தீர்வாக நிலத்தடி நீரைப் பயன்படுத்துவதற்காக ADB யும் தேசிய நீர் வழங்கல், வடிகால் சபையும் நீர்த் தாங்கிகளையும் நீர் வழங்கல் குழாய்களையும் அமைப்பதற்கான ஒப்பந்தங்களை வழங்க தீர்மானித்தன. கடல்நீரை நன்னீராக்கும் நிலையம் உருவாக்கப்பட்ட பின்னர் அதனை இந்த நீர் வழங்கல் கட்டமைப்புடன் இணைக்கவும் தீர்மானிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, சம்பந்தப்பட்ட தரப்புகளின் சம்மதத்துடன் பின்வரும் வகையில் செயற் திட்டம் மாற்றியமைக்கப்பட்டது.

1.        குடிநீருக்கு மாற்று ஏற்பாடாக கடல்நீரை சுத்திகரித்து விநியோகித்தல்

2.        மட்டுப்படுத்தப்பட்ட அளவில் யாழில் உள்ள நிலத்தடி நீரை எடுத்துப் பயன்படுத்துதல்

3.        இரணைமடு குளத்தில் இருந்து 15,000 கன மீட்டர் நீரை மட்டும் நாளாந்தம் எடுத்து பளை, பூநகரி மற்றும் கிளிநொச்சிக்கு குடிநீரை வழங்குதல்

இந்த சூழ்நிலையில், யாழுக்கு இரணைமடுத் தண்ணீரை கொண்டு செல்லும் திட்டம் 2014 இல் கைவிடப்பட்டதாக இரணமடு நீர்த் தேக்க பரிபாலன வேலையுடன் தொடர்புபட்டவர்கள் கூறுகிறார்கள். மாற்றுத் திட்டமாக கடல்நீரை நன்னீராக்கும் நிலையத்தை அமைப்பதற்கான சாத்தியகூறு ஆய்வு 20 இடங்களில் செய்யப்பட்ட பின்னர், தாளையடிப் பகுதி தெரிவு செய்யப்பட்டு ADBயின் தலைமையக சிபார்சும் பெறப்பட்டது. இவற்றின் அடிப்படையில் பின்வருமாறு திட்டம் மாற்றியமைக்கப்பட்டது.

தற்காலிகத் தீர்வு (Interim Solution): நீர்க் கோபுரத்தையும் நீர் வழங்கல் கால்வாய்களையும் அமைத்தல்; நிலத்தடி நீரை மட்டுப்படுத்தப்பட்ட அளவில் பயன்படுத்துதல்;

குறுகிய காலத் தீர்வு (Short-term) : கடல்நீரை நன்னீராக மாற்றும் நிலையத்தின் மூலமும் நிலத்தடி நீர் மூலமும் யாழ் மாவட்ட குடிநீர்த்  தேவைக்கு நீரை வழங்குதல்.

இடைக்கால தீர்வு (Medium-term) : இரணமடு நீரில் 15,000 கன மீட்டர் நீரை பளை, பூநகரி, கிளிநொச்சி நகர குடிநீர்த் தேவைக்கு பயன்படுத்துதல்.

நீண்டகாலத் தீர்வு (Long-term Solution): இரணமடு குளத்தின் கொள்ளளவை எதிர்காலத்தில் அதிகரித்த பின்னர் யாழ்ப்பாண குடிநீர் தேவைக்கு குடிநீரை வழங்குதல். இதற்கு இரணமடு குளத்திற்கு நிரந்தரமாக (தொடர்ச்சியான) பாசன கால்வாய் மூலம் நீர் கிடைக்கும்போது இதனை நடைமுறைப்படுத்த முடியும். (Social Safeguard Monitoring Report –May 2018).

 

ஆரம்பத்தில் தேவையான நீரை முழுமையாக இரணமடுவிலிருந்து பெறும் திட்டம் இருந்தாலும் அதன் பின்னர் ஏற்பட்ட நீர்ப் பகிர்வு முரண்பாட்டின் பின்னர் செய்யப்பட்ட ஆழ்ந்த தொழில்நுட்ப ஆய்வுகளின் பின்னர் கடல்நீரை நன்னீராக மாற்றி நாளாந்தம் 24,000 கன மீட்டர் நீரைப் பெறுவதற்கு  முடிவெடுக்கப்பட்டது. இந்த அறிக்கைப்படி பின்வரும் மாற்றங்கள் செய்யப்பட்டன. (ADB Environmental Monitoring Report – Jan 2020)

1.        ஆரம்பத்தில் AFDயின் cofinance உடன் திட்டமிட்ட இரணமடு குளத்திலிருந்து தேவையான நீரைப் பெரும் திட்டம் கைவிடப்பட்டது.

2.        கழிவுநீர் அகற்றல் கூறு செயற்திட்டத்திலிருந்து நீக்கப்பட்டது.

3.        கடல்நீரை நன்னீராக்கும் நிலையம் உள்ளடக்கப்பட்டது.

 

2019 ம் ஆண்டு நடைபெற்ற நீர் வளத்துறை பங்காளர்கள் (Stakeholders) கூட்டத்தில், இரணமடு நீரை யாழின் குடிநீர் தேவைக்குப் பயன்படுத்தும் திட்டம் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டு அறிக்கைப்படுத்தப்பட்டதாகவும் அறிய முடிகிறது.

