Saturday, 5 October 2024

 ஜனாதிபதி அனுரவும் வடக்குக் கிழக்கும் !


நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் அனுர வெற்றி பெற்றாலும் வடக்கு, கிழக்கு, பதுளை, நுவரெலியா ஆகிய இடங்களில் அவரால் அதிக வாக்குகளைப் பெறமுடியவில்லை. இந்தத் தொகுதிகளுள் 73% சிங்கள வாக்காளர்கள் இருக்கும் பதுளையிலும் 39% சிங்கள வாக்காளர் உள்ள திகமடுல்லவில் மட்டுமே அவரால் முறையே 35% மற்றும் 26% வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தைப் பிடிக்க முடிந்தது. நுவரெலியாவில் 40% சிங்களவர் உள்ளபோதிலும் அங்கும் அவரால் 22% வாக்குகளை மட்டுமே பெற முடிந்துள்ளது. தமிழ் பேசும் வாக்காளர் அதிகம் வாழும் வன்னி, யாழ் மற்றும் மட்டக்களப்புத் தொகுதிகளில் 12%க்கு குறைவான வாக்குகளே கிடைத்தன.

கடந்த ஆட்சியாளர்களின் தொடர்ச்சியான ஊழல் மற்றும் அதிகார துஸ்பிரயோகங்களால் பொருளாதார நெருக்கடிக்குள் நாடு தள்ளப்பட்ட நிலையில் இரண்டு பாரம்பரியக் கட்சிகள், அவற்றின் உருமாறிய கட்சிகள் மீது மக்கள் நம்பிக்கை இழந்து போயிருந்தனர், இந்த நிலையில் மாற்றத்தை எதிர்பார்த்து அனுர மீது தெற்கின் மக்கள் நம்பிக்கை வைத்ததில் ஆச்சரியமில்லை. ஆனால் எதிர்பார்த்தது போலவே வடக்கு கிழக்கில் தெற்கின் அளவிற்கு ஆதரவு இருக்கவில்லை.

வடக்குக் கிழக்கின் மக்கள் தெற்கு மக்களுடன் இணைந்து (சந்திரிக்காவிற்கு) அமோக ஆதரவு கொடுத்தது இறுதியாக 1994இல் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில்தான். அதன் பின்னர் ஒவ்வொரு தேர்தலிலும் வடக்கு கிழக்கின் ஆதரவும் தெற்கின் ஆதரவும் எதிரெதிர் திசையில்தான் இருந்திருக்கின்றன. இதற்கு தொடர்ச்சியாக இலங்கை அரசினால் முன்னெடுக்கப்பட்ட யுத்தத்தின் பாதிப்பு, ஒவ்வொரு ஆட்சி மாற்றத்தின்போதும் அரசியல் தீர்வு கிடைக்கும் என்று நம்பி நம்பி ஏமாந்தமை என்பன தெற்கின் தலைவர்கள் மீது நம்பிக்கையற்ற நிலையே ஏற்படுத்தி வந்திருக்கிறது.

ஆனால் தெற்கைப் போலவே வடக்குக் கிழக்கில் உள்ள மக்களும் ஒரு மாற்றத்தை எதிர்பார்த்தவர்களாகவே இருந்திருக்கிறார்கள். ஆனால் தெற்கில் உள்ளவர்கள் அனுரவில் நம்பிக்கை வைத்தது போல வடக்கில் உள்ளவர்களும் முழுமையாக நம்புவதற்கு ஏதுவான, வலுவான காரணங்கள் கடந்த காலங்களில் இருந்திருக்கவில்லை. மாறாக, வடக்கையும் கிழக்கையும் பிரித்த கட்சி, சுனாமியின் பின்னரான மீள் கட்டமைப்பு ஒப்பந்தத்தை கடுமையாக எதிர்த்த கட்சி, இறுதி யுத்தத்தில் இராணுவத்திற்கு பலம் சேர்த்த கட்சி என்ற பார்வை தமிழர்களில் பலருக்கு இருந்தது. ஆனாலும் கணிசமாக மக்களிடம் அனுரவுக்கு ஒரு சந்தர்ப்பம் கொடுத்துப் பார்த்தால் என்ன என்ற அபிப்பிராயமும் கணிசமாக இருந்தது என்பதையே வடக்குக் கிழக்கில் அனுர பெற்றுக்கொண்ட 15% வாக்குகள் காட்டுகின்றன.

