Friday, 22 April 2022

 


தமிழ் இளையவர்கள் மத்தியில் தற்கொலைகள்.

======================================
அண்மையில் என் நண்பரின் தளத்தில் பார்த்த ஒரு செய்திதான் என்னை இந்த விடயத்தை இப்போது எழுதத் தூண்டியது. இலங்கையில் அவருக்கு நன்கு தெரிந்தவரான பதினாறு வயதேயான ஒரு சிறுமி தற்கொலை செய்து கொண்டுள்ளார். அந்தப் பெண் பரீட்சையில் சித்தி பெற்றிருந்தாலும் தான் எதிர்பார்த்த பெறுபேறுகள் கிடைக்கவில்லை என்பதற்காகத் தற்கொலை செய்துகொண்டார். இது எமது சமூகத்தில் நடந்த முதலாவது தற்கொலையுமில்லை, அதற்குப் பின்னரும் இளையவர்கள் சிலர் தற்கொலை செய்து தமது வாழ்வை முடித்துக் கொண்டிருக்கிறார்கள்.
எமது சமூகத்தில் ஏன் இளையவர்கள் தற்கொலை செய்கிறார்கள் என்று தொடர்பாக துறைசார்ந்தவர்கள் பல ஆய்வுகளைச் செய்தாலும் அவர்களின் கண்டுபிடிப்புகளால் மட்டுமே இளையவர்களின் தற்கொலையைத் தடுத்துவிட முடியாது. மாறாக, பதின்ம வயதினர் ஏன் தற்கொலை செய்கிறார்கள் என்பது பற்றி எமது சமூகத்தினருக்கு தெளிவு ஏற்பட்டால் மட்டுமே இனிவரும் காலங்களில் இவ்வாறான தற்கொலையைத் தடுக்க முடியும். இவ்வாறான தற்கொலைக்கான காரணங்களை நன்றாக ஆராய்ந்து இதற்கான அடிப்படைப் பிரச்சனைகள் எங்கிருந்து ஆரம்பிக்கின்றன என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
இளையவர்களின் தற்கொலைக்கு கல்வியில் தோல்வி, காதல் தோல்வி, பாடசாலையில் சக மாணவரால் துன்புறுத்தப்படல், ஆசிரியரால் அல்லது அதிபரால் அவமானப்படுத்தப்படல், வீட்டில் தாயாருடன் அல்லது தந்தையுடன் சண்டை போன்ற காரணங்களைத் தவிர்த்து அண்மைக் காலமாக பிறந்தநாளுக்கு புது ஆடை வாங்கித் தரவில்லை, ஆசைப்படும் பொருளை பெற்றோர் வாங்கித் தரவில்லை, பாடசாலை விளையாட்டு அணியில் இடம் கிடைக்கவில்லை போன்ற காரணங்களும் இணைந்துள்ளன.
பெற்றோரின் பங்கு
--------------------------
பிள்ளைகளைப் பெற்றுக் கொள்வது ஒன்றும் கஷ்டமான வேலையில்லை. அவர்களை வளர்த்து ஆளாக்குவதுதான் ஒவ்வொரு பெற்றோருக்கும் உள்ள சவாலாக இருக்கிறது. ஏனெனில் யாருமே பிள்ளை வளர்ப்பதில் முன் அனுபவத்துடன் பிள்ளை பெற்றுக் கொள்வதில்லை. தற்போது வயதான பெற்றோரும் தமது திருமணமான பிள்ளைகளுடன் வசிப்பதில்லை என்பதால் உண்மையிலேயே அது மிகப்பெரும் சவால்தான். ஏனெனில் எல்லோருக்குமே பிரச்சனைகளை சரியாக கையாள்வதற்கான முதிர்ச்சி இருப்பதில்லை.
பெற்றோர்கள் தமது ஒவ்வொரு குழந்தைக்கும் ஒவ்வொரு திறமை இருக்கும் என்பதை பெற்றோர் உணரவேண்டும். பெற்றோரின் ஆசைகளை, குறிப்பாக தமது நிறைவேறாத ஆசைகளைப் பிள்ளைகளின் மேல் திணிக்கக் கூடாது. உங்கள் நண்பர்கள், உறவினர்களின் பிள்ளைகளைப் பார்த்து உங்கள் பிள்ளைகளை அவர்களோடு போட்டி போடும் பந்தயக் குதிரை ஆக்காதீர்கள்.