 

ஒரு புறத்தில் ஆரம்ப திட்டத்தில் மாற்றங்கள் நடந்து கொண்டிருந்தன. அதே நேரம்,  திட்டமிட்டபடி ADB, FAD கடனுதவிகள் ஊடாக 2016-18 காலப்பகுதியில் இரணமடு அணை சீரமைக்கப்பட்டு அணையின் உயரம் மேலும் இரண்டு அடி உயர்த்தப்பட்டு 36 அடியாக்கப்பட்டது. இதன் மூலம் 140 MCM நீரைத் தேக்கக்கூடிய வகையில் கொள்ளளவு அதிகரிக்கப்பட்டது. அணை இவ்வாறு உயர்த்திக் கட்டப்பட்ட பின்னர் 2019, 2020, 2021 ஆகிய வருடங்களில் நீர் மட்டத்தை 36 அடியில் பேணக் கூடியதாக இருந்தது. பொதுவாக குளத்துக்கு நீர் வரத்து அதிகமாக இருக்கும்போது மேலதிக நீரைத்  திறந்து விடுவார்கள். அவ்வாறு திறந்துவிடும் போது 35.5 அடி நீர் பேணப்படுவது வழமை என்று அறிய முடிகிறது.

 

இவ்வாறு 36 அடி உயரத்தில் நீரைத் தேக்கக் கூடிய நிலையில் உள்ள நீர்த் தேக்கத்தின் அணையின் உயரத்தை மேலும் ஒரு அடி உயர்த்தி அதன் மூலம் கிடைக்கும் உபரி நீரை யாழ்பாணத்திற்கு கொண்டு செல்வதே ஒரே தீர்வு என்று சில கல்விமான்களும் வேறு சிலரும் வாதித்தது வருகிறார்கள். அவர்களின் வாதப்படி அணையின் உயரத்தை 37 அடியாக்கினால் அந்த மேலதிக நீர் யாழ் மாவட்டத்தின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்யப் போதுமானது என்பது இவர்கள் முன்வைக்கும் ஒரு வாதம். ஆனால் அப்படியெல்லாம் கண்ணை மூடிக் கொண்டு செய்துவிட முடியாது. முதலில் அது தொடர்பாக environmental feasibility  ஆய்வு செய்ய வேண்டும்; Social feasibility ஆய்வு செய்ய வேண்டும். அவை திருப்தியாக இருந்தால் மட்டுமே அடுத்த கட்டத்தில் இறங்க முடியும்.

 

தற்போது 36 அடியில் பேணப்படும் நீரின் மட்டத்தை, அணையின் உயரத்தைக் கூட்டி 37 அடியில் சேமிக்க வேண்டும் என்றால் இரணமடு நீர்த் தேக்கத்தின் மேற்பகுதியில் மேலும் 95 ஹெக்டெயர் நிலம் நீரில் முழுக நேரிடும். அதனால் சாந்திபுரம் என்ற கிராமம் நீரில் மூழ்க நேரிடும். காட்டின் கணிசமான பகுதியும் நீரில் மூழ்கிப் போகும். அதனால் காட்டில் வாழும் விலங்கினங்களின் வாழிடம் உணவு, ஆதாரம் பாதிப்படையும். இதனால் அவை, குறிப்பாக யானைகள் மனிதர் வாழும் பகுதிக்குள் வருவதற்கும் சந்தர்ப்பம் இருக்கிறது. அது மனித – யானை மோதலை அதிகரிக்கச் செய்யலாம். காட்டுப் பன்றிகள் ஊருக்குள் வருவது அதிகரிக்கலாம், விவசாயம் பாதிக்கப்படலாம்.

 

இது ஒருபுறம் இருக்க, ஒவ்வொரு வருடமும் அதிக மழைவீழ்ச்சி கிடைக்கும் என்பதற்கோ, நீர்த் தேக்கத்தில் ஒவ்வொரு வருடமும் 37 அடியில் நீரைப் பேண முடியும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. கடந்த கால மழை வீழ்ச்சி முறை (Rainfall Pattern) பதிவுகளின்படி, ஐந்து வருட வட்டத்தில் 3 வருடங்கள் மட்டுமே அதிக மழைவீழ்ச்சி கிடைத்து இரணமடு வான் பாய்கிறது. இரண்டு வருடங்கள் ஒப்பீட்டளவில் வறண்ட வருடங்களாகத்தான் இருக்கின்றன. இதனை விட பத்து வருடங்களுக்கு ஒருமுறை கடும் வரட்சி நிலை ஏற்படுகிறது. இந்த சூழலில் 3 வருடங்கள் இரனமடுத் தண்ணீர் எடுத்துவிட்டு அடுத்த இரண்டு வருடங்களுக்கு எங்கிருந்து நீரை எடுப்பது? கடும் வரட்சி வரும் போது என்ன செய்வது?

 

இந்த சூழ்நிலையில், கிளிநொச்சி விவசாயிகளை விமர்சிப்பவர்கள் சில விடயங்களைப் புரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும். இங்குள்ள விவசாயிகள் மகா, யல என இரண்டு போகமும் பயிரிட்டு அதன் மூலமே  தமது வருமானத்தைப் பெற்றுக் கொள்கிறார்கள். ஆனால் சிலர்,  இலங்கை முழுவதுமே சராசரியாக 45 வீத நிலபரப்பில் மட்டுமே விவசாயிகள் கோடை காலத்தில் நெற்பயிர் செய்கிறார்கள், கிளிநொச்சியிலும் அதுபோல செய்தால் போதுமானது, விரும்பினால் 60 வீதம் பயிர் செய்யலாம் என்கிறார்கள். அது போதுமானது என்கிறார்கள்.