ஆனால் அனுர பதவி ஏற்ற பின்னர் ஆற்றிய உரை, உடனடியாக மேற்கொண்ட சில நடவடிக்கைகள் துரிதமாக அனுரவின் மீதான நல்ல அபிப்பிராயத்தை அதிகரிக்கச் செய்திருக்கிறது என்பதை தமிழர்கள் பலரின் கருத்துகள் சுட்டிக் காட்டுகின்றன. இவற்றுள் வடமாகாண ஆளுநர் நியமனத்தை நல்ல உதாரணமாகக் கூறலாம்.

தற்போது, பாராளுமன்றத் தேர்தலை நவம்பர் மாதமே வைக்கத் தீர்மானித்திருப்பதும் அனுர சார்ந்த கட்சிக்குச் சாதகமாக அமைய வாய்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது எனலாம். Youtubers சிலரின் கேள்விக்கு பதிலளித்த வடக்கின் சாதாரண மக்கள் சிலரின் கருத்துகள் அவர்கள் அனுரவுக்கு ஆதரவு கொடுக்கத் தயாராக இருப்பதைக் காட்டுகிறது. இம்முறை NPP பொருத்தமான வேட்பாளர்களை நிறுத்தினால் வடக்குக் கிழக்கிலும் சில ஆசனங்களைப் பெறக் கூடிய சந்தர்ப்பம் இருப்பதாகவே தெரிகிறது. ஆனால் அனுர கூறியது போல தனக்கு வாக்களிக்காத மக்களுக்கும் தன்னைப் பிடிக்கும் வகையில் நடந்து கொள்ள வேண்டுமானால் அவர் தமிழ் மக்கள் கூறிய சில முக்கிய விடயங்களுக்கு விரைவில் தீர்வு தர வேண்டியிருக்கும்.

வடக்கில் பலரும் கூறிய ஒரு விடயம், அதிகரித்த மதுபாவனை, கஞ்சா மற்றும் போதைப் பாவனை. கடந்த சில வருடங்களாக இளைஞர்கள் பலரும் போதைக்கு அடிமையாகி இருப்பது எல்லோருக்குமே தெரிந்த விடயம்தான். இதனோடு சேர்ந்த இன்னொரு சமூகப் பிரச்சனைதான் பெண்கள் மீதான பாலியல் சீண்டல்களும் பாலியல் தாக்குதல்களும் இவற்றையெல்லாம் கட்டுப்படுத்த அனுர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுவும் மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. அத்துடன் பொருட்களின் விலைகளைக் குறைத்து தமது வாழ்க்கைச் சிரமத்தையும் குறைக்க வேண்டும் என்பதும் அவர்களின் வேண்டுகோளாக இருந்தது.

இதை விட முக்கியமானது, இறுதி யுத்தத்தில் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பானது. நான் பார்த்த காணொளியில் பேசிய ஒரு பெண்மணி தனது இரண்டு மகன்மார் கைது செய்யப்பட்டு இதுவரை விடுவிக்கப்படவில்லை என்பதைக் கூறி, புதிய ஜனாதிபதி அவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டார். இலங்கையில் சிறுவர் தினம் கொண்டாடப்படும் நாளில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் முன்னெடுத்த போராட்டத்திலும் இதே விடயம் மீண்டும் மீண்டும் வலியுறுத்தப்பட்டது.

அனுர இறுதி யுத்தத்தில் நேரடியாக பங்குபெறாத போதும் அவரும் அவர் சார்ந்த கட்சியும் அந்தப் போரில் அரசாங்கத்தின் பங்காளிதான். தற்போது ஜனாதிபதியாக இருக்கும் நிலையில் இந்த விடயத்தில் அரச தலைவர் என்ற வகையில் முன்னரை விட பொறுப்புக் கூற வேண்டியவராகிறார். இத்தனை வருடங்களாக தமது தந்தை, கணவன், மகன், அண்ணன், தம்பி வருவார்கள் என்று தேடித் தொலைந்து போய் நிற்கும் மனங்களுக்கு இவர் எப்படி ஆறுதல் சொல்லப் போகிறார் என்பது முக்கியமான கேள்வியாக நிற்கிறது.
- வீமன் -

No comments:

Post a Comment

  அடி சறுக்கும் அனுர?   தேசிய மக்கள் சக்தி ஜனாதிபதி தேர்தலில் வடக்கு, கிழக்கில் பெரும் வெற்றியைப் பெறுவோம் என்ற நம்பிக்கையுடன் இருந்திரு...