Wednesday, 13 November 2024

 

பாராளுமன்றப் பதவிப் போர் – 4

 

கிழக்கு மாகாணத்தைப் பொறுத்தவரை, மூன்றில் ஒரு பங்கு தமிழர்கள் வாழும் திருகோணமலையில் கடந்த தடவை ஒரு ஆசனமே வெல்லப்பட்டது. தமிழ் கட்சிகள் பிரிந்து நின்றால் அதுவும் கிடைக்காது என்பதால், வடக்கில் பகை என்றாலும் கிழக்கில் வீடும் சங்கும் சேர்ந்து நிற்பது வரவேற்கத் தக்கதே. ஆனால் நாம்தான் உண்மையான தமிழ்த் தேசியக் கட்சி என்று தனியாக நிற்கும் சைக்கிள் கட்சி கொஞ்ச வாக்குகளைப் பிரிப்பதும் நடக்கப் போகிறது.

 

மட்டக்களப்பில் பிள்ளையான் கடந்த தடவை 67,692 வாக்குகளை எடுத்திருந்தார். இம்முறை தனியாகக் களம் காணவேண்டிய கட்டாயத்தில் இருக்கும் இவருக்கு முன்னர் இருந்த செல்வாக்கு தற்போது இல்லையென்று கூறுகிறார்கள். அவருக்கு ஆசனம் கிடைக்காது என்று எதிர்வு கூறுகிறார்கள்.  என்னதான் எதிர் விமர்சனம் இருந்தாலும் தமிழரசுக் கட்சியில் சாணக்கியன் மீண்டும் வெல்வார் என்று சொல்லப்படுகிறது. இம்முறை வாக்குகள் சிதறும் சந்தர்ப்பம் அதிகம் இருப்பதால் தமிழரசுக் கட்சிக்கு இரண்டாவது ஆசனம் கிடைக்குமா என்பது சந்தேகமே. அதேநேரம், NPPக்கு ஒரு ஆசனம் கிடைக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

 

17% தமிழர்கள் வாழ்ந்தாலும் தமிழ் மக்கள் ஒற்றுமையாக வாக்களித்தால் ஒரு ஆசனம் வெல்லக்கூடிய ஒரு தொகுதியாகவே அம்பாறை (திகமடுல்ல) தொகுதி இருக்கிறது. கடந்த தடவை அகில இலங்கைத் தமிழ் மகாசபா வாக்குகளைப் பிரிதிருக்காவிட்டால் தமிழரசுக் கட்சிக்கு ஒரு ஆசனம் சுலபமாக கிடைத்திருக்கும். இம்முறையும் அதே நிலை ஏற்படலாம் அல்லது அனுர அலையில் அவர்களுக்கு 3 – 4 ஆசனங்கள் கிடைக்கலாம்.

 

வடக்குக் கிழக்கில் இம்முறை பல பெண்கள் களமிறங்கியிருந்தாலும் அவர்களில் பலர் ஏற்கனவே மக்களுக்கு ஓரளவு அறிமுகமானவர்களாக இருந்தாலும் அவர்களில் ஓரிருவர் மட்டுமே பாராளுமன்றம் செல்லும் வாய்ப்புள்ளது. மற்றவர்கள் கட்சிகான வாக்குகளை அதிகரிக்க மட்டுமே பயன்படுவார்கள்.

 

யாருக்கு வாக்களிப்பது?

பொதுவாகவே வடக்குக் கிழக்கில் தமிழ் பேசும் அனைத்து மக்களுக்குமே கடந்த காலங்களில் தாம் நம்பி வாக்களித்தவர்கள் கொடுத்த வாக்கை நிறைவேற்றவில்லை என்ற கோபம் கணிசமான வாக்காளர்களிடம் இருக்கிறது. ஆனால் சிலர் இன்றும் தாம் பாரம்பரியமாக வாக்களித்த கட்சிக்கே வாக்களிக்கும் நிலையில்தான் இருக்கிறார்கள்.

 

அதேநேரம், புதிய வாக்காளர்கள் என்ன முடிவு எடுப்பார்கள் என்பதையும் ஊகிக்க முடியாது. அவர்கள் “தமிழ்த் தேசியம்” எப்படிப் பார்க்கிறார்கள் என்பதுவும் ஒரு புதிரான விடயமாகவே இருக்கிறது. மறுபுறத்தில், சமூக வலைத்தள அலப்பறைகளை வைத்து இன்னார்தான் வெல்லுவார் என்றும் சொல்லிவிட முடியாது. சமூக வலைத்தளத்தில் இல்லாத, அல்லது சமூக வலைத்தளத்தில் வருவதைக் கணக்கில் எடுக்காத வாக்காளர்கள் பெரும் எண்ணிக்கையில் இருக்கிறார்கள். அவர்கள்தான் கடைசியில் யார் வெல்வது என்பதைத் தீர்மானிக்கப் போகிறார்கள்.