 

ஆனால், கிளிநொச்சியில் அணைக்கட்டு 36 அடியாக உயர்த்தப்பட்ட பின்னர், ஒவ்வொரு வருடமும் கிளிநொச்சி விவசாயிகள் 20ஆயிரம் ஏக்கரில் 80 % நிலப்பரப்பில் யல பருவத்தில் நெல் பயிரிடுகிறார்கள். சிலர் வாதிப்பது போல, 60 வீதம் மட்டும் பயிர் செய்தால் போதுமென்று நீர் வழங்கலை மட்டுப்படுத்தினால் ஒவ்வொரு வருடமும் 1600 mn ரூபா பெறுமதியான நெல்லுற்பத்தி குறைவடையும். இன்னொரு வகையில் சொன்னால் அங்குள்ள விவசாயிகளுக்கு கிடைக்கும் வருமானத்தில் 16௦௦ mn ரூபா இழப்பு ஒவ்வொரு வருடமும் ஏற்படும். அந்த இழப்பைத் தாங்கிக் கொள்ள அங்குள்ள விவசாயிகள் ஒன்றும் பெரும் பணக்காரர்கள் இல்லை என்பது இதில் அக்கறை காட்டும், எதிர்க்கும் அனைவருக்குமே தெரியும். 

 

தற்போது கிளிநொச்சி விவசாயிகள் கால்வாய் மூலம் வழங்கப்படும் நீரை வீணடிக்கிறார்கள் என்று ஒரு குற்றச்சாட்டையும் அவதானிக்க முடிந்தது. நீரை முகாமை செய்யும் அதிகாரிகள் தமது அறிவாற்றலை பயன்படுத்தி விவசாயிகள் முறையாக நீரைப் பயன்படுத்த வழிகாட்டினால் அவ்வாறு நீர் விரயமாகாது என்பதற்கு 2020 இல் அப்போது பொறுப்பாக இருந்த அதிகாரியின் மேற்பார்வையில் 100 வீத நிலப்பரப்பில், அதாவது 20 ஆயிரம் ஏக்கரிலும் யல பருவத்திலும் வெற்றிகரமாக பயிர் செய்தமை நல்ல உதாரணமாக இருக்கிறது. இதன் மூலம் நீரை வீணடிக்காமல் பயன்படுத்த முடியும் என்பது நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

 

மேலும் அங்கு விவசாயிகளுக்கு நீரை வீணடிக்கிறார்கள் என்று வைத்துக் கொண்டாலும், அவர்கள் அவ்வாறு நீரை வீணடிக்காது வினைத்திறன் மிக்க நவீன நீர்ப்பாசன முறைகளைப் பின்பற்ற வழிகாட்டினால் நீர் வீணடிக்கப்படாது அல்லவா? யாழ் பல்கலைக் கழக விவசாய பீடம், பொறியியல் பீடம் போன்றவை விவசாயத் திணைக்களம், நீர்ப்பாசனத் திணைக்களம் என்பவற்றுடன் இணைந்து நீரை குறைந்த செலவில் வினைத்திறனுடன் பயன்படுத்தும் முறைகளை கிளிநொச்சி விவசாயிகளுக்கு சொல்லித் தந்திருக்கலாமே? அதன் மூலம் நீர் விரயமும் தவிர்க்கப்பட்டு, தமக்குத் தேவையான நீருக்குத் தட்டுப்பாடு வந்துவிடும் என்ற விவசாயிகளின் அச்சத்தையும் போக்கியிருக்கலாம் அல்லவா? அதனை விடுத்து விவசாயிகளை குற்றவாளிக் கூண்டில் ஏற்றி, யாழுக்கு தண்ணீர் பெறலாம் என்று நினைப்பவர்களை என்ன சொல்வது?

 

இவை ஒருபுறம் இருக்க, யாழின் நீர்த் தேவைக்காக ஏற்கனவே பல கல்விமான்களால் விவாதிக்கப்பட்ட இன்னொரு தீர்வுதான் பாலியாற்றுத் திட்டம். கடந்த வருடம் (2024) அப்போதைய ஜனாதிபதி ரணிலினால் பாலியாறு திட்டத்தை முன்னெடுக்க அரசினால் 250 mn ஒதுக்கப்பட்டதாக அறியமுடிகிறது. இது டிசம்பர் 19, 2023 அன்று நடைபெற்ற யாழ் மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் அறிவிக்கப்பட்டிருக்கிறது. அது பத்திரிகைச் செய்தியாகவும் வந்தது. ஆனால் அந்த வேலைகள் திட்டமிட்டபடி ஆரம்பிக்கப்படவில்லை.

 

அந்த நிதியைப் பயன்படுத்தப்படுத்தி வேலையை ஆரம்பிக்க  தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் சபைக்கு ஏன் இந்த விடய விசேட நிபுணர்கள்  அழுத்தம் கொடுக்கவில்லை? ஏன் அதைப் பற்றிப் எதுவும் விரிவாக மக்களுக்கு விளங்கும் வகையில் பேசுவதில்லை? கடந்த காலத்தில் செய்யப்பட்ட ஆய்வின்படி இரணைமடுவிலிருந்து 9 MCM தண்ணீரை மட்டுமே பெறமுடியும் என்றும் பாலியாற்றிலிருந்து 42 MCM தண்ணீரைப் பெறமுடியும் என்று சொல்லப்படுகிறது. அப்படியிருக்க, இரணமடு தண்ணீர்தான் வேண்டும் என்று அடம்பிடிப்பது எதற்காக?