உங்கள் பிள்ளைகள் பரீட்சையில் தோற்றால் அவர்களை வார்த்தைகளால் கூடத் தண்டிக்காதீர்கள். பரீட்சையில் தோல்வியுற்றாலும் ஒருவன் வாழ்க்கையில் வெற்றி பெறமுடியும் என்பதை முதலில் நீங்கள் உணர வேண்டும். பின்னர் அதனை உங்கள் பிள்ளைகளுக்கும் சொல்லிக் கொடுக்க வேண்டும்.
பிள்ளைகளுக்கு பணத்தின் பெறுமதி உழைப்பின் பெறுமதி தெரியும்படி வளருங்கள். பிள்ளைகளை சமூகப் பொறுப்புள்ளவர்களாகவும் மற்றவர் மேல் அன்பு செலுத்தக் கூடியவராகவும் வளருங்கள். அவர்களை தோல்விகளைத் தாங்கக் கூடியவர்களாகவும் தைரியமானவர்களாகவும் வளர்க்க வேண்டும். அதேபோல உயிரின் பெறுமதியையும் சொல்லிக் கொடுங்கள்.
பருவ வயதில் வரும் காதல் உணர்வும் வேறு சில உணர்வுகளும் சில பிள்ளைகளை தாம் தவறு செய்கிறோமோ என்ற குற்ற உணர்வுக்கு உள்ளாக்கி மன உளைச்சலுக்கும் உள்ளாக்கலாம். அந்த நேரத்தில் பொருத்தமான ஆலோசனைகள் அவர்களுக்கு ஆறுதலாக அமையலாம். இந்த விடயங்களை உங்களோடு நேரடியாகப் பேசுவதைத் தவிர்ப்பார்கள் என்பதால், அதற்குப் பொருத்தமான புத்தகங்களைத் தேடித் பெற்று அவர்களை வாசிக்கச் செய்யுங்கள்.
அடிக்கடி பிள்ளைகளோடு மனம் விட்டுப் பேசுங்கள். உங்கள் பிள்ளை தனது படிப்பு, விருப்பமான துறை, ஆர்வமான விடயங்கள், எதிர்ப் பாலாரிடம் ஏற்படும் ஈர்ப்பு போன்றவை பற்றியும் தங்கள் பிரச்சனைகளையும் உங்களோடு மனம் விட்டு பேசக்கூடிய சூழலை ஏற்படுத்துங்கள். என் தந்தையோடு இதைப் பயப்படாமல் கதைக்கலாம், என் அம்மாவிடம் இதனைப்பற்றிச் சொல்லலாம் என்ற எண்ணம், தைரியம் உங்கள் பிள்ளைகளுக்கு ஏற்பட வேண்டும்.
அவர்களின் பிரச்சனைகளுக்கு நீங்கள் நீதிபதியாகாமல் அவர்களே சரியான தீர்வு எடுக்க உதவுங்கள். பிள்ளைகளுக்கு ஒரு அதிகாரியாக இல்லாமல் ஆலோசகராக இருக்க முயலுங்கள். உங்கள் பிள்ளையின் நடவடிக்கைகளில் சிறுமாற்றம் ஏற்பட்டாலும் அதைக் கவனித்து தகுந்த நேரத்தில் மெதுவாக அதைப்பற்றி பேசி அவர்களைச் சரிப்படுத்த உங்களால் ஆனதைச் செய்யுங்கள்.
ஏதோ காரணங்களால் உங்கள் பிள்ளைக்கு மன உளைச்சல் அல்லது மன அழுத்தம் இருப்பதாகத் தோன்றினால் உடனே தகுந்த உளவள ஆலோசனையைப் பெற்றுக் கொள்ளுங்கள். ஊரார் என்ன சொல்லுவார், உறவு என்ன சொல்லும் என்று நினைக்காதீர்கள். உங்கள் பிள்ளையின் உயிரை விடவா ஊராரின் பேச்சு உங்களுக்கு முக்கியம் என்று யோசியுங்கள்.
ஆசிரியரின் பங்கு
-------------------------
இளையவர்கள் வாழ்க்கையில் பெற்றோருக்கு அடுத்தபடியாக இருப்பவர்கள் ஆசிரியர்கள். இன்னொரு விதத்தில் சொல்வதென்றால் ஆசிரியர்களை இரண்டாவது பெற்றோர் என்றே சொல்லலாம்.