 

இம்முறை பல கட்சிகள் திறமையுள்ள இளைஞர்களை  வேட்பாளர்களாக நிறுத்தியிருந்தாலும் அவர்களை வைத்து தாம் பாராளுமன்றம் செல்ல வேண்டும் என்பதே வயதான இளைஞர்களின் கனவாக இருக்கிறது. கட்சிகளின் பெயர்களில் ஜனநாயகம் இருந்தாலும், தேசியம் இருந்தாலும் தமிழ்த் கட்சிகளிடம் உட்கட்சி ஜனநாயக கட்டமைப்பு இல்லை என்பதே உண்மை. பல கட்சிகளின், வேட்பாளர்களின் வார்த்தைகளில் “தமிழ்த் தேசியம்” என்பது வெறும் வார்த்தைகளாவே துருத்திக் கொண்டு நிற்கின்றன. மூன்று பேரை பாராளுமன்றம் அனுப்புங்கள், நாம் ஊழலை முற்றாக ஒழிப்போம், சட்டத்தைச் சரி செய்வோம், தமிழரின் உரிமையை வென்றெடுப்போம் என்பதுவும் வாயால் வடை சுடும் கதைதான்.

 

மக்கள் இதைப் புரிந்து கொள்ள முடியாத முட்டாள்கள் இல்லை. ஆனால் காலம் காலமாக வாக்களித்த கட்சிக்கே வாக்கு என்பதுவும், நான் தலைவரின் வழியில் செல்கிறேன் என்று சொல்லும் வாய் வார்த்தையை நம்பி வாக்களிப்பதுவும் முட்டாள்தனம் என்று நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

 

பலமுனைப் போட்டி உள்ள இந்தச் சூழலில் வாக்காளர்கள் சரியாகச் சிந்தித்து வாக்களிப்பது முக்கியமானது. ஏற்கனவே சில நல்ல விடயங்களைச் செய்யத் தொடங்கியுள்ள NPP பாராளுமன்றில் பெரும்பான்மை பெற்றாலே தாம் உறுதியளித்த விடயங்களைச் செய்ய முடியும். எனவே அந்தக் கட்சி வெல்வதும் முக்கியமானது. எம்மை நேரடியாகக் கொன்றவருக்கே வாக்களித்த மக்கள், கூட நின்றவருக்கு ஒருமுறை ஆதரவளிப்பதால் பெரும் பாவம் சூழ்ந்துவிடப் போவதில்லை. அதே நேரம் வடக்குக் கிழக்கில் குறைந்தது ஒவ்வொரு NPP உறுப்பினர் பாராளுமன்றம் செல்வதால் அந்தக் கட்சி உண்மையிலேயே இதய சுத்தியுடன் எம்மை அணுகுகிறதா என்பதை அறியவும் ஒரு சந்தர்ப்பமாக அமையும். ஆனால் வடக்குக் கிழக்கில் அதிக ஆசனங்களை NPPக்கு கொடுப்பதும் ஆரோக்கியமானதாக அமையாது.

 

அதேநேரம், தமிழர்களின் இனம், மொழி சார்ந்த அபிலாசைகளை தொடர்ந்து வெளிப்படுத்தவும், அவர்களின் நீண்டகாலப் பிரச்சனைகள், அன்றாடப் பிரச்சனைகளுக்காக குரல் கொடுக்கவும் தேசியக் கட்சிகள் சாராத கட்சியின் உறுப்பினர்கள் பாராளுமன்றம் செல்வதும் அவசியம். எனவே, தமிழ்க் கட்சிகளில் சரியான திசையில் பயணிக்கும் கட்சியிலிருந்தும் உறுப்பினர்கள் செல்வதும் அவசியம், அந்தக் கட்சிகளின் வாய்ப்பந்தல் வீரர்களுக்கு வாக்களிக்காமல் திறமை வாய்ந்த இளையவர்களை இம்முறை பாராளுமன்றம் அனுப்புங்கள்.

 

-    வீமன் -

No comments:

Post a Comment

  அடி சறுக்கும் அனுர?   தேசிய மக்கள் சக்தி ஜனாதிபதி தேர்தலில் வடக்கு, கிழக்கில் பெரும் வெற்றியைப் பெறுவோம் என்ற நம்பிக்கையுடன் இருந்திரு...