 

இரணமடு தண்ணீரைத் தரமாட்டோம் என்று சொல்வதற்கு கிளிநொச்சி விவசாயிகளுக்கு உரிமையில்லை என்ற குற்றம் சுமத்தும், அவர்களை யாழ் மக்களுக்கு எதிரானவர்களாக காட்டும் வகையிலான ஒரு இன்னொரு குற்றச்சாட்டையும் இவர்கள் முன் வைக்கிறார்கள். விவசாய அமைப்புகள் முதலில் ஒப்பந்தத்தில் கையொப்பம் வைத்தார்கள். பின்னர் பின்வாங்கி விட்டார்கள் என்பதுதான் அந்தக் குற்றச்சாட்டு. இவை எவ்வளவு தூரம் உண்மை, என்ன நடந்தது, என்ன நடக்கிறது என்று தேடி அறியாமல் அந்த காணொளிச் செய்திகளை நம்பி வேறு சிலரும் நீர் அரசியல் பேசுகிறார்கள்.

 

இந்த இரணைமடு குளம் நூறு வருடங்களுக்கு முன்னர் கட்டப்பட்டது முழுக்க முழுக்க விவசாயத் தேவைக்காக மட்டுமே. அதிலும் யாழ் குடாநாட்டுக்கான உணவுப் பாதுகாப்புக்காகவே இது உருவாக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. இங்கு விவசாயிகளாக இருக்கும் பலரும் யாழ் மாவட்டத்தவரே. இரணைமடு அணை கடந்த காலங்களில் ஒவ்வொரு தடவையும் திருத்தப்பட்டு உயர்த்தப்பட்டதும் விவசாய நீர்த் தேவையை அதிகரிக்கவே. இதிலிருந்து குடிநீரையும் பெறும் யோசனை 20 வருடங்களுக்கு முன்னர்தான் முன் வைக்கப்பட்டது.

 

அதேநேரம் இவ்வாறான நீர்த் தேக்கங்களின் நீராதாரத்தை வெவ்வேறு தேவைகளுக்குக் பங்கிடும்போது அந்த நீராதாரத்தின் முக்கிய பங்காளர்களின் சம்மதம் அவசியமானது. அவ்வாறு இரணைமடு தண்ணீரைப் பகிர்வதில் கடந்த காலங்களில் நடைபெற்ற பேச்சுவார்த்தை இழுபறிகள், ஆரம்பத்தில் வரையப்பட திட்டத்திற்கு சம்மதித்துவிட்டு இடைப்பட்ட காலத்தில்  ஒத்துழைக்க மறுத்தார்கள் என்ற குற்றச்சாட்டுகளை அடிபப்டையாக வைத்து கிளிநொச்சி விவசாயிகளை மோசமானவர்களாகவும் இரக்கமற்றவர்களாக சித்தரிப்பதுவும் பிரதேசவாதிகள் என்று பெயரிடுவதும் தவறான அணுகுமுறையாகும்.  

 

இவ்வளவு பணம் செலவு செய்து அனைத்துக் கட்டமைப்புகளையும் கட்டி முடித்த பின்னர், யாழுக்கு நீர் வழங்குவதற்கு கிளிநொச்சி விவசாயிகள் குறுக்கே நிற்கிறார்கள்; இது நேர்மையற்ற செயல்; இரணைமடு தண்ணீரைக் கொடுக்க வேண்டாம் என்று சொல்ல இவர்கள் எந்த உரிமையும் அற்றவர்கள் என்று சொல்லுவோர் முதலில் இலங்கையில் உள்ள நடைமுறைகள், சட்டங்கள் உட்பட இன்னும் சில விடயங்களைப் புரிந்து கொள்ள வேண்டும்.

 

இலங்கையில் உள்ள நீர்ப்பாசனக் குளங்கள், நீர்த் தேக்கங்கள் அனைத்திலும் அந்த நீர்த் தேக்கங்களின் பயன்பெறும் விவசாயிகளுக்கு பொறுப்புகளும் உரிமைகளும் உள்ளன. இலங்கையில் நடைமுறையில் உள்ள Irrigation Act உம் அவர்களுக்கு அந்த நீர்த்தேக்கத்தின் மீதுள்ள உரிமைகளை உறுதிப்படுத்துவதாக இருக்கின்றது. அதைத் தவிர இந்த இரணமடு செயற்திட்டத்தின் திட்ட முன்வரைவின்படி கிளிநொச்சி விவசாயிகள் இந்தத் திட்டத்தின் பயனாளிகளாகவும் பங்காளிகளாகவும் உள்ளார்கள். அந்த வகையில் அவர்களுக்கு வேலைத்திட்டத்திலும் நீர்ப் பகிர்விலும் உரிமை இருக்கிறது.