பல பாடசாலைகளில் மாணவர்களின் உளவியல் பிரச்சனைகளை இனங் காண்பதிலும் அவ்வாறான பிள்ளைகளுக்கு உதவுவதிலும் பல ஆசிரியர்கள் முக்கிய பங்கு வகிக்கிறார்கள். அவ்வாறான பிள்ளைகளின் ஆர்வங்கள், தனித்திறமைகளை இனங்கண்டு அவற்றில் ஈடுபட ஊக்கம் கொடுப்பதிலும் மாணவர்களின் பிரச்சனைகளை பெற்றோருக்கு அறிவுறுத்துவதிலும் பிள்ளைகளின் உளவள ஆற்றுப்படுத்தலிலும் இவ்வாறான ஆசிரியர்கள் பெரும் பங்காற்றி வருகின்றனர்.
ஆனால் எல்லா ஆசிரியர்களுமே அவ்வாறு நடந்து கொள்வதில்லை. சில ஆசிரியர்களே மாணவர்களின் தன்னம்பிக்கையை சிதைப்பவர்களாகவும் துன்புறுத்துவோராகவும் இருக்கின்றனர் என்பதும் மறுக்க முடியாத உண்மையே. அதிலும் சிலர் இளையவர்களை உடல்ரீதியாகவும் பாலியல் ரீதியாகவும் துன்புறுத்துகின்றனர். இன்னொரு வகையில் சொல்வதென்றால் சில இளையவர்களின் மன உளைச்சல், தற்கொலை எண்ணங்களுக்கு சில ஆசிரியர்களும் காரணமாக இருக்கின்றனர்.
இந்த நிலையும் மாறவேண்டும். இவ்வாறான ஆசிரியர்கள் மனம் திருந்தி ஏனைய நல்லாசிரியர்கள் போல மாறவேண்டும். பெற்றோரைப் போலவே ஆசிரியர்களும் தாம் கற்பிக்கும் ஒவ்வொரு பிள்ளையின் மீதும் உண்மையான அக்கறையும் பொறுப்பும் எடுத்துக் கொள்ள வேண்டும். எமது நாளைய சந்ததிகளைச் சரியாக வளர்த்தெடுப்பது எம் ஒவ்வொருவரின் கையில்தான் உள்ளது.
சமூகத்தின் பங்கு
==================
எமது சமூகத்தில் இளம்பிராயத்தில் தற்கொலை செய்துகொண்டால் நம்மவர் செய்யும் முதல் வேலை அந்தக் குடும்பத்தை குற்றம் சொல்லி ஏற்கனவே மனம் நொந்து போயிருக்கும் குடும்பத்தை மேலும் காயப்படுத்துவதுதான். சில சந்தர்ப்பங்களில் இவ்வாறு ஊரவர்கள், உறவினர்களால் காயப்படுத்தப்பட்ட குடும்பங்கள் முழுமையாகவே ஒடுங்கிப் போய் விடுகின்றன. சில குடும்பங்கள் வேறு ஊருக்கு இடம்பெயர நிர்ப்பந்திக்கப்படுகின்றன. இன்னும் சில குடும்பங்கள் தற்கொலை செய்து கொண்டுமிருக்கின்றன.
எமது சமூகமும் உறவுகளும் இதனை உணர்ந்துகொண்டு பொறுப்புடன் செயற்படுவதே தமது பிள்ளையின் தற்கொலையால் வருந்திக் கொண்டிருக்கும் குடும்பங்களுக்கு செய்யக்கூடிய மிகப்பெரிய உதவியாக இருக்கும். அவர்களின் பிள்ளை ஏன் தற்கொலை செய்து கொண்டது என்று ஆராயாது, அந்தக் குடும்பத்திற்கு ஆதரவாக இருக்க முயற்சி செய்யுங்கள்.
அனைவரும் பொறுப்புடன் இருந்தால் இனிவரும் காலங்களில் இளையவர் மத்தியில் நடைபெறும் தற்கொலைகளைப் பெருமளவில் குறைக்க முடியும். இனிவரும் நாட்களில் தற்கொலைகளை இல்லாது செய்யவும் முடியும்.
-வீமன்-

No comments:

Post a Comment

  அடி சறுக்கும் அனுர?   தேசிய மக்கள் சக்தி ஜனாதிபதி தேர்தலில் வடக்கு, கிழக்கில் பெரும் வெற்றியைப் பெறுவோம் என்ற நம்பிக்கையுடன் இருந்திரு...