“இல்லை என்று சொல்ல ஒரு கணம் போதும்”. ஆனால்
எங்களில் பலரால் “இல்லை” என்று சொல்ல வேண்டிய சந்தர்ப்பத்தில் “இல்லை” என்று சொல்ல
முடிவதில்லை. அதனாலேயே நாம் தேவையற்ற மனச் சங்கடங்கள், பிரச்சனைகள் என்பவற்றிற்கு
முகம் கொடுக்கிறோம். இவ்வாறான நிலைமையை எமது குடும்பம், அலுவலகம், நட்பு வட்டம் என நாம்
வாழும் அனைத்துச் சூழலிலுமே எதிர்கொள்கிறோம்.
பலநேரங்களில், “இல்லை” என்று சொல்ல
விரும்பினாலும் எங்களை அறியாமலே “சரி, செய்கிறேன்” என்று சொல்லி விடுகிறோம். இது
ஏன் என்று நினைத்துப் பார்த்திருக்கிறீர்களா? சுயநலமானவர், எங்களைப் பற்றி
அக்கறையற்றவர், முக்கியமான தருணத்தில் கைவிட்டு விட்டார் என்று எமது நட்பும்
சுற்றமும் சொல்லிவிடுமோ என்ற உணர்வே எம்மை இவ்வாறு செய்ய வைக்கிறது.
கேட்பவருக்கு நாம் கடமைப்பட்டுள்ளோம் என்ற உணர்வு, கேட்பவர்
நெருங்கிய உறவினர் என்பதால் தவிர்க்க முடியாத நிலை, நட்புக்காக செய்ய வேண்டுமே போன்ற
அக அழுத்தங்கள் காரணமாகி விடுகின்றன. இவ்வாறான அழுத்தங்களால் இல்லையென்று சொல்ல முடியாதாவர்கள்
அதனாலேயே நேரவிரயம், பண நட்டம் என்பவற்றுடன் கணவன் மனைவிக்குள் இதனால் சண்டை,
உறவுமுறைகளில் விரிசல், நண்பர்கள் மத்தியில் மனக்கசப்பு மட்டுமன்றி கடும் மனவழுத்தத்திற்கும்
உள்ளாகி துன்பப்பட வேண்டியுள்ளது.
பொதுவாக சரீர ரீதியாக இன்னொருவருக்கு
உதவும்போது எங்களுக்கு வெறும் நேர விரயம் மட்டுமே ஏற்படும். ஆனால் இன்னொருவருக்காக கடன் வாங்கிக் கொடுத்தல்,
அவருடைய கடனுக்கு, வீடு வாங்குவதற்கு பிணை நிற்றல் போன்ற சந்தர்ப்பங்களில்
முன்பின் யோசிக்காது “சரி, செய்கிறேன்” என்று சொல்லிவிட்டு பின்னர் அந்தக் கடனையும் அதற்கான வட்டியையும் கட்டி நொந்தவர்கள்
பலர் இருக்கிறார்கள்.
இவ்வாறு தேவையான இடத்தில் இல்லை என்று சொல்ல
முடியாமைக்கும் தன்னம்பிக்கைக்கும் தொடர்பிருப்பதாக சில உளவியலாளர்கள்
சொல்கிறார்கள். அதேபோல தனது தேவைகளைவிட தன்னைச் சுற்றியுள்ளவர்களின் தேவைகளுக்கே
முன்னுரிமை கொடுப்பவர்களும் இவ்வாறு நடப்பதாகக் கூறப்படுகிறது. ஒருவர் சிறுவயதிலிருந்து
வளரும் சூழலும் பெற்றோரின் வளர்ப்பு முறையும் இதில் தாக்கம் செலுத்துகின்றன என்பது
இன்னொரு சாராரின் கருத்தாக இருக்கிறது.
எவ்வாறு “இல்லை” என்று சொல்வது?
முதலில் நீங்கள் “இல்லை” என்று சொல்லுவது, உதவி
கேட்பவருக்கு உதவக் கூடாது என்பதனால் இல்லை என்பதை தெளிவாகப் புரிந்து
கொள்ளுங்கள். நீங்கள் உதவ மறுப்பதால் அவர் மிகவும் கஷ்டப்படப் போகிறார். அதற்கு
நானே காரணமாக இருக்கப் போகிறேன் என்ற குற்ற உணர்வுக்கு ஆளாகிவிடாதீர்கள். நீங்கள் நிராகரிக்கப்போவது
அவரின் கோரிக்கையை மட்டுமே, அவரையல்ல. உங்களால் முடியாதென்றால் உடனடியாகவே
தைரியமாக, முடியாதென்று சொல்லிவிடுங்கள். ஆனால் அதற்கு விளக்கம் சொல்ல
முயற்சிக்காதீர்கள். அது தேவையில்லாத பிரச்சனையைத்தான் உருவாக்கும்.
அப்படி உடனடியாக மறுக்க முடியாவிட்டால், “நான் யோசித்துச் சொல்கிறேன்” என்று சொல்லுங்கள். இவ்வாறு போதிய நேரத்தைப் பெற்றுக் கொண்டதால் சாதக பாதகங்களை நன்கு யோசித்து பதிலளிக்க முடியும். கேட்டவரும், நீங்கள் பெரும்பாலும் மறுத்து விடுவீர்கள் என்பதை புரிந்து கொள்ளத் தயாராகிவிடுவார். செய்யமுடியாதென மறுப்பதற்கும் உங்களைத் தயார் செய்து கொள்ள முடியும்.
உங்களிடம் ஒருவர் “எனக்கொரு உதவி செய்ய முடியுமா?” என்று கேட்டால், முதலில் என்ன உதவி வேண்டும் என்று சொல், என்னால் செய்ய முடியுமா என்று சொல்கிறேன்” என்று சொல்லப் பழகுங்கள். அவர் கேட்கும் உதவியை உங்களால் செய்ய முடியாத நிலையில் நீங்கள் இருந்தால் சிறிதும் தயங்காது, “மன்னிக்கவும் என்னால் செய்ய முடியாதுள்ளது” என்று தெளிவாகச் சொல்லி விடுங்கள். ஆரம்பத்தில் இது பலருக்குக் கடினமாக இருந்தாலும் ஓரிருமுறை செய்யத் தொடங்கிய பின்னர் தேவையான சந்தர்ப்பத்தில் “இல்லை” என்று சொல்லுவது கடினமானதாக இருக்காது.
முக்கிய குறிப்பு: இதனை வாசித்த பின்னர் உங்களில் பலர் இனிமேல் உங்களுக்கு விருப்பமில்லாத விடயத்தில் துணிந்து “NO” சொல்லிவிட வேண்டும் என்று தீர்மானமே எடுக்கக்கூடும். ஆனால் உங்கள் பணியிடத்தில் மேலதிகாரி சொல்லும் விடயங்களில் அவசரப்பட்டு “இல்லை, முடியாது” என்று சொல்லி விடாதீர்கள். இதனால் உங்கள் வேலைக்கே ஆபத்து ஏற்படலாம்.
மிக முக்கிய குறிப்பு: ஆண்களே, இந்த
கோட்பாட்டை மனைவி விடயத்தில் பின்பற்றி ஆபத்தில் மாட்டிக் கொள்ளாதீர்கள். மனைவி
சொல்லும் ஏதாவது விடயத்திற்கு “NO” சொல்லி அதனால் ஏற்படும் பின்விளைவுகளுக்கு
நாங்கள் பொறுப்பில்லை.

No comments:
Post a Comment