 

இதனை விட நாங்கள் புரிந்துகொள்ள வேண்டிய விடயங்கள் இருக்கின்றன. எந்த ஒரு அபிவிருத்தித் திட்டத்திலும் ஒரு முக்கிய அணுகுமுறை பல சர்வதேச அபிவிருத்தி நிறுவனங்கள், ஐக்கிய நாடு அபிவிருத்தித் திட்டங்கள் என்பவற்றால் பின்பற்றப்படுகின்றன. Human Right Based Approach அல்லது Right based approach என்றழைக்கப்படும் மனித உரிமை அடிப்படையிலான அணுகுமுறை கட்டாயம் பின்பற்றப்பட வேண்டும் என்பது அவ்வாறான அமைப்புகளின் நிலைபாடாக இருக்கிறது. அதில் Do No Harm என்ற அணுகுமுறையும் உள்ளடங்குகிறது. மேலும் சூழல் மற்றும் சமூக சாத்தியப்பாட்டு (Environmental and Social Feasibility) ஆய்வும் கட்டாயம் செய்யப்பட வேண்டும்.

 

இதனை இரணைமடுவை உதாரணமாக வைத்து விளக்குவதாக இருந்தால் இந்த நீர்க் கொள்ளளவு அதிகரித்தல் செயற்திட்டத்தில் யாழ்பாணத்தில் இருக்கும் மக்கள் பயனாளிகள் (Beneficiaries). கிளிநொச்சி விவசாயிகள் அந்த நீர்த் தேக்கத்தில் பங்காளிகளும் (Stakeholders) பயனாளிகளும் (Beneficiaries) ஆக இருக்கிறார்கள். இரணமடு நீரை யாழுக்கு கொண்டு செல்வதால் யாழ் மக்களுக்கு நன்மைதான் கிடைக்கும். தீமை இல்லை. ஆனால் குளத்தின் கொள்ளளவு அதிகரிப்பதால் கிளிநொச்சி விவசாயிகளுக்கு கோடையில் தேவையான அளவு நீர் கிடைப்பது நன்மை. ஆனால் வரட்சிக் காலத்தில் யாழ்ப்பாணத்தின் தேவைக்கு கொஞ்ச நீரையாவது பகிர நேர்ந்தால், கோடை கால விவசாயத்திற்கு போதுமான நீர் இல்லாது போகலாம். அது அவர்களுக்கு ஏற்படக்கூடிய தீமை.

 

ஆரம்பத்தில் யாழுக்கு நீர் வழங்க சம்மதித்து கையெழுத்திட்ட விவசாய அமைப்புகள் பின்னர் நீரைப் பங்கிட மறுத்தார்கள் என்பதை குற்றச்சாட்டாக முன் வைக்க முன்னர் நான் மேலே குறிப்பட்ட அணுகுமுறை பின்பற்றப்பட்டதா என்று பார்க்க வேண்டும். நான் அறிந்தவரை கிளிநொச்சி விவசாய அமைப்புகள் பல சுற்றுப் பேச்சு வார்த்தைகள் நடைபெற்றாலும் ஒரு முறைப்படுத்தப்பட்ட சமூகக் கலைந்துரையாடல், சமூக சாத்தியப்பாட்டு ஆய்வு செய்யப்பட்டதாக எந்தத் ஆவணத்திலும் தகவல் கிடைக்கவில்லை.

அதே நேரம், 2013 டிசம்பர் மாதம் 29ம் திகதி நிலாந்தன் எழுதிய ஒரு அரசியல் கட்டுரையும் இதனை வலுப்படுத்துகிறது. அதாவது அந்த வருடம் அக்டோபர் மாதம் அளவில் யாழில் வீடு வீடாக ஒரு கணக்கெடுப்புச் செய்திருக்கிறார்கள். கிளிநொச்சி விவசாயிகளும் தங்களிடம் கேட்காமல் அதிகாரிகள் முடிவெடுத்ததாக கூறியிருக்கிறார்கள். தம்மிடம் போதியளவு கலந்தாலோசிக்கவில்லை என்று சொல்லியிருக்கிறார்கள். (இணைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது).

 

உங்களில் சிலர் இதனை மறுக்கலாம். ஆசிய அபிவிருத்தி வங்கி போன்ற ஒரு பெரிய அமைப்பு அப்படித் தவறு செய்யுமா என்று கேட்கலாம். ஆனால் ஆசிய அபிவிருத்தி வங்கி மீது அது தனது செயற்திட்டங்களில்  மனித உரிமை அடிப்படையிலான அணுகுமுறையைப் பின்பற்றுவதில்லை, அதற்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. அதற்கு உதாரணமாக இரண்டு அறிக்கைகளின் இணைப்புகள் கீழே உள்ளன.

 

இந்த அணுகுமுறையை ஒரு பக்கமாக வைத்துவிட்டுப் பார்த்தாலும் ஒரு நாட்டின் சட்டத்திற்கு அமைய ஒரு செயற்திட்டத்தில் சம்மதித்து கையொப்பமிடும் ஒரு தரப்பு, பின்னர் திட்டத்தில் தமக்குப் பாதகமான விடயங்களை இனங் கண்டால் தாம் சம்மதித்த ஒப்பந்தத்தில் இருந்து விலகிக் கொள்ள முழு உரிமையுள்ளது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அவ்வாறு விலகும்போது ஒப்பந்தத்தில் ஏதாவது நிபந்தனைகள் இருந்தால் அதன்படி தண்டம் அறவிடலாம். மாறாக ஒப்பந்தத்தில் நீடிக்கும்படி யாரும் வற்புறுத்த முடியாது. எனவே சிலர் சொல்வது போல விவசாய அமைப்புகள் முன்னர் கையொப்பமிட்டிருந்தாலும் அவர்கள் அதிலிருந்து பின்வாங்குவதற்கு உரிமையுள்ளது.  இதைப் புரிந்து கொள்ளாமல் பொது வெளியில் தொடர்ந்தும் அவர்கள் மீது குற்றம் சுமத்துவது நிச்சயம் இரண்டு மாவட்டங்களுக்குள் பகையை ஏற்படுத்துமே தவிர யாழுக்கு நீரைப் பெற்றுத் தரப் போவதில்லை.

 

ஒரு வளத்தினை பல்வேறு சமூகத்தினர் தமது அடிப்படைத் தேவைக்காக பகிர்ந்து கொள்வது நல்ல விடயம்தான். விவசாயத் தேவைக்காக உருவாக்கப்பட்ட ஒரு நீர்த்தேக்கத்தை குடிநீர்த் தேவைக்கும் பாவிப்பது ஏற்கனவே திருகோணமலையில் உள்ள கந்தளாயில் உள்ள நடைமுறைதான். ஆனால் கந்தளாய்க் குளத்திற்கு மகாவலியின் நீர் வழங்கல் நிரந்தர நீராதாரமாக இருக்கிறது. ஆனால் இரணமடுவுக்கு அப்படி நீராதாரம் இல்லை.

 

அவ்வாறு இரணைமடுவுக்கு நிரந்தர நீராதாரம் கிடைத்தால் யாழுக்கு நீரை வழங்கலாம் என்பது ஏற்கனவே திருத்தப்பட்ட திட்ட வரைவில் உள்ள விடயம்தான். அந்த நீரை மகாவலியிலிருந்து பெறலாம் என்பதுவும் ஏற்கனவே சொல்லப்பட்ட ஒரு தீர்வுதான். ஆனால் அதில் உள்ள பெரும் பாதகமான விடயத்தை நாம் மறந்துவிடக்கூடாது. அவ்வாறு மகாவலி இணைக்கப்பட்டால், அதன் பின்னர் இரணமடு நீர்த் தேக்க நிர்வாகம் மத்திய அரசாங்கத்தின் ஆளுகைக்குள் சென்றுவிடும். அதேபோல பயிர் செய்யப்படும் 20 ஆயிரம் ஏக்கர் நிலமும் மத்திய மத்திய அரசின் ஆளுகைக்குள் சென்றுவிடும். சிலர் அஞ்சுவது போல மகாவலி நீர் வரும் பாதையோரம் எங்கும் மகாவலிக் குடியேற்றமும் வரக்கூடும். அதன் பின் மகாவலி தமிழருக்கு தலைவலியாகிவிடும்.

 

யாழ் மாவட்டத்தின் குடிநீர்த் தேவைக்கு நிச்சயம் தீர்வு காணப்பட வேண்டும். ஆனால் இரணைமடுத் தண்ணீரை பெற்றுக் கொள்வதில் சில சிக்கல்கள் உள்ளன. நான் முன்னர் பகிர்ந்த விடயங்களை தவிர, சமாந்தரமாக யாழ்ப்பாணத்தில் நீர் மாசடைதலை குறைக்கவும், நிலத்தடிநீர் சேமிப்பை அதிகரிக்கவும், யாழ் மாவட்டத்தின் நிலத்தடிநீர் மேலும் உவர்நீர் ஆவதைத் தடுக்கவும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டியதும் அவசியமானதே. 

 

அதற்கான பல்வேறு தீர்வுகளை துறை சார்ந்தோர் பலர் கடந்த சில வருடங்களாகவே தெரிவித்து வந்திருக்கிறார்கள். அதே சமயம் அவ்வாறு தெரிவிக்கப்பட்ட தீர்வுகளை சிலர் நடைமுறைச் சாத்தியம் அற்றவை என்று சிலர் சவாலுக்குட்படுத்துவத்தையும் அவதானிக்க முடிகிறது. எதிர்பார்த்த அளவுக்கு மாசடைந்த நீரை சரி செய்யும் முயற்சிகளிலும் முன்னேற்றம் காணப்படவில்லை. மறுபுறத்தில் சட்டவிரோத மண்ணகழ்வு, சுண்ணக்கல் சுரண்டல் என நீர் மாசடைதலை விரைவாக்கும் செயலில் சில பேராசைப் பிசாசுகளும் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றன.

 

எனவே யாழின் நீர்த் தேவைக்கு குடாநாட்டுக்கு வெளியே உள்ள நீர் வளத்தின் உதவி தேவையான ஒன்றாக இருக்கிறது. தற்போது மாற்றங்களுக்குள்ளான செயற்திட்டத்தின் ஆரம்ப திட்ட வரைபின்படி முதலில் 50,000 கன மீட்டர் நீரை எடுக்கவே திட்டமிடப்பட்டது. ஆனால் பின்னர் 27,000 கன மீட்டர் தண்ணீரை மட்டும் எடுக்கும் வகையில் திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. உப்புநீரை நன்னீராக்குதல் மூலம் 24,000 கன மீட்டர் நீர் பெறப்படும், மிகுதி 3,000 கன மீட்டர் நிலத்தடி நீர் மூலம் பெறப்படும் என்பதே பாலியாற்றுத் திட்டம் முடியும்வரை தற்போதுள்ள தீர்வாக உள்ளது.

 

ஆனால் ஆரம்பத்தில் 50,000 கன மீட்டர் தேவை என்ற கணிப்பிட்ட அளவு அதன் பாதியாகக் குறைக்கப்பட்டது என்றால், யாழ் குடாநாட்டின் சில பகுதிகள் இந்தத் திட்டத்திலிருந்து நீக்கப்பட்டதா? இல்லையெனில் யாழ்குடா நாட்டில் பல்வேறு மூலோபாயன்களைப் பயன்படுத்தி யாழ் குடாநாட்டின் நிலத்தடி நீரின் தரத்தை மேம்படுத்துவதுதான் திட்டத்தின் அடுத்த இலக்காக இருக்கிறதா? அப்படி நிலத்தடி நீரை அதிகரித்தல், மாசினை நீக்குதல் போன்ற திட்டங்கள் இருந்தால் அதற்கான காலவரையறை என்ன?

 

யாழ் மாவட்டத்தின் நில அமைப்புக் காரணமாக நீரைச் சேமிக்க முடியாது, உப்புத் தன்மையை குறைத்து நன்னீராக்க முடியாது. The damage is irreversible என்று முடிவு செய்யப்பட்டுள்ளது என்று சிலர் சொல்கிறார்கள். இவர்கள் சொல்வது போலவே யாழில் தண்ணீரைச் சேமிக்க முடியாது என்றால் எப்படி யாழில் பல குளங்களில் வருடம் முழுவதும் தண்ணீர் நிற்கிறது? இதுவரை யாழ் குடாநாட்டில் எத்தனை இடங்களில் இவை தொடர்பாக ஆய்வுகள் செய்யப்பட்டன? யாரால் செய்யப்பட்டது? அது தொடர்பான விபரங்களைப் சார்ந்தோர் பகிர்வார்களா?

 

இன்று குடிநீர்க்கு மட்டும் தண்ணீர் வேண்டும் என்று சொல்லப்படுகிறது. ஆனால் அவ்வாறு தொடர்ந்து யாழுக்கு நீர் வழங்கப்படும் நிலை வந்தால், சில வருடங்கள் சென்ற பின்னர் தேவைகளுக்கும் இந்த நீரைப் பயன்படுத்த ஆரம்பித்து அதனால் நீருக்கான கேள்வி அதிகரித்தால் அதை எவ்வாறு தீர்ப்பது?  உதாரணமாக, யாழில் சுற்றுலாத்துறையை மேம்படுத்த கட்டுமானங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும் என்ற குரல்கள் இப்போதே கேட்க முடிகிறது. அவ்வாறு சுற்றுலாத் துறை அங்கு வளரத் தொடங்கினால் அதனால் ஏற்படக்கூடிய நீர்த் தேவையை எப்படிப் பூர்த்தி செய்வது? அப்படி ஒரு நிலை வந்தால் குறித்த நீராதாரத்தின் மீது கேள்வி அழுத்தம் அதிகரிக்கும் அல்லவா? அப்படியான நிலை வந்தால் நீருக்கான மோதல் ஒன்று ஏற்படாதா?

 

2012 இல் 583,378 ஆக இருந்த யாழ் மாவட்ட சனத்தொகை தற்போது 628,000 ஆக இருக்கிறது. (7.6% வீத அதிகரிப்பு). அப்படியென்றால் நீரின் தேவையும் 7% அதிகரித்து இருக்குமல்லவா? கிளிநொச்சியின் சனத்தொகையும் 2012 இலிருந்து 11 வருடங்களில் 20% இனால் அதிகரித்துள்ளது. இன்னும் பத்து வருடத்தில் இந்த இரண்டு மாவட்டங்களிலும் சனத்தொகை மேலும் அதிகரித்தால் குடிநீர்த் தேவையும் அதிகரித்தால் அதிகரிக்கும் நீர்த் தேவையை எப்படித் தீர்ப்பது?

 

யாழில் குடிநீர் பிரச்சனை ஏற்பட்டமைக்கான காரணங்களில் பல குளங்கள் முறையாகப் பராமரிக்கப்படாமை, மழைக் கால நீரோட்டப் பாதைகள் பராமரிக்கப்படாமை, பல குளங்கள் திருடப்பட்டமை, பல குளங்களின் பகுதிகள் திருடப்பட்டமை என்பனவும் உள்ளடங்குகின்றன. நாங்கள் ஊரில் வசித்த காலத்தில் ஊர் மக்களே ஒன்று கூடி குளங்களைப் பராமரிக்கும் வழக்கம் இருந்தது. தற்போது அங்கு உள்ளூர் அரச கட்டமைப்புகள் இயங்கக் கூடிய நிலையில் குளங்களை மீட்கும் செயற்திட்டங்களை முன்னெடுப்பதில் ஏன் தாமதம் ஏற்படுகிறது? அதேபோல மலக் கழிவுகளால் மாசாகும் நிலத்தடி நீரை மீட்க, யாழில் முன்னர் பிரேகரிக்கப்பட்ட யாழ் மாவட்டத்தின் கழிவுநீர் முகாமைக்கான திட்டத்தை மீளக் கையில் எடுத்து sewerage system இனை தனிச் செயற்திட்டமாக முன்னெடுக்க கல்விமான்களும் விடய திறனாளர்களும் முயற்சி எடுக்கலாம் அல்லவா?

 

பாலியாற்றுத் திட்டத்தை முன்னெடுப்பதில் இரணைமடு அளவிற்கு சமூக முரண்பாடுகள் வர சந்தர்ப்பம் இல்லை, அதனால் எந்த விவசாய நடவடிக்கையும் பாதிக்கப்படப் போவதில்லை என்ற சொல்லப்படுகிறது. ஏற்கனவே அந்தத் திட்டத்திற்கு நிதி ஒதுக்கப்பட்ட நிலையில் அந்தத் திட்டத்தை முன்னெடுக்க அங்குள்ள சமூக ஆர்வலர்களும் கல்விமான்களும் குரல் கொடுப்பதோடு அழுத்தம் கொடுக்க வேண்டும்.

 

 

மறுபுறத்தில் சாண் ஏற முழம் சறுக்குவது போல குடாநாட்டினுள் கடல்நீர் வேகமாக வரச் செய்யக்கூடிய வகையில்  கடந்த பல வருடங்களாக யாழில் நடைபெறும் சட்ட விரோத மண்ணகழ்வை தடுக்க தீர்க்கமான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். சட்டவிரோதமான சுண்ணக் கல் அகழ்வும் தடுக்கப்பட வேண்டும். ஏற்கனவே கடல் நீர் உள்ளே வருகிறது என்ற நிலையில் இவ்வாறான அகழ்வுகளைத் தடுக்கும் வகையில் சட்டங்கள் திருத்தப்பட வேண்டும்.

 

சில விடயங்களில் அரசையோ, வெளியிலிருந்து வரக்கூடிய வளங்களை, உதவிகளை நம்பியிருப்பது நன்மை தரப் போவதில்லை. யாழுக்கான குடிநீர் விடயத்திலும்  யாழ் குடாட்டினுள் செய்யப்பட வேண்டிய விடயங்கள் பல  உள்ளன. ஒருபுறத்தில் கழிவு நீர் முகாமைத்துவம், அணைகளை ஏற்படுத்தி உவர்நீர் உள்வருவதைத் தடுத்தல், நீர்நிலைகளை திருத்திப் பராமரித்தல் போன்ற வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும். அதேநேரம் நீர் மாசுபடுதல், நீர் விரயமாக்கல் தொடர்பாக பொதுமக்கள், விவசாயிகள் போன்றோருக்கு விழிப்புணர்வு வழங்கப்பட வேண்டும். இந்த முன்னெடுப்புகளில் யாழ் பல்கலைக் கழகமும் அங்குள்ள கல்விமான்களும் தமது காத்திரமான பங்களிப்பை வழங்க வேண்டும்.

-    வீமன் -

 

References:

ADB – Environmental Monitoring Report Jan 2020: https://www.adb.org/sites/default/files/project-documents/37378/37378-013-emr-en_0.pdf

Status Report of Iranamadu Tank as of 28.01.2019, Northern Provincial Council: https://np.gov.lk/status-report-of-iranamadu-tank-as-of-28-01-2019/

Social Safeguard Monitoring Report Dec 2017 – May 2018: https://www.adb.org/sites/default/files/project-documents/37378/37378-013-smr-en_12.pdf

Social Safeguard Monitoring Report _Jan -Dec 2016 – Published in Jan 2018: https://www.adb.org/sites/default/files/project-documents/37378/37378-013-smr-en.pdf

Auditor General’s Department: Iranamadu Irrigation Development Project – 2017: https://www.naosl.gov.lk/web/images/audit-reports/upload/2017/Projects/4_VI/Iranamadu-Irrigation-Development-Project---2017---E.pdf

ADB – Summary of Project Performance – 2017: https://www.adb.org/sites/default/files/linked-documents/37378-014-spp.pdf

Iranamadu Irrigation Development Project Supervision report – May 2016: https://www.ifad.org/documents/48415603/49455874/Supervision+mission+April+2016.pdf/af009b98-0d12-5e6e-4459-7b2a1dc0979d?t=1726610497054

Jaffna and Kilinochchi Water Supply and Sanitation Project – ADB_Nov 2010: https://www.adb.org/sites/default/files/linked-documents/37378-01-sri-pam.pdf

MOPAN: Multilateral Organisation Performance Assessment Network – Institutional Report (ADB)_Executive Summary – 2013: https://www.mopanonline.org/assessments/adb2013/Mopan%20ADB%20report%20ExecSum%20[Eng]%20[1].pdf#:~:text=%E2%80%A2%20While%20ADB%20has%20no%20clear%20mandate,as%20a%20priority%20or%20cross%2Dcutting%20priority%2C%20the

Summary of Concerns regarding the ADB’s Draft Safeguard Policy Statement - Unacceptable Weakening of ADB Environmental and Social Standards_Jan 2008: https://www.forestpeoples.org/sites/fpp/files/publication/2010/08/adbspsfailuresummaryjan08eng.pdf#:~:text=%E2%80%A2%20fails%20to%20apply%20a%20human%20rights%20based%20approach%20to%20development&text=approach%E2%80%9D%20to%20the%20application%20of%20a%20country%20systems%20approach%20for.%20ADB%20projects.

இரணைமடு நீர்: யாருக்கு யாரால் யாருக்காக?_நிலாந்தன் – Dec 29, 2013 : https://www.nillanthan.com/246/


  அடி சறுக்கும் அனுர?   தேசிய மக்கள் சக்தி ஜனாதிபதி தேர்தலில் வடக்கு, கிழக்கில் பெரும் வெற்றியைப் பெறுவோம் என்ற நம்பிக்கையுடன் இருந்திரு...